உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 59.2
அவன் கூறுவது அப்பட்டமான உண்மை என்றாலும் ஏற்றுக் கொள்ளப் பிடிக்கவில்லை. ‘அம்மா’, அத்தமாவாக மாறிய போது வலிக்காத யசோதராவிற்கு, யாழியின் ‘அம்மா’ தனக்கானதாக இருக்காது என்றதும் வலித்தது. விழுந்து போன முகத்துடன் அவள் அமைதியாக உள்ளே சென்றுவிட, மெல்லப் புன்னகைத்தான் ராஜீவன்.
“யாலி… யாலி வந்துட்டியா? ஏந்தி யாலி. சர்வேஷ் வந்துகேன்” எனக் குட்டி கைகள் இருண்டு தூங்கிக் கொண்டிருந்த யாழியின் காலை உலுக்க, கண்விழித்த யாழி, “லீவன் மாமா என் பிரண்ட் சல்வேஷ்” எனச் சிரித்தாள்.
மரத்தடியில் போடபட்டிருந்த நாற்காலிகள் ஒன்றில் அமர்ந்தான் ராஜீவன். தன் கைக்குள் பொதிந்து வைத்திருந்த மகளின் கையை விடுவித்தவன், “கையில என்ன யாழி?” என கேட்டான்.
“நாளைக்கு அப்பாவும் பேபியும் பிக் டெம்பிள் போனோமா. ஷாமி லெட் கலர் இது குத்தாங்க.” எனக் கையை விரித்தாள். குங்குமம் கரைந்து வழிந்து அதன் சாயத்தை மட்டுமே தடமாக விட்டுச் சென்றிருந்தது. ஒற்றை மல்லியும் கசங்கி இதழ்களை இழந்து எஞ்சிய மிச்சத்தில் கசங்கிய வாசத்தை விட்டுச் சென்றிருந்தது.
“பூவ தலையில வச்சுக்க வேண்டியது தான? கசங்கிடுச்சு பார்” என ஒற்றை இதழை மட்டுமே தாங்கியிருந்த தண்டை எடுத்தான்.
“நோ லீவன் மாமா, இது பேபிக்கு இல்ல. அம்மாக்கு. லெட் கலல் இதுவும்… ஒன் ஃபிளவலும் அம்மாக்கு கொலுத்தா, அம்மா நாங்களோட இலுப்பாங்க”
“ஓஹ்… குங்குமத்தையும் பூவையும் கொடுத்தா உன் அம்மா உங்க கூடவே வந்துடுவாங்களா?”
“ஆலீலீ” என ஓடி வந்த சர்வேஷை பார்த்தவள், “நான் சல்வேஷோட போலேன்… என்ன எலக்கி விடுங்க லீவன் மாமா” எனக் கூறியவள் இறங்கி சர்வேஷிடம் ஓடினாள்.
“நாலு வயசு வாண்டுக்கு தெரியுது யார் கூட விளையாடணும்ன்னு” என்றவன் பெருமூச்சோடே சத்தம் எழுப்பிய கைப்பேசியை உயிர்ப்பித்தான்.
“என்ன மாப்பிள்ளை சார்… பொண்ணு பிடிச்சிருக்கா?” என நிஹிரா கேட்டிருந்தாள்.
“ம்ம்… பிடிச்சிருக்கு” என யோசிக்காது பதில் கொடுத்தவன் முகத்தில் அதீத புன்னகை.
“ஸார் ஓவர் ஹேப்பி போல?”
“இருக்காதா?”
“பொண்ணு போட்டோவ பாக்காமலே பதில் சொன்னா எப்படி?” என அடுத்த கேள்வியை அவள் வீச, “பொண்ணு புடவை கட்டின போட்டோவ அனுப்புவான்னு காத்திருந்தேன். அவ அனுப்பாட்டா என்ன… ஃபோட்டோ எடுத்த எனக்கு பொண்ண தெரியுமே. அதுனால, அவ அப்பாட்ட பொண்ண பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன்” என்றான்.
