அதிகாலை நாலு மணி. ஊரெல்லாம் இன்னும் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில், பழனிச்சாமி வீட்டு முற்றத்தில் மட்டும் திருவிழா கோலமாக இருந்தது.
“முற்றத்தில் இருந்தபடி
ஏய் சுந்தரு… அந்தப் பந்தக்கால் பக்கத்துல இருக்கிற வாழைமரத்தைக் கொஞ்சம்
நேரா கட்டுப்பா. காத்தடிச்சா யார் தலையிலனா விழுந்துடப் போகுது!” என்று குரல் கொடுத்துக்கொண்டே வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஓடினார் வைரக்கண்ணுவின் அப்பா பழனிச்சாமி.
Advertisement
வீட்டுக்குள்ளே, மாப்பிள்ளை அறையில் நிலைக்கண்ணாடி முன்னால் நின்றுகொண்டிருந்தான் வைரக்கண்ணு.
வயது இருபத்தெட்டு. மாநிறம், அளவான உயரம், கழுத்தில் மெல்லிய தங்கச் செயின், நெற்றியில் பட்டை விபூதியும் சந்தனமும். பார்த்தவுடனே ‘ரொம்ப சாமி பக்தியான பையன்பா’ என்று சொல்லத் தோன்றும் முகம்.
ஆனால், இப்போது அந்த முகத்தில் மட்டும் பத்து வோல்ட் பல்பு மினுக்குவது போல ஒருவிதப் பதட்டமும் வெட்கமும் மாறி மாறி வந்து போய்க்கொண்டிருந்தது.
Advertisement
கண்ணாடியில் தன் முகத்தை இடதுபக்கமாகவும், வலதுபக்கமாகவும் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தான் வைரக்கண்ணு.
Advertisement
தன் மீசையை லேசாக முறுக்கி விட்டவன், “ச்சே… நேத்து சலூன் கடைக்காரன் மீசையைக் கொஞ்சம் ஒட்ட வெட்டிட்டானோ? ப்பா… மூஞ்சி என்னமோ பால் வடிஞ்ச மாதிரி இருக்கே!” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டான்.
அப்போதுதான் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான் அவனது உயிர் நண்பன் சுந்தர். கையில் இரண்டு தம்ளர் ஃபில்டர் காபியோடு வந்தவன், வைரக்கண்ணுவின் தோரணையைப் பார்த்துவிட்டு “கெக்கே பிக்கே” என்று சிரித்து வைத்தான் .
“டேய் மாப்பிள்ளை! என்னடா காலைலயே கண்ணாடியை வச்சு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்க? சலூன் கடைக்காரன் வெட்டுனது மீசையைத்தான், மூக்கை இல்ல. பேசாம இந்தக் காபியைக் குடி,” என்று ஒரு தம்ளரை நீட்டினான்.
Advertisement
காபியை வாங்கிக்
கொண்டவன், “டேய் சுந்தர், விளையாடாதடா. எனக்கு வயித்துக்குள்ள என்னமோ பட்டாம்பூச்சிலாம் பறக்குற மாதிரி இருக்குடா. கையும் ஓடல, காலும் ஓடல,” என்றான்.
“ஏன்டா? கல்யாணம் பண்ணிக்கப் போறது நீயா, இல்ல நானா? உனக்குத்தான் ரெண்டு வருஷமா பொண்ணு தேடித் தேடி எங்க அப்பா செருப்பே தேஞ்சு போச்சு. இப்போ ஒருவழியா ஒரு நல்ல இடம் அமைஞ்சிருக்கு. சந்தோஷமா இருக்குறதை விட்டுட்டு, ஏன்டா இப்படிப் பேயறைஞ்ச மாதிரி முழிக்கிற?”
வைரக்கண்ணு காபியை ஒரு மிடறு குடித்துவிட்டு, ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். விடியற்காலைக் குளிர் லேசாக வீசிக்கொண்டிருந்தது.
