1816ல் மேரி ஷெல்லி தன் பதினெட்டாவது வயதில் அமானுஷிய கதை எழுத யோசித்திருந்த வேளையில் அவளுக்குள்ளாக, அவள் தூக்கத்தில் கனவுபோல் துளிர்த்தது தான் இந்த ஃபிராங்கென்ஸ்டைன்ஸ் மான்ஸ்டராம். சற்று நேரம் கதையைப் பற்றியும், அதை எழுதிய காலகட்டம், அதை எழுதிய அந்த சின்ன பெண்ணை பற்றி என தன் நேரத்தைச் செலவிட்ட யசோ அப்படியே சோஃபாவில் கண்ணயர்ந்தாள்.
Advertisement
கனவில் ரகு வந்தான். அரும்பு மீசையோடு வீட்டின் பின் வாசலில் சாய்ந்து நின்று சிரித்தான். பாடம் படிக்க அழைத்துச் சென்ற ரகு, ‘ஒழுங்கா படிக்கதுக்கு என்ன?’ தலையில் கொட்டினான். ‘போடா நீ ஒண்ணும் சொல்லித் தர வேண்டாம்’ என ஓடினாள் யசோ. ஓடியவளின் பின்னோடு வந்த ரகு, ‘தீண்டாமை ஒரு பாவச் செயல் பேபி’ என ஒட்டி உரசிச் சீண்டினான். அவள் கரம் பிடித்து, ‘உன் நிழலா உன் கூடவே இருக்க விருப்பப்படுறேன்’ என்றான்.
‘இந்த YR மாதிரி நீயும் நானும் பின்னி பிணைஞ்சு’ எனக் காதில் காதல் வார்த்தை பேசினான் ரகு. ‘கண்டிப்பா’ என்றாள் யசோ.
‘உன் பொண்ணு, உன்ன மாதிரியே இருக்கா லகு’ என்றவள் ரகுவிடமிருந்து தன் குழந்தையை வாங்கினாள். பொம்மை குட்டி ரகுவை போல் இருந்த பச்சிளம் யாழி பொக்கை வாய் மலர்ந்து சிரித்தாள். பால் மணம் மாறாத பொக்கை வாய் குழந்தை ‘அம்மா… அம்மா’ எனக் கன்னம் தொட்டு அழைத்தாள். ‘என் குழந்தை அதிசய குழந்தை’ என யசோ அகம் மலர்ந்தாள்.
Advertisement
‘பேபி.. பேபி’ என ரகு கன்னத்தை ஈரம் செய்தான். தூக்கத்தில் யசோவின் வாய், “உன் பொண்ணு லகு… உன்ன மாதிரியே உன் பொண்ணுக்கும் ஞாபக சக்தி அதிகம் தெரியுமா?” என முணுமுணுத்தது.
‘நான் தான் அம்மா… யாழி… என் மகள்’ மூளை எதையோ பிதற்றியது.
“அம்மா ஏந்திங்க” வயிற்று பாரம் உடல் மீது பரவியது. உடல் இதமாக உணர்ந்தது. கன்னம் ஈரமாகியது.
Advertisement
கன்னத்தை தன் உதட்டால் ஈரம் செய்த ரகு, “பேபி” என்றான். அவன் ஆழமான அழுத்தமான குரல் தேனாய் யசோவிற்குள் இறங்கியது. “வித் யூ, அன்ட்டில் தி சைலன்ஸ் பேபி” என்றவன் யசோவின் கரத்தை அவன் மார்பு மீது வைத்தான். ரகுவின் இதயம் லப் லப் என்றது அவள் உள்ளங்கைக்குள்.
பெட்டியோடு கிளம்பத் தயாராக நின்றிருந்தவனிடம் ‘போகாத லகு’ என்றாள். ‘நான் போகணும்… விடு டி’ என்ற ரகுவின் சத்தம் மாறி இருந்தது. குட்டி ரகு பெட்டியை அடுக்கிக் கொண்டிருந்தான். கோபம் கொப்பளிக்கப் பெட்டியைத் தள்ளி விட்டாள் குட்டி யசோ. உருண்டு புரண்டனர். ரகு அடித்தான். யசோ ரகுவை கடித்தாள். ‘நீ கடிச்சனால ரகு இனி மேல் இங்க வரமாட்டான்’ என்றார் அம்மா. ‘லகு.. போகாத’ எனக் கண்ணீர் விட்டாள், கன்றிச் சிவந்திருந்த கையை பார்த்தவள்.
