நேயனின் நேசமினிது..7
இனிய நேசம் – 7
ஒரு வாரம் கடந்திருந்தது.
Advertisement
தோழிகள் அன்று அலுவலகத்தில் பரபரப்புடன் வேலை செய்து முடித்து, மதிய உணவிற்காக மேல் தளத்தில் இருக்கும் Cafeteria-விற்கு வந்திருந்தனர்.
அன்றைய மதிய உணவாக வெண்ணிலா எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பும், வாழைப்பூ துவண்டலும் கொண்டு வந்திருக்க, வர்ஷினி பாஸ்மதி அரிசியில் செய்த பட்டாணி புலாவும், காலிஃபிளவர் மஞ்ஜுரியனும் கொண்டு வந்திருந்தாள்.
Advertisement
Advertisement
தோழியின் உணவைப் பார்த்து கண்ணில் ஹார்ட் விட்ட வெண்ணிலா, “அந்தப் புலாவ் டப்பாவை இங்குட்டு தள்ளி விட்டுட்டு இந்த கத்திரிக்காயை அங்கிட்டு தூக்கிக்க இனி!!” என்று சொன்னதும், சிரிப்புடன் தோழியிடம் தன் உணவினை கொடுத்த இனியவர்ஷினி, அவளிதை தன்னிடம் நகர்த்திக் கொண்டாள்.
ஒரு வாய் மஞ்ஜுரியனுடன் பட்டாணி புலாவை எடுத்து வாயில் வைத்ததும் “டேஸ்ட் அடி தூள் இனி!!” என்ற வெண்ணிலா, “நீ பண்ணது தானே?” என்று கேட்க, “ஹ்ம்ம்” என்று ஆமோதித்த இனியவர்ஷினி,
Advertisement
“எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பும் சூப்பர் வெண்ணிலா. வழக்கம் போல உன் வாழைப்பூ துவண்டலும் சூப்பர். நாங்க வாழைப்பூவே வாங்க மாட்டோம். மார்னிங் உக்காந்து அதுல நாரெடுத்து, நறுக்கி சமைக்கிறதுக்கு டைம் இருக்காதுன்னு அம்மா அதை வாங்க வேண்டாம்னு சொல்லிடுவாங்க” என்றவள் ருசித்து சாப்பிட்டாள்.
“ஹ்ம்ம்.. எனக்கும் டைம் இருக்காதுதான் இனி. ஆனா, எனக்கு வாக்கப்பட்டு வந்த மகாராசனை வேலை வாங்கிடுவேன். இன்னைக்கு காலைல அவருதான் உக்காந்து நாரெடுத்து க்ளீன் பண்ணி கொடுத்தாரு” என வெண்ணிலா சிரிக்க,
“அநியாயத்துக்கு சுரேந்தர் அண்ணாவை நீ வேலை வாங்குற நிலா. பாவம் எங்க அண்ணன்..” என்று புன்னகையுடன் உச் கொட்டினாள்
இனியவர்ஷினி.
“ஓடிடு! தயவு செஞ்சு உங்க அண்ணனுக்கு பாவம் பாக்காத. ஶ்ரீ பிறந்ததும்தான் வேலை செய்றார் அந்த மனுஷன். இல்லேன்னா ஒரு வேலைக் கழுதையையும் செஞ்சதில்ல” என்று வெண்ணிலா கடுப்பாகக் கூறவும்,
“சரி சரி. கடுப்பாகாத. சாப்பிடு” என்று இனியவர்ஷினி சிரிக்க, அவளின் புன்னகை நிரம்பிய முகத்தை பார்த்த வெண்ணிலாவிற்கு மனம் நிம்மதியாக உணர்ந்தது.
“இந்த வாரம்தான் கேர்ள் உன்னைப் பாக்கவே நிம்மதியா இருக்கு. இல்லேன்னா போன வாரம் முழுக்க சோக கீதம் வாசிச்சிட்டே மூஞ்சியை தொங்கப் போட்டுட்டு கிடந்த” என்றாள் வெண்ணிலா.
“ஹ்ம்ம்… எனக்கும் இப்பதான் கொஞ்சம் ரிலீஃபா இருக்கு நிலா. அன்னைக்கு அண்ணா கிட்ட மனசு விட்டு பேசின பிறகு கொஞ்சம் ஸ்ட்ரெஸ் இல்லாம இருக்கு” என்ற இனியவர்ஷினி, “இன்னும் ஒரு ஆறு மாசம் வரைக்கும் ஐயம் ஃப்ரீ!” என்றாள் நிம்மதி பெருமூச்சுடன்.
