சென்னையில் இருக்கும் அதில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. அங்கு தான் நாம் நம் நாயகியை சந்திக்க உள்ளோம். கொஞ்ச பில்டப்போட தான் நம்ம ஹீரோயினுக்கு இன்ரோ கொடுக்கப் போறோம். அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க…
புற்களைக் கரடி சிங்கம் எனப் பல்வேறு உருவங்களாக செதுக்கி வைத்திருக்க, அதன் அருகில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தது அந்த குடும்பம்.
Advertisement
Advertisement
“ப்பா… ப்பா… இங்க நின்னு ஒன்னு. ப்பா… அங்க போகலாம்.” எனக் கையில் ஐஸ்கிரீமை வைத்துக் கொண்டு சிறுமி ஒருத்தி போஸ் கொடுக்க, மகளை ஈன்றவர்களோ பூரிப்புடன் மகளின் எழிலை தங்களின் அலைபேசியில் பதிவு செய்து கொண்டிருந்தனர்.
“ஏங்க இந்த புல்லு மேல உக்காந்து எடுக்கலாம்.” எனக் குடும்பத்தலைவி மொழிய, அதை ஆமோதித்து மூவரும் புற்தரையில் அமர்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க,
Advertisement
மகள், “ப்பா cap போட்டு எடுங்கலாம்… சூப்பரா இருக்கும்…” என்றாள்.
“கேப்பா!! அதுக்கு நான் எங்க போறது?”
“கார்ல இருக்குங்க. எடுத்திட்டு தான் வந்தா. நீங்க இருங்க நான் போய் எடுத்திட்டு வர்றேன். ” என மனைவி சொல்ல, சிறிது நேரத்திலேயே படபடப்புடன் ஃபோன் செய்தார் அவர்.
“என்ன ஓப்பனாகுதா? டேஸ் போர்டுல காசு இருக்கா பாரு. ” எனப் பயந்து போனவர் குழந்தையைக் கையில் தூக்கி கொண்டு, கார் நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு ஓடிச் சென்றார்.
“என்னங்க சொல்றீங்க… காசா!! அப்படி எதுவும் இல்லையேங்க… எவ்ளோ வச்சிருந்தீங்க?”
“ஒரு லட்சம் வைச்சிருந்தேன்டி.”
” ஒரு லட்சமா!! இல்லையே இங்க… ஐய்யோ எனக்கு பயம்மா இருக்கு. சீக்கிரம் வாங்கங்க. ” என்று அழ,
“இதோ வந்திட்டு தான் இருக்கேன். லாக் பண்ணேன்னே டி நான். ” என வேக நடையுடன் வந்தவர் கண்டது திறந்து கிடந்த காரையும், காலியாக இருந்த டேஸ் போர்டையும் தான்.
“ஏன் லாக் பண்ணாம வந்தீங்க? கார யாராது எடுத்திட்டு போயிருந்தா என்ன பண்ணிருப்பிங்க? இப்ப என்ன பண்ண?” என மனைவி புலம்ப,
“இருடி யாரையாது உதவிக்கு கூப்பிடுறேன்.” என ஃபோனை எடுத்தார்.
“அண்ணாத்த… இன்னா நடந்துச்சின்னு நீ இப்ப மெர்சலாகின்னு நிக்கிற? நாந்தா ஓப்பன் பண்ணேன். உன் பைசா என் ஜோப்ல சேஃப்டியா கீது. ” என்றபடி நடந்து வந்தாள் பாரதி.
க்ரே கலர் என்று சொல்லப்படும் சாம்பல் நிறத்தில் முழுக்கை சட்டை, இரண்டையுமே சற்று மடித்து விட்டிருந்தாள் அவள். இருபத்தி மூன்று வயதாகும் பாவையவள் ஆடையில் இருந்த க்ரீஸ் கரையே சொல்லும் அவள் ஒரு மெக்கானிக் என்று.
ஆம்… நம் மணி பாரதி கார் மெக்கானிக். சொந்தமாக ஒரு ஏரியாவில் கடை நிறுவி பத்து பேருக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி அவள்.
“ஏய் நீ தான் கார, சாவி இல்லாம திறந்தியா? எவ்ளோ தைரியம் உனக்கு. கார் திறந்ததோட மட்டுமில்லாம தைரியமா வந்து முன்னாடி நின்னு சொல்ற. யாரு டி நீ?” என்று குரல் கொடுத்தாள் மனைவி.
