Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 16.1

அதியாயம் 16

தன்னிடம் காதல் சொன்னதை அண்ணனிடம் சொன்னதாக பொற்செல்வன் சொன்னானே, இளவரசன் அன்னையிடம் சொல்லிவிடுவானோ என்ற அச்சத்தோடு வெளியே வந்தவள் “அண்ணா” என்றாள்.

கதவை திறந்தவன், “உன்னை தூங்கத்தானே சொன்னேன்?” என்றான்.

“அம்மாகிட்ட ஏதும் சொல்லாதண்ணா” என்றாள்.



Advertisement

இவன் அமைதியாக இருக்க, “அவர் என்ன சொன்னார்?” என்றாள் சன்னக்குரலில்.

“உங்க தங்கை யாரையும் கல்யாணம் செய்துக்கமாட்டானு சொன்னார்”

வேற ஏதும் சொல்லலையா? என யோசித்த போதும், “அவர் சொன்னா நம்பிடுவியா?” என்றாள்.

Advertisement

“சரி நம்பலை, ஒரு வருசம் இல்ல, இன்னும் இரண்டு வருசம் கழிச்சுக் கூட கல்யாணம் செய்துக்கோ. நாங்க பார்க்குற மாப்பிள்ளையை சந்தோசமா கல்யாணம் பண்ணிக்குவேனு எனக்கு நம்பிக்கை மட்டும் கொடு”

Advertisement

“கண்டிப்பா பண்ணிப்பேன்”

“அதை நான் எப்படி நம்புறது?”

“எப்படி நம்புறதுனா? நான்தான் சொல்றேன்ல?”

Advertisement

“ம்ஹூம், நான் நம்பமாட்டேன்”

“நம்பலைனா போ”

“அம்மாவை யோசிச்சியா? அவங்களுக்காக கூட உண்மையை சொல்லமாட்டியா?”

“உண்மையா? என்ன உண்மை? நீயா எதாவது யோசிச்சிட்டிருக்காத” என்றவள், “அப்போ நீ அவன் சொல்றதைத்தான் நம்புவ” என்றாள் கோபமாக.

“எவன்?” என ஊன்றிப்பார்த்தான் தங்கயை.

அச்சோ அவன்னு சொல்லிட்டோமே என பதறியவள், “அவன்னா சொன்னேன்? தெரியாம சொல்லிட்டேன், அவர், அவர்தான்… பொற்செல்வன் எதோ சொன்னார்னு சொன்னியே, அதை சொன்னேன்” என்றாள்.

“பொற்செல்வன் சொன்னதை விடு, எனக்கே நீ எதோ மறைக்கிறனு தெளிவா தெரியுது”

“ஆமாம் மறைக்கிறேன், வெளில சொல்ற விசயமா இருந்தா சொல்லியிருப்பேன், இது அப்படியில்ல. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன், நான் யாரையும் லவ் பண்ணல” என்றாள்.

“அப்படினு நீ நினைச்சிட்டிருக்க, உண்மை அது இல்ல”

“என்னைப் பத்தி என்ன தெரியும் உனக்கு? பெருசா கண்டுபிடிச்ச மாதிரி” என முறைத்தாள் கோபமாக.

இளவரசன் அமைதியாக பார்த்திருக்க, “என்னோட சைல்ட் ஹூட் மட்டும்தான் உனக்கு தெரியும், டீன் ஏஜ்ல எத்தனை ஸ்ட்ரகில்? எல்லாம் நானே ஹேண்டில் பண்ணியிருக்கேன், அம்மாகிட்ட கூட சொன்னதில்ல. இவ்வளோ தெரியுற எனக்கு லவ் பண்றேனா இல்லையானு தெரியாதா?” என்றாள்.

“சரி விடு, நீ லவ் பண்ணல. செல்வா சாரைப் பத்தி அம்மா பயங்கரமா புகழ்றாங்க, நீ ஏன் அவர்கிட்ட சரியா பேசல? சரியா இல்ல… நான் இருந்தவரை பேசவேயில்ல, உன்கிட்ட பாஸ் மாதிரி இல்லாம ஃப்ரண்ட்லியா பழகுவாராம். இப்போ என்னாச்சு? அவரும் உன்கிட்ட பேசல?”

“நான்தான் சொன்னேனே… சில விசயங்களை வெளில சொல்ல முடியாது”

“சரி சொல்ல வேண்டாம். எனக்கு தேவையான தகவலை பொற்செல்வன்கிட்ட கேட்டுக்கறேன்”

“அவர்கிட்ட ஏதும் கேட்கக்கூடாது” என்றாள் கட்டளைபோல.

