Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்13

     தனக்கு இரண்டு வரம் வேண்டும் என காது ஜிமிக்கிகள் ஆட அவள் கேட்க.. எதையும் யோசிக்காமல் சரி எனத் தலையசைத்தான் நந்தா.

        “நம்ம ரெண்டு பேர் கல்யாணமும் நம்ம ரெண்டு வீட்டு ஆட்கள் முன்னாடி தான் நடக்கனும் மாமா.. நேத்து நீ ஆயிரம் சொல்லியிருந்தாலும் எனக்கென்னவோ ஏதோ தப்பா நடக்கப் போறதா பயமா இருக்கு” என குரலில் லேசான பயத்துடன் கூறினாள் மகிழ்.

      அவளைப் பார்த்து ஆதரவாகப் புன்னகைத்தவன் “ஏன் என்கூட ஓடி வரச் சொல்லிடுவேன்னு பயமா.. அப்படி எல்லாம் பண்ணமாட்டேன்.. உங்கப்பன் முன்னாடியே உனக்கு தாலி கட்டனும்.. சும்மா சும்மா முறைச்சுட்டே இருக்கார் மனுஷன்” என கேலியாகத் தன் சம்மதத்தை உரைத்தான்.

      அதில் மகிழ்ந்தவள் “எத்தனை தடவை சொல்றது.. என் நைனாவை மரியாதை இல்லாம பேசாத” என வெளியில் முறைக்கவும்



Advertisement

      “எங்க அப்பத்தா மட்டும் உனக்கு அப்புறம் பொறந்தவங்களா.. சகட்டு மேனிக்கு பேசற” என்கவும்.. அதை அலட்சியப்படுத்தியவள் “அது எனக்கும் அனகோண்டாக்கும் உள்ள ரிலேஷன்ஷிப்.. உங்களுக்கு எல்லாம் புரியாது” என்க..

     “ஆஹான்.. சரி ரெண்டாவது விஷ் என்ன” எனக் கேட்டான்.. அதை எப்படிச் சொல்வது என தயங்கியவள் பார்வை கோபுரத்தின் மேலும் சிவனே என்று அமர்ந்திருந்த விநாயகர் மேலும்.. கோவில் மதில் மேல் இவர்களை வேடிக்கை பார்க்க வந்த குருவி மேலும் நிலைக்க.. நந்தா தான் குழம்பினான்.

     கல்யாணத்தைப் பத்தியே பொட்டில  அடிச்ச மாதிரி பேசினவ எதுக்கு தயங்குறா என யோசித்தவன் “சொல்ற ஐடியா இருக்கா” என அவள் கவனத்தைத் தன் பக்கம் திருப்பவும்.. அவன் முகத்தையே பாராமல் “இனி நீ பியர்ட் வைக்கனும்” என பட்டெனச் சொல்ல.. நந்தா தான் சரியாகத் தான் கேட்டோமா என ஆராய்ச்சியாக அவளைப் பார்த்தான்.

Advertisement

      “என்னடி.. கொஞ்சம் சத்தமா சொல்லு” என மீண்டும் கேட்க.. “உன்னை தாடி வளர்க்கச் சொல்றேன் மாமா” என சத்தமாக உரைக்க.. எது எதையோ எதிர்பார்த்து பயந்து இருந்தவன் இந்த பதிலில் “ஏன்னு தெரிஞ்சுக்கலாமா” எனக் கேட்டான்.

Advertisement

       மீண்டும் கண்களை உருட்டியவள் “அதெல்லாம் முடியாது.. சொன்னதை செய்ங்க” என நகரப் பார்க்க

     அவளைத் தடுத்தவன் “அடியே லூசாகிட்டியா.. இதெல்லாம் ஒரு விஷ்ஷா.. ஒழுங்கா ஓடிப் போயிடு.. என்னால எல்லாம் வைக்க முடியாது.. வேற எதாவது கேளு” என மறுத்தான்.

