சூடு சுரணை இருப்பவர்கள் கண்டிப்பாக சூரிய கதிர்கள் மேலே படும் போது தூங்கிக் கொண்டு இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த இரண்டுமே நம் பார்த்திபனிடம் கிடையாது.
“என்னங்க திடீர்னு இது இருக்கா அது இருக்கான்னு குடுத்து வச்ச மாதிரி கேக்குறீங்க. ” என நம்மையே முறைப்பான் அவன்.
Advertisement
ஆனால் இது தெரியாத பாரதி எப்படியாவது அவனை எழுப்பி விட வேண்டும் என்ற முடிவுடன் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியில் சூரிய பிம்பத்தை விழச்செய்து, அதன் எதிரொலியை பார்த்திபன் முகத்தில் படும்படி வெகு நேரம் காட்டிக் கொண்டு இருக்கிறாள். இமைகளைச் சுருக்கி அசைந்து கொடுத்தானே தவிர எழவில்லை.
“இவன என்ன பண்ணா எந்திரிப்பான்… ச்ச.. தண்ணிய மூஞ்சில தெளிச்சு பாத்திட்டேன். காதுல கத்தியும் பாத்திட்டேன். எரும மாட விட மோசமா இருக்கான். யோவ் பார்த்திபா.. பார்த்திபா.. எந்திரிய்யா.. ” என அழைத்து அழைத்து பார்த்தவள் பொறுக்க முடியாது கிள்ளி விட்டாள்.
Advertisement
Advertisement
“ஸ்.. ஆ.. ” என அலறிக் கொண்டே எழுந்தவன் கண்டது கண்றி இருந்த தன் புறங்கையை.
“எதுக்கு மைம்மா என்னை கிள்ன.. வலிக்கிது. தெரியுமா?” எனப் பாவமாக சொல்ல, குழந்தை போல் சிணுங்கிய அவனின் முகம் அவளின் காலை பொழுதில் புத்துணர்வை தந்தது.
Advertisement
அவன் வாங்கி தந்து புது நீல வண்ணச் சுடிதார். தலையில் கொண்டையிட்டு நீர் சொட்ட சொட்ட முகத்தில் எவ்வித செயற்கை பூச்சும் இல்லாது பனி விழுந்த மலர்வனம் போல் அருகில் நின்றவளை ரசிக்க அவனுக்கு தான் நேரம் இல்ல. எனெனில் கதவுகள் தட்டப்பட்டுக் கொண்டே இருந்தன.
“ம்ச்… யாருன்னு கொஞ்சம் பாத்தாத்தா என்ன.” என பாரதியிடம் சிடுசிடுத்தான் அவன். ஏனெனில் அது விடாது தட்டப்பட்டுக் கொண்டே இருந்ததால் வந்த எரிச்சல் அது.
“நான் தொரந்தா அந்த கதவுக்கு அந்தப் பக்கம் இருக்குறவங்களுக்கு பிடிக்காது. நீயே திற… அரைமணி நேரமா தட்டுறாங்க. பாவம் கையி வலிக்க போது.” எனச் சொன்னவள் தலையில் இருந்த துண்டை அவிழ்த்து முடிகற்றைகளை உலர்த்த தொடங்கினாள்.
முதலில் கதவு தட்டப்பட்டதும் உறக்கம் கலைந்து அவள் தான் சென்று கதவை திறந்தாள். ஆனால் தட்டியவள் பாரதியை ஆக்ரோஷமாக விழித்தாள். விஷாலினி தான் கதவை தட்டியது.
விஷாலி பாரதியை பார்த்து முறைத்தபடி நிற்க, பாரதி உள்ளே செல்லலாம் என்பது போல் வழிவிட்டு கதவில் சாய்ந்து கொண்டு நின்றாள். ஆனால் விஷாலினியோ, ‘நீ திறந்தா அதுக்குள்ள நான் போகணுமா.. முடியாது. எம்மாமன வரச் சொல்லு.. ‘ என்பது போல் திறந்திருந்த கதவை மீண்டும் தட்டினாள்.
