Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manathodu Manvaasam

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 19.2

 

றுச்சாமியின் இல்லம்!

 

விடிந்ததும் அவ்வில்லத்திலேயே திருமணம் அதன் பின் மண்டபத்தில் வைத்து வரவேற்பு என்றிருக்க, தற்போது வீடெங்கிலும் உறவுகள் வழிந்து நிரம்பியிருந்தது. காலையில் இருந்து ஆளுக்கொரு வேலைகளை இழுத்துப் போட்டு செய்து அனைத்தையும் தயார் நிலையில் வைத்துவிட்டு சற்றே கண்ணயர்ந்தனர்.



Advertisement

 

அவ்வீட்டினர் மட்டும் உறக்கத்தை முற்றிலும் தொலைத்திருந்தனர்.

 

Advertisement

ஆறுச்சாமியும் ரங்கநாயகியும் இதுநாள் வரை சீராட்டி பாராட்டி வளர்த்த பிள்ளையை பிரியும் சோகத்தில் மூழ்கியிருக்க, அருந்தமிழோ தன் வாழ்வில் இன்னும் என்னென்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்ற கவலையில் இருந்தாள்.

Advertisement

 

“என்ன கண்ணு தூங்கலையா?” என பிரம்பு நாற்காலியில் வீற்றிருந்த மகனிடம் வந்து நின்றார் நாயகி.

 

Advertisement

“இல்லைங் ம்மா” என  சற்றே நிமிர்ந்து அமர,

 

“ஆத்தா ஆத்தான்னு ரெண்டும் என்ர பின்னாலையே சுத்திகிட்டு இருக்குங்க. இனி ஆரு அப்படி கூப்பிடுவாங்க. இதுக மொகத்த பாக்காம எப்படி இருக்கப் போறன்னே தெரியல. சின்னவ இத்தனை வருஷம் கழிச்சு இப்போத்தான் வந்திருக்கா, அவ வந்த நேரம் இப்போ பெரியவ வீட்ட விட்டுப் போகப் போறா. ரெண்டும் கொஞ்ச நாள் ஒட்டுக்கா இருந்திருக்கலாம்” என நாயகி சொல்ல,

 

“அதுக்கு என்னங் ம்மா பண்ணுறது. நம்ம தமிழுக்கும் வயசு போகுதல்லோ காலா காலத்துல நம்மட கடமையை செஞ்சு தானே ஆகோணும். என்னிக்கா இருந்தாலும் இன்னொரு வீட்டுக்கு வாழப்போற புள்ளைக, காலம்பூரா நம்ம கூடயேவா வெச்சுக்க முடியும்” என்றார் ஆறுச்சாமி.

 

பெண் பிள்ளையை பெற்ற தகப்பனுக்கே உரிய கவலை. பொழுது விடிந்தால் தன் மகள் என்ற ஸ்தானத்தில் இருந்து இன்னொரு வீட்டின் மருமகள் என்ற ஸ்தானத்தை பெறப் போகிறாள். சந்தோசமும் வருத்தமும் ஒருசேர போட்டி போட்டுக் கொண்டிருந்தது.

 

“இதுக வளராமையே இருந்திருக்கலாம்னு தோணுது. இப்போ பாரு கலியாணம் பண்ணி கொடுக்க வேண்டியாதா இருக்கு. எங்கையோ நல்லா இருந்தா சரி. அதுக சந்தோசமா இருக்குறதை கண்ணுல பாத்துட்டு போய் சேர்ந்துறோனும்” என்ற நாயகி,

 

“நாளைக்கு நீ கீன கண்ணுல தண்ணி விட்டுறாதப்பா நம்ம தமிழு பாத்தா தாங்க மாட்டா. அவளை சந்தோசமா விக்ரமன் கூட அனுப்பி வைக்கோணும்” என கண்களை துடைத்துக் கொண்டு சொல்ல மெல்ல தலையசைத்தார் ஆறுச்சாமி.

 

“செல்லாண்டியம்மா நீ தான் துணை இருக்கோணும்” என குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு,

 

“கொஞ்ச நேரம் தூங்கு கண்ணு” என்றுவிட்டு நாயகி சென்றுகொள்ள, அறுச்சாமியும் அவரறைக்குச் சென்றுகொள்ள, அதுவரையில் தூணின் மறைவில் நின்றிருந்த அருந்தமிழ் தன் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு மாடிப் படிகளில் ஏறினாள்.

 

நாட்கள் குறையக் குறைய அவள் அகத்தில் குற்றவுணர்வு அதிகரித்துக் கொண்டே இருந்தது. இப்போது நாட்கள் கரைந்து வெறும் நாழிகைகளே மிச்சம் என்ற நிலையில் அவள் மனமே அவளை உயிரோடு வதைத்தது.

