“மாமா! உங்களுக்குத் தமிழை எனக்குத் தரதுல என்னதான் பிரச்சனை? என்கிட்ட என்ன குறையிருக்கு? அதை சொன்னா நான் என்னை மாத்திப்பேன்ல?”
Advertisement
செல்வம் எகிறியும் பண்பாய் பணிவாய் பேசும் பக்குவம் பார்த்திக்கு இருந்தது. அந்த ஒரு குணமே யாரையும் கண்ணை மூடிக்கொண்டு பெண்ணை அவனுக்குத் தாரை வார்க்க சொல்லும். ஆனால் செல்வத்துக்கு அது போதாதே!
“உன்னை எனக்குப் பிடிக்கல. அதான் நீ வேணாம். காரணம் போதும்னா வீட்டை விட்டும் இவளை விட்டும் வெளிய போடா.”
Advertisement
Advertisement
யோவ்! பைத்தியம் மாதிரி உளறாதயா. உனக்குப் பிடிக்கலனா என்ன வந்துச்சு? வாழப் போறது உன் பொண்ணுதான். அவளுக்குப் பிடிச்சிருக்குனுட்டு பேசாம போவியா? அதை விட்டுட்டு.”
அவருக்குப் பயம். எங்கே செல்வம் பேசிப் பேசியே பார்த்தியைத் தமிழை வெறுக்க வைத்திடுவாரோ? அப்படி நடந்து விட்டால், ஊர் முழுதும் இவர்கள் காதல் விவகாரம் தெரிந்த பின் எங்கே சென்று மகளுக்கென்று மாப்பிள்ளையை தேடுவேன் என்று!
Advertisement
அதை விட பார்த்தியை மாதிரி ஒருவனை எங்கிருந்து தேடிப் பிடிக்க அவரும்.
அந்தக் கவலை எல்லாம் செல்வத்துக்கு இல்லையே! அவருக்கு தனக்கு ராஜ மரியாதை கிடைக்காதது ஒன்றுதான் குறை.
“ஏய்! என்னடி இன்னும் உன்னைக் கொல்லாம விட்டு வச்சிருக்கிற மிதப்புல பேசுறியா? அடுப்படில சூரைக்கத்தி ஒளிச்சு வச்சுருக்கேன். எடுத்து ஒரே சொருகு. என்கிட்ட கவனமா இருந்துக்க!”
“ஓஹ்.. இனிமேதான் நீ என்னைக் கொல்லணுமா? அதான் ஊரைக் கூட்டி வச்சு எனக்கும் என் பொண்ணுக்கும் ஒரு பேரு வாங்கிக் குடுத்தியே! அப்போவே எங்க உயிரு…” என்று தழுதழுத்த பார்வதியைக் கண்ட ஆனந்தன்,
“என்னமா பேசினாரு? அப்போ நாங்க வரதுக்கு ரொம்ப நேரம் முன்னாடியே இந்தாளு கலகம் பண்ணிட்டு இருந்தாரா?” என்றான் கொதிப்பை உள் அடக்கி.
பார்த்தியும் அதே கேள்வியை விழியிலேற்றித் தமிழ் முகத்தைப் பார்த்தான். அவள் முகம் வேதனையை சுமந்திருந்தாலும் பதிலை சொல்லப் பிடிக்காது தலை தாழ்த்திக் கொண்டாள்.
“பெத்த பையன்கிட்டயும் வரப்போற மருமகன் முன்னாலயும் சொல்லக்கூடிய மாதிரி உங்கப்பா பேசல ஆனந்தா. அதால அதையெல்லாம் விட்டுட்டு இனி ஆக வேண்டியதைப் பாரு!”
பெருமூச்சு விட்ட ஆனந்தன், “இதுக்கு நீதான் பார்த்தி பதில் சொல்லணும்!” என்று விட்டிருந்தான்.
அவன் முகம் தமிழைப் பார்த்தவாறே யோசனைக்குத் தாவியது.
“அவன் என்ன அதுக்குப் பதில் சொல்லுறது? நான் சொல்லுறன், இவன் வேண்டாம். இவனை வெளிய போகச் சொல்லு. அப்பதான் உங்க மூணு பேருக்கும் ஆயுள் நீளமா இருக்கும்.” என்ற, ஆனந்தனுக்கு எரிச்சலானது.
