Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம் 20

கலாட்டா – 20

” டேய் வினோ உனக்கு கூட நிஜமாவே மூளை இருக்கு போலயே டா” என்று வியந்து கூறிய மதுரத்தை வெட்டவா குத்தவா என்று பார்த்து வைத்தான் வினோத்.



Advertisement

” பாட்டி என்னை ரொம்ப இன்சல்ட் பண்ற நீ!! நான் மட்டும் பிளான் பண்ணி அந்த ஐடியா பண்ணலைனா நீங்க எல்லாரும் காலமெல்லாம் இங்கேயே அஞ்சலிக்காக காத்துகிட்டு தான் இருந்திருப்பிங்க” என்று வினோத் கெத்தாய் கூற,

அவனுக்கு பதிலடி கொடுக்கப்போன மதுரத்தை தடுத்த வாசுதேவர், ” ஆமா டா நீ ரொம்ப அறிவு தான்.. ஒத்துக்குறோம்.. நீ அடுத்து என்ன நடந்ததுன்னு சொல்லு.. அந்த மீசைக்காரன் என் பேரனை ஓடி வந்து கட்டிப்பிடிச்சுருப்பானே” என்று கதை கேட்கும் ஆர்வத்தில் அவர் வினவ,

Advertisement

Advertisement

வினோத்தோ, ” அங்க தான் டிவிஸ்டே.. நாங்களும் உங்களை மாதிரி தான் நினைச்சோம் ஆனா என்ன நடந்தது தெரியுமா” என்று அவன் கொசுவத்தி சுருளை சுத்தினான்.

Advertisement

வினோத் சொல்லிக் கொடுத்த படி டையலாக்கை உணர்ச்சிபூர்வமாக பேசிவிட்டு அஸ்வத் திரும்ப,

அங்கு தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு நின்றிருந்த சந்தனபாண்டி, அவனை தீர்க்கமாக பார்த்துக் கொண்டே இருவரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில், ” நீ எங்க ஊர்ல என்ன பண்ற??” என்கிற வினாவை எழுப்பியிருந்தார்.

‘ போட்ட திட்டம் எல்லாம் வீணா போச்சா ‘ என்று வினோத் மனதிற்குள் குமுற,

அஸ்வத்தோ முகத்தை சாதரணமாக வைத்துக் கொண்டு, “இங்க பக்கத்துல தான் எங்களோட பூர்வீகம்.. தாத்தாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அதான் அவருக்கு ஒரு மாற்றத்துக்காக கொஞ்ச நாள் இங்க தங்கிட்டு போக வந்தோம்.. உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு?? நீங்க ஃபர்ஸ்ட் போய் ரெஸ்ட் எடுங்க.. சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லியிருக்கேன் சாப்பிட்டுவிட்டு நான் கொடுக்குற டாப்லட்ஸ் போட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியா போயிடும்.. ஒன்னும் பயப்படுறதுக்கு இல்லை” என்று அவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்து விட்டு ஒரு மருத்துவனாய் அவரின் நலனில் அக்கறை கொண்டு பேச,

சந்தனபாண்டியனின் மனதில் அஸ்வத்திற்கான இடம் உயர்ந்து கொண்டு சென்றது. ஆனால் அதை வெளிக்காட்டாமல், “என்மேல கோவம் இல்லையா?? உங்களை அசிங்கப்படுத்தி வெளிய துரத்துன எனக்கு போய் வைத்தியம் பார்த்து காப்பாத்தி இருக்கிங்க.. அவ்ளோ நல்லவனா நீங்க??” என்று அவர் சந்தேகமாக வினவ,

அவர் கேள்வியில் சிரித்த அஸ்வத், ” பொண்ணை பெத்த உங்களுக்கு தெரியாதா அவங்களுக்கு யாரை கல்யாணம் பண்ணா கரெக்டா இருக்கும்னு.. ஏதோ வீடு மாறிய கோபத்துல அன்னைக்கு அப்படி நடந்துகிட்டிங்க.. உங்க கோபம் கரெக்ட் தான்.. ஆனா பேசின முறை எங்களை கஷ்டப்படுத்தியது என்னவோ உண்மை.. ஆனா அதையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு உங்களை இன்னைக்கு நான் அப்படியே காப்பாத்தாம விட்டுட்டு போயிருந்தா என் மனசாட்சியே என்னை கொன்றுக்கும்” என்று அவர் மனதை குளிர்விப்பதைப் போல் அஸ்வத் பதிலளித்தான்.

