Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இருளை வென்ற இமைகள்

இருளை வென்ற இமைகள் 7

இருளை வென்ற இமைகள்

அத்தியாயம் – 7

கிராமத்தின் மாலை நேரத்து கதிரவன் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியிருந்தது. பகல் முழுவதும் வெயிலில் காய்ந்த மண் தரையில், அல்லி தெளித்த சாண நீரின் வாசம் காற்றில் மிதந்து கொண்டிருந்தது.
ஆனால், அந்த வீட்டின் வாசலில் இருந்த மௌனமும், வெறுமையும் மனதை அறுப்பதாக இருந்தது.

வீட்டின் திண்ணையில் முழங்கால்களில் முகவாயைப் பதித்தபடி, தூரத்தில் தெரியும் மண் சாலையையே இமைக்காமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் சின்னவள்.



Advertisement

அவளது கண்கள் அழுது அழுது, இமைகள் வீங்கியிருந்தன. சாலையில் யாராவது நடந்து வரும் நிழல் தெரிந்தாலே, “அண்ணன் வந்துட்டானோ!” என்ற நப்பாசையில் அவளது இதயம் நொடிக்கொரு முறை வேகமாகத் துடித்து அடங்கும். ஆனால், அங்கே ஏமாற்றமே மிஞ்சும்போது, தொண்டையை அடைக்கும் விம்மலைச் தாவணித் தலைப்பால் அழுத்தி மறைத்துக்கொள்வாள்.

உள்ளே கூடத்தில், புலங்காத சமையலறையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் மீனாட்சி. வீட்டின் ஆணிவேர் இல்லாத வெறுப்பு அந்த வீட்டில் உலை கொதிக்கவில்லை. பூங்கொடியும், செவ்வந்தியும் தாயின் அருகே அமர்ந்து, கண்களில் வழியும் நீரைத் துடைக்கக் கூடத் திராணியற்றுச் சமைந்து போயிருந்தார்கள்.

“நேத்து ஊரை விட்டுப் போனவன், இன்னும் ஒரு வார்த்தை கூடச் சொல்லி அனுப்பலையே பூங்கொடி… எங்க போயிருப்பான்? என்ன சாப்பிட்டிருப்பான்? கூட இருக்குற அந்தப் பொண்ணுக்கு வேற பார்வை இல்ல… புது இடத்துல அவங்களை எப்படி வச்சுப் பார்த்துக்கப் போறானோ தெரியலையே!” என்று மீனாட்சி புலம்பியபோது, பெரியவள் இருவரும் கோவப்பட்டனர்.

Advertisement

“அம்மா, அண்ணனுக்கு இந்த மதுரைப் பக்கம் ரொம்பப் பழக்கமான ஊர்தான்மா. முத்துவும் மாணிக்கமும் அண்ணனைத் தேடித்தான் போயிருக்காங்க. இன்னைக்கு ராத்திரிக்குள்ள எப்படியாவது அண்ணனைக் கூட்டிட்டு வந்துடுவாங்கம்மா, நீங்க கவலைப்படாதீங்க,” என்று பூங்கொடி தாய்க்கு ஆறுதல் சொன்னாலும், அவளது மனதிற்குள்ளும் அண்ணன் திரும்பி வருவானா என்ற அச்சம் தான்.

Advertisement

வாசலில் பறவைகள் கூடு திரும்பும் சத்தம் கேட்டது. ஊரிலிருந்த மற்ற வீடுகளில் எல்லாம் விளக்கேற்றி, சமையல் வாசம் வீசத் தொடங்கியிருந்த வேளையில், தன் மூத்த மகன் வீடு திரும்புவான் என்ற ஒற்றை நம்பிக்கையில், இருள் சூழ்ந்த வாசலையே பார்த்தபடி அந்தத் தாயும் தங்கைகளும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தார்கள். ஆனால் அங்கு நடந்ததே வேற ஒன்னு.

அதே மாலை நேரத்தில், அலங்காநல்லூர் கிராமத்தில் இருந்த பெரியசாமியின் வீட்டில், வெளிப்பக்கமாக அமைதியான சூழல் நிலவினாலும், உள்ளே புகைந்து கொண்டிருந்த நெருப்பு மெல்ல மெல்ல வெளியே தெரியத் தொடங்கியிருந்தது.

