“அவன் உடனே வரணும்னு இல்லை. ஊர் சுத்துறானு தான் ஆபீஸ் வரச் சொன்னேன். ஆனா அவனை இப்படியே எப்படி பா விட முடியும்?”
“எங்களுக்கு மட்டும் ஆசையா என்ன? உன் தம்பி கண்டிப்பா அந்த பொண்ணை மறக்க மாட்டான். என்ன செய்யனு தெரியாம தான் டா சோகமா உக்காந்துருக்கோம். உங்க அம்மா சும்மாவே புலம்புவா. நீ வரதுக்கு முன்னாடி ஒரே அழுகை தான்”, என்று சொல்ல அன்னையை திரும்பிப் பார்த்தான்.
Advertisement
அங்கே அழுத தடயம் எதுவும் இல்லை தான். ஆனாலும் மகன் பார்க்கவும் இல்லாத கண்ணீரை சேலை தலைப்பால் துடைத்துக் கொண்டாள் ராஜேஸ்வரி.
Advertisement
“நாங்க கண்ணை மூடுறதுக்குள்ள உன் வாரிசை பாத்துறலாம்னு நினைச்சோம். அதுக்கு வழி இல்லை. கடைசில இப்ப அவன் கதையும் இப்படி ஆகிருச்சு. நாங்க என்ன வரம் வாங்கி வந்தோமோ தெரியலை”, என்று கோதை வேறு ஒரு பக்கம் நடிக்க “அந்த பொண்ணு எதுக்கு பா கல்யாணம் வேண்டாம்னு சொல்லுது. நீங்க நேரடியா பேசுனீங்களா?”, என்று கேட்டான் அருள்மாறன்.
Advertisement
“அந்த பொண்ணு அவங்க பாட்டி வீட்ல கோயம்பத்தூர்ல இருக்குதாம். இன்னைக்கு தான் அங்க இருந்து வரச் சொல்லிருக்காங்க. பேசி பாக்குறேன்னு சொல்றாங்க. ஆனா எங்களுக்கு நம்பிக்கை இல்லை”, என்றார் கிருஷ்ணன்.
Advertisement
“சரி பேசி பாருங்க”, என்று சொன்னவன் ஏதோ யோசனையில் உணவை முடித்து விட்டு “நான் பேக்ட்ரிக்கு கிளம்புறேன். ஏதாவது சொல்லி அவனை சாப்பிட வைங்க”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
அவன் போனதும் “ஐயோ, இதுக்கு மேல தாங்காது பா. எனக்கு பசிக்குது”, என்ற படி வந்து சாப்பிட ஆரம்பித்தான் மதன்.
“இது சரியா வருமா? அருள் சரின்னு சொல்லுவானா என்ன? எனக்கு நம்பிக்கையே வர மாட்டிக்கு இவன் மேல. அடுத்து என்ன பண்ண?”, என்று கேட்டார் வையாபுரி.
“எனக்கும் அதே தான் யோசனையா இருக்குது. அவனைப் பத்தி தெரிஞ்சும் நீங்க தான் அவங்க வீட்ல உறுதி கொடுத்துட்டு வந்தீங்க? இப்ப என்ன பண்ணுறது?”, என்று அன்னை மற்றும் மனைவியிடம் கேட்டார் கிருஷ்ணன்.
“ஒண்ணுமே செய்யாததுக்கு கடைசி முயற்சி பண்ணி பாப்போம்னு தோணுச்சு. பொண்ணு வேற அழகா இருந்தா. அந்த பொண்ணு நம்ம மாறனுக்கு நல்ல பொருத்தமா இருப்பா”, என்றாள் ராஜேஸ்வரி.
“அப்ப ஷிவானி அழகா இல்லையோ?”, என்று கேட்டான் மதன்.
“எங்களுக்கு தெரியாம லவ் பண்ணி ஊரை சுத்திட்டு இப்ப பேச்சு வேற. ஒழுங்கா வாயை மூடிட்டு சாப்பிடு. கல்யாணம் பண்ணுற வயசா டா இது?”, என்று ராஜேஸ்வரி சொல்ல அதற்கு பின் அவன் வாயை திறப்பானா என்ன?
“இந்த அருளு இப்ப என்ன முடிவு எடுப்பான்னு தெரியலையே?”, என்று அவர் புலம்ப “எத்தனை பொய் சொல்லியாவது இந்த கல்யாணத்தை முடிச்சிறனும்”, என்றார் வையாபுரி.
“தப்பு தாத்தா. ஒரு நல்ல காரியத்தை பொய் பொய்யா சொல்லி ஆரம்பிக்க வேண்டாமே?”, என்று மதன் வாயைக் கொடுக்க அனைவரும் ஒன்று போல அவனை முறைத்தார்கள்.
“நல்லது தானே சொன்னேன்?”
