Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்16

கல்யாணம், இறப்பு என ஒன்றன் பின் ஒன்றாக யாரும் எதிர்பாரா சமயத்தில் எல்லாம் நடந்து முடிந்தும் விட.. அதிலிருந்து மீண்டு வர யாருக்கும் தெம்பு இல்லை.

மகிழை சந்தேகப்பட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் அவளிடம் இருந்து வீட்டினர் ஒதுங்கி நிற்க.. நந்தாவின் தவறுக்காக அவன் வீட்டினர் அவனை ஒதுக்கி வைக்க.. ஆக மொத்தம் யாருக்கும் நிம்மதி இல்லாமல் நாட்கள் நரகமென கழிந்து கொண்டிருந்தது.

அதுவும் நந்தாவின் வீட்டில் தாங்கிக் கொள்ள முடியாத பேரிழப்பு.. சாரதாவிற்கு ஐம்பது, ஐம்பத்து ஐந்து வருடம் தன் கூடவே கரம் பற்றி தனக்கு முன்னால் நடந்த மனிதர் இன்று இல்லையே.. இனி மீண்டும் எப்போது அவரைப் பார்ப்போம்.. என எந்நேரமும் அழுது கொண்டே இருந்தார்.

ரேவதிக்கு தன் இத்தனை வருட நம்பிக்கையே தகர்ந்தது போல இருந்தது.. நந்தாவின் அப்பாவிற்கும் தந்தையின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றானது.. ஆனால் அதை விழுங்குவதற்குள் நந்தா செய்திருந்த காரியம் அதற்கு மேலும் அவர்களை வருத்தியது.



Advertisement

அதன் பொருட்டே அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய மகிழை அவர்கள் தடுக்கவோ இல்லை மறுபடியும் அழைக்கவோ இல்லை.. அவள் செய்தது சரி தான் என நினைத்துக் கொண்டனர்.. அவள் கழட்டி வைத்திருந்த தாலி பூஜையறையில் கேட்பாரின்றிக் கிடந்தது.

மகிழ் வீட்டில் அவ்வா மட்டும் இப்படி எடுத்தேன்.. கவிழ்த்தேன் என அவசரப்பட்டு அவள் தாலியைக் கழட்டியது தவறு என அவளை வசை பாடிக் கொண்டிருக்க.. ராகவன் ஒரு அதட்டல் போடவும் அமைதியானார்.

முத்துவின் அப்பா இரு வீட்டிற்கும் பொதுவாய் பேச.. மகிழ் முடிவாக தான் படிக்க வேண்டும் என்றுவிட்டாள்.. ராகவனும் மகளின் முடிவு தான் சரி என்க.. அதன்பின் அனைத்தும் பழையபடி மாறினாலும்.. அனைவர் உள்ளும் என்னவென்றே தெரியாத ஒரு பாரம் ஏறித்தான் போனது.

Advertisement

நந்தா மகிழ் பிரிந்து சென்ற பின்.. வீட்டிற்கே சரியாக வராமல் இருப்பதும்.. ஏனோ தானோவென நடந்து கொள்வதுமாய்.. ஒருவித குற்றவுணர்ச்சியில் இருந்தான்.. தன்னால் தான் தன் தாத்தா இறந்தார் என அவன் பிரியமான அப்பத்தாவிடம் கூட பேசுவதில்லை.

Advertisement

மனைவியும் இன்றி தடம் மாறிப் போய்விடுவானோ என பயந்து போனவர்கள்.. வற்புறுத்தி பள்ளியின் பொறுப்பைக் கொடுத்தனர்..

‘மாமா.. பணம்ன்ற காகிதத்தால யாரோட திறமையும் மூழ்கிப் போய்டக் கூடாது மாமா.. அதனாலேயே நான் ஒரு நல்ல டீச்சர் ஆகனும்’ என்ற மகிழின் குரல் அவன் காதில் ஒலித்துத் தேய.. தனக்கென ஒரு பிடிப்பாக இதைக் கருதி.. இதில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தான்.