“அவன் வேண்டாம்னா, அவனை விட நல்ல, பொறுப்பான மாப்பிள்ளையை பார்த்து வச்சிருக்கீங்களா உங்க பொண்ணுக்கு? அப்பிடி நியாயமான ஆசை எதுவும் உங்களுக்கு இருந்தா சொல்லுங்க, குறைஞ்சபட்சம் உங்க பேச்சை நான் காது கொடுத்தாவது கேட்கப் பார்க்கிறேன்.” என்றவன் தொடர்ந்து,
“இதுவரைக்கும் பெத்துப் போட்டதைத் தவிர, எந்தக் கடமையை அவளுக்கு நீங்க சரியா செய்திருக்கீங்கனு இப்பிடி நின்னு துள்ளுறீங்க? அவ உங்களுக்குப் பிறந்ததுல இருக்க ஒரே ஒரு லாபம், எப்பிடி ஒருத்தனை வாழ்க்கைக்குள்ள ஏத்துக்கவே கூடாதுனு கத்துக்கிட்டு தமிழ், அவளுக்குப் பொருத்தமான ஒருத்தனை செலக்ட் பண்ணிருக்கா. அதுக்காக வேணா மதிச்சு உங்களை அவ அப்பான்னு கல்யாணத்துல முன்ன நிறுத்துறேன். ஆசிர்வாதம் பண்ண மனசில்லனாலும் ரேசன் கார்டுல பேரு இருக்க கணக்குக்கு ஒரு ஓரமா நின்னுக்கங்க.” என்று தந்தையின் மேல் இருந்த கோபத்தில் முதல் முறை பார்த்தி-தமிழ் இருவரின் காதலுக்கான தன் அங்கீகாரத்தை வார்த்தையில் வெளிப்படுத்தியிருந்தான் ஆனந்தன்.
தமிழுக்கு அண்ணனின் வார்த்தைகளில் அப்படியொரு ஆசுவாசம். என்னதான் பார்த்திதான் தன் எதிர்காலம் என்று உறுதியாக முடிவெடுத்து தமையனிடம் பேசியிருந்தாலும் தமையன் இத்தனை நாட்களும் அமைதியாக எல்லாவற்றையும் கடந்து செல்லும் போதெல்லாம், அவனை வருத்துகிறோமோ என எண்ணி எண்ணி ஒருவித குற்ற உணர்ச்சியிலே தான் உழன்று கொண்டிருந்தாள். இன்று முதல் அதைச் சுமக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லை!
பார்த்திக்கும் ஆனந்தன் தன் மேல் கொண்டுள்ள நம்பிக்கையில் உள்ளம் சிலிர்க்கவே செய்தது. அந்த நம்பிக்கையை இறுதி வரை காப்பாற்ற வேண்டும் என்று தனக்குள்ளாகவே உறுதிமொழி பூண்டான், இன்னும் சொற்ப நாட்களில் தானே அந்த நம்பிக்கைக்கு பால் ஊற்றிப் பாடை கட்டப்போவதை அறியாமல்!
“டேய்! நான் உனக்கு அப்பன் டா. எனக்கு உன்னை விட நல்லா மனுஷங்களைப் பத்தி தெரியும். இவன் என்னவோ பெரிய மகான் மாதிரியும் இந்த **** பய மட்டும்தான் இந்த உலகத்துலயே பெரிய ஆம்பளை மாதிரியும் எதுக்கு இவனையே பிடிச்சு தொங்குறீங்க எல்லாரும்?
இவனை விட உசத்தியா இவளுக்கு நான் மாப்பிள்ளை பார்த்திருக்கேன். இப்போ இவனை வேணாம்னு சொல்ல சொல்லு உன் தங்கச்சியை! அடுத்த நாளே ஊரே மெய்ச்சுற மாதிரிக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் நான்!” என்றவர் பேச்சில் யார் அதிகம் அதிர்ந்தது என்று சொல்ல முடியவில்லை.
தமிழுக்கும் பார்த்திக்கும் அருவருத்துக் கொண்டு வந்தது அவர் பேச்சில்.
ஆனந்தன்தான் முதலில் சுதாரித்தவன், “மாப்பிள்ளை பார்த்தீங்களா, எப்பிடிப் பார்த்தீங்க? தமிழ் ஜாதகம், ஃபோட்டோ இதெல்லாம் எப்பிடி உங்ககிட்ட வந்துச்சு?” என்றான் திகைத்து.
திருட்டுத்தனமாக அவளின் ஜாதகத்தையும் ஃபோட்டோவையும் எங்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கிறாரோ இவரென பதைத்தது அவனுக்கு.
