Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manathodu Manvaasam

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 16.2

 

ட்..!

 

எதுவோ கீழே விழுந்து சிதறிய சத்தம் கேட்க, உடனே அத்திசையில் திரும்பிப் பார்த்தான் விக்ரமன்.



Advertisement

 

அங்கோ களிமண்ணால் செய்யப்பட்டு வண்ணங்கள் பூசி அழகாய் காட்சியளித்த பசுவின் சிலையானது உடைந்து இரு துண்டாகிக் கிடக்க, அதையே பார்த்தபடி நின்றிருந்தாள் வேங்கையரசி.

 

Advertisement

சத்தம் கேட்டு அங்கு வந்த நாயகி கீழே கிடந்ததையும் தன் சின்னப் பேத்தியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

Advertisement

 

“இதையும் போட்டு ஒடச்சுப்புட்டியா? எத்தனை தடவ சொன்னாலும் உனக்கு சூதானங்கறது சுத்தமா இல்ல அரசி” என கடிந்துகொள்ள,

 

Advertisement

“இப்போ என்னங் ஆத்தா, கை தவறி விழுந்திருச்சு போதும்ங்ளா? அதான் ஒடஞ்சு போச்சல்லோ இனி ஒட்டவா வைக்க முடியும். அதை தூக்கி குப்பைல போடுங்க” என்று விக்ரமனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாய் அவளறைக்குள் சென்றுகொள்ள,

 

“கொஞ்ச நாளாவே இவ சரியில்ல கண்ணு. இன்னும் கோபம் கொறயலயோட்ருக்குது. நீ வா நான் பணம் எடுத்து தர்றேன். உன்ர மாமன்கிட்ட கொண்டு போய் கொடுத்துட்டு வந்திரு” என்று விக்ரமனிடம் சொல்லிவிட்டு பணம் எடுத்துவர அவர் அறைக்குள் சென்றுகொள்ள,

 

விக்ரமனோ ஒரு நொடி மாடிப்படிகளை நிமிர்ந்து பார்த்துவிட்டு பின் கீழே கிடந்த சிலையை கையில் எடுத்து அதையே பார்த்தபடி நின்றிருந்தான்.

 

அவன் மீதுள்ள கோபம் தான் இப்படி வெளிப்பட்டுவிட்டதோ?

 

ஆனால் அரசி அதை வேண்டுமென்றே செய்திருக்கவில்லை.

 

அவன் வாங்கிக் கொடுத்த மண் சிலையை கையில் வைத்துப் பார்த்தபடி வந்தவள் வரவேற்பறையில் அவனையே கண்டதும் படியில் கால் மாற்றி வைத்துவிட, கால் இடறியதில் கையிலிருந்ததை தவற விட்டுவிட்டாள்.

 

[the_ad id=”6605″]

 

 

 

அது உடைந்து போன வருத்தம் ஒருபுறம் இருக்க, அவன் தன்னை நோக்கி வருவது கண்டு உடனே அங்கிருந்து வேகமாய் தன் அறைக்கு திரும்ப வந்து கொண்டாள்.

 

சிறிது நேரம் கழித்து விக்ரமன் சென்றதை உறுதி படுத்திக்கொண்டு கீழே வந்தவள் உடைந்த சிலையைத் தேட, அது அவ்விடம் இல்லாதது கண்டு

 

“இங்க கெடந்த சிலை எங்கைங் ஆத்தா?” என்று நாயகியிடம் கேட்க

 

“அதைய அப்பளையாவே தூக்கி போட்டாச்சு கண்ணு” என்றார்.

 

“உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை” என பல்லைக் கடிக்க,

 

“இதென்னடியம்மா வம்பா போச்சு. ஒடஞ்சத இனி ஒட்டவா வைக்கமுடியும்னு நீ தானோ தூக்கி குப்பைல போட சொன்ன” என அதிர்ந்துபோய் கன்னத்தில் கைவைக்க..

 

“நான் சொன்னா நீங்க போட்டுடுவீங்களா? இது மாற மத்த விசயத்துலையும் நான் சொல்லுறதை கேக்குறது தானே” என்றபடியே வாசலுக்கு விரைந்தாள்.

 

“இவ பெரியமனுசியா இல்ல நான் பெரியமனுசியா? உடைஞ்ச சிலை வீட்டுக்கு ஆகாது கண்ணு. அது போனா போவட்டும் நான் வேற வாங்கித்தர்றேன் வா” என்ற நாயகியின் சொல் அவள் செவிகளை சென்றிருக்கவில்லை.

 

வாசலுக்கு விரைந்தவள் சுற்றிலும் அதைத் தேட, அது எங்குமே தென்படவில்லை. அது மொத்தமாய் தன் கையை விட்டுப் போன உணர்வு உள்ளோங்கியது. சிலை மட்டும் அல்ல அதைக் கொடுத்தவனும் தான்.

