நேயனின் நேசமினிது..5
இனிய நேசம் – 5
இரவு நேரமாகி இருந்தாலும் துரைப்பாக்கம் சாலையில் மிதமான போக்குவரத்து நெரிசலைக் காண முடிந்தது.
Advertisement
கீதாராணி காரினை செலுத்திக் கொண்டிருக்க, அவரருகே முன்னிருக்கையில் அமர்ந்திருந்த அகநேயன் மௌனமாக சாலையை வெறித்தபடி இருந்தான்.
ஆனால், இதழ்களில் புன்னகை மிளிர்ந்தது.
Advertisement
பின்னிருக்கையில் அமர்ந்திருந்தபடி அன்னையுடன் சலசலத்துக் கொண்டிருந்த அஞ்சலி அண்ணனின் அமைதியில் விசித்திரமாக உணர்ந்து “என்ன ண்ணா? படு சைலண்ட்டா வர்ற?” என்று கேட்க, அகநேயன் செவிகளில் தங்கையின் குரல் விழவில்லை போலும்.
Advertisement
ஜன்னல் வழி தெரிந்த வெளிப்புறத்தை பார்த்துக் கொண்டே இருந்தவனின் தலை கூட தங்கை பக்கம் திரும்பவில்லை.
Advertisement
“ண்ணா…” என அஞ்சலி அழைக்க, அகநேயனிடம் அசைவில்லை.
“என்னமா அண்ணா கனவு கண்டுட்டு இருக்கானா?” என்று அன்னையிடம் கேட்டாள் அஞ்சலி.
சிரிப்புடன் மகனைப் பார்த்த கீதாராணி ஹாரனை பலமாக ஒலிக்க விட, அப்போது தான் பதறி தன்னிலை அடைந்த அகன் “ஐயோ என்னமா ஆச்சு?” என்று பதறினான்.
“எங்களுக்கு ஒன்னும் ஆகலடா அகா. உனக்கென்ன ஆச்சு?” சாலையில் கவனம் வைத்திருந்தாலும், குறுக்குறுவென மகனைப் பார்த்துக் கேட்டார்.
“ஒன்னுமில்லையே ம்மா”
“ஒன்னுமில்லாமதான் அஞ்சலி கூப்பிட்டும் திரும்பாம ரோட்டை பார்த்துட்டே சிரிச்சிட்டு இருந்தியா?” என்று கீதாராணி கேட்க, அகநேயன் விழித்தான்.
“அண்ணா..” மீண்டும் அஞ்சலி அழைக்க, “சொல்லு அஞ்சலி..” என்றான் அகன் தங்கையை திரும்பிப் பார்த்து.
அண்ணன் தன்னை முழுப் பெயர் சொல்லி அழைத்த விதத்திலேயே அவன் ஒரு நிலையில் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அஞ்சலிஶ்ரீ “ஒன்னுமில்ல ண்ணா. நீ ரோட்டை பார்த்துட்டே சிரி” என்று சிரிப்புடன் கூற, அகநேயன் நாக்கை கடித்துக் கொண்டு தயக்கத்துடன் தங்கையையும் தாயையும் பார்த்தான்.
புன்னகையுடன் காரினை செலுத்திக் கொண்டிருந்த கீதாராணி “என் மகன் அரை மணி நேரமா அமைதியா இருக்கான். அதிசயம்தான்” என்றவர், “உன் வாயையே அடைக்க வச்சுட்டாதானடா அந்தப் பொண்ணு” என்று சொன்னதும் மெல்லிய திகைப்புடன் அன்னையை பார்த்தான் அகநேயன்.
“என்னடா முழிக்கிற. நானும் ஷோ முடிஞ்சதுல இருந்து உன்னை கவனிச்சிட்டுதான்டா இருக்கேன். அந்தப் பொண்ணு கிளம்பிப் போற வரைக்கும் உன் பார்வை அவ மேலையேதான் இருந்தது. தியேட்டர்ல எல்லாம் செட்டில் பண்ணிட்டு நாம கிளம்பும் போது நீங்களே ட்ரைவ் பண்ணுங்கமான்னு சொல்லிட்ட. காருக்குள்ள ஏறி உக்காந்ததுல இருந்து ஶ்ரீ சொன்ன மாதிரி சைலண்ட்டா வர்ற. அவ கூப்பிட்டும் நீ திரும்பல. பத்தாததுக்கு முகத்துல மின்னுற அளவுக்கு சிரிப்பு வேற!” என்று மகனிடம் தென்பட்ட மாற்றங்களை வரிசையாக அடுக்கினார்.