‘வலிக்குதா லகு?’ என்றவளிடம், ‘இல்ல பேபி… சரி ஆகிடுச்சு’ என்றவன் அவள் முன் அவன் குடையோடு நின்றிருந்தான். நரம்பு புடைத்த அந்த வெண்ணிற கரத்தில் அவளின் பற்களின் தடம் நன்றாகவே தெரிந்தது.
‘நான் பெங்களூரு போறேன் பேபி’ என்றான் ரகு. ‘திரும்பி வரமாட்டியா ரகு?’ என்றவளிடம், ‘நேரம் ஆச்சு… கிளம்பலாம்.’ என்றான். ‘உன் பஸ் வந்துடுச்சு’ என அவள் கைப்பையை அவளிடம் நீட்டினான். அதே கரம். அதே தழும்புகளைக் கொண்ட அதே கரம். ஆனால்… மறு கரத்தில் யாழியோடு நின்றிருப்பது கௌதமன்.
‘வா யசோ, பஸ் கிளம்ப ரெடி ஆகிடுச்சு.’ என்ற ரகு முன்னால் நடந்தான். அவள் ரகுவே தான். திரும்பிப் பார்த்துச் சிரித்தான் கௌதமன். பார்த்து நின்றவளுக்கு மூச்சு முட்டியது. ‘நீ ரகுவா கௌதமனா?’ எனக் கேட்டாள் எதிரில் நின்றவனிடம். ‘நான் ஃபிராங்கென்ஸ்டைன்ஸ் மான்ஸ்டர்’ என் வேதனையோடு சிரித்தான் கௌதமன்.
‘வெட்டி… ஒட்டி… ஒரு மனுஷ உருவம்’ என்றவன், அந்த கருப்பு வெள்ளை அறையில் கட்டிலில் படுத்திருந்தான். அவன் எதிரே விக்டர் ஃபிராங்கென்ஸ்டைன் கத்தியோடு நின்றிருந்தான்.
விக்டர் ஃபிராங்கென்ஸ்டைன், ‘இந்தா ரகுவோட கை உனக்கு’ என ரகுவின் வல கரத்தை கௌதமனுக்குப் பொருத்தினான். ‘ரகுவோட வாய்ஸ் நல்லா இருக்கு. அத இவனுக்கு போடுங்க விக்டர்’ என்றாள் பதினெட்டு வயது ஷெல்லி.
‘ரகு ரொம்ப அழகா இருக்கான்… அவன் ஹார்ட் நல்லா இருக்கு’ என்றாள் ஷெல்லி.
‘வித் யூ அன்ட்டில் தி சைலன்ஸ்’ என்றது இதயம், யசோவை பார்த்து.
‘உனக்கு வேணுமா… வச்சுக்கோ’ என விக்டர் அதை யசோவிடம் கொடுத்தான். வரைந்து நிறமடித்தது போல் இருந்த இதயத்தில் வரைம் பதித்த YR பின்னிப் பிணைந்திருந்தது.
‘லகு…’ என அவன் இதயத்தை தன் கன்னத்தில் வைத்தாள். கன்னம் ஈரமானது. ‘பச் பச்’ என இதயம் முத்தம் கொடுத்தது. ‘பேபி’ என்றது, கரகரத்த குரலில். ‘யசோ பேபி’ என்றது, மென் குரலில். “அச்சோ” என்றது, இனிமையான குரலில். மழலையாக மாறி, “அச்சோ அம்மா” என்றது.
“அம்மாஆஆ… அம்மா” கன்னத்தில் பூ மோதி, தேனைப் பரப்பி ஈரம் செய்தது. பட்டென யசோவிற்கு விழிப்பு வர, கண்களைத் திறந்தாள். வீடு இருட்டில் மூழ்க ஆரம்பித்திருந்தது, மகள் அவள் கன்னம் மீது உதட்டை வைத்து “அம்மாஆஆ பூர்ர்” என காற்றை ஊதிக் கொண்டிருந்தாள்.