“அதில்லடா சுந்தர்… எனக்குள்ள ஒரு சின்ன உறுத்தல் இருந்துக்கிட்டே இருக்குடா,” என்றான் வைரக்கண்ணு குரலைத் தாழ்த்தி.
“என்னடா உறுத்தல்? வரதட்சணை கம்மியா போச்சா?”
“ச்சீய்! நம்ம குடும்பத்தை பத்தி உனக்குத் தெரியாதாடா ? நமக்குப் பொண்ணு குணமா இருந்தா போதும், வேற எதுவும் வேணாம்னு எங்க அப்பா தெளிவா சொல்லிட்டாரு. ஆனா, எனக்கு என்ன சந்தேகம்னா… பொண்ணு வீட்டுக்காரங்க ஏன் இவ்வளவு அவசர அவசரமா இந்தக் கல்யாணத்தை நடத்துறாங்கங்கறது தான்?”
சுந்தர் நெற்றியைச் சுருக்கினான். “அதுல என்னடா சந்தேகம்? பொண்ணோட அப்பா பெரியசாமிக்கு உடம்பு சரியில்லையாம். ஹார்ட் ஆபரேஷன் பண்ணனும்னு டாக்டர் சொல்லியிருக்காங்களாம். அதுக்கு முன்னாடி தன் பொண்ணு கழுத்துல ஒரு தாலியை ஏத்திப் பார்த்துடணும்னு ஆசைப்படுறாரு. இதுல என்ன தப்பு இருக்கு?”
“அது சரிதான்டா… ஆனா பொண்ணு போட்டோவைக் கூட ஒழுங்கா காட்டலையே! புரோக்கர் கொண்டு வந்தது ஏதோ அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எடுத்த பழைய போட்டோ. பொண்ணு பார்க்கப் போகலாம்னு எங்க அப்பா கேட்டதுக்கு, ‘எங்க குலவழக்கப்படி நிச்சயதார்த்தத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணைப் பார்க்கக் கூடாது’ன்னு சொல்லிட்டாங்க. சரி, நிச்சயதார்த்தத்திலயாவது பார்க்கலாம்னு போனா, அன்னைக்குப் பார்த்துப் பொண்ணுக்குப் பயங்கர காய்ச்சல்னு ரூமுக்குள்ளயே வச்சிருந்தாங்க. இப்போ நேரா முகூர்த்த மேடையிலதான் பொண்ணையே பார்க்கப் போறேன்!”
வைரக்கண்ணுவின் குரலில் இருந்த நியாயமான பயம் சுந்தருக்கும் லேசாகத் தொற்றிக்கொண்டது. ஆனாலும், நண்பனைத் தைரியப்படுத்த வேண்டும் என்பதற்காகச் சிரித்து மழுப்பினான்.
தங்கமயிலு! உன் பேரு வைரக்கண்ணு! வைரமும் தங்கமும் சேர்ந்தா ஜொலிக்காமயா போயிடும்? நீ கண்டதையும் நினைச்சுக் குழப்பிக்காம கிளம்பு. என்றான்.
அதற்குள் வைரக்கண்ணுவின் அம்மா மீனாட்சி உள்ளே வந்தார். மகனைப் பார்த்ததும் அவருக்குக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் முட்டியது.
“என் ராசா! எவ்ளோ அழகா இருக்கடா! யாரு கண்ணும் பட்டுடக் கூடாது,” என்று தன் சேலைத் தலைப்பால் அவனது கன்னத்தைத் தடவி, நெட்டி முறித்தார். “வாப்பா, மண்டபத்துக்குக் கிளம்ப நேரமாச்சு. மாப்பிள்ளை அழைப்புக்கு ஊரே வாசல்ல காத்துக்கிட்டு இருக்கு.”
உற்றார் உறவினர்கள் சூழ மாப்பிளை அழைப்பும் சிறப்பாக முடிந்திருந்தது.