“அந்தப் பொண்ணு பேசினது பத்தி தான யோசிச்சுட்டு இருக்க?” கீதாராணி சரியாக கணித்துக் கேட்க,
அகநேயன் மறுக்காமல் ஒப்புக்கொண்டாலும் அவனது மனமோ ‘அந்தப் பொண்ணு பேசுனத பத்தி யோசிக்கலமா. அந்த பொண்ணப் பத்தி தான் யோசிக்கிறேன்’ என்று கூக்குரலிட்டது.
“நல்லா பேசினாடா அந்தப் பொண்ணு. நானும் அவ இவ்வளவு தூரம் உன்னை அனலைஸ் பண்ணி பேசுவான்னு எக்ஸ்பெக்ட் பண்ணல” என்றார் கீதாராணி நெகிழ்வான குரலில்.
அகநேயன் மௌனமாக புன்னகைத்தான்.
“அந்தப் பொண்ணு பேரு என்ன? நல்ல பேரா இருந்ததே..” என்று கீதாராணி யோசிக்க, “ஆமாம்மா. இனியவர்ஷினி” என பின்னிருக்கையில் இருந்த அஞ்சலிஶ்ரீயும், “ஆமாம்மா.. இனியா..” என அகநேயனும் ஒரே நேரத்தில் கூறி இருந்தனர்.
அண்ணன் அப்பெண்ணின் பெயரை சுருக்கிக் கூறியதும் “ஓஹோ… இனியா..வா…?” என்று அஞ்சலி ஒரு மார்க்கமாக அகநேயனை பார்த்துக் கொண்டே இழுக்க, “ஹ்ம்ம்..” என்ற அகநேயன் மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகி விட்டான்.
மனதினுள் அவளின் நினைவுகளே வியாபித்திருந்தது. அவள் மேடை ஏறி வந்தது, தலை அசைத்தது, தன் வார்த்தைகளில் தன்னிலை மறந்து ‘எஸ்’ என்று கூறியது, அதற்கு தான் அவளை கிண்டல் செய்தது, அதனை ஏற்க முடியாமல் உடனே தன்னைப் பற்றிய நேர்மறையான விஷயங்களை கூறியது என அனைத்தையும் நினைத்து புல்லரிப்புடன் புன்னகைத்துக் கொண்டான்.
அகநேயனுக்கு இதற்கு முன்பு இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது கிடையாது. அவனது இருபத்தி மூன்று வயதிலிருந்து இந்த “ஸ்டான்ட் அப் காமெடி” நிகழ்ச்சியினை நடத்தி வருகிறான்.
இதுவரை யாரிடமும் இப்படி முட்டி போட்டு காதல் பிரேரணை செய்யும் நிலமை வந்ததில்லை.
இன்று இனியவர்ஷினியிடமும் அப்படி செய்வோம் என்று அவனுமே எதிர்பார்க்கவில்லை.
அவனை அப்படிச் செய்யத் தூண்டியது, நகைச்சுவை உணர்வின் உந்துதல் என்றாலும், அவளது பதிலும் ஒரு காரணமாக இருந்ததை மறுக்கவே முடியாது!
அதெப்படி?
இது வர யாரையும் காதலிக்காத, யாராலயும் காதலிக்கப் படாத ஒரு பொண்ணு.. சரி நாம பண்ணுவோம். என்ன ரியாக்ஷன் கொடுத்தாலும் அதை வச்சு காமெடியை கொண்டு போவோம் என்று எண்ணியபடிதான் அவளிடம் “நான் இருக்கேன் மேடம். நான் ப்ரொபோஸ் பண்றேன்” என்று கூறி இருந்தான்.
அவள் எஸ் என்றபோது ‘யாஹூ… சிக்கிட்டாங்க.. வச்சு செஞ்சிடலாம்..’ என ஒரு ஸ்டான்ட் அப் காமெடியனாக குதூகலித்தபடி எழுந்து நின்று அவளை கேள்வி கேட்டு, கிண்டல் செய்யத் தொடங்கி இருந்தான்.
ஆனால், அவளின் அறிவுக் கூர்மை வாய்ந்த பதில் மொழியை அவன் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை!!
நிமிர்ந்து நின்றவள் நிமிர்வுடன் கூறிய ஒவ்வொரு வரிகளும் அவனது உள்ளத்தை அசைத்து, அதிர வைத்திருந்தது.