“புரோக்கர் எல்லாம் எதுக்குடா? அவன் தனியா காசு புடுங்கிப்பான். இந்த மாப்பிள்ளையை பார்த்தது நான்தான். எனக்கு ரொம்ப நல்லா தெரிஞ்ச பையன். இவளைப் பிடிச்சு வந்து பொண்ணு கேட்டான். அவ்வளவு மரியாதையான பையன். எனக்கும் அவனைப் பிடிச்சிருக்கு…” என்று பேசிக் கொண்டே போனவரை இடைமறித்த ஆனந்தன்,
“அவனை எங்க பார்த்துப் பழக்கம் உங்களுக்கு? வைன் ஷாப்லயா?” என்று சரியாகக் கணித்துக் கேட்க,
“ஆமா.. அதுக்கு என்ன இப்ப? அவன்லாம் ஒவ்வொருநாளும் பத்து லீட்டர் சரக்கு வாங்கி அடிச்சாலும் அவன்கிட்ட இருக்க சொத்து குறையாது. பல்லடத்துல பெரிய பண்ணையம் வச்சு நடத்துறான். விண்ட் மில்லுலாம் கூட இருக்கு அவனுக்கு. இவனை மாதிரி சொந்த ஊருல பிழைக்க வழி இல்லாம, பரதேசம் போனவன் இல்ல, நான் பார்த்த மாப்பிள்ளை.” என்றவருக்குத் தமிழ் சூடாக ஏதோ சொல்லப் போக, பார்த்தி பார்வையில் அவளை அடக்கினான்.
அவனுக்கு அவர் பேசுவதெல்லாம் ஒன்றுமே இல்லை. அவனுக்குத் தெரியுமே அவன் உழைப்பும் முயற்சியும் எத்தகையது என்று!
ஆனந்தன் தந்தையின் பேச்சில் பல்லைக் கடித்தவன், “அப்போ புரோக்கர் நீங்கதானா?” என்று சூடாகக் கேட்டும் விட்டான்.
“டேய்… யாரைடா புரோக்கர் சொல்லுற?”
“வேற யாரை உங்களைத்தான். கூடக் குடிச்சவனுக்கு இவ என் பொண்ணுன்னு நீங்க அடையாளம் காட்டினதாலதான, அவன் உங்ககிட்ட பொண்ணு கேட்டான்? அப்போ நீங்க தான புரோக்கர்?
ச்சை… இவ்வளோ மோசமான ஆளா நீங்க? இந்த உலகத்துல இதை விட மோசமான அப்பன் இருக்கவே மாட்டான். ஊத்திக் குடுத்தாங்கிறதுக்காக…” என்றவன் மிச்ச வார்த்தைகளை முழுங்கிக் கொண்டு தமிழ் மற்றும் பார்த்தி முகம் பார்த்தான். பார்த்தபடியே தந்தைக்குப் புரியும்படி பதிலிறுத்தான்.
“ஒருவேளை தமிழ் பார்த்தியை லவ் பண்ணாம போய் அவளுக்கு நான் மாப்பிள்ளை பார்க்குற சந்தர்ப்பம் அமைஞ்சு, குடிக்காத பிச்சைக்காரனும் குடிகார கோடீஸ்வரன்னு ரெண்டு தேர்வு மட்டும்தான் என் முன்னாடி இருந்திருந்தா, கண்ணை மூடிட்டு பிச்சைக்காரனுக்குத் தான் அவளைக் கட்டிக் குடுத்திருப்பேன்.
அதே மாதிரி தமிழ் காதலிக்கிறேன்னு பார்த்தியைக் கைகாட்டி அவன் ஒரு குடிகாரனா இருந்திருந்தா அவ தன்னை அழிக்கிறேன்னு நின்னிருந்தா கூட நான் என்ன செய்தும் இந்தக் காதலைப் பிரிச்சு விட்டிருப்பேன்.” என்ற, பார்த்திக்கு நொடிக்கு நொடி ஆனந்தன் மேல் நன்றிப் பெருக்கும் விசுவாசமும் கூடிக் கொண்டே போனது.
அவன் தன்னையும் தன் காதலையும் தன் குணத்தை முன்னிறுத்தி மட்டுமே சீர்தூக்கிப் பார்க்கிறான் என்றதில் ஏக திருப்தி அவனுக்கு. எந்த ஆண்மகனும் ஏங்கும் ஒரு தருணம் அல்லவா இது?
“இப்ப நீ என்னதான் சொல்ல வர? இவனைத் தான் உன் தங்கச்சிக்குக் கட்டி வைக்கப் போறியா?”
“ஆமா!” என்றான் ஆனந்தன் உறுதியாக.
பார்வதியும் “குடிகாரனைக் கட்டி நான் பட்ட பாடே போதும். என் பொண்ணு ஒருவேளை கஞ்சி குடிச்சு வாழ்ந்தாலும் நல்லவனைக் கட்டிட்டு நிம்மதியா வாழணும்.” என்றார்.