திருமணத்திற்காக வந்திருந்த பெரியசாமியின் தம்பிகள் அனைவரும் உத்தியோக சம்மந்தமாக வெளியே சென்றிருக்க, வீட்டின் பெரிய கூடத்தில் தம்பிகளின் மனைவிகளான கண்ணம்மா, வடிவுக்கரசி, தாமரைச்செல்வி, செண்பகவல்லி, முத்துலட்சுமி, கலைவாணி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

Advertisement

ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கிய அவர்களின் பேச்சு, மெல்ல மெல்லத் தங்கமயிலுவின் திருமணத்தையும், பார்வதியின் குடும்பப் பின்னணியையும் நோக்கித் திரும்பியது.

“என்னதான் சொல்லுங்க அக்கா… மாமா ராணுவத்துல இருந்து வந்தவர், ஊர்ல அவ்வளவு பெரிய மரியாதை வச்சிருக்காரு. ஆனா, பார்வதி அண்ணி பண்ணுன காரியத்தால இப்போ நம்ம குடும்பத்துக்கே தலைகுனிவு வந்துடுச்சு,” என்று வடிவுக்கரசி ஆரம்பிக்க,

அதைக் கேட்டதும் கண்ணம்மாவும், தாமரைச்செல்வியும் ஆமோதிப்பது போல, “ஆமா, வேலைக்காரியா இந்த வீட்டுக்குள்ள வந்தவங்கதானே? அவங்க பிறந்த வீட்டுப் புத்தி எங்க போகும்? அவங்க அண்ணன் மகனாலதான் மயிலுவுக்குக் கண்ணு போச்சுன்னு ஊரே பேசுது. இப்போ பார்த்தா, யாருக்கும் தெரியாம ஒரு ஏழைப் பையனைப் பிடிச்சுத் தாலி கட்டி அனுப்பி வச்சுட்டு,நம்ம புருஷங்க எல்லாம் அசிங்கப்பட்டு நிக்க வேண்டியதாப் போச்சு!” என்று செண்பகவல்லி நக்கலாகப் பேச,

அந்த நேரம் பார்த்து , தனது அறையிலிருந்து தண்ணீர் குடிப்பதற்காக வெளியே வந்த பெரியசாமியின் காதுகளில், அந்த வார்த்தைகள் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல விழுந்தன!

தன் மனைவி பார்வதியை வேலைக்காரி என்று ஏளனமாகப் பேசியதும், தன் செல்ல மகள் தங்கமயிலுவின் வாழ்க்கையைக் கேவலமாக விமர்சித்ததும் அவரின் நெஞ்சைச் சுக்குநூறாக உடைத்தது. அவமானமும், வேதனையும் தாங்காமல், பெரியசாமி அப்படியே நிலைகுலைந்து சுவரைப் பிடித்தபடி நின்றார். அவரது கண்களில் கண்ணீர் முட்டியது.

அதே நொடியில், மாடியிலிருந்து கீழே இறங்கி வந்துகொண்டிருந்த தங்கமயிலுவின் அண்ணன் கார்த்திக், தன் தந்தையின் கலங்கிய முகத்தையும், சித்திகள் பேசிய விஷமத்தனமான பேச்சையும் பார்த்துவிட்டான்!

கார்த்திக்கின் கண்கள் நெருப்பாய் சிவந்தன. பல்லைக் கடித்துக்கொண்டு வேகமாகக் கூடத்திற்குள் பாய்ந்து வந்தவன்,

“நிறுத்துங்க! என்ன பேச்சு பேசுறீங்க நீங்க எல்லாரும்?” என்றவன் சத்தத்தில், அங்கிருந்த பெண்கள் அனைவரும் அதிர்ச்சியில் எழுந்து நின்றார்கள்.

அதில் கடைசி சித்தி மட்டும் என்னப்பா பேசனோம்? என்று ஆரம்பிக்க,

“என் அம்மாவை வேலைக்காரின்னு சொல்றதுக்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? இந்த வீட்டுல இருக்குற ஒவ்வொரு செங்கல்லும் என் அப்பாவும் அம்மாவும் ரத்தம் சிந்திச் சேர்த்தது! என் தங்கச்சி மயிலு மேல உயிரையே வச்சிருக்குற என் அப்பா, இன்னைக்கு உங்க பேச்சால தலைகுனிஞ்சு நிக்குறதை என்னால பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது! இப்போவே இந்த வீட்டை விட்டு வெளியே போங்க!” என்று கத்தினான்.

