Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்13

     அவன் எடுக்காதது வேறு அவளுக்குத் தவிப்பை உண்டாக்க.. மனதை அடக்கிக் கொண்டவள்.. எவ்வித எதிர்ப்புமின்றி தனம் செய்கின்ற செயல்களுக்கு தலையைக் கொடுத்தவாறே அமர்ந்திருந்தாள்.. அவள் முகத்தைப் பார்த்தாலே ஏதோ திடமான முடிவுடன் இருப்பவள் போல தெரியவயும்..

     தனம் மெதுவாக “கண்ணா.. இதுவரைக்கும் நாங்க கண்டிக்கற அளவு நீ நடந்துகிட்டதே இல்லை.. அதே மாதிரி உன்னை ரொம்பவும் அடக்கி ஒடுக்கி வீட்ல வளர்க்கல.. உனக்கும் சரி.. முகிலுக்கும் சரி தேவையான அளவு சுதந்திரம் கொடுத்து தான் வளர்த்தோம்.. ஆனா நீ என்ன பண்ணிட்டு வந்து நிக்கற” என பொறுமையாக அவளுக்கு தலை பின்னியபடியே ஒவ்வொரு வார்த்தையாக தேர்ந்தெடுத்துப் பேசிக் கொண்டிருந்தார்.

      ஆனால் மகிழோ அவர் சொல்வதை கேட்கும் பாவத்தில் அமர்ந்திருந்தாலும் முகத்தில் ஒரு பிடிவாதத்தை விரவ விட்டபடி இருந்தாள்.. ஒரு பெருமூச்சுடன் “நீ நியாயமான விஷயத்துக்கு ஆசைப்பட்டிருந்தா சத்தியமா அதை நிறைவேத்தியிருப்போம்.. ஆனா இது.. வேண்டாம் டி.. தெரிஞ்சே உன்னை கஷ்டத்துல தள்ள எங்களால முடியாது.. நீயும் நந்தாவும் பழகறது தெரிஞ்சு உங்கப்பா ரொம்ப கஷ்டப்படறார்.. நம்ப கண்ணாளா இப்படின்னு இது வரை ஒருநூறு தடவை புலம்பியிருப்பார்.. அவன் உங்கப்பாவை பழி வாங்க இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கான்.. ரகு மிரட்டினப்ப.. ஆமா அப்படித்தான்.. உன்னால முடிஞ்சதை பாத்துக்கோன்னு சொல்லியிருக்கான்.. நீ அங்க நல்லா இருக்க முடியாது டி.. பெத்தவங்க சொல்றதைக் கேளு” என நீண்டதொரு விளக்கம் கொடுத்தபடியே அவளை அலங்கரித்து முடித்தார்.

      எவ்வளவு தான் பார்த்துப் பார்த்து செய்திருந்தாலும் ஏதோ ஒன்று குறையாகவே தோன்றியது தனத்திற்கு.. வேறென்ன எல்லாம் பெண்ணின் முகத்தில் இறுக்கம் தான் குறை.. மருந்து கசப்பு என்பதற்காக அதை குழந்தைக்கு கொடுக்காமல் இருக்க முடியுமா என்ன.. என எண்ணியவருக்கு அதற்குள் கணவனிமிருந்து அழைப்பு வர சென்றுவிட்டார்.



Advertisement

      அவள் அம்மா அவ்வளவு கூறியும் நந்தா மேல் ஒரு ஊசி முனை அளவு கூட அவளுக்கு சந்தேகம் தோன்றவில்லை.. அவளே கண்கூடப் பார்த்திருக்கிறாளே நந்தாவின் தன் மீதான நேசத்தை.. இதற்கெல்லாம் உடைபடுமா என்ன என இகழ்வாகச் சிரித்தவளைக் கண்டு விதி.. இன்னும் சற்று நேரத்தில் அதுதான் நடக்கப் போகிறது என அவளை விட இளக்காரமாகச் சிரித்தது.

      மாப்பிள்ளை வீட்டில் இருந்து வரவும்.. தனம் வந்து இவளை அழைத்துச் சென்றார்.. இவர்கள் குடும்பத்தைத் தவிர்த்து இன்னுமொரு ஏழு பேர் இருந்தனர்.. மகிழால் யாரையும் நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை.. அவள் முகத்தில் மருந்துக்குக் கூட சிரிப்பில்லாமல் இருக்க.. அவள் தலை குனிந்து இருப்பதால் யாருக்கும் அது தெரியாமல் போனது.

