அன்று காலையிலேயே களை கட்டி இருந்த மருத்துவமனையின் கூட்டம்.. மதியம் சாப்பாட்டு வேளையாகி இருந்த போதும் குறைந்த பாடில்லை.
“ஏ.. ஹரி.. எங்கடா போயிட்ட!! இவ்வளவு நேரம் உன்னைத் தான் தேடிட்டு இருந்தேன்”. என்று ரிசப்சனிஸ்ட் கோமதி முகத்தில் புன்னகையுடன் ஆசையாக கேட்க.
அப்போது தான் வெயிலில் பேங்க் போய் விட்டு வந்த ஹரி தன் வியர்வையை துடைத்துக் கொண்டு இன்முகத்துடன் “என்ன கோமு.. எதுவும் வாங்கிட்டு வரணுமா?.. என்ன எதுக்கு தேடின”.. என்று மலர்ந்த முகத்துடன் கேட்டான்.
Advertisement
கோமதி மனமும் அந்த உரிமையான அழைப்பில் துள்ளிக் குதித்தது.
“இது தான் ஹரி எனக்கு உன்கிட்ட பிடிச்சதே. என்னைப் பார்த்ததுமே எனக்கு என்ன வேணும்னு ஆசையா கேட்கிற பார்த்தியா?”.. என்று சொல்ல..
“என்ன முக்கு கடையில் ஏதாவது சாப்பிட வாங்கியாரனுமா?”.. என்று ஹரி கேட்க.
Advertisement
“ஆமா”.. என்று சந்தோசமாக சொல்லிய கோமதி முகம் சட்டென மாறியது. “இல்ல ஒன்னும் இல்ல.” என்று நொடியில் மாற்றி சொன்னாள்.
Advertisement
“சும்மா சொல்லு கோமு.. நான் எப்படியும் எனக்கு பிரியாணி வாங்கப் போறேன் “.. என்றான்.
“யாரைப் பார்த்து இப்படி இருளடிச்சிப் போய் நிக்கிற”.. என்று திரும்பிப் பார்த்த ஹரி.. இப்போது பேச்சிழந்து நின்று இருந்தான்.
Advertisement
நர்ஸ் உடையில் வந்து நின்ற அகல்யாவின் தீப்பார்வையில் கோமதி பொசுங்காமல் இருந்தது ஆச்சரியம் தான்.
“ கோமதிக்கு பசிச்சா.. முக்கு கடைக்கு நடந்து போய் வாங்க போவுது!! நீ இங்க வார்ட் பாயா ஹாஸ்பிடலுக்கு வேலை பார்க்குறியா இல்ல இவங்களுக்கு எடுபிடியா?”.. என்று கோபமாக அகல்யா கேட்க.
“இல்ல அகல்யா.. கோமதி பாவம் சாப்பாடு கொண்டு வர மறந்துடுச்சு போல”.. என்று தயங்கித் தயங்கி ஹரி சொல்ல..
அவளின் எரித்து விடும் பார்வையில் அங்கு இருந்து இருவருமே ஓடி இருந்தனர்.
கோமதியோ மனதுக்குள் “இந்த ராட்சஸி எங்க இருந்து தான் மோப்பம் பிடிப்பாளோ? சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடுத்த கதையா.. எனக்கு பிரியாணி கிடைக்காம சதி பண்ணிட்டா”.. என்று திட்டிக் கொண்டே தான் கொண்டு வந்து இருந்த தயிர் சாதத்தை உண்டு முடித்தாள்.
அகல்யா அந்த பேஷண்ட் ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு மருத்துவர் அறைக்குள் நுழைந்து இருந்தாள்.
வெளியில் வரும் போது அவள் முகம் இருண்டு இருக்க.. “என்ன அகல்.. இன்னைக்கு சரியான அர்ச்சனை போல”.. என்று தன் தோழியிடம் நர்ஸ் சுமதி கேட்க.. இருவரும் பேசிக் கொண்டே நடக்கத் துவங்கி இருந்தார்கள். .