“ஏய் கார்த்திக், பெரியவங்கன்னு கூடப் பார்க்காம மரியாதை இல்லாமப் பேசுற?” என்று கண்ணம்மா குரலை உயர்த்த, கார்த்திக் வாசல் கதவைத் திறந்து கைநீட்டிவிட்டு,

“மரியாதை கொடுக்குற மாதிரியா நீங்க நடந்துக்கிட்டீங்க? என் தங்கச்சியோட வலியைப் புரிஞ்சுக்காம, காயம் பட்ட இடத்துல உப்பு தடவுற மாதிரி பேசுற யாரும் இந்த வீட்டுல இருக்க வேண்டிய அவசியம் இல்ல. தயவுசெய்து எல்லாரும் கிளம்புங்க!” என்று கார்த்திக் உறுதியாக நின்றான். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த தம்பிகளின் மனைவிகள், கோபத்தோடும் அவமானத்தோடும் தங்கள் பைகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

தொலைக்காட்சி பெட்டியில் ஆறு மணிக்கு மேல் ஒளிபரபாகும் கந்த சஷ்டி கவசத்தை ஒலிக்க விட்டு கேட்டு கொண்டே அன்னலட்சுமி அடுக்களைக்குள் எதையோ தொலாவி கொண்டிருந்தார்.

என்னம்மா தொலாவரிங்க?

மளிகை பொருட்கள் நிறைய இல்லாம இருக்கு வாங்கணும்டி. அதான், எல்லாத்தையும் தேடி பாத்துகிட்டு இருக்கேன்.

சரிவா நானும் லிஸ்ட் எடுக்கறேன் என்று உதவியவள் வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்கள், மற்றும் காய்கறி படியலை எடுத்து கொண்டு, அன்னலட்சுமியும் கனகசுந்தரியும் கடைவீதிக்குச் செல்லத் தயாரானார்கள்.

வெளியே சுந்தரை பார்த்தவர் “தம்பி சுந்தர்… கொஞ்சம் கடைவீதி வரைக்கும் வர்றியாப்பா? அரிசி, பருப்புன்னு கொஞ்சம் சாமான் வாங்கணும், தூக்கிட்டு வரத் துணையா இருக்கும்,” என்று அன்னலட்சுமி அழைத்ததும், சுந்தர் உற்சாகமாகத் தயாரானான். புதுமணத் தம்பதிகளுக்குச் சற்றுத் தனிமை கிடைக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தோடு, சுந்தரையும் அழைத்துக்கொண்டு இருவரும் கடைவீதிக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

வீட்டின் வெளி வாசல் கதவு சாத்தப்படும் சத்தம் கேட்டதும், அந்தச் சிறிய வீட்டிற்குள் ஒருவிதமான ஆழமான அமைதியும், இனம்புரியாத தனிமையும் குடியேறியது.

கூடத்தின் ஓரத்தில் இருந்த சாய்வு இருக்கையில் அமர்ந்திருந்த தங்கமயிலுவின் இதயம், அந்தத் தனிமையை உணர்ந்த நொடியே படபடவென வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. வீட்டில் வேறு யாரும் இல்லை, தானும் தன் கணவனும் மட்டுமே இருக்கிறோம் என்ற எண்ணமே அவளது கன்னங்களில் ஒரு மெல்லிய வெட்கத்தையும், படபடப்பையும் கொண்டு வந்தது.

அவளது அருகே அமர்ந்திருந்தவன், தன் மனைவியின் முகத்தில் தோன்றிய அந்த மாற்றத்தை அமைதியாக ரசித்துக்கொண்டிருந்தான். காலையிலிருந்து அவள் அணிந்திருந்த மஞ்சள் நிறப் புடவையின் மடிப்புகளும், கூந்தலில் சூடியிருந்த மல்லிகைப் பூவின் வாசமும், அவளது உடலிலிருந்து வீசிய மெல்லிய சந்தன சோப்பின் நறுமணமும் வைரக்கண்ணுவின் மனதிற்குள் ஒரு புதிய கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

“மயிலு…” என்று வைரக்கண்ணு அழைக்க,

அவனது குரலில் இருந்த அந்த நெருக்கத்தை உணர்ந்த மயிலு, லேசாகச் சிலிர்த்துப் போய் தலை குனிந்தாள். “ம்ம்…” என்ற மெல்லிய முனகல் மட்டுமே அவளது உதடுகளிலிருந்து வெளிப்பட்டது.

