Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம் 24 1

கலாட்டா – 24

ஒரு வருடத்திற்கு முன்பு…



Advertisement

இடம்  : டெல்லி

Advertisement

அஞ்சலி அப்போது IAS தேர்வுக்காக டெல்லியின் புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றில் பயிற்சி மேற்கொண்டு இருந்தாள்.

Advertisement

அதேசமயம் குடியரசு தின விழாவிற்காக, காவல்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஜனாதிபதி பதக்கத்தை பெற தகுதியானவர்கள் பட்டியலில் சுந்தர பாண்டியனின் பெயரும் இடம்பெற்றிருக்க, குடும்பத்தோடு அவரும் டெல்லி வந்திருந்தார்.

Advertisement

குடியரசு தினத்திற்கு முந்தைய நாளே அவர்கள் மூவரும் வந்து விட, சுந்தர பாண்டியன் குடியரசு தின ஏற்பாடுகளை காண ராஷ்டிரபதி பவனிற்கு சென்று விட்டதும், கீதா வந்ததும் வராததுமாய் அஞ்சலியைக் காண செல்கிறேன் என்று மீனாட்சியிடம் அடம்பிடித்து அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

அப்போது அஞ்சலி ஒரு மகளிர் விடுதி ஒன்றில் தங்கியிருக்க, அவள் கொடுத்த முகவரியை வைத்துக் கொண்டு பெயர் தெரியாத ஊரில் கூட அனைவரையும் சமாளித்து அஞ்சலி தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள் கீதா.

” ஏய் எலி!!! என்னை வர சொல்லிட்டு நீ இன்னும் உள்ள என்ன டி பண்ணிட்டு இருக்க?? மரியாதையா இன்னும் ஒரு நிமிஷத்துல நீ வெளிய வரலை நான் அப்பறம் வந்த வழியே போய்டுவேன்” என்று கீதா அந்த விடுதியின் வாயிலில் நின்று போனில் கத்திக் கொண்டிருக்க,

அப்போது அவளை பின்னால் இருந்து அணைத்தது ஒரு மென்கரம்.

யார் என்பதை உணர்ந்து கொண்ட கீதாவும் ஒரு புன்சிரிப்புடன், ” எலிஈஈஈ!!! ஐ மிஸ்ட் யூ சோ மச்” என்று கூறிக்கொண்டே தன் தமக்கையை கட்டிக்கொண்டாள்.

அஞ்சலியும் முகம் கொள்ளா புன்னகையுடன் கீதாவை கட்டிக்கொண்டு, ” ஐ மிஸ்ட் யூ டூ சோ பேட்லி கீது குட்டி” என்று தங்கையை கொஞ்சிக் கொள்ள,

சட்டென்று அவளிடமிருந்து பிரிந்த கீதா, “ஏய் எலி.. அப்பா இன்னைக்கு வர லேட்டாகும்.. சோ நம்ம எங்கேயாச்சும் வெளிய போய் ஜாலியா சுத்திட்டு வரலாம்.. நம்ம ஊருல தான் பெரியப்பாவுக்கு பயந்து நம்ம மீட் பண்ணிக்கிறதே ரொம்ப கஷ்டமா போச்சு… அட்லீஸ்ட் இங்கயாச்சும் என்ஜாய் பண்ணலாம்.. நீ படிக்கணும் அது இதுன்னு சொல்லி எஸ்கேப் ஆன மவளே இங்கேயே உன்னை கொன்றுவேன்” என்று அஞ்சலியை மிரட்டி ஒப்புக்கொள்ள வைத்தாள் கீதா.

அதன் பின் இருவரும் அருகில் இருந்த ‘பீட்சா ஹட்’ ஒன்றிற்கு சென்று கொறித்துவிட்டு அப்படியே ஷாப்பிங்க் செய்துவிட்டு வரலாம் என்று டெல்லியில் பிரபலமான மால் ஒன்றிற்கு டாக்சி மூலம் சென்றனர்.

அவர்கள் உள்ளே நுழைந்த போதே மாலை ஆகிவிட, அதன் பின் மாலுக்குள் சென்று நேரம் போய்க் கொண்டிருப்பது கூட தெரியாமல் கீதா ஷாப்பிங்க்கில் மூழ்கி விட, அஞ்சலி தான் அவளை வம்பாடுபட்டு இழுத்துக் கொண்டு வரவேண்டியதாய் போயிற்று.

