மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் 18.1
மண்வாசம் 18 :
ஏமாற்றம், வெறுமை, தோல்வி, எதிர்பார்ப்பு என அவரவர் ஒரு உணர்வை உள்ளத்தில் சுமக்க, அவர்களை சுமந்து கடந்தது காலம்.
Advertisement
ஆறுச்சாமியும் முத்துச்சாமியும் ஊரார் அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் வைத்து அழைத்துக் கொண்டிருந்தனர்.
அருந்தமிழுக்கும் அரும்புக்கும் ஒரே நாளில் திருமணம் என்றிருக்க, ஊரில் உள்ள பெரிய வீடுகளில் ஒரே நேரத்தில் விசேசம் வந்ததில் எங்கு செல்வதென்று உற்றார் உறவினர் தான் புலம்பலுக்கு ஆளாகினர்.
Advertisement
Advertisement
இரு வீட்டிலும் மாங்கல்யத்திற்கு பொன் கொடுக்கப்பட்டு, நன்மையிலும் தீமையிலும் நாம் இனிமேல் ஒருவருக்கொருவர் பங்கு கொள்ள வேண்டும் என்ற குறிப்பில் உப்பும் சர்க்கரையும் பரிமாறிக் கொள்ளப்பட்டிருந்தது.
குலசேகரன் இருக்கும் தைரியத்தில் அரும்பு அனைத்தையும் நம்பிக்கையோடு எதிர்கொண்டாள். அவள் பக்கம் எந்தவித எதிர்ப்பும் இல்லாததே வேலாத்தாளிற்கும் சரோஜினிக்கும் போதுமானதாய் இருக்க, காரியம் முடியும் வரை அடக்கி வாசிக்க முடிவு செய்து சுமூகமாய் காய்களை நகர்த்திக் கொண்டிருந்தனர். தேவராஜனோ தன் கைக்கு பல ஏக்கர் சொத்துக்கள் வரப்போகும் கனவில் மிதந்து கொண்டிருந்தான்.
Advertisement
மரகதவள்ளி மட்டும் சமுத்திரம் சூழப்பட்ட தனித்தீவில் வசிப்பவர் போல் இருந்தார். அரும்பின் நிச்சயத்திற்கு பின் இன்றுவரையில் முத்துச்சாமியோடு அவர் வாய் திறக்கவில்லை. கணவரை மீறி பேசமுடியாது என்ற நிலையில், மௌனத்தை ஆயுதமாய் கையில் எடுத்துக் கொண்டார். மகள் கொடுத்த நம்பிக்கையால் மட்டுமே நிலைகுலையாது நகர்கின்றது அவரது நாட்கள்.
தன் மூத்த பேத்தியின் திருமணம் குறித்து பல கனவுகளை கண்டிருந்தார் ரங்கநாயகி. பார்த்து பார்த்து பட்டாடைகள் எடுப்பதும் தங்க ஆபரணங்கள் வாங்குவதுமாய் இருந்தார். தாய் இல்லா பிள்ளை, அவளுக்கு செய்யும் சீர் வரிசைகளில் எவ்விதக் குறையும் வந்துவிடக் கூடாது என்பதில் அத்தனை கவனம் அவருக்கு.
அருந்தமிழோ எதிலும் கவனமின்றி கவலையில் உழன்றுகொன்டிருந்தாள். இவ்வீட்டைப் பிரியும் கவலை என்று மற்றவர் எண்ணியிருக்க, அவளோ பெரிதாய் ஒரு குற்றவுணர்வின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள்.
பள்ளிக்கு விடுப்பு எடுக்குமாறு ஆறுச்சாமி கூறிவிட, பள்ளி முதன்மையிடமும் சொல்லிக்கொண்டு வந்துவிட்டாள், இனி திருமணம் முடிந்து தான் பணிக்கு திரும்புவாளென்று. இடைப்பட்ட நாட்களில் மாறனை சந்தித்திருக்கவில்லை. மனம் சலனத்தை கட்டுக்குள் கொண்டு வந்ததாய் அவள் நினைத்திருக்க, நேற்று அவனைக் கண்டதுமே கட்டுக்கள் எல்லாம் காணமல் போயிருந்தது.
