Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தென்றல் – 13

“என்னடி சத்தம் அதிகமாக இருக்கு…‌ சில்லுவண்டு…. எதுக்கு நீ துள்ளிட்டு கிடக்க. ” எனக் கேட்டது ரத்னாவிற்கு பின்னால் வந்த சொர்ணத்தின் குரல்.

தூள் சொர்ணாக்கா போல் இதுவும் ‌ரவுடி தான். ஆனால் ரத்னாவிற்கும் அவளது இரு குழந்தைகளுக்கும் இவர் தான் அரண்.. இந்தத் தீப்பெட்டி பூத் பங்களாவின் உரிமையாளர்.



Advertisement

இடைவரை வளர்ந்த பாரதியையும், கையில் ஆறு மாத குழந்தையாக பூர்ணியையும் தூக்கிக் கொண்டு, ரத்னா யாரையும் தெரியாத ஊரான சென்னைக்கு வந்து பத்தாண்டுகளுக்கு மேல் முடிந்து விட்டது. அவர்களின் பத்தாண்டு கால வாழ்க்கைக்கு வழி காட்டியவர் சொர்ணம். அவரின் தயவு இல்லையெனில் இன்னேரம் மூவரும் அனாதை பிணங்களாக சாலையோரத்தில் கிடந்திருப்பர்.

“என்னடி சத்தத்தையே காணும்?” எனப் பூர்ணியை பார்த்து சொர்ணம் தன் வெண்கல தொண்டையைக் திறக்க,

Advertisement

Advertisement

“உங்க கிட்ட சொல்லிட்டா மட்டும் என்ன ஆகிடப் போது. நீங்களும் அவங்களும் கூட்டுதான.” எனதீ துடுக்குடன் பேசினாள் பூர்ணி.‌

“ஏய்… சும்மா கெட…

Advertisement

சாப்பிடுறிங்களாம்மா… மீன் குழம்பு வச்சேன்… ” என்றாள் பாரதி.

“அந்த வாசத்த பிடிச்சிட்டு தான் சட்டிய தூக்கிட்டிட்டு வந்தேன். என்னைக்கி புது வீட்டுக்கு குடி போகப்போற.” என்றவர் தரையில் அமர்ந்து பாரதி அடுக்கி வைத்திருந்த தோசைகளை எடுத்து உண்ணத் தொடங்கினார். பூர்ணி வேகமாக தனக்கு மிஞ்சாதோ என்ற பயத்தில் தட்டுடன் அமர்ந்து சொர்ணத்துடன் போட்டி போட்டு உண்ணத் தொடங்கினாள். தங்கையின் தலையில் செல்லமாக தட்டியவள்,

“இன்னும் வேலை முடியலம்மா… ஆறு மாசம் ஆகலாம்…” என்றவள் திரும்பி அன்னையை பார்த்தாள். ரத்னா எப்பொழுதும் போல் சாமி படத்திற்கு முன் இன்றைக்கான கூலியை வைத்துவிட்டு, பாயை விரித்து படுக்கச் சென்று விட்டார்.

“ம்மா… சாப்பிட்டுட்டு படும்மா…” என்று குரல் கொடுத்தாள் பாரதி. ஆனால், ரத்னாவோ சிறு தலை அசைப்புடன் அதை மறுத்து படுக்கையில் கண்களை மூடிக் கொண்டார்.

“க்கும்… உங்காத்தா என்னைக்கி சாப்பாட்டை ஒழுங்கா சாப்பிட்டுருக்கா. இன்னைக்கா நேத்தா பாக்குறேன். பல வர்ஷமா இப்படி ஊமையாத்தா திரியுறா. எல்லாம் எப்ப மாறுமோ… நான் வாரேண்டியம்மா. நாளைக்கி காத்தால வாடகை பணத்த குடுத்திட்டு, என் மகன கார சரி பண்ணி வைச்சிட்டு போ. ஸ்டாட் ஆகும் போது சத்தம் அதிகமாக வருதாம். அத என்னனென்னு பாத்திடு. ஊருக்கு போகணும்னு சொன்னான். வரட்டா… ” என்றபடி குழம்புச் சட்டியைத் தூக்கிச் சென்றார் அவர்.