 

மாறனுக்கும் உண்மையாய் இல்லை. உன் தந்தைக்கும் உண்மையாய் இல்லை. விக்ரமனுக்கும் உண்மையாய் இல்லை. ஏன் உனக்கே நீ உண்மையாய் இல்லை. உயிரற்ற கௌரவத்தைக் காக்க உயிருள்ள எத்தனை பேரின் வாழ்க்கையில் விளையாடுகிறாய். ஒரு சூழ்நிலையை சரியாய் கையாளத் தெரியாதவள் படித்து பட்டம் வாங்கி என்ன பயன்?  என்றெல்லாம் அவளுள் ஒலித்துக் கொண்டிருந்தது பல குரல்கள்.

 

‘மாறனை தூக்கி போட்டுட்டு விக்ரமன் கையாள தாலி கட்டிக்க முடியுமா உன்ரனால?’ என்றது மனம் இறுதியாய்.

 

‘இப்போ இந்த கேள்விக்கு அவசியமே இல்ல. விடிஞ்சா கல்யாணம் இப்போ உன்ரனால எதையும் மாத்த முடியாது’ என்றது அறிவு.

 

[the_ad id=”6605″]

 

 

 

‘உன்ர வாழ்கையை மட்டும் நீ பணையம் வைக்கல. உன்னோட சேர்த்து மாறன், விக்ரமன் ரெண்டு பேரோட வாழ்கையும் இதுல அடங்கி இருக்கு’

 

‘குடும்ப கெளரவம் உன்ர அப்பா மானமும் மருவாதையும் கூட அடங்கி இருக்கு’ என மனமும் மூளையும் போட்டி போட

 

“ஐயோ இப்போ நான் என்ன தான் செய்யட்டும்” என தளர்ந்துபோய் கீழே விழுந்தாள் அருந்தமிழ்.

 

மன அலைகள் அவளை தன்னுள் போட்டு பந்தாடியது. சில விடயங்கள் உன் கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்டது என்று அவளுக்கு புரியவைக்க முயன்றது. மூச்சு முட்டுவதுபோல் இருந்தது.

 

“மனசு சொல்லுறதை கேளுங்க அதுதான் உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லும்” என்ற மாறனின் குரல் மனதில் ஒலிக்க, திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

 

“நீங்களே என்னைய தேடி வருவீங்க தமிழ் எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றானே அன்று. ஆனால் அவள் இதுவரையில் அவனிடம் செல்லவில்லையே. செல் செல் என்று அவள் செல்கள் அனைத்தும் அரற்றியது.

 

‘இப்போதும் எதுவும் கெட்டுப் போகவில்லை சென்றுவிடு அவனிடமே’ என்றது மனம்.

 

ஆனால் செல்லும் மார்க்கத்தை அவளுக்கு தெரிவிக்கவில்லை அறிவு. திக்கற்றவள் போல் தரையில் கிடந்தாள். யாரிடமாவது மனபாரத்தை இறக்கி வைக்கவேண்டும் போல் இருந்தது. இப்படியே தொடர்ந்தால் இனியும் இதயம் இயங்காது என்று புரிய, கண்களைத் துடைத்துக் கொண்டு அரசியைக் காண அவளறைக்குச் சென்றாள்.

 

விளக்கை ஒளிரவிட்டுப் பார்க்க, அங்கு அரசி இல்லை. இந்நேரத்தில் எங்கு சென்றிருப்பாள் எனப் புரியாது பார்த்திருந்தாள் அருந்தமிழ்.

 

தென்னத் தோப்பின் நடுவே நாற்புறமும் தூண்களால் தாங்கப்பட்டு, தரை முழுதும் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டு அதன் மையத்தில் அமைக்கப் பட்டிருந்தது வேலுச்சாமியின் நினைவிடம்.

 

நினைவிடத்தின் முன் மண்டியிட்டு அமர்ந்து தன் தலையை அதன் மேற்பரப்பில் சாய்த்தபடி வைத்திருந்தாள் அரசி.

 

காரிருளை கிழித்துக் கொண்டு சன்னமாய் ஒளி வீசிக் கொண்டிருந்தது அவள் கையில் இருந்த டார்ச் லைட். அந்த வெளிச்சத்திற்கு சிறு சிறு பூச்சிகளும் பட்சிகளும் குரலெழுப்ப, மனதில் கனம் கூடியமையால் இருளைக் கண்டும் அச்சத்தத்தைக் கண்டும் சிறிதும் அச்சம் ஏற்படவில்லை அவளுக்கு.

 

“எல்லாரும் எல்லாத்தையும் மறந்துட்டாங் மாமா. ஆனா என்ரனால மட்டும் ஏன்ங் எதையுமே மறக்க முடியல?” என்ற கேள்வியோடு மெல்ல தலையை நிமிர்த்தினாள்.