நடிப்பிற்காகவே என்றாலும் அன்னையிடம் அனுமதி வாங்க எண்ணியது கூட நகைச்சுவைக்காக அவன் செய்த ஒன்று!
இதற்கு முன்பு மகனது நிகழ்ச்சியில் பங்கேற்ற போது நகைச்சுவைக்காக மகன் தன்னை பேச்சினுள் இழுத்தால், கீதாராணியும் முடிந்த வரையில் மகனுக்கு ஈடு கொடுத்து பேசி விடுவது வழக்கம்.
இன்று எதிர்பாராத விதமாக அவனது திருமணம் மற்றும் வாழ்க்கைத் துணை பற்றி பேச வேண்டியதாக இருக்கும் என்றவர் நினைக்கவில்லை.
ஆனாலும், இன்று மகனின் நகைச்சுவையைப் புரிந்தவராக அவனுக்கு ஈடு கொடுத்து பேசி இருந்தார். கூடவே, தன் மனதில் உள்ளதையும் வெளிப்படையாக பகிர்ந்திருந்தார்.
தாய்க்கும் மகனுக்கும் நிகழ்ந்த உரையாடலை முன்னிறுத்தியே ‘யூ ஆர் க்ரோன் அப் வித் குட் கேரக்டர் அப்படின்றத புரிஞ்சிக்க முடிஞ்சது’ என்று கூறி இருந்தாள் பாவை.
சைக்கோவா இருக்கவன் சிரிக்க வைக்க மாட்டான் என்றதில் இருந்து, அறிவில்லாம இருக்கப் போய் தான் எனக்கு அறிவிருக்கணும்னு சொன்னீங்களா எனக் கூறியதில் தொடர்ந்து, ஃப்ரெண்ட்லி அண்ட் அன்பான ஒரு அம்மாவோட வளர்ப்புல வளர்ந்த நீங்க கட்டாயம் கேரக்டர்லெஸ் பெர்சனா இருக்க மாட்டீங்க என்று கூறியது வரை மிகத் தெளிவாக, திணறாமல், தடுமாறாமல் பேசியவளை நினைக்க நினைக்க இப்போதும் உள்ளம் இனிமையாக துடித்தது.
‘மத்தவங்க மாதிரி அடல்ட் கன்டென்ட் பேசாம, குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரை உங்க ஆடியன்ஸ்ஸா அட்ராக்ட் பண்ணி எந்த விதமான முக சுளிப்பும் இல்லாம எல்லாரையும் சிரிக்க வைக்கிறீங்க’ என்றவள் சொல்லிய போது கொஞ்சம் அல்ல.. நிறையவே பெருமையாக உணர்ந்தான் அகநேயன்.
அந்தப் பெருமையில் பெரும் பகுதி அவனது அன்னையாகிய கீதாரணியையே சேரும்!
இன்றைய நிலையில் மகன் சிறந்த மேடை நகைச்சுவை நடிகனாக திகழ்வதில் அவருக்கு மனம் நிறைந்த சந்தோஷமே என்றாலும், கல்லூரியில்
மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பை சிறப்பாகப் படித்து, தங்கப் பதக்கம் பெற்றவன், அதனைச் சார்ந்த துறையில் கை நிறையும் அளவிற்கான ஊதியத்தில் இரண்டு ஆண்டுகளாக பணியும் மேற்கொண்டு விட்டு, பின் அதனில் திருப்தி அடையாமல் மேடை நகைச்சுவையை தேர்ந்தெடுத்தது அவருக்கு வருத்தத்தையும் கோபத்தையும் கொடுத்திருந்தது!
கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே அகநேயனுக்கு நடிப்பிலும், நகைச்சுவையிலும் ஆர்வம் இருந்தது.
காலேஜ் கொண்டாட்ட தினங்களில் மேடை நகைச்சுவையை செய்த போது எல்லோருக்கும் அது மிகப் பிடித்திருந்தது.
கல்லூரி முடித்து கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி ஹைதராபாத்தில் இருந்த ஒரு கம்பெனியில் இரண்டு ஆண்டுகளாக பணி புரிந்தாலும், நகைச்சுவை மீதிருந்த ஆர்வம் அவனுக்கு குறையவில்லை.
அந்த வேலையும் அவன் மனதிற்கு முழு திருப்தியினை வழங்காமல் போக, சென்னை திரும்பிய போது அன்னையிடம் “நான் ஸ்டான்ட் அப் காமெடி ஷோ பண்றேன்மா. எனக்கு அது பிடிச்சிருக்கு. இந்த வேலை எனக்கு அவ்வளவு இஷ்டம் இல்ல” என்று கூறி இருந்தான்.