‘நல்லவேளை நான் சாப்பாட்ட முடிச்சிட்டேன்.’ இது பூர்ணியின் மைண்ட் வாய்ஸ்.

“அக்கா உனக்கு இல்லாம அது தூக்கிட்டு போய்டுச்சி. நீ என்ன சாப்பிடுவ?” என அக்கறையுடன் கேட்டாள் சின்னவள்.

“பால் இருக்கு பூர்ணி. டீ போட்டுக்கிறேன். நீ திருப்தியா சாப்டியா. இல்ல மறுபடியும் மீனு வாங்கியாறவா?”

“அதெல்லாம் வேண்டாம். நீ மறுபடியும் கொழம்ப வப்ப. அந்த சோத்து அண்டா வந்து எல்லாத்தையும் தூக்கிட்டு போய்டும். எதுக்கு இந்த வெட்டி வேல.” எனக் கேலி செய்ய, பாரதி சிரித்தபடி பாயை விரித்தாள்.

“க்கா… க்கா… ” என பூர்ணி அணத்த,

“காத்தால ஏழு மணிக்கி பஸ்ஸு வந்திடும்… தூங்குடி…” எனச் சத்தமிட்டாள் தமக்கை.

“க்கா..”

“ம்.. “

” அம்மா பேசவே செய்யாதா? அது குரல் எப்படி இருக்கும்? ஏன் இப்படி இருக்கு? எம்மேல அதுக்கு பாசமே கிடையாதா? காலையிலிருந்து கூடவே தான் இருக்கேன். ஆனா ஒத்த வார்த்த பேசல. ஒன்னும் சரியா சாப்பிடல. வேலைய மட்டும் பாத்திட்டு வந்து படுத்திருச்சி பாரேன். ரெண்டு டீ… அதுல ஒரு பன்ன முக்கி உள்ள தள்னதோட சரி. இப்படியே இருந்தா அது வயிற்றுக்கு என்ன ஆகும்?

முந்தாநேத்து எங்க ஸ்கூல்ல சத்தானதா சாப்பிடலன்னா என்னென்ன நோய் வரும், அது எப்படில்லாம் உடம்ப போட்டு அசத்தும்னு பாடம் நடத்துனாங்க. அம்மா சாப்பிடுற சாப்பாட்டுல சத்துங்கிறது பேருக்கு கூட கிடையாது. எதாவது வந்துடுச்சின்னா என்ன ஆகும்? அது இல்லாம நாம எப்படி? ” என வேதனையுடன் பூரணி பள்ளியில் பயின்றதை பற்றி பேச,. ரத்னாவின் இருமல் சத்தம் இருவரின் கவனத்தை ஈர்த்தது.

அந்தக் கவலை பாரதிக்குமே உண்டு. எத்தனை வருந்தி அழைத்தாலும் மருத்துவரை பார்க்க அவர் சம்மதித்தது இல்லை. ஏன் அவரின் உடலுக்கு என்ன செய்கிறது? தலை சுற்றுகிறது, பசிக்கிறது, தவிக்கிறது என்று தனக்குள் வரும் எந்த ஒரு உணர்வையும் வெளிக்காட்டியதே இல்லை.

வீட்டில் அனைத்தையும் பார்த்துக் கொள்வது பாரதி மட்டுமே. காலையில் எழுந்து அருகில் இருக்கும் ஒரு டிபன் சென்டரில் சமையல் வேலை செய்ய கிளம்பி விடுவார். இரவு ஏழு மணிக்கு வந்து படுத்துக் கொள்வார். பூரணி சொல்வது போல் அவரின் உணவு வெறும் டீயும் சில பிஸ்கட்டுகளும் தான்.