“விவரம் தான்” என எழுதி அனுப்பியவள், “இந்தாங்க” எனப் புகைப்படம் ஒன்றை அனுப்பினாள். அதில் அவனும் அவளும் கோவிலுக்கு முன் இருந்தனர். “சிரிச்சா அழகா இருப்பீங்க மாப்பிள்ளை சார்” என்ற வாக்கியத்தைப் படித்தவன், அந்த நிமிடம் அவன் சிரித்து கொண்டிருப்பதைப் புகைப்படமாக அனுப்பினான்.
“என் சிரிப்பின் சொந்தக்காரிக்கு” என்ற வாசகத்தோடு ராஜீவன் சிரித்து கொண்டிருக்க, பார்த்த நிஹிராவிற்கு சந்தோஷம் தாளாது கண்ணீர் வழிந்தது.
அன்று, கும்பகோணத்தில் அவளை அப்படியே விட்டுச் செல்லாது, முகுந் வரும் வரை ராஜீவன் காத்துக் கிடந்ததைப் பார்த்தவள் அன்றே முடிவு செய்துவிட்டாள், ராஜீவனோடு தான் தன் திருமண வாழ்க்கை என. ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. காலையில் ‘பொண்ணு பார்க்க போரேன்’ என்ற தகவல் அவனிடம் இருந்து வந்த போது கோபம் வந்தது உண்மை. அறைக்குள் ஒடுங்கியவள் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். “என்ன டா கண்ணா?” என்ற அப்பாவின் மடியை நனைத்தவளிடம், “அத அவர் உனக்கு எதுக்கு சொல்லணும்ன்னு யோசி” என்றுவிட்ட சென்றபின் எல்லாம் விளங்கியது நிஹிராவிற்கு,
“என்ன மா?” என்ற அப்பாவிடம், கைப்பேசியைக் காட்ட, “ம்ம்…ம்ம்ம்” என அவள் தலையை ஆட்டிவிட்டுச் சென்றார். அவரும் செட்டில் நடந்த அனைத்தையும் பார்த்தவர் தானே. மகள் அவரிடம் வந்து அவள் காதல் கதையைக் கூறுவாள் என அவர் பார்க்க, மகளோடு அழுது வடிந்த முகத்தோடே வீட்டில் முடங்கினாள். இவனோ குட்டி போட்ட பூனை போல அவஸ்தையோடே சுற்றினானே ஒழிய, நிஹிராவிடம் பேச முன்வரவில்லை.
‘முகுந்’ எனும் வெடியை அவர் இறக்க, “எனக்கு நிஹிராவ பிடிச்சிருக்கு சார். அவளுக்கும் என்னை பிடிக்கும் சார். உங்க சம்மதத்தோட நிஹிய கல்யாணம் பண்ணிக்க விருப்படுறேன்” என ஒருவழியாக முத்தை கொட்டினான்.
“இத சொல்றதுற்கு ரெண்டு பேருக்கும் என்ன போராட்டமோ… அவ வீட்டுல சாப்பிடாம தூங்காம அழுது வழியறா… இங்க நீங்க. அட போங்க மாப்பிள்ள… அவள சமாதன படுத்துங்க” என மகளின் விருப்பத்தையும் அவர் சம்மதத்தையும் அப்படியே போட்டுடைத்தார்.
“எனக்குப் புருஷனா வரணும்ன்னா, ஒரு கண்டிஷன் இருக்கு”
“சொல்லுங்க மேடம்”
“ஒரு கப் காபி என்னோட ஷேர் செய்யணும்”
“காபி… ம்ம்ம்… அது என்ன சிக்கனமா ஒன்னே ஒண்ணு? தினமும் காலையில நீ காபிய குடி. காபி குடிச்ச உன்…” அவன் பேச அவள் சத்தமாகச் சிரித்தாள்.
“எனக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருக்கு பா” எனச் சத்தமாக நிஹி கத்தும் சத்தம் கேட்டது.
மனமெல்லாம் நிம்மதியும் பரவசமும் பரவி இருக்க, காதை தேய்த்து கொண்டே கௌதமனைக் காணச் சென்றான் ராஜீவன். காம்பௌன்ட் சுவரை ஒட்டி வரிசையாக அசோகா மரம் நிற்கும் அந்த வீடு ராஜீவனுக்குப் புதிதல்ல. ஒருமுறை வந்திருக்கிறான். அன்று மாலை சூட்டப்பட்ட பெரிய சட்டத்திற்குள் அவன் உயிர்த்தோழன் சிரித்துக் கொண்டிருந்தான்.
