Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 20 ( PART 01 )

 

செந்தாமரை மறுவீடு வருவது தெரிந்த அவளுடைய நெருங்கிய தோழிகள் சிலர் அவளை காண வீட்டிற்கு வந்திருந்தனர். வெற்றிச்செல்வன் வரவேற்பாக இரண்டு வார்த்தைகள் பேசியதோடு, அவர்களுக்குத் தனிமை தந்து ஒதுங்கிக் கொண்டான். அனைவரும் முதலில் கலகலப்பாகத் தான் பேசிக் கொண்டிருந்தனர்.

 



Advertisement

அதிலொருத்தி, செந்தாமரையின் அக்கா கணவன் சுந்தரேசனின் ஊரைச் சேர்ந்தவள். அவள் தான், “எனக்கு தெரியாதாக்கும்… கண்டிப்பா காதல் கல்யாணம் தான்…” என அடித்து கூறினாள்.

 

“அதெல்லாம் இல்லைன்னு சொன்னா நம்பமாட்டியாக்கும்” செந்தாமரை மெல்லிய புன்னகையோடே கூற,

Advertisement

 

Advertisement

“நம்பிட்டோம், நம்பிட்டோம்… ஆனா, எங்களுக்கே தெரியாம எந்த கேப்’ல நீ காதல் செஞ்சேன்னு தான் புரியலை” என்றாள் ஆச்சரியமாக.

 

இவள் என்ன சொல்கிறாள் என்பது போலப் பார்த்தாள் செந்தாமரை. ஏனெனில் வெற்றிச்செல்வனை இந்த ஊரை விட்டுப் போன பிறகு தான் அவளுக்கே தெரியும். ஊரை விட்டுப் போனதும், தோழிகள் யாருடனும் அவள் தொடர்பிலேயே இல்லை. அப்படியிருக்க இவர்களிடம் எப்படி மறைத்திருக்க முடியும்? என்பது போலப் பார்த்தாள்.

Advertisement

 

“நீ இந்த ஊரை விட்டு யாருகிட்டேயும் சொல்லாம போயிட்ட தாமரை. அம்மா, அப்பா ரொம்ப பதறிட்டாங்க. எங்ககிட்ட கூட வெளிய சொல்லிட வேண்டாம்ன்னு சொல்லி விசாரிச்சாங்க. ஆனா, எங்களுக்கும் விவரம் எதுவும் தெரியலை. ஆனா, நானே உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்ன்னு இருந்தேன். அதுக்குள்ள நீ ஊரை விட்டு போயிருக்கவும், என்னால அந்த விஷயத்தையும் உன்கிட்ட சொல்ல முடியலை…” என்று அவளின் முகம் பார்த்தாள்.

 

அங்கிருப்பவர்கள் அனைவருமே நெருங்கிய தோழிகள் தான் என்பதால், எதையும் மறைத்துப் பேச அவர்கள் நினைக்கவில்லை. “என்னன்னு சொல்லுடி…” எனச் செந்தாமரை கேட்க,

 

“அது உங்க அக்கா வீட்டுக்காரர்… சுந்தரேசன் இருகானல்ல… உனக்கு தெரியுமான்னு தெரியலை, அவருக்கு உன்னை ரெண்டாந்தாரமா கட்டிட்டு வர எண்ணம் இருந்தது போல. எங்கம்மா விஷயம் கேள்விப் பட்டு, என்கிட்ட கேட்டாங்க… நான் தெரியலையேம்மா’ன்னு தான் சொன்னேன். ஆனா, ரொம்ப வருத்தம். அவனுக்கு அக்காவை கட்டிக் கொடுத்ததே தப்பு மாதிரி தான இருக்கும். அவனுக்கு உன்னையுமா அப்படின்னு தான் தோணுச்சு.

