உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 58.2
காலையிலிருந்து ஊர் சுற்றியதில் இருவருக்கும் கால் வலித்தது. ஆனால் அதை எல்லாம் கவனிக்கும் நிலையை இருவரும் கடந்திருந்தனர். இந்த தருணத்தை விட்டால் இதுபோல் ஒரு நாள் அமையாது போய்விடுமோ என்று தோன்றியிருக்க வேண்டும் இருவருக்கும். கால் கடுக்க நடந்தனர்.
“இங்க தல முழுகினா பாவம் போயிடுமாம்” என்றாள் மகாமகம் கோவில் தெப்பக்குளத்தைக் காட்டி.
திரும்பி அவளை ஒரு முறை பார்த்தான்.
Advertisement
“நான் சொல்லல்ல… அம்மா சொன்னாங்க” என்றாள் அவன் பார்வையைச் சந்தித்தவள்.
“படியில உக்காரலாமா?” என எப்பொழுதும் போல் கேட்டு, அவன் பதில் வரும் முன் அவனையும் இழுத்துக் கொண்டு படிகள் ஒன்றில் அமர்ந்தாள்.
அதுவரை தெரியாத வலி அப்பொழுது தான் அவளுக்குத் தெரிந்தது. “கால் வலிக்குது” என்றாள். மெல்லப் பாதத்தைப் பிடித்துவிட்டு. அவள் சிவந்த குதிகாலைப் பார்த்தவன் மனம் ‘அச்சோ’ என்று உச்சுகொட்டியது. ‘நா வேணும்னா கால பிடிச்சு விடவா?’ என நா வரை வந்ததை சிரமப்பட்டு உள்ளுக்குள் புதைத்தான்.
Advertisement
“வீட்டுக்கு போனதும் கால் பொறுக்குற சூடு தண்ணியில கடுகுப் பொடியும், கல்லுப்பும் போட்டு கால்ல முக்கி வை. வலிக்கு இதமா இருக்கும்” எனப் பாட்டி வைத்தியம் சொன்னவனைப் பார்த்து ஆமோதிப்பாகத் தலையசைத்தாள்.
Advertisement
ராஜீவன் தனக்கு ஒருபடி மேல் அமர்ந்திருந்தவளை அமைதியாகப் பார்த்து அமர்ந்திருந்தான். இல்லை… அமைதியாகக் காட்டிக் கொண்டான். நிஹிராவின் கண்கள் பேசின. இளம் சிகப்பு சாயம் பூசப்பட்ட இதழ்கள் அசைந்தன. கேசத்தை ஒதுக்கும் விரல்கள் பேசின. ‘இத்தனை நாள் எங்கிருந்தாய் நீ?’ என்ற நினைப்பு அவனை ஆட்கொண்டது. அவளின் அசைந்த அசையாத பாகங்கள் என அனைத்தையும் சலிக்காது பார்த்து அமர்ந்திருந்தான் ராஜீவன்.
நேரத்தைப் பிடித்து வைக்க இருவரும் முயன்று தோற்றனர்.
நிஹிராவிற்கு அதிகம் பேசப் பிடித்தது. இன்று அந்த அதிகத்தின் அளவு கூடித் தெரிந்தது. கேட்பவன் ராஜீவன் என்பதாலா இல்லை அவள் இயல்பே அது தானா? அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் எப்பொழுதும் போல் இன்றும் கலகலப்பாகப் பேசும் நிஹிராவின் வாய் பார்த்து அமர்ந்திருக்க ராஜீவனுக்குக் கசக்கவில்லை.
Advertisement
நிஹிராவின் கைப்பேசி ஒலிக்க, “அப்பா…” எனப் புன்னகைத்தவள், “ஒரு நிமிஷம்” என ராஜீவனிடம் கண்சுருக்கி கேட்டு, கைப்பேசியைக் கையில் எடுத்தாள். அவள் தகப்பனோடு பேச இவன் அமைதி காத்தான்.