” பரவாயில்லை சின்ன பையனா இருந்தாலும் பக்குவமா பேசுறீங்க.. அன்னைக்கு நீங்க சொன்ன மாதிரி கோபத்துல வார்த்தையை விட்டுட்டேன்.. என் மேலயும் தான் தப்பு.. யார் என்னன்னு விசாரிக்காமல் வீட்டுக்குள்ள கூப்பிட்டு போயி அவசரப்பட்டுட்டேன்..என்னை மன்னிச்சிடுங்க..உங்க அப்பாகிட்டயும் நான் மன்னிப்பு கேட்டதா சொல்லிடுங்க.. ரொம்ப நன்றி எல்லாத்துக்கும்” என்று பலநாள் கழித்து தன் தவறை உணர்ந்து தன்னிலை விட்டு இறங்கி வந்து மன்னிப்பு வேண்டினார் சந்தன பாண்டியன்.

பதறிய அஸ்வத், ” என்ன சார் இது.. பெரியவங்க நீங்க போய் மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு.. நான் அதெல்லாம் அன்னைக்கே மறந்துட்டேன் . அன்னைக்கு அப்பா பேசுனதும் கோபத்துல தான்.. அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.. மன்னிச்சிடுங்க சார்” என்று அவன் கையெடுத்துக் கும்பிட, அவன் கைகளைப் பற்றிக் கொண்டார் சந்தன பாண்டியன்.

“உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க தம்பி.. ஆமா என்னால ஏதோ கனவு ஆஸ்பத்திரி கெட்டுப்போச்சுனு அந்த தம்பி சொன்னாரு.. என்னன்னு சொல்லுங்க..உங்களுக்கு என்ன உதவி வேண்டும்னாலும் நான் பண்றேன்” என்று அவர் வாக்களிக்க,

” நீங்க சொன்னதே போதும் சார்.. ஏதாவது ஹெல்ப் வேண்டுமானால் கண்டிப்பா உங்ககிட்ட கேட்கிறேன்.. இப்போ நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க.. உங்க வீட்டு ஆளுங்க நம்பர் கொடுங்க லேட் ஆச்சு நீங்க இன்னும் வீட்டுக்கு வரலைன்னு கவலைப்பட போறாங்க” என்று அஸ்வத் அவரிடம் ஸ்கோர் செய்து கொண்டிருந்தான்.

‘ அவங்க வீட்டு நம்பர் உனக்கு தெரியாதா?? உலக மகா நடிப்புடா சாமி ‘ என்று வினோத் மனதிற்குள் கிண்டல் செய்து கொண்டான்.

சந்தன பாண்டியனும் அப்பாவியாய் அதை நம்பி, ” ஆமா என் அஞ்சலிகுட்டி நான் இல்லாம இன்னும் சாப்பிடாம கூட உக்காந்துட்டு இருக்கும்.. யாரும் கேட்டா எனக்கு ஹார்ட் அட்டாக்குன்னு அவுககிட்ட சொல்லாதீங்க தம்பி.. பயந்துருவாங்க.. சும்மா பிரசர் கூடிப்போய் விழுந்துட்டேன்னு சொல்லுங்க” என்று தன் மனைவிக்கு அழைத்து பேச,

‘ நிஜமாவே உங்களுக்கு பிரஷர் தான் கூடிப்போய் விழுந்திங்கன்னு நான் எப்படி சொல்லுவேன் ‘ என்று வினோத் கவுண்டர் கொடுத்துக் கொண்டிருக்க அஸ்வத் அவனை அடக்கிவிட்டு, ” சரிங்க சார்” என்று பவ்யமாய் அவரிடம் கூறினான்.

