Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தென்றல் – 4

அத்தியாயம்: 4

வரலட்சுமி விஷாலினியை அழைத்து சென்றது தான் தாமதம் பூஜா வேகமாக கதவுகளை மூடி தாழிட்டு, பாரதியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் கோபமாக.



Advertisement

“பூஜா… நான் சொல்றத கேளு. இது எதுவும் உண்மை இல்ல. ” என பாரதி இறைஞ்ச எதையும் கேட்பதாக இல்லை அவள்.

“பொய் சொல்லிட்டேல்ல… என்ன ஏமாத்திட்டல்ல நீ. எங்கிட்ட கூட நீ சொல்லவே இல்லல்ல… உனக்கும் எனக்கும் இடைல நல்ல நட்பு மட்டுமா இருக்கு. உன்ன என்னோட கூட பிறந்தவ மாதிரி தான பாத்தேன். எங்கப்பாம்மாவ விட உன்ன நான் அதிகமாவே நேசிச்சேன். நம்புனேன்… ஆனா நீ… நம்மோட இத்தன வர்ஷ நட்ப ஒத்த பொய் சொல்லி ஒட்டு மொத்தமா அழிச்சிட்ட. ” என் ஆவேசமாக பாரதியின் சுடிதார் காலரை பிடித்து உலுக்கி பேச,

Advertisement

Advertisement

“என்ன பூஜா இது. என்னென்னமோ பேசுற. நீ இப்படி ஆவேசமாகுற அளவுக்கு எதுவுமே நடக்கல.. “

“அப்ப இதுக்கு என்ன பதில் சொல்ற…” எனப் புகைப்படத்தையும் திருமண பதிவு சான்றிதழையும் காட்டி கேட்டாள்.

Advertisement

“பொய்… இது எல்லாம் பொய் பூஜா.. யாரோ ஜோடிச்சி விட்ட கத இது.. “

“நம்புற மாதிரி எதாவது சொல்லேன் பாரதி.. “

” நீ நம்பித்தான் ஆகணும் பூஜா.. எனக்கும் பார்த்திபனுக்கும் கல்யாணம் நடக்கல..” என்ற பதில் வேகமாக வந்தது.

“அப்ப இப்ப பண்ணிக்க. ” எனும் போதும் பாரதி மௌனியாக சில நிமிடங்கள் யோசித்தாள்.

“பூஜா வேண்டாம்.. பார்த்தி மனசுல நான் கிடையாது.. ” என்ற குரலில் இருந்த காதலை உணர முடியாத அளவுக்குப் பூஜா சிறுமி அல்லவே. அதிலும் தன் தோழியைப் பற்றி நன்கு அறிந்தவளாயிற்றே.

” மனசுல நீ இல்லாமலா ஏமாத்தி கூட்டீட்டு போய் கல்யாணம் பண்ணானா அந்த பார்த்திபன்.. ” என்க, பாரதி கோபமாக விழித்தாள்.

‘கல்யாணமே நடக்கல பூஜா..’ எனக் கத்திய பாரதியின் பேச்சில் இருந்த உண்மை அவளின் தோழிக்கு விளங்கவை இல்லை.

“என்ன மொறைக்கிற. உன்ன அவெ நல்லா யூஸ் பண்ணிட்டு இருந்திருக்கான். நல்லா ஒட்டி உரசி ஊர் சுத்தி. உங்கிட்ட இருந்து என்ன வேணுமோ அத வாங்கிக்கிட்டு. நீ அலுத்திட்டன்னு வேற ஒருத்தி கழுத்துல தாலி கட்ட போயிருக்கான். ப்ளே பாய்… பிராடு… சீட்டர்… பொம்பள பொறுக்கி..” என ஏக வசனத்தில் திட்ட,

“பூஜா ஸ்டாபிட்.. பார்த்தியன் அப்படி கிடையாது. பொறுக்கி அது இதுன்னு சொல்லாத. பார்த்திபனுக்கு பொண்ணுங்களுக்கு உதவுற மனசு இருக்கு தான். ஆனா அவங்கள தப்பா யூஸ் பண்ணிக்கிற பழக்கம் கிடையாது. இதுவர தப்பான எண்ணத்தோட அவனோட நிழல் கூட என்னை நெருங்குனது கிடையாது.. ஏன் நீயும் அவெங்கூட பழகி பாத்திருக்க தான. உன்ன பொண்ணு பாக்க வந்தவெந்தான அவெ. அவன் கூட நல்ல நண்பனாத்தான பழகுன. உனக்கு தெரியாதா பார்த்திபன பத்தி. அவெ ரொம்ப நல்லவெ. முதல்ல உனக்கு இந்த ஃபோட்டோவ அனுப்புனது யாரு? அத விசாரிக்கிறத விட்டுட்டு ஏன் நீ நடக்க இருந்த கல்யாணத்த நிப்பாட்டுன பூஜா..”