அந்த இடத்தை விட்டு அவர்கள் வெளியேறும் போதே மணி ஒன்பதை கடந்துவிட, மீனாட்சி அதற்குள் பத்து முறை இருவருக்கும் அழைத்திருந்தார்.

கடுப்புடன் அவரின் அழைப்பை ஏற்ற கீதா, “எதுக்கும்மா இத்தனை டைம் போன் பண்ணியிருக்க?? நான் என்ன யார் கூடவும் ஓடியா போய்ட்டேன்.. எலி கூட தான இருக்கேன்” என்று கத்த,

அவளை விட கொதி நிலையில் இருந்த மீனாட்சியும், “மணி என்னாகுது??” என்று அடக்கி வைத்த கோபத்துடன் கேட்க,

“ச்சு.. இதைக் கேட்க தான் இத்தனை டைம் போன் பண்ணியாம்மா… இத்தனை வயசாகியும் உனக்கு மணி கூடவா பார்க்க தெரியாது..மணி இப்போதான் ஜஸ்ட் ஒன்பது ஆகுது” என்று மீனாட்சியின் கோபத்தை உணர்ந்து அவரை சாந்தப்படுத்த கீதா அவருடன் விளையாடினாள்.

ஆனால் அவளின் கேலி அவரை சாந்தப்படுத்துவதற்கு பதில், மேலும் கோபத்தை தான் ஏற்றியது.

“ஏண்டி கொஞ்சமாச்சும் மூளைன்னு உனக்கு ஒன்னு இருக்கா இல்லையா?? ரெண்டு பொம்பளை பிள்ளைங்களும் பாஷை தெரியாத ஊருல நைட் ஒன்பது மணி வரைக்கும் தனியா சுத்திட்டு இருப்பிங்களா??எங்க இருக்கிங்க?? நான் அப்பாவை வர சொல்றேன் அங்கேயே இரு” என்று கீதா அதை மறுக்க முடியாதபடி உத்தரவு போல் கூறிய மீனாட்சி, அவளிடம் அவர்கள் இருக்கும் முகவரியை வாங்கிக் கொண்டு தன் கணவனை அழைத்து வரச் சொல்லி பணித்த பின்பே சற்று ஆசுவாசமடைந்தார்.

போனை கட் செய்ததும் கடு கடுவென்று அமர்ந்திருந்த கீதாவைக் கண்டு வந்த புன்னகையை வாய்க்குள்ளே அடக்கிக் கொண்ட அஞ்சலி,

“என்னாச்சு கீது?? சித்தி என்ன சொன்னாங்க??” என்று வெளிவரத் துடித்த சிரிப்பை உதட்டுக்குள் அடக்கிக் கொண்டே அவளிடம் வினவினாள் அஞ்சலி.

“அப்போ உனக்கு அவங்க பேசுன எதுவுமே கேட்கலை.. அப்படித்தான??” என்று கீதா அஞ்சலியை முறைக்க,

“ஹாஹா .. எதுக்குடி இப்படி உர்ருன்னு குரங்கு மாதிரி இருக்க.. சித்தப்பா கூப்பிடத் தான வராரு.. நியாயமா நான் தான் பயப்படனும்.. அப்பா முன்னாடி பேசாத மாதிரி இருந்துட்டு இப்போ உங்கூட பேசுறதுக்கு என்னைத்தான் ஏதாவது சொல்லுவாரு..ஆனா நீ ஏன் இப்படி இருக்கன்னு தான் புரியலை.” என்று கேட்டாள் அஞ்சலி.

“அடிப்போடி.. அவர் உன்னைப் பார்த்தா பாரட்ட தான் செய்வாரு.. பெரியப்பா மேல தான் கோவமெல்லாம்.. நாம திருட்டுத்தனமா பேசிக்கிறதெல்லாம் அப்பாக்கு தெரியும்.. எங்கம்மா எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்லிருவாங்க.. என்னோட பயமே இப்போ அவர் வந்தா உன்னோட கம்பேர் பண்ணி என்னை சாவடிப்பாரு.. அவ IAS படிக்கிறா நீயும் தான் இருக்கியே டென்த் கூட பாஸ் பண்ணலைன்னு இனி இரண்டு நாளைக்கு பேசி பேசியே கொன்றுவாரு என்னை” என்று கீதா தன் தந்தையை எண்ணி புலம்ப,

அதைக்கேட்டு பக்கென சிரித்து விட்டாள் அஞ்சலி.

