உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 57.1
“அப்பா” என்றாள், இசைத்த கைப்பேசியை எடுத்து காதுக்குக் கொடுத்த யசோதரா. நாளை காலை வீட்டில் இருப்பேன் என அரவிந்தன் கூற, அப்பாவின் வருகைக்காகக் காத்திருந்த மகளால், ‘சீக்கிரம் வாங்கப்பா’ எனக் கூற இயலவில்லை. “மான்வி நமக்குச் சொந்தமாக போரா யசோமா” எனக் கூறும் அப்பாவிடம் என்னவென்று கூற எனத் தெரியவில்லை. மான்வி சொந்தமென்றால், எப்படி? எப்படி மாற்றிப் போட்டுக் கூட்டினாலும், ஒன்றும் ஒன்றும் இரண்டு என்றே வந்தது யசோவிற்கு. “வாக்கு கொடுத்துட்டேன் மா” எனும் அப்பாவிடம் எப்படி கூறுவது, ‘நானும் தான் பா’ என்று?
மணி பத்தாகியிருக்க, மகளை இன்னும் காணவில்லை. வீட்டிலிருந்தால் இந்நேரம் நான்கு முறையேனும் வந்திருப்பாள். வெளியே எட்டிப் பார்த்தாள் யசோ. கௌதமனின் கார் தெரிந்தது. வீட்டில் தான் இருக்கிறார்கள். அப்பா, மகள் அவர்கள் உலகில் இருப்பார்கள். அந்த உலகில் தானும் இருக்க மனம் ஆசை கொண்டாலும், இது சரியாக வருமா என்ற கேள்வி மட்டும் ஏனோ மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது.
Advertisement
என்ன செய்து மனதைச் சமன் செய்வது? வழக்கம் போல் சுத்தமாக இருந்த வீட்டை மீண்டும் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். படுக்கையறையைச் சுத்தம் செய்ய வந்தவள் கண்களில் பட்டது முன்தினம் அலமாரியிலிருந்து எடுத்த நினைவு புத்தகம். புத்தக ஏடுகளுக்கிடையே புகைப்படங்கள் சொருகப்பட்டு, வயிறு புடைத்து கனத்து கிடந்தது அந்த நினைவு புத்தகம். மெல்ல வருடினாள்.
அது நினைவு புத்தகம் என்பதால் காற்றிற்கு பக்கங்கள் திறந்துவிடாதிருக்க, நோட்டைச் சுற்றி ஒரு லெதர் பட்டையும், பட்டை சேரும் இடத்தில் ஒரு பூட்டும் இருந்தது. இழுத்தால் திறந்துகொள்ளும் பூட்டு என்பதால் அதற்குத் திறவு கோல் என்பது போல் எதுவும் இல்லை. தொங்கிக் கொண்டிருந்த இதய வடிவு பூட்டை ஆட்டினாள். ‘பாதுகாப்பெல்லாம் பலமா இருக்கே’ என ரகு சிரித்தான். நோட்டைக் கையில் எடுத்தவள் அதை ஆழ முகர்ந்தாள்.
“மா… மா” வாயில் காவலாளியின் சத்தத்தோடு கிரில் கேட் தட்டப்படும் சத்தம் கேட்டது. அதிலிருந்த பதட்டம் அவளையும் தொற்றிக் கொண்டது. மகளுக்காகக் கதவைத் திறந்தே வைத்திருப்பாள் யசோ. இன்றும், மகளுக்காகத் திறந்து கிடந்த கிரில் கேட்டின் முன் அவசர அவசரமாக வந்தவள், “என்ன ண்ணா?” எனக் கேட்டாள்.