அந்த அமைதி அவள் கைப்பேசியை அணைத்தபின்னும் தொடர்ந்தது. பேசியது வரை போதும் என நினைத்தனரா இல்லை நிறைவாக உணர்ந்ததால் அமைதி காத்தனரோ, அவர்களுக்கே வெளிச்சம். வந்து சென்ற ஜனத்தை அவள் வேடிக்கை பார்க்க அவன் எண்ண அலைகள் அவனை சில வருடங்கள் முன் அவனை இழுத்துச் சென்றது. அங்கு, அவன் யார்? அரோகி யார்? என்று பிரித்துரைக்க முடியாதபடி பிணைந்து நின்றிருந்தனர்.
கடைசியாக இப்படி இவனிடம் சிரித்து… ரசனையோடு பேசிய பெண் அவள் மட்டுமே. இல்லை இல்லை… ஒருத்தி இல்லை இருவர். ஒருத்தி, காதல் என்ற பெயரில் கழுத்தை அறுத்தாள். ராஜீவனின் ஒவ்வொரு அணுவிலும் ஆரோகி இருந்தாள். உயிராக இருந்தவள் இவன் உயிர்ப்பை, சிரிப்பை, மானத்தை என அனைத்தையும் உருவி நிராயுதபாணியாக விட்டுச் சென்றாள். மற்றவள் திருமண நாள் வரை காத்திருந்து கழுத்தறுத்தாள். ‘ஒருத்தி என் மேல பெட்ரோல் ஊத்துனா, ஒருத்தி பத்தவச்சா. இனிமேல் பொண்ணுங்கள பத்தி பேசிட்டு வராதக்கா’ என்று கூறய நானா இன்று இப்படி? அவமானமாக இருந்தது ராஜீவனுக்கு. கனவு நூல் பட்டென்று அறுபட்டது ராஜீவனுக்கு.
“நேரம் ஆச்சு, கிளம்பலாமா நிஹிரா?” என்றவனைப் பார்த்தாள். அவன் குரலில் ஒட்டா தன்மையைப் பார்த்தவள் எழுந்தாள். பாதம் வலித்து கொன்றது. முதல் எட்டு எடுத்து வைக்கும் குழந்தையைப் போல் தடுமாறியவளைப் பிடித்துக் கொண்டான்.
“ரொம்ப வலிக்குதுனா… இங்கயே வெயிட் பண்ணு, நான் கார் எடுத்துட்டு வரேன்” என்றதும், “இல்ல இல்ல… அப்படி எல்லாம் வலி இல்ல. உக்காந்துட்டு எழுந்ததுல தடுமாறிடுச்சு” என வாய் கூசாது பொயுரைத்தாள். அது அவனுக்கும் தெரிந்தது.
கிளம்ப மனமே இல்லாது, தொங்கி போன முகத்தோடு, “வந்தது காபி குடிக்க…” என வாய்க்குள் முணுமுணுத்தாள்.
அவள் நின்றிருந்த கோலமும், முகத்தைத் தூக்கிப் பிடித்திருந்த விதத்தையும் பார்த்தவனுக்கு சம்பந்தமே இல்லாது குட்டி தேவதையின் நினைவு வந்தது. “லீவன் மாமா… ஆலி பேபி கோவமா இலுக்கேன்” எனக் கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு, தன் குட்டி நெற்றி சுருக்கி, கண்களை உருட்டும் அந்த குழந்தைக்கும் இவளும் என்ன வித்தியாசம் எனப் பார்த்தான். உருவம் மட்டுமே பெரிதாக இருந்தது.
“க்கும்…” எனத் தொண்டையைக் கனைத்தாள்.
‘காலையிலயிருந்து இருக்க நாலு தெருவையும் பத்து தரம் சுத்திட்டோம். இவளுக்கு பத்தல.’ சிரிப்பு வந்தது ராஜீவனுக்கு. இவளைத் தள்ளி நிறுத்தவே முடியாதோ? அவன் மீதே அவனுக்குச் சலிப்பு தட்டியது.
“இருட்ட ஆரம்பிச்சிடுச்சு. இனி காபி குடிச்சா தூக்கம் வருமா உனக்கு?” மென்மையாகவும் அக்கறையாகவும் வந்து விழுந்தன வார்த்தைகள்.
அவன் குரல் மாறியிருக்க, “அதெல்லாம் பேஷா வரும்” என்றாள் சட்டென்று மலர்ந்த முகத்தோடு.
