பந்து வேகமாக வருகிறது… இதோ பேட்ஸ் மேன் தன் காலைகளை ஊன்றி கையில் இருக்கும் மட்டையை ஓங்குகிறார்… இதோ அடுக்கப்போகிறார்… அடித்து விட்டார்…
இது கிரிக்கெட் கமெண்டரி. இது நம் பாரதிக்கு செய்து கொண்டிருக்கும் காரியத்திற்கு பின்னால் வாய்ஸ் ரெட்கார்டு செய்து சொல்லிப் பார்த்தால் சரியாக பொருந்தி இருந்தது. பந்தை விளாசி தள்ளும் டோனி போல் பூச்சாடியைப் பிடித்துக் கொண்டு பார்த்திபனுக்காக காத்திருக்க, நீரின் சத்தம் நின்றது.
Advertisement
விசில் அடித்தபடி ஜாலியா வெளியே வந்தவனை அடிக்க பாரதி ஓங்க, நல்ல வேளையாக பார்த்திபன் சுதாரித்து விட்டான்.
“ஹேய்… ” என்றபடி உயர்த்திய அவளின் கரம் பற்றிவன்,
Advertisement
Advertisement
“மைம்மா… என்னதிது? ரொம்ப நாள் கழிச்சி பாக்குறோம். அப்ப இப்படியா வரவேற்ப.” எனக் கேட்டான், நெஞ்சை நீவி விட்டபடி.
“நீயா! உன்ன யாருய்யா ரூம் குள்ள வரச் சொன்னா?” என்றவளின் கரத்தை பார்த்திபன் விடவில்லை, இன்னும் அது உயர்ந்த நிலையில் தான் இருந்தது.
“அதுக்கு… இப்படி தான் சொல்லாம கொல்லாம வந்து ரூம்க்குள்ள வந்து பாத்ரூம்ல போய் உக்காந்துப்பியா! “
“அப்றம் வேற எங்க போகச் சொல்ல. அர்ஜென்ட்டும்மா…”
“எங்கயும் போ… முதல்ல கைய விடு…” இப்போதும் விடவில்லை அவன். மணிக்கட்டை அழுந்த பிடித்தபடி கரத்தை கீழே இறக்கி இருந்தான்.
” ஏன் ஃபங்ஷனுக்கு வரல. நீ ஊர்ல இல்லன்னு நினைச்சேன். வீட்டு ஓனரா மாறுனதும் வீட்டுல நிறைய வேலை இருக்கு போல, அதா உயிர் தோழி விசேஷத்துக்கு கூட வர முடியலன்னு தப்பா நினைச்சிட்டேன் மைம்மா உன்ன.. அதுக்கு ஸாரி ய்யா…” எனப் போலியாக வருத்தப்பட்டான்.
“நீ என்ன வேண்ணாலும் நினைச்சிக்க. எனக்கு என்ன வந்தது? ” என்றவள், சில நொடி அமைதிக்கு பின்,
“நேத்து உன்ன ரிஜிஸ்டர் ஆஃபிஸ்ல பாத்தேன்.” எனச் சின்ன குரலில் சொல்ல,
“உனக்காகத்தா மைம்மா வந்தேன். என்னோட மைம்மா அப்பார்ட்மெண்ட் வாசியா மாறப்போற அழக பாக்கணும்னு வந்தேன். வீடு கை மாறுற வர உன்ன நேர்ல வந்து பாக்க வேண்டாம்னு நினைச்சேன். ஏன்னா மாறன் கண்ணுக்கு நாம பழகுறது தெரிஞ்சா தேவையில்லாம உனக்கு டார்ச்சர் குடுப்பான். அதா இப்ப வீடு கைக்கு வந்திடுச்சில்ல. இனி டெய்லி மைம்மா கூட தா… ” என குதூகலமாக சொல்ல,
“என்னாது டெய்லியுமா. நீ ஏதோ ரெட்ட அர்த்தத்துல பேசுற மாதிரில்ல இருக்கு. ” என விழி விரிய கேட்டாள்.