கண் திறந்தவளுக்குத் தலை சுற்றியது. ரகு இல்லை. கௌதமன் இல்லை. ஷெல்லி… விக்டர் என ஒருவரும் இல்லை. கனவு! நல்லவேளை அனைத்தும் கனவு. இதயம் படபடக்கப் படுத்திருந்தவள் மீதிருந்து எழுந்து, வயிற்றில் அமர்ந்த குழந்தை, “ஹம்ட்டி டம்டி சாட் ஆன் அ வால்…” எனப் பாட ஆரம்பித்திருந்தாள்.
என்னவிதமான கனவு இது? லாஜிக்கே இல்லாத கனவிலும் ஒரு லாஜிக் இருக்கிறதே. அவள் கடித்து, ரகுவின் வலக்கையில் ஏற்பட்ட பற்தடங்கள் எப்படி கௌதமனிடம்?
“அம்மா… போதும் தூண்ணது. ஏந்திங்க” என அன்னையின் வயிற்றின் மீது குதிரை சவாரி செய்ய ஆரம்பித்தாள் குழந்தை.
கதவு திறந்து கிடந்தது. “யாழிமா… எப்போ டா வந்த? அப்பா எங்க?” எனக் கேட்டுக் கொண்டே மகளைத் தூக்கிக் கொண்டு விளக்கைப் போட்டாள் யசோ.
“அப்பா அப்பா கூப்தேனா… அப்பா ஏந்திக்கல… அம்மா மாலியே அப்பாவும் தூணிட்டாங்க. பேபி வயிலு பசிது” என்றவள் அம்மாவின் தோள் மீது தலை சாய்த்தாள்.
“எழுந்துகலியா? அப்படி எல்லாம் அப்பா தூங்கமாட்டாங்களே. ஏன்… என்னாச்சு?”
பதில் தெரிந்தால் தானே பதில் வரும். “தெல்லில அம்மா” என்றாள் குட்டி கரத்தை விரித்து.
“அம்மா… அப்பா, டூ பேலும் தூணிங்களா… பேபி பஷிச்சுது” எனக் குட்டி தொப்பையை தேய்த்தாள் மகள்.
“அச்சோ… என் குழந்தைக்கு பசிக்குதா?” என்றவளுக்கு இன்னும் குழப்பமான மனநிலை. குழந்தையோடு அடுக்களைக்குள் நுழைந்து உணவு கொடுக்க தயாரானாலும் மனம் தெளியவில்லை. சற்று முன் என்ன நடந்தது? தூங்கினேனா? இல்லை நானாகவே கோர்வையற்ற பல நிகழ்வுகளை ஒன்றாய் கோர்த்தேனா? அனைத்தும் கண்முன் நடந்து போலவே இருந்ததே.
“ஆமா அம்மா… லொம்ப பசிது ஆலி பேபிக்கு” என இரு கரத்தினையும் விரித்தாள் குழந்தை.
“மதியம் நீ சாப்பிடவே இல்ல. அம்மா உனக்காக பன்னீர், சிக்கன் கட்லெட் எல்லாம் செஞ்சு வச்சிருக்கேன்… இப்போ சாப்பிடுறியா?” எனப் பேசிக் கொண்டே, உணவைச் சூடு செய்து, உண்ணக் கொடுத்தே இடுப்பை விட்டு இறக்கினாள் மகளை.
சற்று நேரம் விளையாடினாள் குழந்தை. கிரில் கேட்டில் ஒற்றை காலை ஊன்றி மற்றதை தரையில் உந்தி தள்ளினாள். “வண்டி போலுது வண்டி போலுது… வந்து ஏலுங்க அம்மா. டாடா போலாம்” என அம்மாவோடு ஆசை தீர விளையாடினாள்.