“ஆறு மாசம் வரைக்கும்தான் டைம்னு இளா அண்ணன் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்களா?” வெண்ணிலா கேட்க,
“ஸ்ட்ரிக்க்டா சொல்லல நிலா. ரெண்டு பேரும் மனசு விட்டு பேசினதால அண்ணா கோபப்படல. என்னைப் புரிஞ்சிக்கிட்டான். ஆனாலும், ‘இன்னும் ஆறு மாசம் வரைக்கும்தான் உனக்கு டைம்’ன்னு கொஞ்சம் அழுத்தமா சொன்னான். ஆறு மாசம் கழிச்சு மறுபடியும் கண்டிப்பா கல்யாணப் பேச்சை எடுத்துடுவாங்க ரெண்டு பேரும்” என்ற இனியவர்ஷினிக்கு அன்று மொட்டை மாடியில் அண்ணனுடன் பேசிய பொழுது நினைவை வந்தடைந்தது!
அன்று…
“ஏன் கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம்..” என்று இளமாறன் நிதானமாகக் கேட்டதும், ஓர் நொடி மௌனமாக இருந்த இனியவர்ஷினி, முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டாள்.
“வர்ஷா…” என்று இளமாறன் அழுத்தமாக அழைக்க, “இந்தக் கேள்வியை உன்னால இப்பதான் பொறுமையா கேக்க முடியுதா ண்ணா? இந்த ஒரு வாரமும் அம்மா கூட சேர்ந்துட்டு நீயும் என்னை புரிஞ்சிக்கல தானே” என்று கேட்ட போது அவள் குரல் கரகரத்துப் போனது.
“வர்ஷா…”
“ஏன் ண்ணா? நான் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு தானே சொன்னேன். கல்யாணமே பண்ணிக்காம உங்க கூடவே இருக்குறதா சொன்னேனா? அதுக்கு அம்மா பேசினத நினைச்சா இப்ப வரைக்கும் கஷ்டமா இருக்கு ண்ணா..”
“வர்ஷா.. அம்மா ஏதோ கோபத்துல..”
“புரியுது ண்ணா. ஆனாலும்.. நான் இங்க இருந்தா உனக்கு பொண்ணு வராதுன்னும், இன்னும் எத்தனை நாளைக்கு உன்னை எங்க கூடவே வச்சிருக்கதுன்னும் கேட்டப்ப என்னால தாங்கிக்கவே முடியல. ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டேன்” என்றவள் கண்ணீர் மல்கிய கண்களுடன் அண்ணனை நிமிர்ந்து பார்த்து,
“என்னைப் பொறுத்த வரைக்கும் என்னோட குடும்பம், வீடு, உலகம் எல்லாமே நீயும் அம்மாவும்தான். அப்படி இருக்கப்ப, கல்யாணம் அப்படின்ற பேச்சை எடுத்ததால இந்த ஒரு வாரமும் என்னோட குடும்பத்தை, வீடை, உலகத்தை நான் ரொம்ப மிஸ் பண்ணேன். கோபத்துல அம்மா நிறைய பேசிட்டாங்க. நீ என் கூட சரியாவே பேசல” என்றாள் குரலடைக்க.
“வர்ஷா நான்..” என்று இளமாறன் பேச வர, “ப்ளீஸ் ண்ணா. நான் பேசிடுறேன். அப்புறம் நீ பேசு” என்றவள் தொடர்ந்தாள்.
“நீயாவது என்னைப் புரிஞ்சுப்பேன்னு நினைச்சேன். ஆனா நீயும் என்னைப் புரிஞ்சிக்கல. முகம் கொடுத்துக் கூட பேசல” என்றவள் கரகரத்த குரலில், “பேசுறப்ப எல்லாம் ‘கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லு வர்ஷா’ன்னு மட்டும்தான் பேசின” என்றாள் கொஞ்சம் கோபமாக.
இளமாறனுக்கு அவளின் உணர்வுகள் புரிந்தது! கனிவுடன் தங்கையைப் பார்த்தான்.