“எனக்கு வராதே” என்றான் பாவாம் போல்.
“ஒரு நாள் தூங்காட்டா ஒண்ணும் ஆகாது. மங்களாம்பிகா ஹோட்டல் டிகிரி காபிக்கு ஃபேமஸ் தெரியுமா? யூ டியூப்ல பார்த்தேன். போலாமா?” என அவனை இழுத்துக் கொண்டு மீண்டுமாக அவர்கள் சுற்றி வந்த தெருக்கள் பக்கம் சென்றாள்.
“ஒரு கப் காபி” என்றவனை ‘யார் டா நீ?’ என்பது போல் பார்த்தாள்.
பொங்கும் பாலின் நுரையை டிக்காஷனில் படரவிட்டு, அதன் மீது பாலை ஊற்றி, பாலின் மீது மீண்டுமாக டிக்காஷனை ஊற்றி, சுடச் சுட பித்தளை டபராவின் காபி அவர்கள் முன் வைக்கப்பட்டது.
“சுடும்… பார்த்து” எனக் காபியை ஆற்றி டபராவை அவள் பக்கம் வைத்துக் கொண்டு அவனுக்கு டம்ளரைக் கொடுத்தாள்.
“குடிங்க” என்றாள். அவளையும் காபியையும் பார்த்தான். வருடங்கள் பல சென்றுவிட்டன இவன் பாலை தவிர்த்து.
“நான் ஒரு காபின்னு சொன்னது, உனக்கு மட்டும் தான். எனக்கில்ல.” என்றான்.
இவன் விருப்பு வெறுப்பை பற்றி அதிகம் தெரியாதென்றாலும், பால் சேர்க்க மாட்டான் எனத் தெரியும். “சும்மா, ஒரு வாய் குடிச்சு பாருங்க. பிடிச்சா குடிங்க. வேஸ்ட் எல்லாம் ஆகாது… உங்களுக்கு பிடிக்கலைனா, உங்களுக்கும் சேர்த்து நானே குடுச்சிடுவேன்” என்றாள், அவன் யோசனையைப் பார்த்து.
ஒரு கோப்பை பானத்தை இவனும் ஆரோகியும் மாற்றி மாற்றிக் குடித்தது இந்த நேரத்தில் நினைவில் வந்திருக்க வேண்டாம். வீணாய்ப் போன அனைத்தும் அவசர கதியில் அவன் நினைவை கிளறி விட்டு சென்றது. சதையோடு ஒட்டிக் கொண்ட நகம் போல் இருந்த அவளே ஒருநாள், ‘யு ஆர் நாட் வொர்த்’ என்றாள். செல்வ சீமாட்டியான இவள் அப்படி நினைக்க மாட்டாளா என மனம் எதிரில் இருந்தவளை பற்றி எண்ணியது. பழைய கசடுகள் மேல் எழும்ப ராஜீவனின் இளகியிருந்த மனம் அலைபாய்வதை நிறுத்திக் கொண்டது.
“குடிங்க… தி ஃபேமஸ் டபரா செட் கும்பகோண காபி” என்றாள் நிஹிரா. அவன் முன்னிருந்த காபி கோப்பையைப் பார்த்தவன், மீண்டும் ஒரு அவமானத்தையும் மனவலியையும் ஏற்க விரும்பவில்லை.
மீண்டும் ஒரு விஷபரிட்சைக்கு அவன் தயாராக இல்லை என்பதால் அவள் மனதையும், அவன் மனதையும் அவன் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. நிஹிராவின் எண்ணம் என்னதாக இருந்தாலும் அதை வளரவிட மனமில்லை என்பதால், “எனக்கு காபிய பழக விருப்பமில்ல” என அதை நகர்த்தி வைத்தான்.
“எனக்கு நேரம் ஆச்சு, கிளம்பணும்” என்றவன் எழுந்து நின்றான். ‘ஏன் என்னானது இவனுக்கு? என்ன செய்துவிட்டேன் நான்? நன்றாக தானே சென்றது? காபி குடிக்க சொன்னது ஒரு குத்தமாடா?’ சின்னவள் மனம் சுணங்கியது. அது, நிஹிராவின் முகத்திலும் தெரிந்தது.
