Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அகம் கொய்த அனலி -14

    நாட்கள் நகர கலைக்கு கைக்காயம் கொஞ்சம் காய்ந்து இருந்தது. மற்ற காயங்கள் சிவப்பு தோல் கருப்பாய் மாறி இறுக்கிப் பிடிக்க அவ்விடமே அரிப்பெடுத்தது அவனுக்கு. கட்டைப் பிரித்து விட்டிருந்தனர்.

    தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் களிம்பை விடாமல் பூசவும் சொல்லி அனுப்பி இருந்தனர் மருத்துவர்கள்.



Advertisement

    பகலெல்லாம் இலக்கியா மகனோடு இருந்தாள். இரவில் கலையைப் பார்த்துக் கொண்டு இருக்க உறக்கம் என்பதே அவளுக்கு இல்லாமல் போயிருந்தது. அதனை அவனுமே கவனித்து தூங்க சொன்னாலும் இவள் அடிக்கடி இரவில் விழித்து காயத்தில் வரும் நீரை துடைத்து அடிக்கடி மருந்தை பூசி விட்டாள்.

Advertisement

Advertisement

    “கொஞ்சமாச்சும் தூங்குத்தா. ஏன் இப்படி பண்ணுத. மனசே ஆவலத்தா எனக்கு. இப்படி கெடந்தா ஒடம்பு என்னத்துக்கு ஆவும்”கடிந்து கொண்டான்.

Advertisement

    “நா பாத்துக்கிறேன்னாலும் கேட்க மாட்டேங்குறாடா”என்று தனம் கூட குறையாக கூறினார்.

    “முடியுது செய்றேன் இதில் என்ன இருக்கு. “என்று பிடிவாதமாக நின்றாள் பெண்.

    “சொன்னா கேட்க மாட்டத்தா நீயி”என்று கடிந்து கொண்டவருக்குமே அவள் கணவனை கவனிப்பதில் பெருமை தான் மிகுந்தது.

    கலை அவளது செயல்களை எல்லாம் கவனித்துக் கொண்டே தான் இருந்தான். இப்போதெல்லாம் அருகில் வரும் போதே நன்றாகவே தடுமாறுகிறாள். மனம் முழுவதும் போராட்டத்துடன் தான் இருக்கிறாள் என்று புரியத் தான் செய்தது அவனுக்கும. அந்த தடுமாற்றத்தில் அவனுக்கு மகிழ்ச்சி இருந்தாலும் மற்றோர் பக்கம் பரிதாபமாக இருந்தது அவளைப் பார்க்க.

    உணர்வுகளை அடக்கி மனதில் உடைந்து போகிறாளே என்ற வருத்தம் ஆதங்கம் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டது அவனுக்கு.

    உணவருந்தி முடிக்கவும் அவர்கள் அறைக்குள் சென்றிருக்க வழக்கம் போல மருந்தை எடுத்துக் கொண்டு வந்து விட்டாள்.

    பின்பக்கம் நின்று மருந்தை பூசி விட்டவளை முன் பக்கம் கொண்டு வந்து இழுத்து நிறுத்தினான்.

    “என்ன செல்வா”என்று புரியாமல் அவள் விழிக்க அவனோ சட்டென இழுத்து அணைத்து கொண்டான்.

    “சாரி இலா”என்றவனின் ஒரு கை மட்டும் இடையில் அழுத்தம் கொடுக்க அவளோ அவனது இந்த திடீர் மாற்றத்தில் திணறிப் போனாள்.

    “செல்வா‌… ப்ப்ச் என்ன பண்றீங்க”அவனை விலக்க முயன்றாள்.

    “இலா… இலா”என்றானே தவிர வேறெதுவும் சொல்ல முடியவில்லை அவனால். தன்னை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டவன் “நா நான் வெளியே படுத்துக்கிறேன்”என்றான் சமாளிக்க முடியாமல்.

    “செல்வா என்னாச்சு”அவனருகில் மீண்டும் வர

    “இல்லை இல்லை நீ வராத போ. போ ப்ளீஸ் போம்மா”என்றான் அவளை நெருங்க விடாமல்.