அதன் பின் அவருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து விட்டு பிரஷர் மாத்திரையும் சில வைட்டமின் மாத்திரைகளையும் அவருக்கு கொடுத்து உறங்க வைக்க முயல, அஞ்சலியின் குடும்பம் அங்கு ஆஜராகி இருந்தனர்.

உள்ளே வந்த அஞ்சலி, அபி, காமாட்சி மூவரும் அங்கு அஸ்வத்தைக் கண்டு குழம்ப,

சந்தனபாண்டியன் தான் நடந்த அனைத்தையும் கூறி அஸ்வத்தைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்.

அதைக்கேட்டு அஞ்சலி வானத்தில் பறந்து கொண்டிருந்தாள் என்று சொன்னால் மிகையாகாது.

அதன் பின் அவர் உண்ட மயக்கத்தில் உறங்கி விட, மற்றவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்த அஸ்வத் காமாட்சியை பார்த்து வணங்கினான்.

காமாட்சியும் தன் கணவனிற்கு உதவியதற்காக நன்றி கூற, அதை ஒரு புன்னகையில் ஏற்றுக் கொண்டவன் பின் தான் கிளம்புவதாகக் கூறி அங்கிருந்து விடைபெற, காமாட்சியும் அவனை வழியனுப்பி வைத்தார்.

அஞ்சலியிடம் அவன் கண்ணாலே பேசியதை காமாட்சி கண்டும் காணாமல் இருந்தாலும் மகளிடம் இது குறித்து பேச வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டார்.

” இதான் நடந்துச்சு” என்று வினோத் அனைத்தையும் கூறி முடிக்க, மதுரம் அவனை மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்தார்.

“எனக்கென்னமோ அவர் சீக்கிரமே ஒத்துப்பாருன்னு தோணுது மது டார்ஜிலிங்” என்று வாசுதேவர் கூற,

அதை மறுத்த மதுரம், ” அவ்ளோ சீக்கிரமாக அவர் ஒத்துக்க மாட்டாரு.. அவருக்கு இப்போ தான் நம்ம அஷு மேல நல்ல அபிப்ராயம் வந்திருக்கு.. இனி இதை அப்படியே டெவலப் பண்ணி அவர் வாயாலேயே நீங்க தான் என் மாப்பிள்ளைன்னு சொல்ல வைக்க வேண்டியது நம்ம கையில தான் இருக்கு.. கூடிய சீக்கிரமே அவரை அஸ்வத் தான் மாப்பிள்ளைன்னு சொல்ல வைக்கிறேன்” என்று மனதில் முடிவெடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார் மதுரம்.

” மீனா மணி என்னாகுது இன்னும் உன் பொண்ணு எழுந்துக்காம என்ன பண்ணிட்டு இருக்கா?? இன்னைக்கு டென்த் அரியர் எக்ஸாம் இருக்கு தான போய் கிளம்பி வரச்சொல்லு எனக்கு டைம் ஆகுது” என்று கடிகாரத்தை பார்த்து கத்திக் கொண்டிருந்தார் சுந்தரபாண்டியன்.

மெதுவாய் பின் வாசலில் இருந்து உள்ளே வந்த மீனாவோ, ” எதுக்கு இப்படி டென்ஷனாகி உடம்பை கெடுத்துக்குறீங்க?? எப்படி இருந்தாலும் அவ ஃபெயில் ஆகத்தான் போறா.. அதை வேற எதுக்கு எழுதி பேப்பரை வேஸ்ட் பண்ணனும்” என்று அவர் மகளின் மீதுள்ள அபார நம்பிக்கையில் மொழிய,

அதைக்கேட்டு கொதித்தெழுந்த சுந்தர பாண்டியனோ, ” என்ன மீனா பேசுற.. நீயே அவளை கெடுத்துடுவ போல.. எப்படியாச்சும் அவ டென்த் பாஸ் பண்ணா தான் போலீஸ் எக்ஸாம் எழுத முடியும்” என்று மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் பேச,

அதை உணர்ந்தாலும், ” அது எல்லாம் எனக்கும் தெரியும்.. ஆனா நீங்களும் கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க .. அவளுக்கு இந்த புத்தகத்தை மனப்பாடம் பண்ணி எழுதுறதெல்லாம் சுத்தமா பிடிக்காது அது வரவும் வராது.. அதுனால தான் இத்தனை வருஷமா அவளால டென்த் கூட பாஸ் பண்ண முடியலை.. இனிமேலும் அவ படிச்சு பாஸ் பண்றது எல்லாம் நடக்காத காரியம்” என்று நிதர்சனத்தை எடுத்துரைத்தார் மீனாட்சி.