 

அதீத உணர்ச்சி நிலையில் சிலருக்கு அழுகை வரும் சிலருக்கு ஆத்திரம் வரும். இங்கு அரசிக்கு ஆத்திரம் தான் வந்தது.

 

தமிழின் நிச்சயம் நடந்த அன்று நாயகியின் கையால் இரவு உணவுண்டவள் தன் மனதில் எழுந்த சந்தேகங்களை எல்லாம் ஒவ்வொன்றாய் அவர் முன் வைத்தாள்.

 

“அக்காவுக்கு திடீர்ன்னு இப்படி ஒரு ஏற்பாட்டை ஏங் ஆத்தா செஞ்சீங்க?” என்று கேட்க,

 

“முன்னமே உங்கப்பன் இந்த முடிவை எடுத்துட்டான் கண்ணு. நீ ஊருக்கு வந்தப்பறம் பாத்துக்கலாம்னு இருந்திருக்கான். இப்பத்தேன் நீ வந்துட்டயல்லோ. அன்னிக்கு சுப்பாத்தா நம்ம தமிழப் பத்தி சொன்னதுல இருந்தே எனக்கு மனசு ஆறல. உங்கப்பன் கிட்ட சொன்னதுக்கு, திருவிழா முடியட்டும்னு சொல்லிட்டான். அதான் நாளும் தள்ளி போயிட்டே இருக்குன்னு இன்னிக்கே ரெண்டு வீட்டளவுல மட்டும் உறுதி பேசியாச்சு”

 

“விக்ரமன் மச்சானை ஏன் அப்பா அக்காவுக்கு தேர்ந்தெடுத்தாரு?”

 

“ஏங் கண்ணு சொத்து பத்து பத்தலைன்னு பாக்குறியா. சொத்தா முக்கியம் குடும்பம் தானே முக்கியம். உன்ர வேலுச்சாமி மாமன் எப்படி பட்ட மனுசன்னு தெரியாதா? ஊருக்குள்ள பேரு வாங்குன பரம்பரை கண்ணு. அதை விட ஒரு நல்ல குடும்பம் கிடைக்குமா. உங்கப்பனுக்கு உங்கக்காளை தன் சிநேகிதன் ஊட்டுக்கே அனுப்போனும்னு ஆசை. எனக்குமே அந்தாசை இருந்துது கண்ணு. செல்லாண்டியமா புண்ணியத்துல அது நெறைவேற போகுது”

 

“மச்சான் இதுக்கு ஒத்துக்கிட்டாரா?”

 

“அதெல்லாம் உன்ர அப்பனே அவன் கிட்ட பேசி சம்மதம் வாங்கிட்டான். விக்ரமனுக்கும் நம்ம தமிழை புடிக்கும் கண்ணு. நீ இங்க இல்லாதனால உனக்கு தெரியலயோட்ருக்கு. தமிழை மேற்படிப்புக்கு காலேசுல சேக்குறதுக்கு, பரிச்சை எழுதறக்குன்னு எல்லாத்துக்கும் விக்ரமன் தான் கூட்டிட்டு போவான். தமிழ் வேலை விஷயமாவும் அவன் தான் அங்கயும் இங்கையும் அலைஞ்சான். நம்ம விக்ரமன் குணத்துலதேன் சொக்கத் தங்கமாச்சு. உன்ர அப்பனும் எதுனாலும் அவன்கூட தான் தமிழை அனுப்பி வெப்பான்”

 

அந்நேரம் அரசிக்கு ஒன்று புரிந்தது. அவள் ‘கடந்த காலம்’ என்று. இந்த ஐந்தாண்டுகளில் எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கலாம், அவை அவளது கடந்த கால நினைவுகளை உள்ளே தள்ளிப் புதைத்து, அதன் மேல் முளைத்து இப்போது வேரூன்றி இருக்கலாம் என்று.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

விக்ரமனின் பொதுவான அன்பை காதலென்று அர்த்தம் கொண்டு தனக்கு தானே அனர்த்தம் விளைவித்துக் கொண்டோமா என்றெல்லாம் ஓர் நொடியில் பூதாகரமாய் தோன்றியது.

 

குழம்பிய குட்டையைப் போட்டு மீண்டும் மீண்டும் அவளே குழப்பிக் கொண்டிருந்தாள். அவன் விசயத்தில் தெளிவென்பது கிட்டவேயில்லை.

 

ஆனால் அப்போதும் அவன் மீது தான் தெளிவின்மை இருந்ததே தவிர அவள் எண்ணத்தில் மிகுந்த தெளிவு இருந்தது. அவளால் அவனை அன்றி வேறெவரையும் நினைத்தும் பார்க்க முடியாதென்று உறுதியாய் உள்ளம் உணர்த்த, இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டோமே என நினைத்தாள்.