“என்ன அண்ணாத்த அக்காச்சி கேக்குது பதில் சொல்லவா… இல்ல வோணாமா… “
“ம்ச்… பாரதி யாரக்கேட்டு கார திறந்த… உள்ள இருந்து காச எடுத்தியா? ” எனக் கடுப்புடன் கேட்டான் கணவன்.
“கடல சாப்பிடுறியா? வோண்டாமா.. ரைட்டு விடு… அதாகப்பட்ட… நேஸ்னல் நைனா காந்தியே டூப்பிளிகேட்டா வந்து உன்னாண்ட குந்தின்னிட்டிருக்கும் போது, அவருக்கு பிடிச்ச கடலையவா நீ லைக் பண்ணப்போற.
குடுக்க வேண்டிய காச நீ குடுக்காம எத்தினி தபா என்னை டபாய்ச்சிருப்ப. அதுக்கு ஈடா இத்த நான் எடுத்துக்கீறேன். மீதி பைசாவ அப்பால செட்டில் பண்ணு. ஒரு வாரம் தே டயம். அப்றமும் நீ துட்ட கண்ணுல காட்டாம, தராங்காட்டி இழுத்தடிச்ச… மவனே கார்ல கீற டயருல இருந்து இன்ஜீன் வர அல்லா பார்ட்ஸ்ஸையும் ஒன்னொன்னா உருவிக்கின்னு போய்க்கிட்டே இருப்பேன்.
என்ன நினைச்சின்னு கீற நீ… ம்.. வந்து வந்து துட்ட உன்னாண்ட கேட்டுக்கின்னே திரியா நான் என்ன பிச்சையா கேக்கறேன். கார நீ சர்வீஸ் விடுறப்பவே சொன்னேன். பாரதியாண்ட பைசா விசயத்துல கன் மாதிரி இருக்கோணும்னு. அப்ப மந்திரிச்சி விட்ட கோழியாட்டம் அல்லா பக்கமும் தலய தலய சிலுப்பிக்கின்னு போன.
அப்பால துட்ட கேட்டா! பாக்குற நேரமெல்லாம் தலைமறைவா சுத்துற. இன்னா பண்ணறது? சொல்லு பாப்பா… துட்டு முக்கியம் இல்லையா. அது இல்லாங்காட்டி உலகமே இல்லையாம். அத்து கடவுளுக்கு சமமாம். அந்த தெய்வத்த உங்கப்பாவே வச்சிக்கிலாம்னு பாத்தா… சும்மா விட்டுடுவேனா என்ன… சரிதான பாப்பா நான் சொல்றது.. உனக்கு ஓணுமா… ” எனக் குழந்தையிடம் பொட்டலத்தை நீட்ட, அது திரு திருவென முழித்தது.
“இப்ப என்னாத்துக்கு நீ பல்லிய பாத்த கரப்பாபூச்சியாட்டம் மூஞ்ச வச்சிருக்க. நானும் உங்க நைனாவும் தோஸ்த்… தோஸ்த்துன்னா இன்னான்னு தெரியுமா… நெருங்கிய நண்பர்கள். உங்கப்பா சினேகிதி தான்.. ” என்று புன்னகைக்க,
“ஏய் யாருடி நீ? என்னென்னமோ பேசுற.. ஏங்க அவள பேச விட்டு நீங்களும் பாத்திட்டு இருக்கிங்க.. யாருங்க இது?”
“அண்ணாத்த நீயா சொல்றியா? நான் சொல்லவா?”
“பாரதி நான் ரெண்டு நாள்ல உன்னோட காச குடுத்திடுறேன். இப்ப பிரச்சன பண்ணாம இங்கருந்து போய்டு. ஃபேமிலியோட வந்திருக்கேன்.” எனக் கெஞ்ச,
“இத்து…” என அவனின் பணத்தை காட்ட, அவனுக்கு மனமே இல்லை என்றாலும் அவளுக்குத் தரவேண்டிய பணத்திற்காக இதை தந்ததாக எண்ணி காரில் ஏற, அவனின் மனைவி அவனை முறைத்தபடியே ஏறி அமர்ந்தார். கார் ஓடத் தொடங்கும் முன்,
“அண்ணாத்தா… இத்த புடின்னு சொல்ல வந்தேன்… அதுங்குள்ள ஓடுற… நானும் மனுஷிதா… நீ குடும்பமா இருக்குறத நான் கெடுக்க வரல. எனக்கு சேர வேண்டியத சீக்கிரம் குடுன்னு சொல்லிட்டு போகத்தா வந்தேன். ” எனப் பணத்தை நீட்டினாள்.
