“மதுரை ரயில் நிலையத்தில் குண்டு வைக்க சதி திட்டமிட்ட தீவரவாதிகளுள் ஒருவர் தான் MPயின் புதல்வன் கதிரவன் என்று போலீசார் அவரை கைது செய்ததை அடுத்து தேனி முழுவதும் ஆங்காங்கே கலவரம் வெடித்துக் கிளம்பியது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் பீதியோடு இருந்து வருகின்றனர்.
Advertisement
MPயின் ஆதரவாளர்கள் கதிரவனை விடுதலை செய்யக்கோரி ஆக்ரோஷமாக அனைத்து இடத்திலும் போராட்டம் நடத்துவதோடு, பொதுமக்களையும் சேர்த்து துன்புறுத்தி வருகின்றனர்.
போலீசார் இவர்களை கட்டுக்குள் கொண்டு வர கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினாலும் நிலமையை இன்னும் சீர் செய்ய முடியவில்லை.
மண் வாசம் வீசும் தேனியில் இப்போது இரத்த வாசம் வீச வைத்துள்ள இந்த கலவரம் மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்று திரையில் ஓடிக் கொண்டிருந்த செய்தியைக் கேட்டு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார் காமாட்சி.
Advertisement
Advertisement
‘ அய்யோ இந்த மனுஷன் வேற ஊருல இல்லையே.. பொட்டைப்புள்ளைங்க ரெண்டும் தனியா போய் தொலைஞ்சப்போ தானா என் கொழுந்தனாரு இப்படி கண்டவனையும் கைது பண்ணி கலவரத்தை உண்டு பண்ணனும்.. இப்போ அவளுங்க வேற எங்க இருக்காளுங்கன்னு தெரியலையே.. யாருக்கு போனை போட்டாலும் எடுக்க மாட்டேங்குராளுக.. “ஆத்தா மாரியாத்தா எம்புள்ளைக எங்கிருந்தாலும் நீ தான் டி என் புள்ளைங்களுக்கு துணை.. பத்திரமா அவளுகளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துபுட்டா வர மாசி திருவிழாக்கு அக்னி சட்டி எடுத்து பூ மிதிக்கிறேன் உனக்கு” ‘ என்று கடவுளிடம் வேண்டுதலை வைத்து விட்டு தன் கணவருக்கும் மகளுக்கும் மாற்றி மாற்றி போன் செய்து ஓய்ந்து போனார் காமாட்சி.
சந்தன பாண்டியன் மலைகளில் இருப்பதால் அவருக்கு சிக்னல் சுத்தமாக இல்லாமல் போக, அவருக்கு தேனியில் என்ன நடக்கிறது என்று கூட அறிய வாய்ப்பில்லாமல் எந்த வித தொ(ல்)லை தொடர்புகளும் அன்றி மலைகளில் நிம்மதியாய் தன் பணியை கவனித்துக் கொண்டிருந்தார்.
Advertisement
இங்கு அஞ்சலி, கீதா இருவரின் போனும் அணைத்து வைக்கப்பட்டிருக்க, தாயுள்ளம் மிகவும் கலங்கிப் போய் என்ன செய்வதென தெரியாமல் தன் ஓரகத்தியை தேடி ஓடியது.
