மாணிக்கம் திருமணத்தை நிறுத்தாது. மகனிடம் விளக்கம் எதுவும் கேட்காது. உண்மையா! பொய்யா! என எதையும் ஆராயாது பாரதியை மருமகளா ஏற்க தயாரானார்.
Advertisement
“மாமா, நீங்க என்ன பண்ணப் போறீங்கன்னு உங்களுக்கு தெரியுதா! அந்தப் பொண்ண எப்படி நம்ம வீட்டு மருமகளா ஏத்துக்க முடியும். அப்படியே நம்ம பார்த்தி கல்யாணம் பண்ணிருந்தாலும் அஞ்சோ பத்தோ குடுத்து விரட்டி விடாம! மருமகளா தூக்கிட்டு வந்து நடு வீட்டுல வைக்க போறேன்னு சொல்றீங்க. என்ன மாமா இது?” என மாலு கேட்க,
“அக்கா கேக்குறது நியாயம் தான மச்சான்.. காச குடுத்து கழட்டி விடாம அப்பன் பேர் தெரியாது, ஊர் மேய்ற சிறுக்கிய, நம்ம வீட்டு பையனுக்கு கட்டி வச்சா நம்ம குடும்ப மானம் என்ன ஆகும்? அதோட அந்த பொண்ணு வாய திறந்தாலே மோசமாத்தா பேசும்.. ச்ச… பையன் தொட்டுட்டாங்கிறதுக்காக கூவத்த கூட்டிவந்து கூரைல வைக்க முடியுமா. திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணிட்டு வந்தவ நாளைக்கு இன்னும் பணக்கார பையன் கிடைக்கவும் நம்ம பார்த்திபன விட்டுடு வேற எவெங்கூடயும் ஓடிப்போக மாட்டான்னு என்ன நிச்சயம். அப்படிப்பட்ட தரங்கெட்டவள நம்ம வீட்டுக்குள்ள எப்படி அனுமதிக்க முடியும்.” சண்முகம்.
Advertisement
Advertisement
“ஏன் முடியாது இதுக்கு முன்னாடி அனுமதிக்கல. ” என கண்கள் சிவக்க கோபமாக கேட்டார் அனந்தராமன். மாணிக்கத்தின் தந்தை. அந்த வீட்டின் மூத்த குடிமகன், வாய் திறந்ததால் மாலு அமைதியாகி விட, சண்முகம் மட்டும் அவரை முறைத்தபடி நின்றார். யாரும் அறியாதவாரு தான். ஏனெனில் சண்முகத்தைத் தான் அனந்தராமன் மறைமுகமாக குத்திக் காட்டுகிறாரே.
“மாணிக்கம், நீ எடுத்த முடிவு எனக்கு சரியா படலன்னாலும், நீ எல்லாத்தையும் சரியா தான் செய்வன்னு நம்பிக்க இருக்கு. அதுனால சம்மதிக்கிறேன். என்ன சுகுமாரா! நீ என்ன சொல்ற?” என மூத்த மகனின் முடிவை ஆதரித்து வாய் பேசினாலும் அவரின் முகமோ ஏதோ சிந்தனையில் விழுந்திருந்தது.
Advertisement
“சரி தாம்ப்பா.. ஆனா நம்ம விஷாட்ட யாரு எடுத்து சொல்லுவா? மாமா மாமான்னு உசுரா இருக்குற பொண்ணு. அதுக்கிட்ட போய் இப்ப உன் மாமா வேற ஒருத்திக்கி சொந்தம்னு சொன்னா கோபத்துல அழுது ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டாளா!” என்றார் அவர்.
பூஜா உள்ளே வந்து குரல் குடுத்ததும் பார்த்திபனின் தமக்கைகள் மயூரியும் நேகாவும் விஷாலினியை உள்ளே அழைத்து சென்றதால் விஷாலினிக்கு இவர்களின் முடிவு தெரியாது. வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாது அறைக்குள் டென்ஷனுடன் அமர்ந்திருந்தாள் அவள்.
“அவள நான் சமாளிக்கிறேன்.. ” என்று சென்றார் வரலட்சுமி.
“அப்படியே உன் மருமகனையும் சேத்து சம்மதிக்க வை. குறிச்ச நேரத்துல அவன் கல்யாணம் நடந்தே தீரணும்.. ” என்றார் மாணிக்கம்.
அங்கு மணமகன் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான் பார்த்திபன்.
