மான்விழி – 03
சித்தார்த் மெல்ல திரும்பி அதிர்ச்சியுடன் மணமேடையை பார்த்தான். மணமேடையை விட்டு எழுந்திருக்க கூடாது என்று புரோகிதர் சொல்லியிருந்ததால் அங்கேயே அமர்ந்து பார்வையை மட்டும் இங்கே வைத்திருந்தவள் நிறைய அழுதிருப்பாள் போலும், கண்ணீரில் அவள் மேக்கப் எல்லாம் கலைந்து அவள் அழகை மேலும் அலங்கோலமாக்கி காட்டியது.
இதழ்குவித்து ஊதி தன்னை ஒருவாறு கட்டுப்படுத்திக் கொண்டு, “அப்பா உங்க கிட்ட தனியா பேசணும் இப்படி வாங்க” என்று அழைத்தான்.
Advertisement
நண்பனின் எண்ணத்தை உணர்ந்தவராக “மகி, அபிமன்யூக்கு விரும்பமில்லாத எதையும் செய்ய சொல்லி வற்புறுத்தாதே” என்றார் சிவக்குமார் நலிந்த குரலில்.
“சிவா, நீ அமைதியா இரு, நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லி விட்டு மகனின் பின்னால் சென்றார் மகேந்திரன்.
Advertisement
Advertisement
காலியாக இருந்த மணமகன் அறைக்குள் தந்தையை இழுத்துச் சென்று கதவை மூடினான் சித்தார்த் அபிமன்யூ, “அப்பா என்ன சொல்றீங்கனு புரிஞ்சு தான் பேசறீங்களா? நீங்க பேசறதை பார்த்த, என்னை மணமேடையில் உட்கார்ந்து தாலி கட்ட சொல்லுவீங்க போல இருக்கே” என்றான் படபடப்பாக.
“சித்து நீ புத்திசாலிடா, என் மனசில் நான் என்ன நினைக்கிறேனோ அப்படியே புரிஞ்சுக்கிறே? என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கே” என்று நேரம் காலம் தெரியாமல் மகனை பாராட்டினார் மகேந்திரன்.
Advertisement
இந்த பாராட்டு ரொம்ப முக்கியம் என்று மனதிற்குள் நொடித்தவன், “டாடி ஐயம் சீரியஸ், என்னால எல்லாம் அந்த பெண்ணுக்கு தாலி கட்ட முடியாது. வேணும்னா ஒரு நல்ல படிச்ச மாப்பிள்ளையா பார்த்து, நம்ம செலவிலேயே அந்த பொண்ணுக்கு கல்யாணம் செய்து வச்சிடலாம். உங்க பிரெண்டோட கடனை எல்லாம் நானே அடைச்சிடறேன். அவருக்கு பேசி புரிய வையுங்க” என்றான் சித்தார்த்.
“என் பிரெண்ட் என்ன உனக்கு பிச்சைகாரனா தெரியறனா? நான் இருக்கும் போது நீ என்ன அவன் கடனை தீர்க்கறது?” என்றார் மகேந்திரன் கோபமாக.
“சரி யார் கொடுத்தா என்ன? நீங்களே அவருக்கு தேவையான பணத்தை கொடுங்க, நம்ம ஆஸ்பிட்டல்லயே அவ வேலை செய்யட்டும். வேணும்னா ஒரு டாக்டர் மாப்பிள்ளையா பார்த்து நாமளே கல்யாணம் செய்து வச்சிடலாம்” என்றான் சித்தார்த் தந்தையை சமாதானம் செய்யும் நோக்கில்
“சித்து நீ சிவாவை பத்தி தெரியாம பேசறே. நான் பணமா கொடுத்தா அவன் எதையும் வாங்க மாட்டான் டா, அவனுக்கு தன்மானம் அதிகம். எத்தனையோ கஷ்டம் வந்தாலும் ஒரு முறைக்கூட அவனுக்கு பணத்தேவை இருக்குனு என்கிட்ட காட்டிக்கவே மாட்டான்.