 

[the_ad id=”6605″]

 

 

அம்மாவும் அதையே தான் சொன்னாங்க. வந்த பொண்ணையே உருப்படியா வெச்சு வாழ தெரியலை. எமனுக்குத் தாரை வாத்து தந்துட்டாங்க. இதுல இன்னொரு பொண்ணையும் கட்டிட்டு வந்து சீரழிக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டாங்க… நீ எதுவும் தாமரை கிட்ட பேசுனா, கவனமா இருக்க சொல்லுன்னு சொல்லிட்டு இருந்தாங்க.

 

நானும் உன்கிட்ட பேசணும்ன்னு இருந்தேன். அப்ப தான் உன்னை காணோம்ன்னு அப்பா எனக்கு போன் பண்ணுனாரு. இவளுங்களுக்கும் பண்ணி இருப்பாரு போல. யாருக்கும் எதுவும் தெரியலைன்னதும் பயந்து தான் போனோம்” என அவள் சொல்லிக் கொண்டே போக, என்ன சொல்லப் போகிறாளோ என்று மெல்லிய பதட்டத்துடன் செந்தாமரை கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

அவளின் மனம் ஏனோ, தன் தோழி தன் கணவனைப் பற்றியும் எதுவோ சொல்லப்போகிறாள் என்பதை உறுதியாக நம்ப, அது என்னவாக இருக்குமோ என்னும் நடுக்கம் அவளுக்குள் விரவுவதை அவளால் தடுக்க முடியவில்லை. அவள் எண்ணிப் பயந்ததை போலவே தோழியின் பேச்சு வெற்றிச்செல்வனிடம் வந்து சேர்ந்தது.

 

“நீ காணாம போன, கொஞ்ச நாளுல… உன் வீட்டுக்காரரை நான் எங்க ஊருல பார்த்தேன். அவரு சுந்தரேசனை அடி வெளுத்து வாங்கிட்டு இருந்தாரு. புதுசா ஒருத்தர் வந்து, ஊருக்குள்ள இப்படிச் செய்யவும் எல்லாரும் சண்டைக்குக் கிளம்ப, உன் வீட்டுக்காரரை யாராலையும் கட்டுப்படுத்தவே முடியலை. அப்பத்தான் சுந்தரேசன் செஞ்ச காரியத்தைச் சொல்லி, சொல்லி அவரு அடிக்க… எல்லாருக்கும் பயங்கர அதிர்ச்சி. ஒருவழியா உன் வீட்டுக்காரரை எல்லாரும் தடுத்து நிறுத்தீட்டாங்க. நாங்க கேட்டுக்கறோம். நீங்க இந்த மாதிரி நடந்துக்கிறது சரியில்லைன்னு சொல்லி பிரிச்சு விடறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு. இந்த விஷயத்தைப் பஞ்சாயத்து பண்ணனும்ன்னு பேசிட்டு இருந்தாங்க.

 

உன் வீட்டுக்காரர் கூட வந்தவங்க தான் அவரை தடுத்து, சமாதானம் செஞ்சு… திருப்பி கூப்பிட்டு போனாங்க. இல்லாட்டி அவருக்கு வந்த ஆத்திரத்துக்கு சுந்தரேசனை என்ன செஞ்சிருப்பாரோ? போறப்ப எங்க ஊர்த்தலைவர் கிட்ட, அவங்க சேகரிச்ச விபரத்தையும் தந்துட்டு போனாங்க” என தோழி சொல்லச் சொல்ல செந்தாமரைக்கு மூச்சடைத்தது. ஆனால், அவள் இன்னும் சொல்லி முடிக்கவில்லை.

