Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manathodu Manvaasam

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 14.2

 

பொழுது புலர்ந்ததில் இருந்தே புதுவிதப் பொலிவொன்று அருந்தமிழைத் தொற்றிக் கொண்டிருந்தது. கைகளில் இருந்த வளையல்களை வருடியவள் அவளுக்கு மிகவும் பிடித்த அயிரை நிறப் புடவையை உடுத்தியபடி பள்ளிக்கு வந்திருந்தாள்.

 

காலையில் இருந்து அவளைக் காக்க வைத்தவன் மாலையில் தான் தரிசனம் தந்தான். மாறனைக் கண்டதும் உள்ளுக்குள் லேசான படபடப்பு தொற்றிக் கொண்டது. அவனும் அவள் உடுத்தியிருந்த அதே அயிரை நிறத்தில் தான் சட்டை அணிந்திருந்தான்.



Advertisement

 

மாறனும் அதை கவனித்திருப்பான் போல, அவன் பார்வையும் அருந்தமிழை அழகாய் ஆராய்ந்தது.

 

Advertisement

அதற்குள் அவளிடம் வந்த சிறுமி ஒரு சிறுவனை கைகாண்பித்து,

Advertisement

 

“மிஸ் மிஸ் இவன் என் பென்சிலை திருடிட்டான்” என்று குறை கூற,

 

Advertisement

“இல்ல டீச்சர் சுமி பொய் சொல்லுறா. இது என்னுது” என்று பென்சிலை தனக்குப் பின்னால் மறைத்தான் அவன். இருவரையும் பார்த்த அருந்தமிழ்,

 

“யாரு சொல்லுறது உண்மை இதுல? திருடுறது பொய் சொல்லுறது எல்லாம் தப்புன்னு சொல்லியிருக்கேன் தானே? யாரா இருந்தாலும் இன்னொருத்தர் பொருளுக்கு ஆசை படக்கூடாது. அவங்களை சாமிக்கு பிடிக்காது. நல்ல பசங்களை தான் சாமிக்கு பிடிக்கும்” என்று சொல்ல,

 

“இது சுமி பென்சில் தான் டீச்சர்” என்று தயங்கியபடி கூறியவனோ தனக்கு தண்டனை கிடைக்குமோ என்று மிரண்டு போய் பார்க்க, புன்னகைத்த அருந்தமிழ்,

 

[the_ad id=”6605″]

 

 

“அதை சுமி கிட்ட கொடுத்துட்டு சாரி கேளு” என்றதும் அப்படியே செய்தான்.

 

“குட் பாய். உனக்கு பென்சில் வேணும்னா அப்பா அம்மாவை தான் வாங்கித் தரச்சொல்லி கேக்கணும். இல்லைனா என்கிட்ட கேளு நான் உனக்கு வாங்கித் தர்றேன். இனி மேல் இப்படி இன்னொருத்தர் பொருளை திருடக்கூடாது கண்ணா. இது தப்பு” என்றதும் தலையசைத்து அவர்கள் இருவரும் சென்றுகொள்ள, அதுவரையில் பார்வையாளனாய் அக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த நன்மாறனும் கிளம்பச் செல்ல,

 

“இப்போ கலையரசனுக்கு எப்படி இருக்குங்க?” என்ற தமிழின் குரலில் அவள் புறம் திரும்பியவன்,

 

“பரவால்லைங் டீச்சர். இன்னும் ரெண்டு நாள்ல ஸ்கூல்க்கு வந்திருவான்” என்றான்.

 

“என்ன நீங்களும் சின்ன பசங்களோட்டம் டீச்சர்ன்னு கூப்பிடுறீங்க. பேரை சொல்லியே கூப்பிடலாமே” என்றாள் அவனுக்கு மட்டும் ஒலிக்கும்படி தனித்து தொனித்த குரலில்.

 

“சரிங்க தமிழ்” என்று விட

 

“நீங்க நாங்க எல்லாம் வேண்டாம்” என்றாள் அடுத்து.