“ஓஹ்… ஓகே, போலாம்” என்றவளும் எழுந்தாள். டபராவும் டம்ளரும் ஆவி பறக்கும் காபியோடு தனித்தனியே கேட்பாரற்று மேசையிலிருந்தன.
ராஜீவனின் திடீர் உடல்மொழி மாற்றமும், பேச்சின் தோரணை மாறுவதும் நிஹிராவிற்கு புதிதல்ல. அவன் முன்பே அப்படி தான். ஆட்களிடம் இருந்து விலகியே நிற்பான். அவன் உலகம் அவன் கரத்திலிருக்கும் கேமராவிற்குள் அடங்கிவிடும். இது தான் அவன் இயல்பு என நினைத்த போது அவன் சிரிப்பு சத்தம் கேட்டது. புன்னகையோடே திரும்பியவனை பார்த்த நிஹிராவை ஈர்த்தான் வாலிபன். ‘முசுடு சிரிக்குது’ என ஆச்சரியமாக பார்த்தவளுக்கு அவ்வபோது அந்த காட்சி காணகிடைத்தது. அவன் சிரிப்பு சத்தம் கேட்டால், அங்கு கௌதமன் இருக்கிறான் என பார்க்காதே கூறிவிடலாம். இரு தன்மைகளை கொண்ட ராஜீவனை பற்றி அறியும் முயற்சியில் அவன் மேடை வரை வந்த திருமணம் பற்றி அறிந்தாள். “இது ஒரு மேட்டர்ன்னு சார் இப்படி ஆகிட்டாராக்கும்?” என அப்பாவிடம் ராஜீவனை பற்றி குறை கூறினாள். ஒரு நாள், அவள் எதிர்பாரா வேளையில் உணவகம் ஒன்றில், கௌதமன் அவன் தோழனோடு பேசுவதை கேட்க நேர்ந்தது. அன்று தெரிந்தது ராஜீவனின் இறுக்கத்திற்கு பின் இருப்பது ஒருத்தி அல்ல இருவர் என.
“குடிக்கலியா?” எனக் காபியைப் பார்த்தான்.
‘ரொம்ப தான் அக்கறை’ என நினைத்தவள், “ப்ச்” என உதடு சுழித்தாள்.
உதடுகளை இழுத்து பிடித்து புன்னகைப்பது போல் காட்டியவள், “மனசு நிறைஞ்சு போயிருக்கு. எதுக்கு அதுக்கு மேல சூடா ஊத்துவானேன்? போலாம்” என்றவள் இடத்தை காலி செய்தாள். ‘இவன் அருமை தெரியாது யாரோ இருவர் இவனை காயபடுத்தினால், அதையே தானும் இவனுக்கு செய்வேன் என இவன் எப்படி நினைக்கலாம்? இதுக்கு சேத்து வச்சு உன்ன பழிவாங்கறேன் போ’ மனதிற்குள் சூளுரைத்தவன் அவள் கோபத்தை நடையில் காட்டினாள்.
விடுவிடு என நடந்தவளை இயலாமையோடே பார்த்தான் ராஜீவன். வேகம் கூட்டி அவளை தொட்டு நடக்க ஆரம்பித்தான். “எங்க இறக்கி விடணும்?” என்றவனைப் பார்த்தவளுக்கு கோபம் கொப்பளித்தாலும் அதையும் மீறி துக்கம் தொண்டையை அடைத்தது. இன்று அழுதால் அடுத்த ஒருவருடமும் அழுதுக் கொண்டே இருப்பாய்… அழாதே என்றது மனம்.
அவள் அமைதி அவனுக்கு பிடிக்கவில்லை. ‘உனக்கு என்னத்தான் டா வேணும்?’ என அவன் மேல் அவனுக்கு எரிச்சலாக வந்தது. யாரோ காயம் செய்தால்… அதற்கு இவள் என்ன செய்வாள்? புரிகிறது. ஆனால் மனம் அவளின் அன்பை ஏற்கத் தயங்குகிறது. அவனும் என்ன செய்வான்?