மறுநாள் காலைவேளையில்
ஊர் எல்லையில் இருந்த அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபம் களைகட்டியிருந்தது. வாழைமரங்களும், மாவிலைத் தோரணங்களும், நாதஸ்வர ஓசையும் அந்தக் காலைப் பொழுதை மங்களகரமாக மாற்றியிருந்தன.
மணமேடையில் ஐயர் மந்திரங்களை ஓதிக்கொண்டிருக்க, அக்னி குண்டத்தில் இருந்து எழுந்த புகை மண்டபம் முழுவதும் பரவியிருந்தது. மாப்பிள்ளை கோலத்தில் மணப்பலகையில் அமர்ந்திருந்த வைரக்கண்ணுவுக்கு, உள்ளுக்குள் இருந்த பதட்டம் இன்னும் குறையவில்லை.
அவனது கண்கள் மண்டபத்தின் வாசலையும், மணப்பெண் அறையையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தன.
பெண் வீட்டார் சார்பாகப் பெரியசாமியும், அவரது மகன் கார்த்திக்கும் மண்டபம் முழுவதும் ஓடியாடி விருந்தினர்களை உபசரித்துக்கொண்டிருந்தார்கள். பெரியசாமியின் முகத்தில் ஒருவிதப் பதட்டமும், அதே சமயம் ஏதோ ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைக்கப் போகும் நிம்மதியும் தெரிந்தது.
“சரி… முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சு. பொண்ணை அழைச்சிட்டு வாங்கப்பா!” என்று ஐயர் குரல் கொடுத்தார்.
மண்டபத்தில் இருந்த சலசலப்பு அடங்கியது. நாதஸ்வரக் கலைஞர்கள் மங்கள இசையை வாசிக்கத் தொடங்கினார்கள்.
மணப்பெண் அறையின் கதவு திறந்தது.
அரக்கு நிறப் பட்டுப்புடவையில், மல்லிகைப் பூச்சரம் தலையில் புரள, கழுத்து நிறைய நகைகளோடு தங்கமயிலு வெளியே வந்தாள். அவளது இருபுறமும் அவளது அண்ணன் மனைவியும், சித்தியும் கைகளைப் பிடித்து அழைத்து வந்தார்கள்.
வைரக்கண்ணு தன் தலையைச் சற்று உயர்த்தி மணப்பெண்ணைப் பார்த்தான்.
அவளைப் பார்த்த அந்த முதல் நொடியில், வைரக்கண்ணுவின் மனதில் இருந்த அத்தனை சந்தேகங்களும், பயங்களும் பனி போலக் கரைந்து போயின.
மாநிறத்திற்குச் சற்று கூடுதலான சிவப்பு, வட்ட முகம், நெற்றியில் அளவான பொட்டு, கூர்மையான நாசி, எல்லாவற்றிற்கும் மேலாக அந்த முகத்தில் இருந்த ஒரு அமைதி! அவள் தலையைக் குனிந்தபடி நடந்து வரும் அழகே, ஒரு தேவதை பூமிக்கு இறங்கி வருவது போல இருந்தது.
பக்கத்தில் நின்றிருந்த சுந்தர், வைரக்கண்ணுவின் விலாவில் லேசாக இடித்து, “என்னடா மாப்பிள்ளை, இப்போ என்ன சொல்ற? லாட்டரி அடிச்ச மாதிரி இருக்கா?” என்று கிசுகிசுத்தான்.
வைரக்கண்ணு வெட்கத்தோடு புன்னகைத்துக்கொண்டான். “ஆமாண்டா… கடவுள் நமக்கு நல்ல வழிதான் காட்டியிருக்காரு,” என்று மனதிற்குள் கடவுளுக்கு நன்றி சொன்னான்.