யாருடனும் பேசியது இல்லை. மகள்கள் உட்பட யாரும் அவரின் குரலைப் பத்தாண்டுகளாக கேட்டது கூட இல்லை. பாரதி கேட்டிருக்கிறாள் ரத்னாவின் குரலை. மிகவும் இனிமையாக இருக்கும். சிறு வயதில் தன்னைப் பாட்டு பாடி தூங்க வைத்து, சிரிக்க சிரிக்க கதைகள் சொல்லி, புத்தகத்தை எடுக்காமல் ஊர் சுற்றி விளையாடி கொண்டிருக்கும் அவளைக் கடிந்து, திட்டி, அடித்து எனச் சராசரி தாயாக இருந்தவரை, காலம் கஷ்டங்களைத் தந்து அவரின் வாழ்க்கையை வலி நிறைந்த வாழ்க்கையாக மாற்றி விட்டது.

சிறிய கட்டம் கட்டி அதில் தன்னைத் தானே சிறை வைத்து தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கும் ரத்னாவை விடுதலை செய்ய யார் தான் முன்வருவரோ!!

அப்பொழுது பாரதிக்கு பதினொரு வயது இருக்கும். செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னையுடன் வசித்து வந்தாள் அவள். தந்தையின் சொந்த ஊர் வேறு. சென்னையில் வேலை கிடைத்தது. தலை நகரில் வாடகை வீடு கிடைப்பதில் சிரமம். அத்தோடு வாடகை அதிகம் என்ற காரணத்தால் செங்கல்பட்டுவில் குடும்பத்தைத் தங்க வைத்துவிட்டு வார நாட்களில் வந்து சென்றார் அவர்.

தந்தை என்றால் மிகவும் பிரியம் பாரதிக்கு. சனி ஞாயிறுகளில் வீட்டிற்கு வரும் தந்தையின் தோள்களை விட்டு இறங்கியதே இல்லை அவள்.

சில ஆண்டுகள் தாய் தந்தை என இருவர் அன்பிலும் முத்துக் குளித்து மகிழ்ந்தவள் பாரதி. ஆனால் அந்த பாக்கியம் பூர்ணிக்கு கிடைத்தது இல்லை. அவள் பிறந்த சில மாதங்களிலேயே குருவிக் கூடு போல் அழகான அந்த குடும்பம் கலைந்து விட்டது.

பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, வீட்டில் உள்ளே இருக்க வேண்டிய அனைத்து பொருளும் தெருவில் வாரி இறைக்கப்பட்டிருந்தது. காதில் பூர்ணியின் அழுகுரல் கேட்க, தாய் அங்கிருந்த ஒரு கோயிலின் வாசலில், கன்னங்கள் வீங்க, நெற்றியில் துளைத்த ரத்தத்துடன், அழும் பூரணியைச் சமாதானம் செய்யாது உள்ளுக்குள் மருகிப் போய் அமர்ந்திருந்தார்.

“ம்மா… ம்மா… என்னாச்சி ம்மா.. ஏன் இப்படி உக்காந்திருக்கிங்க.. வாங்கம்மா வீட்டுக்கு போகலாம்.. ” எனப் பாரதி அழைக்க, ரத்னா அசைந்து கொடுக்கவில்லை.

அப்போது தெருவில் இருந்த பலரும் பலவிதமாக பேசி ரத்னாவைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அதன் பொருள் சரிவர புரியாத போதும், அன்னையைத் தான் அவர்கள் கேவலமாக பேசிகிறார்கள் என்பதை உணர முடிந்தது. ஆனால் யாருடனும் சண்டைக்கி செல்லும் அளவுக்கு தைரியம் இல்லை. அதனால் அன்னையின் அருகிலேயே கால்களை மடங்கி சுருண்டு போய் அமர்ந்து கொண்டாள்.

நாளை சனிக்கிழமை..‌. தந்தை வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று ஆவலுடன் பாரதி காத்திருக்க தந்தை வரவே இல்லை. இப்போது வரைக்கும் தந்தையைக் காணவே இல்லை.

பூஜா, பாரதியின் பள்ளித் தோழி. அவளின் தந்தை குணசீலன் தான் ரத்னாவையும் அவரின் மகள்களையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனால் ரேணுகாவின் பேச்சு ரத்னாவை மீண்டும் தெருவிற்கு கொண்டு வந்து விட்டது.