      அவளோ “எனக்கு வேற எதுவும் வேண்டாம்.. அது தான் வேணும்” என பிடிவாதம் பிடிக்க.. “போடி.. நீயும் உன் விஷ்ஷூம்” என சென்றவனை.. “ஓஹோ.. நீ மட்டும் பியர்ட் வைக்கலை.. தார் எடுத்து மூஞ்சியில ஊத்திடுவேன்.. அப்புறமும் யார் உன்னைப் பாக்கறாங்கன்னு பாக்கறேன்” என வீரசபதம் எடுக்க.. இதைத்தான் எதிர்பார்த்தேன் என்பது போல மெல்லிய புன்னகையுடன் அவளைப் பார்த்திருந்தான் நந்தா.

Advertisement

     அவன் சிரிப்பு அவளை அங்கே நிற்கவிடாமல் துரத்த “வரேன்” என்று ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.. தங்கள் உள்ளத்து அன்பை பரிமாறிக் கொண்ட மகிழ்வில் இருவரும் சுற்றுப்புறத்தை கவனிக்க மறந்திருக்க.. விதி இருவரையும் பார்த்து சிரித்தது.

      நேசம் உணர்ந்த பின்னர் தனிப்பட்ட சந்திப்புகளைத் தவிர்த்தனர்.. நந்தாவுக்கு டாக்ரேட்டின் இறுதிக்கட்ட வேலைகளும்.. மகிழுக்கு அவள் இறுதி வருட படிப்பு ப்ராஜெக்ட் என இருக்க.. அதற்கு நேரமும் வாய்க்கவில்லை.. தினமும் ஒரு ஐந்து நிமிடம் ஃபோனில் பேசுவது.. கல்லூரி செல்கையில் வெளியில் பார்ப்பதோடு சரி.

     இந்நிலையில் தான் ராகவன் தன் அன்னையிடம் மகிழின் ஜாதகத்தை எடுத்துச் சென்று.. பார்த்து வரும்படி கூற.. அவரோ குழம்பியபடி “ஏப்பா.. சின்னப்பிள்ளை.. இன்னொரு ரெண்டொரு வருஷம் போகட்டும்.. எதுக்கு அவசரம்” என்றார்.

      “எப்படியும் கல்யாணம் பண்ணத்தானே போறோம்.. அதை எப்ப பண்ணாத்தான் என்ன” என அவருக்கு பதில் கூறிய மகனை சந்தேகமாகப் பார்த்த அமிர்து அவ்வா “ஏனப்பா.. மனசுல எதாவது வச்சிருக்கியா.. இல்லை புள்ளை ஏதும் தப்பா” என சரியாக விஷயத்திற்கு வர.. அதற்குள் ராகவன் சுதாரித்துக் கொண்டார்.

      “தகப்பனா எம்புள்ளைக்கு கல்யாணம் காட்சின்னு பண்ண நினைக்கறது கூட தப்பா.. இதுக்கெதுக்கு இத்தனை கேள்வி” சம்பந்தமே இல்லாமல் எரிந்து விழ.. அப்போது தான் உள்ளே வந்த தாத்தா “உங்கம்மா மேல தான் தப்புப்பா.. உம்புள்ளைக்கு நீ என்ன நினைக்கறயோ அதை மகராசனாப் பண்ணு.. வயசானா கிருஷ்ணா ராமான்னு சும்மா இருந்துக்கனும்.. அதான் மரியாதை அமிர்து” என மகனிடம் தொடங்கி மனைவியிடம் முடித்தவர்.. தன் அறையில் சென்று முடங்கிக் கொண்டார்.

      அவருக்கும் நந்தா மகிழின் விஷயம் காற்று வாக்கில் காதில் விழுந்திருந்தது.. அவரே கூட ஒருமுறை கரட்டில் உள்ள முருகன் கோவிலில் இருவரும் பேசுவதை கண்டிருந்தார்.. ஒரு தந்தையாக மகனின் எண்ணன் அவருக்குப் புரிந்தது.. ஆனால் பேத்தியின் வயது என்ன அறிவுரை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாது என புரிய.. கிழிசல் இல்லாமல் முள்மேல் விழுந்த சேலையை எப்படி எடுக்கவெனத் தான் தெரியவில்லை.

       தாத்தா மீண்டும் அவ்வாவை அழைத்து குணமாக விளக்க.. அவரும் ஜாதகம் பார்த்து வந்தார்.. பின்னர் அவசர அவசரமாக மகிழுக்கு மாப்பிள்ளை தேடத் துவங்கினர்.. அதுவும் சற்றே தொலைவாகவே தேடினர்.