“இந்த வீட்டுல ஏன் யாருமே என் பேச்சுக்கு காது குடுக்க மாட்டேங்கிறாங்க. அந்த அளவுக்கா நான் மட்டமா போய்ட்டேன். ச்ச… என் மேல நம்பிக்கைங்கிறது இம்மி அளவு கூட இல்ல.” என்றவன் கண்ணில் சிக்கும் அனைத்து பொருளையும் தூக்கி வீச, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசு பொருட்கள் இருந்தன. அவை நேற்றைய இரவு நிச்சயத்தின் போது வந்திருந்த, சில சொந்தங்களால் தரப்பட்டது.
“நடக்காத கல்யாணத்துக்கு கிஃப்ட் ஒன்னுதான் கேடு.” எனக் கோபமாக தூக்கி வீச, அதை அழகாய் கேட்ச் பிடித்தனர் இருவர். அது ராம் மற்றும் சந்ரு. அந்த வீட்டு மாப்பிள்ளைகள்.
“என்ன மாப்ள நீ லூசுத்தனமா பண்ணிட்டு இருக்க! உள்ள கண்ணாடி ஜாம இருந்தா என்ன பண்ணிருப்ப!! இப்படி தூக்கி போட்டா அது உடஞ்சில்ல போயிருக்கும். இன்னும் எவெங்குடுத்தான்னு பேர கூட நோட்டுல எழுதி வைக்கல. பேரு தெரியாம எப்படித் திருப்பி முறை செய்றது.. அப்றம், ‘மாணிக்கம் வீட்டு கல்யாணத்துக்கு போனோம். இத்தன ரூபா மெய் செஞ்சோம். ஆனா எங்க வீட்டு விசேஷத்துக்கு வெறுங்கைய வீசிட்டு வந்திருக்கானுங்க’ன்னு தப்பா பேச மாட்டாங்க. ” எனச் சந்ரு சொல்ல, அவனின் மீது உடையாமல் இருந்த மற்ற பொருட்களைத் தூக்கி வீசினான் பார்த்திபன்.
“யோவ் சகல உன்ன வேடிக்கை பாக்கவாய்யா கூட்டீட்டு வந்தேன். நிறுத்த சொல்லுயா உன் பொண்டாட்டி தம்பிட்ட.” என ராமை பார்த்துக் கத்த,
“பார்த்தி காம் டவுன். என்ன பண்ணிட்டு இருக்குற நீ. ” என்றதும் பார்த்தி அமைதியானான். தன் பயாலஜிக்கல் சகோதரியின் கணவன் என்பதால் மட்டுமில்ல, ராமின் மீது எப்பொழுதுமே ஒரு மரியாதை உண்டு அவனுக்கு.
“அதா ஆல்ரெடி பண்ணிட்டியே. ரகசியமா… ஏற்கனவே கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திட்டு இருக்குற பொண்ண, ஊரறிய தாலி கட்ட சொல்றோம். என்ன தப்பு இருக்கு.. ” என சந்ரு சொல்ல பார்த்தி அவனை முறைத்தான்.
“அவன ஏன் முறைக்கிற. அவெ சொல்றது சரிதான. உங்களுக்கு தான் ஆல்ரெடி கல்யாணம் ஆச்சே. “
“ஒரே பொண்ணு கழுத்துல ரெண்டு வாட்டி தாலி கட்டுறது உனக்கு கஷ்டமான செயலா இருக்கலாம். ஆனா நீ தாலி கட்டி விளையாட நாங்க ஒவ்வொரு பொண்ணா கூட்டிட்டு வர முடியாது. நாங்க உனக்கு மாமா தான். அதுக்குன்னு மாமா வேலை பாக்க சொல்றது தப்பில்லயா மாப்ள.” என்று சொல்லி விட்டு ஓடத் தொடங்கினான் சந்ரு.
“மரியாதையா நின்னிடு. இல்ல அக்கா புருஷன்னு கூட பாக்காம காலு ரெண்டையும் உடைச்சி விட்டுடுவேன்.. ” எனக் கோபமாக கத்த,
“ச்ச… இந்த வீட்டுல வீட்டோட மாப்ளைக்கி ரெஸ்பெக்ட்டுங்கிறது ரஸ்கு அளவுக்கு கூட இல்ல. ” எனக் கத்திக் கொண்டே ஓடினான்.
“பார்த்தி ஏன் எங்க கிட்ட கூட சொல்லாம பாரதிய ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண.லவ் பண்றேன்னு சொல்லிருந்தா நாங்களே செஞ்சி வச்சிருக்க மாட்டோம்மா.” என ராம் சற்று கோபமாக கேட்டான்.
