Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனாய் மாறிய அன்பனே"

அசுரனாய் மாறிய அன்பனே 5

பகுதி 5

        அகல்யாவை பார்த்து நாள் ஆகிவிட்டது என்று.. அன்று பார்த்துச் செல்ல ஊரில் இருந்து வந்து இருந்தார்கள். கவுசல்யா மற்றும் வீரலட்சுமியை காரில் அழைத்து வந்து இருந்தான் மாணிக்கம். மாணிக்கம் வேறு யாரும் அல்ல வீர்லட்சுமியின் அண்ணன் மகன் தான். 

        மாணிக்கத்துக்கு படிப்பு பெரிதாக வரவில்லை. தந்தையுடன் சேர்ந்து கட்சி வேலை பார்க்கிறேன் என்ற பெயரில் புல்லட்டில் சுற்றி வரும் வெட்டி ஆபிசர். கழுத்தில் பெரிய சங்கிலி, கையில் பிரேஸ்லெட், பர்ஸ் நிறைய பணம் இருப்பதால் அதிகாரம் செய்து வரும் மல்லு வேட்டி மைனர் ஆகிப் போனான். 

        அகல்யாவுக்கும் கவுசல்யாவுக்கும் அவனை சுத்தமாக பிடிக்காது. ஆனால் வீரலட்சுமி மூச்சுக்கு முன்னூறு தடவை மருமகனே, மருமகனே என்று அழைத்து அகல்யா வயிற்றில் புளியைக் கரைப்பார். 



Advertisement

         இன்று அகல்யாவைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதும் காரை எடுத்துக் கொண்டு ஓடி வந்து விட்டான். நால்வருமாக கோவையில் அந்த பெரிய ஹோட்டலில் உணவு அருந்தி முடிக்க.. கவுசல்யாவும் வீரலட்சுமியும் ரெஸ்ட் ரூம் சென்று இருந்தார்கள்.

        அந்த நிமிடத்துக்காக காத்து இருந்த மாணிக்கம். “அகல்யா… உன்னை பிரிஞ்சி என்னால இருக்க முடியல டீ. அத்தையும் நமக்கு இந்த வருஷமே கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டாங்க”.. என்று அவன் அவள் கையைப் பற்றி முத்தம் இட்டு இருந்தான். 

     சட்டென கையை உருவிக் கொண்டவள்.. மாமா எனக்கு படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் இருக்கு. என்றாள் எரிச்சலாக. அதே நேரத்தில் தூரத்தில் வீரலட்சுமி வரத் துவங்கி இருந்தார்.  

Advertisement

        அவன் முத்தம் கொடுத்த இடம் தீ சுட்டாற் போல எரிந்தது. என்ன தான் காதலித்தாலும் ஹரி இதுவரை அவளுக்கு முத்தம் கூட கொடுத்தது இல்லை. அவனது அந்த கண்ணியம் தான் அவளுக்கு அவனிடம் பிடித்ததே. 

Advertisement

        “ என்ன மாப்பிள்ளை.. சொல்லிட்டீங்களா என்று வீட்லட்சுமி கேட்டுக் கொண்டே வர”.. அகல்யா மனம் உள்ளுக்குள் பற்றி எரிந்தது. 

     என்ன தான் அவர்கள் குடும்பம் அவர்கள் மாமா குடும்பத்தைச் சார்ந்து இருந்தாலும் இப்படியா ஒரு பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொள்வான்? அதிலும் அவனது அந்த வக்கிரப் பார்வை.. சீ என்று இருந்தது.

      “அம்மா.. இன்னும் ஒரு வருஷம் என் படிப்பு இருக்கும்மா. அதுக்குள்ள எப்படி கல்யாணம் பண்றது? “. என்றாள் அகல்யா.

Advertisement

    “நீ பாட்டுக்கு படி செல்லம். நாம இங்க ஒரு வீடு வாடகைக்கு எடுத்துக்கலாம். நான் ரெண்டு நாளைக்கு ஒருக்க ஊருக்கு போய் வேலையை பார்த்துட்டு வந்து விடுவேன்”.. என்றான் அவள் தலையில் நெருப்பைக் கொட்டுவது போல.