” ஏன்னா நீ பொய் சொல்லிட்டு இருக்க பாரதி.. “

“நான் எந்த பொய்யும் சொல்ல பூஜா.. “

“என்னைப் பாத்து சொல்லு டி.. நீ பார்த்திபன காதலிக்கலன்னு.. ” எனப் பாரதியின் விழிகளை உற்று நோக்கி கேட்க, பெண்ணவள் தடுமாறினாள். இதுவரை நேருக்கு நேராக நின்று உரையாடிக் கொண்டிருந்தவள் நிலம் நோக்கி,

“இல்ல… நான் பார்த்திபன விரும்பல. எனக்குள்ள அந்த எண்ணம் வந்தது இல்ல..” எனச் சின்ன குரலில் சொல்ல,

“உனக்குள்ள எதுவும் இல்லன்னு என்னை மட்டுமில்ல உன்ன நீயே ஏமாத்திட்டு இருக்க பாரதி.. “

“இல்ல. நான் பார்த்திபன விரும்பல.. ” எனத் துணிந்து பொய் சொன்னாள் மங்கை.

பல ஆண்களைக் கண்டிருக்கிறாள் பாரதி. நேருக்கு நேர் கண்களைப் பார்க்கும் தைரியம் இல்லாது எங்கோ பார்த்து பேசும் ஆண்கள்.. அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காத ஆண்கள்.. பெண் என்று பல் இளித்துக் கொண்டு நிற்கும் ஆண்கள்.. ஏன் முகம் பார்க்காது அதற்கு கீழே இருக்கும் உடலை மட்டும் மேயும் பார்வை கொண்ட ஆண்கள் எனப் பலரைக் கண்டவளுக்குப் பார்த்திபன் வித்தியாசமாக தெரிந்தான்..

வழியவில்லை… அதே நேரம் கோபம் கொண்டால் விலகவில்ல. அக்கறை கொண்ட ஆடவனின் மெய் அன்பு பேதையைக் காதல் கொள்ள செய்தது நிஜம்.. ஆனால் ஸ்டேட்ஸ்… அதில் ஏரோப்பிளைன் வைத்தாலும் அவனுக்கு ஈடாக நிற்க முடியாது. அத்தோடு அவனைக் காதல் செய்த மனத்தைக் கண்டித்துத் தண்டித்து கடிவாளம் போட்டு அடக்கி வைக்க வேறு ஒரு காரணம் உள்ளது.

முக்கியமானதும் கூட.. அதனால் தான் காதலை மறைத்து அவனின் திருமணத்திற்கு வாழ்த்து சொல்ல வந்துள்ளாள். ஆனால் கடைசி நொடியில் இப்படி ஒரு திருப்பம் வரும் என்று எதிர்பார்க்க வில்லை..

“என்னைப் பாத்து சொல்லு டீ.. பார்த்திபன் கூட பழக ஆரம்பிச்ச இந்த ஆறு மாசத்துல ஒரு நாள் ஒரு நிமிஷம் கூட நீ பார்த்திபன விரும்பல.. ” எனக் கேட்க, இம்முறை பதிலேதும் வரவில்லை பாரதியிடம் இருந்து.

” மறச்சிட்டேல்ல.. அவன நீ காதலிக்கிறத எங்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோனலல்ல.. அன்னைக்கே கேட்டேனே உங்களுக்குள்ள என்னன்னு.. அப்பவும் உண்மய சொல்ல முடியல உன்னால.. இது தான் நம்ம நட்பு.. பெருமையா இருக்கு.. உன்ன மாதிரி ஒரு உயிர் தோழி கிடைச்சத நினைச்சி ரொம்ப பெருமையா இருக்கு..”