“ரெண்டு அர்த்தமா! நான் ஒன்னத்தா நினைச்சி சொன்னேன். இனி உ செட்ல வச்சி மீட் பண்ணலாம்லன்னு. ரெண்டாது அர்த்தம் என்னவா இருக்கும்…” என யோசித்தவன்,
“மைம்மா அத நீயே சொல்லிடேன்.” என ஆர்வமுடன் கேட்டான்.
“நீ ஒன்னும் தெரியாத பச்ச மண்ணு. உனக்கு டீச்சரம்மாவ மாதிரி வெளக்கம் சொல்ல எனக்கு நேரமில்ல. நான் கிளம்புறேன். நீ பூஜாட்ட சொல்லிடு.” என்றவள் நடக்கத்தான் முயன்றாள். ஆனால் முடியவில்லை.
பூங்கொடியாளின் பூக்கரம் ஆடவனின் உடும்பு பிடிக்குள் சிக்கி இருக்கும் போது எப்படி நகர்வது? திரும்பிய வேகத்தில் பார்த்திபன் மீது மோதியிருப்பாள். நல்ல வேளையாக அவளின் தோளில் மற்றொரு கரத்தை வைத்து தடுத்து நிறுத்தினான் பார்த்திபன்.
“ஏன் குடிகாரி மாதிரி தள்ளாடுற.? ஸ்டெடியா நில்லு பாப்போம்.” எனக் கேலி செய்து பாரதியை ஏற இறங்க பார்த்தான். அந்தப் பார்வை பெண்ணவளை நாணம் கொள்ள வைக்கும் அளவுக்கு இருந்தது. பார்வையில் அத்தனை ரசனை… ஒருவித ஈர்ப்பும் இருக்க, உள்ளுக்குள் எதுவோ செய்தது.
ஆனால் தன் உணர்வுகளை வெளிப்படையாக காட்டி பழக்கம் இல்லாத பாரதி முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு,
“என்னை நிக்க வச்சி அழகு பாக்கத்தா வந்தியா.. ” எனக் காட்டமாக கேட்டாள்.
“இல்ல… கூட்டுட்டு போக வந்தேன். வா.. ” என்றவன் பிடித்திருந்த கரத்தைப் பற்றி இழுத்து அறையை விட்டு வெளியே நடந்தான்.
“யோவ் எங்கயா என்னை இழுத்திட்டு போற… வுடுய்யா.. வுடு.. ” என்றவுடன் பார்த்திபன் நின்று விட்டான்.
‘என்ன சொன்னதும் கேட்டுட்டான்.’ என்பது போல் பாரதி பார்க்க,
“மைம்மா… இந்த டிரெஸ் உன்னிதா? இல்ல வாடகைக்கி வாங்கிட்டு வந்தியா?” எனச் சந்தேகம் கேட்டான்
“ரொம்ப அழகா இருக்க மைம்மா நீ. அது உன்னோட காஸ்ட்யூம்னாலயா! இல்லயான்னு தெரியணும். ஆனா செம்ம அழகா இருக்க.” என்று அவளின் அழகை உள்வாங்கி கிரகித்துச் சொன்னவனை, முறைக்க,
“சரி வா… அப்றமா பதில் சொல்லு.” என்று மீண்டும் இழுத்து கொண்டு நடந்தான். அவள் வர மறுத்தாலும்,
“நீ பக்கத்துல இல்லாம பூஜா முகமே வாடி போய் இருந்தது. எந்த ஃபோட்டோக்கும் சரியா போஸ் குடுக்கல. ஆன்டிக்கு பிடிக்காதுன்னாலும் ஒரு கெஸ்ட்டு மாதிரி நீ வந்து அவள பாத்திட்டு போயிருக்கலாம். எவ்ளோ ஃபில் பண்றா தெரியுமா?” எனப் பூஜாவிற்காக அழைத்துச் செல்கிறேன் என்று காரணம் சொல்லி இழுத்துச் சென்றான்.
“உ வருங்கால பொண்டாட்டி முகத்துல சந்தோஷத்த பாக்க நாந்தா கிடைச்சேனா. விடுய்யா என்னை… நான் போகணும்.” என்றவளின் மறுப்பு நின்று போனது, பூஜா ஓடி வந்து கண்ணில் நீருடன் அவளை அணைக்கும் போது. ஏன் தள்ளி இருந்தோம் வந்திருக்கலாம் என்று பாரதிக்கும் வருத்தமாகிப் போனது.