     இரு குடும்பமும் தங்களை அறிமுகம் செய்துகொள்ள.. அதெல்லாம் மகிழின் காதில் விழவில்லை.. இரு குடும்பத்திற்கும் பிடித்துப் போக.. மகிழின் சார்பாக அவள் குடும்பமே அவளுக்கு இத்திருமணத்தில் சம்மதம் என்க.. அடுத்ததாக நிச்சயத் தேதி குறிக்க ஆயத்தமாகினர்.

Advertisement

      அவ்வா பஞ்சாங்கம் எடுப்பதற்காக எழ.. அப்போது வாயிற்படி அருகே நிழலாட.. அனைவரும் திரும்ப நந்தா நின்றிருந்தான்.. வெகு கூலாக.. நந்தாவைக் கண்டவுடன் ராகவன் மகளைத் திரும்பிப் பார்க்க அவளும் அதிர்ச்சியாகவே இருந்தாள்.

Advertisement

       ஆரம்பத்தில் மகிழ் நந்தாவை அழைத்தது இந்த விஷயத்தைப் பற்றிச் சொல்லத்தான்.. மற்றபடி அவனை வரச் சொல்வதற்காக இல்லை.. ஏனெனில் நந்தாவிற்கும் சரி.. அவள் அப்பாவிற்கும் சரி முன் கோபம் அதிகம்.. இருவரையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தினால் நிச்சயம் ஏதாவது பிரளயம் வெடிக்கக் கூடும் என அவளுக்குத் தெரியும்.

     ஆனால் அவளது அத்தனை எண்ணங்களையும் தவிடுபொடியாக்கி வெகுசாதாரணமாக நிற்பவனைக் கண்டு அவளுள் பயமும் எழவே செய்தது.. அனைவரும் அதிர்ந்து அவனைப் பார்க்க.. முகில் தான் “இங்க என்னடா வேலை உனக்கு” என சீறிக் கொண்டு வரவும்..

     நந்தா “இப்போதைக்கு எனக்கு உன்கிட்ட பேச்சில்ல.. உங்கப்பன்ட்ட” என்றவன் மகிழைப் பார்த்து சிரித்தவாறே தன்னைத் திருத்தியவன் “உங்கப்பாகிட்டத் தான் பேச வந்தேன்” என்றான்.

Advertisement

       மகிழிடம் நந்தாவின் உரிமைப் பேச்சைக் கண்டு வியந்த அமிர்து அவ்வா தாத்தாவைத் திரும்பிப் பார்க்க.. அவரும் மனைவியிடம் ஆம் என்பது போல தலையசைத்தார்.. அப்போது தான் மகனின் இத்தனை அவசர ஏற்பாடுகளுக்குக் காரணம் விளங்கியது.

        மகிழை அவர் குற்றம் சாட்டும் பார்வையுடன் பார்க்க.. அவளோ நந்தாவைக் கெஞ்சலுடன் பார்த்தாள்.. ஆனால் அவன் அவளைக் கண்டு கொள்ளாது ராகவனிடமே நேராக”யாரைக் கேட்டு இப்படி அவசரமா கல்யாணம் முடிவு பண்றிங்க” எனக் கேட்கவும்..

       “என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ண நான் எவன்கிட்ட கேட்கனும்” என எடுத்தெறிந்து பதிலளிக்க.. வந்திருந்தவர்களில் மாப்பிள்ளை அப்பா போல இருந்தவர் “எதாவது பிரச்சனையா” என ராகவனிடம் விசாரிக்கவும்.. அவரை முந்திக் கொண்ட நந்தா “ஆமா சார்.. நானும் மகிழும் விரும்பறோம்.. இவங்களுக்கு அது பிடிக்காம இப்படி ஒரு முடிவு எடுத்துருக்காங்க” என்றான்.

      அதற்குள் அங்கிருந்த ஒரு பெண்மணி “ஓஓ.. இதான் விஷயமா.. ஏன் சீக்கிரமா பண்றிங்கன்னு கேட்டதுக்கு ஜாதகம் ஜோசியம்னு காரணமா அடுக்கினிங்களே.. நீங்க எல்லாம் என்ன பெரிய மனுஷன்” என ராகவனைக் குற்றம் சாட்டவும்..

    மகிழ் அதற்கு மேல் முடியாமல் “நீ கிளம்பு மாமா.. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்” என அவனை நகர்த்தப் பார்க்க.. நந்தா விடாப்பிடியாய் “நீ என்னை விரட்டுறதைப் பாத்தா உனக்கும் இதுல சம்மதம் போல.. அப்படியா” எனக் கேட்கவும் மகிழ் அவனை வித்தியாசமாகப் பார்த்தாள்.