‘எதுக்கும்மா திறந்திருக்குற கதவ தட்டுற.. நான் மூடீட்டு போறேன். நீ தட்டிட்டே நில்லு.’ என்பது போல் பாரதியும் கதவை மூடிவிட்டு குளியல் அறைக்குள் சென்றாள்.
ஆனால், விஷாலி, மாமன் வந்து திறந்தால் தான் உள்ளே வருவேன் என அடம்பிடித்து தட்ட, பாரதிக்கு தான் பாவமாகிப்போனது. அதனால் பார்த்திபனை எழுப்ப முயன்று வெற்றியும் பெற்றுவிட்டாள்.
கதவைத் திறந்தது தான் தாமதம் விஷாலி பாய்ந்து வந்து பார்த்திபனை அணைத்துக் கொண்டு அழுது தீர்த்தாள். நேற்று மட்டும் திருமணம் நடந்திருந்தால் இந்த அறையில் இருந்திருக்க வேண்டியது தான் தான் என சொல்லி அழ, அவளைச் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினான் பார்த்திபன்.
ஈரக்கூந்தலைத் தளர்வாக பின்னி முடித்த பாரதி அலங்காரத்திற்கு என அங்கிருந்த ஆள் உயர கண்ணாடி முன் நின்றாள். கரம் தானாக உயர்ந்து நெற்றி வகிட்டைத் தொட்டு பார்த்தது. அங்கு நேற்றைய பொழுது பார்த்திபன் வைத்த குங்குமத்தின் அச்சு லேசாக இருந்தது. இதழ்கள் புன்னகை பூக்க,
“யார் என்ன வேண்ணாலும் சொல்லிட்டு போட்டும். இனி நான் பார்த்திபன் பொண்டாட்டி. அவெந்தா என்னோட புருஷெ. ஆறு மாசத்துக்குனாலும் நாந்தா அவெ பொண்டாட்டி. ” எனக் கண்ணாடி பார்த்து சொல்லியவள் அறையை விட்டு வெளியே வர, அங்கு பார்த்திபன் விஷாலினியை அணைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தான். சண்முகம் மகளின் தலையை வருடியபடி ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தார்.
ஏதேதோ என்ன! “ஆறு மாசத்துல உன் படிப்பு முடிஞ்சிடும்டா குட்டி. அதுக்குள்ள அந்தத் தெரு நாய வீட்ட விட்டு தொரத்தி விட்டுட்டு, உ மாமெ உன்ன கட்டிப்பாரும்மா. நீ அழாத. உ மாமே உனக்கு தா. வேற யாருக்கும் கிடையாது… ” எனப் பாரதியை பார்த்தபடி சொல்ல, பார்த்திபனும் அவளைத் தான் பார்த்தான்.
‘ஓ இதுக்கு தா ஆறு மாச காண்ட்ராக்ட் போட்டானா! இவ படிப்பு முடியுற வர டைம் பாஸ் பொண்டாட்டியா நான். இருக்கட்டும். நாமலும் அம்மா திரும்பி வர்ற வர இங்கருங்கறங்கள வச்சி டைம் பாஸ் பண்ணிக்க வேண்டியது தா. ‘ என நினைத்தவளுக்கு விஷாலினி மீது துளியும் கோபமும் பொறாமையும் எழவில்லை.
மாறாக பாரதியை வெட்டி விட்டு விட்டு பார்த்திபன் தன் மகளை திருமணம் செய்வான் என்று உறுதியாக நம்பும் சண்முகத்தை பார்க்கையில் பரிதாபமாக இருந்தது. விஷாலினியே பாரதி பார்த்திபன் திருமணத்தை பற்றி பேசாத போது, இவர் ஒவ்வொரு நொடியும் நினைவு படுத்தி அவளை அழ விட்டு வேடிக்கை பார்ப்பது போல் இருந்தது.