      “இல்ல.. இல்ல அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. அடுத்த வருஷம் நிறைய படிக்கணும். ஹாஸ்டல்ல இருந்தா தான் படிக்க முடியும். பிளீஸ் மாமா புரிஞ்சிக்கோ என்று வேறு வழி இல்லாமல் மாணிக்கத்திடமே கெஞ்சத் துவங்கி இருந்தாள்.

     “சரி. சரி.. ஆனா ஒரு வருஷம் தான். அதுக்கு மேல நான் பொறுக்க மாட்டேன் புள்ள. உன் பரிட்சை முடிஞ்ச கையோட நமக்கு கல்யாணம். அதுக்கு அப்புறம் ஏதாவது சொன்ன?.. உன்னை அப்படியே தூக்கிட்டு போய் உன் கழுத்தில் தாலியைக் கட்டி விடுவேன். ஜாக்கிரதை ”.. என்றான் மிரட்டலாக. 

   உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் “இல்ல மாமா. அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டேன். என்னை நம்புங்க.”. என்று அகல்யாவும் வாய் கூசாமல் பொய் உரைத்து இருந்தாள். 

       இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அகல்யா ஊருக்கு சென்று விடுவாள். அவள் போகா விட்டால் இப்படித் தான் திடீர் என்று அவர்கள் வந்து அகல்யாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து விடுவார்கள். 

       இதற்கு பயந்தே ஊருக்கு சென்று விடுவாள். ஹரி தன் படிப்புக்காக தீவிரமாக காசு சேர்க்கத் துவங்கி இருந்தான். போன வருடமே அவன் ஆசைப்பட்ட கோர்சில் சேர வேண்டியது. பணம் பற்றாமல் போனதால் இன்னொரு வருடமும் காத்திருக்க வேண்டியது ஆயிற்று. 

       இந்த வருடம் எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என்று காத்துக் கொண்டு இருந்தான். இரண்டு வருடங்களாக அந்த ஹோட்டலில் பணி புரிந்ததில் நிறைய கற்றுக் கொண்டான். வீட்டுக்கு வந்து ஏதாவது சமைத்து அதை ஆசையாக அகால்யாவுக்கும் கொண்டு செல்வான். 

      அவள் ஆசையுடன் ருசித்து சாப்பிடத் தான் செய்வாள். இருந்தாலும் ஹரி.. இந்தாடா எம்.பி.ஏ. அப்பிளிகேஷன் இந்த வருடமாவது போய் சேருடா என்பாள். ஹரிக்கு கோபம் பத்திக் கொண்டு வரும். எத்தனை தடவைடீ சொல்லுறது.. என் விருப்பு வெறுப்புல நீ குறுக்கே வராத!!.. என்று எறிந்து விழுவான்.

     எத்தனை வருஷம்டா பொறுமையா இருக்கச் சொல்ற?. பி.காம். முடிச்சு ரெண்டு வருஷமாச்சு. படிச்ச படிப்புக்கு சம்பந்தமே இல்லாமல் இப்படி சமையல் வேலை பார்த்திட்டு இருக்க. என் படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் தான் இருக்கு. என்னை கட்டிக்க என் மாமா கெடு வச்சிட்டு போய் இருக்கான். பிளீஸ் என் சிச்சுவேஷனை புரிஞ்சிக்கோ ஹரி என்றாள்.

    அவனுக்கும் அவள் நிலைமை நன்றாக புரியத் தான் செய்கிறது. ஆனாலும் தன் கனவைத் துறக்க அவன் தயாராக இல்லை. அவன் அவளுக்கு பதில் சொல்லாமல் எங்கோ பார்த்துக் கொண்டு இருக்க.

     அகல்யாவே.. “சரி ஹரி.. உனக்கும் வேணாம். எனக்கும் வேணாம். ஒரு டீல் போட்டுக்கலாம். இந்த முறை தான் உனக்கு லாஸ்ட் சான்ஸ். இந்த வருடமும் உனக்கு ஹோட்டல் மேனஜ்மென்ட்ல சீட் கிடைக்கலைன்னா நீ நான் சொல்ற காலேஜில் எம்.பி.ஏ. போய் சேர்ந்து படிக்கத் துவங்கி விடனும்.”.. என்றாள்.