திடீரென்று மகன் வந்து இப்படிக் கூறியதும் அதிர்ந்துதான் போனார் கீதாராணி.
அவருக்கு மகன் கணவனைப் போலவே ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற ஆசை இருந்தது! ஆனால், என்றுமே அந்த ஆசையை அவன் மீது திணித்ததில்லை.
நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றிய கணவரின் உயிர், போரில் பறிபோயிருக்க, மகனையும் முழு மனதாக ராணுவத்தில் சேர் என்று வாய் வார்த்தையாகக் கூட கூற முடியவில்லை அவரால்!
எனவே, அவனது இஷ்டத்திற்கே அவனது வாழ்க்கை முடிவுகளை தேர்வு செய்ய விட்டார். அம்முடிவுகளில் ஏதாவது தவறிருந்தால் ஓர் அன்னையாக கண்டித்து அவனை வழி நடத்துவதிலும் தவறவில்லை கீதாராணி!
அப்படி இருக்கையில் மகன் வேலையை விட்டு மேடை நகைச்சுவையை தேர்ந்தெடுக்கிறேன் என்று சொன்ன போது அவரால் கோபம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
“ஸ்டான்ட் அப் காமெடி பண்றதுக்கு எதுக்குடா நாலு வருஷம் மாங்கு மாங்குன்னு என்ஜினியரிங் படிக்கணும்? கேம்பஸ்ல நல்ல கம்பெனில பிளேஸ் ஆகி ரெண்டு வருஷம் வேலைக்கு போகணும்?” என்று மிகவும் கோபமாக கேட்டிருந்தார்.
அன்னையின் கோபத்தில் இருந்த நியாயத்தை புரிந்து கொண்டவனோ “அம்மா.. நீங்க கேக்குறது கரெக்ட்தான். என்ன இருந்தாலும் எல்லாரோட வாழ்க்கைக்கு ஒரு டிகிரி அவசியம் தானே. இப்போ நானே இந்த ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ பண்றேன்னு வைங்க. ஒருவேள அது சக்சஸ் ஆகாம போச்சுன்னா திரும்பி எனக்கு கை கொடுக்கப் போறது இந்த டிகிரி தானே ம்மா. நான் முயற்சி பண்ணி தோத்துட்டா திரும்ப கண்டிப்பா வேலைக்கு போறேன்மா. பட், லெட் மி ட்ரை திஸ்! ப்ளீஸ் மா” என்று கெஞ்சி கேட்டிருந்தான் அகநேயன்.
மகனின் கெஞ்சலில் அவரது உள்ளம் இளகினாலும்
“அது எப்படிடா.. உங்களை மாதிரி சில பேர் என்ஜினியரிங் படிச்சிட்டு ஒன்னு சொன்ன மாதிரி அதுக்கேத்த வேலையை பாக்காம பிசினஸ், சினிமா, மியூசிக், காமெடின்னு அதுக்கு சம்மந்தமே இல்லாத ஃபீல்டை கெரியரா சூஸ் பண்றீங்க?” என்று கடுப்புடன் கேட்டாலும் அதற்கடுத்து அவனது முயற்சிக்கு தடை விதிக்கவில்லை கீதாராணி.
ஆனாலும் அவன் முயற்சி செய்து பார்க்கும் துறையைப் பற்றி முற்றிலும் அறிந்து கொள்ளத் தொடங்கி இருந்தார்.
யூ டியூபில் நிறைய ஸ்டான்ட் அப் காமெடி ஷோவினை பார்த்தார். ஒரு சிலரைத் தவிர, மற்ற அனைவரும் குறிப்பாக இளைஞர்களை முன்னிறுத்தி நிகழ்ச்சியை நடத்தும் நபர்கள் கொச்சையாக பேசுவதையும், கெட்ட கெட்ட வார்த்தைகளை பிரயோகிப்பதையும் கண்டு அதிர்ந்து அருவருத்துப் போனார்.