 

“சுந்தரேசனுக்கு பயங்கர அடி. அவனுக்குச் சரியானதும் பஞ்சாயத்து பண்ணறதா இருந்துச்சு. ஆனா, ஊரு முன்னாடி அடி வாங்கி, அவன் செஞ்ச கேவலமான விஷயம் எல்லாம் வெளிய வந்து அவமானப்பட்டதாலயோ என்னவோ, அவன் ஊரை விட்டு போயிட்டான். அவனோட பெத்தவங்க கூட, எங்களுக்குத் தெரியவே தெரியாது, எங்க போனானோ எப்படி இருக்கானோன்னு தான்… அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாங்க. ஆனா, யாராலயும் அவங்களை நம்ப முடியலை. போலீஸ் கிட்ட சொல்லி, பஞ்சாயத்து பண்ணி பிரச்சனை வந்துடுமோன்னு பயந்து, மகனை எங்கேயோ மறைச்சு வெச்சுட்டு நாடகம் ஆடறாங்கன்னு தான் எங்களுக்கு தோணுச்சு…” வெற்றிச்செல்வனிடம் அடி வாங்கிய சுந்தரேசனையும் காணவில்லை. அந்த ஆசிரியரையும் காணவில்லை எனச் செந்தாமரை’யின் மனம் தன்போல முடிச்சிட… அவளுக்குத் திக்கென்றிருந்தது.

 

[the_ad id=”6605″]

 

 

‘இன்னும் என்னவெல்லாம் வருமோ?’ என்னும் தவிப்போடு அவள் பார்த்திருக்க, “ஆனா, அவங்க பொய் சொல்லலை தாமரை. உண்மையிலேயே அவங்களுக்கு பையன் எங்கேன்னு தெரிஞ்சிருக்காது. இல்லாட்டி அந்த சுந்தரேசன் இவங்களோட தொடர்புலேயே இல்லாம இருந்திருக்கணும்” என்று கூறிய தோழியை யோசனையுடன் பார்த்தாள்.

 

“அது அந்த சுந்தரேசன் அவமானம் தாங்காம தான் ஓடிட்டான் போல… ஏன்னா, அவனோட அம்மா, அப்பா ஒரு விபத்துல இறந்துட்டாங்க. அவங்க இறந்ததுக்கு கூட, அவன் வரலைன்னா… எங்கேயோ போயிட்டான்னு தானே அர்த்தம்…” என்று சொன்னவள்,

 

“சரி விடு… அவனும், அவன் குடும்பமும் செஞ்ச பாவம்… அது சும்மா விடுமா… ஆனா, அண்ணா, உன்மேல எவ்வளவு பிரியம் வெச்சிருந்தா, நீ உன் நிலைமையை சொன்னதும் வந்து இவனை அப்படி அடிச்சிருப்பாரு. உனக்கு சுந்தரேசனோட கல்யாணம் பேசியிருந்தாங்களா? அது பிடிக்காம தான் நீ போயி அண்ணா கிட்ட சொன்னியா? ஆமா, சுந்தரேசன் அவ்வளவு மோசமானவன்னு உனக்கு எப்படி தெரிஞ்சது தாமரை? அண்ணா, அத்தனை ஆதாரம் ஊர்த்தலைவருங்க கிட்ட தந்தாரு…” என ஏதேதோ கேட்டுக் கொண்டே செல்ல,

 

பதில் சொல்லும் நிலையில் செந்தாமரை இல்லை. நான் எப்போ அவருகிட்ட என்னை பத்தி சொன்னேன்? அவரு எப்படி இங்க வந்து இப்படி செஞ்சாரு? அவருக்கு முதல்ல எப்படி என்னை பத்தி தெரியும்? அப்பறம் அந்த ஆதாரம் எல்லாம் எப்படி? சுந்தரேசன் எங்க? அந்த டீச்சர் எங்க? உண்மையிலேயே அவமானம் தாங்காம ஓடிட்டாங்களா? இல்லை ஆத்திரத்துல இவரு எதுவும் செஞ்சுட்டாரா? எந்த கேள்விக்கும் பதில் தெரியாமல், தலை கிறுகிறுத்தது அவளுக்கு.