“ஆமா ஒரு ரூபா கூட செலவு செய்யல. பேச்சுலர் பார்ட்டின்னு ஒன்ன வச்சி சரக்கு ஊத்திக் குடுக்காம நீ எப்படி கல்யாணம் பண்ணிக்கலாம்.. ” என சந்ரு சொல்ல, பார்த்தி அவனை துரத்தும் முன் ராம் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.
“பாரதிய மட்டுமில்ல நான் இதுவர எந்த பொண்ணையும் லவ் பண்ணது இல்ல. விஷாலினி உட்பட யார் மேலயும் எனக்கு காதல் வந்தது இல்ல..” என்றான் தீர்க்கமாக.
“காதல் இல்லன்னா ஏன் எம்பொண்ண கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச பார்த்திபா. ” என்ற குரல் வாயிலில் கேட்டு திரும்ப, வரலட்சுமி வந்து கொண்டிருந்தார். பார்த்திபன் அமைதியாக நிற்க,
“சொல்லு பார்த்தி. விஷாலினிய பிடிக்காம காதலிக்காம எப்டி நீ கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச பார்த்தி.. ” எனக் கேட்டார்.
‘கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டா உடனே தலைய அசச்சிருவான் போல. அது மாதிரி தான் பாரத்தி கிட்டயும் தலை தலைய ஆட்டிருப்பான் போல. அதான் கூட்டீட்டு போய் ஆட்டுன தலைய வெட்டீட்டுச்சி. ‘ சந்ருவின் முணங்கல்.
“அத்த நீங்க கேட்டு நான் எத முடியாதுன்னு சொல்லிருக்கேன்.. எனக்கு எது நல்லதுன்னு என்னை விட உங்களுக்கு தான தெரியும். அதா சரின்னு சொன்னேன்.. மத்தபடி விஷா குட்டி எனக்கு நேத்ரா மாதிரி தான்.. ” என்றான்.
‘அடப்பாவி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்க இருந்த பொண்ண தங்கச்சி மாதிரின்னு சொல்றான் பாரேன்.. ‘ என சந்ரு ராமின் காதைக் கடித்தான்.
“அப்ப தயாராகு… பாரதிக்கும் உனக்கு கல்யாணம்..” என்று கூறி செல்ல,
“வாட்…” என அதிர்ந்து போய் நின்றான் பார்த்திபன்.
சற்று சிறிய அறை தான். ஆனால் அந்த அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக மிகவும் டென்ஷனுடன் நடை பயின்று கொண்டிருந்தாள் மணி பாரதி..
‘கல்யாணமா… அதுவும் பார்த்திபன் கூடவா… கூடாது… இது நடக்க கூடாது. தடுத்து நிறுத்து பாரதி. இல்லன்னா நீ ரொம்ப கஷ்டப்படுவ.’ என ஒரு மனம் ஓலமிட்டு கொண்டிருக்க, மற்றொரு மனம் என்ன சொல்கிறது என்று கேட்கும் முன், அறையைத் திறந்து கொண்டு வந்தாள் விஷாலினி.
குழந்தை முகம் என்பார்களே அது விஷாவுக்கு சரியாக பொருந்து. கவலை கஷ்டம் கண்ணீர் என எதையும் பார்க்காது சந்தோஷத்தை மட்டுமே அனுபவித்து வந்தவள் அவள் என்று அவளின் முகத்தை பார்த்துமே சொல்லி விடலாம்.
இன்று அந்த முகம் கலங்கி சிவந்து கண்களில் நீர் கோர்த்து கண்ணில் பூசிய மை முழுவதும் சிதைந்து இருந்தது. புதிதாக அழுவதாலும் கோபம் கொள்வதாலும் எப்படி ஆவேசமாக பேசுவது? என்பது தெரியாது முழித்தாள் அந்த பூங்கொடியாள்.
எந்த வேலையும் செய்தது இல்லை என்று சொல்லு கரங்கள் இரண்டும் பஞ்சு மெத்தையில் இருந்து பிய்த்து எடுத்த சில பஞ்சை ஒட்டி வைத்தது போல் அத்தனை மிருதுவாக இருக்கும்.@ அந்த மென்கரத்தை ஒன்றொன்று பிசைந்தபடி பாரதியின் முன் வந்து நிற்க…
பாரதிக்கு, ‘ஏன்டா சின்ன குழந்தையெல்லாம் கூட்டீட்டு வந்து கல்யாணம் பண்ணி வைக்கிறேனு விளையாட்டு காட்டுறிங்க.’ என்று தோன்றியது.