அனைவருக்கும் அழைப்பிதழ் வைத்துவிட்டு வர கொஞ்சம் தாமதமானதில் அவள் செல்லும் பேருந்து சென்றிருந்தது. அடுத்த பேருந்திற்காக காத்திருந்தபடி சாலையில் நின்றிருக்கையில் தான் சிறார்களை அழைத்துப் போக வந்த மாறனை சந்திக்கும்படி நேர்ந்தது.
[the_ad id=”6605″]
அவனை ஏறிட்டும் பார்க்க முடியவில்லை. அப்போதும் தந்தையின் கௌரவம் மட்டுமே பெரிதாய் தெரிய, அது குலைந்துபோக எவ்வகையிலும் தான் காரணமாய் இருந்துவிடக் கூடாது என்ற எண்ணம் மட்டும் அவளுக்கு.
“ஏன்டா உங்க சிம்ரன் டீச்சர் அங்க நிக்குறாங்க” என்று மாறன் கேட்பது அவள் காதிலும் விழுந்தது.
“டீச்சர் வர்றதுக்குள்ள பஸ்சு போய்டுச்சு ண்ணே” என கவின் பதிலளிக்க, மாறன் தன்னை நோக்கி வருவது தெரிய படபடத்தது அருந்தமிழின் இதயம்.
“அடுத்த பஸ் வர ரொம்ப நேரமாகுங்க தமிழ். அதுவரைக்கும் தனியா நிக்க வேண்டாம். வாங்க நான் கொண்டு போய் விடுறேன்” என்று சொல்ல, கண்கள் வேறு கலங்கி அவளையும் கலங்கிப் போக வைத்தது.
பதிலின்றி தமிழ் நின்றிருக்க,
“முகத்தை பாத்து கூட பேச முடியாத அளவுக்கு நான் அப்படி என்ன உங்களுக்கு செஞ்சுட்டேன்” என சாதாரணமாய் அவன் கூறினாலும் அதன்பின் இருந்த வேதனையை அவள் உணர்ந்தாள். மறுநொடி சட்டென அவன் முகம் பார்த்திருந்தாள்.
தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிதர்சனத்தை மனதில் நிறுத்தி, கையிலிருந்த அழைப்பிதழில் ஒன்றை அவனுக்கு அளிக்க,
“எங்க வீட்லையே இருக்குங்க. உங்க அப்பா எங்க வீடு தேடி வந்து குடும்பத்தோட வரும்படி அழைச்சிட்டு தான் போனார்” என இன்முகமாய் கூறியவன்,
“கவலைப்படாதீங்க நான் கட்டாயம் வருவேன்” என்று சொல்ல, அதற்குமேலும் பொறுக்க முடியவில்லை அருந்தமிழால்.
“போதும் மாறன் என்னைய கொல்லாதீங்க இப்படி” என ரோடென்றும் பாராது கத்தியவள்,
“உங்கனால மட்டும் எப்படி இப்படி இருக்க முடியுது. என்ர மேல கோபமே வரலையா? திட்டுங்க ஏமாத்துக்காரின்னு சொல்லுங்க. ப்ளீஸ்!”
கத்தலில் ஆரம்பித்து கதறலில் முடித்தவள் இரு கரம் கூப்பி மன்னிப்பைக் கோரினாள்.
“தமிழ்!” அதிர்ந்தே போனான் அவள் செயலில். சட்டென அவள் கரங்களை பிரித்தெடுத்தான்.