” அப்போ என்ன உன் பொண்ணு மாதிரி நீயும் என்னை லஞ்சம் கொடுத்து அவளுக்கு வேலை வாங்கித்தர சொல்றியா?? என்னால அதெல்லாம் முடியாது.. லஞ்சம் வாங்குறவங்களை பிடிச்சு உள்ள தள்ளுகிற நானே லஞ்சம் கொடுத்தா எல்லாரும் என்னை என்ன நினைப்பாங்க?? இதெல்லாம் ரொம்ப தப்பு மீனா” என்று அவர் தாம் தூம் என்று குதிக்க,

” அச்சோ உங்களை யாரு லஞ்சம் கொடுக்க சொன்னா.. பேசாம அவளைபத்தி தெரிஞ்ச யாருக்காச்சும் கீதாவை கட்டி வச்சிருங்க.. அவங்க என்னமோ பண்ணி அவளை வேலைக்கு அனுப்பட்டும்.. அதுல மட்டும் நீங்க தலையிடாமல் இருங்க போதும்..” என்று ஒரு மார்க்கத்தை மீனாட்சி கூற,

சுந்தர பாண்டியனிற்கு இதில் சுத்தமாய் உடன்பாடு இல்லாவிட்டாலும் மகளை பற்றி முற்றிலும் அறிந்ததால் இதைத்தவிர வேறு வழியில்லை என்று உணர்ந்து கடுப்புடன், ” என்னமோ பண்ணித் தொலைங்க ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் இந்த ஊர் பக்கமே வரக்கூடாது” என்று எரிந்து விழுந்து விட்டு அங்கிருந்து சென்றிருந்தார் சுந்தர பாண்டியன்.

அவர் போகும் வரையில் தன்னறையில் இருந்து கொண்டு தன் பெற்றோரின் சம்பாஷனைகளை கேட்டுக் கொண்டிருந்த கீதாவின் மனதில் தன் அன்னையின் கூற்றை கேட்ட பின்  மின்னல் போல் மின்னி மறைந்தது அஜயின் முகம்.

“ச்சை” என்று தலையை உலுக்கிக் கொண்ட கீதா, ” அந்த எருமையை பத்தி நினைக்காத டீ கீதா.. அவன் உன்னை எவ்ளோ அசிங்கப்படுத்தினான். அவன் முன்னாடி ஸ்டைலா கெத்தா அவனை விட அழகானவனா பிடிச்சுட்டு போய் நின்னு  அவனை அசிங்கப்படுத்தனும்” என்று சபதம் எடுத்துக் கொண்டாள் அவள்.

“ஷிட்!!! மறுபடியும் அந்த கீதா மிஸ் ஆய்ட்டாளா?? இதை சொல்றதுக்கு உங்களுக்கு வெட்கமா இல்லை?? நீங்க எல்லாம் ஆம்பளைங்க தான வெட்கமே இல்லாமல் அவகிட்ட அடிவாங்கிட்டு வந்து நிக்குறீங்க” என்று தன் முன் தலையை குனிந்து கொண்டு நின்றிருந்தவர்களை வார்த்தைகளால் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தான் அந்த நெடியவன்.

” பாஸ் அந்த ஒரு பொண்ணு மட்டும் இல்லை பாஸ் இன்னும் ஒரு பொண்ணு வேற சேர்ந்து எங்களை அட்டாக் பண்ணுச்சு அதான் பாஸ் எங்களால கீதாவை கொல்ல முடியலை” என்று குண்டாய் இருந்த ஒரு உருவம் பயந்து கொண்டே அந்த நெடியவனிடம் கூற,

அடுத்த நொடி அந்த குண்டனின் குண்டு கன்னம் சிவந்து போகும் அளவிற்கு அரைந்திருந்தான் அந்த நெடியவன்.