“நான் மட்டும் விரும்பி எந்த பிரயோஜனமும் இல்ல பூஜா. பார்த்திபன் எனக்கு கானல் நீர். தூர இருக்குற வர மட்டுமே அது சந்தோஷத்த தரும். பக்கத்துல போன அது மறைஞ்சி போய்டும். “

“அப்ப நீ அவன காதலிக்கிறது நிஜம். ” எனத் திரும்ப திரும்ப ஒற்றை வரியிலேயே நின்றாள் பூஜா.

“ஆமா.. அவன நான் காதலிக்கிறேன் தான்.. அதுக்கு இப்ப என்ன பண்ண சொல்ற.. “

“கல்யாணம் பண்ணிக்க சொல்றேன்.. ” என்ற போது வேகமாக வந்தது பாரதியின் மறுப்பு குரல்.

“இல்ல.. என்னால முடியாது.. “

“ஏன்.. “

“ஏன்னா எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு.. அம்மா இருக்காங்க.. தங்கச்சி இருக்கு.. “

“அவங்க எல்லாரையும் கூட்டீட்டு போய் தான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணியா.. “

“பூஜா அந்த கல்யாணம் பொய்.. போலியானது.. “

“அப்ப அத நிஜம்மா மாத்து.. “

“புரியாம பேசாத பூஜா.. நேத்து தான் நீயும் நானும் எங்கம்மாவ பஸ் ஏத்தி விட்டோம் ஆன்மீக யாத்திரைக்கு. அவங்க ஊர் வர ஆறு மாசம் ஆகும். திரும்பி வந்த அவங்க என்னைப் பாக்கும் போது, எனக்கு கல்யாணம் ஆகிடுச்சின்னு தெரிஞ்சா உடைஞ்சி போய்டுவாங்க.. அவங்களுக்கு என்னையும் தங்கச்சியும் தவிர வேற யாரும் கிடையாது. எங்களுக்கும் அப்படி தான். அப்படி இருக்குறப்போ யாருமே இல்லாமா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்..”

” அம்மா சம்மதம் கிடைச்சா நீ பார்த்திபன் மேல வச்சிருக்கிற காதல ஒத்துக்கிட்டு அவன கல்யாணம் பண்ணிப்பியா.. “

“இல்ல… அம்மா சம்மதிக்க மாட்டாங்க..”

“ஏன்.. “

“அப்படித்தா.. இது உனக்கு புரியாது.. ” என்றவளின் குரலில் இருந்த வலி ஏன் என்று பூஜாவிற்கு புரியவே இல்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. பார்த்திபன் மீது பாரதி வைத்திருக்கும் காதல்.

அதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டவள் பாரதி பதில் சொல்ல முடியாத பல கேள்விகளை அடுக்கி வரலட்சுமி தந்த புடவை அணிய வைத்தாள்.

இதோ பார்த்திபனின் தமக்கை மயூரி வந்து பாரதியை அழைத்து செல்கிறாள். மணமேடையில் கடுப்புடன் அமர்ந்திருந்த பார்த்திபனின் பக்கத்தில் அவளை அமரச் செய்ய, கீ கொடுத்த பொம்மை போல் நடந்து வந்து பார்த்திபனின் அருகில் அமர, அவன் தாலி எடுத்து அவளின் கழுத்தில் அணிவித்து, மணிபாரதியைத் தன் சரிபாதியாக அனைவர் முன்னும் ஏற்றுக் கொண்டான்.

தாலி கட்டிய அடுத்த நொடியே பார்த்திபன் மண்டபத்தை விட்டு வெளிநடப்பு செய்து எங்கோ சென்று விட்டான். அதத்தான் நாம பாத்தோமே.

காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் அந்த காரின் வேகம், அதன் உச்சபட்ச வேகம் என அந்த காரில் இருந்த வேகத்தைச் சுட்டிக் காட்டும் ஸ்பீடோமீட்டரின் நொடி முள் போன்ற முள், மீட்டரில் இருந்த கடைசி சிவப்பு நிற புள்ளியில் வந்து நின்றது. ப்ரேக் என்ற ஒன்று இருக்கிறது என்பதையே மறந்து ஓட்டிக் கொண்டிருந்தான் பார்த்திபன். எங்கே செல்வது என்ற இலக்கு இல்லாமல் ஓட்டிக் கொண்டு சென்றான்.