 

அவளது முகமே எதுவோ சரியில்லை என்று உணர்த்த, “என்ன ஆச்சு தாமரை? உனக்கு இதெல்லாம் எதுவும் தெரியாதா?” எனத் தயக்கமாக அவள் கேட்க,

 

இல்லை என தலையசைத்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் வெளியேறியது.

 

“ஸ்ஸ்ஸ்… என்ன தாமரை? ஏதோ உனக்கு தெரியும்ன்னு நினைச்சு சொல்லிட்டேன். இதுல நீ வருந்தவும் எதுவும் இல்லையே… யாரா இருந்தாலும் இந்த மாதிரி ஒரு தப்பை செஞ்சவன், அடுத்து தன் காதலியையும் கல்யாணம் செய்துக்க நினைச்சிருக்கான்னு தெரிஞ்சா கோபம் தானே வரும். அதான் இங்கேயும் அண்ணாக்கு வந்திருக்கு. அவரோட கோபம் நியாயமானது தான். இதுக்கு எதுக்கு கலங்கிட்டு இருக்கிற?” என முதுகை வருடி தந்து, கண்ணீரைத் துடைத்து விட்டு ஆறுதல் தந்தாள்.

 

இவர்களிடம் எப்படிச் சொல்வாள் அப்பொழுது அவர்களுக்குள் காதலே இல்லையென்று. அந்த இடத்தில் நான் இல்லாமல் வேறொரு பெண் இருந்திருந்தாலும் அவன் இதேயளவு தான் ஆத்திரப்படுவான் என்று…

 

அசர்பந்தமாய், நேற்று இரவு வெற்றி கூறிய, “அப்பாவுக்கு பொண்ணுங்க விஷயத்துல கொஞ்சம் தப்பு செஞ்சாலும், அலட்சியமா இருந்தாலும் பிடிக்காது. அதே குணம் எனக்கும், முத்துவுக்கும் வந்துடுச்சு…” என்று கூறியது வேறு நினைவில் வர, கணவனின் எல்லைமீறும் கோபமும், ஆத்திரமும் எங்கு கொண்டு போய் விடுமோ என்னும் பயம் வந்தது. அதோடு இதுவரை என்னவெல்லாம் செய்து வைத்திருக்கிறானோ என்று மனதில் குளிர் பிறந்தது.

 

‘நேற்று இரவு அதையும் சேர்த்துத் தானே சொன்னான். நான் செஞ்ச வேலை கொஞ்சம் பிரச்சனையானது. யாருகிட்டேயும் சொல்ல முடியாதுன்னு…’ என அவளது மனம் வெகுவாக குழம்பி விட்டது. பயத்தில் உடல் நடுங்கியது.

 

அவளது மாற்றத்தைக் கண்ட தோழியர்கள் அவளை வெகுவாக தேற்ற, அவளுக்கு அவர்களின் சொற்கள் காதில் விழுந்தால் தானே! தோழி ஒருத்தி அவளை தன் மடியில் சாய்த்து ஆறுதலாய் தலையையும், முதுகையும் வருடி தர,

 

செந்தாமரை தெளிய வெகு நேரம் பிடித்தது. ‘என்னவென்றாலும் அவன் நம் கணவன், நாமாக எதையோ யோசித்துக் குழம்பிக் கொள்கிறோம். கோபத்தில் அவர்களை அடித்து விட்டான் என்பதற்காக, அவர்கள் ஊரை விட்டு ஓடியதற்கு எல்லாம் தன்னவனைக் குற்றம் சொன்னால்?’ என்று மனதின் மூலையில் கூக்குரல் கேட்டாலும்,

 

நடக்கும் சம்பவங்கள் எல்லாவற்றையும் இணைத்தால், அவளால் அதை ஏற்க முடியவில்லையே! கணவன் என்னவோ செய்கிறான்… அது நியாயமாகவே இருந்தாலும், அதனால் அவனுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்பதிலேயே அவள் மனம் சிக்குண்டு விட்டது. அவன் என்ன செய்கிறான் என்று தன்னிடம் சொல்வானா மாட்டானா எனப் பரிதவித்துப் போனாள்.