    அவனது நிலை அவளுக்கும் புரிய வருத்தமாக நின்றாள் இலக்கியா.

    “செல்வா”என்றதும் “சாரி”என்றபடி அங்கிருந்து வெளியேறி இருந்தான்.

    அதன் பிறகான நாட்களில் கணேசனையே மருந்திட அழைத்தான். இலக்கியாவை பக்கத்தில் விடவே மறுத்து ஏதேனும் காரணம் கூறி விலக்கி வைக்க அதுவே பத்து நாட்களாக தொடர்ந்தது.

    “என்னத்துக்கு ய்யா நீ மருந்து பூசி விடுத”என்று தனம் கணேசனை திட்ட

    “கூப்பிடுதான் வேற என்ன செய்ய சொல்றவ. ஏதோ சண்டை போல ரெண்டுக்கும்”என்றார் அவர் கிசுகிசுப்பாக.

    “இதுகளை ஒண்ணு சேர்த்து நா வம்சத்த வளர்த்த மாதிரி தான்.”என்று புலம்பிக் கொண்டார் அவர்.

    “ஏத்தா பயலை பாக்க போவோமா”என்று தனம் கேட்க

    “போகலாமே த்தை. என்னவோ ரெண்டு நாளா என் கிட்ட பேசிட்டே இருக்கான். நீங்க வந்தா சந்தோஷப்படுவான் த்தை. உங்க பையனையும் வேற கேட்டுட்டே இருக்கான்”என்றாள் உணவருந்தி கொண்டிருந்த கலையை பார்த்தபடி.

    “இன்னிக்கு போய் பாக்கலாம். காத்தனை ஜீப் எடுக்க சொல்லுத்தா”என்றான் அம்மாவிடம்.

    “அதுவும் செரித்தான்”என்று அனைவருமே சஞ்சயைப் பார்க்க கிளம்பி சென்றனர்.

    இவர்களைக் கண்டதுமே முகத்தில் ஒளிர்வு சஞ்சய்க்கு.

    “மாம்”என்று மெல்லிய குரலில் அழைத்து பின்னர் பின்னால் வந்த கலையைக் காணவும் அவன் முகத்தில் அப்படி ஒரு சோபை புன்னகை.

    “டாடி”என்றதும் அவ்வளவு மகிழ்ச்சி கலைச்செல்வன் முகத்தில்.

    “டாடி ஆர் யூ ஓகே.”என்று தடுமாறி கேட்க

    “நல்லாருக்கேன்யா. சாமி எப்படி இருக்கீங்க”அவனோடு அமர்ந்து பேசவும் மற்றவர்கள் சிறு சிரிப்புடன் பார்த்தனர் இருவரையும்.

    அவனுக்கான உணவு வரவும் கலையே ஊட்டி விட “டாடி நானும் உங்க கூட வீட்டுக்கு வரவா”என்று கேட்க இலக்கியா கண்கலங்கிப் போனாள்.

    “போகலாமே சஞ்சு டாக்டர் கிட்ட கேட்டுக்கிட்டு வர்றேன். நீ நான் அம்மா மூணு பேரும் சேர்ந்து இருப்போம்”என்றதும் சிரிப்புடன் தலையாட்டினான் பிள்ளை.

    “மாம்”என்று தன் பக்கத்தில் இலக்கியாவை அமர வைத்துக் கொண்டு “தாத்தா ஃபோட்டோ”என்று கேட்க கணேசன் அவ்வளவு மகிழ்ச்சி கொண்டார்.

    “இந்தா எடுக்கலாம் யா”என்றவர் “டோய் முத்து அவகளை ஃபோட்டோ புடிடா”என்றார் குதூகலமாக.

    இருவரையும் அருகில் வரும்படி கூறி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டான் பிள்ளை.

    தனம் கணேசனோடு பிறகு காத்தமுத்துவோடு என்று வகைவகையாக புகைப்படம் எடுத்து ஒரு கட்டத்தில் உறங்கி இருக்க மனதேயின்றி தான் அவனை விட்டுக் கிளம்பினர் அனைவரும்.