“ஆனா பாரதி நான் உனக்கு தரவேண்டிய எழுபதாயித்துல ஒரு ரூபா கூட குடுக்கலயே. இத வச்சிக்க. “
“நீ யாரு அண்ணாத்தா எனக்கு? கஸ்டமரு… என்னாண்ட கார சர்வீஸ் குடுக்குறவங்க கிட்ட கட்ட பஞ்சாயத்து பண்ணி காச புடுங்குற அளவுக்கு நான் வில்லி கிடையாது. நீ வாழணும்.. அப்ப தான் உ பேர சொல்லி நான் வாழ முடியும். நம்ம எல்லாரும் வாழணும்.. அதுவும் ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரிச்சி.
நீ உம் பொண்டாட்டி அம்மாக்கு ஆப்பரேஷன்னு, அதுக்கு உடனே போவ காரு வேணும்னு சொன்னதுனால தான் ஒத்த ரூபா கூட வாங்காம ராத்திரியோட ராத்திரியா உடனே பண்ணி குடுத்தேன். அத்த மனசுல வச்சிட்டு காச அப்றமா குடு. இப்ப குடும்பமா போய் லீவ அனுபவி. வரட்டா.. பாப்பா ஐஸ்க்ரீம் சாப்பிடுவ?” என்க, குழந்தை தந்தையை பார்த்தது. அவன் போ எனக் கண் அசைக்க, பாரதியுடன் இறங்கி சென்ற சிறுமி, திரும்பி வரும் போது கை நிறைய தின்பண்டகளை வந்திருந்தாள்.
அது தான் பாரதி. பிறரின் நிலை உணர்ந்து இரக்கம் காட்டும் குணம் உண்டு. அதே நேரம் தன்னுடைய எதையும் விட்டு கொடுக்க மாட்டாள். கண்டிப்பு நிறைந்த நியாயக்காரி. பார்க்க கொஞ்சம் ரக்கடான பொண்ணு தான். ஆனால் பழகினால் அவளைப் போல் சாஃப்ட்டான பொண்ணு யாருமே கிடையாதுன்னா சொல்லுவிங்க.
உண்மையில் அவளின் பெயர் மணிமேகலை. தாய், தந்தை இருவரும் பார்த்து பார்த்து வைத்தது. ஆனால் அந்தப் பெயர் பிடிக்காது போய்விட, எப்பொழுதோ ரேடியோவில் ஒலிபரப்பான பாரதியின் புதுமை பெண் கவிதைகளைக் கேட்டு, தன் பெயரை மணிபாரதி என்று மாற்றிக் கொண்டாள்.
யாராவது அவளை மேகலை மேகலா என்று அழைத்தாள் அவளுக்கு வரும் கோபத்திற்கு அளவே இல்லை. எரிமலையாய் வெடிப்பாள் அவள். அது ஏன் என்று பின் பார்க்கலாம்.
தீப் பெட்டிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போல் இருந்தது அந்த அடுக்குமாடி குடியிருப்பு. அது ஒரு ஹவுசிங் போர்ட்டு. வட சென்னையில் அமைந்திருக்கும் அது எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும் பகுதி.
அடித்து பிடித்து மீன் கடைக்குச் சென்று தன்னை ஏமாற்ற பாத்த மீன்காரியுடன் குடுமிப்பிடி சண்டை போடாத குறையாக வவ்வா மீனையும் நெத்திலி மீனையும் வாங்கி கொண்டு வீட்டு வந்தாள் பாரதி.
வவ்வாவிற்கு தான் அவள் காசு கொடுத்தாள். அந்த மீன்விற்கும் பெண், “இத்துணுண்டு வாங்கின்னி இன்னா பண்ணப்போற? நாஸ்தாக்கு வெளில டீயும் பன்னும்மா வாங்கி குடிக்கிறவ நைட்டுக்கு மட்டும் தான் சோறு பொங்குற. ஒத்த வேளை கஞ்சி… அத்த நல்லா சமச்சி துண்ணாத்தா என்னவாம். இந்தா கொண்டுக்கின்னு போ… ” எனக் கூறு கட்டி வைத்திருந்த நெத்திலி மீன் கொடுத்தார்.