      அவனும் இந்த முறை எப்படியும் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் சரி என்று தான் தலையாட்டி இருந்தான். ஆனால் ஹரியின் ராசியோ என்னவோ அவனுக்கு இந்த முறையும் கிடைக்காமல் போய் இருந்தது. 

        இரண்டு நாட்கள் அவளிடம் பேசவே இல்லை. “கவலைப்படாத ஹரி”.. என்று அவள் அனுப்பிய செய்திக்கு “ஐ ஆம் ட்ரையிங். பட். இது ரொம்ப பெரிய டிஸ்அப்பாயின்ட்மென்ட். என்று வேதனையுடன் அனுப்பி இருந்தான். எத்தனையோ ஏமாற்றங்களையும் இழப்புகளையும் கடந்து வந்தவன் இதையும் கடக்கத் தான் வேண்டும் என்று மனதை சமாதானம் செய்து கொண்டான். மெல்ல மெல்ல இயல்பிற்கு திரும்பினான். 

     நல்லவேளை ஒரு வாரத்தில் முழுமையாக தேறி வந்து இருந்தான். எம்.பி.ஏ சீட் அவனுக்கு கிடைத்து இருந்தது. அன்று மாலை அவர்கள் சந்தித்துக் கொண்ட போது.. “கங்கிராட்ஸ் ஹரி!!”.. என்று உற்சாகமாக அகல்யா சொல்ல.

   அவனும் இப்போது பழைய ஹரியாக மாறி இருந்தவன்… “தேங்க்ஸ் டீ பொண்டாட்டி. இன்னைக்கு நீ இந்த புடவையில் ரொம்ப அழகா இருக்க”.. என்றான் அவள் கை விரல்களை தன் விரல்களுடன் கோர்த்தபடி. 

      அகல்யா கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து விட. “ம்ம்.. அப்பா.. இப்பவாவது உனக்கு என்னைப் பார்க்க தோணுச்சே. ஆனாலும் நீ இவ்வளவு நல்லவனா இருக்கக் கூடாது டா”.. என்றாள். 

      “நல்லவனா!?.. அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் என் உணர்வுகளுக்கு எல்லாம் கடிவாளம் போட்டு வச்சு இருக்கேன். இன்னும் இரண்டு வருசத்துல நம்ம கல்யாணம் முடிஞ்சதும் பாரு. உன்னை ஒரு நிமிஷம் கூட என் கிட்ட இருந்து விலகி நிக்க விட மாட்டேன். “.. என்றான் அவன் விரல்களை அழுத்தி.

    இருவருக்குமே அந்த அழகான நாட்கள் என்று வரும் என்று ஏக்கமாகத் தான் இருந்தது. அவனுக்கு கல்லூரிக்குச் செல்ல உடைகளை அவளே தேர்வு செய்து கொடுத்தாள். “ரொம்ப நல்லா இருக்கு ஹரி. ஆனா இந்த கண்கள் என்னை மட்டும் தான் பார்க்கணும். எவளையாவது சைட் அடிச்ச தொலைச்சு விடுவேன்”.. என்று அவள் எச்சரிக்கும் போதே அகல்யா ஹாஸ்டல் வந்து இருந்தது.

         பைக்கில் இருந்து இறங்கிக் கொண்டவள். “ஆல் தி பெஸ்ட் ஹரி!. உனக்கு இருக்கும் அறிவுக்கும்.. இங்கிலீஷ்ல உனக்கு இருக்க பேச்சுத் திறமைக்கும் உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கு ஹரி”.. என்று சொல்ல.

     “ம்ம்.. பார்ப்போம். கடவுள் எனக்கு இது தான் நல்லது என்று விதிச்சு வச்சு இருக்கார் போல. ஓகே பாய் டீ”.. என்று ஹெல்மெட்டை மீண்டும் மாட்டிக் கொண்டு கிளம்பி இருந்தான். 