     அவன் கண்ணில் அத்தனை ஒரு தீவிரம்.. இவ்வளவு நாட்கள் இருந்த துறுதுறுப்பு எல்லாம் எங்கு சென்றதோ இன்றைய அவனது நடவடிக்கைகளில் நிதானம் இருக்க.. ஆத்திரமாக ஏதே கேட்க வந்த முகிலைத் தடுத்து நிறுத்திய ராகவன் “உனக்கென்ன வேணும்.. நீ தலைகீழா நின்னாலும்.. உனக்கு என் பொண்ணைத் தரமாட்டேன்.. அவளுக்கு வேற கல்யாணம் பண்ணத்தான் போறேன்” என சவாலாகக் கூற..

      அவனோ விஷமத்துடன் புன்னகைத்தபடி “அவ வயித்தில இருக்க என் குழந்தையைப் பெத்துக் கொடுக்கச் சொல்லிட்டு.. உங்க பொண்ணுக்கு நீங்க தாராளமா கல்யாணம் பண்ணுங்க” என்க.. அவன் பதிலில் அனைவருமே ஆடிப் போயினர்.. தன்னைப் பற்றித்தான் இவன் சொல்கிறானா என்ற மகிழின் பார்வையைப் பார்த்த நந்தா முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

முகிலின் கோவமெல்லாம் ஒன்றுமே இல்லாதபடி “யாரைப் பாத்து என்ன வார்த்தை சொல்ற.. என் பொண்ணைப் பத்தி எனக்குத் தெரியும்டா” என அவன் சட்டையைப் பிடித்திருந்தார் ராகவன்.

       அவர் கையை விலக்க எவ்வித முயற்சியும் செய்யாமல் “அதானே.. உங்க நியாயம் எப்பவும் ஒருதலை பட்சமாத்தானே.. பொண்ணைப் பெத்தவங்க கஷ்டம் என்னன்னு இந்த செகண்ட் தெரிஞ்சிருக்கனுமே உங்களுக்கு.. பாக்கவே சந்தோஷமா இருக்கு” என்றான் நேர் பார்வையாக.. அவனையும் அறியாமல் ராகவன் மேல் கொண்டிருந்த கோவம் வந்து விழுந்துவிட.. அது இறுதியில் அவனுக்கே எதிராகத் திரும்பப் போவதை உணராமல் பேசிக்கொண்டிருந்தான்.

      அத்தனை நேரம் அங்கு நடந்த அனைத்தையும் பார்த்தும் பேசாமல் இருந்த தாத்தா இப்போது “ஏன்ப்பா.. எதையும் எதையும் சேர்த்துப் பேசற.. என்ன நடந்ததுன்னு முழுசா தெரியும் போது இதுக்கெல்லாம் வருத்தப்படுவ நீ.. இப்ப அமைதியா இரு” என அவனைக் கண்டிக்க

       அவனோ அதையும் ஏற்றுக் கொள்ளாமல் “ஏன் தாத்தா சேர்த்துப் பேசினாத்தான் என்ன தப்பு.. அன்னைக்கு அமைதியா தானே இருந்திங்க.. இன்னைக்கு உங்க ரத்தத்துக்கு ஒன்னுன்ன உடனே கொதிக்குதோ” என அவரையும் அலட்சியம் செய்தான்.. ராகவன் கையை தன்னிடமிருந்து விலக்கியவாறே.

      அனைவரின் முன்பும் தன் தங்கையைப் பற்றிய தவறான பேச்சினை சகித்துக் கொள்ளாதவனாய் முகில் “உனக்குப் பழி வாங்க வேற எதுவுமே கிடைக்கலையா.. இந்தப் பொய்யால உனக்கு என்னடா லாபம்” என தன் கோவத்தை அடக்கியபடி கேட்க

      “நீ சொல்ற மாதிரி நான் பழி வாங்க நினைச்சாக் கூட அதுல பாதகம் இல்லை.. ஆனா நான் சொல்றது அத்தனையும் நிஜம்.. நீ தாய்மாமா ஆகிட்ட.. வேணா பாரு” என அவன் கையில் இருந்த ஃபைலை நீட்ட.. அதைத் தட்டிவிட்டவன் “உன்னையே நாங்க நம்பலை.. நீ கொண்டு வந்த இதை மட்டும் நம்புவோமா.. நீ முதல்ல வெளியே போடா” என அவன் சட்டையைப் பற்றி தரதரவென இழுத்துச் செல்ல..

      அதில் கோவம் கொண்ட நந்தாவும்.. அவன் கையை விலக்கி.. அவனைத் தள்ளியவன் “உங்க வீட்ல எல்லாருமே இப்படி ஏறுக்கு மாறாத்தான் நடந்துக்குவிங்களா.. நான் பொய் சொல்றேன் சரி.. தாயறியாத சூலா.. உங்கம்மாவைக் கேளு.. பொண்ணுகிட்ட ஏதாவது வித்தியாசம் இருக்கான்னு” என்றான் எரிச்சலாக.