தங்கமயிலு மணமேடைக்கு அருகில் வந்தாள். மேடையின் இரண்டு படிகளை ஏறும்போது, அவள் லேசாகத் தடுமாறினாள். உடனே அவளது அண்ணன் கார்த்திக் பதறிப்போய் அவளது கையை இறுக்கமாகப் பிடித்து, “பார்த்து மயிலு… மெதுவா வா,” என்று சொல்லி மேடையில் ஏற்றி, வைரக்கண்ணுவின் வலது பக்கத்தில் உட்கார வைத்தான்.
வைரக்கண்ணு அதைப் பார்த்துவிட்டு, ‘பாவம், பாரமான பட்டுப்புடவை, அதோட கல்யாணப் பதட்டம் வேற இருக்கும்ல… அதான் கால் தடுமாறுது’ என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான்.
மணப்பலகையில் அமர்ந்த தங்கமயிலு, தன் கைகளை மடியில் வைத்துக்கொண்டு, தலையைக் குனிந்தபடியே அமர்ந்திருந்தாள். அவளது மூச்சுக்காற்று வேகமாக வந்து போவது அவளது தோள்பட்டை அசைவிலேயே தெரிந்தது.
வைரக்கண்ணு அவளை ஓரக்கண்ணால் பார்த்தான். அவளது கன்னத்தில் வழிந்த லேசான வியர்வையைப் பார்த்ததும் அவனுக்குள் ஒருவிதப் பரிவும், அன்பும் பிறந்தது. ‘பயப்படாதீங்க, நான் உங்களை ரொம்ப நல்லா பார்த்துக்குவேன்’ என்று மனதிற்குள்ளேயே அவளிடம் பேசிக்கொண்டான்.
“மாப்பிள்ளை, பொண்ணுக்கு மாலை மாத்துங்க…” என்று ஐயர் சொல்ல, இருவரும் எழுந்து நின்றார்கள்.
தங்கமயிலுவின் கைகளில் இருந்த பெரிய ரோஜா மாலையை அவளது அண்ணன் மனைவி தாங்கிப் பிடிக்க, தங்கமயிலு அதை வைரக்கண்ணுவின் கழுத்தில் போட்டாள். அப்போது அவளது கைகள் லேசாக நடுங்குவதை வைரக்கண்ணு உணர்ந்தான். பதிலுக்கு வைரக்கண்ணுவும் புன்னகையோடு அவளது கழுத்தில் மாலையை அணிவித்தான்.
“சரி, நல்ல நேரம் முடியுறதுக்குள்ள தாலி கட்டும் வைபவத்தை முடிச்சிடலாம். எல்லாரும் அட்சதை எடுத்துக்கோங்க… கெட்டிமேளம்! கெட்டிமேளம்!”
ஐயர் மந்திரங்களை உரக்கச் சொல்ல, நாதஸ்வரமும் தவிலும் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு முழங்கின.
வைரக்கண்ணு தன் கையில் இருந்த மஞ்சள் கயிற்றோடு கூடிய திருமாங்கல்யத்தை எடுத்து, கடவுளையும் தன் பெற்றோரையும் மனதில் நினைத்து வேண்டிக்கொண்டான். பிறகு, தங்கமயிலுவின் கழுத்தில் அந்தத் தாலியைக் கட்டினான்.
முதல் முடிச்சு… இரண்டாவது முடிச்சு… மூன்றாவது முடிச்சையும் அவளது நாத்தனார் போட, தங்கமயிலு வைரக்கண்ணுவின் மனைவியானாள்!
மண்டபம் முழுவதும் மஞ்சள் அரிசி அட்சதையாகத் தூவப்பட்டது. பெரியசாமி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார். வைரக்கண்ணுவின் அப்பா பழனிச்சாமி மகிழ்ச்சியில் எல்லோருக்கும் சர்க்கரை வழங்கிக்கொண்டிருந்தார்.
