Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இருளை வென்ற இமைகள்

கங்காவின் இருளை வென்ற இமைகள் 2 1

கங்காவின் இருளை வென்ற இமைகள்

அத்தியாயம் 2:

காலைப்பொழுது மணி
ஒன்பதைக் கடந்திருந்தது.

மண்டபத்து வாசலில் தை
மாதத்து பனியுடன் கூடிய
வெயில் மெல்ல மெல்ல ஏறிக்கொண்டிருக்க,



Advertisement

உள்ளே மொய் வைப்பவர்களின் கூட்டமும், உறவினர்களின் அரிசி தூவி வாழ்த்தும் சடங்குகளும் ஒருவழியாக முடிந்திருந்தன.

இப்போது தான் ஐயர், சம்பிரதாயமாகக் குழந்தை பேருக்காக வேண்டி விநாயகரை வைத்து, அடுத்தடுத்த சடங்குகளை
நடத்தத் தயாராகிக்
கொண்டிருந்தார்.

இந்தச் சடங்குகள் ஒவ்வொன்றையும் அனுபவித்து, உணர்வாலும் உணர்ச்சியாலும் ரசிக்க அவளுக்குக் கண்களில் உயிர் இல்லை. இவனுக்கோ…
உடல் முழுவதும் உயிர் இல்லை!

Advertisement

மணமேடையில் அருகருகே அமர்ந்திருந்த இருவருக்கும் இடையே ஒரு மெல்லிய பட்டுத் துணி மட்டுமே இடைவெளியாக இருந்தது. ஆனால், மனதளவில் இருவரும் இரண்டு வேறு உலகங்களில் நின்று தவித்துக்கொண்டிருந்தார்கள்.

Advertisement

வைரக்கண்ணுவின் கண்கள்,
ஐயர் செய்யும் சடங்குகளைப் பார்த்தாலும் அவனது மனம்
அங்கே இல்லை.

‘இது ஏதோ ஒரு கெட்ட கனவாக இருக்கக் கூடாதா? இல்லை,
சின்னப் பிள்ளைகள் விளையாடும் பொம்மைக் கல்யாணம் என்று யாராவது சொல்ல மாட்டார்களா?’ என்ற ஏக்கம் அவனுக்குள் ஒவ்வொரு நொடியும் துடித்துக்கொண்டிருந்தது.

பக்கத்தில் நின்றிருந்த சுந்தர், நண்பனின் வாடிய முகத்தைப் பார்த்துத் தோளைத் தட்டினான்.

Advertisement

“டேய் மாப்பிள்ளை! என்னடா உம்முன்னு இருக்க? சிரிடா, போட்டோகிராபர் போட்டோ எடுக்குறாரு பாரு!”

வைரக்கண்ணுவோ தன் கண்ணில் முட்டிய நீரை உள்ளுக்குள்ளேயே இழுத்துக்கொண்டு, முகத்தை லேசாகச் சுளித்தான்.

“ம்ம்… ஓம குண்டத்துப் புகை
கண்ணு எரியுதுடா!”

தன் கைகளால் கண்களைத் துடைப்பது போலப் பாவனை
செய்து, கன்னத்தில் வழிய இருந்த கண்ணீரை மறைத்தான்.

“அட, கொஞ்சம் தங்கச்சி பக்கமா தள்ளி உக்காருடா… அதான் புகை அடிக்குதுல்ல ,” என்று சுந்தர் வெள்ளந்தியாகச் சொல்ல,
வைரக்கண்ணு பல்லைக் கடித்துக்கொண்டு தலையாட்டினான்.

‘புகை வெளிய இல்லடா சுந்தர்…
என் நெஞ்சுக்குள்ள எரியுது!’

அதே நேரம், அவனுக்குப் பக்கத்தில் தலை குனிந்து அமர்ந்திருந்த தங்கமயிலுவின் மனதிற்குள்ளோ, அதைவிடப் பெரிய போர்க்களமே நடந்துகொண்டிருந்தது.

கண் தெரியாத ஒரு மணப்பெண்ணை வைத்து, இத்தனை பெரிய திருமணச் சடங்கை அவளது வீட்டார் எப்படிச் சமாளித்து முடித்திருப்பார்கள்?

காலையிலிருந்து தங்கமயிலுவின் ஒவ்வொரு அசைவும், அவளது அண்ணி மற்றும் சித்தியின் விரல் அழுத்தங்களாலேயே இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

மண்டபத்திற்குள் அழைத்து வரும்போது, அவளது வலது கையைப் பிடித்திருந்த அண்ணி, படிக்கட்டு வரும்போதெல்லாம் அவளது உள்ளங்கையில் இரண்டு முறை லேசாக அழுத்துவாள். அது “காலைத் தூக்கி வை” என்பதற்கான ரகசியச் சைகை!