பொற்செல்வனை அவமரியாதையாக பேசினால் தங்கை முகம் மாறுகிறதா என்பதை காண, “கண்டிப்பா கேட்பேன், நீ அவனை லவ் பண்ணலைனாலும் உன் கல்யாணத்துக்கு அவன்தான் பெரிய தடையா இருக்கானு எனக்கு தோணுது. என்னானு தெரிஞ்சிக்கலைனா என்னால நிம்மதியா இருக்க முடியாது” என்றான்.

“நீ ஏன் அவரை மரியாதை இல்லாம பேசுற? அம்மாக்கு தெரிஞ்சா திட்டுவாங்க” என்றாள் இறங்கிய குரலில்.

இளவரசன் முறைக்க, “இல்ல, அவர்தான் அம்மாக்கு லைஃப் கொடுத்தார், நானும் அங்க பீஸ்ஃபுலா இருந்தேன். சில தனிப்பட்ட விசயத்துக்காக அவரை மொத்தமா குறை சொல்ல கூடாதில்ல”

“நான் அவனை குறை சொல்லக்கூடாதுனா நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கனும், திரும்பவும் சொல்றேன்… கல்யாணம் இரண்டு வருசம் கழிச்சு பண்ணிக்கலாம், ஆனா உனக்கானவனை ஃபிக்ஸ் பண்ணியே ஆகனும், அம்மாக்கு நீ கொடுக்குற பெரிய நிம்மதி உன் கல்யாண விசயம்தான்” என்றான்.

செல்வி முகம் வாடிவிட, “இரண்டு நாள் வரைக்கும் யார்கிட்டயும் ஏதும் சொல்லாம இருக்கேன், இரண்டு நாளுக்கு அப்புறம் ஒன்னு… நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கனும், இல்லைனா சரியான காரணம் சொல்லனும். அதையும் செய்யலைனா நான் யார்கிட்ட பேசனுமோ அங்க பேசுவேன். இப்போ போய் தூங்கு” என்றான்.

இரண்டு நாளாவது டைம் கொடுத்தானே… இளவரசன் கோபம் குறைந்த பின்னே எதாவது சொல்லி சமாளிச்சிடலாம் என்று தனதறைக்கு சென்றாள்.

அடுத்த நாள் மாலை கடையிலிருந்து வந்தவள் அண்ணனிற்காக காத்திருந்தாள். பணி முடித்து இரவு பத்து மணிபோல் வந்தவன், வெளியில் உண்டதாக சொல்லி அறைக்குள் சென்றுவிட்டான்.

மகனுக்கு பரிமாற காத்திருந்த சாம்பவியும் உடன் இருந்ததால் அன்று ஏதும் பேச முடியாமல் போனது. அடுத்தநாள் பணிக்கு சென்றவன் நள்ளிரவுதான் வந்தான்.

அடுத்தநாள் காலை சாம்பவி சமையல் செய்து கொண்டிருக்க, நவீனாவும் செல்வியும் கடைக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்தனர். எட்டரை மணி போல் எழுந்தவன், “ம்மா காஃபி” என்றபடி வந்தமர்ந்தான்.

இளவரசன் குரல் கேட்டதும் அவசரமாக வெளியே வந்தாள் செல்வி. “கடைக்கு கிளம்பியாச்சா செல்வி? இன்னைக்கு ஒன் ஹார் கழிச்சு போங்க, எனக்கு பேசனும்” என்றான்.

பொற்செல்வன் விசயம்தான் பேசுவான் என்று, “மாடிக்கு போலாமா?” என்றாள்.

“நான் இன்னும் காஃபி கூட குடிக்கல, இங்கையே பேசலாம்” என்று அன்னையிடம் காபியை வாங்கியவன், “ம்மா உங்ககிட்ட முக்கியமான விசயம் பேசனும், கடைக்கு ஒன் ஹார் லேட்டா போறிங்களா? இல்லைனா செல்வியும், நவீனாவும் போகட்டும், உங்களை நான் அப்புறம் கூட்டிட்டுபோய் விடறேன்” என்றான்.

அன்னையிடம் என்ன பேசுவானோ என்று, “நாங்களும் லேட்டாவே போறோம்” என்றாள் செல்வி.

“முக்கியமான விசயமா இளவரசா?”

