Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Greakka Manimagudam

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம்-3

கிரேக்க மணிமகுடம்

(வரலாற்று நெடும்தொடர்)

3. ஆலமரத்தில் அபாயசங்கு

“சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல
இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை“



Advertisement

என்னும் புறநானூற்றுப் பாடல் சோழர் குலத்தின் பெருமையை பறைசாற்றும்.அத்தகைய பெருமைக்குரிய சோழகுலத்தில்….. சூரியனின் கதிரொளி போல தகதகக்கும் நிறத்தோனாகவும், செந்தாமரை கன்னங்களில் சோழக்கொடி தாங்கிய, புலியின் வாலை மீசையாக கொண்டவனும், அகன்ற மார்பில் சிறிதும் போர் புரிந்து பெற்ற விழுப்புண் இன்றி வெறுமையாக இருப்பவனும்,…. தன் பாட்டன் இளஞ்சேட் சென்னியைப் போல முத்துத் தேரில் ஏறி பவனி வருபவனாகவும் விளங்கும் நெடுங்கிள்ளி தன் சிறு படையுடன் குடந்தை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றான்.

சிந்தையில் சிறிது கலக்கம் நிறைந்து இருந்தாலும், அவனின் முகம் பிரகாசமாக மின்னியது. காரணம் சேர அரசன் ஒற்றன் மூலம் அனுப்பியிருந்த ஓலை…. ஆம்.. “நெல்லும் முத்தும் விற்று நாம் நிறை வயிறு கொண்டோராக இன்புறுவோம்… நாவாய் நம்பி புகார் நோக்கி….” என்னும் அந்த வரிகள் தாம் நெடுங்கிள்ளியின் உற்சாகத்திற்கு காரணம். அதே வேளையில் தன் மாமா இரும்பிடைவல்லன் ஏன் தன்னை குடந்தை ஆசாரியாரை காண அனுப்புகிறார் என்பது அவனுக்கு விளங்கவில்லை. ஆனால் நெடுங்கிள்ளியின் உள்ளத்தில் ஒன்று மட்டும் சந்தோஷத்தை, பொன்னி நதிப்போல சில்லென்று அள்ளித் தெளித்தது.

 

Advertisement

வேல்விழி தேவி

வேல்விழி தேவி அவனின் உள்ளத்தில் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து, பொதிகை மலை சாரல் போல சிரித்து, வெண்டை விரலால் சுட்டி அழைத்தது போல கண்களில் காட்சி தோன்றி தோன்றி மறைந்தது. குடந்தையிலிருந்து திரும்பும் போது வேல்விழியை தன் உடைமையாக மாமா தருவேன் என்றாரே… அது போதும்…வேள்விழி கிடைத்து உலகமே எனக்கு சொர்க்கமாக மாறிவிடும். பாண்டிய அரசன் நன்மாறன் தன்னோடு பால பருவம் முதல் காந்தளூர் சாலை மடத்தில் படித்தவன், பாலிய நண்பனும் கூட… அவனது தங்கையை அடிக்கடிசிறுவயதில் நெடுங்கிள்ளி சந்தித்துள்ள போதும், சென்ற சித்ரா பவுர்ணமி ரதத் திருவிழாவில்தான் அவளின் முழுமையான அழகை, அவளின் பருவ எழுச்சியை, கண்டு வியந்து போனான். காதல் அனுமதி கூட கேட்காமல் அவன் இதயத்துக்குள் வந்து பாடாய் படுத்தியது. அதிலும் அவளுக்கு ரதத்தில் பயணிப்பது பிடிக்கும் என்று தெரிந்த போது ரெட்டை மகிழ்ச்சி அடைந்து ஆனந்த கூத்தாடினான். அவளை தன் அருகில் வைத்துக் கொண்டு புகாரின் தெருக்களில் மின்னல் வேகத்தில் ரதமோட்டியது அவனுக்கு இப்போது நடப்பது போல தோன்றியது…. அப்போது அவள் எழுப்பிய உற்சாக குரலும், ரதத்தின் அசைவுக்கு ஏற்ப அவள் உடல் அவன் மீது உரசிய போது, கல்லணையின் உச்சியில் மோதி பொன்னியின் மீது பாய்ந்த பொதிகை காற்றாய் காதல் அவனுள் கிளர்ச்சியில் கூத்தாடியது.

Advertisement

காதல் லோகத்தில், மோக லயத்தில், சிற்றின்ப வேகத்தில் பயணித்து கொண்டிருந்த நெடுங்கிள்ளியின் சிந்தையை சட்டென்று முன்னாள் சென்ற ஆபத்துதவிகள் செய்த சமிக்ஞையும், அதையடுத்து படைகள் சறுக்கி நின்றதும் திடுக்கிட செய்தது…. சற்று நிதானித்தவன்…குதிரைகளின் வேகத்தை குறைத்து ரதத்தை நிறுத்தினான்….