அப்போதே மகனிடம் “நீ ஸ்டான்ட் அப் காமெடி பண்ணு அகா. ஆனா இதோ இவங்கள மாதிரியெல்லாம் பண்ணாத..” என்று, தான் பார்த்து அருவருப்படைந்த சில நபர்களின் நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டி சொல்லியவர்,
“அடுத்தவங்களை சிரிக்க வைக்கிறதுக்கு அடல்ட் கன்டென்ட்தான் பேசணும்னு அவசியம் கிடையாது அகா. அப்படி பேசித்தான் சிரிக்க வைக்கனும்னா நீ யாரையும் சிரிக்க வைக்கவே வேண்டாம். நீ பண்ற ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவை உன்னோட அம்மாவா எந்த விதமான தயக்கமும், சங்கடமும் இல்லாம நான் பாக்கனும். நம்ம ஶ்ரீயும் முகம் சுளிக்காம பாக்கனும். அதே மாதிரி பெத்தவங்க அவுங்க குழந்தைங்கள பாக்க வைக்கிற மாதிரி இருக்கணும். அடுத்த தலைமுறை குழந்தைகளும் ரொம்ப முக்கியம் தானே! சோ, நீ பண்ற செயல்ல சின்ன தப்பு கூட இருக்கக் கூடாது!” என்று மகனிடம் மிக உறுதியுடன் வலியுறுத்தி இருந்தார் கீதாராணி!
அன்னையின் விருப்பத்திற்கும், வலியுறுத்தலிற்கும் தலை வணங்கி அகநேயன் அவனது மேடை நகைச்சுவை நிகழ்ச்சியினை சிறியோரில் இருந்து பெரியோர் வரையில் கலந்து கொள்ளச் செய்து கலகலப்பாக சிரிக்கவும் வைப்பதில் கை தேர்ந்தவனாக உருமாறி, அவனது முயற்சியில் மிக நன்றாகவே வெற்றி அடைந்திருந்தான்.
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக இந்த நகைச்சுவை நிகழ்ச்சி அவனது பிரதான அடையாளமாக மாறி இருந்தது.
இந்த ஏழு ஆண்டுகளில் இனியவர்ஷினியைப் போல் யாரையும் அவனது நிகழ்ச்சியில் சந்தித்ததில்லை!
எதிர்பாராத நேரத்தில் படபடவென கொட்டும் மழையைப் போல், இனியவர்ஷினியின் வார்த்தைகள் அகநேயனின் அகத்தில் மழையினை பொழிய வைத்திருந்தன.
சிந்தனை அவளிடமே சிக்குண்டு கிடக்க, அவனுக்கு வேறெதிலும் கவனம் பதியவில்லை.
ஏனோ மனநிலை இதமாக இருந்தது. அந்த இதத்தை கலைக்க விரும்பாதவனாக மௌனத்தை தத்தெடுத்துக் கொண்டான்.
எப்போதும் நிகழ்ச்சி முடிந்ததும் தங்கை, அன்னையுடன் வீட்டிற்கு காரில் செல்லும் பொழுது எதையாவது சலசலத்துக் கொண்டே வருபவன் அன்று மௌனமான புன்னகையுடன் இருந்தால் அவர்களுக்கும் விசித்திரமாக தோன்றும் தானே?
“அந்தப் பொண்ணு சரின்னு சொன்னதும் எனக்கும் சிரிப்புதான் அகா. ஶ்ரீ கூட நீ பேசினதைப் பாத்து அண்ணா நடிக்கிற மாதிரியே இல்லமா. நிஜமா உருகி பேசுற மாதிரி இருக்குன்னு சொன்னா. ஆனா, நீ பேசினதுக்கு அவ பதில் பேசினா பாரு… சத்தியமா நான் அதை எதிர்பார்க்கல. அவ சொன்னது எல்லாமே ஓரளவு சரி தானே” என்றவர்,
“இன்னொன்னையும் அவ சொல்லி இருக்கலாம்” என்றார் கீதாராணி புன்னகையுடன்.
“இன்னொன்னா? அது என்னமா?” என்று அஞ்சலி கேட்க, “அதான்டி. குடிகாரனா இருந்தான்னு இவன் கேட்டதை அந்தப் பொண்ணு அப்படியே அவாய்ட் பண்ணிட்டா. அதுவும் சரி தானே. மத்தது எல்லாம் அவளால ஈசியா அனலைஸ் பண்ண கூடியதா இருந்ததால எல்லாத்துக்கும் விளக்கம் கொடுத்தா. இந்த விஷயம் பெர்சனல்லி நெருக்கமா இருந்தாதான தெரியும்! உனக்கும் எனக்கும் நம்ம அகனைப் பத்தி தெரியிற மாதிரி. இந்த மாதிரி விஷயத்தில் என் மகன் சுத்தத் தங்கம்..” என்றார் நம்பிக்கை நிறைந்த பெருமையான குரலில்.