கௌதமன் என்ன ஆனான்? குழந்தையைத் தேடிக் கொண்டு இன்னும் வரவில்லையே என இவள் பார்வை அவ்வப்போது அந்த வீட்டின் பக்கம் சென்று வந்தது.
“தோச்சை அம்மா தோச்சை…” என யசோ சொல்லிக் கொடுத்த பாடலை கூடவே பாடினாள். “அப்பாவுக்கு நாலு” என்றதும் குழந்தைக்குத் தகப்பன் ஞாபகம் வந்துவிட்டது போலும். கிரிலில் இருந்து கீழே இறங்கினாள்.
“அம்மா, அப்பா நேணும்… போவாம் வாங்க” என யசோவின் கை பிடித்து இழுக்க, யசோவின் இதயம் தாளம் தப்பியது. நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டது அந்த வீட்டு வாயிலை மிதித்து. ரகு… ரகு இல்லாத இடத்தில்… ரகு இருக்கவேண்டிய இடத்தில் ரகு இல்லை. அதே இடத்தில் கௌதமனை எப்படிப் பார்ப்பது? இதயத் துடிப்பு வேகம் எடுத்தது.
“ந்… ந்..நீ போ யாழி” எனத் திக்கித் திணறினாள்.
“அப்பாட்ட போலேன். பை அம்மா” எனக் குழந்தை துள்ளிக் கொண்டே வீட்டுக்கு ஓடினாள். வீட்டினுள் குழந்தை நுழையும் வரை பார்த்து நின்ற யசோ, அவள் அறைக்குள் நுழைந்தாள்.
மனம் படபடத்தது. ஏன்? கௌதமனை மணக்க மனம் சம்மதம் சொன்ன பிறகும் இது என்ன படபடப்பு? ரகு இருந்த வீட்டில் கௌதமனைக் காண சம்மதியாத மனம் எப்படி ரகு வாழும் இதயத்தில் கௌதமனை ஏற்கும்? இந்த லட்சணத்திலா அப்பாவிடம் கௌதமனை மணக்கச் சம்மதம் கூறப் போகிறாள்? திருமணத்திற்குப் பிறகு அதே வீட்டில் எப்படி கௌதமனோடு இருப்பாள்?
தன்னால் கௌதமனிடம் நியாயமாக நடக்க முடியுமா? குழந்தைக்காக அவனை ஏமாற்றுகிறேனா? இல்லையே… அவனை பிடிக்கத்தானே செய்கிறது. ஒரே நேரம் மனதால் இருவரை நேசிக்க முடியுமா? மனம் குழம்பித் தவித்தது. உள்ளுக்குள் குழப்பம், யோசனை என சூறாவளியும் சுனாமியும் ஒன்று சேர்ந்து அடித்தன. எந்த அலமாரியின் பக்கம் செல்லவே மாட்டேன் என்றிருந்தாளோ அதன் பக்கம் சென்றாள் யசோதரா.
இந்த வீட்டில், அவளோடு ரகு கடைசியாகப் பேசியது இங்கு வைத்துத் தான். கன்னம் வருடி, தலை முடி ஒதுக்கி, “உடம்ப பாத்துக்கோ… சாப்பிடாம உடம்ப கெடுத்துக்காத” என ஏதேதோ பிதற்றியவனின் தொண்டை எவ்வளவு அவஸ்தையாக ஏறி இறங்கியது. புன்னகைக்கவும் முடியாது, சோகத்தைப் புன்னகைக்குள் மறைக்க முயன்று, அதில் வெற்றி பெற இருவரும் பட்ட அவஸ்தை தான் என்ன.
“ஒரு வாரம் ஃப்ரென்ஸ்சோட போயிட்டு வரேன் பேபி” என்றவனிடம் யசோ சண்டையிடவே இல்லை. “ம்ம்… என்ஜாய்” என்றாள் கரகரத்த தொண்டையை கனைத்து.
“என்ட்ரன்ஸ் எக்சாம் நல்லா பண்ணனும் என்ன?”
இந்த நிலையிலுமா என நினைத்து, அவஸ்தையோடே சிரித்தாள்.
“என்ன?” என்றான் சற்று அதட்டலான குரலில்.
“ம்ம்” என்றாள்.