 

அவளது அழகிய வாய்மொழியில் அதரங்களில் அரும்பிய புன்னகையுடன் அவளை பார்த்தவன்,

 

“நெருக்கமானவங்களை கூப்பிடுறதோட்டம் எல்லாரையும் கூப்பிட முடியாதில்லைங்க தமிழ்” என்றுவிட சட்டென அருந்தமிழின் முகம் சுருங்கிப் போனது.

 

இதற்கு என்ன அர்த்தமாம்? நெருங்கியவர்களை உரிமையோடு ஒருமையில் அழைப்பது போல் உன்னை அழைக்க முடியாது என்கிறானா? அவளுக்கு அப்படித்தான் பட்டது.

 

ஆனால் மாறனிடம் இது பற்றி வினவியிருந்தால் அவன் கூறியிருப்பான், அவன் தாய் தந்தையை நேசிக்கும் அளவிற்கு அவளையும் நேசிக்கிறான். தன் வாழ்க்கைத் துணையாக வரப்போகிறவளை மரியாதையாய் அழைக்கவே அவன் மனம் ஆசைப்படுகிறது என.

 

அடுத்து என்ன பேசுவதென்று தெரியவில்லை. தமிழ் கிளம்பச் செல்ல,

 

“தமிழ்..!” என்று இனிமையாய் அழைத்திருந்தான்.

 

அவன் அழைப்பில் நிமிந்து அவன் முகம் காண,

 

“திருடுறது தப்பு தானங்க?” என்று கேட்டு புருவம் உயர்த்த,

 

“கண்டிப்பாங்க” என்றாள்.

 

“அப்பறம் நீங்க ஏன் அந்த தப்பை பண்ணுறீங்க?” என, எதைத் திருடினோம் என்று புரியாது பார்த்திருந்தாள். பின் நினைவு வந்தவளாய்,

 

“இந்த வளையலை உங்க அம்மா தான் எனக்கு கொடுத்தாங்க” என்றாள் பாவமாய். அவள் பாவனையில் பொங்கி வந்த சிரிப்பை சிறை செய்து நின்றவாறு,

 

“அதில்லைங்க” என்றான்.

 

“உங்ககிட்ட இருந்து வேற எதை நான் திருடுனேன்? எனக்கு ஒன்னும் தெரியலைங்க. நீங்க சொல்லுங்க நான் உடனே திருப்பி கொடுத்திடறேன்” என்று அவனை பார்க்க, அவள் விழியோடு விழி கலக்கவிட்டவன்

 

“வேண்டாங்க தமிழ். அது எப்போவும் உங்களுக்கு மட்டும் தான் சொந்தம். நானே கேட்டாலும் திருப்பி கொடுத்திறாதீங்க” என்றான்.

 

அவள் கண்களை பெரிதாய் விரித்துப் பார்க்க, அவள் வாசம் செய்யும் தன் இதயத்தை தொட்டுக் காண்பித்தான் மாறன்.

 

திடுடிய பொருள் என்னவென்று புரிய வர, தமிழ் அசையாது அப்படியே நின்றிருக்க, மாறன் அதரங்களில் அரும்பிய புன்னகையுடன் லேசாய் தலையசைத்து அவளிடம் விடைபெற்று வந்து ஜீப்பில் ஏறச்செல்ல,

 

“கொஞ்சம் இருங்க” என்ற குரலில் மீண்டும் தமிழைப் பார்த்தான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“திருடுறது தப்பு தான். ஆனா பரிமாற்றம் பண்ணிக்குறது தப்பில்லையே?” என்றாள்.

 

“என்ன சொல்லுறீங்க?” என்றான் ஆர்வம் ததும்பும் விழிகளோடு.