“ஆமா சுமதி சாருக்கு என்ன கோபமோ நான் நல்லா வாங்கி கட்டி கிட்டேன்”
“ஆமா அகல் அவருக்கு நரசிம்மமூர்த்திக்கு பதிலா ருத்ரமூர்த்தி என்று பெயர் வைத்து இருக்கலாம். “.. என்று சுமதி சொல்ல.
“ம்ம்.. என்ன பண்றது.. நம்ம டாக்டருக்கு வெளிநாட்டு ஹாஸ்பிடல் கூட நிறைய லிங்க் இருக்கே. இங்க வேலை பார்த்த ஒரு சில நர்ஸ்களுக்கு அங்க ஈசியா வேலை கிடைச்சு இருக்கே. அதனால அவர் என்ன திட்டினாலும் பொறுத்துப் போக வேண்டியதா இருக்கு.”.. என்று அகல்யா சொல்ல.. அதே நேரம் அவள் கோபத்திற்கு வடிகாலாய் அவள் எதிரில் வந்து கொண்டு இருந்தான் ஹரி.
அவனோ “ஐயோ யாரு கண்ணுல படக் கூடாது என்று நினைச்சோமோ.. அவள் கிட்டயே வந்துட்டோமே.. ‘உசுரே.. எப்படியாவது தப்பிச்சு ஓடி விடு.. ஐயோ வருதே”.. என்று வடிவேலு ஸ்டைலில் மனதுக்குள் பாடிக் கொண்டு தப்பிக்க நினைத்தாலும்..
“ஏ.. ஹரி நில்லு”.. என்று அவள் அதிகாரமாகக் கூப்பிட.
வேறு வழி இல்லாமல் ஹரியும் நின்று இருந்தான். “சரி அகல் நாம அப்புறம் பேசலாம் என்று சுமதி சென்று இருந்தாள்.
“என்ன சிஸ்டர் எதுக்கு கூப்பிட்டிங்க?”.. என்று அவன் பவ்யமாக கேட்க.
மனதுக்குள் எரிமலையாய் மாறி இருந்தவள் அவனிடம் காட்ட முடியாமல்.. “நீ உன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்க ஹரி? நாலு மணிக்கு ஆபரேஷன் இருக்கு. சார் எல்லாம் ரெடியான்னு என்ன கேள்வி கேட்டுட்டு இருக்கார். நீ எதுவும் ரெடி பண்ணாம அங்க அங்க நின்னு எல்லார் கிட்டயும் வெட்டி அரட்டை அடிச்சுட்டு இருக்க.”.. என்று சொல்ல..
அதே நேரம் வார்ட் ரவுண்ட்ஸ் போக மருத்துவர் நரசிம்மமூர்த்தியும் அங்கு வந்து இருந்தார். உடனே அகல்யா வாயை மூடிக் கொள்ள.. ஹரிக்கு அப்படி ஒரு ஆனந்தம். “தெய்வமே என்னைக் காப்பத்திட்ட”.. என்று மனதுக்குள் கும்பிட்டு தன் வேலையைப் பார்க்க ஓடிச் சென்று இருந்தான்.
“அகல்யா.. ஏன் இப்படி கத்தி பேசிட்டு இருக்கீங்க. பேஷண்டுக்கு டிஸ்டர்பன்சாகப் போவுது”.. என்று அவளை எச்சரித்து சென்று இருந்தார்.
மொத்ததில் அகல்யா மனநிலை இன்று அனல்களமாக மாறி இருந்தது.
ஹரி எப்போதும் போல துள்ளலாக தன் வேலையை தொடர்ந்து கொண்டு இருந்தான். அவனது களையான முகமும் வசீகர புன்னகையும் யாரையும் அவன் புறம் சட்டென ஈர்த்து விடும். அதிலும் அவனது மிடுக்கான தோற்றம் பெண்களை எளிதில் கவர்ந்து விடும் . நல்லவேளை சீருடை கொடுத்து இருந்தார்கள்.. இல்லையேல் அவனை பெரிய அதிகாரி என்று தான் நோயாளிகள் எண்ணி இருப்பார்கள்.