காரணம்… கொழுகொழுவென அமுல் பால் விளம்பரத்தில் இருக்கும் குழந்தை ஐந்தேகால் அடி உயரம் வளர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தாள் விஷாலினி.
“எனக்கு என்னோட மாமா வேணும். ” என்றாள் முயன்று கோபத்தை வரவைத்த சிவந்த தன் முகத்தை காட்டியபடி. அதை ரசிக்க சொல்லியது பாரதியின் மனம்.
” அதுக்கு நான் என்ன பண்ணணும்? “
“நீ இந்த மண்டபத்த விட்டு வெளிய போனா எனக்கும் பார்த்தி மாமாக்கும் கல்யாணம் நடக்கும். ப்ளிஸ் போய்டு. “
“இதோ பாரு நான் இந்த கல்யாணத்த நிறுத்தல. நிறுத்துனது உன்னோட பெரிய மாமா. நீ எங்கிட்ட பேசுறத விட உன்னோட ஃபேமிலிட்ட பேசுறது நல்லது.”
“அது எப்படி நான் பேசுனா உடனே கேட்டுடுவாங்களா! என்னால முடியாது.. “
“என்னாலயும் முடியாது.. நானும் உன்னோட நிலைமையில தான் இருக்கேன்.”
” ம்ச்… எவ்ளோ காசு வேண்ணாலும் தர்றேன். போய்டு. காசு வேண்டாம்னா வேற பொருளா கூட தர்றேன். ப்ளிஸ் போய்டு… இன்னைக்கி எனக்கும் பார்த்தி மாமாக்கும் கல்யாணம்… எங்கப்பாவோட எத்தன நாள் கனவு தெரியுமா இந்த கல்யாணம். ” என யாரோ எழுதிக் கொடுத்த வாக்கியத்தைப் படிப்பது போல் ஒப்பித்தாள். ஒவ்வொரு வார்த்தையையும் முடிக்கும் போது ‘ப்ளீஸ் போய்டு’ என்று இறஞ்சினாள்.
“அப்பாக்கு மட்டும் தானா.” என்றாள் பாரதி சுவாரசியமாக.
“இல்ல… எனக்கும் தான். பார்த்தி மாமான்னா உயிரு. ப்ளிஸ் போய்டு.. ” என அவளைப் போகச் சொல்லி சொல்ல, பாரதி அதைக் கேலி சிரிப்புடன் பார்த்தாள். கோபம் வந்தது விஷாலினிக்கு. புஸ் புஸ் என மூச்சு வாங்க,
“நீயெல்லாம் என்ன மாதிரியான பொண்ணு! இப்படி பொய் சொல்லி ஏமாத்தி கல்யாணம் பண்ணா! நல்ல வாழ்ந்திடலாம்னு நினைக்கிறியா? பார்த்தி மாமா உன்ன ஒதுக்கி வச்சிடும். நீ தனி மரமா நிக்கிறதுல எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனா என் மாமா வாழ்க்கையும் சேர்ந்து வீணாகும்.
நீ அவருக்கு வேண்டாம். அவருக்கு ஏத்த ஜோடியும் நீ இல்ல. நாந்தா அவருக்கு பொருத்தமா இருப்பேன். மரியாதையா இங்கருந்து போய்டு. இல்ல அசிங்க படுவ… வாழ்நாள் முழுக்க.. ” என மிரட்டத் தொடங்கினாள் அவள்.
தன்னை விட மூன்று ஆண்டுகள் சிறியவளான விஷாலினியின் மிரட்டலுக்குப் பயம் வரவில்லை பாரதிக்கு. இருபத்திரெண்டு வயது அரிவை அவள் கண்களுக்கு இரண்டு வயது பேதையாக தெரிந்தாள்.
பாரதி அசையாது நிற்க, விஷாலினி கோபம் கொண்டு அவளின் கையை பிடித்திழுத்து வெளியே தள்ள முயன்றாள். அதற்குள் வரலட்சுமியும் பூஜாவும் வந்து விட, விஷா அடங்கவில்லை.
‘என் மாமனை என்னிடம் இருந்து பிரிக்க வந்தவள். ராட்சஸி.. ஏமாற்றுக்காரி..’ எனப் பைத்தியம் பிடித்தது போல் கத்த, வரலட்சுமி தான் அவளைக் கஷ்டப்பட்டு இழுத்துச் சென்றார். செல்லும் முன் பாரதியின் கையில் பட்டுப் புடவையைத் திணித்து விட்டு,
“முகூர்த்தம் முடிய பதினஞ்சு நிமிசம் தான் இருக்கு.. சட்டுனு கிளம்பி வர சொல்லு.” என பூஜாவிடம் சொல்லி விட்டு கோபமாக சென்றார்.