என்ன நடக்கிறது இங்கே?!!… என்று கேட்ட நெடுங்கிள்ளியின் குரலில் கடுமை தெறித்தது. முன்னிருந்த ஓடி வந்த வேல் ஏந்திய வீரன் ஒருவன், மன்னிக்கவும் இளவரசே இங்கு ஏதோ அசம்பாவிதம் நடந்ததற்கான அறிகுறி தெரிகிறது என்றான்.

என்ன அசம்பாவிதமா? என்ற நெடுங்கிள்ளி… தூரத்தில் வீரர்களின் தலைவன் தரையில் வீழ்ந்து கிடந்த சில உடல்களை ஆராய்வதை உறுதி செய்து கொண்டவனாய், ரதத்தில் இருந்து இறங்க முற்பட்டான். அதற்குள் தன்னை நெருங்கி வந்துவிட்ட வீரர்கள் தலைவன்…..

Advertisement

இளவரசே!!! நீங்கள் ரதத்தில் இருந்து இறங்க வேண்டாம். இறந்து கிடப்பது தங்களின் ஆபத்துதவிகள். அவர்கள் தாக்கப்பட்ட விதம் மிகவும் தேர்ந்த வீரனால் நிகழ்ந்துள்ளது. நம் ஆபத்துதவிகளை வீழ்த்த மும்முடி அரசுகளிலும் யாரும் இல்லை… சம்பவம் சில நொடிகளுக்கு முன் நடந்து இருக்கலாமென்று தோன்றுகிறது. ஆகையால் கொலையாளி நிச்சயம் இங்குதான் இருக்க வேண்டும் என்றவன்…. சோழ ஆபத்துதவிகள் அனைவரையும் இளவரசனை சுற்றி அரணாக நிற்க கட்டளையிட்டான்.

நெடும்கிள்ளி ஊர்வலம்

அதற்குள் படைவீரர்கள் அந்த இடம் முழுவதும் கையில் வைத்திருந்த பந்தங்களின் உதவியோடு புதர்களிலும்,பொன்னி நதி சரிவுகளிலும், நாணல்கள் ஊடேயும் தேடத் துவங்கினர். ரதத்தில் இருந்தபடியே நெடுங்கிள்ளி இவற்றை பார்த்துக் கொண்டிருக்க…

பாழடைந்த மண்டபத்தில் இரண்டு ஜோடி கண்களும் நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருந்தன. இளவரசி… ஆபத்து நெருங்குகிறது, என்றான் இளமாறன்.

படைத்தலைவரே… அவர்கள் நம்மை தாக்கும் முன் நாம் தாக்கத் தொடங்கி விடுவோமா?!! என்றாள்… வீரத்தில் சற்றும் சளைக்காத வேல்விழி தேவி…

சற்று யோசித்த இளமாறன்… வீரத்தை விட இப்போது விவேகம் அவசியம் இளவரசி… சில நேரங்களில் வாளை விட மூளை தான் சிறந்த ஆயுதமாக செயல்படும்…. என்றவனின் உள்ளம் மளமளவென திட்டத்தை தீட்டியது…

இளவரசி நான் அவர்கள் முன் செல்கின்றேன்.. நீங்கள் இங்கேயே தங்கி இருங்கள். நெடுங்கிள்ளியிடம் நான் செல்வதால் ஆபத்து ஒன்றும் ஏற்படாது. அவனை நான் சமாளித்துக் கொள்கின்றேன். ஒருவேளை நான் அவனுடன் செல்வதாக இருப்பின் நீங்கள்…. நாங்கள் அனைவரும் சென்றபின் என்னுடைய புரவியில் ஏறி ஞானப்பிரம்மர் இல்லம் சென்று சேர்ந்து விடுங்கள். அதுதான் உங்களுக்கு பாதுகாப்பு. ஒருவேளை நண்பன் நலங்கிள்ளியை நீங்கள் சந்தித்தால் இங்கு நடந்தவற்றை தெளிவுபட கூறுங்கள்…நான் விரைவில் ஞானபிரம்மர் இல்லம் வருவேன் என்று கூறுங்கள்… அதே வேளையில் எனக்கு அவர்கள் மூலம் ஆபத்து வருமே என்றால் உங்கள் வில் பேசட்டும். நான் வாள் கொண்டு அவர்களை சமாளித்து கொள்கின்றேன் என்ற இளமாறனை வேல்விழி கவலையோடு பார்த்தாள்…

வேல்விழியின் குறி

படைத்தலைவரே எனக்காக நீங்கள் ஆபத்தை விலை கொடுத்து வாங்குகின்றீர்கள். இது சரியான தீர்வா??…என்றாள் வேல்விழி.