    வெரோனிகாவிடம் தலையசைத்து விட்டு கிளம்பி இருந்தாள் இலக்கியா.

    “என்ன ஆனாலும் சரி டாக்டர் கிட்ட கேட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போயிடணும்த்தா. புள்ளி ஆசைப்பட்டு கேட்டு இருக்கான்”என்று பேசியபடி வர

    “இனிமே கஷ்டம் செல்வா. இதுவே அவன் ஆசைப்பட்டான்னு தான் டாக்டர் அலவ் பண்ணி இருக்காங்க. இதுக்கும் அவனுக்கு இஞ்செக்ஷன் போட்டு இருக்காங்க”என்றாள் வேதனையுடன்.

    “வேற வழியே இல்லையா”என்று சங்கடமாய் அவன் கேட்க இல்லையென்று உதடு பிதுக்கினாள் அவள்.

    வீட்டிற்கு வந்த பிறகு பழையது மாதிரி தனித்தனியாக இருந்தனர் இருவரும்.

    தனம் மீண்டும் சங்கடமாய் இருவரையும் கவனித்தவர் வேறெதுவும் பேச இயலாமல் மருகினார். கணேசனிடம் அத்தனை புலம்பல்.

    “இதுக்கு நாம என்னத்தா செய்ய. ரெண்டும் ரெண்டு மூலையில் மொடங்குது. பெத்தவன் நான் பேச முடியுமா”என்றார் அவரும்.

    “பேசாம ரெண்டையும் விட்டுபோட்டு எங்காச்சும் கோவில் கொளமுனு போவோமா”என்று வினவ

    “ம்க்கும் உன் மவன் ஒத்துக்குவானா”என்றார் கணேசன்.

    “ஒத்துக்க வைப்போம்.”என்றிட

    “எந்த கோவிலுக்கு போக”

    “கும்பகோணம் தஞ்சாவூர் னு ஏதாச்சும் ஒண்ணுக்கு தூரமா போவோம். ரெண்டும் நல்லா பேசிக்கிட்டாலே செரிதாம்”என்று கூற கணேசனுக்கும் அதுவே சரியெனப்பட்டது.

    இரவு உணவை முடித்துக் கொண்டு வெரோனிக்காவிடம் பேசிவிட்டு மகனின் நலம் விசாரித்து விட்டு வந்தவள் தன்னைப் போல் தங்கள் அறைக்குள் சென்றாள்.

    கலைச்செல்வன் தனக்கான படுக்கையை விரிக்க முயல அவளே சரி செய்து கொடுக்கப் போக

    “நா பாத்துக்கிறேன் நீ போ இலா”என்றான்.

    “நான் பண்றேன்”என்று போர்வையை நன்றாக இழுத்து விரித்து விட்டாள்.

    பேசாமல் அவளை வேடிக்கை பார்த்தபடி நின்றான் .

    “தம்பி என்ன செய்யுறானாம்”

    “தூங்கிட்டு தான் இருக்கான். நான் வரும் போது தூங்க வச்சிட்டு வந்தேன் அப்படியே தூங்குவான் போல”என்றாள் தண்ணீர் பாட்டிலை வைத்தபடி.

    “ஹ்ம்ம்”என்றவன் “இங்கே இருக்க மாட்டியா இலா”என்று கேட்டுவிட சற்று தடுமாற்றம் அவளுள்.

    “அன்னைக்கு மாதிரி இனி எதுவும் நடக்காது இலா. இங்கேயே இரு. ஆத்தா கொஞ்சம் வருத்தமா பாக்குது. நான் வேணும்னா கீழே படுக்கையை போட்டுக்கிறேன்”என்று சொல்லி விட்டு தன்னிடத்தில் இருந்த தலையணையை எடுக்க முயல அதைப் பிடுங்கி அங்கேயே போட்டாள்.

    அவன் குழப்பமாக விழிக்கவும்”படுங்க வர்றேன்”என்று அறைக் கதவை சாத்தி விட்டு வந்தாள்.