“சரி சரி… உங்க நட்புக்காக படத்த சாப்டதுக்கு அப்றம் வைச்சிக்கலாம். பசிக்கிது.” என்றவனுடன் பூஜாவும் சேர்ந்து பாரதியை உணவுண்ண அழைத்துச் சென்றனர்.
“ராம் மாமா… யார் வந்திருக்கா பாருங்க?” எனப் பாரதியைப் பிடித்திருந்த கரத்தை உயர்த்தி காட்டி, ஏதோ சிவப்பு கம்பளத்தில் நடந்து செல்லும் வீஐபி, கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து கை அசைப்பது போல் கை அசைத்து ஹாலிற்குள் நடந்து வர, மற்றவர்களுக்கு தான் அது அதிர்ச்சியாகி போயிற்று.
“இது என்னோட செல்ல அத்தை. இது ராம் மாமா. உனக்கு தா தெரியுமே. இது…” எனக் குடும்ப அடையாள அட்டையில் ஆள் சேர்ப்பது போல் வரிசையாக ஒவ்வொருவராக அறிமுகம் செய்ததோடு மட்டுமல்லாது, பாரதியை இழுத்துக் கொண்டே சென்று ஊட்டாத குறையாக சாப்பிட வைத்தான்.
பார்த்திபன் நட்பு பாராட்டி பழகும் பெண்கள் யாரையும் வீட்டாருக்கு அறிமுகம் செய்தது இல்லை. வின்சென்டைத் தவிர மற்ற யாருக்கும் பார்த்திபன் பழகும் பெண்களைப் பற்றி தெரியாது.
முதல் முறை ராமிடம் பாரதிக்காக அவன் உதவி என்று கேட்ட போதே பாரதி ஸ்பெஷல் என்று ராமிற்கும் சந்ருவிற்கும் புரிந்து விட்டது. ஆனால் அது ஏன் என்று தான் அவர்களுக்கு புரியவில்லை.
குட்டி சுட்டீஸ் முதல் வயதான தாத்தா பாட்டி வரை அவளை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்க, வரலட்சுமியும் நேகாவும் பாரதியைப் பற்றி என்கொரி செய்ய தொடங்கினர்.
“லாஸ்ட்டா ஒரு ப்ரைடல் செட் டைமண்ட் டிசைன் காட்டினேனே சித்தி. அது இந்த பொண்ணு தா டிசைன் பண்ணது. மெக்கானிக்கா இருந்திட்டே இந்த வேலையையும் பாக்க டிரெயின் எடுத்திருக்கா. ரொம்ப நல்ல பொண்ணு. திறமையானது.” என ராம் பாராட்டும் போதே வரலெட்சுமிக்கு பாரதியைப் பிடித்து விட்டது. கூடவே,
ஒரு மாதம் அவளுக்கான பயிற்சி முடிந்த நிலையில் மாறனிடம் கொடுக்க போகும் டிசைன்களை வடிவமைக்க பார்த்திபன் வாங்கிச் சென்ற காகிதத்தில் என்ன டிசைன் இருந்தது என்பதை அறிய வேண்டியது அவசியம் தானே. அதை ஒரு முறை காட்டச் சொல்லி கேட்க, ராம் வெகுவாக யோசித்தான்.
“நான் உங்க நம்பிக்கைக்கு ஏத்தவ இல்லன்னு நீங்க நினைக்கிறீங்க. அந்த நம்பிக்கைய ஒரு நாள் நான் வாங்குவேன்.” என்று அவள் சொல்லிச் சென்ற தோடு மட்டுமில்லாது, மாறனுக்குக் கொடுக்கப் போவதாக அவள் காட்டிய டிசைன், ராமை கவர்ந்தது. அற்புதமாக இருந்தது அது. அவளின் கற்பனை. அதைக் கை வண்ணமாக தீட்டியது என அவளின் திறமையை பறைசாற்றும் வகையில் இருந்தது அது.
அதைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள நினைத்தான் ராம். அதான் பார்த்திபன் சொன்னது போல் காண்ட்ராக்ட் போட்டு அவளின் டிசைன்களுக்கு ஏற்ப பணம் தருவதாக பிஸ்னஸ் பேசும் முயற்சியில் இருக்கிறான் ராம்.
அப்படி எனில் பாரதியும் VMS நிறுவனத்தின் ஒரு ஊழியர் என்று சொல்ல,
“புதுசா ஒருத்திய வேலைக்கி சேக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? உ இஷ்டத்துக்கு ஆள் சேப்பியா நீ?” என நேகா கத்தினாள்.
“நடக்கப்போற exhibition-க்கு நமக்கு இன்னவேட்டிவ்வான டிசைன்ஸ் வேணும். பாரதிக்குத் திறம இருக்கு.”
“ஆனாலும் ஒரு மெக்கானிக்கா உனக்கு கிடைச்சா. நீ சொல்றத வச்சி பாத்தா கூவமாத்து பக்கத்துல குடியிருக்குறவ போலயே!! என்ன படிச்சிருப்பா.. +2 வாது முடிச்சிருக்காளா! இல்ல அதுக்கும் விழியில்லாம போச்சா.” என ஏளமாக பேசினாள் நேகா.
“நேகா, நாம பாக்க வேண்டியது திறமையத்தானே தவிர எங்க தங்கி இருக்காங்கன்னு இல்ல. முகத்த பாத்து பழகாத. அவளுங்களோட குணத்த பாத்து பழகு. ” என்றார் வரலெட்சுமி காட்டமாக.
‘ஆரம்பிச்சிட்டாங்க. எப்படித்தா இவங்களால சலிக்காம சமத்துவம் பேச முடியுதோ!’ எனப் புலம்பியபடியே நகர்ந்து சென்றாள் நேகா.
வரலெட்சுமி பாரதியிடம் பேசச் சென்றார். ராம்.. மயூரி.. சந்ரு.. பார்த்திபன்.. பூஜா.. சுகுமாரன்… என அறுவரும் பேரும் பேசி சிரித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் வரலெட்சுமின் அருகில் இருந்த பாரதி மட்டும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். முகம் யோசனையில் ஆழ்ந்திருந்தது.
கூட்டத்திற்கு மத்தியில் தன் உயிர் தோழியுடன் இருந்தாலும், மனம் தனிமையில் இருப்பது போல் சுட்டது. சூழல் கணமாகத் தோன்றியது. விழா இனிதே நிறைவேறினாலும், பாரதிக்கும் மட்டும் நெருடல் நெருஞ்சில் முள்ளாய் குத்தியது.
கேட்கும் போதெல்லாம் மனத்தில் மாயம் செய்யும் ரிங்டோன் அது. புல்லாங்குழல் இசையில் மயங்காதவர் யாரும் இல்லையே!
இன்று, மயங்க வில்லை மனம்.. அது எஃகை ஒத்த உலோகம் போல் இறுக்கி போய் இருந்தது. நேற்று பூஜாவின் நிச்சயத்தில் பார்த்திபனின் குடும்பத்தை சந்தித்ததில் இருந்து இறுகிப் போய் தான் அமர்ந்திருக்கிறாள் பாரதி.
அந்தக் குடும்பத்து வாரிசா பார்த்திபன்!! ஏன் அப்படி இருக்க வேண்டும்? யாரை பார்க்க கூடாது என வாழ் நாள் சபதம் ஏற்றேனோ! அவனைச் சந்திக்க நேர்ந்தது பார்த்திபனால். எவன் குரலை கேட்க கூடாது என்றிருந்தேனோ! அவன் குரல் கேட்கையில் காதில் பழுக்க காய்ச்சிய கம்பியை விட்டது போல் இருந்தது. அவனின் ஒவ்வொரு சிரிப்பும், உடலில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தை ஒரே நொடியில் பாய்ச்சுவது போல் உணர்ந்தாள் அவள். அந்த விழாவில் இருந்த ஒவ்வொரு நொடியும் அனலில் இட்ட புழுவை போல் அவள் மனம் துடித்ததை யாரும் அறிய மாட்டார்கள்.
அதிலும் அந்த குடும்பத்து பையன் பார்த்திபன் என நினைக்கும் போது, அவனை ரசித்து பார்த்த தன் விழிகள் இரண்டையும் பிய்த்து எறியும் அளவுக்கு கோபம் வந்தது.