அதன்பின் திருச்சிக்கு ஓரிரு முறை வந்திருந்தாலும். இன்று தான் இங்கு வருகிறான். ‘ராஜீவன் வீர்’ எனத் தனக்குள் கூறிக் கொண்டவனின் கரம் பிடரியை ஒரு முறை அழுந்த தேய்த்தது. அவர்கள் நட்புக்குச் சாட்சியாகக் குத்திய ஆர்-வி இரத்தத்தோடு கலந்திருந்தது.
“டேய் ஜீவன்” என்ற சத்தம் கேட்டு மேலே பார்க்க, கௌதமன் மாடியில் நின்றிருந்தான்.
மாலை வெயில் அடங்கியிருந்தது. கௌதமன் அருகில் சென்று நின்றவன் யசோவின் வீட்டையும், வாயிலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களையும் சற்று நேரம் வேடிக்கை பார்த்தான். யசோ வெளியே வந்தாள். யாழி ஓடிச் சென்று அவசர அவசரமாக அன்னையில் இடுப்பில் இடம் பிடித்தாள். ஆத்விக் முறைத்து யாழியின் காலை பிடித்து இழுக்க, சர்வேஷ் ஆத்விக்கை தள்ளி விட்டான். அங்கு நடக்கும் கூத்தை எல்லாம் வேடிக்கை பார்த்து நின்றவன் பார்வை யசோவின் மீது விழுந்தது.
“அவ என் குழந்தைக்கு அம்மா. நான் அவள கல்யாணம் பண்ணிக்க போறேன் டா.” என்றான் கௌதமன் எந்த மழுப்பலும் இல்லாது.
“நல்லது. பண்ணிக்கோ. அவங்கள சந்தோஷமா வச்சுப்பேனா… என் ஆசீர்வாதங்கள்” எனக் கையை கௌதமன் தலை மீது ஆசீர்வதிப்பது போல் காட்டினான்.
“என்னடா?” சந்தேகமாகப் பார்த்தவனிடம், “என்னடான்னா?” என கேட்டுச் சிரித்தான் ராஜீவன்.
“கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க தான வந்த?”
“ஆமா… பார்த்துட்டு, சரின்னு சொல்ல இல்ல, சாரின்னு சொல்ல வந்தேன். வந்த இடத்துல அவங்கள பாத்து அம்மான்னு யாழி ஓடிவந்ததும், அவள தூக்கமுடியாத தவிப்பும், பரிதாபமா அவங்க உன்ன பார்த்த பார்வையும், நீ அவங்கள பார்த்து மொறைச்ச முறைப்பும்… என்னாடா நடக்குது இங்கன்னு பார்த்தா… என் மருமக எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சுட்டா” எனச் சிரித்தான்.
“என்னவோ பார்த்த அன்னைக்கே யசோவ அம்மாவா தான் பார்த்தா என் பொண்ணு. நீ சொல்ற மாதிரி ஏதோ ஈர்ப்பு இருக்கணும்.”
“ஏன் உனக்கு இல்லியா?”
“இல்லாம தான் உங்கிட்ட அவள பத்தி சொல்லிட்டு இருக்கேனா?”
“தி கிரேட் கௌதமன் வட்டத்துக்குள்ள ஒரு பொண்ணு நுழையறது ஈசியா என்ன?” எனச் சிரித்தவன், “உனக்கு அவங்கள பத்தி ஏதாவது தெரியுமா?” எனக் கேட்டான்.
“தெரியும்” என்றவன், “தெரிஞ்ச பிறகு அவள இன்னும் இன்னும் பிடிக்குது. உயிரா நேசிக்கிறேன்.” என்றான்.
“யாழி இவ்வளவு பொசசிவ்வா இருப்பான்னு நினைக்கவே இல்ல. யசோனா ரொம்ப இஷ்டமோ?”
யசோவை பார்த்தான். யாழி யசோவின் மீது அட்டையைப் போல் ஒட்டிக் கொண்டிருக்க, உணவை ஊட்ட ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது.