    “என்ன உங்க பிரச்சினை”என்று அவள் கேட்க

    “ப்ப்ச் எதுவும் இல்லை”என்றான் சலிப்பாக.

    “அன்னைக்கு நடந்தது”

    “கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பண்ணிட்டேன். அதான் கோபமா இருக்கியே”மீண்டும் ஒரு சலிப்பு அவனிடம்.

    காயத்திற்கு மருந்திடப் போனவனைத் தடுத்து தானே பூசி விட்டாள். அவள் கை பட்டதும் அவன் முதுகில் மயிற்கூச்செறிய அவனது நிலை புரியத்தான் செய்தது அவளுக்கு.

    கையைக் கழுவி விட்டு வந்து நிற்கவும் பெருமூச்சுடன் அமைதியாக ஒருக்களித்து படுத்துக் கொண்டான். மனதில் சிறு சுணக்கம்.

    இருவருக்குமான இடைவெளி அதிகம் இருக்க அதனை பார்த்து விட்டு அவளைக் கண்ணெடுக்காமல் பார்க்க என்ன என்றாள் பார்வையாலேயே.

    சட்டென விழிகளை மூடிக் கொண்டு விட இலக்கியாவின் முகத்தில் தானாக புன்னகை மலர்ந்தது.

    “உங்களை முன்னவே பிடிக்கும் எனக்கு”என்றாள் சட்டென.

    “என்ன”என்று அவன் வியப்பாக பார்க்க

    “காலேஜ் படிக்கும் போதே பிடிக்கும்”என்று கூறவும்

    “நான் உன்னை பார்த்தது இல்லை நீயும் என்னை பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை அப்புறம் எப்படி பிடித்தம்”என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்க

    “ப்ப்ச் பிடிக்கும் அவ்வளவு தான் விடுங்க”என்று சமாளிக்க

    “ஹேய் இலா சொல்லேன் கேட்போம்”என்று அவளை உந்தவும்

    “ப்ளீஸ் கிண்டல் பண்ண கூடாது. ஒரு தடவை தான் சொல்வேன்”என்றாள் நாணம் மறைத்து

    “இல்லை இல்லை பண்ண மாட்டேன். சொல்லேன்”என்று ஆர்வமாகி விட்டான்.

    “சந்தியா காலேஜ் வரும் போது உங்களைப் பத்தி பேசாம அவளுக்கு பொழுதே போகாது. என் மாமா இப்படி அப்படி னு ஏதாவது சொல்லிட்டே இருப்பா. நான் அதைக் கேட்டு கேட்டு யார்டா இந்த மனுசன் இப்படி ஒரு ஆள் னு ஆச்சரியத்தில் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனா சந்தியா கிட்ட கேட்க ஒரு மாதிரி இருந்தது”

    “ஹ்ம்ம் அப்புறம்”வெகு சுலபமாக அவள் பேச்சைக் கேட்டான்.

    “அப்புறம் என்ன. உங்களை எப்படியாவது பார்க்கணும் னு ஆசைல அட்ரஸ் விசாரிச்சு வந்தா சார் இங்கே இல்லை. எங்கேயோ போயிருந்ததா சொன்னா. ப்ம்ச் ஏமாந்து போயிட்டேன். அப்புறம் ஒரு நாள் நானே எதிர்பார்க்காத நேரத்தில் உங்களைப் பார்த்தேன்”

    “அது எப்போ”

    “சந்தியாவை காலேஜ் ல விட வந்தீங்க ஒரு நாள். கொஞ்ச தூரத்தில் இருந்து தான் பார்த்தேன்”என்றவள் அப்படியே நிறுத்த

    “கிட்ட வந்து பேசி இருக்கலாமே”

    “நீங்க அதுக்குள்ள கிளம்பிட்டீங்க. ஆனா இந்த மீசை மட்டும் பளிச்சுன்னு தெரிஞ்சது. அப்போல இருந்தே இது மேல ஒரு க்ரஷ். நீங்க சந்தியாவை பாத்துக்கிறது எல்லாம் அவ சொல்லி கேட்டு இருக்கேன். ஒரு நாள் பேச்சுவாக்கில் சொன்னா உங்களுக்கு தான் அவளை மேரேஜ் பண்ணி வைப்பாங்க ஆனா எனக்கு மாமா மேல பாசம் தான் வருது கட்டிக்க ஆசை வரலைனு.”