அவனின் கோபம் நியாயம் தானே. ‘திடீரென ஒரு பெண் வந்து பார்த்திபனுக்கு திருமணமாகி விட்டது என ஒரு காகிதத்தைக் காட்டினால் அதை உடனே நம்பிவிடுவார்களா? குண்டூசி முனை அளவுக்கு கூடவா என்மீது நம்பிக்கை இல்லை? அல்லது அந்த நம்பிக்கையை பெற எனக்கு தகுதி இல்லையா?’ என மனம் புழுங்க, அதைக் குளிர்விக்க யாரும் முன் வரவில்லை.

இது பொய்… யாரோ வேண்டுமென்றே இந்த திருமணத்தை நிறுத்த திட்டமிட்டு அந்த புகைப்படத்தையும் திருமண பதிவு சான்றிதழையும் அனுப்பி உள்ளனர். அந்த சான்றிதழ் போலி என நிரூபிக்கலாம்.

இதை சொன்னால் பார்த்திபன் மீது தான் கோபம் கொள்வர். ஏனெனில் பார்த்திபனின் செயல்கள் அப்படி தான். ஆனாலும் ஒரு வார்த்தை அவனிடம் கேட்டிருக்கலாம். ஒரு நொடி அவனை நம்பி நடந்ததாக சொல்லப்படும் திருமணம் உண்மையா என விசாரித்திருக்கலாம். எதையுமே செய்யாது கட்டாயத் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

அந்த கோபமும் இயலாமையும் அவன் இறுக்கி பிடித்த ஸ்டெரிங்கிலும், ஆக்சலேட்டரை விடாது மிதித்த கால்களிலும், புன்னகை தவழும் இதழ் பூட்டி இருப்பதிலும் தெரிந்தது.

அவனுக்குப் பெண் என்றால் பிடிக்கும். பெண்களை ரசிக்கும் ரசிகன் அவன். அதற்காக அவர்களின் உடலை மேயும் பெண் பித்தன் அல்ல. தூர நின்று கண் இமைக்காது ரசிப்பான். முகத்தை தாண்டி பார்வை சென்றது கிடையாது.

பெண்கள் உலகின் பொக்கிஷங்கள் என்பான். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு அழகு. பேதையில் தொடங்கி பேரியம் பெண்ணான மூதாட்டி வரையிலும் ஒவ்வொரு பெண்ணின் செயல்களும் ஒவ்வொரு விதமான ரசனையை தந்தது அவனுக்கு. அந்த அழகு தனித்துவமானது என்பான்.

இரு விழிகளால் இதயத்தைத் தொட்டு செல்லும் பார்வையும், அந்த பார்வையில் கருமணிகள் ஆடும் ஆட்டமும் அழகோ அழகு.

தன் உணர்ச்சிகளைப் பெண்கள் வெளிக்காட்ட ஏற்றி இறக்கும் புருவங்கள் தனி அழகு.

கோபம் கொள்கையில் சிவந்து விடைக்கும் காதுகள் அழகு. மூக்குத்தி குத்திய மூக்கும் அழகு, குத்தாது கூர் தீட்டப்பட்டிருந்தாலும் அழகு.

உதடுகள் அது மூடித் திறக்கையில் மீன் குஞ்சியாகத்தான் தெரியும் அவனுக்கு. திறக்காது லேசாக விரித்து உதட்டிற்குள் அவர்கள் பூட்டி வைக்கும் புன்முறுவல் அழகு. அல்லது முழுதாக இதழ் விரித்து பூக்கும் நகை அழகு. முத்துப்பல் தெரிய சிரித்தால் அதை விட அழகு. சத்தமிட்டு சிரித்தால் ஒரு அழகு. பொக்கை வாய் தெரிய பூத்தால் எனப் பெண்கள் எதைச் செய்தாலும் ரசிப்பான் பார்த்திபன்.

வயது வித்தியாசம் என்று எதுவும் பார்க்காது அனைத்து வயது பெண்களையும் ரசிப்பான்.

அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. அவனிடம் ஆண்மைக்குண்டான கம்பீரமும் அழகும் கர்வமும் உறுதியான மனமும் இருந்தாலும், பெண்களை மதித்து பெண்மையை ரசிக்கும் ரசனை இருக்கும்.