அங்கு மீனாட்சியும் அதே நிலைமையில் தான் இருக்க, காமட்சியைக் கண்டதும் வேகமாய் ஓடிச்சென்று அவர் கைகளைப் பற்றிக்கொண்டு, “அக்கா என்னக்கா கலவரம் அது இதுன்னு சொல்றாங்க.. இவளுங்க வேற போனே எடுக்க மாட்டேங்குறாங்க.. ரொம்ப பயமா இருக்கு கா” என்று அவர் புலம்ப,
” அதே தாண்டி எனக்கும்.. இந்த கழுதைங்க எங்குட்டு சுத்திக்கிட்டு இருக்குன்னு ஒன்னும் விளங்களையே.. டிவியை போட்டா வேற என்னென்னமோ சொல்லி நெஞ்சை பதற வைக்கிறான்.. இதுங்க போனை ஆஃப் பண்ணி நம்மளை கொல்ல பார்க்குதுங்க.. அஞ்சலி அப்பா வேற மலையில இருக்காரு.. மீனா உன் வீட்டுக்காரர் கிட்ட சொல்லி புள்ளைங்களை பத்திரமா கூட்டிட்டு வர சொல்லு டி.. எனக்கென்னமோ பயமாவே இருக்கு” என்று கவலையுடன் காமாட்சி கூற,
இயலாமையுடன் அவரை நோக்கிய மீனாட்சி, “அக்கா நியூஸ் பார்த்திங்க தானே அவர் தான் அந்த பையனை கைது செஞ்சிருக்காரு.. அதுனால அவர் இப்போ ரொம்ப பிஸியா இருக்காரு கா.. இதோட நானே பல முறை கூப்பிட்டு பார்த்துட்டேன் அவர் ஐஜி கூட மீட்டிங்ல இருக்காரு அப்படின்னு சொல்லிட்டு வச்சிருறாங்க.. அதான் அவங்ககிட்டயே பிள்ளைங்களை தேட சொல்லி சொல்லிருக்கேன்.. வந்திருவாங்க கா.. கவலைப்படாதீங்க.. அபி எங்க காலேஜ்க்கு போகலை தானா?” என்று அவர் அடுக,
“ஆமா ஏதோ இன்னைக்கு வயித்த வலின்னு லீவை போட்டு படுத்து தூங்கிட்டு கெடக்கா.. ஆனா இந்த அஞ்சலி தான் என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு டவுனுக்கு போறேன்னு கிளம்புனா.. இன்னைக்கு போயா இப்படி நடக்கோனும்.. அவுக அப்பாருக்கு மட்டும் இது தெரிஞ்சது என்னை கொன்னே போட்ருவாக” என்று காமாட்சி அங்கலாய்க்க, அவரை சமாதானப்படுத்தி அமரவைத்த மீனாட்சியின் மனதும் தன் மகளை எண்ணி வருத்தத்தில் தான் வாடியது.
இரு தாய்மார்களும் தத்தம் பிள்ளைகளை எண்ணி கவலையில் தேய்ந்து கொண்டிருக்க, இவர்களின் எண்ணத்தின் நாயகிகளோ அங்கு எதிரிகளை பந்தாடிக் கொண்டு இருந்தனர்.
அஜயை திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிய கீதாவை நோக்கி எங்கிருந்தோ வந்த ஒரு முரடன் கத்தியைக் கொண்டு அவளை கொல்ல வர, அதை கவனித்த அஜய் சட்டென்று அவள் கைகளைப் பற்றி பின்னால் இழுத்து காப்பாற்றி இருந்தான்.
கத்திக்கும் அவள் கழுத்துக்கும் நூலிழை அளவு இடைவெளியே இருந்த நிலையில் மயிரிழையில் உயிர் தப்பிய கீதாவிற்கு நடந்ததை கிரககிப்பதற்கே ஒரு நொடி பிடித்தது.
மற்ற இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க, அதை பயன்படுத்திக்கொண்ட அந்த முகமறியா முரடன் அவளை மீண்டும் தாக்க முயல,
அதைக் கண்ட அஜய் அவனை தடுப்பதற்காக ஒரு அடி முன்னேறிய சமயம் அந்த முரடன் “ஆ ஆஆ” என்கிற அலரலுடன் கீழே சுருண்டு விழுந்திருந்தான்.
‘ நாம தான் அடிக்கவே இல்லையே அப்பறம் எப்படி விழுந்தான்?? அவ்ளோ பவரா நமக்கு ‘ என்று அஜய் என்ன நடந்தது என்று புரியாமல் குழம்பிப் போய் பார்க்க, அவன் குழப்பத்திற்கு விடையாய் கீதா அங்கே கீழே கிடந்தவனின் சட்டைக்காலரைப் பற்றி, ” யாருடா உன்னை அனுப்புனா?? மரியாதையா சொல்லு இல்லை மண்டையை பொலந்துறுவேன்” என்று அவனை மிரட்ட அவனோ பதில் பேசக்கூட முடியாமல் வலியில் துடித்துக் கொண்டிருந்தான்.
‘ ஆத்தாடி அப்போ இவ தான் அடிச்சாளா? ‘ என்று ஒரு பத்து நொடி தன் மூளையை ரீவைண்ட் செய்து பார்த்தான்.