விடாமல் அவளின் செல் ஃபோல் இசைக்க, திரையில் தெரிந்த எண்ணில்,
” வேண்டாம்… இதுக்கு முன்னாடி யாருன்னு தெரியாம பழகிட்டேன். தெரிஞ்சதுக்கு அப்றமும் அந்த குடும்பத்துக் கூட சகவாசமே வேண்டாம். அம்மா ஒரு பழமொழி சொல்லுவாங்க. துஷ்டன கண்டு தூர விலகுன்னு. விலகி இருப்போம். அந்தத் துஷ்ட குடும்பத்துக்கிட்ட இருந்து விலகியே இருப்போம்.” என அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டவள், ராம் விடுத்த அழைப்பை ஏற்கவில்லை.
இன்று காலையில் தான்.. ‘என்னால் உங்கள் நிறுவனத்திற்காக வேலை பார்க்க இயலாது. கான்ட்ராக்ட்டை ஏற்க இயலாது.’ என ஒரு மெசேஜைத் தட்டி விட்டிருந்தாள். அதற்கு விளக்கம் கேட்டு தான் ராம் ஃபோன் செய்து கொண்டே இருக்கிறான்.
” கருப்பு, அந்த சிப்ட் கார நாளைக்கி டெலிவரி குடுக்கணும். ஃபுல் அமௌண்டும் செட்டில் பண்ணிட்டான். அதுனால ஓயாம ஃபோன போட்டு போட்டு உசுற வாங்குறான். சீக்கிரம் வேலய முடி. ” என வேலை ஏவ, இருவரும் சேர்ந்து ஒரு காரின் பழுதை நீக்கி சரி செய்து கொண்டிருந்தனர்.
“பாரதி…” என்ற அதிகாரமும் கோபமும் கலந்த குரல் அவர்களின் வேலைக்கு இடைஞ்சலாக கேட்டது, நிமிர்ந்து பார்த்தவள்.
“நீ என்ன அண்ணாத்த ஷெட்டு பக்கம்! கார் எதுவும் ரிப்பேரா என்ன?” என ஏதும் அறியாதது போல் கேட்டாள்.
“நான் எதுக்கு வந்தேன்னு உனக்கு தெரியாதா?” எனக் காட்டமாகவே கேட்டான் ராம்.
‘எத்தனை முறைதான் அழைப்பது. இந்த எலிசபெத் ராணியை காண அரண்மனைக்கு அல்லவா வரவேண்டி இருக்கிறது.’ என்ற கடுப்பாக இருக்கும்.
“தெரியும் தா. ஆனா நேர்ல வந்து விசாரிக்கிற அளவுக்கு அது முக்கியமானதான்னு தா தெரியல. ஒரு நாளைக்கி எத்தனையோ பேர வேலைக்கி எடுக்குறீங்க. வேலைய விட்டு தூக்குறிங்க. நிறைய கான்ட்ராக்ட்ல கையெழுத்து போடுறாங்க. அதுல நான் வந்து டிசைன் பண்ணித்தா உங்க கம்பெனி நட்டமா நின்னுடப்போதா. ” என அலட்சியமாகவே கேட்டாள்.
” இத உங்கிட்ட இருந்து எதிர்பார்க்க பாரதி. நாம கொஞ்ச நாளா தொழில் சம்பந்தமான நிறைய விசயம் பேசிக்கிறோம். அதுல உங்கிட்ட ஒரு ஆர்வம் இருந்தது.ன. சம்பாதிக்கனுங்கிறதையும் தாண்டி கத்துக்கணும்னு ஆச இருந்தது. அத நான் பாத்தேன். எனக்கு உறுதுணையா கூட வந்து நிப்பன்னு நம்புனேன்.” என அவள் டிசைனராக வேலை செய்ய சம்மதிக்காதது குறித்த வருத்தப்பட்டான்.