 

“அப்பா என்னைய அடிச்சா ஓடிவந்து தடுப்பீங்களே! என்ர மருமகளை என்ர வீட்டுக்கே கூட்டிட்டு போய்டுவேன்னு சொல்லுவீங்களே! அப்பறம் ஏன்ங் மாமா என்னைய விட்டுட்டுப் போனீங்க?”

 

பல வருடங்களாய் கண்ணீர் தடம் காணாத அரசியின் கண்கள் பெரும் வெள்ளத்தை சந்திக்கப் போவதாய் அறிவித்தது. யாரிடமும் பகிர முடியாதவற்றை எல்லாம் வேலுச்சாமியிடம் கொட்டித் தீர்க்க தீர்மானித்தாள்.

 

“மருமகளே மருமகளேன்னு நீங்க வாய் நெறைய கூப்பிடும் போதெல்லாம் உங்க மருமகளா தான் வரப் போறேன்னு அப்போவே என்ர மனசுல ஆழமா பதிஞ்சிருச்சுங் மாமா. இப்போ அது இல்லைன்னு தெரியும் போது தாங்கிக்க முடியலைங். என்னதான் இத்தன நாள் வெளிய காட்டிக்காம இருந்தாலும் உள்ளுக்குள்ள ரொம்ப வலிக்குதுங் மாமா” கல் இதயம் கரைந்து கண்ணீராக தரை இறங்கியது.

 

“நீங்க இருந்திருந்தா இப்படி நடக்க விட்டிருக்க மாட்டீங்க. உங்க அளவுக்கு யாருமே என்னைய புரிஞ்சுக்கலைங் மாமா. விக்ரமன் மச்சா கூட புரிஞ்சுக்கலைங்”

 

“நீங்க தவறுனப்போ விக்ரமன் மச்சா எப்படி துடி துடிச்சாருன்னு கண்முன்ன பாத்தவ நான். எல்லாரும் அவருக்கு ஆறுதல் சொன்னப்போ நான் அவருக்கு ஆறுதலாவே மாறோனும்னு நெனச்சேன்ங் மாமா. உங்களுக்கு வந்த நிலைமை நாளைக்கு அவருக்கு வந்திடக் கூடாதுன்னு நெனச்ச என்னைய.. என்னையப் போய் சுயநலவாதின்னு சொல்லிட்டாரு”

 

அவளால் அதை ஏற்கவே முடியவில்லை. எளிதாய் விட்டுவிடவும் முடியவில்லை.

 

[the_ad id=”6605″]

 

 

 

“உங்க மகனை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு அவருக்கு தெரிஞ்சிருந்தா இப்படி வார்த்தையால என்னைய காயப்படுத்தி இருப்பாராங் மாமா? வார்த்தையால கொஞ்ச நஞ்ச உயிரை தான் எடுத்தாரு நாளைக்கு அவரு பண்ணப் போற காரியத்தால மொத்த உயிரையும் எடுக்கப் போறாரு”

 

“இத்தனை வருசமா அவரு எனக்கு மட்டுமே சொந்தம்னு நெனச்சு வளர்ந்த என்ரனால இந்த ஜென்மத்துல என்ர மனச மாத்திக்க முடியாதுங் மாமா. என்ர வாழ்க்கைல அவரை தவிர வேற யாருக்கும் இடம் இல்லைங். என்னைய எப்படி அவருக்கு பிடிக்காம போச்சுங் மாமா? பிடிச்சிருந்தா நான் தான் வேணும்னு சொல்லி இருப்பாருங்களே ஏன் சொல்லலைங் மாமா?”

 

யாரிடமும் நியாயம் பேசும் நிலை இல்லையே இப்போது. இல்லாதவரிடம் தன் இயலாமையை சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

“மச்சான் பக்கத்துல என்ர அக்காளைத் தவிர வேற யார் இருந்திருந்தாலும் இந்நேரம் நான் நெனச்சதை நடத்திக் காட்டியிருப்பேன்ங் மாமா. ஆனா தமிழ்! அவ என்ர அம்மா. அவ வாழ்க்கைக்கு குறுக்க நா.. நான் எப்படி..? முடியாதுங் மாமா. என்ரனால அது முடியவே முடியாதுங் மாமா. அவ சந்தோசம் தான் முக்கியம் எனக்கு. அதனால என்ர வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்லைங்” என்றவள் தன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.

