Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இருளை வென்ற இமைகள் 6

அத்தியாயம் – 6

காவிரி ஆற்றின் கரை பகுதியில், பச்சைப் பசேலென்ற வாழைத் தோப்புகளும், கரும்புக் காடுகளும் சூழ்ந்த அந்தச் செழிப்பான கிராமத்தின் மேற்குக் கோடியில் இருந்தது வீரராகவனின் வீடு.

ஆற்றங்கரைக் காற்று எப்போதும் ஈரப்பதத்தோடு வீசும் அந்தப் பகுதியில், ஊரின் மற்ற வீடுகளைப் போலல்லாமல், உயரமான மதில் சுவர்களும், வாசலில் எப்போதும் கட்டப்பட்டிருக்கும் நாட்டு நாய்களும், திண்ணையில் சூழ்ந்திருக்கும் ஆட்களின் கூட்டமும் அந்தக் குடும்பத்தின் ஆணவத்தையும், பணபலத்தையும் ஊருக்கே பறைசாற்றிக்கொண்டிருந்தன.

வீரராகவனும்,பார்வதியும் உடன்பிறந்த அண்ணன்
தங்கை. சின்ன வயதிலேயே பெற்றோரை இழந்து அனாதைகளாக நின்ற அந்த இரண்டு குழந்தைகளையும், காவிரிக் கரையோரத்து வயல்களில் கூலி வேலை செய்து வளர்த்து ஆளாக்கியவர் அவர்களின் அப்பத்தா ராக்காயி.



Advertisement

அப்பத்தா இருந்தவரைக்கும் அந்தக் குடிசை வீட்டில் வறுமை இருந்தாலும்,பாசமும் உண்ண உணவும் குறைவில்லாமல் இருந்தது. காலையில் கண்விழித்ததும் ஆற்றங்கரைக்குச் சென்று தண்ணீர் எடுத்து வருவதிலிருந்து, வயல் வேலைக்குப் போய் வருவது வரை அண்ணனும் தங்கையும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பார்கள். அண்ணன் வீரராகவனுக்குத் தன் தங்கை என்றாலே உயிர். பார்வதிக்கும் தன் அண்ணன் தான் உலகம்.

காலப்போக்கில் வீரராகவன் வளர்ந்து பெரியவனானதும், அவனுக்குப் பக்கத்து ஊரைச் சேர்ந்த வசுந்தராவைத் திருமணம் செய்து வைத்தார் அப்பத்தா. திருமணம் முடிந்த கையோடு, தன் கடமை முடிந்துவிட்ட நிம்மதியில் அவரும் இறைவனடி சேர்ந்தார்.

அப்பத்தாவின் மறைவுக்குப் பிறகுதான் வீரராகவனின் வாழ்க்கை தடம் மாறத் தொடங்கியது. அவரின் கண்டிப்பு இல்லாததும், மனைவி வசுந்தராவின் பேராசைத் தூண்டுதலும் அவனை மெல்ல மெல்ல மாற்றின. கூடாதவர்களின் சகவாசமும், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியும் நல்லவனாக இருந்த வீரராகவனை முழுமையாகச் சீரழித்தது. ஆற்றங்கரை மணல் அள்ளுவது, ஊரில் கட்டப்பஞ்சாயத்து செய்வது, அப்பாவி விவசாயிகளின் நிலங்களை மிரட்டி எழுதி வாங்குவது என அவன் திசைமாறிப் போனான்.

Advertisement

அண்ணனின் போக்குப் பிடிக்காமல், தினமும் வீட்டில் நடக்கும் சண்டை சச்சரவுகளால் மனமுடைந்து போனார் பார்வதி. அண்ணன் வீட்டில் ஒரு வாய் சோறு கூட உண்ண மனம் இல்லாமல், தன்மானத்தோடு வாழ நினைத்த அவர், அந்தப் பகுதியிலேயே மிகப்பெரிய கௌரவமான குடும்பமான பெரியசாமியின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார்.

Advertisement

பார்வதியின் அமைதியான குணமும், சுத்தமும், பெரியவர்கள் மீது அவர் காட்டிய மரியாதையும் பெரியசாமியின் பெற்றோருக்கு மிகவும் பிடித்துப் போனது. அப்போதுதான் ராணுவத்தில் உயரதிகாரியாக இருந்த தங்கள் மூத்த மகனுக்குப் பெண் பார்த்துக்கொண்டிருந்த அந்தத் தாய்-தந்தை, சொத்துப் பத்துக்களைப் பார்க்காமல்,

“இந்தப் பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தா, நம்ம குடும்பம் கோயில் மாதிரி இருக்கும்” என்று முடிவெடுத்து, ஊர் அறியப் பார்வதியைப் பெரியசாமிக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, சில ஆண்டுகளில் மனநிறைவோடு இறைவனடி சேர்ந்தார்கள்.