‘பாவம் அந்த குழந்தையிடம் இன்னும் என்னென்ன சொல்லி இருக்காரோ! அந்த குழந்தையும் அதை நம்பிக் கொண்டு இருக்கிறது. பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு வழி காட்டும் கடமை மட்டுமே பெற்றோரிடம் உள்ளது. எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை கிடையாது. இங்கு இது தான் உன் எதிர்காலம் எனக் கானல் நீரைக் காட்டி, போகாத ஊருக்கு வழிக் காட்டிக் கொண்டு மட்டுமல்ல கை பிடித்து நடைப் பயின்று கொண்டிருக்கிறார்.’ என விஷாலியின் மீது கருணை பிறந்தது.
‘சரி உங்க செண்டிமெண்ட் ஷீன முடிச்சிட்டு வாங்க. நான் போறேன்.. ‘ என்பது போல் நடந்து சென்றுவிட்டாள். சண்டைக்கு வருவாள். அல்லது அதிர்ந்து போய் கணவனின் மனத்தில் இடம் பெற முடியாமல் அவமானப்பட்டு கண்ணீர் வடித்துக் கொண்டு நிற்பாள் என்று எதிர்பார்த்த சண்முகத்திற்கு ஏமாற்றமே.
கீழே வந்தவள் கண்டது வட்டமாக போடப்பட்டிருந்த உணவு மேஜையில் கூடியிருந்த குடும்பத்தை. படிக்கட்டில் இறங்கி வந்து கொண்டிருந்தவளைச் சாப்பிட அழைக்க முன்வந்ததான் ராம்.
“இல்லண்ணாத்த… எனக்கு காலைல நாஸ்த்தா பழக்கம் இல்ல.” என மறுத்தாள்.
“இனி பழகிக்க… வந்து உக்காரு. எல்லாம் விதவிதமா ரகம் ரகமா இருக்கு. ராஜா வீட்டு விருந்து போல. இதுக்குத்தான ஆசப்பட்டு ஏமாத்தி எங்க வீட்டு பையன கைக்குள்ள போட்டு வச்ச. ம்.. வந்து கொட்டிக்க.. இந்த மாதிரி சாப்பாடெல்லாம் கனவுல கூட கண்டிருக்க மாட்டா. ஆனா, ஆண்டவெ இப்ப அத உ வாய்க்கே கொண்டு வந்து தரும் போது. அள்ளி வச்சி சாப்பிடு… வா.. ” என நக்கலாக மாலு அழைக்க, அவள் மேஜைக்கு அருகே வந்தாள்.
உணவு உண்ண அல்ல. நம்ம அனந்த் தாத்தா சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அவரைப் பார்க்க…
“கோதும தோச… ம்… எத்தனாவது.. ” என அவரின் நாற்காலியை பற்றிக் கொண்டு நக்கலாக கேட்டாள் பாரதி. நேற்றைய இரவு அவர் மயங்கி சரிந்ததை நிஜம் என்று முதலில் பயந்து விட்டவளுக்கு, அது நாடகம் என்று பின்னர் புரிந்ததால் வந்த நக்கல் குரல் அது. அது புரியாது…
“இப்பத்தாம்மா ரெண்டாவது தோசய எடுத்து தட்டுல வச்சிருக்காரு. நீ சாப்பிடுறியா? உனக்கு மொறு மொறுன்னு ஊத்தி எடுத்திட்டு வர்றேன். ” என்றார் பத்மா.
அவருக்கு பதில் சொல்லாது தாத்தாவின் பக்கம் திரும்பிய பாரதி,
” அட்டாக் வந்த ஹார்ட் பேஷண்ட் காலைல ரெண்டு சாப்பிட்டா எப்படி? எடுத்து வச்சி நல்லா சாப்பிட்டாதான ஹார்ட்டு ஸ்ராங்கா மாறும். ஆமா நேத்து நெஞ்சில கைய வச்சிட்டு சாயும் போது, எந்த பக்கம் கைய வச்சிருந்தீங்க?” எனக் கேட்க, தாத்தா திருதிருவென முழித்தபடி சந்ருவை பார்த்தார்.