“நீங்களா விருப்பப்பட்டு எந்த முடிவுக்கும் வரலைன்னு எனக்கு தெரியும்ங்க தமிழ். சூழ்நிலை உங்களை அப்படி முடிவெடுக்க தள்ளியிருக்கு. உங்க மேல எதுக்கு கோபப்படணும்? நீங்களே மனவுளைச்சல்ல இருப்பீங்கனு தெரியும்ங்க” என்ற அவன் புரிதலில், அவள் நெஞ்சம் தான் புண்ணானது.
“இதுவரைக்கும் நான் மனசறிஞ்சு யாருக்கும் எந்த கெடுதலும் செஞ்சதில்லங்க. எனக்கு ஏன் இப்படி ஒரு நிலைன்னு தெரியலை. அப்பா நம்பிக்கையை என்ரனால எப்போவும் உடைக்க முடியாதுங்க. அவர் ஒடஞ்சு போயிருவார். அம்மா இல்லாத குறையே தெரியாம எப்படி வளர்த்தார்னு தெரியுங்களா?” என்றவள் கண்களை துடைத்துக் கொண்டு,
“அவரு வாக்கை காப்பாத்த நான் எதை வேணாலும் இழப்பேன்ங்க. எனக்கு என்ர சந்தோசத்தை விட என்ர அப்பா சந்தோசம் தான் முக்கியம். என்ர சுயநலத்துக்காக உங்களை தெரிஞ்சே இந்த அளவுக்கு காயப்படுத்துறேன். வேற வழியும் என்ர கிட்ட இல்லைங்க. என்னை தயவு செஞ்சு மன்னிச்சிருங்க. மறந்திருங்க. நான் உங்களுக்கு என்னிக்கும் தகுதியானவ இல்லங்க மாறன்” தெளிவாய் சொன்னாள்.
“சில நேரங்கள்ல ரொம்ப யோசிக்கக் கூடாதுங் தமிழ். ஒன்னு மூளை சொல்லுறதை கேட்கணும் இல்ல மனசு சொல்லுறதை கேட்கணும். மூளை நிதர்சனத்தை சொல்லும் மனசு நம்ம எதிர்பார்ப்புகளை சொல்லும். நீங்க ரெண்டையும் கேட்டுட்டு இருக்கீங்க. அதான் நிம்மதி இல்லாம தவிக்குறீங்க. ஏதோ ஒன்னை மட்டும் கேளுங்க தெளிவு கிடைக்கும்” அவள் தெளிவில் சிறு திருத்தம் செய்தான்.
“எதை கேக்கணும்னு நினைக்குறீங்க?”
“என்னைய கேட்டா மனசு சொல்லுறதை தான் கேக்க சொல்லுவேன். ஏன் தெரியுங்களா?”
அருந்தமிழ் அவன் பதிலுக்காக காத்திருக்க,
“அதான் உங்களுக்கு என்ன வேணும்னு உண்மையை சொல்லும்” என்ற உண்மையை உரைத்தான்.
‘அது நீ தான் வேண்டும் என்கிறதே’ என்றது அவள் மனம் மௌன மொழியில்.
“எது கெடச்சாலும் சந்தோசமா இருக்கலாங்க. ஆனா நீங்க எதிர்பார்க்குறது கெடச்சா தான் நீங்க நிம்மதியா இருப்பீங்க” என்றவன் அவன் கைபேசி எண்ணை அளித்தான்.
அவள் மாறனையே பார்த்திருக்க,
“சேவ் பண்ணிக்கோங்க. சீக்கிரமாவே உங்களுக்கு தேவைப்படும்” என்றுவிட்டு சற்று தள்ளி நின்று கொண்டு பேருந்து வருகிறதா எனப் பார்த்திருந்தான். புல்லெட்டின் சத்தம் கேட்க இருவரும் அத்திசையில் திரும்பிப் பார்க்க வந்தது விக்ரம பாண்டியன்.