மகிழோ அனைவரின் பரிதாபப் பார்வையை எதிர் கொள்ள முடியாமல்.. தன் தாய்மாமா வீட்டில் இருந்து படிப்பதாகக் கூற.. அவளது மன மாற்றத்திற்காக அவள் வீட்டினரும் தலையசைத்தனர்.

Advertisement

இத்தனை நாட்கள் எதையும் நினைத்துப் பார்க்க பயந்தே அதைப் புறந்தள்ளி இருந்தவளுக்கு.. அந்த வினிதாவின் பேச்சு.. அனைத்தையும் கிளறி விட.. தன் பிம்பத்தைப் பார்த்தபடி அந்த நாளிற்குள்ளேயே சென்றுவிட்டாள்.

நந்தாவைப் பார்க்கும் போது கூட தெளிவாக இருப்பவளால் அவனது நியாபகங்கள் கொடுக்கும் இதத்தைத் தான் சகித்துக் கொள்ள முடிவதில்லை.. அப்படி இருந்தவன் ஏன் இப்படி ஆனான்.. அல்லது தான் தான் ஏமாந்து நிற்கின்றோமா.. ஒருவன் பழகும் விதம் கூட தெரியாத முட்டாளா தான்.. இல்லையே அவள் மீது அவன் கொண்ட நேசத்திற்கு முழு சாட்சியே அவள் தானே.

நியாபகங்கள் தொட்டு யோசனைகள் நீண்டு கலைந்து அவள் பார்க்கவும் மணி இரண்டு என்று வஞ்சனை இல்லாமல் காட்டியது கடிகாரம்.. இதற்கு மேல் உறக்கம் வருமா என்பது சந்தேகம் தான்.

ஒருவாறு அவன் நினைவகளுடன் கண் அயர்ந்தவளுக்கு அந்த சனிக்கிழமை பொழுது சோம்பலாகத்தான் விடிந்தது.. விடுமுறை தினம் தானே.. அவள் முகம் இரவே சரி இல்லாமல் இருந்ததால் யாரும் எழுப்பவில்லை.. அவளாக எழுந்து குளித்து கீழே வரவும்.. வீடே நிசப்தமாக இருந்தது.

அவ்வா மட்டும் தன் ஃபோனைப் பார்த்தபடி தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டு இருக்க.. மற்றவர்கள் எங்கே என அவரிடம் விசாரிக்க.. அவளுக்கு பதிலளித்தபடியே அவளை காலை உணவு உண்ணச் சொன்னவர் “ஏங்கண்ணா.. என்னவோ மாதிரி இருக்க” எனக் கேட்கவும்..

அவள் “ப்ச்.. ஒன்னுமில்லை” என சலித்துக் கொள்ளவும்.. பேத்தியின் மனநிலையை ஓரளவு கணிக்க முடிந்தது அவரால்.. எதிலுமே ஒரு ஆர்வம் இல்லை.. என்னவோ ஏதோ என ஒரு அலட்சியம்.

“இப்பவே இந்த சலிப்பா.. இன்னும் காலமெங்க தேசமெங்க.. நீயு இன்னும் ராஜவேலு பேத்தியைப் பாக்கவே இல்லை தானே.. போய் ஒரெட்டுப் பாத்துட்டு வா.. வீட்லயே எவ்வளவு நேரம் அடைஞ்சு இருப்ப” என்க.. அவளுக்குமே வெளியில் சென்றால் கொஞ்சம் நன்றாக இருக்கும் போல இருந்தது.

சுடிதாரை மாற்றி ஏற்கனவே குழந்தைக்கு வாங்கி வைத்திருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு.. அவ்வாவிடம் சொல்லிவிட்டு.. முத்து வீட்டிற்கு கிளம்பினாள்.