எனெனில் அவன் தான், ‘அந்த பிள்ள ஏதாவது ஏடாகூடமா வாய் ஓவரா பேசுச்சின்னா டக்குன்னு வலது கைய எடுத்து இடது பக்கத்துல வச்சிட்டு சாஞ்சிடுங்க. நான் வந்து தூக்கிட்டு போய்டுறேன். என்ன சரியா… பர்பெக்ட்டா நடிக்கணும். ‘ என அவளுக்கு உணவை எடுத்துச் செல்லும் போது கூறியிருந்தான்.
இப்போது பாரதி கேட்கவும் என்ன பதில் சொல்ல என்று தெரியாது சந்ருவை தான் அவர் பார்த்தார். அவரை தொடர்ந்து பாரதி, ராம், மாலூ என அனைவரும் அவன் பக்கம் திரும்ப,
“தாத்தா, சட்னி வேணும்னா வாயத்திறத்து கேக்க வேண்டியது தான. என்னைய பாத்தா சட்னி எப்படி வந்து உங்க தட்ட நிறைக்கும். ம்… இந்தாங்க நல்லா தொட்டு சாப்பிடுங்க.” எனத் தட்டில் ஊற்றியவன் அவரின் காதில், ‘என்னை மாட்டி விட்டுடாதிங்க தாத்தா. அப்றம் உங்க பேத்தி என்னை வீட்ட விட்டு வெளில தொத்திவா. எங்கம்மா வீட்டுல நான் வாழா வெட்டனாத்தா வாழ வேண்டி இருக்கும். என்னோட வாழ்க்கையே உங்க பேத்தி கைல தா இருக்கு. ‘ எனச் சொல்லி செல்ல, பாரதி மீண்டும் அதே கேள்வியை கேட்டாள்.
“சொல்லுங்க தாத்தா! எந்த பக்கம் கைய வச்சிங்க?”
” இப்ப எதுக்கு நீ நேத்து நடந்தத பத்தி பேசி நியாபகப்படுத்துற. அப்றம் தாத்தா மறுபடியும் மயங்கி விழுந்திடப்போறாரு.” என ஆதரவாக குரல் குடுத்து மயங்கச் சொல்லி ஜாடை செய்ய, தாத்தா தன் இடது கையை எடுத்து வலது பக்க நெஞ்சை நீவி விட்ட படி நாற்காலியின் பின்னால் சாய, சந்ரு தலையில் அடித்துக் கொண்டான்.
‘ஹார்ட்டு வலது பக்கம் இருக்குமா இடது பக்கம் இருக்குமான்னு தெரியாததுனால தான் அவரு அண்ணே மகெ அவர அசிங்கப்படுத்தித் துரத்தி விட்டுட்டான் போல. ‘ எனச் சந்ரு முணுமுணுத்துக் கொண்டே தாத்தாவை திட்டுக்கொண்டு தூக்கினான்.
‘ஸாரி டா பேராண்டி. முன்ன பின்ன எனக்கு அட்டாக் வந்தது இல்லயா. அதுனால சரியா நடிக்கல போல. கண்டுபிடிச்சிட்டா’ என்றவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று பாரதியிடம் இடம் இருந்த காப்பாற்றினான் சந்ரு.
தன் மாமனாருக்காக மூன்றாவது தோசையை எடுத்து வந்த பத்மா அவரின் இருக்கை காலியாக இருப்பதை உணர்ந்து தோசையை என்ன செய்வது என்று தெரியாது முழிக்க,
“அவளுக்கு வை… சாப்பிடுவா… உக்காரும்மா…” என்றார் அகிலா பாட்டி அக்கறையாக. பாரதி தயங்கி நிற்கவும், மயூரி அவளின் கரத்தை பற்றி இழுத்து அமரச் செய்து பரிமாறினாள்.