“அப்படி இல்ல. சர்வேஷ, அவன் தங்கைய எல்லாம் தூக்கி வச்சிருக்கும் போது சண்டைக்குப் போனதில்ல. ஆத்விக், யசோவ அம்மான்னு சொன்னதுல தான் பிரச்சன” என்றான்.
“அன்னைக்கு யசோவோட குழந்த தவறி போகாம இருந்திருந்தா, இன்னைக்கு அவ பொண்ணுக்கு யாழி வயசிருக்கும்.” என்றவன் பார்வை மஞ்சள் ஒளியில் நின்று குழந்தைகள் மூவருக்கும் உணவு ஊட்டிக் கொண்டிருந்தவள் மீதிருந்தது.
கௌதமன் மனம் கனத்துப் போனது. “ம..மகளா?” எனக் கேட்டான் கனத்த குரலில்.
“ம்ம்ம்…”
“பாத்திருக்கியா? எப்படி இருந்தா? யார மாதிரி?”
“தெரியாது டா. அக்கா சொல்லித் தான் இதெல்லாம் தெரியும். அத்தன திருத்தமான அழகான முகத்த நான் பார்த்தே இல்லடான்னு சொன்னா. குழந்தை அப்பா ஜாடைன்னு சொன்னா. அப்பாக்கும் மகளுக்கும் ஒரே இடத்துல உயிர் பிரியணும்ன்னு இருந்திருக்கு.”
“ஓஹ்…” என்றவன் தொண்டை ஏறி இறங்கியது. மகள்… அவளும் யாழியைப் போல் பூக்குவியலாக இருந்திருப்பாள். மனம் யாழியைத் தூக்கிய முதல் நாளுக்குச் சென்றது. யாழியைப் போலவே தன் மகளும் அவளின் குட்டி குட்டி விரல்களால் தன் கரத்தை இழுத்து அவளுக்குள் தன்னை சுருட்டி வைத்திருப்பாள் என இல்லாத மகளோடு கற்பனையில் விழுந்தான். இதயம் பாரமாக உணர்ந்தது.
“என் மக பேரென்ன டா?” கேட்டவன் குரல் கரகரத்தது. கண்களை மூடிக் கொண்டால், வீர் என்றே தோன்றவைக்கும் ஆழமான குரல். இவன் ஏன் அவ்வப்போது ரகுவீரை நினைவு படுத்துகிறான் என்ற கேள்வி இன்றும் எழுந்து அடங்கியது.
கௌதமனைத் திரும்பிப் பார்த்தான். கௌதமனின் முகம் வேதனையை அப்பட்டமாகக் காட்டியது. பார்க்காத… இல்லாத… தனக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு குழந்தைக்காக இவன் ஏன் இவ்வளவு வருந்துகிறான் என்றே தோன்றியது ராஜீவனுக்கு.
“பேரு வைக்கல டா.”
மீண்டும், “ஓஹ்…” என்றான் வேதனையை மறையாது.
தான் கேள்விப்பட்ட கௌதமனா இவன்? ஒரு விபத்து இப்படி எல்லாமா ஒருவனை மாற்றிப் போடும்?
அதற்கு மேல் நண்பனை நோகடிக்க விரும்பாது, “ஆமா…அவள பத்தி தெரியும்ன்னு சொன்ன?” கேலியாகப் பார்த்தான்.
“லவ் லைஃப் தெரியும்” என்றான்.
“எவ்வளவு தூரம்?”
“டேய்…”
“சொல்லு”
“கூர்க்ல இருந்தவரை…”
“அதுக்கு அப்பறம் அவங்க வாழ்க்கையில் ஏதேதோ நடந்து போச்சு டா. இங்க வர வரைக்குமே எனக்குத் தெரியாது யசோ தான் என் வீரோட உயிர் மூச்சுன்னு. தாரா, சந்துமா, ஒரே காம்பௌன்ட்க்குள்ள ரெண்டு வீடு… இத வச்சு தான் கண்டுபிடிச்சேன், வீரோட உயிர்மூச்சு இந்த யசோதரான்னு. உனக்கு தெரியுமில்ல… வீருக்கு பிரெயின் டியூமர் இருந்தது?”
