Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Oorkolam Pogum Kaarkala Megam

Oorkolam Pogum Kaarkala Megam 3 1

அத்தியாயம் 3 

வானவில்லின் எட்டாம் 

வண்ணத்தையும் எட்டிப் 



Advertisement

பிடிக்கலாம் காதலில்!!!

திடீரென்று வந்தார்கள், பெண்ணுக்கு திருமண தேதியைக் குறிக்கலாமா என்று கேட்கிறார்கள் என்ற திகைப்பில் இருந்தார்கள் ஷிவானி குடும்பத்தினர்.

Advertisement

Advertisement

இதற்கெல்லாம் காரணம் நீ தான் என்ற பார்வையை மகளை நோக்கி வீசினாள் லதா. அதில் மௌனமாக தலை குனிந்தாள் ஷிவானி.

“சாரி, நாங்களே வந்ததுல இருந்து பேசிக்கிட்டு இருக்கோம். இது எல்லாம் உங்களுக்கும் அதிர்ச்சியா இருக்கும். முதல்ல நான் எல்லாரையும் உங்களுக்கு அறிமுகப் படுத்திக்கிறேன். என்னோட பேர் கிருஷ்ணன். இவங்க என்னோட அம்மா, இவர் என்னோட அப்பா. இவள் என்னோட மனைவி. இவன் எங்க சின்ன பையன் மதன். இவனுக்கு மூத்தவங்க மூணு பிள்ளைங்க இருக்காங்க. பொண்ணுங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு. மூத்தவனுக்கு பொண்ணு பாத்துட்டு இருக்கோம். மூணு தலைமுறையா பிஸினஸ் தான் பண்ணுறோம். வி.கே கெமிக்கல்ஸ் கேள்விப் பட்டிருப்பீங்களே? அது எங்களோடது தான். உங்க சொந்தக்காரர் தண்டாயுதபாணி தெரியுங்களா?”, என்று கேட்டார் கிருஷ்ணன்.

Advertisement

“ஆமா தெரியும். அவர் என்னோட மாமா தான்”, என்றார் சங்கரலிங்கம்.

“அவங்க பையன் அருண் எங்க கம்பேனில தான் வேலை பாக்குறான். அவன் கிட்ட தான் உங்க வீட்டு அட்ரஸ் கூட வாங்கினோம்”

“அவன் வேலை பாக்குற கம்பேனி நல்ல கம்பேனின்னு மாமா அடிக்கடி சொல்லுவார். ஆனா அது உங்களோடதுன்னு தெரியாது சார்”, என்றார் சங்கரலிங்கம். அவ்வளவு பெரிய இடமா என்று இப்போது ஷிவானி வீட்டினருக்கு அவர்கள் மீது ஒரு மரியாதை வந்திருந்தது.

“அந்த பேக்டரி போக ரெண்டு கல்யாண மண்டபம் இருக்கு. அது போக எங்க பூர்வீகம் நாகர்கோயில் பக்கத்துல இருக்குற கிராமம். அங்க விவசாயம் நிலம் எல்லாம் இருக்கு. தரிசா போட வேண்டாம்னு குத்தகைக்கு விட்டுருக்கோம். எல்லா சொத்துக்களுமே எங்க ரெண்டு பையங்களுக்கு தான். என்ன டா சொத்து பத்தி பேசி உங்க மனசை மாத்துறேன்னு நினைக்காதீங்க. தரகர் இருந்துருந்தா அவர் உங்களுக்கு சொல்லிப்பார். நாங்களே நேரா வந்ததுனால எல்லாம் நானே சொல்றேன். இப்போதைக்கு எங்க ரெண்டு பசங்க தான் பிஸினஸ் பாத்துக்குறாங்க. எங்களைப் பத்தி நீங்க வெளியவும் நல்லாவே விசாரிச்சிக்கோங்க”, என்றார் கிருஷ்ணன்.

            “அதான் காதல் கல்யாணம் வரைக்கும் வந்துட்டே. இன்னும் என்ன விசாரிக்க? ஆனா கல்யாணம் இப்ப பண்ண முடியாதுங்க”, என்று சங்கரலிங்கம் சொன்ன உடன் மதன் மற்றும் ஷிவானி முகம் சோர்வடைந்தது.