Advertisement
“சார் வீட்டு பக்கத்துல இருக்க மரத்தடியில உக்காந்திருந்தேன் மா. கொஞ்ச நேரமா வீட்டுக்குள்ள ஏதேதோ விழற சத்தம் கேக்குது. கதவ தட்டிப் பார்த்தேன் தம்பி கதவ திறக்க மாட்டேங்குது. குட்டி பாப்பா ஜன்னல் பக்கமா பார்த்து ஏதோ சொல்லிச்சு. ஒண்ணும் புரியல. பாப்பா தல பூரா வெள்ளையா பௌடர் மாதிரி இருக்கு. ஏதோ சரி இல்லன்னு தோணுது. கதவ திறக்க சொன்னா அதுக்கும் ஏதோ சொல்லுது. நீ வந்து என்னன்னு பாருமா” என்றவர் முகத்தில் கலவரம் பற்றியிருக்க, அது அவளையும் பற்றிக் கொண்டது.
Advertisement
எதையுமே யோசிக்காது ஓட்டமும் நடையுமாக கௌதமன் வீட்டின் முன் வந்து நின்றாள் யசோதரா. மனம் படபடத்தது. நெற்றியில் அரும்பிய வியர்வை அரும்புகள் எட்டிப்பார்க்க ஆரம்பித்தன. ரகு… அவள் ரகு, இங்கு தான்… இந்த வராந்தாவில் தான்… கண்ணாடி பெட்டியில்… முழு நீளத்திற்கு… நினைக்க நினைக்க உடல் முழுவதும் வியத்து வழிந்தது. உடல் நடுங்க மயக்கம் வரும்போல் இருந்தது.
‘டமார்’ என்ற சத்தம். கூடவே, யாழியின் “அப்பா” என்ற பயகுரல் வாயிலை எட்டியது. அரண்டு போன வாயில் காவலாளி, “சார்… கதவ திரங்க. பாப்பா… பாப்பா” எனக் கதவைத் தட்டினார்.
இத்தனை வருட யசோவின் பயத்தை ஒன்றுமில்லாது செய்தது குழந்தையில் அலறல். படியேறி கதவின் முன் வந்தாள் யசோ. “யாழி… யாழி மா” என்றாள் அன்னை. நிமிடங்கள் கடந்தன குழந்தை இவளின் சத்தம் கேட்டு நடுக்கூடம் வந்து சேர. அதற்குள்ளாக யசோவின் உயிர் பலமுறை தொண்டையை தாண்டி வாய் வரை வந்து போனது.
Advertisement
ஜன்னல் பக்கம் அரையும் குறையுமாகத் தெரிந்த குட்டி முகம், “அம்மா” என்றது. உணர்வு பேரலைக்குள் முங்கிக் கிடந்த யசோ குழந்தையின் முகம் கண்டு பயந்து போனாள்.
“என்ன ஆச்சு யாழி?”
“அந்த… அந்த அது… தோஷ மாவு கீழ வீந்துச்சு… கால்ல பட்டுச்சு அம்மா”
“வலிக்குதா பேபி?”
“நாளைக்கே வலி போச்சு அம்மா” எனக் குழந்தை சிரித்தாள். ஜன்னலின் வழியே சிரிக்கும் கண்கள் தெரிந்தன.
“காலையிலயே வந்துட்டு, ஒரு மணி நேரத்துல கிளம்பிடுச்சு மா” என்றார் காவலாளி.
கதவைத் திறந்து கொண்டு “அம்மா…” எனத் துள்ளிக் குதித்தாள் குழந்தை. அவள் மீதிருந்து மாவு பறந்தது. கைகளில் பிசுபிசுப்பாக மாவு இருந்தது. தலை முதல் கால் வரை பார்த்தாள். அடிபட்டது போல் எதுவும் இல்லை. ‘அப்பாடா’ என வாய் வழியே மூச்சை வெளியனுப்பினாள் யசோ.
“நீங்க போங்கண்ணா… நான் பார்த்துகிறேன்” என்றவள், யாழியின் பக்கம் திரும்பினாள். மாவுக்கு இடையே தெரிந்த கண்கள் ஆவலாக அன்னையைப் பார்த்தன.