முத்துவின் வீட்டிற்குள் சென்றவளை “ஒருவழியா ட்ரெயின் கிடைச்சுதா” என முத்துவின் அம்மா கேலி செய்தபடியே வரவேற்க.. “ஆமாத்தை.. ஆனாலும் பாருங்க.. ஃப்ளைட் கிடைக்கலை.. எப்படியோ வந்துட்டேன்.. உங்களைப் பாக்க” என அவரிடம் வாய் வளர்த்தபடியே உள்ளே நுழைந்தாள்.

முத்துவின் அக்கா தமிழரசி அவள் மாமியார் வந்திருக்க.. அவளிடம் பேசிக் கொண்டிருந்தவளும் “இப்பத்தான் வரதா” என சண்டைக்கு வர.. “ஐயோ.. வரக் கூடாதுன்னு எல்லாம் இல்லைக்கா.. ஹெவி கோல்ட்” என பேசியவாறே குழந்தைக்கு வாங்கிய உடைகளையும் விளையாட்டு பொம்மைகளையும் கொடுக்க.. அப்போது தான் முத்து வீட்டின் பின்புறம் இருந்து வந்தாள்.

அவளும் ஏதோ கேட்க வரவும் “ஐயோ போதும் நீயும் கேட்காதே.. இதுக்கு மேல முடியாது தெய்வமே” என்றவள் பின் தமிழரசியோடு குழந்தையைப் பார்க்கச் சென்றாள்.

செப்பு வாயை லேசாக ஓபன் செய்தபடி.. கொசுவலைக்குள்.. கடவுள் வந்து விளையாட்டு காட்டுவார் போலும்.. செப்பு இதழ்கள் லேசாய் விரிய.. தாமரை மொட்டு போல இருந்தாள் குழந்தை.. அவளை ஆசை தீர ரசித்து விட்டு வெளியே வந்து அனைவரோடும் பேசிக் கொண்டிருக்க.. அப்போது தான் நந்தா சாரதா அப்பத்தாவுடன் உள்ளே வந்தான்.

குழந்தைக்கு குளித்து விடுவதற்காக அவரை அழைத்து வந்திருந்தான்.. மகிழும் அப்பத்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்து உதட்டை சுழித்துக் கொண்டு திரும்பிக் கொண்டனர்.

நந்தா நேற்றைய அழுகையின் சுவடுகள் எதாவது மகிழ் முகத்தில் தெரிகிறதா என ஆராய.. அவளோ அவனைக் கண்டு கொள்ளாமல்.ஹ முத்துவுடன் குழந்தைக்கு நல்ல பெயராகத் தேடிக் கொண்டிருந்தாள் தன் மொபைலில்.

அவளைக் கண்டு பெருமூச்சு விட்டவன் தமிழரசியிடம் “மருமக என்ன சொல்றா” என வினவ.. அவள் மாமியார் “அத்தை வேணும்னு சொல்றா” என்றார் சிரித்தவாறே.

அனைவரும் ஷாக்காகி மகிழைப் பார்க்க.. அவளோ ஒன்றையும் கண்டு கொள்ளவில்லை.. தமிழரசியின் மாமியார் மேலும் சும்மா இராமல் சாரதா அப்பத்தாவிடம் “பேரனுக்கு தான் வயசாச்சே சின்னம்மா.. பொண்ணு பாக்கலையா” என தூண்டில் வீசினார்.

அவரோ பதிலுக்கு “எம்பேரன் உசரத்துக்கு பொண்ணு எங்க இருக்கு செண்பகம்.. எல்லாம் எலிக்குட்டியா இருக்காளுங்க” என மகிழை ஜாடை பேச

முத்துவிடம் மகிழ் “கிழவிக்கு கொழுப்பைப் பாத்தியா.. நான் குள்ளமா இருக்கேன்னு இன்டைரக்டா சொல்லுது” என முணுமுணுக்க.. முத்து “டைரக்டா சொல்லுது” என நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.