“என்ன ஆச்சு தம்பி? எதனால இப்ப வேண்டாம்னு சொல்றீங்க?”, என்று கேட்டார் வையாபுரி.

“என்ன இருந்தாலும் என் பொண்ணு காதல்ன்னு வந்ததை ஏத்துக்க முடியலை. இவ திமிர் எடுத்து இப்படி ஒரு காரியம் பண்ணினா அது சரின்னு சொல்ற மாதிரி உடனே அவங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க முடியாது. அதுக்காக வேற மாப்பிள்ளையை அவளுக்கு கல்யாணம் செஞ்சு வைப்பேன்னு சொல்ல வரலை. என்னைக்கா இருந்தாலும் உங்க சின்ன பையனுக்கும் எங்க சின்ன பொண்ணுக்கும் தான் கல்யாணம். ஆனா இப்ப வேண்டாம்”

“அதான் ஏன்னு கேக்குறேன்?”, என்று மீண்டும் கேட்டார் வையாபுரி.

“நான் அவளுக்கு மட்டும் அப்பா இல்லை சார். மூணு பிள்ளைகளுக்கு அப்பாவா எனக்கும் பொறுப்பு இருக்கு. என் மூத்த பொண்ணுக்கு நல்ல படியா கல்யாணம் செஞ்சு வைக்கணும். அது வரைக்கும் ஷிவானியும் தன்னோட சொந்த கால்ல நிக்கட்டும். வேலைக்கு போகட்டும். அவளை விட்டுட்டு இவளுக்கு கல்யாணம் முடிச்சு வச்சா அவ வாழ்க்கை என்ன ஆகுறது? நாளைக்கு வர மாப்பிள்ளை யோசிக்க மாட்டாங்களா? இவங்களுக்கு இப்ப என்ன அவசரம்?”, என்றார் சங்கரலிங்கம்.

“அப்படின்னா ஒரு நிச்சயம் மாதிரி பேசி முடிச்சிருவோமா?”, என்று கேட்டார் கிருஷ்ணன்.

“எதுக்கு இவ்வளவு அவசரப் படணும்? ஒரு மூணு வருஷம் போகட்டும்? ஏன் அது வரைக்கும் இவங்க காதலுக்கு பொறுமை இல்லையா? நீங்க சொல்ற மாதிரி நிச்சயம் நடத்தினாலும் எங்க சொந்த பந்தம் வந்து மூத்தவளை வச்சிட்டு இளையவளுக்கு எதுக்கு பேசி முடிக்கிறீங்கன்னு கேப்பாங்க. ஒவ்வொருத்தர் கிட்டயும்  போய் காதல் அது இதுன்னு விளக்கம் கொடுத்து அசிங்கப் பட முடியாது. நான் சொன்னா சொன்ன மாதிரி நடப்பேன். என் மூத்த பொண்ணு கல்யாணம் முடிஞ்ச அடுத்த முகூர்த்தத்துல இவங்களுக்கு கல்யாணம் பண்ணலாம். இல்லை அது வரை பொறுக்க முடியலைனா உங்க மருமகளை இப்பவே கையோட கூட்டிட்டு போங்க. ஆனா அதுக்கப்புறம் எங்களுக்கும் இவளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் காதலுக்கு எதிரி கிடையாது. ஆனா என் பிள்ளைங்க இப்படி தான் இருக்கணும்னு ஒரு எதிர்பார்ப்பு இருந்துச்சு. அதையும் கெடுத்துட்டா. கல்யாண விஷயத்துலயும் அப்படியே நடந்தாலும் நான் கவலைப் பட மாட்டேன்”, என்றார் சங்கரலிங்கம்.

சங்கரலிங்கம் சரியாக தான் பேசினார். ஆனாலும் எல்லாருக்கும் ஒரு மாதிரி உள்ளுக்குள் உறுத்தியது. என்ன செய்ய என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்க கோதையின் கரத்தை யாரும் அறியாமல் தொட்டாள் ராஜேஸ்வரி.