வேலைக்காரியாக நுழைந்த தங்கை, ஊரே வியக்கும் பெரிய குடும்பத்தின் மூத்த மருமகளாகி, அரசு அதிகாரிகளுக்கு அண்ணியாக உயர்ந்ததை வீரராகவனாலும், அவரது மனைவி வசுந்தராவாலும் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை! அந்தப் பொறாமையும், வஞ்சகமும்தான் அவர்களின் ஒரே மகனான மகேந்திரனின் வாழ்க்கையிலும் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது.

Advertisement

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

இது இப்படி இருக்க … அங்கே பெரியசாமியின் வீட்டின் மாடியில், தங்கை தங்கமயிலுவின் அறைக்குள் நின்றுகொண்டு, அவள் விட்டுச் சென்ற புத்தகங்களையும், தடகளப் போட்டிகளில் வென்ற பதக்கங்களையும் கையில் எடுத்துப் பார்த்துக் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான் அவளது அண்ணன் கார்த்திக்.

அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த தங்கமயிலுவின் கல்லூரிப் பட்டமளிப்பு விழாப் புகைப்படத்தைத் தடவிப் பார்த்தபடியே, கார்த்திக்கின் தோள்கள் குலுங்கின. அருகில் நின்றிருந்த அவரது மனைவி வெண்ணிலா, கணவனின் தோளில் கை வைத்து ஆறுதல் சொல்ல முயன்றாலும், அவளது கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

“என்னங்க… காலையில இருந்து இப்படியே அழுதுக்கிட்டே இருந்தா எப்படிங்க? நம்ம மயிலு ரொம்பத் தைரியமான பொண்ணுங்க. அவளுக்கு ஒண்ணும் ஆகாதுங்க,

கார்த்திக் தன் கையில் இருந்த மயிலுவின் ஐ.பி.எஸ் பயிற்சிப் புத்தகத்தை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு,

“எப்படித் வெண்ணிலா என் மனசு ஆறும்? சின்ன வயசுல இருந்து ஒரு சின்னக் கீறல் கூடப் படாம நான் தூக்கி வளர்த்த குழந்தை அவ! எங்க வீட்டுக்கு முத முத வந்த மகாலட்சுமி எனக்குக் கல்யாணம் ஆகி நீ இந்த வீட்டுக்கு வந்தப்போ கூட, உன்னை விட அதிகமா என் மேல பாசம் வச்சுப் பார்த்துக்கிட்டவ!

‘அண்ணா… நான் போலீஸ் யூனிஃபார்ம் போட்ட உடனே, முதல்ல உனக்குத்தான் சல்யூட் அடிப்பேன்’னு தினமும் என்கிட்ட சொல்லிச் சொல்லி சிரிப்பாளே! இன்னைக்கு அவளுக்குப் பார்வை போனதும் இல்லாம, கட்டுன புருஷனோட எங்க போயிருக்கான்னு கூடத் தெரியாம நாம இங்க நிக்கிறோமே!” என்று கார்த்திக் குமுறினான்.

கணவனின் கைகளைப் பற்றிக்கொண்டவள், “அழாதீங்கங்க… மாப்பிள்ளை ரொம்ப நல்லவருன்னு அப்பா சொன்னாங்க இல்ல? மயிலு மயக்கம் போட்டு விழுந்தப்போ, அவளை ஒரு பூவைப் போலத் தாங்கிப் பிடிச்சு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் பார்த்துக்கிட்டாருன்னு டிரைவர் மாடசாமி அண்ணன் சொன்னாருல்ல?

கண்டிப்பா நம்ம மயிலுவை அவர் கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துப்பாரு. சீக்கிரமே நாம போய் அவங்களைப் பார்த்துட்டு வரலாம்,” என்று கணவனுக்குத் தைரியம் சொன்னாள்.

“அவளைப் பார்க்கணும் டி … என் தங்கச்சியை ஒரு தடவையாவது நேர்ல பார்த்து, அவளுக்கு ஆறுதல் சொல்லணும். அதுவரைக்கும் என் மனசு ஆறாது,” என்று கலங்கிய கண்களோடு ஜன்னல் வழியே வெளியே வெறித்துப் பார்த்தார் கார்த்திக்.