இளவரசி… என் நண்பர்கள் இருவரின் சொத்து நீங்கள். உங்களையும், உங்கள் பெண்மையையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு சகோதரனாக எனக்கு அதிகம் உள்ளது. ஆபத்து நேரத்தில் பெண்களை காக்காதவன் ஆண்மகனே இல்லை… சரி இப்போது பேச நேரமில்லை… நான் சொன்னபடி செய்யுங்கள் என்ற இளமாறன்…..
இருட்டில் விருட்டென மண்டபம் விட்டு புதருக்குள் பிரவேசித்தான்… வேல்விழி தன் அம்பாரத்தூணியில் இருந்து உருவிய அம்பை தன் வில்லில் நாணேற்றி தயாராக நின்றாள்….

அதே வேளையில் இருட்டில் புதரில் அதிக அசைவு தெரிவதை வீரர்கள் கவனித்தனர். அவர்கள் எச்சரிக்கையுடன் புதரை நோக்கி உருவிய வாளோடும், நீட்டிய ஈட்டியுடனும், தீப்பந்தத்தை உயர்த்தி பிடிக்கும் வேளையில்…

யாரது? உங்கள் அடையாளம் என்ன?…. என்று புதருக்குள் இருந்து இளமாறன் குரல் கொடுத்தான்…

குரலை கேட்டு வீரர்களின் தலைவன் பதில் குரல் எழுப்பினான். நாங்கள் சோழத்து வீரர்கள். நீ யார்? வெளியே வா… இல்லையெனில் உன் உயிர் உன்னிடம் இருக்காது என்றான்..

என்னது சோழ வீரர்களா? என்ற இளமாறன்… தனிப்படை தலைவனை வீழ்த்திவிட சோழத்து தேசத்தில் வீரருரும் உண்டோ? எங்கே உன் முகத்தை பார்க்கலாம் என்று பேச்சு கொடுத்தவாறே… உருவிய வாளுடன் புதருக்குள் இருந்து வெளியே வந்தான்….

வீரர்கள் தலைவனுக்கு இளமாறனை கண்டதும் அதிர்ச்சி, அவனும் அவன் வீரர்களும் பணிந்து வணக்கம் செய்தனர்… அதே வேளையில் ரதத்தில் இருந்து இதையெல்லாம் கவனித்த நெடுங்கிள்ளியின் முகத்தில் அதிர்ச்சியும் கூடவே மகிழ்வும் பிறந்தது…. தேரில் இருந்து இறங்கிய அவன் இளமாறனை நோக்கி வந்தான்…

அவனை கண்ட தனிப்படை தலைவன் சம்பிரதாயத்திற்கு வணக்கம் செலுத்தினான். அதை பொருட்படுத்தாமல் அவனை நெருங்கி சென்று அணைத்துக்கொண்ட நெடுங்கிள்ளி இளமாறா என்னது இது?… நான் உன் நண்பன் அல்லவா? என்னை நீ வணங்குவது ஏன்? என்றான்….

என்ன இருந்தாலும் நீங்கள் பட்டத்து இளவரசர், நாளைய சோழதேசத்தின் சக்ரவர்த்தி ஆகவுள்ளவர்… மரியாதை செலுத்துவது அவசியம் என்று கூறினான் இளமாறன்… புதிரை தன் பதிலுக்குள் ஒளித்து வைத்து.

அந்த பிராந்தியமே அதிரும்படி சிரித்த நெடுங்கிள்ளி… நண்பா உன்னை கண்டதில் மகிழ்ச்சி… ஆயினும் இங்கு என்ன நடந்தது? என்று வினவினான்….

இளவரசே… நான் நாகையில் இருந்து தங்களையும், முதன்மை மந்திரி ஞானபிரம்மரையும் காணும் பொருட்டு உறையூருக்கு வந்து கொண்டிருந்தேன்.அப்போது இந்த பகுதியில் இருந்து பத்து பேர் என்னை சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டனர். ஆகவே அவர்களை நானும் பதிலுக்கு தாக்கினேன். இருவர் வீழ்ந்த நிலையில் மற்றவர் ஓடி விட்டனர். என்னுடைய புரவியும் புதருக்குள் எங்கோ சென்றுவிட்டது. அதை தேடி வரும் வேளையில் தான் வீரர் தலைவன் தன் பிரதாபங்கள் பேசினார். அவரது உண்மை தன்மையை அறிந்து கொள்ள வெளியே வந்தேன் என்று நீண்ட பொய்யை பிசிரில்லாமல் கூறினான்…

அப்படியா? ஆனால் இவர்களை பார்த்தால் சோழ ஆபத்துதவிகள் போல தெரிகிறதே இளமாறா… உனக்கு தெரியவில்லையா என்றான் நெடுங்கிள்ளி….