கோதை மருமகளைப் பார்க்க அவள் கண்கள் என்ன சொல்லியதோ? மருமகளிடம் தான் பார்த்துக் கொள்வதாக கண்ணைக் காட்டியவர் “வீட்டுக்கு பெரியவளா எனக்கு ஒரு யோசனை தோணுது. நான் சொல்லலாமா?”, என்று கேட்டார் கோதை.

“சொல்லுங்க மா”, என்றார் சங்கரலிங்கம்.

“ஒரு அப்பாவா நீங்க யோசிக்கிறது சரி தான். அதே மாதிரி தான் எங்களுக்கும். நாங்க இப்ப உடனே பேச வந்தது கூட யாராவது இவங்க ரெண்டு பேரையும் பாத்து ஏதாவது சொல்லிறக் கூடாதுன்னு தான். சின்ன பிள்ளைங்க. நமக்கு இருக்குற பக்குவம் அவங்களுக்கு இல்லை”

“இப்ப என்ன பாட்டி சொல்ல வரீங்க? உடனே இவங்க கல்யாணத்தை நடத்தி வைக்கணுமா?”, என்று கேட்டான் புகழ்.

“நான் அப்படி சொல்லலை பா. உங்க ஆசை உங்க மூத்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது. அதுக்கு தான் வழி சொல்றேன். பேசாம உங்க மூத்த பொண்ணை எங்க மூத்த பேரனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துருங்க. உங்க ரெண்டு பொண்ணுங்களும் எங்க வீட்டுக்கே மருமகளா வரட்டும். என்ன சொல்றீங்க? ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா கூட முடிச்சிறலாம். முகூர்த்தம் மட்டும் முன்ன பின்ன வச்சிக்கிட்டா போச்சு. அக்காவுக்கு நல்ல சம்பந்தம் வந்துச்சு. அப்படியே தங்கச்சிக்கும் முடிவாகிட்டுன்னு தானே சொந்தக்காரங்க பேசுவாங்க. அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் ஒரே வீட்ல காலம் முழுக்க ஒருத்தொருக்கொருத்தர் துணையா இருந்துக்குவாங்க. எப்படி என்னோட ஐடியா?”, என்று கோதை கேட்க அனைவரும் திகைத்து போனார்கள்.

“அட இது எவ்வளவு நல்ல விஷயம்? எனக்கு கூட தோணலையே?”, என்றார் வையாபுரி.

“ஆமா பா, நல்ல காரியம் தான். ஆனா உங்க பேரன் ஒத்துக்குவானா?”, என்று கிருஷ்ணன் கேட்க “நாம தான் அவனை ஒத்துக்க வைக்கணும். முதல்ல இவங்க வீட்ல என்ன சொல்றாங்கன்னு பாப்போம்”, என்றாள் ராஜேஸ்வரி.

ஷிவானி வீட்டினருக்கு ஷிவானியின் திருமண பேச்சே திகைப்பு தான் என்னும் பொழுது இப்போது கோதை கேட்டது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் கோதை ஒரே மேடையில் திருமணம் வரைக்கும் பேச அவர்களுக்கு என்ன செய்ய என்றே தெரிய வில்லை.

இதில் சந்தோஷமாக இருந்தது ஷிவானியும் மதனும் தான். புது வேலை கிடைத்திருக்கிறது அதில் சென்று வேலை பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஷிவானிக்கு தோன்ற வில்லை, திருமணம் என்றதும் அவர்கள் மனது கனவுலகுக்கு சென்று விட்டது. சங்கரலிங்கம் திருமணம் இப்போது வேண்டாம் என்று சொன்னதும் வாடிய அவர்கள் முகம் இப்போதும் மீண்டும் திருமணம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று சொன்னதும் மலர்ந்தது. ஷிவானிக்கு இரண்டு திருமணமும் ஒன்றாக நடப்பது பிடிக்க வில்லை தான். ஆனாலும் அவர்கள் திருமணம் நடந்தால் சரி என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!