[the_ad id=”6605″]
“இங்க என்ன பண்ணுற தமிழ்?” என உரிமையாய் வந்தது அவன் குரல். குரல் அவளுக்கானது தான், ஆனால் அவனது பார்வை மட்டும் நன்மாறனிடம் நிலைபெற்று நின்றிருந்தது.
“வர்றதுக்குள்ள பஸ் போயிடுச்சுங் மச்சா” என்று தமிழ் தயக்கமாய் சொல்ல
“சரி வா போலாம்” என்றழைக்க மாறனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு விக்ரமனோடு வண்டியில் சென்று அமர்ந்து கொண்டாள்.
அந்நொடியில் மாறன் மனம் எப்படி துடித்திருக்கும் என்று எண்ணி எண்ணித் துடித்துக் கொண்டிருப்பதே தமிழின் நிலையாய்ப் போனது.
அரசியோ தன் அக்காவின் திருமண வேலைகளை எல்லாம் முன்னின்று கவனித்துக் கொண்டிருந்தாள்.
இரண்டு நாட்கள் முன்னர் யாரோ ஒரு பெரியவர் அவள் தந்தையிடம்,
“என்ன ஆறுச்சாமி உனக்கு ஒரு மவன் இருந்திருந்தா எல்லா வேலைகளையும் அவன் இழுத்துப் போட்டு பார்த்திருப்பான் இப்போ பாரு நீ தனியா அலையோணும்” என்று கேட்க, யன்னலின் பின்புறம் இருந்த அரசியின் செவிகளையும் அது எட்ட, தன் தந்தையின் பதிலுக்காக காத்திருந்தாள்.
அவரோ,
“மவன் இல்லையேன்னு நான் இதுவரைக்கும் வருத்தப்பட்டதே இல்லைங் ப்பா. எனக்கு ரெண்டாவதா பொறந்தது மவனே தானாச்சு. கரண்டு பில்லு கட்டுறதுல இருந்து கல்யாணத்துக்கு மண்டபம் புக் பண்ணுற வரைக்கும் வீட்டுல இருந்தபடியே எல்லார்த்தையும் வேங்கையே பார்த்துப் போடுறா. பத்திரிக்கை வைக்குறது மட்டும்தேன் என்ர வேலை” என்று சொல்லி புன்னகைத்தவர் மேலும் அவளைப் பற்றி பெருமையாய் பேசிக் கொண்டிருந்தார்.
வீட்டில் குறைகளைச் சொல்லி கண்டித்தாலும் வெளியே நிறைகளைச் சொல்லிப் பெருமைப்படுவது தான் பெற்றோர் குணம். தன் தந்தை வாய்மொழியில் அனைத்தையும் கேட்கக் கேட்க, தான் அவரை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணம் வந்தது அவளுக்கு.
அப்பெரியவர் சென்றுவிட உள்ளே வந்த ஆறுச்சாமியின் முன் சென்று நின்றாள் அரசி. அவளைக் கண்டதும் உடனே அவர் தன் முகத்தை விரைப்பாய் வைத்துக்கொண்டு உள்ளே செல்ல, லேசான புன்னகை வந்தது.
அந்நேரம் வாசலில் புல்லெட்டின் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க விக்ரமனோடு அருந்தமிழ் வந்திறங்கினாள்.
“அட எங்க காலத்துல எல்லாம் கலியாணம் முடியிற வரைக்கும் ஒருத்தர் ஒருத்தர் பாத்துக்கக் கூடாது கண்ணு. நீங்க என்னடானா வண்டில ஒன்னா வந்திறங்குறீங்க” என நாயகி கேட்க, விக்ரமன் புன்னகையோடு நாயகிக்கு தலையசைத்துவிட்டு செல்ல புன்னகை வந்த தடம் தெரியாது மறைந்தது அரசிக்கு.
இருதலைக் கொல்லி எறும்பின் நிலை தான் அவளுக்கும். அவளைக் குறித்து அவளே பெரிதாய் சிந்தனை வயப்பட்டிருந்தாள்.