மணமேடையில் உட்கார வைக்கும்போது, பின்னால் நின்ற சித்தி அவளது தோளை லேசாக அழுத்துவாள். அது “இப்போது உட்கார்” என்பதற்கான
அடையாளம்!

மாலை மாற்றும்போது, அவளது கைகளைத் தாங்கிப் பிடிப்பது
போல அண்ணி அருகில் நின்று, மாப்பிள்ளையின் கழுத்திற்கு நேராக அவளது கைகளை வழிநடத்தினார்.

இதெல்லாம் வெளியே பார்ப்பவர்களுக்கு, “மணப்பெண்ணுக்கு ரொம்ப வெட்கம், அதான் தலையைக் குனிஞ்சுக்கிட்டு இருக்கா, அண்ணியும் சித்தியும் ஆசையாப் பிடிச்சுக் கூட்டிட்டு வர்றாங்க” என்றுதான் தோன்றியது.

ஆனால், ஒவ்வொரு நொடியும் இருட்டுக்குள் நின்றுகொண்டு, எங்கே தன் கால் தடுமாறிவிடுமோ, எங்கே தன் குடும்பத்தின் மானம் நடுத்தெருவுக்கு வந்துவிடுமோ என்று தங்கமயிலு செத்துச் செத்துப் பிழைத்துக்கொண்டிருந்தாள்.

“சரி… அடுத்து, குழந்தை விளையாட்டு விநாயகரை வச்சு, அக்னியை வலம் வந்து, அம்மி மிதிச்சு அருந்ததி பார்க்கிற சடங்குப்பா. மாப்பிள்ளை, பொண்ணு ரெண்டு பேரும் எழுந்து வாங்கப்பா,” என்று ஐயர் குரல் கொடுக்க,

அந்த வார்த்தையைக் கேட்டதும் தங்கமயிலுவின் இதயம் படபடவென அடித்துக்கொண்டது. அக்னியை வலம் வர வேண்டும்! எங்கே நெருப்பு இருக்கிறது என்று தெரியாது;

அவளது அண்ணி வெண்ணிலா பதறிப்போய் அவளது கையைப் பிடிக்க அருகில் வர, அதற்குள் வைரக்கண்ணுவே எழுந்து நின்று, தன் வலது கையை நீட்டி தங்கமயிலுவின் இடது கையைப் பற்றிக்கொண்டான்.

“இருங்க அக்கா , நான் பார்த்துக்குறேன்…”

வைரக்கண்ணுவின் அந்தக் குரல் அவளது காதில் விழுந்ததும், தங்கமயிலுவின் உடல் லேசாகச் சிலிர்த்தது. அவனது உள்ளங்கை அவளது கையை இறுக்கமாகப் பற்றியிருந்தது.

அந்தப் பிடியில் கோபம் இருந்ததா, இல்லை பரிதாபம் இருந்ததா என்று அவளால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஆனால், அந்த ஒரு பிடி அவளுக்குப் பெரும் பாதுகாப்பாக இருந்தது.

அக்னி குண்டத்தைச் சுற்றி வரும்போது, தரையில் விரிக்கப்பட்டிருந்த சிவப்புக் கம்பளத்தின் ஓரம் லேசாக மடங்கியிருந்தது.

பார்வையற்ற தங்கமயிலு அதை அறியாமல் கால் வைக்கப் போக, அவள் தடுமாறினாள்.

மண்டபத்தில் இருந்தவர்கள் கவனிப்பதற்குள், வைரக்கண்ணு தன் இடது கையால் அவளது இடையைப் பிடித்துத் தாங்கிக்கொண்டான்.

“பார்த்து நடங்க… முன்னாடி
கம்பளம் மடங்கியிருக்கு,” என்று அவளது காதுக்கு மட்டுமே கேட்கும்படி மிக மெல்லிய குரலில் சொன்னான்.

அந்த நொடி தங்கமயிலுவின் நெஞ்சம் உடைந்து போனது!
‘அப்போ… இவருக்கு உண்மை தெரிஞ்சு போச்சா? எனக்குக் கண்ணு தெரியாதுங்கிற விஷயம் தாலி கட்டும்போதே இவருக்குத் தெரிஞ்சு போச்சா?

