Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 12.2

பொற்செல்வனிடம் பதிலேதும் இல்லை. பார்வையை சுழற்ற, பொற்செல்வன் தென்படவில்லை. சுற்றிலும் காய்கறி, பூந்தோட்டம் மட்டுமே நிறைந்திருக்கும் இவ்விடத்திற்கு காரிலும் வரமுடியாது. ஆக செல்வியை பார்க்க நடந்தே வந்திருக்கிறான் என்று புரிய, செந்தமிழ்செல்வியைப் பார்த்தவாறு “இங்க லொகேஷன் நல்லாயிருக்கு. நீ இங்க வா” என்றான்.

“ஷ்…” என்று தலையில் தட்டிக்கொண்டவன், “ரோஜா தோட்டத்து லொகேஷன் பத்தி நீங்க சொல்லி எனக்கு தெரியனுமா? அதை உருவாக்கினதே நான்தான்” என                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            கடுகடுத்து,

“இப்போ வெளிலதான் இருக்கேன், இன்னும் கொஞ்ச நேரத்துல ஃபேக்டரிக்கு போய்டுவேன், வாங்க” என்று இணைப்பை துண்டித்தான்.

செந்தமிழ்செல்வியின் முகமாற்றத்தில் “நானென்னம்மா உன்னை பண்ணினேன்? என்மேல ஏன் உனக்கு இவ்வளோ வெறுப்பு?” என்றான்.



Advertisement

“நவீனாக்கா கூடத்தான் உங்களை ஒன்னும் பண்ணல, அவங்க மேல நீங்க வெறுப்பா இருக்கிங்கள்ல? அதுபோலத்தான் இதுவும்” என்றாள்.

வருங்கால தம்பி பொண்டாட்டியாச்சேனு பேசினா… இந்த பாயு பாயுறா? என செல்வியைப் பார்த்திருந்தவன், “உன் பாஸோட அண்ணன்ம்மா நானு” என்று பேச்சை வளர்த்தினான்.

“உங்க தம்பி கம்பெனியிலயிருந்து நான் ரிலீவ் ஆகி ஏழெட்டு மாசம் ஆகிடுச்சு. இப்போ அவர் எனக்கு பாஸ் இல்ல”

Advertisement

“அப்போ எங்க தோட்டத்துல உனக்கென்ன வேலை?”

Advertisement

“என் ஃப்ரண்டை பார்க்க வெய்ட் பண்ணினேன், என் ஃப்ரண்டுக்கு இந்த தோட்டத்துல இன்னும் ஒரு வாரத்துக்கு உரிமை இருக்கு” என்று கோபமாக சொல்லி கிளம்பினாள்.

அமைதியா நம்ம வீட்டுக்கு வந்துட்டு போற பொண்ணா இது? என்று தேவராஜ் வியந்து பார்த்திருக்க, செல்வியை பார்த்திருந்த செல்வனின் மனம் இதமானது.

இந்த வாரம்தான் சாம்பவி வேலை செய்யும் கடைசி வாரம். அடுத்த வாரம் இவ்வூரைவிட்டு செல்கிறார்கள். தன் மீதுள்ள தவறை மட்டுமே பிரதானமாக நினைக்கிறாள், எத்தனை இனிமையான நினைவுகள் இருக்கிறது… என்னோடான தோழமை அவளுக்கு சிறிதும் நினைவில் இல்லையா?

Advertisement

இனி எப்போது பார்ப்போம் என்ற ஏக்கம் என்னைப்போல் அவளுக்கு இல்லையா? என்று ஆற்றாமையில் இருந்தவனுக்கு, இவ்விடங்கள் அவள் மனதில் பசுமையாய் பதிந்திருப்பது ஆறுதலை கொடுத்தது.

காய்கறி, பூந்தோட்டங்களை மிகவும் ரசிப்பாள். இங்கு நிறைய இடங்கள் செல்விக்கு பிடிக்கும். குறிப்பாக ரோஜா பூந்தோட்டம் அவளுக்கு மிகவும் பிடித்த இடம்.