“ம்ம்ம்”
“ஆப்பரேஷனுக்கு அப்பறம் அவனுக்கு பழைய நினைவுகள் இருக்காதுன்னு சொன்னாங்க. அவள மறந்துட்டு எப்படி டா வாழுவேன்னு ரொம்ப கவலபடுவான். பிரெயின் சர்ஜரி எப்போ வேணா தப்பாகலாம்ன்னு சொல்லுவான்.. அவன் இல்லாம போயிட்டா அவ தனியாகிட கூடாதுன்னு நினைச்சுட்டான் போல. அவன் நினைவா குழந்தைய கொடுத்துட்டு போயிட்டான்.
முதல்ல அவ அம்மா போனாங்க… அவளால தான் அவ அம்மாக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சுன்னு கில்டி ஃபீலிங் அவள கொன்னுட்டு இருந்த போது தான் இவனோட உயிரில்லா உடல தூக்கிட்டு வந்தாங்க. முன்னமே அம்மா இறப்புக்கு அழுது அழுது தொண்டைய டேமேஜ் பண்ணிட்டா. அம்மாக்கு அழுது முடிக்கதுக்கு முன்ன அவன அந்த கோலத்துல பார்த்து அவ கத்துன கத்துல வோக்கல் ஹெமொரேஜ் ஆகி, தற்காலிகமா பேச்சு போயிடுச்சு. கூடவே அவளுக்குத் தன்ன சுத்தி என்ன நடக்குன்னு புரியாம ஒரு வகை டிப்ரஷன்ல போனதுல, அவ பேசவே இல்ல.
சில மாசமா தான் பேசவும் ஆரம்பிச்சிருக்கா. எனக்கு கல்யாணம் நின்ன நேரம் இவள மாதிரி ஒருத்திய ஏன் நான் பாக்கலன்னு நினைச்சதுண்டு. ஒரு ஈர்ப்பு இருந்தது நிஜம். அக்கா இவள கல்யாணம் பண்றியான்னு கேட்ட போது நிஹிய நான் பாக்கல. சோ… அப்போ சரின்னு சொல்லி இருந்தேன். அத மறந்தும் போயிட்டேன். என்னைக்கோ சரின்னு சொன்னத வச்சு கார்னர் செய்து, இன்னைக்கு இழுத்துட்டு வந்துட்டாங்க. ஆசைய வளர்த்துகிட்ட பொண்ணு மனச நான் காயபடுத்தக் கூடாதாம்” என்றவன் சிரித்தான்.
“யசோவ நேர்ல பார்த்து ‘நான் வேற ஒரு பொண்ண விரும்பறேன்’னு சொல்ல தான் வந்தேன்” என்றான்.
“ரெண்டு பேரும் சாப்பிட வாங்க” என யசோவின் வீட்டு மாடியிலிருந்து மான்வி சத்தமாக அழைத்தாள்.
“வர்றோம்… நீ சாப்பிடு” என இவன் கையசைத்தான்.
முதல் பந்தி முடிந்திருக்க இரண்டாம் பந்தியில் யசோவின் சுற்றம் அமர்ந்திருந்தது. அங்கு நடப்பதை ராஜீவன் வேடிக்கை பார்க்க, கௌதமனோ கேட்ட விடையங்களை ஜீரணித்துக் கொண்டு நின்றிருந்தான்.
அடுத்த வீட்டு மாடியைச் சற்று நேரம் வேடிக்கை பார்த்தான் ராஜீவன். மூன்று குட்டி வாண்டுகளின் சேட்டை சுவாரசியமாக இருந்தது.
சற்று நேரம் கழித்து கௌதமனிடம் வந்தவன், “எப்படி யசோ?” என ஆரம்பித்து, “நீ எப்பிடி டா வீர் வீட்டுல?” எனக் கௌதமனைப் பார்த்தான்.
தன்னை நிலைப்படுத்தியிருந்தவன், “தாத்தாது அவரோட ஒரே பேரனுக்கு தானே வரும்?” என எதிர்க் கேள்வி கேட்டான்.
“என்ன… புரியல? நீயும் அவனும் சொந்தமா?”