“போயிட்டு வந்ததுக்கு அப்பறம் டாக்டர்கிட்ட பேசி, சர்ஜரிக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணிடலாம்ன்னு இருக்கேன். நான் கண்விழிச்சதும் ‘நீங்க எல்லாம் யாருன்னு’ நான் கேக்கதுக்கு முன்னமே இத என் கையில கொடுத்திடு. உன் ரகுவா மாற வேண்டிய அத்தன நினைவுகளையும் இதுல புதைச்சு வச்சிருக்கேன்” என்றவன் இதோ இந்த அலமாரியில் இருக்கும் லாக்கரில் தான் அந்த நினைவு புத்தகத்தைப் பூட்டி வைத்தான்.
“அப்படி எல்லாம் எடுத்து உன் கையில் நோட்ட கொடுக்க முடியாது. முதல்ல இருந்து ஆரம்பிப்போம். நீ என்னை பாரு… என் மேல உனக்கு ஒரு ஸ்பார்க் வரட்டும்… அப்பறம் என்னை துரத்தி துரத்தி காதலி… அப்பறம் சொல்லுவேன் உனக்கும் எனக்கும் ஜென்ம பந்தம்ன்னு. உன் காதல் மேல எனக்குப் பரிபூரண நம்பிக்கை வந்த பிறகுதான் இந்த லாக்கர திறப்பேன். அதுவரைக்கும் நீ காத்திருக்கணும்” என்று சிரித்த அன்று நினைக்கவே இல்லை இது திறக்கப்படாதே போகும் என்று.
அலமாரியில் சாய்ந்து நின்றவள் முன் ரகு சிரித்தான். அன்று போலேவே இன்றும் அவன் ஸ்பரிசத்தை உணர… அவன் இதயத் துடிப்பைக் கேட்க, மனம் ஆசை கொண்டது. அன்றைய நினைவிலிருந்து மனம் வெளிவர விருப்பமே இல்லாது அதையே அசைபோட்டது.
யசோவின் கரத்திலிருந்த மோதிரத்தை வருடியவன் அவள் உள்ளங்கையை தன் கன்னத்தோடு அழுத்தி, உதட்டுக்கு இடம் மாற்றி, அதை அப்படியே கீழிறக்கி, தன் இதயத்தோடு அழுத்திக் கொண்டான். “உனக்காக ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன். நீ கேட்டத என் இதயத்துல ஆழமா அழுத்தமா எழுதி வச்சிருக்கேன். யாரும் சொல்லாமலே நானே நமக்கான உறவ கண்டுபிடிச்சுடுவேன்” என்றது இப்பொழுதும் அவள் காதுகளில் எதிரொலித்தது.
“இதயத்துல எழுதி வச்சிருக்கியா? என்ன சொல்ற ரகு? புரியல டா”
“அது சர்ப்ரைஸ்ன்னு சொன்னேனே… சர்ஜரி முடியட்டும். எப்படியும் அப்போ அது நம்ம ரெண்டு பேருக்குமே சர்ப்ரைஸ் தான். நான் அதுக்கு அர்த்தம் கண்டுபிடிச்சதும், அத உன்னோட ஷேர் பண்றேன் சரியா?” என்றவன் அவன் டிரேட்மார்க் வசீகரப் புன்னகையைச் சிந்தினான்.
“சர்ப்ரைசுக்கு வெயிட்டிங்” என அவஸ்தையோடு சிரித்தது இன்றும் வலித்தது.
“இதுல, உன்னோட கனவு, என் கனவு, நம்ம கடந்த வாழ்க்கை, நம்ம எதிர்காலம்ன்னு எல்லாம் இருக்கு… அது எல்லாமே எனக்காக. நான் திரும்பி வந்தா எனக்காகப் பக்கம் பக்கமா எழுதி வச்சிருக்கேன். ஒருகால்… நான் திரும்பி வராம போனா… உனக்காக ஒரு பக்கம் வச்சிருக்கேன் பேபி” என்றவன் லாக்கர் சாவியை அவள் நிச்சய புடவைக்கு அடியில் சொருகி வைத்தான்.