“ஆமாம்மா” என்றதும் வெளியே வந்த நவீனா மீண்டும் உள்ளே போனாள்.

“நவீனா, ஏன் உள்ள போறிங்க? வாங்க” என்றான் இளவரசன்.

வெளியே வந்தவள், “இல்ல, நீங்க எதோ பேசனும்னு” என்றாள் தயக்கமாக.

“பேசனும்தான், அதுக்காக நீங்க உள்ள போக வேண்டியதில்ல” என்றான்.

செல்வியின் பதட்ட முகம் பார்த்த நவீனாவிற்கு சங்கடமாகிட, “இல்ல நீங்க பேசுங்க, எனக்கும் அம்மாகிட்ட பேசனும், பேசிட்டு வரேன்”

“நான் உங்களை என் சிஸ்டர்போலத்தான் நினைக்கிறேன், நீங்களும் உங்க விசயம் எல்லாத்தையும் செல்விகிட்ட சொல்றிங்கதான? எங்க ஃபேமலி மேல உள்ள நம்பிக்கையிலதான பொற்செல்வன் உங்களை இங்க விட்டுருக்கார்? இது எங்க ஃபேமலி விசயம் இல்ல, நம்ம ஃபேமலி விசயம். வந்து உக்காருங்க” என்றான்.

நவீனா அமர, “நீயும் உக்காரு செல்வி” என்றான்.

செல்வி அமரவும், “நேத்து அப்பாவைத்தான் பார்க்க போயிருந்தேன்” என்றான்.

செல்வியின் முகம் இறுகவே, சாம்பவி முகம் நிர்மலமாக இருந்தது.

“நீங்க முதல்முறை செல்விக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சதுமே அப்பாவும் பார்க்க ஆரம்பிச்சிட்டார்ம்மா, செல்விக்கு மாப்பிள்ளை பார்க்க உங்களுக்கு என்ன உரிமையிருக்குனு கேட்டு, பத்து நாளுக்கு மேல அவருக்கும் எனக்கும் வாக்குவாதமாச்சு.

என்கிட்ட இவ்வளோ பேசுறிங்க, நான்தான் உனக்கு மாப்பிள்ளை பார்ப்பேன்னு உங்க மககிட்ட போய் சொல்லிப் பாருங்கன்னேன். அப்படியே ஆஃப் ஆகிட்டாரு.

நான் எதோ ஃபாரின் டூர் போயிருக்கேன், லைஃபை என்ஜாய் பண்ணிட்டிருக்கேனு நினைச்சிருக்கார், நான் இந்த வேலை பார்த்திட்டிருக்கேனு போன வாரம்தான் தெரிஞ்சிருக்கு.

அவரால இதை தாங்கிக்க முடியல, நம்ம பிஸ்னஸை பார்க்கவே நேரமில்லாம இருக்கேன், கோடிகள்ல வருமானம் இருக்கும்போது நீ எதுக்குடா அடுத்தவனுக்கு கீழ வேலைக்கு போகனும்னு திட்டினார், அப்புறம் புலம்பினார், கடைசியா வேலையை விட சொல்லி கெஞ்ச ஆரம்பிச்சிட்டார்.

அடுத்தவனுக்கு கீழ நான் வேலைக்கு போகக்கூடாது, ஆனா அம்மா போலாம். இத்தனை கோடி சொத்திருந்தும் என் தங்கையும் அம்மாவும் வேலைக்கு போய்தான் சாப்பிட்டிருக்காங்க. இப்போ வரைக்கும் அது உங்களுக்கு வலிக்கலையானு கேட்டேன்.

நான் உங்கம்மாவை போக சொல்லல, அவதான் போய்ட்டா, என் அம்மாகிட்டயிருந்து என்னை பிரிச்சா நான் செத்துடுவேனு செல்விம்மா சொல்லிடுச்சு, நான் என்ன பண்ணட்டும்னு புலம்பினார்.

கல்யாணம் செய்து இரண்டு குழந்தைகளைப் பெத்த பின்னாடியும் அப்பாக்கு அம்மா மேல பெருசா அன்பில்ல. ஹம்… நான் எதுக்காக இதையெல்லாம் சொல்றேன்னா… சில முக்கியமான விசயங்கள்ல சரியான முடிவு எடுக்கலைனா பின்னாடி எதையும் சரி பண்ண முடியாது.

நல்ல லைஃப் பார்ட்னர் அமையிறது சாதாரண விசயமில்லை, அமையும்போது ஏத்துக்கலைனா அது நமக்கு எட்டாத தூரத்துக்கு போய்டும்” என்றான் தங்கையை பார்த்தவாறு.