அவன் பொண்ணு கல்யாணத்துக்கு தடபுடலா சீர் செய்ய நான் தயாரா இருந்தேன், ஆனா அவன் அதை எல்லாம் பிடிவாதமா வேணாம்னு சொல்லிட்டான். என்கிட்ட முதல்முறையா கேட்டது அவன் பொண்ணுக்கு ஒரு வேலை மட்டும் தான். அதனால் தான் வேலைக்கான ஆர்டரை உன்னையே நேரில் கொண்டு வந்து கொடுக்க சொன்னேன்.
என்னால பணமா கொடுத்துதான் அவனுக்கு உதவி செய்யமுடியலையேனு கல்யாண வேலை எல்லாம் நானே பார்த்தேன். அவன் மட்டும் இந்த கல்யாணம் ஏற்பாடு செய்யறதுக்கு முன்னாடியே என்கிட்ட வந்து அவன் பொண்ணுக்கு வரன் பார்க்க போறதாக சொல்லியிருந்தா போதும், நான் அப்பவே உன்னை தான் அவனுக்கு மாப்பிள்ளை ஆக்கி இருப்பேன்” என்ற தந்தையை எரிச்சலோடு பார்த்தான் சித்தார்த்
“சும்மா அந்த பொண்ணோடு என்னை சேர்த்து வச்சு பேசாதீங்கப்பா, அந்த பெண்ணை நம்ம ஆஸ்பிட்டல்ல நர்ஸ் வேலைக்கு எடுக்கவே யோசிச்சவன் நான், அவளை எனக்கு லைப் பார்ட்னரா ஒரு நாளும் என்னால ஏத்துக்கவே முடியாது. எல்லார் முன்னாடியும் உங்களை எதிர்த்து பேச வேணாம்னு தான் தனியா கூட்டிட்டு வந்தேன். என்னால அந்த பெண்ணை கல்யாணம் செய்துக்க முடியாது” என்றான் சித்தார்த் அபிமன்யூ தீர்மானமான குரலில்.
“ஏன் அந்த பெண்ணை கல்யாணம் செய்துக்க முடியாதுனு சொல்றே? எனக்கு சரியான காரணம் சொல்லு?” என்றார் மகேந்திரன் மகனை அழுத்தமாக பார்த்தபடி
“முன்ன பின்ன யாருனே தெரியாத பெண்ணை திடீர்னு கல்யாணம் செய்துக்க சொன்னால் எப்படிப்பா?” என்றான் சலிப்பாக தந்தையை பார்த்து.
“அவள் ஒண்ணும் முன்னபின்ன தெரியாத பொண்ணு இல்லை, என் நண்பன் சிவாவோட பொண்ணு. அது போதாதா?” என்றார் மகேந்திரன்.
“அந்த பொண்ணுக்கும் எனக்கும் ஒத்துவராது, உங்க பிரெண்டோட பொண்ணுங்கிறதை ஒதுக்கி வச்சிட்டு யோசிங்க. கொஞ்சமாச்சும் எனக்கு பொருத்தமா இருக்காளானு நீங்களே பாருங்க” என்றான் சித்தார்த் தன் நிலையை தந்தைக்கு விளக்கிவிடும் நோக்கத்தில்.
“பொருத்தம்னு நீ எதை சாெல்றே சித்து? படிப்பையா இல்லை நிறத்தையா? உன்னோட மருத்துவமனையில் வேலை செய்ய அவளுக்கு தகுதி இருக்கானு நீ யோசிக்கிறதுல நியாயம் இருக்கு. உன்னை கல்யாணம் செய்யறதுக்கு நல்ல படிப்பும், நல்ல நிறம் இருந்தா போதுமா? அது தான் உன்னை கல்யாணம் செய்யறதுக்கான குவாலிபிகேஷனா? அப்போ குணம்? அதெல்லாம் தேவையில்லையா சித்து?” என்றார் மகேந்திரன் கோபமாக.