வலது காதின் கீழ்ப் பகுதியை காட்டினான் கௌதமன். நங்கூரத்தின் கீழ் பாதியும் ‘வி’ என்ற ஆங்கில எழுத்தும் இருந்தது. பார்த்த ராஜீவன், பார்த்தவண்ணம் இருந்தான்.
“ப்..பு..புரியல” எனத் திக்கியவனுக்கு உண்மையிலுமே இதை என்னவென்று நினைப்பது எனப் புரியவில்லை.
“ஏன்… புரியறதுக்கு என்ன? ரெண்டு பேரும் சேர்ந்து போட்டது தான?” எனக் கேட்டான் கௌதமன்.
“எரிச்சல கிளப்பாத டா. அது நானும் அவனும் போட்டுக்கிட்டது. நீ எதுக்குப் பாதி டேட்டூவ போடணும்?” என்றான்.
“நான் போடல. இருந்துது”
“ப்ச்.. டேய் கடுப்பேத்தற”
“இது இப்போ போட்டதுன்னு நினைவிருக்கா?” என டிஷர்ட்டின் கழுத்தை கீழ் இழுத்து மார்பை காட்டினான். பேச்சற்று நின்றான் ராஜீவன்.
“ரகுவீரோட பாதியும், கௌதமனோட மரணத்தோட மீதியும் சேர்த்த கலவ நான்னு சொன்னா புரியுமா?” என்றதைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை, புரிந்து கொள்ளும் நிலையிலும் அவன் இல்லை.
“வீர்… என் வீர என்னடா பண்ணினீங்க?” எனச் சட்டையைப் பிடித்தவன் கண்களில் நீர் வழிய ஆரம்பித்திருந்தது.
“வீரோட ஆன்மா இன்னும் இந்த உடம்புல இருந்து இயங்கிட்டு இருக்குன்னு சொன்னா நம்பமுடியுமா உன்னால?”
“வாட்? என்னடா பிணாத்துற?”
“உனக்குத் தான் கடவுள் நம்பிக்கை இருக்கே. நீ தான் சொல்லேன்… ஒருத்தனோட ஆன்மா அவன் உடம்புல தான எங்கயோ இருக்குன்னு நம்பற?”
“ஆ..ஆமா. அதுக்கு?”
“ஒருத்தன் படுத்த படுக்கையா இருந்தாலும், அவன் இதயம் இயக்கத்தை நிறுத்துற வரைக்கும் அவன் உயிரோட இருக்கதா தானே அர்த்தம்?”
“ம்ம்ம்…ஆமா”
“மூள இயங்க மறுத்து அவன் படுத்த படுக்கையா இருந்தா அவன் செத்தவனா… இல்ல உயிருள்ளவனா?”
“டேய்… என்னை எரிச்சல் படுத்தற நீ”
“கோவிச்சுக்காத மச்சான்… சொல்லேன்”
“ஆமா… பிரெயின் டெத் லீகலா டெத் இல்ல. ஹார்ட் ஸ்டாப் ஆனா தான் டெத். இப்போ என்ன அதுக்கு?”
“கௌதமனோட ஹார்ட்டும், ரகுவீரோட பிரெயினும் வேல நிறுத்தம் செய்தனால, கௌதமனோட தலையையும், ரகுவோட உடம்பையும் சேர்த்து, ரெண்டு உயிர ஒத்த உயிரா மாத்திட்டாங்க. அப்போ நான் யாரு… சொல்லு பாப்போம்?”
சட்டென ஓர் அடிப் பின் சென்றவன், கௌதமனை மேலிருந்து கீழ் பார்த்தான். இதயம் தடதடத்தது. “ந்… நீ நிஜமா தான் சொல்றியா? இந்த உடம்பு… நீ என்னோட வீரா?”
“என் பொண்ணு ஸ்டைல்ல சொல்லணும்னா… பாமிஷா!” எனப் புன்னகைத்தான்.
“டேய்… வீர்” என்றவன் கௌதமனை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். உடல் குலுங்க அழுதான்.
“டேய்… டேய்… எலும்பு தாங்காது டா” என ராஜீவனைப் பிரித்தவன், “கூல் மச்சான்.” எனத் தோளோடு அணைத்துத் தட்டிக் கொடுத்தான்.