“என்ன செஞ்சுட்டு இருக்க யாழி?” எனக் கேட்டாள், மகளின் முகத்தைத் தான் போட்டிருந்த கமீசால் துடைத்து.
“ஆலி பேபி ஷப்பாத்தி செய்றேன்” எனக் கையை அம்மாவின் பக்கம் நீட்டினாள்.
இவளைத் துடைத்து எந்த பயணும் இல்லை எனவும், “அப்பா எங்க யாழி?” எனக் கேட்டவளின் கண்கள் அறையின் பக்கம் சென்றன.
“ஷ்ஷ்! அப்பா தூணுறாங்க” என ரகசியம் பேசினாள் குழந்தை.
“இந்த சத்தத்துக்கு நடுவுலையா? மணி பத்தாகுது இன்னுமா தூங்கறார்?” யசோவிற்கு ஏதோ சரியில்லை எனத் தோன்றவும் திடத்தை எல்லாம் ஒன்று சேர்த்து, மகளின் குட்டி கரம் கொடுத்த தைரியத்தோடே வீட்டினுள் கால் எடுத்து வைத்தாள்.
விளையாட்டுப் பொருட்களும் சமையலறை பாத்திரங்களுமாக வீடு அலங்கோலமாக இருந்தது. “என்ன பேபி இது?” பார்த்தவளுக்குத் தலை சுற்றியது.
ஒரு வழியாக அடுக்களைக்குள் நுழைய, அது அதற்கு மேல் இருந்தது. குளிர்சாதனப் பெட்டியின் கதவு பாதி திறந்து கிடந்தது. கதவை அடைத்துக் கொண்டு தோசை மாவு டப்பாவோடு குற்றுயிரும் குலை உயிருமாகத் தரையில் விழுந்துகிடந்தது. அது குழந்தையின் தலையிலும் துணியிலும் கோலமிட்டிருந்தது. தரை முழுவதும் கோதுமை மாவால் மொழுகியிருக்க, மகளைப் பார்த்தாள் யசோ. அத்தனை பற்களையும் காட்டி சிரித்தாள் குழந்தை.
மாவு டப்பாவை நகர்த்தி குளிர்சாதனப் பெட்டியை மூடியவள், கீழே சிதறிக் கிடந்த சிலவற்றை அங்கும் நகர்த்தி வைத்தாள். இது இப்போதைக்குச் சரி செய்ய முடியாது எனத் தெரிந்தது. “என்ன பேபி இது?” என்றவளுக்கு அதற்கு மேல் என்ன கேட்பது என்று தெரியவில்லை.
“ஷப்பாத்தி பண்ணுலேன் அம்மா” என்ற குழந்தை, ஆர்வமாகத் தான் தயாரித்துக் கொண்டிருந்த தயாரிப்பைத் தூக்கி வந்தாள். கொழகொழவென இருந்த வஸ்துவில் கோதுமை மாவும், தண்ணீரும் அடக்கம். மற்றவை என்னவோ இவளுக்குத் தெரியவில்லை. மாவையும், மகளையும், அடுக்களையும் பார்த்தவளுக்கு அழுவதா சிரிப்பதே என்று தெரியவில்லை. மலரின் நிலையை நினைத்தவளுக்குப் பாவமாக இருந்தது.
“நீ சாப்பிட்டியா?”
“நானே பிக் பேபியா சாப்தேன் அம்மா” என உணவு மேசையைக் காட்ட, மலர் செய்து வைத்துப் போனது பொங்கல் மற்றும் சட்டினி எனப் பாத்திரத்தைத் திறக்காமலே தெரிந்தது.
“அப்பா எங்க?” என்றதும் மகள், “இடோ… இங்க” என அன்னையின் கரம் பற்றி இழுத்துச் சென்றாள் குழந்தை.
ரகுவின் அறை. அவன் வாசம் கலந்திருந்த அவன் அறை. இன்று இதில் அவன் இருக்க மாட்டான். அவன் வாசம் இருக்காது. ‘லகு’ மனம் வெகுவாய் வலித்தது.