      அந்த ஒரு வருடம் நாட்கள் அழகாகவும் வேகமாகவும் ஓடியது. ஹரி கடந்த இரண்டு வருடங்களாக மூன்று வருட படிப்புக்கு என்று அந்த ஹோட்டலில் வேலை பார்த்ததோடு ராபிடோ, ஃபுட் டெலிவரி என்று நிறைய உழைத்து இருந்தான். ஒரு பெரிய தொகையாக சேர்த்து வைத்து இருந்ததால் பணப் பிரச்னை இல்லை. 

         அவன் பீஸ் கட்டியது போக சில லட்சங்கள் இருந்தது. இப்போதும் பாடத்தை படித்து முடித்து விட்டு இரவு ராபிடோ ஓட்டச் சென்று விடுவான் . எப்போது வேண்டுமானாலும் அகல்யா வீட்டில் இருந்து பிரச்னை வெடிக்கலாம். அந்நேரம் யாரிடமும் உதவி கேட்க முடியாது என்று தான் தன் சேமிப்பை கூட்டிக் கொண்டே இருந்தான். 

         ஆனாலும் அகல்யாவுக்கு அவனிடம் பிடிக்காத குணமே யாராவது உதவி என்று கேட்டால் உடனே பர்சை எடுத்து காசை நீட்டி விடுவான். குறிப்பாக பெண்கள் கேட்டால் உடனே மனம் இறங்கி விடுவான். அதைப் பற்றி பேசினாலே அவனுக்கு கோபம் வந்து விடும். இருக்கட்டும் கல்யாணத்திற்குப் பின் அவனை சரி செய்யலாம் என்று விட்டு விட்டாள். 

      அந்த வருட படிப்பை ஹரி வெற்றிகரமாக முடித்து இருந்தான். அன்று அகல்யாவுக்கு பிறந்தநாள் . அவள் ஆசைப்பட்ட அந்த பெரிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று இருந்தான். “எப்படி டா இருக்கு .. நீ வாங்கிக் கொடுத்த சுடி”.. என்று அவள் காட்ட.. 

      “அழகா இருக்கு”.. என்று சொன்னவன் பார்வை அவள் வளைவுகளில் கிறங்கி அங்கேயே குடியிருக்க கெஞ்சியது. போராடி பார்வையை அவள் முகத்துக்கு கொண்டு வருவதற்குள் ஒரு வழியாகி இருந்தான். 

      அப்போது யாரோ ஒரு நடுத்தர வயது பெண்மணி சட்டென்று அகல்யா முடியை கொத்தாக பிடித்து இழுக்க.. அகல்யாவோ “அம்மா.. என்ன விடும்மா”.. என்று கத்த..

     ஹரிக்கு அது யார் என்று புரிந்து போய்.. “ ஆன்ட்டி.. அவளை விடுங்க “.. என்று முடிக்கும் முன்..

    “டேய்.. . நீ என் பொண்ணை இனி பார்த்த.. உன்னை சாவடிச்சு விடுவேன். “.. என்றவர் அவளைத் தர தரவென்று இழுத்து சென்று இருந்தார். 

      ஹரி மனம் நொறுங்கிப் போனான். அவர்கள் வீட்டில் ஹரியை நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று முன்பே அகல்யா சொல்வாள். ஆனால் இன்று நேரில் வீரலட்சுமியை பார்த்த போது தான் அதில் எத்தனை உண்மை இருக்கிறது என்பது புரிந்தது. 

       அகல்யா காரில் ஏற மாட்டேன் என்று முரண்டு பிடிக்க.. அவள் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்து அவளை காரில் உள்ளே தள்ளி இருந்தார். 

       இவரிடம் இரக்கம் என்பதை இம்மி அளவுக்கும் எதிர் பார்க்க முடியாது என்று ஹரிக்கு நன்றாக புரிந்து போனது. 

      அய்யோ அவளை எப்படி காப்பாற்றுவது? அவள் மாமனுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தால் என்ன செய்வது என்று தெரியாமல் மனம் துடித்துப் போனான்.

தொடரும்.

     இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே. அன்புடன் லக்ஷ்மி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!