“அம்மா உனக்கு கல்யாணம் செய்ய நினைக்கும்போது கூட, செல்விக்கு இப்போ இன்ட்ரஸ்ட் இல்லைம்மா, வாழப்போறது செல்வி. விருப்பமில்லாம கல்யாணம் செய்து வச்சா லைஃப் நல்லாயிருக்காதுனு சொன்னேன். ஆனா இனி அப்படி சொல்ல முடியாது” என்றான்.

“எதையோ மனசுல வச்சிக்கிட்டு பேசுற, என்னனு வெளிப்படையா சொல்லு இளவரசா, எனக்கு பக்கு பக்குனு இருக்கு” என தவித்தார் சாம்பவி.

“இன்னைக்கே செல்வி கல்யாணத்துக்கு சம்மதிச்சாகனும், கல்யாணத்துல விருப்பமில்லைனா என்ன காரணம்னு சொல்லனும்” என்றான்.

“நான் ஈவ்னிங் சொல்றேன்” என்றாள் சன்னக்குரலில்.

“முடியாது. தெரிஞ்ச விசயத்தை சொல்ல, ஈவ்னிங் வரைக்கும் காத்திட்டிருக்கனுமா? இப்போவே சொல்லு” என்றான் பிடிவாதமாக.

“நா… நான் கல்யாணம் செய்துக்கிறேன்” என்றாள் சன்னக்குரலில்.

சாம்பவி முகம் சந்தோசம் கொள்ள, அப்பாவை உதாரணம் காண்பித்தும் தங்கை அவளின் மனதைப் பற்றி யோசிக்கவில்லையே என்று நினைத்த இளவரசன் முகம் வருத்தத்தை காண்பித்தது.

தங்கையின் பேச்சை நம்பவில்லை என்றபோதும், “குட்… இதை முன்னவே சொல்லியிருந்தா நான் இவ்வளோ பேச வேண்டியிருந்திருக்காது. இரண்டு நாள் முன்ன உன்னை பொண்ணு கேட்டான்ல… அவங்கம்மா உன்னை பார்க்கனும்னு சொன்னாங்க. கால் பண்றேன், பேசு” எனறு மொபைலை எடுத்தான்.

“வேண்டாம், இப்போ வேண்டாம்” என்றாள் தடுமாற்றமாக.

“ஸோ… நீ உன் ஸ்டாண்ட்லயிருந்து வெளில வரமாட்ட, முழு மனசோட கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லல, ஆமாம்தான?” என்றவன்,

“செல்விக்கு ஒருத்தர் ப்ரப்போஸ் பண்ணியிருக்கார், அதை அவரே என்கிட்ட சொல்லும்போது எனக்கு எப்படியிருந்திருக்கும்?” என்றான் சாம்பவியிடம்.

“என்ன சொல்ற இளவரசா?” என அதிர்ந்தவர், “செல்விகிட்ட சொல்ல பயந்துகிட்டு உன்கிட்ட சொல்லியிருப்பாங்க, கண்டவங்க பேச்சை கேட்டுக்கிட்டு செல்வியை தப்பா நினைக்காத. யாராவது ப்ரப்போஸ் பண்ணியிருந்தா செல்வி என்கிட்ட சொல்லியிருப்பா” என்றார்.

“அப்படியா செல்வி?” என்றான் தங்கையிடம்.

“ஸ்கூல் டைம்லயிருந்து எத்தனை பேர் ப்ரப்போஸ் பண்ணியிருக்காங்க, இதெல்லாம் ஒரு விசயமா? ப்ரப்போஸ் பண்றவங்க எல்லாரையும் கல்யாணம் செய்துக்க முடியுமா? நான் ரிஜக்ட் பண்றேன்னா காரணமிருக்கும்னு ஏன்டா யோசிக்கமாட்டேங்கிற?”

“என்ன? ரிஜக்ட் பண்ணுனியா? யார் ப்ரப்போஸ் பண்ணினாங்க? ஏன் என்கிட்ட சொல்லல?” எனப் பதறினார் சாம்பவி.