வைரக்கண்ணு மெல்ல நகர்ந்து அவளது அருகே அமர்ந்தான். அவனது தோள்கள் மயிலுவின் தோள்களோடு மென்மையாக உரசியபோது, அவளது உடல் ஒரு நொடி மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ந்தது. பார்வையற்ற கண்களால் அவனைப் பார்க்க முடியாவிட்டாலும், அவனது மூச்சுக்காற்றின் வெப்பத்தையும், அவனது வியர்வை கலந்த வாசனையையும் அவளால் மிக அருகில் உணர முடிந்தது.

அவனது வலது கை மெல்ல நீண்டு, மடியில் நடுங்கிக்கொண்டிருந்த மயிலுவின் விரல்களைத் தன் உள்ளங்கையில் மென்மையாகப் பொத்திப் பிடித்தது. அந்தத் தொடுதலில் காமத்தை விட, ஆழமான காதலும், அவளைப் பாதுகாக்கும் உரிமையும் நிறைந்திருந்தது.

“என்ன மயிலு… இன்னும் என் மேல பயம் போகலையா?” என்று அவன் அவளது காதருகே குனிந்து கேட்டபோது, அவனது சூடான மூச்சுக்காற்று அவளது கழுத்து வளைவில் பட்டு அவளைக் கூச வைத்தது.

“பயம் இல்லங்க… ஆனா, ஒரு மாதிரி படபடப்பா இருக்கு,” என்று நாணத்தோடு தலையைத் திருப்பியவளின் கன்னத்தில், வைரக்கண்ணுவின் விரல்கள் மென்மையாக வருடின. அவளது கன்னத்தில் வழிந்திருந்த ஒற்றைக் கூந்தல் இழையை எடுத்துக் காதோரமாக ஒதுக்கிவிட்டான்.

தன் கணவனின் அந்த மென்மையான தீண்டலில், இத்தனை நாளாகத் தன் மனதிற்குள் இருந்த அத்தனை துயரங்களும் கரைந்து போவதை உணர்ந்த மயிலு, மெல்லத் தன் தலையைச் சாய்த்து அவனது அகன்ற அடர்த்தியான கேசம் கொண்ட மார்பில் அடைக்கலமானாள். வைரக்கண்ணுவும் தன் இரு கைகளால் அவளைத் தன்னோடு இறுக்கமாக அணைத்துக்கொண்டான். அந்த அணைப்பில், இருவரின் இதயத் துடிப்பும் ஒரே தாளத்தில் இணையத் தொடங்கியிருந்தது. அந்த வீட்டின் தனிமை, அவர்களின் புதிய வாழ்க்கையின் முதல் காதல் அத்தியாயத்தை மிக அழகாக எழுதிக்கொண்டிருந்தது.

சில மணி நேரத்திற்கு பிறகு, கணவனின் மார்பில் சாய்ந்தபடி தன் மனதிலிருந்த அத்தனை பாரங்களையும் இறக்கி வைத்த நிம்மதியில் இருந்தாள் தங்கமயிலு. அவளது கூந்தலை மென்மையாக வருடிக்கொடுத்துக்கொண்டிருந்த வைரக்கண்ணுவின் முகத்திலும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி குடியேறியிருந்தது.

அப்போது, தான் இவர்களின் தனிமையை கலைக்க வீட்டின் வெளி வாசலில் மளிகைப் பொருட்கள் நிறைந்த பைகளை இறக்கி வைக்கும் சத்தமும், சுந்தரின் கலகலப்பான பேச்சுக் குரலும் கேட்டது.

“அம்மா… இந்த அரிசிப் பையைச் சமையலறைக்குள்ள வச்சிடுறேன். கனகா, அந்தக் காய்கறிப் பையை எடுத்துட்டு வா,” என்று சுந்தர் சத்தமாகச் சொல்லிக்கொண்டே கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும், மயிலு சட்டென்று வெட்கத்தோடு தன் கணவனிடமிருந்து விலகி அமர்ந்தாள்.

அவளது கன்னங்கள் சிவந்திருந்ததையும், கலைந்திருந்த புடவையை அவசரமாகச் சரிசெய்வதையும் பார்த்து வைரக்கண்ணு மெல்லப் புன்னகைத்தான்.

உள்ளே நுழைந்த கனகசுந்தரி, தன் தோழியின் முகத்தில் தெரிந்த அந்தப் புதுப் பொலிவையும், வெட்கத்தையும் ஒரு நொடியில் புரிந்துகொண்டாள்.