தந்தையை உதறி விட்டு அவர்கள் மட்டும் தனியாக சென்னை கிளம்பி வந்த நாளிலிருந்து சிறு பறவைக் கூடென வாழ்ந்து வருகிறார்கள் மூவரும்.
வேறெந்த சொந்த பந்தங்களுடனும் அதிக ஒட்டுதலில்லை! அவசியமின்றி யாருடனும் உறவாடுவதும் இல்லை!
அப்படி அவசியம் ஏற்பட்டால் கூட, இளமாறனே சொந்த பந்தங்களுடன் உரையாடுவது முதல் உறவாடுவது வரை பார்த்துக் கொள்வான்.
தாய் மற்றும் தங்கையை எந்தவொரு விசேஷத்திற்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக அனுப்புவதில்லை.
இருவரையும் பொத்தி வைத்து பாதுகாக்கிறான் என்று கூட சொல்லலாம்.
உறவுகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பும், கணவரால் ஏற்பட்ட கடன் பிரச்சனை குறித்தும் யோசித்து யோசித்தே கவலை கொண்டு நெஞ்சு வலியில் விழுந்திருந்தார் சந்திரா.
ஏற்கனவே தங்கைக்கு, அவளது பதினைந்தாம் வயதிலேயே பெற்ற தந்தையுடன் கசப்பான நிகழ்வுகள் நடந்தேறி இருக்க, அன்றே தந்தையை அடித்து துவைத்து விளாசி இருந்தான் இளமாறன்.
அந்த நாளின் கசப்பான விஷயத்தை பற்றி இன்றளவும் அன்னையிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை பிள்ளைகள் இருவரும்! தெரிந்தால் சந்திரா மேலும் உடைந்து போயிருப்பார்!
தந்தையை அடித்து துவைத்தும் அவன் நெஞ்சக் கொதிப்பு அடங்கவில்லை. அவரை விட்டு ஒதுங்கி தாய், தங்கையுடன் வேறெங்காவது சென்று விட வேண்டும் என்று அன்றே முடிவு செய்தான்.
ஆனால், அப்பெரிய முடிவினை செயலாற்ற போதிய அளவிலான வயதும், வருமானமும், கல்வி அறிவும் அன்றைய நிலையில் இளமாறனுக்கு இல்லை.
பதினேழு வயதே நிரம்பிய இளைஞன்! ஆகையால் இன்று போல் பத்தாண்டுகளுக்கு முன்பு ஸ்திரமாக முடிவுகளை எடுக்க முடியவில்லை அவனால்.
பெற்றவருடன் இருக்க வேண்டிய கட்டாயம்!
ஆன போதிலும், அன்றைய தினத்திற்கு பிறகு தங்கைக்கு அரணாக, அன்னைக்கு அரவணைப்பாக இருந்தான் என்றே சொல்ல வேண்டும்.
அடுத்து சில வருடங்களிலேயே அவரால் அன்னைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதும் இளமாறன் தாமதிக்கவில்லை. போதிய வருமானமும் வயதும் நிரம்பிய ஆண் மகனாக வளர்ந்திருந்தான்.
எனவே, யாரிடமும் தெரியப் படுத்தாமல் அன்னை மற்றும் தங்கையுடன் திண்டுக்கல்லை விட்டு சென்னை குடியேற வேண்டும் என்று திடமானதொரு முடிவினையும் எடுத்தான்.
எடுத்த முடிவின் படி அவர்களும் சென்னை வந்தடைந்து விட, சொந்தங்களின் மத்தியில் பெரிதான சலசலப்பும், எண்ணற்ற முறையில் அழைப்புகள் குவிந்ததும், ‘இப்படியா யாரு கிட்டயும் சொல்லாம கொள்ளாம ராவோட ராவா கிளம்பி ஓடுறது. அதுவும் பெத்த அப்பனை அம்போன்னு கை விட்டுட்டு’ என்கிற குத்தல் பேச்சுக்களும் அவர்களை தொடராமல் இல்லை!
எதற்காகவும் இளமாறன் அசைந்து கொடுக்கவில்லை!
இனி எங்கள் குடும்பம் என்றால் அது நாங்கள் மூவர் மட்டும்தான் என்று விடாமல் அழைத்த மாமா சங்கரனிடமும், பெரியப்பாக்கள் ஆகிய கருணாகரன் மற்றும் கந்தனிடமும் தெளிவாக, நிமிர்வாக, அழுத்தமாக கூறி இருந்தான் இளமாறன்.