தெரிஞ்சும், சபையில எங்க குடும்பத்தைக் காட்டிக் கொடுக்காம, இத்தனை நேரம் எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு, என் கையைப் பிடிச்சுக் கூட்டிட்டு வர்றாரா?’
என்றவளின் பார்வையற்ற கண்களிலிருந்து இரண்டு
சொட்டுக் கண்ணீர் தாரையாக வழிந்து, பட்டுப்புடவையின் முந்தானையில் விழுந்தது.

தன்னை ஏமாற்றிய குடும்பத்தின் பெண்ணாக இருந்தும், தன்னை விழாமல் தாங்கிப் பிடிக்கும் அந்த மனிதனின் குணத்தை நினைத்து அவள் உள்ளுக்குள்ளேயே குமுறினாள்.

அம்மிக்கல்லின் அருகே வந்ததும், வைரக்கண்ணு அவளது வலது காலைத் தன் கையால் பிடித்து, மெதுவாக அந்த அம்மிக்கல்லின் மீது எடுத்து வைத்தான்.

“மெட்டி போடுங்க மாப்பிள்ளை…” என்றார் ஐயர்.

ஒற்றை வைரக்கல் பதித்து ஐந்து முத்துக்கள் வைத்த வெள்ளி மெட்டியை எடுத்து, அவளது கால் விரலில் அணிவித்தான்.

அப்போது அவளது பாதங்கள் ஐஸ் கட்டி போலக் குளிர்ந்து போய் நடுங்குவதை அவன் உணர்ந்தான்.

அடுத்து, மண்டபத்தின் வாசலுக்கு அழைத்துச் சென்று வானத்தில் அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டும் சடங்கு நடந்தது.

“அதோ பாருங்கம்மா… சப்தரிஷி மண்டலத்துக்குப் பக்கத்துல தெரியுது பாருங்க, அதுதான் அருந்ததி நட்சத்திரம். அதைப் பார்த்து உங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்னு மனசார வேண்டிக்கோங்க,” என்று ஐயர் வானத்தை நோக்கிக் கை காட்டினார்.

தங்கமயிலு தன் தலையை மட்டும் வானத்தை நோக்கி உயர்த்தினாள். பட்டப்பகல் வெயிலில், அவளது கருவிழிகள் எந்த அசைவுமின்றி வானத்தை வெறித்துப் பார்த்தன.

அவளுக்கு வானமும் தெரியவில்லை, நட்சத்திரமும் தெரியவில்லை; அவளது உலகம் முழுவதும் ஒரே இருள்! ஆனால், அவள் மனதிற்குள் மட்டும்,

“கடவுளே… பெத்தவங்க சந்தோஷத்துக்காக இந்த நல்ல மனுஷனோட வாழ்க்கையைப் பாழாக்கிட்டனே … இவருக்கு எந்தக் குறையும் வராம நீதான் காப்பாத்தணும்” என்று கண்ணீரோடு வேண்டிக்கொண்டாள்.

பிறகு நட்சத்திரம் பார்த்து முடித்து மண்டபத்திற்குள் திரும்பியபோது, வைரக்கண்ணுவின் கடைசித் தங்கச்சி அல்லி ஓடி வந்து அண்ணனின் பட்டு வேட்டியைப் பிடித்து இழுத்தாள்.

“அண்ணா! அண்ணி ரொம்ப அழகா இருக்காங்கண்ணா! சினிமா நடிகை மாதிரியே இருக்காங்க. ஆனா, ஏண்ணா அவங்க தலையவே குனிஞ்சுக்கிட்டு இருக்காங்க? யாரு முகத்தையுமே பார்க்க மாட்டேங்குறாங்களே, அவங்களுக்கு ரொம்ப வெட்கமாண்ணா? இல்ல, உங்களைப் பார்த்துப் பயப்படுறாங்களா?” என்று அந்தப் பதினாறு வயதுப் பெண் குழந்தைத்தனமாகக் கேட்டாள்.

அந்தக் கேள்வியைக் கேட்டதும் வைரக்கண்ணுவுக்கு நெஞ்சை யாரோ கூரிய கத்தியால் கீறுவது போல வலித்தது. அவனது தொண்டை அடைத்தது.

பதில் சொல்ல முடியாமல் ஒரு
நொடி தவித்தவன், தன் தங்கைக்கு தற்போது உண்மை தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தன் தலையைத் திருப்பி, கண்களில் துளிர்த்த நீரை மறைத்துக்கொண்டான்.