      எதிர்பார்த்த அனைத்துப் பொருத்தங்களுடன் ஒரு வரன் அமைய.. அனைவருக்குமே திருப்தி.. முகிலன் உட்பட.. ஆனால் ஒருவரும் இதைப் பற்றி மகிழிடம் வாயைத் திறக்கவில்லை.. இன்னும் பத்து நாட்களில் அவளுக்கு செமஸ்டர் ஆரம்பிக்கவிருக்க.. கல்லூரி இறுதி நாள் புடவையில் சென்று வந்தாள்.. அன்று தான் நந்தாவை இறுதியாகப் பார்த்தாள்.. அதன்பின் படிப்பதற்கே நேரம் சரியாக இருந்தது.

     ஒருவழியாக அனைத்து பரிட்சைகளும் முடிந்து.. இத்தனை நாள் தூங்காத தூக்கத்தை எல்லாம் சேர்த்து நன்றாகத் தூங்கிய மகிழ் அன்று காலையில் எழுந்து வரும்போதே வீடு பரபரப்பாக இருக்க.. அம்மாவைத் தேடி சமையலறை சென்றாள்.

        அங்கு உருட்டிக் கொண்டிருந்த அவரின் பின்புறமாய் நின்று தோளில் முகம் பதித்தவள் “என்னம்மா விசேஷம்.. என்கிட்ட சொல்லலை” என்க.. அவளுக்கு பதில் கூறாமல்.. காஃபியை அவள் கையில் திணித்தவர் மணியனை அழைத்து ஏதோ வேலையை செய்யச் சொல்ல.. அப்போது தான் மகிழுக்கு அம்மாவின் விலகல் உரைத்தது.

       இத்தனை நாட்களில் அவளாகப் பேசினாலும்.. “போய்ப் படி” “தூங்கு” என்ற வார்த்தைகள் தான் வந்தது.. அவளும் தேர்வுக் குழப்பத்தில் அதை கவனிக்காமல் இருந்திருக்க இப்போது தான் உணர்ந்தாள்.

        “ம்மா.. என்னம்மா.. என்ட்ட பேசும்மா” என்றவளைக் கண்டு கொள்ளாமல் அவர் தன் வேலையை மட்டுமே பார்க்க.. அவளுக்கு அழுகை வந்தது.. அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஹாலிற்கு வந்தவள் சோகமாக அமர்ந்திருந்த அவ்வாவின் மடியில் படுத்துக் கொண்டாள்.

      மகன் மீது கோபதாபங்கள் இருந்தாலும் பேத்தியின் விசேஷம் அல்லவா அவருக்கும் மகிழ்ச்சி தான்.. ஆனால் சிறுபெண்ணாக இருக்கிறாளே என்ற கவலை தான்.. இதமாக அவள் தலையை வருட.. அதில் தன் துக்கத்தை விழுங்கியவள் “என்ன வ்வா விசேஷம்.. யாராவது வராங்களா” எனக் கேட்க

       அப்போது அங்கே வந்த மகனைப் பார்த்தபடி “எனக்கென்ன தெரியும்.. உங்கப்பன் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறானாமா.. இங்க எல்லாம் சொல்லியா நடக்குது.. அவனவன் இஷ்டத்துக்கு நடக்குது” என தன் ஆதங்கத்தைக் காட்ட மகிழ் ஒரு கணம் ஆடித்தான் போனாள்.

       ‘ஒருவேளை நம்ம விவகாரம் எதாவது தெரிஞ்சிருக்குமோ.. அதான் இந்தக் கல்யாண ஏற்பாடா’ ஒன்னும் ஒன்னும் ரெண்டு என அவள் மனம் வெகு விரைவில் கடக்கிட.. ஆனால் அவளை அங்கு யாரும் கணக்கில் கொள்ளவில்லை.

     ராகவன் தன் அன்னையை முறைத்து “பாருங்மா.. மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்த அப்புறமும் இப்படிப் பேசிடாதிங்க.. முன்கூட்டியே அத்தனையும் சொல்லித்தானே பண்றேன்” இன்னும் என்ன சொல்லியிருப்பாரோ தன் தந்தையின் வருகையில் அமைதியானார்.