“அப்பா நான் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கட்டுமா?” எனக் கேட்ட பார்த்திபனுக்கு வயது பதினைந்து. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

” என்ன பார்த்தி விளையாட்டு இது?” வரலட்சுமி தான் அவனிடம் கேள்வி கணையைத் தொடுத்தது. ஏனெனில் மாணிக்கம் தான் அந்த இரவு வேளையில் தன் கோபமெனும் சூவாளையால் மின்னி பளபளத்தது கொண்டிருந்தாரே!

“அத்த நான் விளையாடல. நிஜமாத்தா கேக்குறேன். எப்படியும் நான் பெரியவனானா எனக்கு கல்யாணம் பண்ணி வப்பிங்க தான. அது அந்த பொண்ணா இருக்கட்டுமே.” என்றான் வேகமாக.

” யாரு அது?” என்றார் மாணிக்கம் பற்களுக்கு இடையே வார்த்தையை மென்றபடி.

“பேரு துளசி… எங்கூட தான் படிக்கிறா. பாவம் அவளுக்கு புது துணி வாங்க கூட காசில்ல போல. கிழிச்சி போன நஞ்சி போன துணியதா போட்டுட்டு வர்றா. ஸ்காலர்ஷிப்ல படிக்கிறான்னும் அவளோட கிழிஞ்சி போன டிரெஸ்ஸ பாத்து பசங்க இன்னைக்கி கேலி பண்ணாங்க. அழுதிட்டா… எனக்கு கஷ்டமா இருந்தது.” எனச் சோகமாக சொல்ல,

“அதுக்கு?? “

“அப்பா டீக்கட வச்சிருக்காரு. அம்மா கிடையாது. கஷ்டப்படுற குடும்பம். டாக்டர் ஆகணும்னு ஆச அவளுக்கு.. அதான்…”

“அதான்….” எனக் குரல் ஏறிக் கொண்டே வந்தது அவருக்கு.

“கல்யாணம் பண்ணி எங்கூடவே வச்சிக்கிட்டா அவளுக்கு வேண்டியத நான் செஞ்சி தந்து டாக்டர் ஆக்குவேன்ல. ” என்றவனை இப்போதே குத்திவிட்டு ஜெயிலுக்கு சென்று விடுகிறேன் என்பதுபோல் தான் பார்த்தார் மாணிக்கம்.

அது ஒன்று மட்டுமல்ல. வருடத்திற்கு ஒன்று என்ற கணக்கில் யாரையாவது அழைத்து வந்து கல்யாணம் பண்ணிக்கட்டுமா! எனக் கேட்டு வந்து நிற்பது வாடிக்கையானது. அதனால் தான் இனி அவன் அப்படி வந்து நிற்க கூடாது எனப் பாரதியை பிடித்து கட்டி வைத்து விட்டார் போலும்.. இல்ல வேறு காரணம் இருக்குமோ!!

கருணை உள்ளம் கொண்ட அவனைப் பல பெண்கள் பயன்படுத்திக் கொண்டனர் என்று தான் சொல்ல வேண்டும். சில பெண்களிடம் ஏமாந்தும் இருக்கிறான். பணம் நகை பைக் என விலை உயர்ந்த பலவற்றை இழந்தாலும், இப்போது இழந்திருப்பது அதை விட அதிகம். இது வாழ்க்கை அல்லவா!!

தன் இளகிய மனத்தைப்பயன்படுத்திக் கொள்ளும் பெண்களிடம் கருணை காட்ட மாட்டான். ஒரு முறை தான் ஒரு பெண்ணிடம் ஏமாறுவான். ஆனால் பாரதியிடம் மட்டும் இரண்டாவது முறை.

ஏற்கனவே என்னை ஏமாற்றியவள் தானே. இப்போதும் என்னை ஏமாற்றி எங்கள் வீட்டிற்குள் நுழைய இந்த திருமணத்தை நிறுத்த நாடகம் ஆடியுள்ளாள். அவள் தான் காரணம். இன்று என் விஷா குட்டி கண்களில் நீர் சுரக்க அவள் தான் காரணம். யாருக்காக இதை செய்தாள்? யாரின் கையாள் அவள் என்று யோசிக்கும் போதே அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது.