பெற்றவர்களை இழந்த ரத்னாவிற்கு உடன் பிறந்தோர் யாரும் இல்லாத காரணத்தால், கணவன் உயிருடன் இருந்தும் அநாதை ஆக்கப்பட்டார் அவர்.

“ம்மா… பாப்பா ரொம்ப நேரமா அழுதிட்டே இருக்கா. பால் குடும்மா.. ” என்ற பாரதியும் பசியுடன் தான் இருந்தாள். இருவரையும் ஒரு முறை பார்த்த ரத்னா. தன் உயிர் அவர்களுக்கானது என முடிவு செய்து தெருவில் கிடந்த தங்கள் உடமைகளுக்குள் முக்கியமான சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு சென்னை புறப்பட்டார். குணசீலன் தான் அழைத்து வந்தார். குடியிருக்க வீடு ஒன்றையும் ஏற்பாடு செய்து தந்தார்.

“இதுக்கு தா வூடா.. ஆமா புருஷெ எங்க? என்ன பண்றான்?” என சொர்ணம் கேட்க,

“அப்பா சென்னைல தான் வேலை பாக்குறாரு… எங்களை தேடி சீக்கிரம் வருவாரு..” என்றாள் பாரதி.

“வரட்டும் வரட்டும்… வாடகை இவ்வளவு… அட்வான்ஸ பத்து மாச வாடகைய குடுத்திட்டு தங்கிக்க. இவ்ளோ தா ஜாமானா.. இல்ல மீது‌ லாரில வரும்மா.” என சொர்ணம் கேட்க, குணசீலன் அவ்வளவு தான் என்றார். ஆனால் அட்வான்ஸ் பணம் தர அவர் முன் வரவில்லை.

“உங்கிட்ட பணம் இருக்காம்மா… ” என ரத்னாவிடமே கேட்க, அவள் எதையும் பேசாது, கழுத்தில் தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி குணசீலனின் கையில் வைத்து, “வித்திடுங்க ண்ணா.. ” என்றார்.

தாலி…

பலருக்கு அது மதிப்பு மிக்க ஒன்று… கிடைத்தற்கரிய செல்வம்… அந்த பொன் சங்கிலி தான் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவை ஊரறியா சொல்லும்… இன்று வரை தாலி சென்டிமெண்ட் எல்லா பெண்களுக்கும் உண்டு.

ஒவ்வொரு திருமணமான பெண்ணும் கோயிலுக்குச் சென்றால் கைகள் தன்னையும் அறியாமல் நெற்றி வகிட்டுலும் பொன் தாலியில் குங்குமம் இட்டுக் கொள்ள செல்லும். அது அந்த தாலிக்குக் கிடைத்த மரியாதையா என்றால் இல்லை, அது தன் கணவனுக்குத் தரும் மதிப்பு. அவன் தந்த ஒன்றை பத்திரப்படுத்தி பாதுகாக்கும் உணர்வு அது.

ஆனால் சில காரணங்களால் அந்தத் தாலி சாதாரண சங்கிலியாக மாறி கழுத்தை அலங்கரிக்கும் அணிகலனாக மாறி விடுகிறது.

கணவன் உயிருடன் இல்லை என்றால் அந்த சங்கிலியும் அணிகலன் என்ற மதிப்பை இழக்கிறது. இங்கு ரத்னாவின் கணவன் உயிருடன் இருக்கிறார். ஆனால் ரத்னாவை பொருத்த வரை அவர் இறந்து விட்டார். அதனால் தான் அந்த அணிகலனைக் கழற்றி கொடுத்துவிட்டார்.

ஏனெனில் அதை அணிவித்தவனால் அவருக்கு ஏற்பட்ட வலிகள் அவமானங்கள் பல… அதற்கு காரணமாக கணவன் என்ற உறவு என்பதால் அந்த உறவை முற்றிலும் வெறுத்து‌ விட்டார் ரத்னா.