அந்த முரடன் ஆக்ரோஷமாய் கீதாவை தாக்க வந்ததைக் கண்டு அவனை தடுக்க அஜய் முன்னேறிய சமயம் அவனிற்கு முன் தோன்றிய கீதா தன் விரல்களை மடக்கி பெருவிரலை நடுவிரலுக்கும் மோதிரவிரலுக்கும் இடையில் விட்டு தன் மொத்த பலத்தையும் சேர்த்து அந்த முரடனின் அடி வயிற்றில் சரியாய் குத்தியிருக்க, அவன் வலியில் அப்படியே சரிந்து விழுந்தான்.
அதை நினைவடுக்குகளில் தேடி மீட்டிப் பார்த்த அஜய், ” என்ன அடி.. ரொம்ப கஷ்டம் தான் போலயே அஜய்.. கொஞ்சம் யோசிச்சு லவ் பண்ணிஇருக்கனுமோ? நாளைக்கு இவ கிட்ட இப்படி அடி வாங்கி படக்கூடாத இடத்துல பட்டுட்டா நம்மளோட நிலமை” என்று நினைத்து பார்த்து தலையை குலுக்கிக் கொண்டவன் நிகழ்காலத்திற்கு வர, அங்கு இன்னும் நான்கு முரட்டு தடியன்கள் இவர்களை நோக்கி கத்தியுடன் கத்திக்கொண்டே ஓடி வந்தனர்.
” ஹேய் வாங்க ஓடலாம்.. நிறைய பேர் வராங்க நம்மளால சமாளிக்க முடியாது.. வா அஞ்சலி .. உன் சிஸ்டரையும் கூப்பிடு போகலாம்” என்று அஸ்வத் அஞ்சலியின் கையைப் பற்றி இழுக்க,
அவன் கைகளில் இருந்து தன் கைகளை பிரித்துக் கொண்ட அஞ்சலியின் கண்களில் எப்போதும் இல்லாத ஒரு தீட்சண்யம், ” நீங்க அங்க போய் நில்லுங்க வந்துடுறேன்” என்று தீர்க்கமான குரலில் கூறியவள் தன் முந்தானையை இழுத்து சொருகிக் கொண்டு அந்த முரடன்களை நோக்கி முன்னேறினாள்.
அஸ்வத்தின் அழைப்புகள் யாவும் காற்றோடு போக, அஞ்சலியோ கீதாவின் கரங்களை பற்றிக்கொண்டு அவர்களை எதிர்நோக்கியிருக்க, அதை பார்த்திருந்த அஸ்வத் மற்றும் அஜய்க்கு தான் இரத்த அழுத்தம் ஏகத்திற்கும் எகிறிக் கொண்டிருந்தது.
‘ இத்தனை பேர் வெப்பன்சோட வராங்க ரெண்டு பொண்ணுங்க தனியா என்ன பண்ணிட முடியும் .. கொஞ்சம் கூட அறிவே இல்லை ‘ என்று நினைத்து ஆதங்கப்பட்டு கொண்டிருந்த நம் நாயகர்களின் எண்ணத்தை தவிடுபொடி ஆக்குவது போல் நம் நாயகிகள் அந்த நான்கு முரடர்களையும் நாலாபக்கமும் தெறித்து பறக்க விட்டிருந்தனர்.
கீதாவை தாக்க வந்த நான்கு பேரையும் கீதாவும் அஞ்சலியும் தாங்கள் கற்று வைத்திருந்த தற்காப்புக்கலைகள் மூலம் போட்டுத்தாக்கி விட்டிருந்தனர்.
அவர்களை அடித்து போட்டு விட்டு கீதாவின் கைகளை பற்றிய அஞ்சலி, ” இதற்கு மேல் இங்க நின்னா நம்மளால சமாளிக்க முடியாது.. வா கிளம்பலாம்” என்று அவளை இழுக்க,
கீதாவிற்குமே அதுதான் சரி என்று தோன்றியதால் அவளும் அங்கிருந்து கிளம்ப, ஆண்கள் இருவரும் சற்றும் அசையாமல் தங்களின் இணைகள் இதுவரை செய்த வீர தீர சாகசங்களை கண்டு அதிர்ச்சியில் மிரண்டு போய் நின்றிருந்தனர்.