“ம்ப்ச்… எப்படி சொல்லன்னு தெரியல. ரெண்டு வாரம் முன்னவரையுமே கௌதமனா மட்டுமே என்னை நினைச்சு வாழ்ந்த எனக்கு, கௌதமன் ஒரு ஜான் தான்னு உணர தெரியல. உன்ன, யசோவ, அரவிந்தன் ஐயாவ எல்லாம் பார்த்த போது எனக்குள்ள ஏற்பட்ட உணர்வ புரிஞ்சுக்கவும் தெரியல. என்னவோ… இப்போ ஒரு மாதிரி மனசு லேசனாது மாதிரி இருக்கு.
இந்த இடம் என்னோட இடம். இவங்க எல்லாம் என் குடும்பம். ஒரு அப்பாவா என்ன தோள்ல போட்டு வளர்ந்த என் ஐயா இன்னைக்கு என் பொண்ண அதே பாசத்தோட பார்த்துகிறார். என்னோட பாட்டி, தாத்தா, சந்தும்மா நடமாடின பூமி இது. என்னையே நினைச்சு வாழற என்னோட யசோ என் கண்ணு முன்ன இருக்கா. ஏதோ ஒரு தேவதை கையில இருக்க மேஜிக் வான்ட்ட அசைச்சு ‘உன் எல்லாம் உனக்கே கிடைக்கட்டும்’ன்னு சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். இல்லாட்டா இதெல்லாம் சாத்தியமா என்ன?”
“யசோட்ட சொல்லிட்டியா?”
“ம்ம்”
“உன்னோட டிரான்ஸ்பிளான்ட் பத்தி?”
“யாரோ ஒருதனோட உடம்புன்னு சொன்ன போது ஏத்துக்க முடிஞ்சவளால, அந்த யாரோ அவ ரகுன்னு தெரியும் போது கஷ்டம் தான?”
“உனக்கு வருத்தம் இல்லியா?”
“எதுக்கு?”
“வீரோட வாழ்க்கை மிச்சத்த நீ சுமக்க?”
“இல்ல… நான் வாசுதேவன், வைஷாலி மகன் கௌதமன்ங்கிறது எவ்வளவு உண்மையோ அதே அளவு நான் சந்தியா பெத்த சந்திரிகா அம்மாவோட பிள்ள. யசோவோட ரகு. இதுல மிச்சம் மீதி எங்க இருந்து வந்துது? ரெண்டு ஜீவன்ங்களுக்கு கிடைச்ச ரெண்டாவது வாப்பா பார்க்குறேன்.
சென்னை மட்டும் இல்ல திருச்சியும் என்னோட இடம். என்னொட இடத்துக்கு வந்து, ரகுவாவும் என்னை உணரும் போது நல்லா தான் இருக்கு” எனப் புன்னகைத்தான்.
“ராஜீவா…” மான்வி சத்தம் போட, இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
அரவிந்தன் வீட்டு மாடியில் நின்றிருந்தாள். “உன் ஃப்ரெண்ட கூட்டிட்டு சாப்பிட வாடா.” என்றவள், “தம்பி வாங்க சாப்பிடலாம்” எனக் கௌதமனையும் அழைத்தாள்.
“வரோம் கா” என்றவன், “வா டா” என கௌதமனோடு மாடிப் படிகளை நோக்கி நடந்தான். மாடிப்படியில் துவண்டு அமர்ந்திருந்தார் அரவிந்தன். பேசிய அனைத்தையும் கேட்டிருக்கிறார் எனத் தெரிந்தது.
கௌதமன் கண் காட்ட ராஜீவன் அமைதியாகக் கீழே சென்றுவிட, கௌதமன் அவர் அருகில் அமர்ந்தான். அரவிந்தன் கரத்தை தன் கரங்களுக்குள் அடக்கியவன், “ஐயா” என்றான். அதே ஆழமான அழுத்தமான குரல். கண்களை மூடியிருந்தவர் கண்களிலிருந்து நீர் பொங்கியது. “ஐயா… பிளீஸ்” என்றவன் குரல் கரகரத்தது.
“ரகு?”