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் அப்படி..‌. விபத்தில் இறந்து போன தன் பெற்றோரின் இறுதி சடங்கிற்கு வந்து சென்ற உறவில் சிலர், அவளுடனேயே தங்கி கொள்ள, ஒற்றை பெண் பிள்ளையாய் கூனி குறுகிப் போய் வாழ ஆரம்பித்தார் சிறு வயதிலிருந்து.

படிப்பு, அதை எங்கு கற்கலாம் என்பது கூட தெரியாது. கல்வியின் அரிச்சுவடி கூட அறியாதவருக்கு சமையலறையில் சகலமும் தெரியும். அவளிடம் இருக்கும் சில சென்ட் வீட்டிற்கும், பல பவுன் தங்க நகைக்கும் ஆசைப்பட்டு அவளுடன் ஒன்றிக் கொண்டது தான் அவளின் அத்தை குடும்பம்.

தந்தையின் தமக்கை தான். ஆனால் பேராசை கொண்ட குடும்பம் அது. பணம் என்றால் உடனே வாயை பிளக்கும் அவர்களுக்கு அந்த வீடு வேண்டும். அதற்கு ரத்னா அவள் பருவ வயதை எட்டி இருக்க வேண்டும். அத்தோடு திருமணமும் முடிந்திருக்க வேண்டும்.

ரத்னா, பருவம் பூத்ததும் சில வருடங்களிலேயே தன் மகனுக்கே கட்டி வைத்து வீட்டை எழுதி வாங்கி கொண்டார் அவர். விடலை காளையான அவனுக்குக் கலவி கற்று உறவு கொண்டு விளையாட கிடைத்த பெண் பொம்மை ரத்னகுமாரி. ரத்னாவிடம் காமத்தைத் தவிர வேறு எதையும் அவன் கண்டதில்லை. பாரதி பிறந்த பின்னும் செழுமை குறையாத வனப்புடன் இருந்த ரத்னாவிடம் மேலும் மேலும் ஒன்றிக் கிடக்க,

அவரின் அன்னையோ, “எத்தன நாளைக்கி தா அவளே கதின்னு கடக்கப்போற. வேல வெட்டிலாம் பாக்கப் போறது இல்லயா… குந்தித் தின்னா மலய கூட மாசத்துல முழுங்கி ஏப்பம் விட்டிடலாம்.” எனச் சொல்லி வேலைக்கு அனுப்பி வைத்தார், சென்னைக்கு..‌.

முதலில் அவர் மட்டும் தான் சென்னை சென்று மாதம் இரு நாள்கள் என்ற கணக்கில் வந்து சென்றார். ஆனால் பாரதி தான் அழுது அடம்பிடிக்க, ரத்னாவைக் கூட்டி வந்து தனியாக வீடெடுத்து தங்க வைத்தார்.

யாருடனும் பேச தயங்கும் வெகுளியான ரத்னாவிடம், “சென்னை எல்லாம் ரொம்ப மோசமான சிட்டி. இங்க உனக்கும் உன் பொண்ணுக்கும் பாதுகாப்பு கிடையாது. நல்லா சிரிக்க சிரிக்க பேசுவாங்க. ஆணா இருந்தாலும் சரி பொண்ணா இருந்தாலும் சரி. ஆனா நீ அசந்த நேரம் பாத்து எல்லாத்தையும் தூக்கிட்டு போய்டுவாங்க. அதுனால அக்கம்பக்கத்தில் பாத்து பேசு. இல்ல நீ பேசவே செய்யாத… உனக்கு தேவையான எல்லாத்தையும் நானே வாங்கிட்டு வந்து குடுத்திடுறேன். நீ வீட்டுக்குள்ளையே இரு. ” என வெளி உலக தொடர்பைத் துண்டித்து விட்டார்.