அன்னையின் பேச்சில் அதுவரை இருந்த இதமான மனநிலை தொலைந்து போக, தாயை சந்திக்க முடியாமல் ஜன்னல் புறம் பார்வையை திருப்பிக் கொண்டான்.
உதடுகள் புன்னகையின் அளவை குறைத்திருக்க, அகநேயன் மனதை குற்ற உணர்வு ஆக்கிரமித்துக் கொண்டது.
**********************
இரவு 10:30 மணிக்கு வீட்டிற்கு வந்த மகளை நன்றாகவே முறைத்தார் சந்திரா.
கதவை திறந்து அவளுக்கு வழி விட்டபடி “இதுதான் வீட்டுக்கு வர நேரமாடி? மணி என்னன்னு பாத்தியா? எப்பவும் ஏழு மணிக்கு வந்துடுவ தானே? இன்னைக்கு என்ன?” என்று கோபமாக ஆரம்பித்தவர், “காலைல சொன்ன மாதிரி, எங்க வீட்டுக்கு சீக்கிரம் வந்தா அம்மாவும் அண்ணனும் கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சுடுவாங்கன்னு பத்தரைக்கு வந்தியா?” என்றார் கோபம் குறையாமல்.
தாயின் பேச்சினை காதில் வாங்கிக் கொள்ளாதவளாக அறைக்குள் சென்று மறைந்த இனியவர்ஷினி குளித்து உடை மாற்றி வந்தாள்.
அந்த இடைவெளியில் வெண்ணிலாவிற்கு அழைத்துப் பேசி பாதி விஷயத்தை கறந்திருந்தார் சந்திரா.
வெண்ணிலா சந்திராவிடம் “ஸ்டான்ட் அப் காமெடி ஷோ போனோம்மா. அப்படியே வெளிய சாப்பிட்டு வந்துட்டோம். அதான் லேட் ஆகிடுச்சு. இனியை திட்டாதீங்க.. நான்தான் அவளை வர சொல்லி கூட்டிட்டு போனேன்” என்று சுருக்கமாக விளக்கம் கொடுத்தாள்!
அன்னை தோழியுடன்தான் பேசுகிறார் என்பதை புரிந்து கொண்ட இனியவர்ஷினி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
அடுக்களை சென்று தனக்கான பாலினை சுட வைத்து அதில் சிறிது ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட்டு கருப்பட்டி கலந்ததும், வடிகட்டி எடுத்து வந்தாள்.
ஏலக்காய் பால் நிறைந்த கோப்பையுடன் சோபாவில் அமர்ந்தவள், அதனை நிதானமாக பருகியபடி வீட்டை பார்வையால் அலசினாள். இளமாறன் வீட்டில் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
அவனது அறையும் ஒளி வெளிச்சம் இல்லாமல் கதவு சாற்றிய நிலையில் இருக்க, உடன் பிறந்தவன் இன்னும் வீடு வந்திருக்கவில்லை என்பதை அறிந்து கொண்டதும் ஒரு வித நிம்மதியுடன் பெருமூச்செறிந்தாள் இனியவர்ஷினி.
அவர்கள் வசிப்பது இரண்டு தளங்கள் கொண்ட சிறிய அப்பார்ட்மெண்ட்டில்!
இரண்டாம் தளத்தின் முதல் வீடு அவர்களுடையது. இரண்டு படுக்கை அறைகள், பெரிய ஹால், ஒரு பூஜை அறை, அளவான அடுக்களை, சிறிய டைனிங் ஏரியா, ஓர் அறையை ஒட்டிய பால்கனி, வெளிப் புறத்தில் அவர்கள் வீட்டை ஒட்டிய படிகளுக்கு அருகேயே சிறிய மொட்டை மாடி என அழகான அமைப்பான வீட்டில்தான் மாதம் பதினைந்தாயிரம் வாடகைக்கு குடியிருக்கிறார்கள் இளமாறன் குடும்பம்!
வாடகை வீடே ஆகினும் அதனை சொந்த வீடாக பாவித்து மிகவும் சுத்தமாக, நேர்த்தியாக வீட்டினை பராமரிப்பார் சந்திரா.
இனியவர்ஷினியையும் பராமரிக்க வைப்பார்!
காலை எழுந்ததும் மூவருமே வேலைக்கு கிளம்ப வேண்டும் என்பதால், அனைத்து வேலைகளையும் பகிர்ந்து செய்வதே மூவரின் வழக்கம்.