 

“எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குது கண்ணு. நம்ம தமிழுக்கும் விக்ரமனுக்கும் ஜோடி பொருத்தம் எம்புட்டு அருமையா இருக்குது. இந்தக் காலத்துல நம்ம விக்ரமனை போல பொறுப்பான ஒருத்தனை பார்க்க முடியுமா? நாளைக்கு கண்ணாலம் ஆகி போனாலுமே அதெல்லாம் அவநூட்டுல உன்ர அக்கா மகாராணியோட்டம் இருப்பா. உனக்கும் சந்தோசம் தானே கண்ணு?” என அரசியைப் பார்த்து கேட்க,

 

“இதெல்லாம் என்னைய கேட்டா முடிவெடுத்தீங்க? இப்போ என்ன என்ர சந்தோசத்தை பத்தி பெருசா அக்கறை படுறீங்க” என்று எரிச்சலில் காய்ந்தாள்.

 

“அட அவனை கட்டிக்கப் போறவ உன்ர அக்கா தானோ! இதுக்கு எதுக்கு உன்னைய கேட்கோணும்? நீ அவசரப் படாத சாமி கொஞ்சம் பொறு. மொதல்ல அக்காளுக்கு கல்யாணம் முடியட்டும் அப்பறம் உனக்கு பாத்துப்போடலாம்” என்றார் ரங்கநாயகி ரகசியமாய்.

 

“இப்போ எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி யாரு அழுதா. எப்போப்பாரு ஆகாத நாயம் பேசிட்டு. எரிச்சலை கிளப்பாம எழுந்து போங்காத்தா” என்றுவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

 

“அட இப்போ என்ன சொல்லிப்புட்டேன்னு என்ர கிட்ட வள்ளுன்னு வர்றா? புள்ளைக்கு கொஞ்சமாச்சும் பொறுமை இருக்கானு பாரு எத்தனையை சொன்னாலும் இவுக அப்பாரு பரம்பரை பழக்கம் அப்படியே வருது. என்னதான் பண்ணுறதோ நாளைக்கு இவளை கட்டிட்டு எவன் என்ன பாடுபடப் போறானோ” என்று புலம்பியபடி சென்றுகொண்டார்.

 

அரசிக்கு இருந்த எரிச்சலில் யன்னலின் வழியே ரகசியமாய் எட்டிப் பார்த்து அவள் மேனி தொட்ட குளிர் காற்றும் அனலைக் கக்குவதுபோல் இருந்தது.

 

அருந்தமிழின் அறையில் விளக்கு எறிவது கண்டு எழுந்து மெல்ல அவளறைக்குச் செல்ல, அங்கு அவளோ அழுது முகம் வீங்கிப்போய் அமர்ந்திருந்தாள்.

 

“அக்கா!” என்று அவளருகில் சென்று அவள் கைமீது கைவைக்க, அவள் கையைத் தட்டிவிட்டாள் அருந்தமிழ்.

 

“உன்ர மேல கோபப்பட்டது தப்பு தான். என்ன மன்னிச்சிடு. ஆனா நீ பண்ணினது மட்டும் தப்பில்லையா? வீட்ல என்ன நடக்குதுன்னு நீ என்ரகிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கணும் தானே?” என அரசி சரியான கேள்வியை முன்வைக்க,

 

“அப்பா தான்…” என்று தயக்கமாய் ஆரம்பித்தாள் அருந்தமிழ்.

 

“நீ இப்படியே பண்ணிட்டு இருக்குற நால தான் மிஸ்டர். ஆறுச்சாமிக்கு என்னைய கண்டா சுத்தமா ஆக மாட்டிது. அப்பா சொல்லை கேக்கணும் தான் அதுக்காக இப்படியா. சப்போஸ் அவரு உனக்கு விருப்பமில்லாத ஒன்னை செய்ய சொன்னா அப்போ நீ செய்வியா?” என்றாள் அரசி தன் புருவம் உயர்த்தி.

 

“அப்பா சொன்னா கண்டிப்பா செய்வேன்” என்றாள் மறுநொடியே.

 

‘அவரு உனக்கு பண்ணுறது பூராம் நியாயமா தான் இருக்கு. எனக்கு பண்ணுறது அத்தனையும் தான் அநியாயமா இருக்கு’ என்று நினைத்து,

 

“உன்னை எல்லாம் திருத்த முடியாது தமிழ்” என பெருமூச்சிட, கசந்த முறுவல் அருந்தமிழிடம்.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

அருந்தமிழ் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவள். மென்மையே குடிகொண்டிருப்பதால் வன்மையாய் வாய்சொல்லும் கூட வெளிவராது.  தான் கோபத்தில் உதிர்த்த வார்த்தைகளால் தான் அக்கா வருத்தத்தில் இருக்கிறாள் என்றே எண்ணினாள் அரசி.