“எங்கக்காக்கு எம்மா பெரிய மனசு. ஓசிக்கி செத்த மீனா தள்ளி விடுது.” எனப் பாரதி கேலி செய்ய,
“அடியே… செத்தாத்தா அத்த நீ குலம்புல போடுவ. இல்லாங்காட்டி தண்ணீத்தொட்டிக்குள்ள போட்டு வளப்ப. வளவளன்னு பேசாம போய் கொலம்பு வச்சி குடி… ஆமா உ தங்கச்சி எங்க? இன்னைக்கி ஸ்க்கூலு லீவு தான. காலைல இருந்து தெருவாண்ட விளையாடல?”
“அது எங்காத்தா கூட கேன்டின்ல கீது. நன்றிக்கோ உ செத்த மீனுக்கு. அடுத்த தபா வரையில நல்ல மீனா விய்யி..” என்றவள் அந்தப் பெண்ணின் கைக்குச் சிக்காது வீடு திரும்பினாள்.
மொத்தம் ஆறு அடுக்குகள் கொண்ட குடியிருப்பின் படிகளில் ஏறி சென்றால் ஆறாவது தளத்தில் தான் அவளின் வீடு.
எதிரில் ஒருவர் வந்தால், விலகி நடந்தாலும் மற்றவர் மீது உரசாமல் செல்லவே முடியாது எனும் அளவுக்கு மிகவும் சிறியது அந்தப் படிக்கட்டு. படிக்கட்டு மட்டுமல்ல வீடும் மிகச் சிறியது. ஒரே ஒரு அறை மட்டும் தான். ஒரு சிறிய மண்ணெண்ணெய் அடுப்பு. நான்கோ ஐந்து பாத்திரங்கள் இருக்கும்.
தண்ணீர் குழாய்க்கு அருகில் நான்கு பக்கமும் சேலை கொண்டு மூடி அதற்கு குளியலறை என்று பெயரை வைத்துள்ளனர். ஒரு செல்ஃபில் காலண்டர் அட்டைக்கு முன் ஊது பத்தி கொழுத்திப் பூஜை அறையாக்கி விட்டனர்.
உடைகளை வைக்க மட்டும் சிறிய தகர பீரோ. அதன் ஒரு கால் உடைந்து விட்டதன் அடையாளமாக செங்கற்களின் மீது தன் மொத்த பாரத்தையும் வைத்திருந்தது. வீட்டைப் பூட்டும் கதவு கூட, சற்று பலமாக பிடித்து இழுத்தால் கையோடு வந்து விடும். அந்த அளவுக்கு தான் இருந்தது அந்த வீடு.
வேகமாக மண்ணெண்ணெய் ஸ்டவ்வைப் பற்ற வைத்து குழம்பிற்கு தேவையான வெங்காயம் தக்காளியைத் தட்டி உள்ளே போட்டு, மிளகாய் தூளைத் தூவி உப்பு போட்டாள். அது கொதிக்கும் சமயத்தில் கழுவி வைத்த மீனை நீந்த விட்டு, எண்ணை ஊற்றி சற்று நேரத்திற்கெல்லாம் இறக்கியவள், அங்கிருந்த ஜன்னலில் மாட்டியிருந்த கூடையைக் கயிறு கட்டி கீழே இறக்கி,
” அண்ணாத்த.. தோச மாவ போட்டு விடு.. ” எனக் கத்த, கூடையில் மாவு பாக்கெட்டை வைத்து அனுப்பினார் கடைக்காரன்.
“ஸ்கூலு லீவு விட்டாலும் தான் விட்டானுங்க. அந்த ரெண்டு நாளும் ஒத்த புக்க கூட கைல எடுக்க மாட்டுங்கிது. இது படிச்சி என்னத்த செய்ய போது.” எனப் புலம்பிய படியே எடுத்து வைக்க, அதில் ஒரு காகிதத்தில் வண்ணங்களால் எதையோ கிறுக்கியிருந்தாள் அவளின் தங்கை பூர்ணிமா…
“என்னத்த இழுவி வச்சிருக்கா?” என்று முணுமுணுத்தபடி அதைக் கண்டவள் ஆத்திரம் மேலோங்க, அந்தக் காகிதத்தைக் கசக்கி இன்னும் அணைக்கப்படாது எரிந்து கொண்டிருந்த மண்ணெண்ணெய் அடுப்பின் தீக்குள் தூக்கி வீசினாள்.