இது மாதிரி எல்லாம் பேசி மடக்கினால் அவனும் தான் என்ன செய்வான்? அதிர்ச்சியாக தந்தையை பார்த்தவன், “அப்பா அது மட்டுமில்ல, நான் கனடாவில் எலிசா என்ற பெண்ணை…” என்று அவன் முடிக்கும் முன்பே மகேந்திரன் நெஞ்சை பிடித்துக் கொண்டு தடுமாறினார்.
“என்னாச்சுப்பா” என்று அதிர்ச்சியுடன் தந்தையை அமர வைத்தான். அவனுக்கு தன் பேண்ட் பாக்கெட்டை கண்களால் காட்டினார் மகேந்திரன். உடனே புரிந்துக் கொண்டு அவர் பாக்கெட்டில் இருந்த மாத்திரையை அவசரமாக எடுத்தவன், அங்கிருந்த தண்ணீர் பாட்டிலையும் எடுத்து மருந்தை தந்தைக்கு புகட்டினான்.
சற்று நேரத்தில் ஆசுவாசமானவர், அவன் கைகளை பிடித்துக் கொண்டு, “சித்து, உன்னை கெஞ்சி கேட்கிறேன்டா. என் சிவாவுக்கு நான் இதுவரை நன்றிகடனா எதுவுமே செஞ்சதே இல்லடா, அதற்கான வாய்ப்பையே அவன் கொடுக்க மாட்டான். அவனுக்கு இந்த நிலைமையில உதவ முடியலைனா, நான் எல்லாம் என்னடா பிரெண்ட்?” என்றார் மகேந்திரன் கண்கலங்க.
கண்களை இறுக மூடினான் சித்தார்த் அபிமன்யூ. அவன் கண்களுக்குள் எலிசா மோகனமாய் சிரித்தாள், கூடவே பவிஷ்கா தந்தையின் உடல் நிலையை பற்றி கூறியது, சற்று முன் தந்தை நெஞ்சை பிடித்துக் கொண்டது என எல்லாம் மூடிய விழித்திரையில் ஒவ்வொரு காட்சிகளாக மாறி மாறி வந்தன.
மூடிய விழியை திறக்காமல், “சரிப்பா உங்க இஷ்டப்படி நடக்கட்டும்” என்று அவன் சொல்லும் போதே புரோகிதரின் குரல் ஓங்கி ஒலித்தது.
“முகூர்த்த நேரம் முடிய இன்னும் சில வினாடிகளே இருக்கு, இனி இந்த கல்யாணம் நடக்காதுனு தோண்றது, நான் கிளம்பறேன்” என்று அவர் சத்தமாக பேசவும் விறுவிறுவென்று வெளியே வந்தவன் இரண்டே எட்டில் மணமேடையை அடைந்தான்.
புரோகிதரின் குரலை கேட்ட மற்றவர்கள் அனைவரும் மணமேடையை நோக்கி ஓடி வர, தன் மகளின் திருமணம் நின்று போக போகிறதே என்று கதறி அழுதபடி வந்த சிவக்குமாரின் தோளில் ஆதரவாக கைவைத்து அழுத்தினார் மகேந்திரன். நண்பனை நிராசையோடு ஏறிட்டு பார்த்த சிவக்குமாரை மேடையை பார்க்கும்படி கண்களால் சைகை செய்தார் மகேந்திரன்.
அங்கே சித்தார்த் அபிமன்யூ தன் கரங்களில் ஏந்தியிருந்த மங்கல நாணை அவர் மகளின் கழுத்தருகே கொண்டு சென்று, “கட்டலாமா?” என்று குனிந்து இருந்தவளிடம் சம்மதம் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவளோ குனிந்த தலை நிமிராமல் ஓர விழிகளால் தந்தையை பார்த்தாள். அவர் சம்மதமாக தலையை ஆட்டவும், அவள் தலையும் மேலும் கீழுமாக அசைந்தது. அடுத்த விநாடி சற்றும் யோசிக்காமல் அந்த திருமாங்கல்யத்தை அவள் கழுத்தில் அணிவித்து மூன்று முடிச்சுகளை இட்டு நிமிர்ந்தவன் தன் தந்தையை பார்த்தான்.