“என் கவலை உனக்கு காமெடியா இருக்கா எலி..உன்னைக் கொல்ல போறேன்” என்று அஞ்சலியை அடிக்கத் துரத்தினாள் கீதா.

சிரிப்புடன் அவளுக்கு போக்கு காட்டிவிட்டு ஓடிய அஞ்சலியோ, “சத்தியமா வேணுன்னு சிரிக்கலை டி.. சித்தப்பா அப்படி திட்டுறப்போ உன்னொட ஃபேஸ் ரியாக்ஷன் நினைச்சு பார்த்தேன் அதான் சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியலை” என்று கூறிக்கொண்டே ஓடினாள்.

“இன்னைக்கு நீ செத்த” என்று கீதா அவளைப் பிடிக்க முயல,

அப்பொழுது எங்கிருந்தோ வழுக்கிக் கொண்டு வந்த விலை உயர்ந்த கார் ஒன்று அஞ்சலியை அதற்குள் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்து விட,

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்துவிட்ட இந்த சம்பவத்தைக் கண்டு கீதா அதிர்ந்து நின்றதெல்லாம் ஒரு நொடி தான்.

அடுத்த நிமிடமே அவள் பி.டி.உஷாவை விட அதிவேகத்தில் அந்த காரை பின் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தாள்.

போலீஸ் ஆக வேண்டும் என்ற அவளின் லட்சியத்தை அடைவதற்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் கீதா மேற்கொண்டிருந்ததால் அவளிற்கு இது சுலபமாக இருந்தது.

இருந்தாலும் மணிக்கு நூற்றி இருபதைக் கடந்த வேகத்தில் சென்று கொண்டிருக்கும் காரை பெண்ணவளால் என்ன முயன்றும் பிடிக்க முடியாமல் போக, ஒரு கட்டத்தில் ஒன்- வேயில் வந்து கொண்டிருந்த பைக் ஒன்றின் மீது மோதி கீழே விழுந்திருந்தாள் கீதா.

இங்கு காருக்குள் அஞ்சலியை அள்ளிப் போட்ட அந்த உருவம் அவள் திமிறுவதை பொருட்படுத்தாமல் அவள் நாசியில் மயக்க மருந்து கலந்த துணியை வைத்து அமுக்கி அவளை மூர்ச்சையாக்கியிருந்தது.

மயக்க மருந்து அவளின் சுவாசத்தோடு கலந்து அவளை கொஞ்சம் கொஞ்சமாய் தூக்கத்திற்கு தள்ள, “என்னை விடுடா” என்று கூறிக்கொண்டே தன்னிலை இழந்து அவன் கைகளிலே மயங்கிச் சரிந்தாள் அந்த மாது.

போதை மருந்தின் பிடியில் இருந்த அந்த உருவம் தன் கைகளில் கிடந்த பெண்ணவளைக் கண்டு மோகம் தலைக்கேற மூர்க்கமாக அந்த மெல்லிய தேகமுடையவளுள் புதைந்தது.

காமம் என்ற போர்வைக்குள் மூழ்கியிருந்த அந்த உருவமும் ஒரு பெண்ணின் உத்தரவில்லாமலும் அவளின் சுயநினைவு கூட இல்லாத சமயத்தில் அவளை புணர்வது எவ்வளவு பெரிய குற்றம் என்று அறியாமல் தன் உடல் அரிப்பை தீர்த்துக் கொள்ள ஒன்றும் அறியா அஞ்சலியை பயன் படுத்திக் கொண்டிருந்தது.

தனக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது  என்று கூட தெரியாமல் அஞ்சலி மயக்கத்திலே கிடக்க, அந்த உருவமோ தன் தேவை தீர்ந்ததும் காரின் கதவை திறந்து அவளை அள்ளி சாலையில் வீசிவிட்டு காரைக் கிளப்பச் சொல்ல, இத்தனை நேரம் அங்கு நடந்த அநியாயத்திற்கு சாட்சியாய் இருந்த அந்த ஓட்டுநரும் தன் முதலாளியின் கட்டளைப்படி அஞ்சலியைக் கண்டு கனத்த மனதுடன் காரை அங்கிருந்து கிளப்பிச் சென்றார்.