பாரதி அமர்ந்ததும் நேகா எழுந்து கொண்டாள். எதுவும் சொல்லாது அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவள், வாய்க்குள்ள பாரதியை திட்டிக் கொண்டே சென்றுவிட்டாள்.
நேகா பிறருக்கு கேட்காதது போல் பேசியதை மாலு அனைவரும் கேட்கும்படி கூறினார்.
“இந்த வீட்டுல தராதரம்னா என்னென்னே யாருக்கும் தெரியல. பொறவாசல் வழி வந்தவள கூட்டுட்டு வந்து நடுவீட்டுல உக்கார வச்சி குடும்பமா சேர்ந்து பந்தி பரிமாறிட்டு… ச்சீ… ” என்ற படியே எழ,
“அதா யாருக்கும் தெரியலயே… தராதரம்ன்னா என்னென்னு பாடம் நடத்திட்டு போறது. ” என்றாள் பாரதி. அவளைத் தீ என முறைத்தார் மாலு.
“நடு வீட்டுல டைனிங் டேபிள்ல உக்காந்து சாப்பிடுறதுக்கு என்ன தராதரம் வேணும்னு எதிர்பாக்குறீங்க?”
“சரிக்கு சரியா உக்காந்து சாப்பிடுற அளவுக்கு நீயும் நானும் ஒன்னா? “
“ஒன்னு தா… நீங்களும் இந்த வீட்டுக்கு வாழ வந்த மருமக. நானும் மருமக தா. “
“மொறப்படி மருமகளா வந்தவ நான். உன்ன மாதிரி ஆம்பளப்பையன வல வீசி பிடிச்சி திருட்டுத்தனமா பதிவு திருமணம் செஞ்சி ரகசியமா வந்தவ இல்ல.”
“வலை வீசியோ! தூண்டில் போட்டோ! எங்க கல்யாணமும் மொறப்படி தா நடந்தது. இதோ தாலி… இத நேத்து தா உங்க எல்லார் முன்னாடியும் பார்த்திபன் கட்டுனான். நீங்க கூட அட்சதைய தூவ சொன்னா பெட்ரோல் குண்ட எறியுற மாதிரி வீசி எறிஞ்சிங்களே. மறந்திடுச்சா.. ” என நக்கலாக கேட்க, மயூரி சிரித்து விட்டாள். அவளை மாலு புயல் தாக்க, தப்பித்து ஓடி கணவனின் பின்னால் தஞ்சம் அடைந்து கொண்டாள்.
எதுடி மொறப்படி நடந்தது. உன் கல்யாணமா!! ஹிம்… பொண்ணு பாத்து, ஜாதகம் பொருந்தி, நாள் நட்சத்திரம் குறிச்சி, வீட்டுல இருக்குற எல்லாரோட சம்மதத்தோட, பெத்தவங்க பெரியவங்க முன்னாடி நின்னு நடத்துறது தா கல்யாணம்? இப்படி மாத்து துணி கூட இல்லாம பஞ்சத்துல இருக்குற உன்ன மாதிரி அனாதைக்கு எங்க பையன் தந்திருக்குறது ஆதரவு. ஓட்ட வீட்டுல இருக்குறவன்ட்ட… மழ நிக்கிற வர எங்க வீட்டுல ஒரு ஓரமா தங்கிக்கன்னு சொல்ற பொருந்தன்ம அது. அதுக்கு நீ நன்றியோட இருக்கணும். அதுவும் மூலைல… ” என்றவர்,
“அறுபது பவுன் போட்டு வந்த நான் எங்க! காதுல, கழுத்துல ப்ளாஸ்டிக் கூட வழியில்லாத இவ எங்க? ஒன்னாம்ல ஒன்னு…” என முணுமுணுக்க, அது அனைவரின் காதுகளிலும் தெளிவாக விழுந்தது.
‘ஓ இந்தம்மா அத்த எதிர் பாக்குதா!!’ என பாரதி புருவம் உயர்த்தினாள்…