எப்போதும் தைரியம் அரசியின் ஒரு அங்கம். சில நேரங்களில் அசட்டு தைரியம் இருக்கும். சில நேரங்களில் அசாத்திய தைரியம் இருக்கும். இப்போது அது எங்கு சென்றது என்று தெரியாது அதைத் தேடி எடுக்கும் நிலையில் இருந்தாள்.
பெருங்கற்கள் கொண்டு கட்டப்பட்டிருந்த அணையில் இருந்து ஒவ்வொரு கற்களாய் தளர்ந்து கொண்டு வர, அவை என்று மொத்தமாய் தகர்ந்து அணையின் கரை உடைத்து, வெள்ளம் பெருக்கெடுக்கும் என்று தெரியாது நாட்கள் நகர்ந்திருந்த நிலையில், வந்து நின்றது அந்நாள்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் வேலுச்சாமி என்ற மாமனிதரை இம்மண்ணானது தனக்குள் போட்டு பாதுகாத்து தன் மைந்தனாக்கிக் கொண்ட நாள்.
நேரம் அதிகாலை ஐந்து மணி!
விடியல் தொட்டிருக்கவில்லை வானம். தன் தந்தையின் நினைவிடத்தில் நின்றிருந்த விக்ரமனின் மனமெங்கும் கனம் மட்டுமே.
அதே நேரத்தில் ஆறுச்சாமியின் இல்லத்தில் அவரும் வேலுச்சாமியும் இணைந்திருந்த புகைப்படத்தை கையில் வைத்துப் பார்த்திருந்தார் ஆறுச்சாமி.
அதில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கைபோட்டபடி நின்றிருக்க, அவர்களுக்கும் பின்னால் இரு காங்கேயம் காளைகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டி இருந்தது. இருவரும் ரேக்ளா பந்தயத்தில் வென்றபோது எடுத்த புகைப்படம் அது.
ஆசையாய் கைகள் அப்புகைப்படத்தை வருட, எத்தனை தடுத்து நிறுத்தியும் தடைகளைக் கடந்து கடந்த காலம் தொட்டு நின்றது அவரது மனம்.
கிராமம் என்றாலே கருத்தில் நிற்பது பழமையும் பாசமும் தான். அந்த பாசம் மனிதர்களுக்கு இடையில் மட்டும் இழையோடி நின்றுவிடாது. எல்லா உயிர்களின் ஊடேயும் பாயும்.
[the_ad id=”6605″]
அதிலும் மாடுகள் என வந்துவிட்டால், வளர்த்த பாசம் பிள்ளை பாசத்திடம் தோற்றுவிடாது எந்த நிலையிலும். திருவிழா, திருமணம் எல்லாம் ஒரு சில மணி நேரங்களுக்கு மட்டும் தான். அதற்கு மேல் அவர்களுக்கு எந்த கொண்டாட்டமும் இருக்காது. வீட்டிற்கு போக வேண்டும் என அடம் செய்வர்.
“மாடு கட்டிக் கெடக்கு. நேரங்காலமே போய் அவுத்து விடோணும்” என்பது தான் அவர்கள் பதிலாய் இருக்கும்.
அவைகளுக்கு ஒன்றென்றால் வளர்ப்போர் உள்ளம் பதறித் துடித்துப் போய்விடும். வாழ்வாதாரமே அவை தானே! ஊணையும் உயிரையும் பாலாக்கி பசிபோக்கி வாழவைப்பவை. அவை நோய்வாய்பட்டு உயிருக்கு போராடும் தருணத்தை எப்பேர்பட்டவாராலும் தாங்கிக்கொள்ள இயலாது.