இளவரசே… இந்த மையிருட்டில் யார் எதிரி என்று எவ்வாறு யூகிப்பது? மேலும் சோழ ஆபத்துதவிகள் என்னை தாக்க என்ன காரணம் இருக்க முடியும் என்று கேட்டான் இளமாறன்?

அதுவும் சரிதான்… சரி விடு.. நீ எதை செய்தாலும் சரியாகத்தான் செய்வாய்… இவர்கள் ஏன் தாக்கினார்கள் என்பதை வீரர் தலைவனிடம் விட்டுவிடுவோம்… என்ற நெடுங்கிள்ளி…. நண்பா நீ என்னோடு குடந்தை வருகின்றாயா என்று கேட்டான்..

மனதிற்குள் திட்டங்கள் வகுக்க துவங்கி இருந்த இளமாறன்… சரி நிச்சயமாக வருகின்றேன் இளவரசே.. அதே வேளையில் ஞானபிரம்மர் என்னை அவரது மாளிகையில் சந்திக்க சொல்லியிருக்கிறார்… அவரை உங்களோடு குடந்தை சென்று திரும்பியவுடன் சந்திப்பதாக ஒரு ஓலை எழுதி வீரரில் ஒருவரிடம் கொடுத்து அனுப்பிவிட வேண்டும் என்றான் இளமாறன்…

அருமை… அருமை…உடனே செய்துவிடலாம் நண்பா… ஏ… யாரெங்கே நறுக்கிய ஓலையும், எழுத்தாணியும் உடனே கொண்டுவா… என்று நெடுங்கிள்ளி கூற வீரன் ஒருவன் அவற்றை கொண்டுவந்து இளமாறனிடம் கொடுத்தான்….

ஓலையை எழுத தொடங்கிய இளமாறன்… விபரங்களின் நடு நடுவே சிறு சிறு சங்கேத எழுத்துக்களையும் வரைந்தான்… எழுதி முடித்தபின்.. அதை ஒரு செப்பு குழலில் அடைத்து வீரன் ஒருவனிடம் கொடுத்தான்.

வீரனே உடனே நீ ஞானப்பிரம்மர் மாளிகை சென்று இந்த ஓலையை ஒப்படைத்து விட்டு பூம்புகார் சென்று மாமாவை கிளம்பி உறையூருக்கு வர நான் சொன்னதாக கூறு…என்ற நெடும்கிள்ளி இளமாறனுடன் ரதத்தில் ஏறிக்கொள்ள ரதம் குடந்தை நோக்கி சோழ பரிவாரங்களுடன் புறப்பட்டது…

அதே வேளையில் அத்துணை செயல்களையும் மண்டபத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த வேல்விழி இளமாறனின் சாதுர்யம் குறித்தும், அவனின் தைரியம் குறித்து பெரிதும் வியந்தாள். அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு விட்டார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட வேல்விழி மண்டபதிலிருந்து வெளியே வந்து எங்கு முதலில் செல்லவேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டவளாய் இளமாறனின் புரவியை தேடி கண்டுபிடித்தாள்.. முதலில் சிறிது முரண்டு பிடித்த புரவி பின் அவளின் எண்ணத்திற்கு ஈடுகொடுக்க துவங்கியது… புரவியில் ஏறி அமர்ந்த வேள்விழி, உறையூர் செல்லும் பாதையில் புரவியை லாவகமாக அதே வேளையில் வேகமாக செலுத்தினாள்… அவளின் எண்ணத்தை உணர்ந்து கொண்டதாக புரவியும் வேகமெடுத்தது….

வேல்விழி அந்த இடத்தை விட்டு அகன்ற சிறிது நேரத்தில் மண்டபத்தின் பின்பு இருந்த அடர்ந்த ஆலமரத்தில் இருந்து முன்குடுமி வைத்திருந்த, ஒரு பருத்த உருவம் இறங்கியது. இறங்கிய அந்த ஆண் ஒரு சேர அந்தணன் போல வேடமிட்டு இருந்தான். தன் உதடுகளை திறந்து அவன் கூறிய வார்த்தைகள்…

அந்தணர் வேடமிட்ட ஒற்றன்.ஆலமரத்து அபாய சங்கு

“இளமாறன் இருக்கும் வரை நெல்லும்,முத்தும், நாவாயில் ஏறப்போவதில்லை…..”

தொடரும்….

 

Bharathipriyan

I am an experienced story writer, script maker, poet and trainer for life skills.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!