காகிதம் கருகுவதைக் காண்கையில் மனத்தில் சிறு மகிழ்ச்சி. அது சாட் போல் கடினமாக இருந்ததால் ஒரு பக்கம் அப்போது தான் எரிந்து கொண்டிருந்தது.
“ஆ.. ஐய்யோ… அக்கா நீ என்ன பண்ணிட்ட?” எனப் பதறி போய் அந்தக் காகிதத்தை எடுத்து தீயை அணைத்தாள் பூர்ணிமா.
” பூர்ணி என்ன பண்ற? கையெல்லாம் சுட்டுடும். ” எனப் பாரதி தடுக்க, பூரணி எடுத்து அணைத்து அந்த காகிதத்தில் இருந்ததைப் பார்த்து கண்கலங்கினாள்.
” ஏய் கிறுக்கு… தீக்குள்ள போய் கைய விடுற… அறிவு கிடையாதா உனக்கு…” எனத் தங்கையின் கையைப் பற்றி பரிவுடன் கேட்டாள் பாரதி.
“உனக்கு மொத இருக்கா? இது எவ்ளோ முக்கியமானதுன்னு தெரியுமா?” எனக் கண்ணீர் விட,
“மூஞ்சியே பாக்கலன்னாலும் உனக்கு அந்தாளு மேல ஒரு இது இருக்கில்ல.” என அழும் தங்கையைச் சமாதானம் செய்யாது ஒருவிதமான குரலில் சொல்ல,
“நீ யார் சொல்ற?”
“உனக்கு உயிர் குடுத்து உலகத்துக்கு கொண்டு வந்தவன சொல்றேன். அவனத்தான வரைஞ்சி வச்சிருந்த. அத்த தூக்கி போட்டேன்னு தான அழுவுற?”
“ச்சீ… எவென்னே தெரியாத ஆளுக்காக நான் ஏன் என்னோட கண்ணீர சிந்தணும். இது ஸ்கூல்ல குடுத்த ப்ராஜெக்ட்டு. குடும்பத்துல இருக்குறவங்கள வரைஞ்சிட்டு வர சொன்னாங்க. முதல்ல நான் உன்னையும் அம்மையையும் தான் வரைஞ்சி எடுத்திட்டு போனேன். ஆனா டீச்சர் அப்பான்னு ஒருத்தெ பக்கத்துல இருந்தே ஆகணும். அது தான் குடும்பம்னு சொல்லி, மறுபடியும் வரைஞ்சிட்டு வான்னு அனுப்பிட்டா…
எனக்கு அந்தாள வரைய பிடிக்கல. அதா பக்கத்து வீட்டு ராணிக்காட்ட குடுத்தேன். அது என்னடான்னா வரைஞ்சி குடுக்க பத்து ரூபா வாங்கிடுச்சி. நீ பாக்கெட்டு மணின்னு டெய்லி தர்ற ஒத்த ஒத்த ரூபாயயும், சேத்து வச்சி வரைஞ்சி வாங்குனேன். நீ என்னடான்னா மொத்தமா பொசுக்கிட்ட. மறுபடியும் வரைய நான் காசுக்கு எங்க போக. நாளைக்கி இத குடுக்கணும். இல்லாட்டி திட்டுவா டீச்சரு.” எனச் சிணுங்க, புன்னகை வந்தது பாரதிக்கு தங்கையின் சிணுங்களைப் பார்த்து.
“அதுனால என்ன! டீச்சர் திட்டுனா வாங்கிட்டு போ…”
“ஹா… போ வேண்டியது தான். உனக்கு என்ன தெரியும் என் கஷ்டம். தோஸ்துங்க முன்னாடி அசிங்கமா போய்டும். அந்த சிடுமூஞ்சி யோகா முன்னாடி என்னைத் திட்டு வாங்க சொல்றியா. மரியாதையா நீயே வரைஞ்சி தான். அந்தாளு மூஞ்சிய.. “
“ச்சீ… அவன போய் நான் வரையுறதா… நான் வேண்ணா காசு தர்றேன். ராணிட்டயே வரைய குடுத்திடு. வெரசா குடுத்திட்டு வா சாப்பிட தோச ஊத்துறேன். ” என அடுப்படிக்குள் செல்ல,
“மீன் குழம்பா… வரும் போது வாசம் இழுத்துச்சி. இதே உடனே வந்திடுறேன். ” என ஓடிச் சென்றாள் அந்தச் சிறுமி.