அஞ்சலியோ இங்கு ஆடைகளெல்லாம் கிழிந்து கசங்கிய மலராய் சாலையில் உணர்வற்றுப் போய் கிடந்தாள்.

இருவரையும் கூட்டிக்கொண்டு போக கீதா சொன்ன இடத்திற்கு வந்த சுந்தரபாண்டியன் அங்கு இருவரையும் காணாமல் குழம்பியவர், பின் இருவரின் செல்லுக்கும் அழைத்துப் பார்க்க, அஞ்சலியின் கைபேசி சற்றுத் தொலைவில் இருந்த சாலையில் கீழே விழுந்து கிடந்தது.

அதைக் கண்ட சுந்தர பாண்டியனிற்கு ‘ நிச்சயம் ஏதோ நடந்திருக்கிறது ‘ என்று அவரின் காவல்துறை மூளை எச்சரிக்க, அடுத்த நொடியே அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு கிளம்ப, போகும் வழியிலே கீதாவை கண்டுவிட்டார்.

சரியாக அவர் சென்ற சமயம் தான் கீதாவை அந்த டூவீலர் வந்து மோத, பதறிப்போன சுந்தரம், “கீதாம்மா” என்ற அலறலுடன் அவளை நோக்கி ஓடினார்.

கீழே விழுந்ததில் அங்கங்கு அடிபட்டு இரத்தப்போக்குடன் மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்த கீதாவின் மனதில் , ‘ அஞ்சலியைக் காக்க வேண்டும்’ என்பது மட்டுமே ஓடிக் கொண்டிருக்க,

சரியாய் அதே நேரம் அவள் அருகில் வந்த சுந்தரபாண்டியன், “கீதா என்னடா ஆச்சு.. கண்ணை மூடாத கீதா.. எழுந்துக்கோ உனக்கு ஒன்னும் இல்லை.. அஞ்சலி.. அஞ்சலி எங்க??” என்று பதற்றத்தில் பேசிக் கொண்டிருந்தவரின் கண்கள் சுற்றும் முற்றும் அஞ்சலியைத் தேட,

கீதாவோ தன் வலியை முயன்று பொறுத்துக்கொண்டு, “ப்பா அஞ்ச..லியை ஒரு..க்கார்ல கடத்தி..ட்டு போய்ட்..டாங்க.. போய் அ..வளை காப்..பாத்துங்க..” என்று தட்டுத் தடுமாறி பேசியவள், முயன்று தன் நினைவடுக்குகளில் சேமித்து வைத்த அந்த காரின் எண்ணை தன் தந்தையிடம் கூறிவிட்டு, இனி அவர் அஞ்சலியை பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் மயக்கத்திற்கு சென்றுவிட்டாள்.

அதற்குள் அங்கு கூடிய கூட்டத்தைக் கண்டு காவல்துறையினரும் வந்துவிட, அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட சுந்தர பாண்டியன் கீதாவை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவள் சொல்லிவிட்டுப் போன வண்டி எண்ணை வைத்து அந்த காவல்துறையினரின் உதவியுடன் அஞ்சலியைத் தேடத் துவங்க,

சரியாக ஒருமணி நேரம் கழித்து ரோட்டில் பிய்த்து எரிந்த மலராய் கிடந்த அஞ்சலியைப் பற்றி தகவல் கிடைக்க, உடனடியாய் அங்கு விரைந்தார் சுந்தர பாண்டியன்.

எந்தவொரு தகப்பனும் காணக்கூடாத கோலத்தில் அஞ்சலியைக் கண்ட சுந்தரபாண்டியனிற்கு நெஞ்சில் யாரோ சுத்தியை வைத்து அடித்ததைப் போல் அவ்வளவு வலித்தது.

தன் மகளை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த பொறுக்கியை தன் கையால் அடித்துக் கொள்ள வேண்டும் என்ற வெறி அவர் நரம்பெங்கிலும் பரவினாலும், முதலில் அஞ்சலியை கவனிக்க வேண்டும் என்றுணர்ந்து அவளை அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்.

அஞ்சலியையும், கீதாவை அனுமதித்திருந்த அதே மருத்துவமனையில் சேர்த்து விட, மருத்துவர்கள் விரைவாய் அவளிற்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!