“இந்த வழி இல்லைன்னா உன்னால அவனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க முடியுமா மதன்? அவன் நம்ம பேச்சை தான் கேப்பானா? அவனும் மனைவி குழந்தைன்னு குடும்பமா இருக்கணும் தானே?”, என்று கேட்டாள் ராஜேஸ்வரி.
“உன் சின்ன மகன் மொத்த சொத்தையும் மூத்தவனுக்கு இல்லாம அமுக்கணும்னு தான் இப்படி நீதி நியாயம்ன்னு பேசிட்டு இருக்கான். என்னமோ பொய்யே சொல்லாத மாதிரி. அன்னைக்கு இவன் பிரண்டுக்கு உடம்பு சரி இல்லைன்னு பொய் சொல்லிட்டு அந்த பிள்ளை கூட ஊர் சுத்திருக்கான்? இவன் இப்ப பொய்யை பத்தி பேசுறான்?”, என்று சொன்ன கோதை பேரனை முறைக்க “எப்பா சாமி, நான் எதுவும் சொல்லலை. எல்லாருக்கும் என் மேல என்ன ஒரு நல்ல எண்ணம்? என்ன வேணாலும் பண்ணுங்க. நான் இனி எதுவும் சொல்ல மாட்டேன். எப்படியோ என் ஷிவானியை மட்டும் என் கூட சேத்து வச்சிருங்க”, என்றான்.
“அதுல தான் டா மதன் இன்னும் சந்தேகமா இருக்கு . எப்படி டா உனக்கு அவளை போய் பிடிச்சது? பாத்தாலே திமிர் பிடிச்சவ மாதிரி இருக்கா. கல்யாணத்துக்கு அப்புறம் என் பொண்டாட்டி சொல்லிட்டா நான் தனிக் குடித்தனம் போறேன்னு வந்து நின்ன சொத்துல சல்லி பைசா தர விட மாட்டேன். எங்க காலம் முழுக்க குடும்பம் ஒத்துமையா இருக்கணும்”, என்று கேட்ட கோதை பேரனின் முறைப்பை பெற்றுக் கொண்டார்.
“என் ஷிவானி ஒண்ணும் அப்படி கிடையாது? ஒரு ஈ எறும்புக்கு கூட துரோகம் பண்ண மாட்டா”, என்றான் முறைப்பாய்.
“அட சும்மா இரு டா. அடுத்து என்னன்னு பாக்கணும்”, என்றார் கிருஷ்ணன்.
“இப்ப தானே அருளோட மண்டையை கழுவ ஆரம்பிச்சிருக்கோம். எல்லாமே நல்லதா நடக்கும். நான் கொஞ்ச நேரம் படுக்குறேன்”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டார் வையாபுரி.
உண்மையிலே அலுவலகம் வந்த அருள் பூர்விகா பற்றிய யோசனையில் தான் இருந்தான். “எதுக்கு அந்த பொண்ணு கல்யாணம் வேண்டாம்னு சொல்லுது? என்ன காரணமா இருக்கும்? ஒரு வேளை லவ் பெயிலியரா இருக்குமோ? இல்லைன்னா ஆண்களையே பிடிக்காம இருக்குமா?”, என்று யோசித்தான். அவன் மனம் எங்கெங்கோ சென்றாலும் அவளையே தான் சுற்றி வந்தது.
கூடவே அவளை வைத்து தனக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்றும் அவன் மனம் சிந்தித்து பார்த்தது. அருள் அந்த யோசனையில் இருக்க ஊருக்கு வந்த பூர்விகா “எதுக்கு மா என்னை இப்படி அவசரமா வர வச்சீங்க? நான் ஒரு நாலு நாள் சந்தோஷமா இருந்தா பொறுக்காதா?”, என்று கேட்டாள்,
“மாப்பிள்ளை வீட்ல உள்ளவங்க வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணுறேன்னு சொன்னாங்க பூர்வி. உடனே பூ வைக்கணும், நிச்சயம்ன்னு எல்லாம் பேசினாங்க. அதான் உன்னை வரச் சொன்னோம். ஆனா அவங்க இன்னும் கால் பண்ணலை. அவங்க பையன் ஒத்துக்கலையோ என்னவோ? அந்த பையன் ஷிவானி கிட்டயும் பேசலையாம். பாப்போம் உங்க ரெண்டு பேர் தலைல என்ன எழுதிருக்குனு. உனக்குன்னு இருக்குறவன் இனியா பிறந்து வரப் போறான்? ஆனா நீ வந்ததும் நல்லதா போச்சு டி. நீ இல்லாம எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. உன் அண்ணி ஒரு வேலை பாக்க மாட்டிக்கா. இந்த ஷிவானி கேக்கவா வேணும்? நான் தான் பேத்தேனான்னு இருக்கு”, என்று சொல்ல திருமண பேச்சு வார்த்தை தீவிரமடைய வில்லை என்ற நிம்மதி வந்தாலும் ஆச்சி வீட்டில் இருந்து வரவைத்தது கடுப்பாக தான் இருந்தது பூர்விக்கு.