“ஆ… ஆமாண்டா தங்கம். புது இடம் இல்லையா, அதான் அண்ணிக்குக் கொஞ்சம் கூச்சமா இருக்கு. நீ போய் அக்கா பூங்கொடி கூட நில்லு, சாப்பாட்டுப் பந்திக்கு நேரமாச்சு பாரு,” என்று தன் குரல் உடையாமல் சமாளித்து அவளை அனுப்பி வைத்தான்.

அல்லி துள்ளிக்கொண்டு ஓடுவதைப் பார்த்தவன், ‘இந்தப் பிஞ்சு மனசுகளுக்கு உண்மை தெரிஞ்சா என்ன ஆகும்? இவங்களோட சந்தோஷத்தைக் கெடுக்கக் கூடாது’ என்று அவன் தனக்குத்தானே உறுதியெடுத்துக் கொண்டான்.

அடுத்து, மதிய விருந்துப் பந்தி தொடங்கியது.

மணமக்களுக்காகத் தனி வரிசையில் பெரிய தலைவாழை இலை போடப்பட்டிருந்தது. வைரக்கண்ணுவும் தங்கமயிலுவும் அருகருகே அமர்ந்தார்கள். இலையில் இனிப்பு, வடை, பாயசம், சாதம், சாம்பார், கூட்டு, அவியல் என அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன.

“மாப்பிள்ளை, பொண்ணு சாப்பிட ஆரம்பிக்கும் முன்னாடி நீங்க முதல்ல ஒரு வாய் ஊட்டி விடுங்க,” என்று சொந்தக்காரர்கள் உற்சாகமாகக் குரல் கொடுக்க,

வைரக்கண்ணு தன் இலையில் இருந்த இனிப்பை எடுத்து, அவளது வாயருகே கொண்டு சென்றான்.

அவள் எந்தப் பக்கம் திரும்புவது என்று தெரியாமல் தவித்து, பின்பு அவனது மூச்சுக்காற்று சத்தத்தை வைத்து மெதுவாகத் தன்
முகத்தைத் திருப்பி வாயைத் திறந்தாள்.

அதன் பிறகுதான், அவனுக்கு ஒரு பெரிய சவால் காத்திருந்தது.
சொந்தக்காரர்கள் எல்லோரும் சாப்பிடத் தொடங்கிவிட்டார்கள்.

தங்கமயிலுவோ, தன் இலையில் எந்தப் பக்கம் சாதம் இருக்கிறது, எந்தப் பக்கம் கூட்டு இருக்கிறது என்று தெரியாமல், விரல்களால் இலையின் ஓரத்தை மெல்லத் தடவிப் பார்த்தாள்.

அவளது அண்ணன் மனைவி வெண்ணிலா பதறிப்போய் அவளுக்கு உதவ அருகில் வர,

“அக்கா , நீங்க போய் சாப்பிடுங்க… நான் பார்த்துக்குறேன்,” என்று அவன் தடுத்து நிறுத்தினான்.

சுத்தி சொந்தக்காரங்க உட்கார்ந்திருக்காங்க. யாராவது கவனிச்சா, அப்பா மானம் போயிடுமேன்னு பதறிப்போனவன், யாருக்கும் தெரியாம தன் இடது கையால அவளோட வலது கையை மெதுவாப் பிடிச்சு, இலையில இருந்த சாதத்துல வச்சான்.

“இங்க சாதம் இருக்கு… வலது ஓரத்துல அவியல் இருக்கு… மெதுவா சாப்பிடுங்க,”ன்னு அவ காதுக்கு மட்டும் கேட்குற மாதிரி கிசுகிசுத்தான்.

அந்தக் குரலைக் கேட்டதும் தங்கமயிலு அதிர்ச்சியில
உறைஞ்சு போனா. தனக்குக் கண்ணு தெரியாதுங்கிற விஷயம் புருஷனுக்குத் தெரிஞ்சு போச்சோங்கிற சந்தேகத்துல இருந்தவலுக்கு உறுதி படுத்தும் விதமா இருந்தது அவனோட பதில். பயத்துல, அவ விரல்கள் நடுங்குச்சு.

அவளால ஒரு வாய் சாதத்தைக் கூடத் தொண்டைக்குள்ள இறக்க முடியல. கண்ணுல இருந்து தாரை தாரையா கண்ணீர் வழிஞ்சு, வாழை இலையில விழுந்துச்சு.

“அழாதீங்க… இப்போ சாப்பிடுங்க, மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்,”னு அவ கையை லேசா அழுத்திச் சொன்னான்.