மாடசாமியிடம் எவ்வளவோ மிரட்டி கேட்டும் அவர்கள் இருக்கும் இடத்தை அவன் சொல்லவில்லை. ஊர் எல்லையிலேயே விட்டுட்டேன் என்ற தகவலை தவிற,

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

இன்னொரு பக்கம்… மதுரை மாநகரத்தின் பேருந்து நிலையங்கள், கோயில் வாசல்கள், மற்றும் நண்பர்களின் வீடுகள் என ஒவ்வொரு இடமாக ஏறி இறங்கித் அண்ணனை தேடி அலைந்து கொண்டிருந்தார்கள் தம்பிகள் முத்துவும், மாணிக்கமும்!

காலையிலிருந்து வெயிலில் அலைந்ததால் இருவரின் முகமும் வாடிப் போயிருந்தது. பெரியார் பேருந்து நிலையத்தின் ஓரத்தில் இருந்த ஒரு தேநீர்க் கடைக்கு முன்னால் சோர்வாக வந்து நின்றார்கள்.

“டேய் முத்து… காலையில இருந்து மதுரை முழுக்கச் சுத்தியாச்சுடா. அண்ணன் எங்க போனான்னே தெரியலையேடா! வீட்டுல அம்மாவும், தங்கச்சிங்களும் சாப்பிடாம அழுதுக்கிட்டே இருக்காங்கடா. அப்பா வேற வாசல் திண்ணையிலேயே உட்கார்ந்துக்கிட்டு யார்கிட்டயும் பேச மாட்டேங்குறாரு,” என்று மாணிக்கம் கலங்கிய குரலில் சொன்னான்.

முத்து “கவலைப்படாதடா அண்ணனுக்கு இந்த மதுரை டவுன் ரொம்பப் பழக்கமான ஊருதான். அவனோட உயிர் நண்பன் சுந்தரும் ஊர்ல இல்ல, அவனும் அண்ணனைத் தேடித்தான் இங்க வந்திருக்கணும். சுந்தரோட பழைய நண்பர்கள் இங்க பெரியார் நகர் பக்கத்துலதான் மெக்கானிக் ஷெட் வச்சிருக்காங்க. நாம அங்க போய் விசாரிச்சா கண்டிப்பா ஏதாவது ஒரு துப்பு கிடைக்கும்!”

“ஆமாண்ணே, அதுவும் சரிதான் வா போகலாம். எப்படியாவது இன்னைக்குச் சாயங்காலத்துக்குள்ள நாம அண்ணனைக் கண்டுபிடிச்சு, கால்ல விழுந்தாவது ஊருக்குக் கூட்டிட்டுப் போயிடணும்டா!

அண்ணன் இல்லாம நம்ம வீடு வீடாவே இல்லண்ணே,” என்று உறுதியோடு சொல்லிவிட்டு, மீண்டும் கூட்டத்திற்குள் தங்கள் அண்ணனைத் தேடி நடக்கத் தொடங்கினார்கள்.

வீட்டில் மணி நண்பகல் ஒன்றை கடந்திருந்தது போலீஸ் குடியிருப்பில் இருந்த சுந்தரியின் வீட்டில், மதிய உணவுக்குப் பிறகு கூடத்தில் அமர்ந்திருந்தார்கள் தங்கமயிலுவும்,அவளது தோழியும்.

வைரக்கண்ணுவும் சுந்தரும் அருகிலுள்ள தெருவில் வாடகை வீடு பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்தார்கள் யாரிடமும் சொல்லாமல். அன்னலட்சுமி சமையலறை வேலைகளை முடித்துவிட்டு, தன் அறையில் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

வீட்டில் வேறு யாரும் இல்லாத அந்தத் தனிமையான நேரத்தில், மயிலு தன் தோழி சுந்தரியின் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். அவளது முகத்தில் ஒருவிதப் பதட்டமும், நெஞ்சுக்குள் அடக்கி வைத்திருந்த பாரத்தை இறக்கி வைக்கத் துடிக்கும் தவிப்பும் தெரிந்தது.

“கனகா… உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும்டி. நேத்து ராத்திரியே சொல்லணும்னு நினைச்சேன், ஆனா முடியல,”

என்ன விஷயம் என்று ஆர்வத்தோடு தோழியின் அருகே நெருங்கி உட்கார்ந்தாள். “என்னடி? எதுவா இருந்தாலும் என்கிட்ட தயங்காமச் சொல்லுடி. உனக்குப் பார்வை போனதுக்குப் பின்னால இருக்குற அந்த மர்மம் என்ன?