பாரதியைப் பள்ளிக்கு சென்று அழைத்து வருவது கூட அவர் கிடையாது. அவளுக்குத் தான் பூஜா சினேகிதியாக கிடைத்து விட்டாளே. அவளுடன் சேர்ந்து தான் பாரதி வருவாள். விளையாட்டுவாள்… பூஜாவின் அப்பா குணசீலனுக்கு பாரதி என்றால் மிகவும் பிரியம்…

சில வருடங்களுக்கு பின் கணவனின் வருகை வாரத்திற்கு இரு நாள்கள் என்ற நிலையில் இருந்து மாதம் ஒன்றாக மாறி வருடம் ஒன்று என மாற, ரத்னாவிற்கு காரணம் புரியவில்லை. ஆனாலும் தினமும் ஃபோனில் மகளுடன் பேசிக் கொண்டே இருப்பார். அது போதுமானதாக இருந்தது.

பூர்ணிமாவின் வருகை கணவனுக்கு பிடிக்கவில்லை, ” மேகலாக்கு பத்து வயசு ஆச்சி… இன்னும் ரெண்டு மூணு வர்ஷத்துல நம்ம பொண்ணே பெரிய மனுசியாக நிக்கும்‌. இப்ப போய் நீ வாயும் வயிறுமா இருந்தா எப்படி… சொல்லு நல்லாவா இருக்கும். சின்ன பிள்ளைங்களுக்கு விவரம் தெரியாதப்பவே குழந்தையெல்லாம் பெத்துக்கணும்.. இல்லன்னா நாம பண்றத உத்து உத்து பாத்து ஏன் இப்படி பண்றிங்கன்னு கேள்வி கேக்கும். அதுனால வேண்டாம்… கலச்சிடு… ” என்க, ரத்னாவிற்கும் அது சரியாக பட கருவைக் கலைக்க மருத்துவமனை சென்றார்.

அங்கு, ” குழந்த கலைக்கிற ஸ்டேஜ்ஜ தாண்டிருச்சி. பெத்து தா எடுத்தாகணும்.. ” என்றார் மருத்துவர்.

“இவனுங்க இப்படித்தா சொல்லுவானுங்க.. நீ வா உன்ன நான் சிட்டில நல்ல ஹாஸ்பிட்டலுக்கு கூட்டீட்டு போறேன். அவனுங்க கிட்ட காச வீசி எறிஞ்சா எல்லாத்தையும் தொடச்சி எடுத்து விட்டுடுவானுங்க.. ” என அழைத்து சென்றார்.‌ ஆனால் அங்கும் முடியவில்லை. பூர்ணி பிறந்து விட்டாள். ஆனால் அதன் பின் தான் கணவனின் உண்மை முகத்தை காண நேர்ந்தது.

உடனே அவரின் பெற்றோருக்கு தகவல் சொல்ல, “எம் மகெ ஒன்னும் நீ சொல்ற மாறில்லாம் கிடையாது. என்னத்தையாது கற்பன பண்ணிட்டு பேச கூடாது.” என்ற பதில் தான் மாமியாரிடம் இருந்து வந்தது.

ஆனால், ரத்னா விடுவதாக இல்லை. கணவன் வேலை செய்யும் இடம் தேடி கணவனிடம் கேள்வி கேட்க, அங்கும் அடித்து விரட்டப்பட்டார் அவர்.

அவள் வந்து சென்ற சேதியை தன் அன்னைக்கு சொல்லிவிட்டான். வீடு வந்து போது மாமியாரும் மற்ற சில உறவினர்களும் இவளுக்காக காத்திருந்தனர். மகனைக் குற்றம் சொல்லியதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இவளின் நடத்தையைக் கேள்வி கேட்டு வீதியில் இழுத்து போட்டு அடித்தார். கணவனின் செயலுக்கு மாமியாரும் உடந்தையா! அல்லது மாமியாருக்கு கணவன் உடந்தையா! இரண்டு உண்மை தான் என்பதை அறிந்து மனம் வெறுத்துவிட்டது ரத்னாவிற்கு. அன்று அமைதியானவர் தான். அதன் பின் பேசி யாரும் பார்த்து இல்லை.

பல குண்டு மணிகள் தொங்க பத்து பவுனுக்கும் குறையாமல் இருந்த அந்தத் தங்க தாலி ரத்னாவின் பரம்பரை தாலி. பெண் வீட்டாரின் சார்பாக தாய், தந்தை தன் மகளான மணப்பெண்ணுக்கு அணிவிக்கச் சொல்லிக் கொடுத்தத் தாலியைத் தான் கையில் வைத்துக்கொண்டு நின்றார் ரத்னகுமார்.