“ம்மா எதுக்கு டென்ஷன் ஆகுறிங்க? பிடிச்சிருந்தா ப்ரப்போஸ் பண்ணத்தான் செய்வாங்க, பிரச்சனை அது இல்ல. பிடிக்காத ப்ரப்போஸலா இருந்தா முழுசா வெளில வரனும்ல? இவ வரல. அதான் பிரச்சனை”

“நான்… நான் அதை நினைக்கிறதில்ல, நீயா எதாவது நினைச்சிக்காத”

“அப்போ நான் பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் பண்ண இன்னைக்கே சம்மதிக்கனும். முடியுமா உன்னால?”

அன்னை முன் இப்படி பேசிவிட்டானே என்ற கோபத்திலும், பொற்செல்வனுக்கு சாதகமாக இருக்கிறான் என்ற கோபத்திலும் “கல்யாணம் பண்ணியே ஆகனும்னு என்ன இருக்கு? கல்யாணம் பண்ணினவங்கள்லாம் சந்தோசமா வாழ்ந்துட்டாங்களா? எனக்கு தோணும்போதுதான் பண்ணிப்பேன். தோணலைனா பண்ணாம கூட இருப்பேன், அது என் இஷ்டம், இனி மாப்பிள்ளை பார்க்குறேனு சொன்ன…” என்றாள் கோபமாக.

மகளின் பேச்சில் அதிர்ந்து போனார் சாம்பவி.

“சொன்னா? சொன்னா என்ன பண்ணுவ?” என்று முறைத்தவன், “உனக்கு ப்ரப்போஸ் வந்தது எனக்கு பிரச்சனையில்லை. அதுலயிருந்து நீ வெளில வர முடியாம நீ கஷ்டப்படறதுதான் எனக்கு பிரச்சனை. இதை நீடிக்க விடமாட்டேன். இன்னும் ஒரே மாசத்துல உனக்கு கல்யாணம்” என்றான் கட்டளையாக.

மகள் பெரும் மன உளைச்சலில் இருக்கிறாள் என்று தற்போதுதான் சாம்பவிக்கு புரிய “இளவரசா… செல்விகிட்ட விருப்பம் சொன்னது யார்டா?” என்றார்.

“அதை அவகிட்டயே கேளுங்கம்மா”

“அவதான் என்கிட்ட சொல்லலையே” என்றார் ஏமாற்றமாக.

“இன்னைக்கொரு நாள் டைம் கொடுங்க, சொல்றாளா பார்ப்போம், இப்போ சாப்பிட தாங்க, பசிக்குது” என்றான்.

அனைவருக்கும் எடுத்து வைக்க, “எனக்கு பசிக்கல” என்றாள் செல்வி.

“இப்படி மனநிலையில பசிக்காது, தூக்கம் வராதுனு என் ஃப்ரண்ட்ஸ் சொல்லியிருக்காங்க, ஆனாலும் வயித்தை காயப்போட்டா உடம்புதான் வீக்காகும். உன் பிரச்சனை தீராது. கஷ்டப்பட்டாவது சாப்பிடு, வா” என்றான் நக்கலாக.

“இப்படி மனநிலையா? என்ன மனநிலை? என்னைப் பத்தி என்ன நினைச்சிட்டிருக்க நீ?”

“ம்… உனக்கு ப்ரப்போஸ் பண்ணினவங்களை மறக்க முடியாம தவிச்சிட்டிருக்க மனநிலை. சரியா சொன்னேனா?” என இலகுவாக சொல்ல, தீப்பார்வை பார்த்தாள் இளவரசனை.

“அச்சோ… பயமாயிருக்கு” என்று பாவனையோடு சொன்னவன், “உன் கோபத்தை கால்மணி நேரத்துக்கு தள்ளி வச்சு சாப்பிட வாயேன், உன்னால நானும் நவீனாவும் பசியோட இருக்கோம்” என்று நவீனாவை உண்ண அழைத்தான்.

“உங்கண்ணா சொல்றதெல்லாம் உண்மையா செல்வி? நீயும் மனவேதனைலதான் இருக்கியா?” என்றாள் நவீனா.

நடந்ததை மறைத்து அன்னைக்கு தன் மீதுள்ள நம்பிக்கையை உடைத்து விட்டோமோ என்று கவலையானது செல்விக்கு.

இங்கு நடந்ததெல்லாம் அமிர்தா ஆன்ட்டியிடம் சொல்லிவிடுவாரோ? கடைக்கு சென்ற பின்னே நாமே அன்னையிடம் சொல்லிடலாம் என்று யோசித்தபடி, “அதெல்லாம் இல்லைக்கா, நீங்க சாப்பிட வாங்க” என்று உண்ண அமர்ந்தாள் செந்தமிழ்செல்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!