தன் பணி நேரம் முடிந்து விட்டதை அப்போது தான் உணர்ந்த ஹரி, அங்கிருந்து விடைபெற்று உல்லாசமாக சீட்டி அடித்தபடி.. தன் டூ வீலரில் ஏறி அமர்ந்தான். “இன்னைக்கு ராத்திரி எப்படியாவது தலைவன் படத்துக்கு போய் விடனும்”.. என்று சந்தோஷமாக எண்ணிக் கொண்டான்.
வீட்டை எட்டியதும் முதலில் குளியல் அறையில் புகுந்து களைப்பு தீர குளித்து வந்தான்.
என்ன சாப்பிடலாம் என்று ஃபிரிட்ஜை ஆராய்ந்தவனுக்கு நேற்று உணவு எதுவும் மிஞ்சுவில்லை என்பது நினைவு வர.. கட கடவென பருப்பை வேகவைத்து காய்கறிகளை வெட்டி சாம்பார் தயாரித்து விட்டான். தோசைகளையும் சுட்டு முடித்து இருந்தான்.
இது தான் அவன் காத்து இருந்த தருணம்.. டீவியில் அவனுக்கு பிடித்த பாடல்களோ நகைச்சுவையோ சத்தமாக ஓடவிட்டு உணவை ரசித்து சாப்பிடுவான். இன்றும் அவன் கொண்டாட்டம் தொடர.. திடீரென டிவி அணைக்கப்பட்டது. எதிரில் அகல்யா நின்று இருந்தாள்.
“சாப்பிட்டுட்டு இருக்கேன் டீ. டிவிய போடு அகல்யா”.. என்றான் பொறுமையை இழுத்து பிடித்து தன் மனைவியிடம்.
“ஆமா இப்போ நீ படம் பார்க்கிறது தான் ரொம்ப முக்கியம். கொஞ்சமாவது பொறுப்பு இருக்காடா உனக்கு..”
என்று நிறுத்தாமல் அவள் பேசிக் கொண்டே போக.. தோசை தட்டை கீழே வைத்தவன். முதல்ல போய் குளிச்சிட்டு வா செல்லம். அப்புறம் நிதானமா பேசலாம் என்று அவளை வலுக்கட்டாயமாக குளியல் அறைக்குள் தள்ளி இருந்தான்.
அவள் பேசியதை எதுவும் யோசிக்காமல்.. அவன் பழையபடி உல்லாசமாக டிவியை ரசித்தபடி சாப்பிட்டு முடித்து இருந்தான்.
குளித்து முடித்து வந்தவள் அந்த மெல்லிய காட்டன் புடவையை கட்டிக் கொண்டாள். பசி கோவத்தை பின்னுக்கு தள்ளி இருக்க.. அவன் செய்து வைத்து இருந்த உணவை தன் தட்டில் வைத்து அவளும் படம் பார்த்து கொண்டே உண்ணத் துவங்கி இருந்தாள்.
ஆனால் அவனிடம் இருந்து தள்ளி தான் அமர்ந்து இருந்தாள். அவன் மீது கோபமாம்!!. வேலை, டென்ஷன், கோபம் எல்லாம் மறந்து அவள் இப்போது டி.வீ யில் மூழ்கி இருக்க.. ஹரி ஆவி பறக்க அவளுக்கு முட்டை தோசை போட்டுக் கொண்டு வந்து இருந்தான்.
அவனை முறைத்தவள்.. ஒன்னும் வேண்டாம் என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“நீ பேசின பேச்சுக்கு நான் தாண்டி நியாயமா கோபப்படனும். உனக்காக பெப்பர் தூக்கலா போட்டுக் கொண்டு வந்து இருக்கேன்”.. என்று கெஞ்சலாக சொன்ன தொனியில் அவள் பிடித்து வைத்து இருந்த அத்தனை கோபமும் மாயமாக மறைந்து இருந்தது.
ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல் தோசையை மட்டும் எடுத்துக் கொண்டாள். “ச்ச.. சும்மா சொல்லக் கூடாது.. என்ன ருசியா சாம்பார் வச்சு இருக்கான்’.. என்று மனதுக்குள் மட்டும் மெச்சி விட்டு. அடுப்படியை சுத்தம் செய்து பாத்திரம் கழுவத் துவங்கி இருந்தாள்.
ஆனாலும் மனம் கேட்காமல் அவன் என்ன செய்கிறான் என்று அவள் எட்டிப்பார்க்க.. அவனோ தீவிரமாக லேப்டாப்பில் ஏதோ படித்துக் கொண்டு இருந்தான்.
அவளிடம் பெருத்த நிம்மதி. ‘அப்பாடா இன்னைக்காவது சண்டை போடாம அவனே எடுத்து எம்பிஏ சப்ஜெக்ட் எடுத்து படிக்கிறானே’ என்று அவள் மனம் நிம்மதி கொண்டது.
ஆனால் நமது நாயகனோ பாடத்தை படிப்பதைத் தவிர மற்றதை அல்லவா பார்த்துக் கொண்டு இருந்தான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்து இருக்கும். அகல்யாவும் எல்லா வேலையையும் முடித்து இருந்தாள்.
அப்போது யாரோ அவளை பின் இருந்து அணைக்க.. அவன் வருகைக்காக காத்து இருந்த அவள் மனம் துள்ளிக் குதித்தது. “பையன் கெஞ்சட்டும் அவன் என்னை சிஸ்டர் என்று கூப்பிடறதுக்கே ஒரு வாரம் அவனை கிட்ட விடக் கூடாது”.. என்று சபதம் எடுத்துக் கொண்டு இருந்தாள்.
ஆனால் அந்த ஜகஜால கில்லாடி அப்படி எளிதில் விட்டு விடுவானா என்ன..
அவள் வெற்று இடுப்பில் தன் கரத்தை அழுந்தப் பதித்தவன்.. அவள் கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான். அவனை தள்ளி விட்டு விலக்கி நிறுத்த வேண்டும் என்று முடிவு எடுத்து இருந்தவள் தேகம் இப்போது அவள் பேச்சைக் கேட்க மறுத்து அவன் தொடுகையில் உருகிக் கொண்டு இருந்தது.
அவன் மூச்சுக் காற்று அவள் சுவாசத்தை நிறுத்தி இருக்க.. அவன் கரம் முன்னேறத் துவங்க.. தன்னை நிலைப்படுத்தி அவன் கரத்தை அவள் உதற முற்படுகையில்.. அவனின் இதழ்கள் சின்ன சின்ன முத்தங்களை அவள் கழுத்தில் பதிக்கத் துவங்கி ஊர்வலம் எடுக்கத் துவங்கி இருந்தது.
“விட்டுடாதே பெண்ணே.. இப்போது அறிவுரை சொன்னால் தான் இவன் கேட்பான் அவனை நிறுத்தி பேச வேண்டியதை பேசிமுடி”.. என்று மனம் கட்டளை இட்டது. உணர்ச்சிகளோ இந்த சுகமான நிமிடங்களுக்கு தடை போடாதே. என்று கெஞ்சியது.
“ஹரி.. உன் கிட்ட கொஞ்சம் பேசணும் டா. பேசிட்டு அப்புறம்..” என்று முடிப்பதற்குள் அவன் அவளை தூக்கி இருந்தான். அவர்கள் படுக்கை அறைக்கு தூக்கி வந்தவன் அவளை படுக்கையில் படர விட்டு இருந்தான்.
சட்டென சுதாரித்த அகல்யா.. “என்னை ஏண்டா சிஸ்டர்னு கூப்பிட்ட?. எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல !.. அதுவும் அந்த கோமதிக்கு போய் பிரியாணி வாங்கி கொடுப்பியா”. என்று அவள் கோபத்தை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கேட்க.