ம் சிறுமி தான்… பூர்ணிமா… தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறாள். அந்த ஏரியாவில் பெரிய பள்ளியில் வேனில் செல்லும் ஒரே ஆள் அவள் தான். LKG, UKG போன்ற படிப்புகளையும் படித்ததும் அவள் தான்.
பாரதியின் படிப்பு ஐந்தோடு நின்று விட்டது. அதைத் தொடருவதற்கான வாய்ப்புகள் இல்லாது போய்விட்டது. ஆனால் தன் தங்கையைப் படிக்க வைக்க வேண்டும் என்று அந்த ஏரியாவின் மிகப் பெரிய ஸ்கூலில் சேர்த்து விட்டுள்ளாள். செலவு சற்று அதிகம் தான்.
ஆனாலும் சம்பாதிப்பது எதற்கு செலவு செய்யத்தானே. ஆடம்பத்துக்குச் செலவு செய்ய யோசிக்கலாம். ஆனால் அத்தியாவசியத்திற்கு கூடாது அல்லவா.
பின் ஏன் அந்த ஓட்டை வீட்டில் இருக்கிறாள் என்று கேட்டால்… இல்லை. இந்த வீட்டை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் காலி செய்து விடுவாள். ஏனெனில் பாரதி ஒரு புதிய வீடு வாங்கியுள்ளாள். சில வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்ததும் அங்கு சென்று விடுவாள்.
தாயுடன் முதன் முதலில் வந்து தங்கிய இடம் இது. தங்களுக்கு அடைக்கலாம் கொடுத்து பாதுக்காப்பைக் கொடுத்த இதை பிரிய மனமில்லை தான். ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் உன் தலையில் விழுந்து, உன் உயிரை குடிப்பேன் என்று சொல்லி தலைக்கு மேல் விழும் சுவரைக் காண்கையில் வீடு அத்தியாவசியமாக பட்டது. அத்தோடு தன் உழைப்பில் தான் எழுப்பிய அரண்மனையில், தன் தாயை ராணியாக்கி பார்ப்பது அவளின் பல நாள் கனவு.. ம்… அது விரைவில் நிறைவேற உள்ளது.
இதுவரை கஷ்டங்களை மட்டுமே கண்டு, முதுகொடிய வேலை செய்த தாயை, வேலைக்கு செல்ல விடாது பொறுப்பாய்ப் பார்த்துக் கொள்ள வேண்டி, அந்த இல்லத்தை வாங்கியுள்ளாள் அவள். அந்த வீடு அவளின் லட்சியம் என்றும் சொல்லலாம்.
“பூரணி, அம்ம எங்க?” எனக் கேட்டாள் பாரதி, வந்து அமர்ந்த தங்கையிடம்.
” வருது. இன்னைக்கும் அந்த பர்வதம்மா அம்மாவ பிடிச்சி திட்டுச்சி. அது வாய்ல கொல்லிக்கட்டைய சொருகிடலாம்னு எடுத்தே.” என ஆவேசமாக சொல்ல,
“பூரணி, உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல. உன்ன படிக்க வைக்கிறது இந்த மாதிரி ஆளுங்க கிட்ட சண்ட போட கிடையாது. இந்த பஜாரி வாழ்க்கை எனக்கும் அம்மாக்கும் மட்டும் போது. நீ யார் கூடவும் சண்ட செய்ய போவாத.” என அறிவுரை வழங்கினாள்.
“நான் போல. ஆனா நம்ம ரத்தத்த சுரண்டி தின்னா கூட ஏன்னு கேக்க கூடாதுன்னு சொல்றியா? அந்த பொம்பள அங்க வேலை பாக்குற எல்லாரோட சம்பளத்துலயும் நூறு ரூபாய ஏமாத்தி புடுங்குது. எதுக்கு தரணும்னு கேட்டா… காது குடுத்து கேக்க முடியாத அளவுக்கு திட்டுது.” என்று கத்திக் கொண்டிருந்தவளின் பேச்சு திடீரென நின்று போனது.