பொற்செல்வன் இங்கே வரும்போது செடியில் உள்ள ரோஜா இதழை வருடிக்கொண்டிருந்தாள். தூரத்திலிருந்து செல்வியையே பார்த்திருந்தவனுக்கு, ‘ஐ மிஸ் யூ’ என்று ரோஜாவிடம் சொன்னதை அவளின் உதட்டசைவு விளக்கியது.

தான் நின்றிருக்கும் இடமும் செந்தமிழ்செல்விக்கு பிடித்த இடம்தான். ரோஜாவிடம் பேசிவிட்டு இங்கே வருவாள் என எதிர்பார்த்திருந்தான். அதற்குள் தேவராஜ் வந்துவிட அண்ணனிடம் சண்டையிட்டுக்கொண்டு கிளம்பியிருந்தாள்.

பொற்செல்வன் தேவராஜிடம் வர, “அப்போ செல்வி பொண்ணை சைட்டடிச்சிட்டிருந்திருக்க” என்றான்.

“ம் அடிக்கிறாங்க சைட்டு” என்றவன்,  “என்ன? சாப்பாடெல்லாம் கொண்டு வந்திருக்கிங்க?” என்றான்.

“சாப்பிடாம வந்துட்ட, என்ன பண்றது?”

“நான் சாப்பிடாம வந்ததுக்கெல்லாம் வருந்துறிங்களா?” என்றான் ஆச்சர்யம்போல.

“என்னால சாப்பிடாம வந்துட்ட, அதனாலதான் கொண்டுவந்தேன், வா சாப்பிடலாம்” என்று சாப்பிட இடம் பார்த்தான்.

தேவராஜின் புதிய மாற்றத்தை ஏற்றுக்கொண்டால்தான் அவனை வளைக்க முடியும் என்று பிடிவாதம் செய்யாமல் உண்ண அழைத்துச்சென்றான். இருவரும் உண்டு முடித்ததும், “அவளை வேற எங்கையாவது வேலைக்கு சேர்த்துவிட வேண்டியதுதானே?” என்றான்.

“யாரை சொல்றிங்க?” என்றான் அறியாதவன்போல.

“நவீனாவைத்தான்”

“இது நான் உருவாக்கின கம்பெனி, இங்க யாரை வேலைக்கு சேர்க்கனும்னு நான்தான் முடிவு பண்ணுவேன். ஆமா… எந்த உரிமையில என் ஸ்டாஃபை அவ இவன்றிங்க?” என்றான்.

“இன்னும் ஒரு வாரத்துக்கு அவ என் பொண்டாட்டிதான்”

“என்னைக்கு அந்த வீட்டை விட்டு வந்தாங்களோ அன்னைக்கே அந்த உரிமை போய்டுச்சு, ஆறு மாசமா சொந்த உழைப்புல வாழ்றாங்க. இப்போ அவங்க நவீனா மட்டும்தான். ஸோ… மரியாதையா பேசுங்க” என்றான் கட்டளையாக.

தம்பியை மெச்சுதலாக பார்த்தவன், “ஹம்… ஓகே… ஒகே. டிவோர்ஸ்க்கு அப்புறமும் நவீனா மேடம் இங்க இருக்கிறது எனக்கு பிடிக்கல, ஸோ அவங்களுக்கு வேற வேலை ஏற்பாடு செய்து கொடுத்திடு” என்றான்.

“அவங்க இங்க வேலை பார்க்குறது உங்களுக்கு ஏன் பிடிக்கனும்? இது என் கம்பெனி, இங்க வேலை பார்க்குறவங்க எனக்கு பிடிச்சா போதும்”

“உன் கம்பெனியில எனக்கு உரிமையில்லையா?” என்றான் இலகுவாக.

“கம்பெனியில உரிமையிருக்கு, ஒர்க் பண்ற ஸ்டாஃப் மேல உரிமையில்ல”

“ம்ப்ச், செல்வா… டிவோர்ஸ்க்கு அப்புறம் அவ இங்க இருக்கிறது சரி வராதுடா, அவ ஃப்யூச்சர் ஸ்பாயில் ஆகிடும்”

“அவங்க ஃப்யூச்சர் ஸ்பாயில் ஆகி ஆல்ரெடி இரண்டு வருசம் ஆகிடுச்சு”

“அவ இங்க இருந்தா உன்னால சரி பண்ண முடியாது”

“அந்த கவலை உங்களுக்கு வேண்டாம், நான் பார்த்துக்கிறன்”

 “செல்வா ப்ளீஸ்…” என தேவராஜ் மன்றாட,

“உங்க பொண்டாட்டியோட உங்களை வாழ வைக்கிறது என் கையில இல்ல, அது உங்க தனிப்பட்ட விசயம். ஆனா நம்ம வீட்டுக்கு வாழ வந்த பொண்ணை தோல்வியோட அனுப்ப என்னால முடியாது.