மயிலு ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, தன் குரலைத் தாழ்த்திப் பேசத் தொடங்கினாள்.

“சுந்தரி …… என் பார்வை பறிபோனதுக்கும், இன்னைக்கு நான் இந்த நிலைமையில நிக்குறதுக்கும் பின்னால இருக்குற அந்த ரகசியம்…”

அந்த உண்மையைச் சொல்ல வாயெடுத்த அந்த நொடியில், வீட்டின் வெளி வாசலில் வைரக்கண்ணுவும் சுந்தரும் திரும்பி வரும் காலடிச் சத்தமும், அவர்களின் பேச்சுக் குரலும் கேட்டது!

“அவங்க வந்துட்டாங்க போல இருக்கு…” என்று சட்டென்று பேச்சை நிறுத்தியவள், தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அமைதியாகிவிட்டாள்.

கனகசுந்தரியின் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் எழ, அந்தப் பெரிய ரகசியம் மயிலுவின் நெஞ்சுக்குள்ளேயே புதைந்திருந்தது!

ஆற்றிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றை அனுபவித்தபடி சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் வீரராகவன்.

அருகில் நின்றிருந்த அவரது மனைவி வசுந்தரா, வெள்ளித் தட்டில் சுடச்சுடப் பலகாரங்களையும், பித்தளை டபராவில் நுரை ததும்பும் காபியையும் கொண்டு வந்து கணவனின் முன்னால் வைத்தார்.

“என்னங்க… ஊர் முழுக்க ஒரே பேச்சா இருக்கு! நேத்து உங்க தங்கை பார்வதியோட பொண்ணு தங்கமயிலுவுக்கு அவசர அவசரமாத் தாலி கட்டி அனுப்பி வச்சுட்டாங்களாம்.

ஆனா, கல்யாணம் முடிஞ்ச கையோட மாப்பிள்ளை பொண்ணைக் கூட்டிக்கிட்டு ஊரை விட்டே ஓடிட்டானாம்! உங்க தங்கை குடும்ப மானமே ஊர் சிரிக்கிற மாதிரி ஆகிடுச்சுங்க!” என்றார் வசுந்தரா.

அவரோ காபியை உறிஞ்சியபடியே ஏளனமாகச் சிரித்தார். “அவளுக்கு இதுவும் வேணும், இன்னும் வேணும் வசுந்தரா! என் கூடப் பிறந்தவளா இருந்தும், என் பேச்சைக் கேட்காம அந்தப் பெரியசாமி வீட்டுக்கு வேலைக்காரியாப் போய், இன்னைக்குப் பெரிய மகாராணி மாதிரி நடமாடுறாளே! அவ பொண்ணு ஐ.பி.எஸ் ஆகி ஊருக்குள்ள வருவான்னு கனவு கண்டாங்களே… இப்போ என்ன நடந்துருக்கு பாரு!” கடவுள் இருக்காண்டி வசு.

அப்போதுதான், உள்ளேயிருந்து கம்பீரமாக நடந்து வந்தான் அவர்களின் ஒரே மகன் மகேந்திரன். அவனது கண்களில் ஒருவிதக் குரூரமும், அதே சமயம் எதையோ சாதிக்கத் துடிக்கும் வெறியும் தெரிந்தது.

“அப்பா… அந்தப் பெரியசாமி குடும்பம் ரொம்பப் புத்திசாலித்தனமா, ஊர் உலகத்துக்குத் தெரியாம ஒரு பையனைப் பிடிச்சுத் தாலி கட்டி அனுப்பி வச்சுட்டா, எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிறாங்களா? அவங்க எங்க ஒளிஞ்சிருந்தாலும், என் ஆளுங்க தேடிக் கண்டுபிடிச்சிடுவாங்கப்பா!” என்று பல்லை நரநரவென கடித்தான்.

“ஏண்டா மகி… பெரியசாமியோட தம்பி கருப்பசாமி இருக்கானே அவன் நம்ப மேல கொலை காண்டுல தேடிகிட்டு இருக்கான். நாம ரொம்ப அவசரப்பட்டு எதையும் செஞ்சு மாட்டிக்கக் கூடாதுடா,” என்று சற்றுத் தயக்கத்தோடு சொன்னார்.