“இதோ… என் பேபி என்னை கடிச்சு வச்ச தடம்” என நரம்பு புடைத்த வலக் கரத்தை காட்டினான். நிலவொளியில் நீர் திரையிட்ட கண்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றாலும், அவருக்கு ருசுவெல்லாம் தேவைப்படவில்லை. அவன் கரத்தை இறுகப் பிடித்துக் கொண்டார்.
இருவரும் அமைதியாக அந்த நேரத்தைக் கடந்தனர்.
“ஐயா…” என இழுத்தான் கெஞ்சும் குரலில். அவர் அவனைத் திரும்பிப் பார்த்தார்.
“சொன்னீங்க இல்ல… அந்த மாடியில வச்சு… அதாவது, எனக்கு ஏதாவது கஷ்டம்ன்னா உங்ககிட்ட வரணும்ன்னு. நானா மடத்தனமா எதுவும் யோசிக்கக் கூடாதுன்னு?”
அவர் அவனைக் கேள்வியாகப் பார்க்க, “ஏதாவது பொண்ண விரும்பி… அதுனால பிரச்சனைனாலும் என்ட்ட வரணும். உனக்குன்னு எப்பவும் நான் இருப்பேன்ன்னு சொன்னீங்களே” என்றவன், “என் பேபிட்ட இத எல்லாம் எப்படி புரியவைக்கிறதுன்னு சொல்லித்தாங்க.” என்றான்.
“பேபிக்கு ஒண்ணும் ஷொல்லி தல நேணா அப்பா. ஆலி பேபிக்கு எல்லா புலிலும். சளியா அப்பா?” எனச் சின்ன வாண்டு வந்து நின்றது.
பெரிய பெரிய கண்களை உருட்டி, குட்டி குட்டி கைகளை ஆட்டி அழகு பொம்பை அபிநயம் படித்தது. இரு ஆண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கொல்லென சிரிக்க, விஷயம் தெரியாத குழந்தையும் கைக் கொட்டி சிரித்தாள். அரவிந்தன், “யாழிமா” என அள்ளிக் கொண்டார்.
“தாத்தா ஆலி பேபிய கஷக்குலீங்க”
“தாத்தா விடுங்க யாலிய. யாலிக்கு வலுக்கும், கசக்காதீங்க தாத்தா” என அரவிந்தன் கரத்தை பற்றி இழுத்தான், யாழியோடு மாடிக்கு வந்திருந்த சர்வேஷ்.
தாத்தாவின் கரத்திலிருந்து திமிறிக் கொண்டு இறங்கியவள், சட்டையை நீவி விட்டுக் கொண்டாள். “தாத்தா கசக்கீட்டாங்களா?” கேட்ட வாண்டு, அவன் பங்கிற்குச் சட்டையை நீவி விட்டான்.
“டூ பேலையும் அம்மா சாப்பில கூப்தாங்க.” என்றவள், “வா சல்வேஷ் ஆத்விக்க நல்லா அலிக்கலாம். அவன் வேணா” என சர்வேஷை இழுக்க, அவனும் அவன் பங்கிற்கு, “ஆத்விக்க நான் அதிக்கிறேன் யாலி பேபி. அவன் அத்த கிட்ட போவாம நான் பாத்துகிலேன். நீ கவல செய்யாத என்ன? வா” என வீர வசனம் பேசிக் கொண்டே அவள் இழுப்பிற்குச் சென்றான்.
தனக்கு கிடைத்த அடிமையிடம், “ஆத்விக்க அலிச்சு தள்ளிட்டு அப்படம் எனக்கு சாக்கி எலுத்து தலியா? அம்மா மேல இலுக்க ஷெல்பல வச்சுலுக்காங்க” என யாழி கேட்பது கேட்டது.
“எந்த ஷெப்புல ஏலணும் சொல்லு யாலி பேபி. நலைய சாக்கேட்ட எர்றுத்து தர்றேன்” நண்டுகள் இரண்டும் பேசிக் கொண்டே படிகளில் இறங்கின.
அந்த கனமான சூழல் மாறிப் போக, இருவரும் சிரித்துக் கொண்டே எழுந்தனர். கௌதமனை வாஞ்சையோடு பார்த்தார் அரவிந்தன்.