சில காலமாக அவ்வூரில் கால்நடைகளுக்கு பரவலான நோய்கள் தாக்க, அனைத்தும் தீவனம் உட்கொள்ளாது சிரமப்பட்டு வந்தன. கால்நடை மருத்துவர் கிடைப்பது அரிதினும் அரிதாய் பார்க்கப்பட்டது. கடைசிக்கு கம்பவுண்டரை வைத்து வைத்தியம் பார்த்து வர, நோய் தொற்று மற்ற மாடுகளிடையேயும் வேகமாய் பரவத் துவங்கியது.
அதிலும் வெக்கை நோய் ஒரு கொடிய தொற்று நோய். விரைவில் பரவி பெரும் சேதத்தை விளைவிக்க வல்ல அந்நோயின் தாக்கத்தாலும், சரியான சிகிச்சை இல்லாமையாலும் மொத்த கால்நடைகளும் செத்து மடிந்து கொண்டிருந்தது.
ஒன்றிரண்டு மாடு வைத்திருப்போருக்கு இழப்பென்றால் மாட்டுப் பண்ணையே வைத்திருப்போர் பற்றி சொல்லத் தேவையில்லை. ஈடுகட்ட முடியாத பேரிழப்பு அது.
ஒரு நாட்டிற்கு கிராமங்கள் முதுகெலும்பு என்றால் அக்கிராமங்களுக்கு விவசாயிகள் முதுகெலும்பு. விவசாயத்துக்கு உறுதுணையாய் இருக்கும் ஆநிரைகளே விவசாயிகளுக்கு முதுகெலும்பு. அவை அனைத்தும் கண் முன்னரே மடிந்து மாய்வதைக் காணச் சகியாது ஒட்டுமொத்த கிராமமும் கண்ணீர் வடித்திருந்த தருணம் அது.
“மொத்தமா தூக்கிக் கொடுக்கவா இப்படி பெத்த பிள்ளயோட்டம் பாத்து பாத்து வளத்தேன்? ஆறுச்சாமி! பாருடா, எத்தனை ரேக்ளாவ பாத்திருக்கும் இந்த காளைக ரெண்டும், இன்னிக்கு குத்துயிரும் கொலையுயிருமா கெடக்குதுகளே” என வாயில் நுரை பொங்க சாய்ந்து கிடந்த காளைகளைக் கண்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார் வேலுச்சாமி.
ஆம்! அடுத்த தலைமுறை பார்க்கும் வயதில் இருந்த அந்த ஆண்மகன் கண்ணீர் விட்டிருந்தார். கதறிக் கொண்டிருந்தார்.
பெற்ற பிள்ளையை தூக்கிக் கொடுத்ததைப் போல துக்கம் ஒன்று அவரை வதைத்துக் கொண்டிருந்தது.
ஆறுச்சாமியும் தனக்கு தெரிந்த கைவைத்தியம் எல்லாம் செய்து காளைகளை எழுப்ப முயற்சி செய்து பெரிதாய் தோற்றுப்போய் நின்றிருந்தார். காற்றில் சீறிப் பறக்கும் அதன் கால்கள் எல்லாம் கட்டுண்டு கிடப்பதுபோல் இருக்க, அவை எழுந்து விடாதா எனப் பார்த்திருந்தார்.
“மனசு கெடந்து அடிச்சுக்குது. நமக்கு ஏதாவது வந்தா கூட என்னன்னு சொல்லி வைத்தியம் பாத்துக்கலாம் வாயில்லா ஜீவன் அதுக என்ன பண்ணும்? அதுக கெடந்தது கஷ்டப்படுறதை என்ர கண்ணால பாக்க முடியலையே” என வேதனிக்க, முத்துலட்சுமி தன் கண்ணீரை கட்டுப் படுத்திக் கொண்டு தன் கணவரது தோளை அழுந்தப் பற்றினார்.