“என் வாயில அசிங்கமா ஏதாவது வரதுக்கு முன்னாடி எல்லாரும் இங்க இருந்து போய்டுங்க.. கேவலம் ரெண்டு பொண்ணுங்களை சமாளிக்க முடியலை உங்களுக்கெல்லாம் எதுக்கு மீசை.. சேலையை வாங்கி சுத்திக்கோங்க” என்று உச்சக்கட்ட கோபத்தில் அந்த நெடியவன் வார்த்தைகளை விசிறியடித்தான்.

அப்போதும் பதிலேதும் பேசாமல் அந்த நான்கு பேரும் மௌனமாய் அந்த திட்டுக்களை வாங்கிக் கொண்டு நின்றனர்.

சற்று நேரத்தில் அந்த நெடியவனின் கோபம் கொஞ்சம் தணிய, ” அவ ஊருக்குள்ள வச்சு அவளை தூக்க முடியாதுன்னு தான் அவ வெளிய வந்தப்போ ஸ்கெட்ச் போட்டேன் … இப்போவும் தப்பிச்சுட்டா.. ஆனா அடுத்த முறை அவளால என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. கீதா ஐ அம் கமிங் ஃபார் யூ”  என்று கூறியவனின் குரலில் கீதாவின் மீதிருந்த வன்மமே மிதமிஞ்சி இருந்தது.

அப்போது அங்கு குனிந்திருந்த அந்த நால்வரில் ஒருவன் தயக்கத்துடன் அந்த நெடியவனைப் பார்த்து, ” பாஸ் நாங்க போறப்போ கூட ரெண்டு பசங்க இருந்தாங்க.. முதல்ல நான் கத்தியை வீசுறப்போ அதுல ஒருத்தன் தான் அவளை இழுத்து காப்பாத்தினான்.. அவன் மட்டும் இல்லைனா அப்போவே கீதா கதை முடிஞ்சிருக்கும்..அது மட்டும் இல்லை.. அவங்க கார்ல கிளம்பி போனதும் நாங்களும் அவங்களை பின் தொடர கிளம்பினோம்.. ஆனால் எங்களுக்கு முன்னாடியே ஒரு கார் அவங்களை ஃபாலோவ் பண்ணிட்டு போச்சு பாஸ்.. அப்போ திடீர்னு எங்கிருந்தோ வந்த ஒரு போலீஸ் ஜீப் எங்களுக்கு முன்னாடி போனவங்களை பிடிச்சுட்டு போய்டுச்சு .. அதுனால நாங்க திரும்பி வந்துட்டோம்.. அந்த கீதாவுக்கு பின்னாடி யாரோ இருந்து அவளை காப்பாத்துறாங்க பாஸ்” என்று அவன் கூறி முடிக்க,

அந்த நெடியவனின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.

“அவ பின்னாடி அவ அப்பனை தவிற வேறு யார் இருக்கப் போறா” என்று நினைத்துக் கொண்ட அந்த நெடியவன் அறியவில்லை,

அவளுக்கு பின் என்றுமே இருப்பது, இனி இருக்கப்போவது அவளுடைய அப்பன் இல்லை அவனிற்கு ஆப்பு வைக்கப் போகும் சுப்பன் என்று!!

” உனக்கு பின்னாடி அந்த கடவுளே இருந்தாலும் உன்னை  அழிக்காம விட மாட்டேன் டி கீதா” என்று கூறியவனின் கண்களில் தெரிந்த பலிவெறியில் அந்த அறையில் இருந்த அவனின் அடியாள்களுக்கே குளிரெடுத்தது.

இத்தனை வன்மத்தை கீதாவின் மீது சுமந்து கொண்டிருக்கும் இவன் யார்?? இவனிற்கும் கீதாவிற்கும் என்ன சம்பந்தம் என்பதை இனிமேல் தெரிந்து கொள்வோம்..

– தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!