அதன் வேலை பாடுகளே சொல்லியது ரத்னாவின் குடும்பம் சொல்லிக் கொள்ளும்படி பெயர் பெற்றது என்று. அதை வாங்காது ஜெயசீலன் ரத்னாவின் முகம் பார்த்தார்.‌

“உ புருஷெ எங்க?” எனக் கேட்டார் சொர்ணம்

“அப்படி யாரும் இனி எனக்கு கிடையாது.” என்ற வார்த்தையில் இருந்த வலி சொர்ணத்திற்கு புரிந்திருக்க வேண்டும். அவரும் பெண் அல்லவா. மனம் உருகி விட்டார் போலும். நீட்டிய தாலியை வாங்கி கொண்டு மாடி வீட்டை இவர்களுக்கு ஒதுக்கி கொடுத்தார்.

ரத்னாவின் தாலியை விற்காது தன் பீரோவில் பத்திரப்படுத்தி உள்ளார் அவர். வீட்டிற்கு தேவையான சில மளிகைக் பொருட்கள் முதல் பண்ட பாத்திரங்கள் வரை அனைத்திற்கும் ஏற்பாடு செய்து தந்தார்.

வயிற்றை நிறைக்க வருமானம் வேண்டும் அல்லவா. அதற்கும் ஏற்பாடு செய்து தந்தார் ஒரு டீக்கடையில். காலை மாலை என இரு வேளையிலும் ரத்னா சூடாக போட்டு தரும் வடை போண்டா வகைகளுக்கு அடிமையாகாமல் இருக்க முடியுமா என்ன! அத்தனை ருசியாக இருந்தது. மீதி நேரத்தில் மோட்டுவளையை பார்த்துக் கொண்டிருக்காது ஒரு டிபன் சென்டரில் சமையல் வேலை செய்ய தொடங்கினார் ரத்னா.

கைக் குழந்தையான பூர்ணியை அவர் கூடவே அழைத்து சென்று விடுவார். கூட வேலை செய்யும் பெண்கள் அவளைக் கவனித்துக் கொள்ளுவர். எட்டு வைத்து தவழப் பழகியது நடந்தது ஓடியது என எல்லாம் அந்த சென்டரில் தான். அங்கிருக்கும் சில பெண்கள் பூர்ணியை இருகரம் நீட்டிப் பாசத்துடனேயே ஏற்றுக் கொண்டனர்..

புசு புசுவென இல்லை என்றாலும் கலையான பூர்ணியைப் பார்க்கும் போது ரத்னாவிற்கு கணவனின் முகம் தான் நினைவு வரும். ஏனெனில் பூர்ணி அவரின் சாயல். மொத்தமாய் தன் கணவனை நேரில் காண்பது போல் இருக்கும் பூர்ணியிடம் எவ்வளவு முயன்றும் அன்பு செலுத்த முடியவில்லை அவரால்.

பாரதியிடம் பேசும் சில வார்த்தைகளைக் கூட ரத்னா பூர்ணியிடம் பேசியது இல்லை. ஏன் அவள் பேச தொடங்கினாலே முகம் திருப்பிக் கொண்டு அங்கிருந்து சென்று விடுவார். கணவன் செய்த செயலுக்கு ஒரு மகளை மட்டும் தண்டிப்பது சரியல்லவே. அதனால் தான் இரு மகள்களையும் ஒதுக்கி வைத்து விட்டார்.

பூர்ணிக்கு அன்னையின் ஒதுக்கும் எதுவும் புரியாது. அதே நேரம் குழந்தை என்பதால் எவ்வித சீண்டலுக்கும் ஆளாகும் நிலை பூர்ணிக்கு வரவில்லை. ஆனால் வயது தொடக்கத்தில் பருவ பெண்ணாய் நின்ற பாரதிக்கு நீண்ட கரங்கள் வேறு.

தென்றல் வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!