“ச்ச… அவ ஒரு பிராடுன்னு தெரிஞ்சும் நீ அவ கூட அவ்ளோ க்ளோஸா பழகிருக்க கூடாது பார்த்திபா. இதுக்கு முன்னாடி எங்கிட்ட இருந்து எடுத்திட்டு போனத வட்டியோட வாங்கிட்டேன். ஆனா லைஃப்… என்னோட பியூச்சர்… ஃபேமிலில எனக்கு இருந்த கொஞ்சோண்டு மரியாத… அத எப்படி மீட்குறது.. அன்னைக்கும் அவளால தான் அசிங்கப்பட்டேன். இன்னைக்கும்.. ஷிட்.. ஷிட்… ஷிட்…” என ஓங்கி ஸ்டெரிங்கில் குத்த, அவனின் ஃபோன் ரிங்கானது..

“பார்த்தி எங்க இருக்க.. ” அவனின் நண்பன் வின்சென்ட்.

“உயிரோட தான் இருக்கேன்.” என்றான் கடுப்புடன்..

“அது தான் தெரியுமே. நீ உயிரோடதா இருப்ப எங்க உயிரதா எடுப்பன்னு.. சீக்கிரம் வீட்டுக்கு வா.. உனக்கு இது எத்தனாவது இரவுன்னு எங்களுக்கு சரியா தெரியல. எங்களுக்கு தெரிஞ்ச வரைக்கும் இது தான் முதல் இரவு.” என்றான் சந்ரு.

அக்கா கணவன்… சொந்த தாய் மாமன் மகன் என்றெல்லாம் பார்க்காது அவனை மானாவாரியாக காது கூசும் அளவுக்குக் கழுவி ஊற்ற, அத்தனையையும் ஓட்டைப் பாத்திரம் போல் ஒழுக விட்டபடி சிரித்தான் சந்ரு.

“உனக்கு வெட்கம், மானம், சூடு, சொர்ணன்னு எதுவும் கிடையாதா மாமா… “

“இருந்தா குடும்ப நடத்துறது கஷ்டமா இருக்கும் ஏழு மணி எஃப்எம் ஜோசியக்காரனா உள்ளூர் நாராயணன் சொன்னான். ” என்க, அவனை அடக்க ராம் ஒருவனால் மட்டுமே முடியும்.

ஏனெனில் ‘சகலைக்கி சகலை மரியாத குடுக்கணும்.. ஒன்னா ஒரே வீட்டுல பொண்ணெடுத்து வாக்க பட்டிருக்கோம். வீட்டுல இருக்குறவங்க தான் குடுக்க மாட்டேங்கிறாங்கன்னா… நாமும் அப்படியே இருந்து புகுந்த வீட்டுக்கு வாழ வந்த ஜீவன கஷ்டப்படுத்த கூடாது. அதுனால உன்னோட பேச்சுக்கு நான் மரியாத தர்றேன்.’ என்று சற்று அடங்கிப் போவான் சந்ரு.

“பார்த்திபா… தாத்தாக்கு முடியல.. பீபி சூட்டப் ஆகிருக்கு.. சீக்கிரம் வா.. ” என ரத்தின சுருக்கமாக சொல்லி வின்சென்ட் வைக்க, நண்பனின் பொறுமையான குரல் கேட்டு தான் சுற்றி முற்றி பார்த்தான்.

இருள் கவ்வ தொடங்கி முகில்கள் அனைத்தும் அந்தி வான சிவப்பில் தகதகவென எரியும் பஞ்சை போல் காட்சி தர, பார்த்திபன் காரை வீட்டிற்கு திரும்பினான்.

காரை நிறுத்தி விட்டு வேகமாக உள்ளே வந்தவனை, “அவ தான் காரணம். அவ இந்த வீட்டுக்கு வந்த சூனியம். அந்த சனியெங்கூட பேசிட்டு இருந்தப்ப தான் மாமாக்கு மாரடைப்பு வந்தது. அவள முதல்ல வெளிய தொரத்தி விடுங்க. இல்லன்னா நம்ம எல்லாரையும் கொன்னுடுவா.” என்று குற்றம் சாட்டும் சண்முகத்தின் குரல் தான் பார்த்திபனை வரவேற்றது.

தென்றல் வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!