“என்னடி மயிலு… நாங்க மளிகைக் கடைக்குப் போயிட்டு வர்றதுக்குள்ள முகமெல்லாம் ஒரே பிரகாசமா மாறிடுச்சு போல இருக்கே!” என்று தோழியின் காதருகே குனிந்து கிசுகிசுத்துச் சிரித்தாள்.

மயிலு பதில் பேச முடியாமல் நாணத்தோடு தலை குனிந்துகொண்டாள். சமையலறையிலிருந்து வெளியே வந்த அன்னலட்சுமி, இருவரின் முகத்திலும் தெரிந்த அந்த புதிய மாற்றத்தைப் பார்த்து மனதார வாழ்த்தி பின் இவர்களின் வாழ்க்கைக்காக கடவுளிடம் வேண்டி கொண்டார்.

பிறகு வைரகண்ணு அம்மா நாளைல இருந்து வேலைக்கு போலாம்னு இருக்கேன். என்று அந்த சூயலை மாற்ற நினைத்தான்.

இப்போ எதுக்குப்பா? என்று கேட்க வந்தவரிடம் மருத்து சில விஷயங்களை கூறினான்.

பிறகு அவரும் புரிந்துகொண்டு “சரிப்பா வைரக்கண்ணு… நாளையில இருந்து நீ மார்க்கெட் மண்டி வேலைக்குப் போற. அதுக்கு முன்னாடி, நாளைக்குக் காலையில நம்ம மதுரையில இருக்குற பெரிய கண் ஆஸ்பத்திரிக்குப் போய் மயிலுவோட கண்ணைக் காட்டிட்டு வந்துடலாம். டாக்டர் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்,” என்று அன்னலட்சுமி அக்கறையோடு சொன்னார்.

“ஆமாம்மா… நாளைக்குக் காலையில முதல் வேலையா ஆஸ்பத்திரிக்குத்தான் போகணும்,” என்று உறுதியோடு சொல்லிவிட்டு அவர்களுக்கென கொடுத்த அறையில் சென்று வைரக்கண்ணு கதவை சாற்றி கொண்டான்.

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

அங்கே, கிராமத்தின் நடுவே இருந்த பிரம்மாண்டமான ஆலமரத்தடியில், ஊரே திரண்டு நின்றிருந்தது.
ஊர் பெரியவர்கள் அனைவரும் மேடையில் அமர்ந்திருக்க, பெரியசாமி, கார்த்திக் மற்றும் ஊர் மக்கள் சூழ்ந்து நின்றிருந்தார்கள்.

பஞ்சாயத்தை கூட்டியவன் மகேந்திரன்,

பெரியசாமி அந்த ஊருக்கு செய்த நன்மைக்காக ஊர் மக்கள் தனக்காக பரிந்து பேசி வாதாடுவார்கள் என்று இருந்தார்.

ஆனால்,அங்கே பஞ்சாயத்து தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிலைமை வேறு திசையில் திரும்பத் தொடங்கியது. மகி என்கிற மகேந்திரன், தான் ஊரில் தீய வழிகளில் சம்பாதித்த கறுப்புப் பணத்தை வாரி இறைத்து, பஞ்சாயத்தில் இருந்த சில முக்கியப் புள்ளிகளையும், ஊர் ஆட்களையும் தனக்குச் சாதகமாக விலைக்கு வாங்கியிருந்தான்!

கூட்டத்தின் நடுவே திமிராக வந்து நின்றவன், பெரியசாமியை நேருக்கு நேர் பார்த்து ஆவேசமாகக் குரல் கொடுத்தான்.

“ஊர் பெரியவங்களே… சின்ன வயசுல இருந்து என் அத்தை மகள் மயிலு எனக்கு தான்னு சொல்லி சொல்லி வளத்தாங்கன்னு இந்த ஊருக்கே தெரியும்! ஆனா, இந்தப் பெரியசாமி தன் பதவி திமிர்ல, யாருக்கும் தெரியாம என் பொண்டாட்டியை வேற ஒருத்தனுக்குத் தாலி கட்டி அனுப்பிருக்காரு. இது ஊர் முறைக்கு விரோதமான காரியம்! எனக்கு அந்தத் தாலியெல்லாம் செல்லாது… மயிலு எனக்கு வேணும்! அவளை இப்போவே இங்க வரவழைச்சு என் கையால மருதாலி கட்டணும்!” இல்லனா இங்க நடக்கறதே வேற என்று கர்ஜித்தான்.