தன்னை மட்டும் தனித்து விட்டுச் சென்ற மூவரையும் “நல்லாவே இருக்க மாட்டீங்க. நாசமா போயிடுவீங்க” என்று சபித்த கணேசன், இன்றளவும் திருந்தவில்லை.
இருக்க பழக்கங்கள் போதாது என்று அதனுடன் சேர்த்து தற்போது யாரோ ஒரு பெண்மணியுடன் தகாத முறையில் உறவு வைத்திருக்கிறார் என்று சங்கரன் மூலம் இளமாறனுக்கு தகவல் வந்திருந்தது.
“என்னைப் பொறுத்த வரை அவர் என்னைக்கோ செத்துட்டார் மாமா. செத்தவர் என்ன பண்ணாலும், எக்கேடு கெட்டுப் போனாலும் எனக்கொரு கவலையும் இல்ல. இனிமேல் அவர் விஷயமா பேசுறதா இருந்தா எனக்கு கூப்பிடாதீங்க. அண்ட்.. அம்மா காதுக்கு இந்த விஷயம் போகக் கூடாது! மீறி சொன்னீங்கன்னா என் மொபைல்லயும் அம்மா மொபைல்லயும் உங்க நம்பரை ப்ளாக் பண்ணிடுவேன்” என்று அழுத்தம் திருத்தமாக கூறி இருந்தான்.
இளமாறன் தங்கையிடம் கூட இவ்விஷயம் குறித்து பகிர்ந்திருக்கவில்லை. ஆனால், வர்ஷினிக்கும் பெரியப்பா மகள்களின் மூலம் விஷயம் தெரிய வந்திருந்தது.
ஏற்கனவே அவர் மீது உட்ச பட்ச வெறுப்பில் இருந்தவள், வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருக்கிறார் என்று அறிந்ததும் இன்னமுமே வெறுத்துப் போனாள் இனியவர்ஷினி.
இங்கு வந்ததில் இருந்து
மூவரும் ஒருவருக்கொருவர் அன்புடனும் அக்கறையுடனும் அமைதி நிலை கொண்ட அருவி நீரைப் போலொரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
மூவருக்குள்ளும் மனஸ்தாபங்கள், கோபங்கள், முகத் திருப்பல்கள் என எதுவும் இதுவரை இடம் பெற்றதில்லை.
கடந்த ஒரு வாரமாக கல்யாணப் பேச்சை எடுத்ததில் இருந்து அவர்களுக்குள் சிறு இடைவெளி வந்து விட்டதை உணர்ந்தாள் இனியவர்ஷினி.
இளமாறனுக்குமே அப்படித் தோன்றியதுதான்! ஆனால், வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ஆதூரமாக தங்கையை பார்த்தவன் “நானும் அம்மாவும் அவ்வளவு தூரம் உன்னை கல்யாணத்துக்கு ஓகே சொல்ல சொல்லி கெஞ்சியும் நீ சம்மதம் சொல்லாதது ரொம்ப வருத்தமா கோபமா இருந்தது வர்ஷா. அதான் நான் முகம் கொடுத்து பேசல” என்று விளக்கம் சொன்னவனிடம்,
“அப்படி என்ன கோபம் வருத்தம் வருது உனக்கு?” என்று வர்ஷினி முறைப்புடன் கேட்டாள்.
“என் நிலமைல இருந்து நீ யோசிக்கனும் வர்ஷா” என்றான் இளமாறன் பொறுமையாக.