 

காலையில் தான் நிச்சயம் முடிந்திருக்க, அவள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டியவள். தான் தன் சுயநலத்தால் அவள் மகிழ்ச்சியையும் கெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று அரசிக்குத் தோன்றியது.

 

சில நொடி மௌனத்திற்கு பின்,

 

“உ.. உனக்கு மச்சானை பிடிச்சிருக்கா?” என அரசி தயங்கியபடி வினாவினாள்.

 

சில நொடி மௌனத்திற்கு பின்,

 

‘ஆமாம்’ என தலையசைத்தாள் அருந்தமிழ்.

 

இதுவரை அடித்த சுனாமி எல்லாம் என்ன இப்போது தான் அரசிக்கு அண்ட சராசரமே மொத்தமாய் வெடித்து சிதறுவது போல் இருந்தது. அதற்கு மேல் அங்கிருக்காது,

 

“சரி தமிழ் நீ ரெஸ்ட் எடு” என்றுவிட்டு கிளம்பிக் கொண்டாள்.

 

அன்றைய நாளிற்குப் பின் நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் உன்னிப்பாய் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள் அரசியும். விக்ரமன் அவனாக இதுவரையில் எதுவும் செய்யவில்லை. எதையும் தடுக்கவில்லை. அரசி கொண்ட நம்பிக்கை தான் நாள் போகப் போக குறைந்துகொண்டே வர, பெரியதோர் அகச்சுழலில் சிக்கித் தவித்தாள்.

 

தான் அருந்தமிழுக்கும் விக்ரமனுக்கு இடையில் இடையூறாக இருக்கிறோமோ என்றே எண்ணம் வர, உள்ளுக்குள் பெரிதாய் வலித்தது. அவர்களது வழி சரியாக இருந்து தான் வழிமாறி நிற்பதுபோல் இருந்தது.

 

அப்படி அவர்களது வழி சரியாக இருப்பின் தன் வழியை மாற்றிக்கொள்ளும் எண்ணத்திற்கு வந்திருந்தாள்.

 

உன் வழியை மாற்றிக் கொள்ளவது அவ்வளவு எளிதான காரியமா? முடியுமா உன்னால்? அவனுக்காக எதையும் இழப்பாய் அவனை எதற்காகவும் இழப்பாயா? என கேள்விகளால் துளைத்தது மனம்.

 

ஒருவேளை இதுதான் விதி என்றால் அதை தன்னால் மாற்ற முடியுமா என்ன? என்று மதிகொண்டு பதிலைக்க,

 

முயன்று பார்க்கிறாயா? என்றது மனம்.

 

முயல்வதால் தனக்கு என்ன பதிப்பு ஏற்பட்டாலும் தாங்கிக் கொள்வேன். தன்னால் தன்னவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமேயானால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது என மதி அறிவுறுத்த,

 

யாருக்கும் பாதகம் விளைவிக்காது உனக்கும் பாதகம் விளையாது இதில் இருந்து விடுபடும் வழியை நீதான் கண்டறிய வேண்டும் என்று முடித்தது மனம்.

 

“என்ன கண்ணு கெடைச்சுதா?” என்ற நாயகியின் குரலில் நினைவுக்கு வந்தவள்,

 

“இல்லைங் ஆத்தா. இனி கிடைக்கும்னு நம்பிக்கை இல்ல” என்றாள் இருபொருள் பட.

 

“அதுக்குள்ள அதைய ஆரு தூக்கிட்டு போயிருப்பா? சரி சாதாரண மண் சிலை தானே விடு வேற வாங்கிக்கலாம். நீ உள்ளார வா” என, உள்ளே வந்தவள்,

 

“எத்தனை சிலை வாங்கினாலும் அது போல வறாதுங் ஆத்தா” என்றாள் பெரிதாய் உணர்ந்து.

 

“எதுவும் வேண்டாம்னு முடிவெடுக்குறதுக்கு முன்னாடி யோசிக்கோணும் கண்ணு. அது நம்மள விட்டுப் போனப்பறம் ஐயோ போச்சேன்னு பொலம்பக் கூடாது” என்றுவிட்டு அவர் வேலையை கவனிக்க, அரசி அப்படியே நின்றிருந்தாள்.

 

சிரித்தது சிந்தை!

 

சிந்தித்தது சித்தம்!

 

மனதிற்கும் மதிக்கும் நடுவில் மதில்மேல் பூனைபோல் நின்றிருந்தாள் அரசி.

 

 

வாசம் வீசும்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!