மகேந்திரனும் சிவக்குமாரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டு ஆனந்த கண்ணீரால் அவர்களுடைய சந்தோஷத்தை தங்களுக்குள் பகிர்ந்துக் கொண்டிருந்தனர்.
அடுத்து நடக்க வேண்டிய சம்பிரதாயங்களை புரோகிதர் விளக்கி கொண்டிருக்க, அதை ஒரு உணர்வற்ற நிலையில் செய்து கொண்டிருந்தான் சித்தார்த் அபிமன்யூ. நிறைய பேர் அவனிடம் வந்து அவனை புகழ்ந்து பேசி சென்றனர், வாழ்த்து தெரிவித்தனர். அனைத்துக்கும் ஒரு தலையசைப்பை மட்டுமே பதிலாக தந்தவன் மறந்தும் தன் அருகில் இருந்தவளை பார்க்கவே இல்லை.
ஆனால் நேத்ராவோ அவன் அறியாத சமயத்தில் அவனை யாரென்று பார்க்கத்தான் நினைத்தாள். சற்றே திரும்பி பார்த்தால் அவன் சட்டையின் பாக்கெட் மட்டுமே தெரிந்தது.
அருகில் இருப்பவன் நல்ல உயரம் போல, முகத்தை பார்க்க வேண்டுமானால் நன்றாக தலையை அண்ணாந்து தான் பார்க்கணும். ஆனால் அதற்கு தடையாக இருந்தது, தலையில் இருந்த மலர் அலங்காரமும், கழுத்தில் இருந்த இரண்டு மாலைகளின் பாரமும் தான். அதுமட்டுமல்ல, அனைவரின் முன்னால் அவனை நிமிர்ந்து பார்க்க அவளுக்கு கூச்சமாக இருந்தது.
தன் தந்தையின் ஒற்றை தலையசைப்பில் அவன் யாரென்றே தெரியாமல் தன்னை அவனுக்கு ஒப்பு கொடுத்துவிட்டாள்.
மணமக்கள் இருவரும் சிவக்குமார் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் இருந்து விட்டு, மகேந்திரனின் பூர்வீக வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்கு வந்ததும் தன் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டான் சித்தார்த் அபிமன்யூ.
என்ன செய்வது? என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்த தன் மருமகளை பார்த்து, “சித்துக்கு டயர்டா இருக்கும்னு நினைக்கிறேம்மா, நீ அங்கே பூஜையறையில இருக்கிற விளக்கை ஏத்திட்டு, அந்த அறையில கொஞ்ச நேரம் ஓய்வெடும்மா” என்றார் மகேந்திரன்.
அவளும் சம்மதமாக தலையை மட்டும் அசைத்துவிட்டு, அவர் சொன்னபடி விளக்கேற்றி விட்டு, அங்கிருந்த அறைக்குள் சென்றாள்.
மனதில் ஒரு பக்கம் நிம்மதியும் ஒரு பக்கம் என்னவென்று தெரியாத குழப்பமும் பயமும் இருந்தது. நிம்மதி எதற்கென்றால் அந்த பாண்டியனோடு திருமணம் நின்று போனதற்கு. ஆம் அந்த பாண்டி எப்போதும் அவள் பின்னால் சுற்றிக் கொண்டு இருப்பான், அப்போதே அவளுக்கு அவனை பிடிக்காது. அவள் சட்டை செய்யவில்லை என்றதும் தன் தந்தையிடம் நயமாக பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டான்.
அப்போதும் நேத்ரா தந்தையிடம் மறைக்காமல் அவன் தன் பின்னால் சுற்றியதை கூறினாள். “உன்மேல இருக்கிற ஆசையில சுத்தியிருக்கான், அப்புறம் அது தப்புனு புரிஞ்சு நேரடியா என்கிட்ட பெண் கேட்டு வந்ததாக உண்மையை வெளிப்படையா சொன்னான் டா. அதனால் தான் எனக்கு அவனை பிடிச்சது.