சத்தமாகச் சிரித்தவன், “அந்தப் போலீஸ்காரனால என்னை ஒண்ணும் பண்ண முடியாதுப்பா! சாட்சி இல்லாம காய் நகர்த்துறதுல நான் கில்லாடி. அந்தப் பொண்ணு எங்க இருக்கான்னு மட்டும் தகவல் வரட்டும்… அதுக்கப்புறம் பாருங்க, என் அத்தை குடும்பம் என்ன கதி ஆகுதுன்னு!” என்று ஆணவத்தோடு சொல்லிவிட்டு, தன் வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினான்.

பகலவன் உச்சிக்கு வர , வியர்வை வடியத் தங்கள் அண்ணனை தேடித் தெருத்தெருவாக அலைந்து கொண்டிருந்தார்கள் இருவரும்.

பேருந்து நிலையத்திற்கு அருகிலிருந்த பழைய மெக்கானிக் ஷெட்டுக்கு முன்னால் வந்து நின்றவர்கள். அங்கே கையில் கிரீஸ் கறையோடு வண்டி ரிப்பேர் பார்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனிடம் தயங்கியபடியே அருகில் சென்றான் முத்து.

“அண்ணே… ஒரு சின்ன உதவிண்ணே.

என்னப்பா, உதவி? யார் நீங்க?

நாங்க இங்க தான் பக்கத்து ஊரு எங்க ஊரு. தனது ஊரின் பெயரை சொல்லி சுந்தர் அண்ணனை உங்களுக்குத் தெரியுமாண்ணே? அவரோட நண்பர் வைரக்கண்ணுவை தேடி வந்திருக்கோம்,” என்று பரிதாபமாகக் கேட்டான்.

அந்த இளைஞன் குழப்பதோடு நிமிர்ந்தான். “சுந்தரா? அவன் காலையில கூட இந்தப் பக்கமாத்தான் போனான் தம்பி! ஆனா, இப்போ எங்க இருக்கான்னு தெரியலையே. ஏன், என்ன விஷயம்?

“ஒன்னுமில்லண்ணே…என் அண்ணன் நேத்துதான் கல்யாணம் முடிஞ்சு ஊர்ல இருந்து கிளம்பி வந்தாரு. வீட்டுல எங்க அம்மாவும் தங்கச்சிங்களும் சாப்பிடாம அழுதுக்கிட்டு இருக்காங்கண்ணே. சுந்தர் அண்ணன் இந்த பக்கம் வந்தா இந்த நம்பர்க்கு தகவல் கொடுங்கண்ணே என்று தன்னுடைய கை பேசி நம்பரை கொடுத்தான். பிறகு இந்த ஒரு உதவி மட்டும் பண்ணுங்க உங்களுக்கு புண்ணியமாப் போகும்,” என்று கையெடுத்துக் கும்பிட்டான்.

அவர்களின் தவிப்பைப் பார்த்த அந்த மெக்கானிக், கண்டிப்பா சொல்றேன் தம்பி கவலை படமா கிளம்புங்க.

அவரின் பதிலில் கொஞ்சம் நிம்மதியாக வீடு திரும்பினார்கள்.

அங்கே போலீஸ் குடியிருப்பில், வாசலில் கேட்ட காலடிச் சத்தத்தால் தன் பேச்சைப் பாதியிலேயே நிறுத்தியிருந்த தங்கமயிலு, கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த வைரக்கண்ணுவையும் சுந்தரையும் உணர்ந்து அமைதியானாள்.

உள்ளே வந்த சுந்தரின் சட்டைப் பையில் இருந்த அலைபேசி அப்போதுதான் சத்தமாக ஒலிக்கத் தொடங்கியது!

“யாரோ புது நம்பர்ல இருந்து கூப்பிடுறாங்கடா மாப்பிள்ளை…” என்று சொல்லிக்கொண்டே சுந்தர் தன் அலைபேசியை எடுத்துக் காதில் வைத்தான்.

எதிர்முனையில் தம்பிகள் முத்துவும் மாணிக்கமும் பேசப் போகும் அந்த அழைப்பு, மதுரையில் இருக்கும் வைரக்கண்ணுவின் வாழ்க்கையில் என்ன புதிய திருப்பத்தைக் கொண்டு வரப் போகிறது?

கனகசுந்தரியிடம் தங்கமயிலு சொல்ல வந்த அந்தப் பெரிய ரகசியம் என்ன?

இமைகள் திறக்கும் தருணத்திற்காக… ♥️♥️♥️♥️♥️

தொடரும் அத்தியாயம் -7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!