பாரதி அந்த குடும்பத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக பழக்கப்பட்டவள் தான். பார்த்திபனுக்கும் அவளுக்குமான நட்பு ஆறு மாதங்கள் தான். ஆனால் பார்த்தி, பாரதியிடம் பழகும் முறை கண்டவர் சந்தேகம் கொண்டு வரலட்சுமி இருவரிடமும் பேசினார்.
” உனக்கும் பார்த்திக்கும் இடைல என்ன இருக்கு? ” எனக் கேட்க,
“நீங்க என்ன கேக்குறீங்கன்னு புரியல எனக்கு. ” என்ற பாரதியின் முகத்தை உற்று பார்த்தவர், ” நீ அவன காதலிக்கிறியான்னு கேக்கறேன். ” என நேரடியாகவே அவர் கேட்டு அவளின் முக பாவனைகளை அளவிட்டார்.
அப்பொழுது உறுதியாக மறுத்தவள், இப்போது யாருக்கும் தெரியாது பதிவு திருமணம் செய்திருக்கிறாள் என்ற கோபம் அவரின் முகத்தில் தெளிவாக தெரிந்தது.
இருவரும் காதலிக்கிறார்கள் என்று முன்னரே தெரிந்திருந்தால் மகளின் மனத்தில் ஆசையை கோட்டை போல் கட்டி இருக்க மாட்டார். பாதி எழும்பிய கோட்டையை அவரே இடித்து தள்ள வேண்டி இருக்காதே என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது.
அவர் நினைத்தால் மகளுக்காக பேசி பாரதி என்ற ஒருத்தியை அவரின் கணவன் சொன்னது போல் துரத்தி இருக்க முடியும். ஆனால் அப்படி செய்யாததற்கு காரணம் பார்த்திபன். தான் ஈன்றெடுத்த சேயை விட தன் அண்ணன் மகனை அதிகம் நேசிப்பதால் அவன் விரும்பும் பெண்ணையே அவனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
ஆனால் அவனின் மனத்தில் இப்போது வரை காதலி என்ற பெயரில் யாரும் இல்லை என்று அவர் உணர்வே இல்லை. அவனிடம் கேட்கவும் இல்லை. மாணிக்கத்தை போல் அவரே முடிவு செய்துவிட்டு கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்துகிறார்.
மகளை இழுத்து வந்தவர். அவளை சமாதானம் செய்ய பார்க்க அது முடியாது போனதால் சண்முகத்துடன் மண்டபத்தை விட்டு அனுப்பி வைத்தார்.
“நீ எதுக்கு பாப்பா அழற. அழ வேண்டியது அந்த சனியெந்தா. தந்திரமா உன் மாமெங்கூட பழகி மாப்பிள்ளைய ஏமாத்தி கல்யாண வரைக்கி வந்திருக்கா. அந்த ஏமாத்து காரிய எப்படி துரத்தி விடணும்னு எனக்கு தெரியும். அவள ஓட விட்டதுக்கு அப்றம் உன் மாமனை உனக்கே கட்டி வைக்கிறேன். அழாத பாப்பா. அப்பாவ நம்பு… பார்த்திபன் கையால தான் உங்கழுத்துல தாலி ஏறும். நம்ம வீட்டுக்கு யார் மருமகளா வரணும்னனு ஒரு தராதரம் இருக்கு. அது அவளுக்கு இல்ல. எந்தத் தகுதியும் இல்ல. அத அவளுக்கு மட்டுமில்ல இந்த வீட்டுல இருக்குற எல்லாருக்கும் புரிய வைக்கிறேன். அப்பா இருக்கேன் பாப்பா உனக்கு.” என மகளிடம் ‘பார்த்திபன் உனக்குத் தான்.’ என்ற நம்பிக்கையைச் சாய விடாது கயிறு கொண்டு இழுத்து பிடித்து கட்டி வைத்தார்.
பாவம் விஷாலினி தந்தை பேச்சை கேட்பதா! இல்லை தாய் சொல்லை கேட்பதா எனப் புரியாது முதல் முறை கவலை எண்ணும் கடலில் விழுந்தாள். ஆனால் என்ன நடந்தாலும் அவளின் மாமனை மட்டும் விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள்.