யார் இல்லைனாலும் இந்த உலகத்துல வாழ முடியும்னு உணரவச்சி, அதுக்கப்புறம் வேற ஒரு வாழ்க்கைக்கு அவங்களை தயாராக்குவேன். அதுவரை அவங்க என் கண்காணிப்புலதான் இருப்பாங்க” என்றான்.

தேவராஜ் முகம் வேதனையை காண்பிக்க, அதை கண்டுகொள்ளாமல், “ஆஃபீஸ்க்கு போகனும், நீங்க என்ன பண்றிங்க? ஃபேக்டரிக்கு போறிங்களா? இல்ல வீட்டுக்கா?” என்றான்.

“இங்கையே கொஞ்ச நேரம் இருந்துட்டு, மனசு போன போக்குல எங்கையாவது போறேன்” என்றான் கோபமாக.

தேவராஜ் கோபத்தை கண்டுகொள்ளாமல் “சரி நான் கிளம்பறேன்” என்று அலுவலகம் கிளம்பினான்.

பொற்செல்வன் அலுவலகம் வந்த ஒரு மணி நேரத்தில் சாம்பவி வந்தார். தகவல் பொற்செல்வனுக்கு வர, அடுத்த வாரம்தானே ஊருக்கு செல்கிறார்கள் என்று யோசித்தபடி உள்ளே வர சொன்னான்.

“நல்லாயிருக்கிங்களா தம்பி?” என்றார்.

“ம் யா, நல்லாயிருக்கேன்”

“வீட்டுக்கு இரண்டு முறை போனேன், நீங்க இல்ல, பார்த்தே நாலஞ்சு மாசம் ஆகுது, வீட்டை காலி பண்றதுக்குள்ள உங்களை நேர்ல பார்க்க தோணுச்சு, அதான் வந்தேன்”

“ஓஹ்… உக்காருங்க ஆன்ட்டி”

மகளுக்கும் பொற்செல்வனுக்கும் பிரச்சனை இருக்கும் நிலையில், அதனால்தான் தன்னையும் நான்கைந்து மாதங்களாக தவிர்க்கிறானோ என்றிருந்தவருக்கு, பொற்செல்வன் பழைய இயல்போடு பேசியதும் நிம்மதியானது.

“பொண்ணு ஃபிக்ஸ் ஆனதால ஊருக்கு போறதுக்குள்ள உங்க கல்யாணத்தை பார்த்துடலாம்னு நினைச்சேன், நவீனா பிரச்சனையால தள்ளி போட்டுருக்கிங்கனு அமிர்தாம்மா சொன்னாங்க, அதுவும் சரிதான். இப்படி மனநிலையில விஷேசம் வைக்கிறது கஷ்டம்தானே?” என வருந்தி, “கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்காம விட்டுடாதிங்க, நேர்ல வைக்கனும்னு இல்ல, போன்ல சொன்னா கூட வந்துடுவோம்” என்றார்.

“சரிங்க ஆன்ட்டி” என்றான் இலகுவாகவே.

“என் பொண்ணு…” என தயங்கியவர் சிறு இடைவெளிவிட்டு “என் பொண்ணுக்கும் உங்களுக்கும் எதோ பிரச்சனை போல, சின்ன வயசுல கொஞ்சம் அதிகமாத்தான் பேசுவா, யாரையும் வச்சு பார்க்கமாட்டா, இங்க வந்த பின்னாடி நல்லாவே மாறியிருந்தா. உங்ககிட்ட தப்பா பேசிட்டா போல, மனசுல வச்சிக்காதிங்க, அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்”

“ஆன்ட்டி… மன்னிப்பெல்லாம் எதுக்கு? அவ அப்படி பேசினதுக்கு காரணமே நான்தான்” என்று பொற்செல்வன் சொன்னபோதும், தந்தையைப் பற்றி பேசியிருப்பான், அது பிடிக்காமல் இவள் முகத்தில் அடித்தாற்போல் பேசியிருப்பாள் என்று நினைத்தாரே அன்றி, பொற்செல்வனை தவறாக நினைக்க தோணவில்லை.