“எந்த வகைல நீ என்னை நம்புற அண்ணாத்த. நான் உ எதிரி சொல்லி உ மாப்ளய ஏமாத்தி ஆட்டைய போட்டவ. என்னை உள்ள சேத்தா, நான் மறுபடியும் உ எதிரி கூட கை சேத்துக்க மாட்டேன்னு எப்படி நம்புற? நாளைக்கி உ கம்பெனில இருந்து எதாது சீக்ரெட் கசிஞ்சா. என்னத்தா சந்தேகப்படுவ. நான் செய்யவே இல்லன்னாலும் சந்தேகம் சந்தேகமாத்தா இருக்கும் உ பார்வ. நான் வரல, உங்க விளையாட்டுக்கு. “
” நம்பிக்க அது தான வரணும் பாரதி. முதல்ல அது இல்ல தா. ஆனா வந்தது.. இப்ப நம்புறேன். பாரதி என்ன பண்ணாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்னு நம்புறேன். சொல்லு… இத வேண்டாம்னு நீ நிராகரிக்க காரணம் என்ன?” என அழுத்தமாக கேட்டவன், அவள் காரணத்தை சொல்லும் வரை விடவில்லை. அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள் மணிபாரதி.
ராமால் நம்ப முடியவில்லை. அதே நேரம் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. மாணிக்கத்தின் குடும்பத்தை அவனுக்கு பத்து ஆண்டுகளாக தெரியும். அவனை மதித்து பழகும் அன்பானவர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு கருப்பாடு மறைந்திருப்பதை அவன் எதிர் பார்க்கவில்லை. இது மற்ற அனைவருக்கும் தெரியுமா? இல்லை அனைவரையும் ஏமாற்றி வருகிறானா என்ற சந்தேகமே வந்தது ராமிற்கு.
பாரதியின் முகத்தில் இருந்த கோப சிவப்பும், பேச்சில் இருந்த வலியும், கண்களில் இருந்த வேதனையும், பாரதி பொய் உரைக்கவில்லை என்பதை ஆணித்தரமாக சொல்லியது.
” இப்ப சொல்லு அண்ணாத்த. நான் எப்படி உங்க கம்பெனில வேல பாக்க முடியும்? ஒரு வேள நான் அங்க வந்தாலும், அந்தாளு மேல எனக்கு இருக்குற கோபத்துல என்ன வேண்ணாலும் பண்ணுவேன். தப்பு சரின்னு பாக்க மாட்டேன். நீ கை காட்டி, உள்ள வந்த நான், இத்த பண்ணா உனக்கு தா அசிங்கம். நீ எனக்கு டீச்சரு மாதிரி. உன்னிய அசிங்கப்படுறது தப்பு அண்ணாத்த. அதுனால விட்டுடு. ” என்றவளிடம் எதுவும் சொல்லாது ராம் புறப்பட்டான்.
பாரதி ராமிற்கு தோழியா என்றால் இல்லை. தங்கையா என்றால் அதுவும் இல்லை. அவளுக்கும் அவனுக்கும் வேவ் லெண்த்… அதாவது பிஸ்னஸ் ரிலேட்டான புரிதலும் உணர்வுகளும் ஒன்று போல் இருந்தது. அவளின் திறமையை மெருகேற்றி, நன்கு டிரைவிங் கொடுத்தாள் பாரதி அனைவரும் அன்னாந்து பார்க்கும் ஒரு பிஸ்னஸ் விமனாக ஜொலிப்பாள் என்று நம்பினார் ராம்.
ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியருக்கு மிகவும் பிடித்த ஒரு மாணவன் இருப்பான். பக்கத்தில் அமர்த்தி அனைத்தையும் கற்று கொடுப்பார் அவர். பள்ளியில் முதலிடம் பிடிப்பான் என்று எதிர்பார்த்த மாணவன் பரிட்சை எழுத முடியாத நிலை வந்தால் எப்படி இருக்கும். அந்த ஆசிரியரின் மனநிலையில் தான் ராம் இருந்தான்.