“அப்பா உள்ள இலுக்காங்க அம்மா” என்றாள் குழந்தை. நடுங்கும் கரத்தோடு கதவின் கை வைக்க அது திறந்து கொண்டது. குளிர்சாதனப் பெட்டியை விட, அவன் படுத்திருந்த அறை குளிறியது.
“என்ன இப்பிடி குளுருது?” என உடலை ஒரு முறை சிலிர்த்துக் கொண்டாள் யசோ.
“ஷ்ஷ்… அப்பா தூணுலாங்க. ஆலி பேபி அப்பாக்கு ஏசி போத்து, மூடி விட்டேன்” என்றாள் இழுத்துப் போர்த்திப் படுத்திருந்த தகப்பனைக் காட்டி. பார்த்தவளுக்கு உடல் வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்தது. ரகுவின் அறையில், தலை முதல் கால் வரை மூடிக்கொண்டு ஆறடிக்கு நீட்டி நிமிர்ந்து படுத்திருக்கும் உருவத்தைப் பார்த்தால் அவளும் என்ன செய்வாள்? வீடு இவ்வளவு அலங்கோலம் ஆகும் வரை தூங்கும் ரகம் கௌதமன் அல்ல. இப்படி அசைவில்லாது படுத்திருந்தால் அதற்கு என்ன அர்த்தம்?
வாயிலில் நின்று கொண்டே, “அ…அ…அப்பாவ எஎழுப்பு யாழி” என்றவளுக்கு உடலோடு குரலும் நடுங்கியது.
அப்பாவின் அருகில் ஓடிச் சென்று, “அப்பா… ஏந்தீங்க. அம்மா வந்துலுக்காங்க. அப்பா ஏந்தீங்க அப்பா” எனக் குழந்தை உலுக்க அவன் அசைவற்று படுத்திருந்தான்.
அம்மாவிடம் துள்ளி வந்த குழந்தை, “அப்பா லொம்ப தூணுலாங்க. தூணட்டும் சலியா?” என்றவள் அவள் வேலையைக் கவனிக்க அடுக்களைக்குள் ஓடினாள். அப்பா எழுவதற்குள் சப்பாத்தி குருமா செய்து முடிக்க வேண்டுமே!
அசைய மறுத்த கால்களை இழுத்துக் கொண்டு கௌதமன் அருகில் சென்றாள். படுத்திருக்கும் உருவத்தைத் தொட நீண்ட கையில் புத்தகம் வீற்றிருக்க, கையிலிருந்த நோட்டு புத்தகத்தை கட்டிலை ஒட்டி இருந்த மேசை மீது வைத்தாள். மேசையிலிருந்த மாத்திரை டப்பா காலியாக இருந்தது. பார்க்கும் எதுவும் யசோவிற்கு உவப்பாக இல்லை. இங்கிருந்து ஓடினால் என்ன என தோன்றிய எண்ணத்தைப் புறம் தள்ளி, “கௌ..கௌதமன்” என அழைத்தாள். காற்று தான் வந்தது.
போர்வையை விலக்கத் தைரியமற்றவளாக தடதடக்கும் இதயத்தோடு போர்வைக்குள் படுத்திருந்த உருவத்தைப் பார்த்தாள். அடுக்களையில் டம்ளர் விழும் சத்தம் கேட்டது. இங்கு நின்று கொண்டே இருக்க முடியாதே. நடுங்கும் கரம் கொண்டு மெல்ல போர்வையை விலக்கினாள். கௌதமன் முகம் தெரிந்தது. தலையைச் சுற்றியோ உடலைச் சுற்றியோ வெள்ளை துணி இல்லை. ஒருவழியாக நுரையீரல், அடைத்து வைத்திருந்த மூச்சுக் காற்றைத் திணறிக் கொண்டே வெளியே விட்டது. கடந்து சென்ற சில நிமிடங்களில் எத்தனை முறை செத்துச் செத்துப் பிழைத்தாயிற்று. இவனும், இவன் மகளும், தன்னை இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறார்கள்?