    “ஹ்ம்ம் தெரியும்”என்றவனுக்குள் சந்தியாவின் நினைவலைகள்.

    “கொஞ்சமும் யோசிக்காமல் இப்படி ஒரு மாமா இருந்தா நான் கல்யாணம் பண்ணி இருப்பேன் னு சொல்லி”என்று அவள் முடிக்கும் முன்பே அவளை நெருங்கி இருந்தான் கலைச்செல்வன்.

    இருவரும் பிரிந்து விடலாம் என்று கேட்டதெல்லாம் பின்னுக்கு சென்றிருந்தது சமீபத்திய நாட்களில்.

    அவன் நெருங்கி வரவுமே சுதாரித்து எழுந்து கொண்டவள் “தூங்குங்க ப்ளீஸ்”என்றிருந்தாள் பதற்றமாக.

    “இலா”என்று அவளின் கையைப் பிடிக்கவும் இன்னும் பதற்றம் கூடியது அவளுக்கு.

    கையை விலக்கிக் கொண்டதும் எழுந்து விட்டாள்.

    இன்னும் மனம் படபடப்புடன் இருக்க அவள் செல்வதையே கவனித்து இருந்தவன் மனதில் ‘பிரிஞ்சிடணும்னு கேட்டதுக்கு அப்போ ஒத்துக்கிட்டு இப்போ நீ செய்ற காரியம் என்னடா கலை’என தன்னைத் தானே கண்டித்து கொண்டான்.

    பாழாய் போன உடலின் உணர்வுகள் இந்த சில நாள்களாக பேயாட்டம் போட்டது அவள் வேண்டும் என்று.

    மீண்டும் உள்ளே வந்தாள்.

    “இனிமே இப்படி நடக்காது இலா. மன்னிச்சிடு வரம்பு மீறிப் போறேன் எனக்கே தெரியுது”என்று தடுமாறினான் வருத்தமாக.

    “பரவாயில்லை”என்றவள் அமைதியாக இருக்க

    “நாம பிரிஞ்சுடலாம் இலா. இதுக்கு மேலேயும் நான் சரியா இருப்பேனான்னு தெரியாது. இது சரி வராது”என்றான் சங்கடமாக.

    “ஏன் திடீர்னு இப்படி நீங்க”என்று அவள் சொல்ல முடியாமல் தடுமாற

    “தெரியலை. ஆனா ப்ம்ச் அதை விடு. நான் சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்”என்றான் தீர்மானமாக.

    இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே இருக்க அவளே அவனை நெருங்கி இருந்தாள் இம்முறை.

    இன்னும் அவன் பார்வையை அகற்றாமல் இருக்க மனது சமன்படாமல் தவித்தது கலைச்செல்வனுக்கு.

   “இலா… எனக்கு “என்றவனுக்கு எதையும் கேட்க முடியாமல் அத்தனை தவிப்பு. பிரிந்து செல்ல சம்மதம் என்று கூறி விட்டு இந்த சில நாள்களாக அவனுள் ஏற்படும் மாற்றத்தை அவனாலேயே ஏற்க முடியவில்லை. நெருங்கிப் போகவும் பிடிக்கவில்லை என்று மறுத்து விட்டால் கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டால் என்று அத்தனை சிந்தனை ஓடியது அவனுக்கு.

    “யூ நீட் மீ ரைட்”என்றாள் பிசிறில்லாத குரலில்.

    அவன் புரியாமல் விழிக்க “நான் உங்களுக்கு தேவைப்படுறேன் இல்லையா”என்று தெளிவாக அவள் கேட்கவும் சட்டென விலகிப் போய் விட்டான்.

    “மன்னிச்சிடு த்தா”என்று கண்களை இறுக மூடிக் கொள்ள ஆழ்ந்த பெருமூச்சு இலக்கியாவினிடத்தில்.

    …. தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!