தங்கமயிலு தன் கண்ணீரை அடக்கிக்கொண்டு, கணவன் எடுத்துக் கொடுத்த உணவை மெல்ல விழுங்கினாள். ஒவ்வொரு கவளமும் அவளுக்குத் தொண்டையை அடைத்தது.

பந்தி முடிந்து இருவரும் எழுந்தபோது, மண்டபத்தில் இருந்த யாருக்கும் மணப்பெண்ணுக்குப் பார்வை இல்லை என்ற சந்தேகமே வரவில்லை. அந்த அளவிற்கு மாப்பிள்ளை தன் வலியை மறைத்துக்கொண்டு சபையைக் காப்பாற்றியிருந்தான்.

உண்ட களைப்பு தீர, மணமக்களை ஓய்வெடுக்கிறதுக்காக மாப்பிள்ளை அறைக்குக் கூட்டிட்டுப் போனாங்க
சொந்த பந்தங்கள்.

அறைக்குள்ள அப்பா பழனிச்சாமி, அம்மா மீனாட்சி, தம்பிகள் முத்து, மாணிக்கம், தங்கச்சிகள் பூங்கொடி, செவ்வந்தி, அல்லி மட்டும் இருந்தாங்க. பெண் வீட்டார் சற்று வெளியே தள்ளி நின்னுக்கிட்டு இருந்தாங்க.

கதவு சாத்துன அடுத்த நொடி… அதுவரைக்கும் தன் நெஞ்சுக்குள்ள அடக்கி வச்சிருந்த அத்தனை கோபத்தையும், ஆற்றாமையையும் வைரக்கண்ணு வெடித்து கொட்டிவிட்டான்!

என்னப்பா வைரம்?

“நிறுத்துங்கப்பா! எல்லாம்
போதும்!”

அவன் கத்துன சத்தத்துல
அறையே ஒரு நொடி ஆடிப்போச்சு. பழனிச்சாமியும் மீனாட்சியும் அதிர்ந்து போய் வைரத்தை பார்த்தாங்க.

தம்பி தங்கச்சிங்க அஞ்சு பேரும் பயந்து போய் ஒருத்தரை ஒருத்தர் ஒட்டிக்கிட்டு நின்னாங்க.

தங்கமயிலு பயந்து போய்
கட்டிலோட ஓரத்துல அப்படியே சுருண்டு உட்கார்ந்துட்டா.

“என்னடா ஆச்சு வைரக்கண்ணு? ஏன் இப்படிப் பேயறைஞ்ச மாதிரி கத்துற? உடம்புக்கு ஏதாவது முடியலையா?”னு பழனிச்சாமி பதறிப்போய் கிட்ட போக,

“எனக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லப்பா! என் மனசுதான் சுக்குநூறா உடைஞ்சு போச்சு! உங்ககிட்டதான் நான் கேட்கணும்…

பொண்ணு குடும்பம் பெரிய குடும்பம், பெரியசாமி அண்ணன் ரொம்ப நல்லவருன்னு கண்மூடித்தனமா நம்புனீங்களே… அவங்க நமக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் செய்து ஏமாத்தியிருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?” அவனோட கண்கள் சிவந்து, குரல் தழுதழுத்தது.

“என்னடா சொல்ற? தெளிவா சொல்லுப்பா… அவங்க என்ன ஏமாத்துனாங்க? நகை குறைஞ்சு போச்சா, இல்ல சீர்வரிசை சரியில்லையா?”னு மீனாட்சி மகன் கையைப் பிடிக்க,

“ச்சீய்! நகைக்கும் பணத்துக்கும் ஆசைப்படுற குடும்பமா நம்ம குடும்பம்? இல்ல நான் தான் அப்படி பட்டவனா?

அதை விடப் பெரிய துரோகம் பண்ணிட்டாங்கம்மா!” என்றவன், தன் விரலை நீட்டி, கட்டில்ல தலை குனிஞ்சு பயந்து நடுங்கிக்கிட்டு உட்கார்ந்திருந்த தங்கமயிலுவைக் காட்டினான்.

“அங்க பாருங்கம்மா… நீங்க ஆசையா பார்த்துப் பார்த்துக் கட்டி வச்சிருக்கீங்களே உங்க மருமகள்… அவளுக்குக் கண்ணு தெரியாதுமா! பிறவிக்குருடோ, இல்ல இடையில் வந்ததோ… அவளுக்குப் பார்வையே கிடையாது!”