“அப்போ நீங்க மூணு பேரும் உங்க இஷ்டத்துக்கு தான் நடப்பீங்க இல்ல? எனக்குனு இந்த வீட்டுல எந்த மரியாதையும் இல்லை, இல்ல?” என்று வெறி பிடித்தவராய் அங்கும் இங்கும் நடந்தவர், உடைப்பதற்கு எதுவும் இல்லாமல் இருந்த இரண்டு பிளாஸ்டிக் சேரைத் தூக்கிப் போட்டு உடைக்க,
“ஹ்ம்ம்… நல்லது. நீங்க உடைக்காம மிச்சம் வச்ச ரெண்டு பொருளையும் உடைச்சு முடிச்சிட்டீங்க! இனி என்ன பண்ணுறதா உத்தேசம்? கல்யாணத்துக்கு வருவீங்களா?” ஆனந்தன் நக்கலாகக் கேட்க, செல்வத்துக்கு ஏறி விட்டது.
“என்னை மீறி நீ எப்பிடி இவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறனு பார்க்கிறேன்! அப்பிடி ஒருவேளை என்னால எதுவும் பண்ண முடியலனா,
நான் செத்தாவது கல்யாணத்தை நிறுத்துவேன். அப்பன் செத்தா எப்பிடி கல்யாணம் நடக்கும்?” என்று வீம்புக்குப் பேசியவரை, ஆனந்தன் வெறுப்பாகப் பார்த்தவன்,
“அப்பிடி சொன்னமாதிரி நீங்க செத்தா பாடியை பாயில சுத்தி ஒரு மூலையில வச்சுட்டுனாலும் கல்யாணத்தை முடிச்சு வைப்பேன்.” என்று அவருக்குத் தக்கப் பதில் கொடுத்தான்.
“ஆனந்தா!”
“அண்ணா!”
“ஆனந்த் அண்ணா!”
அதிர்ந்து கத்திய யாரையும் பொருட்படுத்தவில்லை ஆனந்தன். அவனைப் பொறுத்தவரை அவன் சரியாகத்தான் பேசியிருக்கிறான். செல்வம் ரூட்டிலேயே போய் அவரை அடக்கி விட்டான்.
செல்வமும் மகன் பேச்சில் முழுதாக ஒரு நிமிடம் பேச்சற்று நின்றுவிட்டவர், மறு நிமிடமே நான் செல்வம் டா என்று நினைவு வந்தவராக,
“அடேய் அக்கம் பக்கத்துல இருக்கவங்க இங்க நடக்குற அநியாயத்தைக் கேட்க மாட்டீங்களாடா? பெத்த அப்பன் செத்துப் போவேன்னு சொல்லுறேன். கொஞ்சம் கூடப் பதறாம, என் பொணத்தை ஒளிச்சு வச்சுட்டு தங்கச்சிக்கு மாமா வேலை பார்ப்பேன்னு சொல்லுறானே நான் பெத்த கழிசடை!” என்று கத்திக் கொண்டே வெளியே ஓடினார், வெளியில் இருந்தவர்களுக்கு அடுத்த ஃப்ளாஷ் நியூஸ் கொடுக்க.
“ஏய்! நீங்க யாரும் இவங்க நடத்துற கல்யாணத்துக்கு வந்தீங்க, அப்புறம் என் சாவுக்கு சாட்சி சொல்ல வேண்டியது வரும்!” என்றவர் தெருவாசிகளை மிரட்டும் குரல் உள்ளே கேட்க பார்வதியின் நின்ற அழுகை மீண்டும் தொடர்ந்தது.
“ஏன் ஆனந்தா அவருகிட்ட இப்பிடிப் பேசி வச்ச? சும்மாவே ஊரு பூரா நம்ம பேரை நாறடிச்சு வச்சிருக்காரு. இனி இதை சொல்லி இன்னும் நம்மளை அசிங்கப்படுத்தப் போறாரு.”