ஆழ மூச்சை நான்கைந்து முறை இழுத்துவிட்டவள், கௌதமன் நெற்றியைத் தொட்டாள். நெற்றி சில்லென்றிருந்தது. “கௌதமன்?” என்ற அழைப்பு அவனை அடைந்ததாகவே தெரியவில்லை. கௌதமனிடம் எந்த அசைவும் இல்லை என்றதும் பயம் அப்பிக் கொண்டது யசோவை.
“எழுந்திருங்க கௌதமன்” என அவன் கன்னத்தைத் தட்டி, அவனைப் பலமாக உலுக்கினாள். மெல்லிய முனகல் சத்தம் வந்தது. ஏதோ கூறினான். அவன் உதட்டருகே காதை வைத்துக் கவனிக்க, “பேபி” என்றான். ஷாக் அடித்தது போல் யசோ ஓரடி பின் சென்றாள். அவன் உதடு மீண்டும் மீண்டும் ‘பேபி’ என அசைந்தது. யசோவின் இதயம் வாய் வழியே துள்ளிக் குதித்துவிடும் போல் இருந்தது.
அடுக்களையில் பாத்திரம் உருண்டது. ‘பேபி’… என்றால், ‘யாழி பேபி’ என யசோவின் மூளை எடுத்துக் கொடுத்து.
ஏசியை அணைத்து அறையின் ஜன்னல் நோக்கிச் செல்ல காலில் மிதிபட்டு பட்டென உடைந்தது சிதறிக் கிடந்த கிரையான்ஸ்களில் ஒன்று. இந்த அறையையும் மகள் விட்டு வைக்கவில்லை என்றது கட்டிலின் கீழ் கிடந்த காகிதங்களும் கிரையான்ஸ்களும். அந்த தாள்களின் நிலையை பார்த்தால், மருத்துவர் அருணிற்கு மாரடைப்பு நிச்சயம். கட்டிலுக்கு வெளியே இருந்த தாள்களை எடுத்து அடுக்கி மேசை மீது வைத்தவள் சாளரத்தின் திரைச் சீலையை நகர்த்தி அறையை வெளிச்சத்தால் நிறைத்தாள்.
ஜன்னல் கதவுகள் திறக்கப்பட்டன. ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்த இருபது வயது யசோ, ‘மாடிக்கு வா’ என அதிகாரம் செய்தாள். ‘பேபி நில்லுடி’ என இருட்டுக்குள் ரகு ஓடினான். இருட்டில் இரு உருவங்கள் பின்னிக் கொண்டு நின்றிருந்தன. அவர்களை அப்படியே விட்டுவிட்டு, பெருமூச்சோடு குளியலறைக்குள் சென்றாள் யசோதரா.
ஈர பூந்துவாலையோடு வந்த யசோ, கௌதமனின் முகத்தைத் துடைத்தாள். கௌதமன் கண்கள் சுருங்கின. வாய் எதையோ முணுமுணுத்தது.
உட்கொண்டிருந்த மாத்திரைகள் கௌதமனைத் தூக்கத்துக்கும் முழிப்புக்கும் இடையே இழுத்து பிடித்திருக்க, கண்களைத் திறக்க கௌதமன் திணறினான். “கௌதமன்…” கன்னம் தட்டினாள். “ம்ம்ம்ம்” என்ற சத்தம் வந்தது.
“கண்ண திறங்க கௌதமன்” அழைத்துக் கொண்டே மீண்டுமாக ஈரத் துண்டை கொண்டு முகத்தைத் துடைத்தாள். முனகல் மட்டுமே வந்தது. கண் திறக்க அவன் அவஸ்தைப் படுவது தெரிந்தது.
மீண்டும் மீண்டும், “கௌதமன்” என்ற யசோவின் அழைப்பு வேலை செய்தது. பாறாங்கல்லாய் கனத்த இமைகளை மெல்லத் திறந்தான்.