அந்த வார்த்தையைக் கேட்டதும், பழனிச்சாமியோட தலையில இடி விழுந்த மாதிரி இருந்துச்சு. அவரது கால்கள் தள்ளாடின. சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றார்.

மீனாட்சி வாயில கையை வச்சுக்கிட்டு அப்படியே அதிர்ச்சியில் உறைஞ்சு நின்னாங்க. முத்துவும், மாணிக்கமும் திகைத்துப் போய் அண்ணியைப் பார்த்தார்கள்.

மூன்று தங்கச்சிகளும் அண்ணன் சொன்னதை நம்ப முடியாமல் வாய் அடைத்துப் போனார்கள்.

“எ… என்னடா சொல்ற? நிஜமாவா?” பழனிச்சாமி நம்ப முடியாம மருமகள் கிட்ட போனாரு. “அம்மா… மயிலு… இங்க பாரும்மா…”ன்னு தன் கையை அவ முகத்துக்கு நேரா அசைக்க,

தங்கமயிலுவோட கண்கள் அசையல. கண்ணீர் மட்டும் கன்னத்துல வழிஞ்சு மடியில் விழுந்தது.

பழனிச்சாமிக்கு நெஞ்சே வெடிச்சுடும் போல இருந்தது. “அய்யோ… பாவிகளா! இப்படிப் பச்சைத் துரோகம் பண்ணிட்டாங்களே!

வாசல்ல நிக்கிற அந்தப் பெரியசாமியை இப்போவே இழுத்துட்டு வந்து நாலு கேள்வி கேட்குறேன்!”னு ஆவேசமா கதவு பக்கம் திரும்புனாரு.

“வேண்டாம்ப்பா! என்று கனீரென வந்தது வைரத்தின் குரல். கதவைத் திறக்காதீங்க!”னு ஓடிப் போய் கதவை மறிச்சு நின்னான்.

“ஏன்டா? நம்மளை ஏமாத்துனவங்களை சும்மா விடச் சொல்றியா? இப்போவே இந்தக் கல்யாணம் செல்லாதுன்னு ஊர் முன்னாடி சொல்லுவோம்டா!”

“அப்போ ஊர் என்னப்பா பேசும்?” அவனோட குரல் உடைஞ்சு
கேட்டான்.

” ‘பழனிச்சாமி வீட்டுக்கு மூத்த பையனுக்குப் பொண்ணு கிடைக்காம, கண்ணு தெரியாத பொண்ணைக் கட்டி வச்சுட்டாரு’ன்னு உங்களைத்தானே கேவலமாப் பேசுவாங்க? அதுமட்டுமாப்பா…

நாளைக்கு என் மூணு தங்கச்சிங்க தேவபூங்கொடி, தேவசெவ்வந்தி, தேவஅல்லிக்கு மாப்பிள்ளை தேடும்போது, ‘அவங்க அண்ணனுக்கே கண்ணு தெரியாத பொண்ணுதான் கிடைச்சுச்சு, இந்தக் குடும்பத்துல ஏதோ குறை இருக்கு’ன்னு ஊர் உலகம் தப்பாப் பேசாதா?”

இதை கேட்ட அடுத்த நொடி பூங்கொடியும் செவ்வந்தியும் ஓடி வந்து அண்ணனைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு அழ ஆரம்பித்தார்கள். கடைசித் தங்கச்சி அல்லி பயந்து போய் தன் அம்மாவின் புடவையைப் பிடித்துக்கொண்டு விம்மி
கொண்டிருந்தாள்.

சில நிமிட மௌனத்திற்கு பிறகு “யோசிச்சுப் பாருங்க… கடந்த பத்து வருஷமா நான் எனக்காக
என்ன வாழ்கை வாழ்ந்தேன்?

உங்களுக்கு உடம்பு முடியாம போனதுல இருந்து, இந்த அஞ்சு பேருக்கும் தகப்பனா நின்னு உழைச்சேனே!

முத்து, மாணிக்கம் படிப்புக்காக
என் ஆசைகளை எல்லாம் மூட்டை கட்டி வச்சேனே! நைட் பகலா வண்டி ஓட்டி, மூணு தங்கச்சிங்களுக்கும் நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஓடியாடி உழைச்சேனே…

எனக்காக நீங்க பார்த்த வாழ்க்கை இதுதானாப்பா?

காலையில தாலி கட்டுன அடுத்த நொடியே எனக்கு இந்த உண்மை தெரிஞ்சு போச்சு! அப்போவே மண்டபத்துல கத்தியிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!