காலை உணவு தயாரித்து விட்டு, வீட்டை சுத்தப் படுத்துவது சந்திராவின் வேலை! மதிய உணவை மூவருக்கும் சேர்த்தே சமைப்பது இனியவர்ஷினியின் வேலை! சமைத்த பாத்திரங்களை எல்லாம் கழுவி வைப்பது இளமாறன் வேலை!
மாலை ஆறு மணி போல் இளமாறன் பணி நேரம் முடிந்து விடும்.
ஐந்து மணி அளவில் ‘ஹைப்பர் மார்கெட்’டில் வேலையை முடித்து காத்திருக்கும் அன்னையை கையோடு அழைத்துக் கொண்டு இல்லம் வந்து விடுவான்.
ஏழு மணிக்கு பணி முடிந்து இல்லம் வருவாள் இனியவர்ஷினி. மூவரும் எதையாவது சிரித்துப்
பேசியபடி இரவு உணவை இணைந்தே செய்து உண்பார்கள்.
ஆனால், கடந்த இரண்டு நாட்களாக எல்லாமே மாறி இருந்தது.
அன்னை மீதிருந்த கோபத்திலும், அண்ணன் மீதிருந்த வருத்ததிலும் இனியவர்ஷினி எந்த வேலையும் செய்யவில்லை! செய்யத் தோன்றவில்லை.
இன்றைய இரவு அண்ணனும் வராமல் இருப்பதை கண்டு, தாயே அனைத்து வேலைகளையும் செய்து முடித்திருந்ததை எண்ணி கஷ்டமாகவும் இருந்தது.
சென்னை குடி வருவதற்கு முன்பே சந்திராவிற்கு அவரது கணவரின் உபயத்தால் ஏற்கனவே மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறது. அதற்கான சிகிச்சைகளையும் திண்டுக்கல்லில் வைத்தே மேற்கொண்டிருந்தனர்.
அதனை கருத்தில் கொண்டு நீங்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று தாயிடம் பிள்ளைகள் எவ்வளவோ மன்றாடி விட்டனர். ஆனால் சந்திரா ஒப்புக் கொள்ளவில்லை.
“பிள்ளைங்க நீங்க ரெண்டு பேரும் கஷ்டப்பட்டு நாள் முழுக்க அந்த லாப்டாப் மேலயே கண்ண வச்சி சம்பாதிக்குறீங்க. நான் மட்டும் வீட்ல உட்கார்ந்து சீரியல் பார்த்து பொழுதை போக்கவா? கிடைச்ச வேலைக்கு போறேன். அதுல வர்ற பணம் வீட்டு செலவுக்காவது கண்டிப்பா உதவும்தான” என்றவர், முதலில் அருகில் இருந்த டிபார்ட்மென்டல் ஸ்டோரிற்கு வேலைக்குச் சென்றார்.
பின்பு அங்கிருந்து மாறி, தற்போது வேலை பார்க்கும் ‘ஹைப்பர் மார்கெட்’டில் இந்த இரண்டு ஆண்டு காலமாக மாதம் பதினைந்தாயிரம் சம்பளத்திற்கு வேலைக்குச் சென்று வருகிறார்.
அவர் சம்பாதித்த பணத்தை வீட்டு வாடகைக்கு கொடுக்கலாம் என்று சொன்னபோது முற்றிலும் மறுத்தனர் பிள்ளைகள்.
“நீங்க சம்பாதிக்கிற காசு எங்களுக்கு பொக்கிஷம்மா. அதை பத்திரமா சேமிச்சு வைங்க. பின்னாடி வர்ஷா கல்யாணத்துக்கு கூட எடுக்கலாம். இப்ப என் சம்பளமே வீட்டு வாடகைக்கும், செலவுக்கும் போதும். உங்க ரெண்டு பேரோட சம்பளத்தையும் சேர்த்தே வைக்கலாம்!” என்று உறுதியாக கூறி இருந்த இளமாறன் இன்றளவும் அதனைக் கடைபிடித்து இல்லத்தின் பொறுப்புள்ள தலைமகனாக விளங்குகிறான்.
வெண்ணிலாவிடம் பேசி விட்டு வந்த சந்திரா “என்னடி.. ஏதோ காமெடி ஷோ போனீங்களாம்..” என்று முறைத்தபடி மகளிடம் கேட்க, அன்னை கேட்டதும் அகத்தினுள் அகநேயனின் நினைவுகள் எழத் தொடங்கின!