     தாத்தா “பெத்தவனுக்கு புள்ளைக்கு என்ன பண்ணனும்.. எப்பப் பண்ணனும்னு தெரியும்.. நீ போய் மருமகளை கவனி.. ஒத்தையில சிரமப்படுது” என அனுப்பிவிட்டார்.

      ராகவன் நகர்ந்து விட.. தாத்தாவும் மகிழ் எதாவது கேட்டுவிடுவாளோ என அவசரமாக சென்றுவிட்டார்.. அடுத்து என்ன செய்வதென அவளால் யோசிக்கவே முடியவில்லை.. இந்த சூழ்நிலையை சந்திக்க வேண்டி வரும் என மகிழுக்குத் தெரிந்து தான் இருந்தது.. ஆனால் இத்தனை சீக்கிரமாக இந்த ஏற்பாடுகளை அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை.

      ஒருமுடிவுடன் அவள் அறைக்குச் சென்றவள்.. நந்தாவிற்கு அழைக்க முயற்சித்தாள்.. முழு ரிங் போய் கட்டாக.. மகிழுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போல இருந்தது.. இனி என்ன செய்வது என யோசிக்க.. உள்ளே வந்த அவள் அம்மா தனம்.. கொண்டு வந்த நகைகளை ஸ்டடி டேபிளில் வைத்துவிட்டு.. அவள் கப்போர்டில் இருந்து ஒரு பட்டுப்புடவையையும் எடுத்து கட்டில் மீது வைத்தார்.

     தன்னைக் கேள்வியாகப் பார்த்த மகளிடம் “சீக்கிரமா போய்க் குளிச்சிட்டு வா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. முடிச்சுட்டு வந்து புடவை கட்டி விடறேன்” என கட்டளை இட்டு நகர

       “ம்மா.. எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்மா.. ப்ளீஸ்மா” எனக் கெஞ்சியவளைக் கண்டு.. இந்த ஒரு மாதமாக மனதுள் இருந்த கோவம் வெளிப்பட “நீ எதை மனசுல வச்சு இதை வேண்டாம்னு சொல்றேன்னு எனக்குத் தெரியும்.. அதெல்லாம் கனவுல கூட நடக்காத ஒன்னு.. ஒழுங்கு மரியாதையா போய்க் குளி” என மிரட்ட

     அவருக்குத் தெரிந்து விட்டது சிறு சங்கடத்தைக் கொடுத்தாலும் “ஏன்ம்மா.. எல்லாம் தெரிஞ்சும் ஏன் இந்த ஏற்பாட்டைப் பண்றிங்க.. நான் நந்தா மாமாவைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. அவர் ஒன்னும் நீங்க நினைக்கற மாதிரி இல்லை.. ரொம்ப நல்லவர்ம்மா” என நந்தாவைப் பற்றித் தவறாகக் கணித்துவிட்டார்களோ என அவனுக்காக வாதாடினாள்.

   தனம் எரிச்சலாக “அருமை போ.. கேட்கவே சிலிர்க்குது.. பெத்து வளத்தவங்க கெட்டது செய்வாங்க.. இன்னைக்கு வந்த அவன் உனக்கு மகாத்மா.. இங்க பாரு.. மறுபடியும் ஒரு பிரச்சினை வந்தா உன் தாத்தாவால தாங்கிக்க முடியாது.. ஏற்கெனவே மனசொடிஞ்சு இருக்காங்க.. இதெல்லாம் இந்த வயசுல வரது தான்.. எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு ஒழுங்கா இந்தப் பையனைக் கட்டிக்க” என அவளுக்கு ஃப்ரி அட்வைஸ் வழங்கியவரிடம் மேற்கொண்டு பேசுவது இயலாது என உணர்ந்தவள்.. ‘நேரா கல்யாணம் தான் பண்ணுவாங்களா.. இவங்ககிட்ட இல்லைனா என்ன.. வர மாப்பிள்ளை கிட்ட சொல்லுவோம்.. நம்மை மீறி என்ன நடந்துடும்’ என தன்னையே தேற்றிக் கொண்டாலும் நந்தாவிற்கு மீண்டும் மீண்டும் முயன்று கொண்டே இருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!