“இப்போ கூட உங்களை பார்க்க வரும்போது அவளையும்தான் கூப்பிட்டேன், வரமாட்டேனுட்டா” என்றார் வருத்தமாக.

“பரவால்ல ஆன்ட்டி”

“கல்யாணத்துக்கு முன்னாடியும், கல்யாணம் ஆன பின்னாடியும் நான் வேலைக்கெல்லாம் போனதில்ல, இங்க வேலை கிடைச்ச பின்னாயும் கூட, இவ்வளோ பெரிய கம்பெனியில சரியா வேலை செய்வோமானு பயம் இருக்கும். என் பயத்தை போக்கி, எனக்கு வேலை சொல்லி கொடுத்து, சரியான சம்பளமும் கொடுத்திங்க.

இதுக்கெல்லாம் மேல இங்க ரொம்ப பாதுகாப்பா, நிம்மதியா இருந்தேன். இங்க வேலை செய்த நாள்களை என் வாழ்நாள்ல மறக்கமாட்டேன். கூடப் பிறந்த பிறப்பு போல அமிர்தாக்கா ஆதரவு கொடுத்தாங்க. நன்றினு ஒரு வார்த்தையில அடக்க முடியாது. ஆனாலும் அதை சொல்றதை தவிர எனக்கு வேற தெரியல” என்று இரு கை கூப்பி வணங்கினார்.

நன்றியுணர்வில் சாம்பவியின் கண்களும் லேசாய் கலங்கியிருக்க, “நீங்க செய்த வேலைக்குத்தான் சம்பளம் கொடுத்தோம். இவ்வளோ ஃபீல் பண்ணாதிங்க. இன்ஃபேக்ட் நீங்க வேலையை விட்டு போறது எனக்குத்தான் பெரிய லாஸ். மகனோட இருக்கப்போறிங்க. எப்படி மறுக்க முடியும்னுதான் அக்ஸப்ட் பண்ணினேன். இனி சந்தோசமா இருங்க” என்றான்.

அலுவலக வேலைகள் மலைபோல் இருக்க, இத்தனை நேரம் பொற்செல்வன் பேசியதே சாம்பவிக்கு பெருத்த நிம்மதி. “சரிங்க தம்பி, உங்களுக்கு வேலையிருக்கும். நான் கிளம்பறேன். ஊருக்கு போறதுக்கு முன்னாடி இன்னொரு முறை வீட்டுக்கு போய் அமிர்தாக்காகிட்ட சொல்லிட்டுத்தான் போவேன். வரேன் தம்பி” என்று கிளம்பினார்.

ராகுலுக்கு அழைத்து, “சாம்பவி ஆன்ட்டி பத்து வருசம் பக்கம் வேலை செய்திருக்காங்க, அவங்க பொண்ணு அஞ்சு வருசம் வேலை பார்த்திருக்கா, கம்பெனி ரூல்ஸ்படி அவங்களுக்கு சேர வேண்டிய அமௌண்ட்டை இரண்டு நாள்ல செட்டில் பண்ணிடுங்க” என்றான்.

வேலைகள் வரிசை கட்டி நின்றபோதும் அலுவலகம் விட்டு வெளியேறி தோட்டத்திற்கு சென்றான். செந்தமிழ்செல்வி இருந்தாள்.

நவீனாவிற்கு வேலை சொல்லித்தரும் பொறுப்பை செல்விதான் ஏற்றிருந்தாள். அதையும் கூட பொற்செல்வனிடம் செல்வி சொல்லவில்லை. புதிதாக பழக சங்கடமாக இருக்கிறது, செல்வியிடம் பழகிக்கொள்வதாக நவீனா கேட்டிருந்தாள்.

செல்விக்கு விருப்பம் என்றால் எனக்கு ஆட்சேபனை இல்லை என்றிருந்தான் பொற்செல்வன். கடந்த ஐந்து மாதங்களாக செல்விதான் நவீனாவை பயிற்றுவித்தாள்.