“மாப்பிள்ளை, பொண்ணு நெத்தியில குங்குமம் வைங்க…” என்று ஐயர் குங்குமச் சிமிழை நீட்டினார்.
வைரக்கண்ணு தன் வலது கை மோதிர விரலால் குங்குமத்தை எடுத்தான். தன் மனைவியின் முகத்தை முதன்முறையாக மிக அருகில், முழுமையாகப் பார்க்கப் போகிறோம் என்ற ஆசையோடு அவளது முகத்திற்கு நேராகக் குனிந்தான்.
“கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க…” என்று வைரக்கண்ணு மெல்லிய குரலில் சொன்னான்.
அவளது அண்ணன் மனைவி, தங்கமயிலுவின் நாடியைப் பிடித்து லேசாக மேலே உயர்த்தினாள்.
அப்போதுதான்… வைரக்கண்ணு தன் வாழ்நாளில் எதிர்பார்க்காத அந்தப் பேரதிர்ச்சியைச் சந்தித்தான்!
குங்குமம் வைப்பதற்காகத் தன் விரலை அவளது நெற்றியை நோக்கி நீட்டிய வைரக்கண்ணு, முதல்முறையாகத் தங்கமயிலுவின் கண்களை மிக அருகில், நேருக்கு நேர் பார்த்தான்.
அவளது கண்கள் கரிய நிறத்தில், அடர்த்தியான இமைகளோடு, அழகாக மை தீட்டப்பட்டுப் பெரியதாக இருந்தன. ஆனால்… அந்தக் கண்களில் ஒரு வித்தியாசமான, உயிரற்ற நிலைத்தன்மை இருந்தது!
பொதுவாக, யாராவது நம் முகத்திற்கு மிக அருகில் விரலைக் கொண்டு வந்தால், இயல்பாகவே நம் கண்கள் இமைக்கும். கருவிழிகள் அந்த விரலைப் பின்தொடர்ந்து அசையும்.
ஆனால், வைரக்கண்ணுவின் விரல் அவளது நெற்றியைத் தொடும் தூரத்திற்கு வந்தபோதும், தங்கமயிலுவின் கண்கள் இமைக்கவே இல்லை! அவளது கருவிழிகள் நேராக, எங்கோ வெறித்துப் பார்த்தபடியே அசையாமல் நின்றன.
வைரக்கண்ணுவின் நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று “சுரீர்” என்று தைத்தது. மண்டபத்தில் ஒலித்துக்கொண்டிருந்த கெட்டிமேளச் சத்தம், மக்களின் பேச்சுச் சத்தம் என எல்லாமே ஒரு நொடி நின்று போனது போல அவனுக்குத் தோன்றியது.
தன் கண்கள்தான் தவறாகப் பார்க்கிறதா, இல்லை அவள் பயத்தில் அப்படிப் பார்க்கிறாளா என்ற சந்தேகம் வைரக்கண்ணுவுக்கு எழுந்தது.
அதை உறுதிப்படுத்திக்கொள்ள நினைத்த வைரக்கண்ணு, குங்குமம் வைப்பது போலப் பாவனை செய்து, தன் வலது கையை அவளது கண் முன்னே இடதுபக்கமாகவும் வலதுபக்கமாகவும் மெதுவாக அசைத்துப் பார்த்தான்.
தங்கமயிலுவின் இமைகளில் எந்தச் சலனமும் இல்லை! அவளது பார்வை கொஞ்சம் கூட அசையவில்லை!
வைரக்கண்ணுவின் கை அப்படியே அந்தரத்தில் நின்றது. அவனது நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பின.
மெதுவாகத் தன் தலையைத் திருப்பி, மணமேடையின் ஓரத்தில் நின்றிருந்த பெண் வீட்டாரைப் பார்த்தான்.