இதனை கேட்டு அவன் பணம் கொடுத்து வைத்திருந்த ஆட்கள் கூட்டத்திற்குள்ளிருந்து, “ஆமாப்பா, மகேந்திரன் கேட்குறதுல நியாயம் இருக்கு! தாலி கட்டுன புருஷன் உயிரோட இருக்கும்போது பெரியசாமி பண்ணுனது தப்புதான்!” என்று ஒரே குரலில் கூச்சலிடத் தொடங்கினார்கள்!

கூட்டத்தில் இருந்த மகேந்திரனைப் பார்த்து, பெரியசாமி தன் இருக்கையிலிருந்து கம்பீரமாக எழுந்து நின்றார்.

அவரது கண்களில் இருந்த அந்த ஆக்ரோஷத்தைப் பார்த்ததும், கூச்சலிட்டுக் கொண்டிருந்த மகேந்திரனின் ஆட்கள் ஒரு நொடி வாயடைத்துப் போனார்கள்.

“டேய் மகேந்திரா! யாரைப் பார்த்துடா ‘மயிலு எனக்கு வேணும்’னு கேட்குற? கெட்ட வழியில சம்பாதிச்ச பணத்தை வச்சு நாலு பேரை விலைக்கு வாங்கிட்டா, நியாயத்தை வளைச்சி போட்டுடலாம்னு நினைச்சியா?” என்றார் பெரியசாமி.

வேலை விஷயமாக வெளியே சென்ற கருப்பசாமி அங்கு வந்ததை யாரும் கவனிக்க வில்லை. பஞ்சாயத்துப் பெரியவர்கள் பக்கம் திரும்பி அனல் தெறிக்க ஒரு பார்வை பார்த்தார்.

“யோவ் பெரியவங்களா! பணம் வாங்கிட்டு ஒருதலைப்பட்சமாப் பேச நினைச்சீங்கன்னா, இங்க நிக்கிற அத்தனை பேரையும் சட்டப்படி கைது பண்ணி உள்ள தள்ளிடுவேன்! கல்யாணம் முடிஞ்ச ஒரு பொண்ணை, அவ புருஷன்கிட்ட இருந்து பிரிக்கச் சொல்றது எவ்வளவு பெரிய குற்றம்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கருப்பசாமி எச்சரித்ததும், பணம் வாங்கிய பஞ்சாயத்துப் பெரியவர்கள் நடுங்கிப் போய் தலை குனிந்தார்கள்.

அத தானடா நானும் சொல்றேன். அவ என்னோட பொண்டாட்டி என்கூட தானே வாழனும். புள்ளக்குட்டி பெத்துக்கணும்.

இதனை கேட்ட பெரியசாமி தன் கையில் இருந்த ஊன்றுகோலைத் தரையில் ஓங்கித் தட்டினார்.

“இங்க பாருடா மகேந்திரா… என் பொண்ணு கழுத்துல தாலி ஏறிடுச்சு. அவ புருஷனோட அவ ரொம்பப் பாதுகாப்பா இருக்கா. இனிமே இந்த ஊர்லயோ, வெளியூர்லயோ என் பொண்ணு பேரை உச்சரிச்ச… உன் உயிர் உனக்குச் சொந்தமில்ல!” என்று சவால் விட்டுவிட்டு, ஊர் மக்கள் முன்னிலையில் தலைநிமிர்ந்து கம்பீரமாகத் தன் குடும்பத்தோடு வீடு திரும்பினார்.

தோல்வியும் அவமானமும் தாங்காமல் பல்லைக் கடித்துக்கொண்டு நின்ற மகேந்திரனின் கண்களில், பழிவாங்கும் வெறி இன்னும் அதிகமாகப் பற்றிக்கொண்டது!

மதுரை கண் மருத்துவமனையில் தங்கமயிலுவைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள் சொல்லப் போகும் அந்த உண்மை என்ன?
மகேந்திரனின் மனைவி தங்கமயிலு என்ற உண்மை தெரிந்தால் வைரக்கண்ணுவின் நிலை என்ன?கணவனாக மகேந்திரனின் அடுத்த சதி என்ன? –

இமைகள் திறக்கும் தருணத்திற்காக… ♥️♥️♥️♥️♥️

தொடரும் அத்தியாயம் -8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!