 

“என்ரனால இனியும் இங்க இருக்க முடியாதுங் மாமா. மச்சான் நெனப்பை எனக்குள்ள வெச்சுக்கிட்டு இங்கயே இருக்குறது நான் என்ர அக்காளுக்கு பண்ணுற துரோகம். அவங்க நல்லா இருக்கணும். சந்தோசமா வாழணும். அதுக்கு நான் தடையா இங்க இருக்கக் கூடாதுங்” என்று ஒரு முடிவோடு எழுந்தவள்,

 

“இந்த கல்யாணம் முடிஞ்சதும் நான் திரும்ப எங்காவது தூரமா போய்டலாம்னு இருக்கேனுங் மாமா” என தீர்க்கமாய் கூற,

 

“உன்ரனால முடியாது” என்றொலித்த குரலில் உடல் குலுங்க திடுக்கிட்டவள் மெல்ல திரும்பிப் பார்க்க இருளில் யார் நிற்பதென்று கண்களுக்கு தெரியவில்லை.

 

ஆனால் காதல் மனதிற்கு அக்குரல் யாருடையது என்று தெரியமலா இருக்கும்.

 

“உன்ரனால என்னைய விட்டு எங்கயும் போக முடியாது” என்றான் விக்ரமன் அழுத்தமாய்.

 

அனைத்தையும் கேட்டுவிட்டானோ என்று தன் மீதே ஒரு கழிவிரக்கம் வர, தன் மனதை இழுத்துப் பிடித்துக் கொண்டு,

 

“என்ரனால முடியும்” என்றாள் அழுத்தமாய்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“உன்ரனால முடிஞ்சாலும் என்ரனால உன்னைய போக அனுமதிக்க முடியாது” என்றான்.

 

“நான் யாரோட அனுமதியையும் வேண்டி நிக்கலை. அதுவும் எனக்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தரோட அனுமதி எனக்கு தேவையும் இல்ல” என்றாள் மனதை அடக்கி அறிவிற்கு இதை புரிய வைக்கும் நோக்கில்.

 

“நான் உனக்கு சம்பந்தம் இல்லாதவனா வேங்கை?”

 

“என்ர அக்காளோட வருங்கால வீட்டுக்காரர் இனி இந்த சம்பந்தம் மட்டும் தான் நமக்குள்ள” என்றுவிட்டு விலக,

 

“நான் சொல்லுறதை கொஞ்சம் பொறுமையா கேளு வேங்கை” என அவள் கைப்பிடித்து தடுக்க முயற்சித்தான்.

 

அவன் கையை உதறியவள் வேகமாய் அங்கிருந்து நகரச்செல்ல, மீண்டும் அவள் கைப்பற்றி இழுத்த விக்ரமன் அவளிடையில் ஒரு கையும், தோளை வளைத்து ஒரு கையும் போட்டபடி தன்னோடு சேர்த்து அணைத்திருந்தான்.

 

பக்கத்தில் தனக்கு விருப்பமான பொம்மையை வைத்துக்கொண்டு அதை கையிலேந்தி விளையாட முடியாத குழந்தையின் நிலை அவளுக்கு.

 

“ப்ச் விடுங்க” என அவள் விலக முயற்சிக்க அவன் இறுக்கத்தைக் கூட்ட, அவள் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் அவன் நெஞ்சை நனைத்தது.

 

அவன் முன் உடைந்து அழுதுவிடக் கூடாது என்று தன்னை எவ்வளவு கட்டுப்படுத்தியும் அது முடியாது போக, அவனிரு புறமும் தன்னிரு கைகளையும் படரவிட்டு அணைத்துக் கொண்டவள் தன் மனபாரத்தை அவனிடமே இறக்கியும் வைத்தாள்.

 

அகத்தை அழுத்திய அழுத்தம் எல்லாம் அவன் கைச்சிறையில் கரைந்து கொண்டிருக்க நொடிகள் நிமிடங்களாய் கடக்க கண்ணீர் தடம் காய்ந்த நொடி மின்னலென அருந்தமிழின் முகம் அவள் அகக் கண்ணில் தோன்ற, என்ன காரியம் செய்துவிட்டோமென்ற குற்றவுணர்வு பெரிதாய் எழுந்தது.

 

“நான் சொல்லுறதை பொறுமையா கேளு வேங்கை” என விக்ரமன் சொல்ல, நிலை குலைந்து போன நிலையில் எதையும் கேட்கத் தயாராய் இல்லை அவள். அது தெரியாது அவளோடு பேசத் துடித்தான் விக்ரமன்.

 

தீயில் விரலைச் சுட்டதுபோல் அவனிடம் இருந்து சட்டென விலகியவள்,

 

“என்னைய பயன்படுத்திக்க பாக்குறீங்களா?” என ஆவேசமாய் கேட்டிருந்தாள்.

 

இருளில் அவன் விழிகள் வெளிப்படுத்திய வலியை ஒருவேளை அவள் கண்டிருந்தால் தன் வார்த்தையின் வீரியம் என்னவென்று அறிந்திருப்பாளோ? வார்த்தைகளின் சுவடு மறைவதற்குள் அங்கிருந்து மறைந்திருந்தாள் அரசி.

 

உடல் விரைக்க நின்றிருந்தான் விக்ரமன்.

 

 

வாசம் வீசும்..!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!