பெரியசாமி, கார்த்திக், அவளது சித்தி என எல்லோருடைய முகத்திலும் ஒருவிதப் பதட்டமும், ‘அப்பாடா, ஒருவழியா தாலி கட்டியாச்சு, இனி யாராலயும் ஒண்ணும் பண்ண முடியாது’ என்ற திருப்தியும் அப்பட்டமாகத் தெரிந்தது.
அப்போதுதான் வைரக்கண்ணுவுக்குக் காலையில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் மின்னல் வெட்டு போல மனதில் ஓடின!
பொண்ணு போட்டோவைக் காட்டாமல் மறைத்தது…
நிச்சயதார்த்தத்தன்று காய்ச்சல் என்று சொல்லி அறைக்குள்ளேயே பூட்டி வைத்தது…
மணமேடைக்கு வரும்போது அவளது அண்ணன் மனைவியும் சித்தியும் கையைப் பிடித்து அழைத்து வந்தது…
மேடைப் படியில் ஏறும்போது அவள் தடுமாறியது…
இப்போது குங்குமம் வைக்கும்போது அவளது நாடியைப் பிடித்து நிமிர்த்தியது…
எல்லாமே ஒரு திட்டமிட்ட நாடகம்!
தன்னை ஏமாற்றி, தன் குடும்பத்தின் நல்ல குணத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பார்வையற்ற ஒரு பெண்ணைத் தன் தலையில் கட்டிவிட்டார்கள் என்ற உண்மை வைரக்கண்ணுவின் தலையில் இடியாய் இறங்கியது.
“என்ன மாப்பிள்ளை, அப்படியே நின்னுட்டீங்க? குங்குமம் வைங்கப்பா…” என்று ஐயர் குரல் கொடுத்தார் மீண்டும்.
வைரக்கண்ணுவின் கை நடுங்கியது. ஒரு நொடி, தன் கையில் இருந்த குங்குமத்தைக் கீழே போட்டுவிட்டு, “என்னை ஏமாத்திட்டீங்க!” என்று மண்டபமே அதிரக் கத்த வேண்டும் போல அவனுக்கு ஆத்திரம் வந்தது.
ஆனால், அடுத்த நொடியே அவன் தன் தலையைத் திருப்பித் தன் அப்பாவையும் அம்மாவையும் பார்த்தான்.
அவனது அப்பா பழனிச்சாமி, தன் மகனுக்குக் கல்யாணம் முடிந்துவிட்ட பூரிப்பில், ஊர்க்காரர்களிடம் கைகூப்பி வணங்கிக்கொண்டிருந்தார். அம்மா மீனாட்சி, தன் மருமகளுக்குப் போடுவதற்காகத் தன் கையில் இருந்த தங்க வளையலை ஆசையாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
இப்போது நான் சத்தம் போட்டால், இந்த மண்டபத்திலேயே என் அப்பா மானம் போய்விடும்! ஊர் முன்னாடி என் அம்மா தலைகுனிந்து நிற்பார்கள்! அதோடு, எதுவும் தெரியாமல் தலையைக் குனிந்தபடி அமர்ந்திருக்கும் இந்தப் பெண்ணின் வாழ்க்கையும் நடுத்தெருவுக்கு வந்துவிடும்!
வைரக்கண்ணு தன் கோபத்தையும், ஏமாற்றத்தையும் பல்லைக் கடித்துக்கொண்டு விழுங்கினான். அவனது கண்களில் லேசாக நீர் கோர்த்தது.
மெதுவாகத் தன் நடுங்கும் விரலால், தங்கமயிலுவின் நெற்றியில் குங்குமத்தை வைத்தான்.
தாலி கட்டிய அடுத்த நொடியே, வைரக்கண்ணுவின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய ‘இருள்’ சூழ்ந்துகொண்டது. ஆனால், அந்த இருளுக்குள்ளும் ஒரு சின்ன வெளிச்சப் புள்ளியைத் தேடும் வைரக்கண்ணுவின் பயணம் அங்கேதான் தொடங்கியது!
என்பது அவனே அறியாத உண்மை……….