ஈன ஸ்வரத்தில், “ஹேய்… யசோ” என்றான் கௌதமன். அவன் அருகில் யசோ. இன்ப அதிர்வலைகள் கௌதமனை ஆட்கொண்டது. “ஆவி பறக்கிற காபியோடு எழுப்பி இருக்கலாமே” எனப் புன்னகைத்தான்.
“ஏது… பத்து மணிக்கா?”
“உன் கையால கொடுத்தா… எப்போ வேணா குடிப்பேன்” எனப் புன்னகைத்தான்.
அந்த காலை வேளை அவ்வளவு பிடித்தது கௌதமனுக்கு. ஆனால் அதை ரசிக்க விடமாட்டேன் என்கிறதே இந்த தலைப் பாரம். தலையை இருகரங்களாலும் அழுத்தினான். கண்கள் வலியில் மூடின. பார்த்த யசோவின் முகத்தில் அப்பட்டமான பயம் பரவியது.
“என்ன ஆச்சு? த்தல.. தல வலிக்குதா?” கேட்டு முடிப்பதற்குள் தொண்டை வரை வறண்டது பெண்ணிற்கு.
“அம்மா, பேபியா இந்தீங்களா?” குட்டி கண்கள் விரிய அம்மாவைப் பார்த்தாள் குழந்தை.
“உன்ன மாதிரியே குட்டி பாப்பாவா இருந்த போது, இதே வீட்ட நானும் உன்ன மாதிரி தான் படுத்தி வச்சிருக்கேன். பாட்டி கிட்ட இருந்து என்னை காப்பாத்த ரகு என்னை கிளீன் பண்ணி விடுவான். அவன் அப்படியே விட்டிருந்தா என்னை மட்டும் குளிப்பாட்டுற வேலையோட பாட்டிக்கு முடிஞ்சிருக்கும். பாட்டி திட்டிட்டே என்னையும் ரகுவையும் கிளீன் பண்ணுவாங்க.” என்றவள் இருபது வருடங்களுக்கு முன் சென்றிருந்தாள்.
“லகு யாலு அம்மா?” என்ற கேள்வியில் சட்டென யசோவின் உணர்வு பெற, “நீ அப்பாட்ட போ. நான் இந்த கிட்சன கிளீன் பண்ணிட்டு வரேன்” என்று மகளைக் கீழே இறக்கி விட்டாள்.
சரிந்து அமர்ந்த கௌதமனின் கண்கள் மகளைத் தேடின. “பேபி” என்ற அழைப்பு முடியும் முன்னமே, “அப்பா… ஏந்தியாச்சா? நல்லா தூண்ணீங்களா? ஆலி பேபி அப்பவே ஏந்துட்டேன்” என ஓடிவந்த குழந்தை தகப்பன் மீது தாவி ஏறினாள்.
“என்ன பேபி கோலம் இது?” என்றவனுக்கு நெஞ்சு வலி மட்டும் தான் வரவில்லை.
ஈ என சிரித்த குழந்தை, “ஆலி பேபி, சிக்கன்ல நீங்களுக்கு ஷப்பாத்தி பண்ணுலேன் அப்பா” எனக் குழைந்தாள்.
“ஐயோ…” என வாய்விட்டே அலறியவன், “கிச்சன் பக்கம் போக கூடாதுன்னு சொல்லி இருக்கேனா? நீயே இப்படி இருக்கன்னா, கிச்சன் எப்படி இருக்கோ?” என எச்சில் விழுங்கினான்.
“நெஷ்ட் டைம் சிக்கன் போல சலியா? அள நேணா சலியா?” எனத் தகப்பனுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசினாள்.
“சிக்கன் இல்ல பேபி கிச்சன். சரி… உனக்கு ஒண்ணும் இல்லையே” என மகளின் கை, கால் தலை என ஒவ்வொன்றாக ஆராய்ந்து, மூச்சுவிட்டான்.