அவள் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றுவிட, “கிளம்பலாமா?” என அவளை பார்த்தான்.
“எனக்கு பூ வேணும்” என்றாள் கோவில் அருகிலிருந்த பூக் கடையை காட்டி. வாங்கிக் கொடுத்தான்.
“சிரிச்சுட்டே குடுத்தா தான் வாங்குவேன்” என்றாள் எங்கோ பார்த்து. ‘யாழியோட அக்காவா இருப்பா போல’ என நினைத்தவனுக்கு உண்மையிலுமே சிரிப்பு வந்தது.
“அது நீ என் முகத்தை பாக்கணும்” என்றான் இளகிய குரலில்.
“போதும் போதும் சிரிச்சு பயமுறுத்த வேண்டாம்” என்றவளும் சேர்ந்தே சிரித்தாள்.
புடவை, பூ என அவன் முன் நின்றிருந்தவள், “நல்லா இருக்கேன் இல்ல?” என, முன் கேட்ட அதே கேள்வியைக் கேட்டாள். இம்முறை சுற்றி எல்லாம் காட்டவில்லை.
அவன் அமைதியாக நிற்க, “எனக்கு பர்த்டே இன்னைக்கு.” என்றாள். அவனுக்கு என்னவோ போலானது. ‘போடா…’ என மனம் சலித்துக் கொண்டது. அவனையே அவன் வெறுத்தான். பரபரவென பின்னந்தலையை தெய்த்துவிட்டான். உச்சுக் கொட்டிக் கொண்டான். தலையை இடம் வலமாக ஆட்டிக் கொண்டான். அமைதியாகவும் திருப்தியாகவும் அவனைப் பார்த்து நின்றாள் நிஹிரா.
“ஹேப்பி பர்த்டே நிஹிரா. அப்பவே சொல்லி இருக்கலாமே…” என்றவனை இடையிட்டு, “சொல்லி இருந்தா என் கூட காபி குடிச்சிருப்பீங்களா?” எனக் கேட்டாள்.
அவன் அமைதி காக்கா, அந்த அமைதியை வெறுத்தவள், அவள் கைப்பேசியை அவனிடம் நீட்டி, “நீங்க காஸ்லி ஃபோட்டோகிராப்பர்ன்னு தெரியும். ஆனா, இன்னைக்கு என்னோட ஸ்பெஷல் டே. சோ… நோ சொல்லாம, என்னை இந்த கோவில் பேக்ரவுண்ட்ல ஒரு ஃபோட்டோ எடுத்து கொடுங்க ஃபோட்டோகிராப்பர். பெஸ்ட் பர்த்டே கிஃப்டா வச்சுப்பேன்” என்றாள் புன்னகையோடே.
ஒரு நல்ல கலைஞனாக இடத்தை சுற்றிப் பார்த்தான் ராஜீவன்.
“இருக்க லைட் போதும். எடுங்க. நான் இயற்கையாவே அழகா இருக்கனால, நீங்க எப்படி எடுத்தாலும் ஃபோட்டோ நல்லா தான் இருக்கும்” என்றாள் பற்கள் அனைத்தையும் காட்டி. சிரிப்பு வந்தது ராஜீவனுக்கு. அவன் உணர்ந்தானோ இல்லையோ, காலையில் அவளைப் பார்த்த நிமிடத்திலிருந்தே ராஜீவனுக்கு எதற்கும் சிரிப்பு வந்து அட்டெண்டன்ஸ் போட்டுச் செல்கிறது.
எப்படி ஒதுக்கித் தள்ளினாலும், ‘எவ்வளவு வேணுமோ அடி… இந்த பாடி தாங்கும்’ என்பது போல் நிற்பவளை என்னதான் செய்வது? அவனும் விதவிதமான ஆங்கிளில், விதவிதமான போசில் புகைப்படம் எடுத்தான். ஒவ்வொன்றையும் ரசனையோடே எடுத்தது அவனுக்கும் அவன் இதயத்துக்கு மட்டுமேயானது.
“காட்டுங்க… தேறுதான்னு பார்க்கிறேன்” என ஒவ்வொன்றாகப் பார்த்தாள்.