“Let’s Love endlessly இனியா..” என்று தலை சாய்த்து மயக்கம் புன்னகையுடன் காதல் சொன்னவனின் முகமே மனதை முகாமிட்டிருந்தது!
‘அவரு நடிச்சாரு! லவ் சொல்லல..’ உள்ளிருந்து அவளது மனசாட்சி கூக்குரல் போட, தலையை உலுக்கிக் கொண்டாள் இனியவர்ஷினி.
“வர்ஷி…” என்ற சந்திராவின் அழுத்தமான அழைப்பில், தன்னை சமன் செய்து கொண்டு அன்னையை ஏறிட்டாள்.
“கேக்குறேன்தான பதில் சொல்லுடி”
“ஆமா. போனோம். ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்தது. அதனால போனோம்! போதுமா?” என வேக வேகமாக பதிலுரைத்தவள், எழுந்து அடுக்களைக்குள் சென்றாள்.
மகளைத் தொடர்ந்து வந்த சந்திராவும் “அப்படி என்னடி? ஸ்ட்ரெஸ்? கல்யாணப் பேச்செடுத்தா உனக்கு ஸ்ட்ரெஸ்ஸா?” என்றார் கோபமாக.
“கல்யாணப் பேச்சை எடுத்ததால ஸ்ட்ரெஸ் இல்லமா! கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப் படுத்துறதால ஏற்பட்ட ஸ்ட்ரெஸ்!” என்றாள் அழுத்தமாக!
“என்னடி ஸ்ட்ரெஸ்? சொல்லப் போனா உனக்கு இந்த வயசுல கல்யாணப் பேச்சை எடுத்ததுக்கே நீ சந்தோஷப்படனும். உன் வயசு தானே வெண்ணிலாவுக்கு. பாரு. அவ கல்யாணம் பண்ணி.. குழந்தை பெத்து, அவனை ஸ்கூலுக்கு அனுப்புற நிலமைல வந்து நிக்கிறா. ஆனா.. நீ.. இன்னும் கல்யாணத்துக்கே சம்மதம் சொல்லாம இழுத்தடிக்கிற” என்றார் கண்ணீரும் கோபமுமாக.
“வெண்ணிலா கூட என்னை கம்பேர் பண்ணாதமா. அவ லைஃப் வேற. என் லைஃப் வேற” என்று அழுத்தமாக கூறியவள், “நான் இழுத்தடிக்கல. இப்போதைக்கு…” என்றவளை முடிக்க விடாமல் இடையிட்டது சந்திராவின் கோபக்குரல்.
“என்னடி இப்போதைக்கு.. என்ன இப்போதைக்குன்னு கேக்குறேன்…” அவரின் பொறுமை கரைந்து போயிருந்தது. மகளை முழுதாக பேசி முடிக்க விடாமல் இரைந்தார்.
அதற்கு மேல் அன்னையின் கோபத்தை காண விரும்பாமல் “அம்மா..” என்று இனியவர்ஷினி இயலாமையுடன் அழைக்க, “ஏன்டி இவ்வளவு பிடிவாதமா இருக்க?” என்று தானும் இயலாமை கலந்த கண்ணீர் குரலில் கேட்ட சந்திரா பட்டென்று மகளை நிமிர்ந்து பார்த்து மனதில் தோன்றிய கேள்விகளை அடுக்கினார்.
“ஏன் வர்ஷி.. உன் மனசுல யாரும் இருக்காங்களா? யாரையும் காதல் பண்றியா? அதனாலதான் கல்யாணத்துக்கு சரின்னு சொல்ல மாட்டேங்குறயா? எதுவா இருந்தாலும் சொல்லுடி?”
அன்னையின் கேள்வியில் திகைத்துப் போனாள் இனியவர்ஷினி. இப்படி அவர் கேட்கக்கூடும் என்றவள் நினைக்கவில்லை!
“அம்மா..” என்று பல்லைக் கடித்துக்கொண்டு தாயை முறைத்தாலும், மீண்டும் அழையா விருந்தாளியாக அகத்தை வந்தடைந்தான் அகநேயன்!
ஒரு பேனா ரோஜாவினைக் கொடுத்து பொய்க் காதல் பிரேரணை செய்தவன், நிஜமாகவே அவளை மிகவும் பாதித்திருந்தான் என்பதற்கு இப்போது அவளது அகத்தில் மின்னியவனின் முகமே சாட்சியாக..!