செண்பகம் மீண்டும் “அதுக்கென்ன.. என் தங்கச்சி பொண்ணு ஒருத்தி இருக்கா.. தம்பிக்கு பொருத்தமா இருப்பா” என்க.. அதற்கும் சாரதா அப்பத்தா மகிழைப் பார்த்தபடியே “நல்லா கலரா இருக்குமா.. இங்க எல்லாம் கருப்பட்டி மாதிரி இருக்காங்க.. அதான் சொல்றேன்” என மீண்டும் அவளை சீண்ட..

மகிழ் பகிரங்கமாவே சாரதா அப்பத்தாவை முறைத்து “என்னை விடு டி.. இன்னைக்கு உன் அப்பத்தா வாய்ல தீக்குச்சி கொளுத்திப் போடுறேன்.. ஏன் துரைக்கு கருப்பட்டி பத்தாதாமா.. சீம்பு தான் வேணுமோ” என முத்துவிடம் பொங்க.. என்ன முயன்றும் முத்துவால் இம்முறை சிரிப்பை அடக்க முடியாமல் போக.. களுக்கென சிரித்தாள்.

மகிழின் கடுகடுவென்ற முகம் நந்தாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது.. வெறுப்பாகக் கூட அவனைப் பார்க்காமல்.. கண்டு கொள்ளாமல் இருக்க.. அவள் மறந்து தான் போனாளா என்னை என அவன் நினைத்திருக்க.. இந்த கோவம் அவனுக்கு சிறு புன்னகையைக் கொடுத்தது.

அதே சிரிப்புடன் மகிழைப் பார்க்க அவளோ அவனை ‘உன்னை இப்படியே அடிக்கவா.. இல்லை ஓடவிட்டு அடிக்கவா’ என்பது போலப் பார்த்தாள்.

முத்து தான் இடைப் புகுந்து “அடியே.. எங்கண்ணனை பாத்தே தேய்ச்சிடாதே.. என்ன தான் பிடிக்கலை பிடிக்கலைன்னு சொன்னாலும்.. அப்பத்தா வேற பொண்ணு பாத்தா டென்சன் வருது தானே” என கலாய்க்க

அவளையும் வஞ்சனையின்றி முறைத்தவள் “உன் நொண்ணனுக்கு பொண்ணு பாருங்க.. புண்ணாக்கு பாருங்க.. அதுக்கு ஏன் என்னை இழுக்குது.. உன் அப்பத்தா கிழவி.. ஓவர் சேட்டை” என அவள் மீது தன் கடுப்பைக் காட்ட..

மகிழ் அதற்கு மேலும் பொங்குவதற்குள் முத்துவின் அம்மா குழந்தையை எடுத்து வந்து.. குளிப்பாட்டக் கொடுக்க.. அதற்குள் மகிழுக்கு அவள் அவ்வாவிடம் இருந்து ஃபோன் வர கிளம்பினாள்.. மறக்காமல் நந்தாவை ஒரு முறை முறைத்தவாறே..

முத்து முகம் தூக்க.. “கோச்சுக்காதே டி.. நம்ம சாமியார் ஜாதகம் நேத்து ஒருத்தருக்கு அனுப்பினோம்.. ஃபோட்டோ கேட்ருங்காங்க.. அதான் அவ்வா கூப்பிடுது.. நல்ல காரியம் ஏன் தள்ளிப் போடனும்னு” என அவள் தாடை பற்றி கெஞ்ச.. அவள் சொன்ன செய்தியில் முத்துவின் முகம் இன்னுமே களையிழந்து போனது.

அவளுக்குத் தெரியும் தான் இது சேராத காதல் என.. ஆனாலும் முகிலோடு வேறொரு பெண்ணை நினைக்கக் கூட முடியவில்லை.. கண்கள் கூட கலங்கும் போல.. வாயைத் திறக்காமல் சரி என தலையசைக்க.. அவளுக்கு கோவம் என நினைத்த மகிழும் “சாரிடி தங்கம்” என்றவாறே கிளம்ப.. முத்துவும் வாசல் வரை வந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!