“சூப்பரா இருக்கேன் இல்ல…” என அவனைப் பார்த்துக் கண்சிமிட்டியவள், “ஒரு செல்ஃபி” என அவனோடு பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டே இருந்தாள். அவள் கூந்தலில் வீற்றிருந்த மல்லியின் மணம் நாசியை வருடியது. காற்றில் அசைந்த கூந்தல் அவன் கன்னத்தை வருடி ராஜீவனின் இளமையைச் சோதித்து பார்த்தது. அவளின் அந்த நெருக்கம், ராஜீவன் சற்றுமே எதிர்பாராதது. நெருக்கம் கொடுத்த அவஸ்தையால் ராஜீவனின் இதயம் துள்ளி வாய் வழியே விழுந்துவிடும் அபாயம் இருக்க, “கிளம்பலாம்” என்றான்.
‘இவனோட’ என உள்ளுக்குள் அலுத்துக் கொண்டாலும், “இன்னைக்குத் தான் என்னோட லைப்போட ஷ்பெஷல் பர்த்டே. நான் எடுத்த ஃபோட்டோஸ் இந்த நாளோட மெம்மொரி. நீங்க எடுத்தது எதுக்கு தெரியுமா?” எனத் துள்ளலோடு அவனிடம் வினவினாள்.
அவன் நெற்றி சுருக்கி பார்க்க, சிரித்துக் கொண்டே “மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்ப லட்சணமா ஒரு ஃபோட்டோ வேணும்ன்னு அம்மா கேட்டாங்க. புடவைல வேணும்ன்னு சொன்னாங்க… அதுக்கு தான். இதுல பார்த்தா மாப்பிள்ளைக்குப் பிடிக்கும் இல்ல?” எனக் கைப்பேசியை பார்த்துக் கொண்டே நடந்தாள்.
ஏனோ அவனுக்கு சிரிப்பு வரவில்லை, எரிச்சல் வந்தது. “எனக்கு நேரம் ஆகுது. ஃபோன வச்சுட்டு, கொஞ்சம் வேகமா நடக்குறியா?” என எரிந்து விழுந்தான், மனம் உடைந்த ராஜீவன்.
“இவ்வளவு எரிச்சலோட என்னை கூட்டிட்டு போக வேண்டிய அவசியம் இல்ல கேமரமேன். நீங்க உங்க வழிய பாத்து போங்க. வந்த எனக்கு போகத் தெரியும்” என்றாள் அவளும் கோபத்தை முகத்தில் காட்டி.
அவனுக்கு முதுகை காட்டி நடக்க ஆரம்பித்தவள் கரம் பற்றி “வா என்னோட” என தன்னோடு இழுத்துக் கொண்டு சென்றான்.
கேட்டவன் முகத்தை ஆவலாக பார்த்து, “எவ்வளவு தூரம்?” என கேட்டாள். ‘வாழ்வு முழுவதும்’ என அவன் கூற வேண்டுமே என்ற ஆசை இப்போதைக்கு நிறைவேறா ஆசை எனத் தெரிந்தே அவன் முகத்தை ஆவலோடு பார்த்தாள்.
“எங்கயாது இறங்கி தான் ஆகணும் நிஹிரா. நீ வா, அப்படி எல்லாம் பாதியில விட்டுட்டுப் போக முடியாது.” என்றவன் காரின் கதவை திறந்துவிட்டான். தன் வல கரத்தை அவனை நோக்கி நீட்டியவள், “ஃபிரெண்ட்ஸ்?” என வினவ, கையையும் அவளையும் பார்த்தவன், “ஏறு” என்றுவிட்டு ஓட்டுநர் இருக்கைக்குச் சென்றான்.
“என் கூட ஒரு கப் காபி ஷேர் பண்ண ரெடினா சொல்லுங்க வரேன்” என்றவள், அவன் திறந்துவிட்ட காரின் கதவை மூடினாள்.
அவன் பக்கம் வந்து திறந்திருந்த ஜன்னல் வரை குனிந்து, “தேங்கஸ் பார் திஸ் டே. ஃபோட்டோக்கும் ரொம்ப தேங்கஸ். மாப்பிள்ளைக்கு அனுப்பிட்டு ரிசல்ட் சொல்றேன்” என்றாள்.