“என்ன நிலமை!?” வர்ஷினி அப்போதும் முறைப்புடன் கேட்க, பெரு மூச்சுடன் தங்கையைப் பார்த்தவன் “உனக்கு இருபத்தி அஞ்சு வயசாச்சு. இப்ப மாப்பிள்ளை பார்க்க ஸ்டார்ட் பண்ணாதான் இருபத்தாறுக்குள்ள கல்யாணம் பண்ண முடியும். பண்ணனும்!” என்றவன்,
“யாரும் நம்மளை ஒரு சொல் சொல்லிடக் கூடாதுன்னு நான் யோசிக்கிறேன் வர்ஷா. சென்னைக்கு வந்த இந்ந மூனு வருஷத்துல எல்லாரும் நமக்குப் பின்னாடி பெத்த அப்பாவையே அம்போன்னு விட்டுட்டு வந்துட்டோம்னுதான் பேசிக்கிறாங்க. ஆனா, அப்படிப் பேசுறவங்க யாருக்கும் பெத்த அப்பாவே என்னெல்லாம் செஞ்சாருன்னு தெரியாது. குடி, சீட்டாட்டம், ஊர் முழுக்க கடன் வாங்கிட்டு திரிஞ்சது இதெல்லாம் தெரிஞ்சும் அப்படிப் பட்டவரை நாம கை விட்டுட்டு வந்த மாதிரி பேசுவாங்க. ஆனா, அந்தக் கடனை அடைச்சது, அவரால அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது, உனக்கு நடந்தது, இது எதுவும் அவுங்க கண்ணுக்கு தெரியாது. தெரிஞ்சாலும் நாம பண்ணதை தான் பெரிய குத்தமா பேசுவாங்க” என்று
தன் பக்கமிருக்கும் எண்ணங்களை மனம் திறந்து தங்கையுடன் பகிர்ந்தான் இளமாறன்.
“இந்த மாதிரி உன் கல்யாண விஷயத்துலயும் பேச்சு வந்திடக் கூடாதுன்னு நினைக்கிறேன் வர்ஷா. அப்பாவை விட்டுட்டு போனாங்க தானே. அதான் ஒரு நல்லதும் இன்னும் நடக்கலேனு சொல்றவங்க இருக்காங்க. ஒரு அண்ணனா எந்தக் குறையும் இல்லாம என் தங்கச்சிக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கனும்னு நினைக்கிறேன். ஒரு நல்ல அப்பா இருந்திருந்தா உனக்கு என்னெல்லாம் செஞ்சிருப்பாரோ அதை எல்லாம் செஞ்சு உனக்கொரு வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கனும்னு எனக்குள்ள ஒரு வேகம்! அதான் இந்த ஒரு வாரமா உன்னை போட்டு படுத்திட்டேன்” என்றான் பெருமூச்சுடன்.
வேதனையுடன் அண்ணனைப் பார்த்தாள் வர்ஷினி. அவன் மனதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கும் என அவள் எதிர்பார்க்கவில்லை.
“சாரி ண்ணா..”
“எதுக்கு சாரி?” என்றவன், “உன்னைக் கட்டாயப் படுத்தினதுக்கு நானும் சாரி. இப்ப உன் பக்க உணர்வுகளையும் மதிக்கணும்னு கொஞ்சம் நிதானமா யோசிக்க முடியுது வர்ஷா” என்றான் மெல்லிய புன்னகையுடன்.
வர்ஷினியும் மனக்கிளேசங்கள் அகன்று புன்னகைக்க, “சரி. சொல்லு. ஏன் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு நினைக்கிற. எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லு வர்ஷா” என்றான் நிதானத்துடன்.
உடன் பிறந்தவன் கேட்டதும் வேதனையுடன் அவனைப் பார்த்தவள் “பயமா இருக்கு ண்ணா..” என்றாள் வர்ஷினி ஒற்றை வரியில்!
“கல்யாணத்தை நினைச்சு என்ன பயம் உனக்கு?” இளமாறன் கண்டிப்புடன் கேட்க, “என்ன பயமா? எப்படி ண்ணா பயமில்லாம இருக்கும்? நம்மைப் பெத்தவரே ஒழுங்கான ஆள் கிடையாது! நம்ம அம்மாவை ஒரு நாளும் அவரு சந்தோஷமா வச்சு பாத்துக்கிட்டது கிடையாது. ஏன்.. நம்மளைக் கூட அரவணைச்சு பாத்துக்கிட்டது கிடையாது தானே? விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து அம்மாவை அவரு கொடுமை படுத்தினதான் பார்த்திருக்கோம். எந்நேரமும் சண்டை, வாக்குவாதம், பணப் பிரச்சனை, சொந்தக் காரங்க கிட்ட பஞ்சாயத்து! இதெல்லாம் நினைச்சாலே என்ன கல்யாணம் பண்ணி என்ன வாழப் போறோம்னுதான் ண்ணா தோனுது”
பாரமேறிய மனதுடன் தங்கையைப் பார்த்தான் இளமாறன். நிகழ்ந்தவை அவளை மிகவும் பாதித்திருப்பது புரிந்தது.