 

[the_ad id=”6605″]

 

 

இருவரும் ஒருவருக்கொருவர் சரியாகத் தெரிந்து கொள்ளக் கூட இல்லை. அதற்குள் இப்படியொரு நிலையா என வெகுவாக கலங்கினாள்.

 

என்ன சமாதானம் செய்தாலும் கணவன் மீது நம்பிக்கை வர மறுத்தது. கணவன் தான் அவர்கள் காணாமல் போனதற்குக் காரணம் என்று அந்த மனையாளின் மனம் உறுதியாக நம்பியது. காணாமல் மட்டும் தான் போனார்களா… இல்லை உயிரோடே இல்லையா… என்று வேறு இதயம் படபடத்தது.

 

‘ஏன் வெற்றி இப்படி செய்யறீங்க? எவ்வளவு ஆபத்தான விஷயம்?’ என மனம் கலங்கினாலும்,

 

‘ஒரு வேளை நம் கலக்கம் வீணாக கூட இருக்கலாம். வீணாக கண்டதையும் அலட்டிக் கொள்ள வேண்டாம்! அவர்கள் உண்மையிலேயே அவமானம் தாங்காமல் ஓடியிருக்கலாம்’ என்றும் மனம் சொல்லியது.

 

கணவனிடம் கேட்கவும் முடியாமல், தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளவும் முடியாமல் வெகுவாக பரிதவித்து… சரி கணவனை நம்புவோம் என்னும் முடிவுக்கு இறுதியாக வந்த பின்பே அவள் மனம் சற்று ஆசுவாசமானது.

 

எதுவாக இருந்தாலும், அவன் சொல்லுவான். அப்படியும் இல்லையா அவனிடம் கேட்டு உறுதி செய்து கொள்வோம். இப்படி வீணாக அவன் மீது சந்தேகம் வேண்டாம் என்று அவளுக்குள் உருப்போட்டாள்.

 

சற்று நேர அமைதியின் பின், தோழிகள் கவலை கொள்வார்களே என்று புரிய, மெல்ல எழுந்தமர்ந்து, “சாரி டி. நான் பயந்து… உங்களையும் படுத்திட்டேன்” என சோபையாகப் புன்னகைத்தாள்.

 

“ச்ச… லூசு… அதெல்லாம் எதுவும் இல்லை. நீ எதுவும் நினைச்சுக்காத…” என ஒருத்தி கூற,

 

“சாரி டி. உனக்கு தெரியும்ன்னு நினைச்சுட்டேன்…” என்று இத்தனை நேரம் விவரங்களைப் பகிர்ந்து கொண்டவள் சங்கடமாகக் கூற,

 

“பரவாயில்லை விடுடி. சரி நம்ம ரேகா பிசாசு எப்படி இருக்கு? ஊருக்கு எதுவும் வந்தாளா?” என தன் தோழியைப் பற்றி பேச்சை மாற்றினாள்.

 

ரேகா அந்த கடத்தல் சம்பவத்தின் பிறகு மனதளவில் மிகவும் பலவீனமாகியிருந்தாள். செந்தாமரை தான் அவளையும் தன்னோடு சேர்த்துத் தேற்றினாள். அதன்பிறகு இருவருக்கும் ஆசிரியை வேலை கிடைத்ததும், திருமணத்திற்கும் வரன் அமைய, திருமணம் முடித்து அவள் இப்பொழுது ஈரோட்டில் கணவனோடு வசித்து வருகிறாள்.

 

இவர்களின் திருமணத்திற்கும் வந்திருந்தாள். ஆனால், திருமண ஆரவாரத்தில் தோழிகளோடு நிதானமாக அளவளாவ முடியுமா என்ன?

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!