செல்லும் அவனைப் பார்க்கையில் சிறு வருத்தம் வந்தது. ஆனால் பரிதாபமோ கருணையோ படும் நிலையில் அவள் இல்லை. அப்போது அவளின் ஃபோன் மீண்டும் சிணுங்கியது. அதை கண்டவள்,
“ம்ச்… இவெ வேற தொனத்தொனன்ட்டு… உ மாப்ளய எம்பக்கம் வர வேண்டாம்னு சொல்லு அண்ணாத்த… காலைல இருந்து இருநூறு தடவ கால் பண்ணிட்டான். அவனால தா நான் நேத்து ஃப்ங்ஷன்ல கலந்துக்க வேண்டியதா போச்சி. பாக்க கூடாதத பாக்குற மாதிரி ஆகிடுச்சி. அதுனால அவன்ட்ட சொல்லி வைங்க” எனக் கத்தினாள்.
“நான் வந்தது உங்கூட பிஸ்னஸ் பேச.. குடும்ப விசயத்த பேச இல்ல. நீ தா கான்ட்ராக்ட்டுக்கு முடியாதுன்னு தெளிவா சொல்லிட்டேல்ல. அவ்ளோ தா… நமக்குள்ள இருந்த உறவு முறிஞ்சி போச்சி. இனி யார் வந்து உன்ன பாத்தாலும் சமாளிக்க வேண்டியது உ பொறுப்பு. அது என்னோட பிரச்சன இல்ல. எனக்கும் இதுக்கும் சம்மந்தமில்ல. நீயாச்சி பார்த்திபனாச்சி..” எனப் பதிலுக்கு அவனும் கத்தி விட்டு சென்றான்.
“என்னடா இது… நான் உ வீட்ட பங்கம் பண்ணப்போறேன்னு சொல்றேன். அது உ விருப்பம்னுட்டு போறாரு. இந்த பார்த்திபன் கூட பேசவா வேண்டாமா. அவன வச்சி அந்தாளுக்கு நல்ல பாடம் கத்துக்குடுத்தா என்ன. ” என அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவளின் செல் ஃபோன் மின்னியது.
இம்முறை அதை எடுத்து காதில் வைத்தாள்..
“க்கா… பெயின்ட் வேல முடிஞ்சு. வந்து துட்ட குடுத்திட்டு போக்கா.” என அவள் புதிதாக வாங்கிய வீட்டிற்கு வெள்ளை அடித்தவர்கள் பேச,
“பொறு… என்ன அவசரம்.. துட்டு துட்டுன்னு பறந்தா உடனே குடுத்திடுவாங்களா. நீ பண்ண வேல சுத்தமா இருக்கான்னு பாத்திட்டு தா பைசா தருவேன். இல்லாங்காட்டி ஒத்த ரூபா தாள கூட கண்ணுல காட்ட மாட்டேன். ” என்ற பாரதி பணத்தை எடுத்துக் கொண்டு தன் புது இல்லம் தேடிச் சென்றாள்.
தன் தங்கைக்கு பிடித்த பிங்க் கலர் ஹால் முழுவதும் அடிக்கப்பட்டிருந்தது. அன்று அறைகுறையான வேலைகளுடன் இருந்த வீடு, இப்போதே நீங்கள் வந்து குடி புகலாம் என்று சொல்லும் அளவுக்கு விரைவாக தயாராகியிருந்தது..
சுவரில் பூசிய வண்ணங்கள் சில தரையில் சிந்தியிருக்க, “டேய் காளி இன்னாதிது. மருவாதையா தொடச்சி குடுத்தின்னு போ… ” என பெயிண்ட் அடித்தவர்களுடன் சண்டை போட்டு அனைத்தையும் சுத்தம் செய்ய வைத்தாள்.
“இதுல மீதி பெயிண்டு இருக்கு க்கா. வேணுங்கிற இடத்துக்கு நீயே அடிச்சிக்க.” எனச் சொல்லி பாதிக்கும் மேல் காலியாகி இருந்த சின்ன சின்ன பெயிண்ட் வாளிகளை ஹாலில் அடுக்கி வைத்தவர்கள் காசை வாங்கிக் கொண்டு சென்றனர்.
பாரதி அந்த வீட்டை ஆசையுடன் கண்டு ரசித்தாள். அவளின் கனவு முழுதாக வளர்ந்து, புத்தாடை போல் வர்ணம் பூசியிருந்தது. கபோர்ட் உட்பட அனைத்து அலங்கார வேலைகளையும் முடித்து மணப்பெண் போல் காட்சி தந்தது.