“அதுவும் நீயும் அம்மாவும் கல்யாணத்துக்கு கேட்டப்ப முன்ன பின்ன தெரியாத மூனாவது மனுஷனை மாப்பிள்ளையா கொண்டு வந்து நிறுத்துவீங்கன்ற விஷயமே என்னை பயமுறுத்துச்சு. அவன் யாரோ? என்ன குணமோ? எப்படிப் பட்டவனா இருப்பான்னு நமக்கென்ன தெரியும்? இந்த மேட்ரிமோனில மாப்பிள்ளை பார்த்து, அவுங்களை என்னை பொண்ணு பாக்க வர சொல்லி, சந்தைல நிக்கிற மாடு மாதிரி அலங்காரம் பண்ணி என்னை அவன் முன்னாடி நிப்பாட்டி, ஒரு கப் காஃபி கொடுக்கிற கேப்ல சத்தியமா ஒரு ஆளை வாழ்க்கைத் துணையா செலக்ட் பண்ற அளவுக்கு என்னால முடியாது ண்ணா. இதுக்கெல்லாம் நான் ரெடி ஆகல. அதான் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்” என்றாள் இனியவர்ஷினி.
“உன் ஃபீலிங்க்ஸ் புரியுது வர்ஷா. அதுக்காக இவ்வளவு பிடிவாதமா பதில் சொல்லி என்னையும் அம்மாவையும் டென்ஷன் பண்ணி இருக்க வேண்டாம். என்ன பயம்? அண்ணன் நான் இருக்கேன் தான. கண்டிப்பா உனக்கு நல்ல பையனா பாப்பேன்” என்றான் துடிப்புடன்.
உடன் பிறந்தவனின் பாசம் அவளுக்கும் புரியாமல் இல்லை! ஆனால்.. நெஞ்சை ஆக்ரமித்த பயமும் தயக்கமும் விலகுவதாக இல்லை!
“அண்ணா…. புரியுது. ஆனா…”
“என்ன வர்ஷா ஆனா..? நான்தான் இவ்வளவு தூரம் சொல்றேன்ல. அண்ணா மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்றான் ஆற்றாமை கலந்த கோபத்துடன்.
“நம்பிக்கை இல்லாம இல்ல ண்ணா? ஆனா..” என்றவள் மீண்டும் ஆனா போட.. இளமாறன் தங்கையை முறைத்தான்.
பின்பு சந்தேகம் கொண்டவனாக “ஏன் வர்ஷா.. உனக்கு வேற யாரையும் பிடிச்சிருக்கா?” என்று சந்திரா போலவே தானும் கேட்டவன்,
“அப்படி எதுவும் இருந்தா சொல்லு வர்ஷா. நல்ல பையனா இருந்தா மட்டும் போதும். நான் போய் அவுங்க வீட்ல பேசுறேன். கல்யாணம் பண்ணிக்கோ” என்று தாயை போலவே பதிலும் கூறி இருக்க, இனியவர்ஷினி முகத்தில் புன்னகை.
கூடவே, அகத்தில் அகநேயன் முகம்!
தலையை உலுக்கிக் கொண்டவள் “அப்படி எதுவும் இருந்தா உங்க கிட்ட சொல்லி இருக்க மாட்டேனா ண்ணா” என்றவள், “அப்படி எல்லாம் யாரும் என் மனசுல இல்லண்ணா” என்றாள் அண்ணனின் முகம் பார்த்து.
“சரி. இப்ப என்னதான் பண்ணலாம் நீயே சொல்லு” என்று இளமாறன் தங்கையிடமே தீர்வு கேட்க, “எனக்குக் கொஞ்ச நாள் டைம் வேணும் ண்ணா” என்றாள் தயக்கமாக.
“எவ்வளவு டைம்?”
“தெரியல ண்ணா.. ஆனா, கொஞ்சம் டைம் கொடுங்க. ப்ளீஸ்”
சிறிது நேரம் மௌனமாக இருந்த இளமாறன் பின் சீரான மூச்சுடன் தங்கையை நிமிர்ந்து பார்த்து “இன்னும் ஆறு மாசம் உனக்கு டைம் வர்ஷா. அதுக்குள்ள நீ உன்னை தெளிவு படுத்தி கல்யாணத்துக்கு ஓகே சொல்லணும்” என்றான் கொஞ்சம் அழுத்தமாக.