‘வேலை நேரத்தில் அண்ணியோடுதானே இருப்பாள்?’ என யோசித்தவாறு அவளையே பார்த்திருந்தான். சற்று நேரம் கழித்து கிளம்பியவன், அடுத்து வந்த நாள்களிலும் இதே நேரத்திற்கு செல்வியை காண வந்தான்.

பெண்ணின் உள்ளுணர்வு உணர்த்தியதோ… சட்டென திரும்பியவள் கண்களில் தென்பட்டான் பொற்செல்வன்.

முறைத்துப் பார்த்தவளின் அருகே வந்தான். செல்வி மீண்டும் வேலைக்கு வந்த பின்னே நாளொன்றிற்கு ஒருமுறையாவது பொற்செல்வன் இவளைப் பார்த்திடுவான். செந்தமிழ்செல்விதான் பொற்செல்வனை சில மாதங்கள் கழித்து பார்க்கிறாள்.

ஆனாலும் அருகில் வந்தவனை பார்க்க முடியாமல் தலைகுனிந்து, பெருகிய கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் நின்றிருந்தாள்.

“ஸ்கூல், காலேஜ் டேஸ்ல ப்ரப்போஸ் பண்ணினவங்களை இக்னோர் பண்ணியிருக்கத்தானே? அப்படி என்னையும் பண்ணிடு. சும்மா அதையே போட்டு மனசை அலட்டிக்காத” என்றான் கோபமில்லாமல்.

செந்தமிழ்செல்வி அமைதியாக இருக்கவே, “உன் அண்ணன் மூலமா உனக்கு இன்னொரு உலகம் காத்திட்டிருக்கு. உனக்கு பிடிச்சமாதிரி லைஃபை என்ஜாய் பண்ணு” என்றான்.

‘எனக்கு பிடிச்சதெல்லாம் இங்கதான் இருக்கு. என்மேல் உயிராய் இருக்கும் அப்பாவை தள்ளி வைத்திருப்பது போல, செல்வனையும் தள்ளி வைக்கும் சூழலை எண்ணி வெம்பினாள்.

அண்ணன், தந்தைக்கு பின்னே நெருங்கிப்பழகிய ஆண் பொற்செல்வன். தந்தையை கூட வெறுத்துவிட்டாள். ஆனால் பொற்செல்வனை வெறுக்க முடியாமல் தவித்தாள். அண்ணனும் தந்தையும் கூட சிறு வயதில்தான் பழக்கம். தடுமாறும் வயதில் தன்னை தடுமாறாமல் காத்தது பொற்செல்வனின் தோழமைதான்.

எங்கு சென்றாலும் பொற்செல்வனை மறக்க முடியாது, ஆனால் இங்கிருந்தால் அவனின் முத்தத்தின் ஈரம் காயவே காயாது என்பதால் இவ்வூரை விட்டு கிளம்புவதில் உறுதியாய் இருக்கிறாள்.

ஆனாலும் தனது வாழ்வில் இனி பொற்செல்வன் இல்லை என்பதை தாங்க முடியவில்லை. நினைவுகளின் கணம் செல்வியின் அழுகையை இன்னும் அதிகமாக்கியது.

பொற்செல்வனுக்கு செல்வயின் அழுகையை சகிக்க முடியாமல் போகவே, “என்னை பார்க்க பிடிக்கல, என்னோட பேச பிடிக்கல, இங்க வேலை செய்ய பிடிக்காதவளுக்கு ஊரை விட்டு போறது சந்தோசமாத்தானே இருக்கும்? எதுக்குடீ இப்படி அழற?” என்றான் கோபமாக.

தான் அழுவது செல்வனுக்கு பிடிக்கவில்லை என்று புரிந்தாலும் அழுவதை நிறுத்த முடியவில்லை.

“நான் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டல்ல? உன் வாழ்நாள்ல எப்போவும் பார்க்கக்கூடாதுன்ற அளவுக்கு முழுசா என்னை வெறுத்துடு. இல்ல… உனக்குத்தான் கஷ்டம்” என்று அவ்விடம் விட்டு அகன்றான் வேக நடையோடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!