       அவன் பேச்சைக் கேட்ட தனத்தின் முகத்தில் ஏதோ ஒரு கணக்கீடும் அதையொட்டி ஒரு அதிர்ச்சியும் வர.. “ம்மா.. நான் இல்லைம்மா” என தன் அமைதியை கிழித்துப் பதில் அளித்த மகிழ் அனைவரும் பார்த்த பார்வையில்.. அவள் நிலத்திற்குள் புதைந்து போய்விட மாட்டோமா என எண்ண.. கண்கள் அனுமதியின்றி கண்ணீரைப் பொழிந்தது.

         இவ்வளவு சண்டைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்த.. வந்திருந்த ஒரு  பெண்மணி “வீடு வாசல் கூட பாக்காம நேரா நிச்சயம்னு சொல்லும்போதே நாங்க யோசிச்சிருக்கனும்.. நல்லவேளை நாங்க தப்பிச்சோம்.. புள்ளையைப் பாரு புள்ளையை.. வெகுலட்சணம்.. வாங்க போலாம்” என தங்கள் சொந்தங்களை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

       தங்கள் பெண்ணா இப்படி என அனைவரும் மகிழை கோவமாகப் பார்க்க.. தாத்தா தளர்ந்து போய் அமர்ந்துவிட.. அவ்வா மகிழை நெருங்கி “உன்னால என் புள்ளை எப்படி கூனிக்குறுகி நிக்கிறான்னு பாரு.. எங்க எல்லார் தலையிலையும் இப்படி கல்லைத் தூக்கிப் போட்டுட்டியே.. நீ என் பேத்தியே இல்லை” என அவளை அறைய..  கண்களில் கண்ணீர் மட்டும் வழிந்தபடி இருக்க.. யார் சொல்வதையும் மறுத்தும் பேசாமல்.. அனைத்தையும் வாங்கியபடி நின்றவளைக் கண்டு முகிலிற்கு நந்தாவின் மேல் ஆத்திரமாக வந்தது.. தன் பாட்டியிடம் இருந்து மகிழைப் பிரித்தவன் “என்னவ்வா நீ இவன் ஒரு ஆளுன்னு இவன் சொல்றதை நம்பி நீ மகிழை அடிக்கிறியா” என அவளைத் தன்னிடம் இழுத்தான்.

     அனைவரின் அமைதியையும் உணர்ந்தவன் அதைப் பயன்படுத்தி.. மகிழின் கரம் பற்றி அவள் அப்பாவின் முன் நிறுத்தியவன்.. யாரும் சுதாரிக்கும் முன்.. தான் கொண்டு வந்திருந்த தாலிக்கொடியை அவள் கழுத்தில் நிதானமாகப் போட்டுவிட்டான்.

       “நீ கேட்ட மாதிரி என்னால செய்ய முடியலை.. ஆனா நான் சொன்ன மாதிரி உங்கப்பா முன்னாடி உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன்” என்றவன் அப்போது தான் மகிழ் முகத்தைப் பார்த்தவனுக்கு லேசாக குற்றவுணர்ச்சி வந்தது.. ஆனாலும் அவளுக்குப் புரியவைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் அவள் கரம் பற்றி வெளியே கூட்டிச் சென்றான்.

      மகிழைத் தடுக்கச் சென்ற முகிலை  “முகிலு.. இங்க வந்து தாத்தாவைப் பாரு” என அவ்வாவின் அலறல் தடுத்து நிறுத்த.. மகிழ் திரும்பிப் பார்த்தாள்.. ராகவன் முகத்தில் சொல்லொனா வேதனையுடன் மகளைப் பார்த்தபடி நின்றிருக்க.. மகிழ் முகம் இறுகிப் போனது.

       ‘யாரும் இல்லைத் தானே கள்வன், தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?’ என வருந்திய குறுந்தொகைத் தலைவி கூட ஒரு குருகைத் தன் களவொழுக்கத்துக்குச் சான்றாகக் காட்டினாள்.. ஆனால் தான் இவனை மட்டுமல்லவா நம்பினோம்.. இப்படிப் பொய்த்துப் போனானே என ஆற்றாமை, இவன் பழிவெறிக்கு குடும்பத்தை பலியாக்கிவிட்டோமே என்ற கோவம், இப்போது இவன் இழுப்பிற்குச் சென்று கொண்டிருக்கும் கையாலாகாத்தனம் என அனைத்தும் ஒன்றாய் சேர.. ஒரே நிமிடத்தில் அவன் மீது அவள் கொண்ட காதல் அனைத்தும் வெறுப்பாய் மாறியது.

நாயகன் வருவான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!