அண்ணன் ஆறு மாதம் அவகாசம் கொடுத்ததே இனியவர்ஷினிக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்க, “ஓகே ண்ணா. ஆறு மாசம் டைம் போதும்” என்றிருந்தாள் உற்சாகமாக.
தங்கையின் உற்சாகத்தில் புன்னகைத்தவன் “ஆறு மாசத்துக்குள்ள நீ கல்யாணத்துக்கு ஓகே சொன்னாலும் சரி. உனக்கு யாரையும் பிடிச்சிருந்தாலும் சரி. ஆனா, ஆஃப்டர் சிக்ஸ் மந்த்ஸ் நீ எந்த தயக்கமும் பயமும் இல்லாம கல்யாணம் பண்ணிக்கணும். ஓகே?” என்றிருந்தான் முடிவாக.
அண்ணனின் புரிதலில் அந்த ஒரு வாரமும் மனதைச் சூழ்ந்திருந்த கவலை அகன்றிருக்க “தேங்க்ஸ் ண்ணா…” என்றாள் இனியவர்ஷினி சந்தோஷமாக.
மறு நாள் காலையில் அன்னையிடம் இளமாறன் விஷயத்தை பகிர, மகனின் முடிவைக் கேட்ட சந்திரா “ஆறு மாசமா?” என்று சுணங்கினாலும், “சரி.. ஆறு மாசம் ஓடுற வேகம் தெரியாம ஓடிடும்” என்று அரை மனதாக ஒப்புக் கொண்டார்.
அனைத்தையும் நினைத்துப் பார்த்த இனியவர்ஷினி பெருமூச்சுடன் தோழியிடம், “ஆறு மாசம் இருக்கு. அதுக்குள்ள நான் ரெடி ஆகணும் நிலா” என்க,
“எதுக்கு கேர்ள் ரெடியாகணும், பிரிப்பேர் ஆகணும்னு ஓவரா திங்க் பண்ற? ஜஸ்ட் லீவ் இட். எல்லாம் நல்லதாவே நடக்கும்!” என்றாள் வெண்ணிலா நன்னம்பிக்கையுடன்!
“ஹ்ம்ம். பாப்போம் நிலா..” என்ற வர்ஷினி, “நாளைக்கு சாட்டர்டே லீவ் தான. ஶ்ரீ குட்டியை தூக்கிட்டு வீட்டுக்கு வா. குட்டி தம்பூவை பாத்தே ரொம்ப நாளாச்சு” என்றாள்.
“நாளைக்கு சாட்டர்டே என் புருஷன் சங்கி மோடுக்கு போக பிளான் போட்டுட்டார் இனி” என வெண்ணிலா அலுத்துக் கொள்ள, “ஓஹோ… ரெண்டு பேரும் ஜோடியா எந்த கோவில் போறீங்க..?” என்று இனியவர்ஷினி தோழியை கிண்டல் செய்ய,
“ஆமா.. போறாங்க.. ஜோடியா…!! அதுவும் கோவிலுக்கு! கடுப்பை கிளப்பாத இனி” என்ற வெண்ணிலா,
“ஶ்ரீ குட்டியையும் கூட்டிட்டு பஸ்ல
மைலாப்பூர் சாய் பாபா கோவிலுக்கு போகலாம்னு சொன்னாரு. ஏற்கனவே குழந்தையை தூக்கிட்டு பஸ்ல போய் நஞ்சு பிஞ்சு வந்த அனுபவம் இருந்ததால நான் வரவே மாட்டேன்னு சொன்னேன். பஸ் வேண்டாம். கேப் (cab) புக் பண்ணலாம்னு சொன்னதும்தான் அரை மனசா சரின்னு சொன்னேன்” என்றவள்,
“நாங்கள் குடும்பத்துடன் சாய் பாபா கோவில் சென்று சரணடைய இருப்பதனால் நாளைக்கு வர்றது கஷ்டம் டோழி!! நான் சண்டே வர்றேன். என்ஜாய் பண்ணலாம்” என்றாள் வெண்ணிலா சிரிப்புடன்.
“என்ஜாய் தானே!! பண்ணிடலாம் வா” என்றாள் இனியவர்ஷினியும் புன்னகையுடன்.
ஆனால், நினைத்தது போல் அவர்களது ஞாயிறு பொழுது ‘என்ஜாய்’ செய்யக் கூடியதாக அமையவில்லை!