ஜீவனின் பார்வை அவள் முகத்தை விட்டு நீங்காதிருக்க, “முகுந் இங்க தான் இருக்கான். அவன வர சொல்லி கூப்பிட்டா பத்தே நிமிஷத்தில வந்துடுவான். முகுந், நம்ம ஃபினான்ஷியரோட ஒரே பையன். உங்கள மாதிரி இல்ல அவன்… எந்த பிகுவும் செய்யாம என் கூட காபி குடிப்பான். அப்பறம்… என் பர்த் டேக்கு சர்ப்ரைஸ் ஏதாது வச்சிருப்பான். சோ… நான் உங்கட்ட இருந்து அப்படியே கழண்டுகிறேன். அவனோட டின்னர் முடிச்சுட்டு, அவனோடயே கிளம்பறேன். நீங்க கிளம்புங்க. பை” எனக் கையசைத்தாள்.
நீண்ட பெருமூச்சோடே இவன் காரை கிளப்பினான். ஏனோ மனம் வலித்தது. அவள் கைப்பேசியைப் பார்த்துக் கொண்டே பின்னோடு நடந்து வருவது கண்ணாடியின் வழியே தெரிந்தது. அவளை விட்டு செல்ல மனம் இல்லாதவனாகச் சாலை ஓரத்தில் காரை நிறுத்தினான். அவள் ஒரு கடை வாயிலில் நின்றுக் கொண்டாள். இவனுக்கு அடுத்து என்ன செய்வதெனத் தெரியவில்லை. அமைதியாக கண்ணாடி வழியாக பின்னால் தெரிந்த அவளின் பிம்பத்தைக் கண்கொட்டாது பார்த்து அமர்ந்திருந்தான். கரம் பற்றவும் தைரியம் இல்லாது, விட்டு செல்லவும் மனமில்லாது ராஜீவன் தவித்து அமர்ந்திருந்தான்.
நகர மறுத்த நிமிடங்கள் பல. அரை மணி நேரத்தை அவளைப் பார்த்துக் கொண்டே கடத்தினான். அவளும் அவ்வப்போது அவன் வாகனத்தைப் பார்ப்பது தெரிந்தது. வருவாள் என இவன் நினைத்தது நடவாது போக, அதற்கு மேல் பொறுக்க இயலாதவனாகக் காரை விட்டு இறங்கி அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ‘உன் கூட காபி ஷேர் பண்ண ரெடி’ என்று தனக்குள் கூறிக் கொண்டே நடந்தான்.
அதே நேரம் சாலையில் மறு பக்கம் ஜெர்மனியில் இருந்து இறக்கப்பட்ட கருப்பு சொகுசு காரொன்று வந்து நின்றது. அந்த இடத்தின் மொத்த கவனத்தையும் தனதாக்கிக் கொண்டு இளம் கன்று ஒன்று இறங்க, நிஹிரா நின்ற இடத்தில் குதித்துக் கொண்டே கையசைத்தாள். அதற்கு மேல் நின்று என்ன செய்வதாம்? ராஜீவனின் கார் கிளம்பியது.
நிஹிராவின் துள்ளலும், சிரிப்பும் தன்னை கண்டதால் என எண்ணியிருதவன் மனக்கோட்டை, மண்கோட்டையாய் அடித்த அலையில் கரைந்து காணாமல் போனது. இதயம் பாறாங்கல்லாய் கனத்தது.
ரியர் வியூ கண்ணாடியில் முகத்தில் பளிச்சென்ற புன்னகையும், கையில் ஆட்கிட் பூங்கொத்துமாக அவன் தெரிய, ராஜீவனின் முகம் அதன் பொலிவை ஒட்டுமொத்தமாக இழந்ததது. அவன் பூங்கொத்தோடு கைகளை விரித்துக் கொண்டு அவளை நோக்கி வருவது தெரிந்தது. குட்டிக் குழந்தையின் ஆர்வத்தில் கைகளை விரித்துக் கொண்டே குதித்தாள் நிஹிரா. சூடு பட்ட பூனையின் பார்வை சாலையை நோக்கிச் சென்றது.