அவரை நிமிர்ந்து பார்த்தவர்,
“எத்தனை கைவைத்தியம் பண்ணியும் கேக்கலையே. இப்படி ஒன்னொன்னா நம்மள விட்டு போகுதுகளே. உன்ர தலை தட்டுப்பட்டா உன்ர பின்னாலையே வருங்களே இப்போ எப்படி கெடக்குதுன்னு பாரு லட்சுமி” என, அழுகையை அடக்க முடியாது முந்தானையால் வாயை பொத்திக்கொண்டு உள்ளே சென்றுகொண்டார் முத்துலட்சுமி.
அந்நேரம் விக்ரமனின் வண்டி சத்தம் கேட்டது கடைசி நம்பிக்கையாய்.
“என்னாச்சு விக்ரமா வெளியூர் டாக்டரை கூட்டியாறேன்னு போனீங்களே” என்று பதற்றமாய் வேலுச்சாமி அவன் அருகில் வர, அவன் தலையை தாழ்த்திக் கொண்டு நின்றிருந்தான்.
“என்னாச்சு சேகரா டாக்டர் எங்க?” என குலசேகரனிடம் கேட்க,
“அப்பா! இருந்த அந்த ஒரு டாக்டரும் ரெண்டு மாசத்துக்கு முன்னாலையே ஊரை காலி பண்ணிட்டு போய்ட்டாருங்க ப்பா” என்றதில் மொத்தமாய் தளர்ந்து போய்விட்டார் வேலுச்சாமி.
அரும்பாடு பட்டு வளர்த்த பசுக்களும் காளைகளும் கண் முன்னே ஒவ்வொன்றாய் தன் உயிரை துறந்து கொண்டிருந்தது. அனைத்தையும் தங்களது நிலங்களிலேயே குழிதோண்டிப் புதைத்தனர். பெரிய துக்கம் நிகழ்ந்திருக்க அதை ஊரார் அனைவரும் வந்து விசாரித்துச் செல்ல, வேலுச்சாமியின் இல்லமே காளைகளின்றி களையிழந்து காணப்பட்டது.
‘அம்மா’ என்ற சப்தம் இல்லை. சலங்கைகள் ஒலிக்கவில்லை. கழுத்தில் கட்டியிருந்த மணிகள் அசையவில்லை. இத்தனை ஆண்டுகளாய் உடனிருந்தவர்கள் எல்லாம் இல்லாது வெறுச்சோடிக் காணப்பட்டது கட்டுத்தரை. அந்த வெறுமையே வேலுச்சாமியை வெகுவாய் வாட்டியது.
“இன்னும் அதையே நெனைச்சிட்டு இருந்தா எப்படிங்க? வந்து சாப்பிடுங்க” என முத்துலட்சுமி அழைக்க, மறுத்துவிட்டார் வேலுச்சாமி.
“நேத்துல இருந்து அன்னந்தண்ணி ஆகாரம் ஒண்ணுமில்ல. போ வேலு போய் சாப்பிடு” என ஆறுச்சாமி சொல்ல
“ஆகாரம் கொடுத்ததெல்லாம் தான் அடியோட போயிடுச்சே” முழு விரக்தி அவரை முற்றுகையிட்டிருந்தது.
“விக்ரமனும் சேகரனும் கூட சாப்பிடலைங்க நீங்க சாப்பிட்டா தான் சாப்பிடுவானுக” என முத்துலட்சுமி சொல்லவும் இருவரையும் பார்த்தவர்
“நீங்க ஏன் சாப்பிடலை? வாங்க ரெண்டு பேரும்” என அருகே அழைத்து அவர்களோடு அவருக்கும் பரிமாறச் சொல்லி கொஞ்சமாக உண்டார்.
ஆருயிர் நண்பன் உணவருந்திய பின்னரே ஆறுச்சாமி நிம்மதியாய் அவர் இல்லம் திரும்ப, மறுநாளே அவரை அப்படி ஒரு நிலைக்கு அவர் நண்பன் தள்ளுவார் என்று கனவிலும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை.