அகநேயனின் நிகழ்ச்சியில் நிகழ்ந்த காதல் பிரேரணை சம்பவம் யூ ட்யூபிலும், இன்ஸ்டாகிராமிலும் ஒளிபரப்பாகி இருக்க, அகநேயன் பேசியதும், அதற்கு இனியவர்ஷினி பேசியதும் என எல்லா வரிகளும் இன்டெர்நெட்டில் வைரலாகி வலம் வந்தது!!
அது மட்டுமின்றி வீடியோவின் கீழ், கமென்ட் செக்ஷனிலும் சூடு பிடித்துக் கொண்டது!
சில கமென்ட்கள் இதோ உங்கள் பார்வைக்கு…..
‘PERFECT PAIR’
‘AMAZING ANSWER’
‘Wonderful Reply’
‘100% true! Agan is an wonderful Stand up comedian’
‘ஜாடிக்கேத்த மூடி மாதிரி கேள்விக்கேத்த பதில்!’
‘What she said is right!! Agan show is always superb without adult content’
‘அகன் bro.. பொண்ணு சூப்பர்! எப்ப கல்யாணம்?’
‘செம்மையா பதில் சொன்ன பொண்ணுக்கு ஓ போடுங்க!’
‘Vera level !!’
‘அகன் ப்ரோ.. உங்க அம்மா பொண்ணு பாக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க வேற. Why you should not marry that girl? பொண்ணுக்கும் உங்களை பிடிச்சிருக்கு போல! certificate போடுற அளவுக்கு உங்களைப் பத்தி நல்ல விதமா புகழ்ந்து தள்ளி இருக்கா! பேசாம அந்தப் பெண்ணையே கல்யாணம் பண்ணிக்க ப்ரோ!!”
‘They Both look cute together’
‘show–காக propose பண்ணி இருந்தாலும் show–ஆ ப்ரொபோஸ் பண்ணி இருக்க அண்ணாத்த!! அந்த பேனா ரோசாவை மறக்க மாட்டேன்.. Lol’
‘அட யாருடா இவன்? அந்தப் பிள்ளையை மொக்கை வாங்க வைக்கிறேன்னு இவன் அந்தப் பொண்ணு கிட்ட பல்ப் வாங்கிட்டு நிக்கிறான்! That அவன் பொருளை எடுத்து அவனையே போடணும் moment!!’
‘She Nailed It!! BEAUTY WITH BRAIN’
‘Agan tried to Corner her!! But she cooked and ate him!! hahaha..’
‘ஓகே சொன்னதை சமாளிக்க அந்தப் புள்ள எம்புட்டு முட்டு கொடுக்குது! கீழ விழுந்தாலும் பொண்ணு முடில (பெண்ணாகப் போய் விட்டதால் மீசை என்று சொல்ல முடியாதுங்கோ!!) மண்ணு ஒட்டாம பாத்துக்குது ப்பா!’
‘உன் அம்மா கிரேட் தல!!! ஆனா, இந்த மாதிரி நான் யாரு கிட்டயாவது சும்மானாச்சுக்கு கூட லவ் சொல்லி இருந்தேன்னா என்னை பெத்த ஆத்தா விலக்கமாத்த எடுத்து என்னை விளாசி இருப்பாங்க!!! 90’s kidsகளின் பரிதாபங்கள்!!’
இப்படி ஏகப்பட்ட கருத்துகள் காற்றாய் உலாவி இருக்க, அந்த வீடியோவைப் பார்த்த இனியவர்ஷினியின் சொந்தங்களாகிய பெரியப்பாக்களும், அத்தைகளும் மாமாவும் அதிர்ந்து விட்டனர்.
கருணாகரனும் கந்தனும் சந்திரா மற்றும் இளமாறனுக்கு அழைத்து, தய்யா தக்காவென குதித்தவர்கள், “நீங்க அவளுக்கு எப்ப கல்யாணம் பண்ணி வைப்பீங்க? பாருங்க என்ன பண்ணி இருக்கான்னு. நாங்க கிளம்பி வர்றோம்!! கையோட அவளுக்கொரு மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிட்டு தான் கிளம்புவோம்” என்று சனிக்கிழமை இரவு கிளம்பி ஞாயிறு காலை அன்று சென்னைக்கே வந்து குதித்திருந்தனர்!!