 

“பரிமாற்றம் பண்ணிக்குறது தப்பில்லைன்னு சொல்லுறாங்க ண்ணா” என்று சொல்லியபடி கவின் மாறனின் கையைத் தட்ட,

 

“ப்ச்.. என்னடா?” என தன் பக்கவாட்டில் லேசாய் திரும்பிய மாறன் தன் பார்வையை சிறிதும் தமிழிடம் இருந்து விலக்காதபடியே கவினிடம் கேட்க,

 

“பரிமாற்றம் பண்ணிக்குறது தப்பில்லைன்னு சொல்லுறான் ண்ணே” என்று அகிலன் அதையே மீண்டும் திருப்பிச் சொல்ல, தமிழ் சிரித்தே விட்டாள். 

 

‘ஒன்னுக்கு ரெண்டு கரடிக கூட இருக்கே. இவனுகள கூட வெச்சுக்கிட்டு என்ன பேசுறது’ எனப் பார்த்திருந்த மாறன்,

 

‘நிஜமாவா’ என புருவத்தை உயர்த்தி அவனவளிடம் கேட்க, பதிலுக்கு ‘ஆமாம்’ என்று அழகாய் கண்ணசைத்துவிட்டு நகர்ந்தாள் அருந்தமிழ்.

 

“தமிழ் நில்லுங்க”

 

“மாட்டேன்”

 

“நான் உங்ககிட்ட இப்போ பேசியே ஆகோணும்”

 

“எதுவா இருந்தாலும் எங்கப்பா கிட்ட வந்து பேசிக்கோங்க”

 

“கட்டவண்டியை பிடிக்குமான்னு உங்கப்பா கேட்டா என்ன சொல்லுவீங்க?” என்ற மாறனது குரலில் ஓர் நொடி நின்று மெல்லத் திரும்பியவள்,

 

[the_ad id=”6605″]

 

 

“அப்பா அப்படிக் கேட்டா, கட்டவண்டியை மட்டும் தான் பிடிக்கும்னு கட்டாயம் சொல்லுவேன்” என்று அழுத்தமாய் தெரிவித்துவிட்டு விரைந்து சென்றாள்.

 

மாறனுக்கு விண்ணில் பறப்பது போன்ற உணர்வு எழுந்தது. தன் கண்ணையே நம்ப முடியவில்லை. தமிழுக்கும் தன்னை பிடிக்கும் என்பது ஒன்றே அவனுக்கு போதுமானதாய் இருந்தது.

 

திருவிழா முடிந்ததுமே கந்தசாமியிடம் இதுபற்றி பேசப் போகிறேன் என்று சாரதா சொன்னதற்கு மாறன் மறுத்துவிட்டான். தமிழிற்கு என்னை முதலில் பிடிக்க வேண்டும். தமிழின் மனதில் எனக்காக சிறு இடமேனும் கிடைக்கட்டும் பிறகு பார்க்கலாம் என்று சொல்லித் தடுத்துவிட்டான். அவன் காத்திருப்பு வீண் போகவில்லை. இதை உடனே அன்னையிடம் தெரிவிக்க வேண்டும் மற்றதை அவர் பார்த்துக்கொள்வர் என்று எண்ணித் திரும்ப, திருதிருவென்று விளித்து நின்ற கவினையும் அகிலனையும் கண்டு,

 

“டேய்..!” என மகிழ்ச்சி பொங்க தன்னிரு கைகளாலும் அவ்விருவரையும் தூக்கிச் சுற்றினான்.

 

“ஐயோ எங்கம்மாளுக்கு நான் ஒத்தப்புள்ள என்னைய விட்டுடுண்ணா” என்று அவர்கள் கத்தவும் அவர்களை இறக்கி, வண்டியில் ஏற்றி உல்லாசமாய் விசில் அடித்தபடி வண்டியைக் கிளப்பினான்.

 

சேத்துமடை ரோட்டில் சிலுசிலுக்கும் காற்றோடு போட்டி போட்டிக்கொண்டு சென்றது மாறனின் ஜீப். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!