உனக்கு ஒரு பெரிய இடத்தில மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைக்கணும்னு எனக்கும் ஆசை தான். ஆனால் அவங்க எதிர்பார்க்கிறதை நம்மால செய்யமுடியாது, அது மட்டுமில்லாமல் வசதியான குடும்பத்தில வாழ்க்கைப்பட்டு போனால் உனக்கு அங்கே மரியாதை இருக்காது. விரலுக்கேத்த வீக்கம் மாதிரி இவன் நம்ம வசதிக்கேற்ற மாப்பிள்ளையா இருக்கான். கல்யாண செலவை மட்டும் நம்மை பார்த்துக்க சொல்லிட்டான். நீங்க போடுற நகையை போடுங்க உங்க இஷ்டம்னு சொன்னான். அதனால தான் ஒத்துக்கிட்டேன். உனக்கு விருப்பமில்லைனா சொல்லுடா…இப்பவே இந்த பேச்சை நிறுத்திடுறேன்” என்றார் சிவக்குமார்.
தந்தையின் பேச்சில் இருந்த நிதர்சனம் புரிய, ஒரு வேளை தன் மேல் இருக்கும் ஆசையினால் தன்னை நன்றாக பார்த்துக் கொள்வானோ என்னவோ என்றும் தோன்றிவிட, “உங்களுக்கு எது சரினு தோணுதோ அதையே செய்யுங்க அப்பா” என்று கூறிவிட்டாள் மகள்.
ஆனால் திருமணத்திற்கு முன்தினம் வரை மனதார அவனை ஏனோ கணவனாக அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. வரவேற்பு நிகழ்ச்சியின் போது அவன் அருகில் நின்றிருந்த போது, அந்த பாண்டியும் இவளின் உயரத்திலேயே இருக்கவும், அவன் முகத்தை அப்போது தான் நன்றாக பார்த்தாள். அவன் கண்களில் தெரிந்த சிவப்பும், உதடுகளில் படிந்திருந்த கருமை நிறமும், எப்போதும் எதையோ மென்று கொண்டிருந்த அவன் வாயிலிருந்து வந்த வாசனையும் அவளுக்கு உவப்பானதாக இல்லை. குமட்டிக் கொண்டு வந்தது.
அதைப் பார்த்தவன், “என்ன கல்யாணத்துக்கு முன்னாடியே வாந்தி எடுக்கிறே? என்ன விஷயம்? வேறே யாரையாச்சும் காதலிச்சியா?” என்று ஒரு மாதிரி அவளை பார்த்து கண்களை உருட்டி அதட்டலாக கேட்டான். அந்த கேள்விக்கே தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி அவன் முகத்தில் வீசி விடத்தான் தோன்றியது.
தந்தையின் முகத்தில் இருந்த பூரிப்பை பார்த்து பற்களை கடித்துக் கொண்டு அப்படியே நின்றாள். காலை மணமேடைக்கு அவன் வரவில்லை என்றதும் நிம்மதியாக இருந்தாலும், தன் தந்தையின் கண்ணீரை பார்த்து அவளுக்கும் தானாக கண்ணீர் சுரந்தது.
இப்போது தன் கழுத்தில் தாலி கட்டியிருப்பவன், அவள் தந்தையின் நண்பரான மகேந்திரனின் மகன் என்பதை தவிர, அவன் யார், எப்படி பட்டவன்? அவன் பெயர் என்ன? என்று எதுவுமே தெரியாது.
வீட்டையும் காரையும் பார்த்தால் இவர்கள் பெரிய இடம் போல இருக்கிறதே, இந்த திடீர் கல்யாணத்தால் அவனுடனான வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்கிற குழப்பமும், அவனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ? அவன் தன்னை எப்படி நடத்துவானோ என்கிற பயமும் இருந்தது நேத்ராவுக்கு.
(தொடரும்)