“ஹே லூசு.. எல்லா நர்சையும் சிஸ்டர் என்று கூப்பிட்டு உன்னை மட்டும் பேர் சொல்லி கூப்பிட்டா எல்லாரும் என்ன நினைப்பாங்க?
. “யார் என்ன நினைச்சாலும் பரவாயில்லை. நீ என்னை பேரைச் சொல்லி தான் கூப்பிடனும். அப்புறம் எவளையும் பார்த்து பல்லை இளிச்சின்னா பார்த்துக்கோ”.. என்று அவள் கண்களை உருட்டிச் சொல்ல.
தன்னவளின் பொறாமையில் பொங்கி வழிந்த காதலை ரசித்தவன் மெல்லிய புன்னகையுடன் “என் உசுரு உள்ள வரை என் காதல் உனக்கு மட்டும் தாண்டி”.. என்றவனின் கரம் அவள் புடவையை பிடித்து இழுக்க..
வெட்கத்தில் தன்னை மறைத்துக் கொள்ள எண்ணிவள் தன் தலைவனின் நெஞ்சிலே புதைந்து கொண்டாள்.
அதற்கு மேல் பேச்சு சத்தம் நின்று போய் இருவரின் முனகல் சத்தம் மட்டுமே அந்த அறையில் நிறைந்து இருந்தது.
ஒரு மணி நேரத்திற்கு பின் அவன் மார்பில் தலை வைத்து படுத்து இருந்தவள். “ “ஹரி.. ஏதோ படத்துக்கு போகணும்னு சொல்லிட்டு இருந்த போகலையா”.. என்று அவன் நெஞ்சில் விரல்களால் கோலமிட்ட படிகேட்க.
“ நாளைக்கு போய்க்கலாம். சரி அடுத்த ரவுண்டு ஆரம்பிக்கலாமா” என்று அவன் கண்களில் மோகம் குறையாமல் கேட்க.
“ஒன்னும் வேண்டாம். நாளைக்கு வேலைக்கு போகணும் படுத்து தூங்கு”.. என்றாள் கறாராக மாறி.
“தூக்கம் வரலை டீ”.. என்று அவன் அடிபோட..
“அப்ப இரு நான் போய் லேப்டாப் எடுத்துத்ட்டு வரேன். செமஸ்டர் வரப்போவுதுல “.. என்று சொல்ல.
“ஐயோ எனக்கு கண்ணுல தூக்கம் சொக்குது.”.. என்றவன் மறு நிமிடமே தூங்குவது போல பாவனை செய்ய..
அடுத்த சில நிமிடங்களில் நிஜமாகவே தூங்கத் துவங்கி இருந்தான்.
அவனையே பார்த்து ரசித்துக் கொண்டு இருந்த அகல்யாவுக்குத் தான் தூக்கம் வர மறுத்தது. எத்தனை வருட காதல்!!.. எத்தனை போராட்டங்களுக்குப் பின் சேர்ந்து இருக்கிறார்கள்.
இந்த மனமதன் தனக்கு சொந்தமாகி விட்டானா?.. இது உண்மைதானா?.. என்று ஆசையுடன் தூங்கிக் கொண்டு இருந்தவன் துயில் கலைந்து விடாமல் அவன் கன்னத்தில் மென்மையாக முத்தம் பதித்து இருந்தாள்.
ஆனால் எல்லா சோதனைகளையும் கடந்து வந்து விட்டோம் என்று எண்ணிய பேதை பெண்ணுக்கு அப்போது தெரியவில்லை. கடவுள் இனி தான் அவளுக்கு நிறைய சோதனைகளை டிசைன் டிசைனாக தயார் செய்து வைத்து இருக்கிறார் என்று அப்போது அவள் அறியவில்லை.
தொடரும்..
மக்களே.. இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள். நன்றி தோழமைகளே.