“சும்மா இருங்கமா நீங்க. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இவரு அராஜகத்துக்குப் பயந்துட்டே இருக்கிறது?” என்றவன்,
“பார்த்தி! இப்போ உனக்குப் புரிஞ்சிருக்கும், இங்க என்ன நிலமைனு! எனக்குத் தெரிஞ்சு தமிழ் இதை விவரமா உன்கிட்ட சொல்லிருக்கமாட்டா. இப்போ நீயே நேர்ல பார்த்தேல? இதைதான் இவ இங்க டெய்லி அனுபவிச்சிட்டு இருக்கா. இப்போ சொல்லு என்ன பண்ணலாம்?” என்ற,
“உண்மைதான் அண்ணா. தமிழ் எதையுமே என்கிட்ட சொன்னதில்ல. மாமா அப்பப்போ பிரச்சனை பண்ணுவார்னு மேலோட்டமாதான் சொல்லிருக்கா. இவ்வளவு மோசமா இருக்கும்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கல. தெரிஞ்சிருந்தா நான் முன்னாடியே வந்திருப்பேன்.” என்றான் தமிழிடம் கண்டனப் பார்வையையும் ஆனந்தனிடம் மன்னிப்பை யாசிக்கும் பார்வையையும் செலுத்தி.
“அவமேலயும் தப்பில்ல ப்பா. அவ்வளவு தூரம் தள்ளி இருக்கிற உனக்கு கவலையைக் குடுக்கவேணாம்னு நினைச்சிருப்பா.”
“புரியுது அத்தை. ஆனா எனக்குத் தெரிஞ்சிருந்தா இவ்வளவு தூரம் விட்டிருக்கமாட்டேனே!”
அவர் கேள்விக்குப் பதில் சொல்லாது பார்த்தி, மீண்டும் தமிழ் முகம் பார்த்தான். அவளிடம் அதே பிடிவாதம்! அதைப் பார்த்தவனிடமும் ஒரு பிடிவாதம் வந்து ஒட்டிக்கொள்ள,
“இனியும் தாமதிக்க வேணாம் அண்ணா. இந்த மாசத்துக்குள்ளவே கல்யாணத்தை முடிச்சிரலாம். நான் வீட்டுலயும் பேசிட்டு என்னனு சொல்லுறேன்.” என்று விட்டான்.
தமிழ் ஏதோ பேச வர அவள் என்ன பேச வருகிறாள் என்று புரிந்த பார்த்தி அவளுக்குத் தடை விதிப்பது போல்…
“அப்புறம் பேசிக்கலாம், தமிழ். இப்போ நான் கிளம்பணும்.” என்றவன் ஆனந்தன் மற்றும் பார்வதியிடமும் விடைபெற்றுக் கொண்டு வெளியேறினான்.
அவன் வெளியில் வரும்போது செல்வம் இல்லை. அநேகமாக அடுத்த ஈடு குடிக்க சென்றிருப்பார் என்ற நினைவில் சலித்தான்.
அவனுக்கு செல்வம் தன்னைப் பொருளாதார ரீதியாக இழித்துப் பேசியதெல்லாம் ஒன்றுமே இல்லை. ஆனால் தமிழுக்கு இன்னொருவனை மாப்பிள்ளையாகப் பார்த்து விட்டேன் என்று அவர் சொன்னதுதான் உடல் முழுதையும் பற்றி எரியச் செய்தது.
யாரோ ஒருவனுக்கு அவளைத் தூக்கிக் கொடுக்கத்தான் தன் வாழ்நாளின் மொத்தக் காதலையும் அவள் மேல் கொட்டி அவளை உயிருக்குள் கருவாய் சுமக்கிறானா அவன்?
அந்த நொடியே முடிவெடுத்து விட்டான், தமிழைத் தனக்கென்று ஆக்கிக் கொள்ளாமல் அடுத்து எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை என!
எங்கே தமிழ் பேசினால் அவள் முடிவுக்குக் கட்டுப்பாட்டுத் திருமணத்தைத் தள்ளி வைக்கும் முடிவுக்கு வந்திடுவோமா என்று அஞ்சித்தான் முதல்முறையாகத் தன் தாய்மொழியை ஊமையாக்கி அங்கிருந்து நழுவியிருந்தான்.
தமிழ் வேண்டுமே வேண்டும் என்று சட்டென சம்மதத்தை சொல்லி விட்டான். ஆனால் இனித்தான் எடுத்த முடிவின் சாதக பாதகங்களை ஆராய வேண்டும். அதற்கு அவனுக்கு சிறிது தனிமையும் அமைதியும் வேண்டும். அதனால் தன் பழைய முதலாளியை சந்திக்கும் பிளானைக் கைவிட்டவனாக, தங்கை வீடிருக்கும் திசையை நோக்கி நடந்தான்.
அவன் வீட்டில்தான் அனைவரின் அமைதியைக் குலைக்கவென்றே அண்ணியெனும் சாத்தானும் அந்த சாத்தானின் பிடியில் சிக்கிய பாவ ஆத்மாவான அவன் அன்னையும் உள்ளனரே!