Thenmazhai Thoovuthadi 19 2
மறுநாள் அரவிந்திடம் வேறு சில காரணங்களை சொல்லி சமாதானம் செய்து அவர்களை மட்டும் லட்சத்தீவுகள் அனுப்பி வைத்தனர் விக்ரம் வரு தம்பதியர் .
அரவிந்தும் அனுவும் மாலை ஆறு மணிக்கெல்லாம் இந்தியாவின் தேன்நிலவு தம்பதிகளுக்காகவே படைக்கப்பட்டது போல் இருந்த லட்சத்தீவுகளில் ஒன்றான அகத்தி தீவுக்கு வந்தடைந்தனர்.
அங்கிருந்த ரிசார்ட்டில்
Advertisement
அவர்களுக்காகவே பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த படுக்கை அறைக் கதவைத் திறந்ததுமே மனைவியை பின்புறமிருந்து கட்டிக் கொண்டு அவள் கழுத்தில் வாசம் பிடித்தவன் ,
” கேண்டி … செம ரொமான்ட்டிக் பிளேஸ்ல ” என அவள் காது மடல்களை இதழ்களால் தீண்ட , கூசிச் சிலிர்த்தவள் அவன் கைகளை விலக்கி அவனைத் திரும்பிப் பார்த்து ,
Advertisement
Advertisement
“ம்… என் மச்சானுக்கு இந்த ரூம் பார்த்ததும் ரொமான்டிக் மூட் வந்துருச்சோ… அங்கிருந்து கிளம்பி இங்க வர்ற வரை இல்லையே ….”
அவளை இடையோடு கட்டிக் கொண்டு ,
Advertisement
“அதுக் கேண்டி … தங்கச்சி … ” என்றதும் அவன் உதடுகள் மேல் தன் விரல்களை வைத்தவள் ,
“எங்கண்ணன் அண்ணி ரொம்ப சந்தோஷமா இருக்காங்க… நிஜமா அவங்க ரெண்டு பேருமே அதிர்ஷ்டசாலிங்க … ” என்ற வித்யாவை இறுக்கமாக கட்டிக் கொண்ட அரவிந்த் ,
“தேங்க்ஸ் … கேண்டி தேங்க்ஸ் … விக்ரம் வேலையப் பத்தி தெரியும் … இருந்தாலும் அவங்க வரலனதும் ஒரு உறுத்தல் … அதையேதான் யோசிச்சுட்டு வந்தேன் … உன்கிட்ட காட்டிக்க கூடாதுனு நினைச்சேன் …. ஆனா நீ … நீ கிடையாது நான் தான்னு நிருபிச்சுட்ட ” என்றவன் அவள் உணரும் முன்னமே கைகளில் அனுவை தூக்கி இருந்தான்.
அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டவள் ,
“அது இப்பதான் உங்களுக்குத் தெரியுதா …. எப்போ காலுக்கு மருந்துப் போடறேன்னு என் காலைப் பிடிச்சிட்டு ‘சாரி’ னு சொன்னீங்களோ அப்பவே நான் ….நான் கிடையாதுனு தெரிஞ்சுப் போச்சு ….”
“இஸ் இட் …. ஆமா அந்தக் கால் புண் சரியாகிருச்சா பார்க்கட்டுமா … ” என்றவாறு அவளைக் கட்டிலில் விட ,
“அதெல்லாம் டாக்டர் தந்துட்டுப் போன மருந்தால அப்பவே சரியா போ …..”
அவள் விளையாட்டாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் பாதங்களை கைகளால் வருடிக் கொண்டிருந்தவன் அவள் உள்ளங்காலில் முத்தம் பதிக்க ,
உடல் சிலிர்க்க , “அத்…தான்…” மெல்லிய குரலில் காலை மடக்க முயல , கெட்டியாக பிடித்துக் கொண்டு தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன் ,
“சாரி …. அன்ட் … தேங்க்ஸ் கேண்டி ..” அனுவால் வாயைத் திறக்கவே முடியவில்லை , அவனின் செய்கை , உடல் , உள்ளம் இரண்டையும் உணர்ச்சிவசப்படச் செய்ய விழிகளில் குளம் கட்ட பார்த்தது பார்த்தபடி இருந்தாள்.
அரவிந்த் அவளையேப் பார்த்தவன் ,
” உன்னைய இத்தனை வருஷமா தவிக்க விட்டதுக்கு சாரி…. அதைத் தப்புனு இப்ப உணர வச்சதுக்கு தேங்க்ஸ் ….”
எழுந்து அருகில் வந்து அமர்ந்தவன் , ” எப்பவும் நான் நல்லாருக்கேன் … எனக்கு எந்தக் குறைவும் இல்லனு நினைச்சு சந்தோஷப்படுறத விட , நமக்கு நெருக்கமானவங்க நல்லா இருக்காங்கனு தெரியறப்போ வர்ற ஃபீல் ….. இப்ப நீ எனக்கு அந்த ஃபீல் தான் தந்த …. நான் கேட்காமலயே என் முகத்தைப் பார்த்தே எனக்கான பதில் கொடுத்தப் பாரேன்….அப்பதான் உணர்ந்தேன் நான் உன்கிட்ட அம்முவுக்குப் பேச்சு போனத சொல்லாம விட்டது எவ்வளவு பெரிய தப்புனு….”
அவன் மனநிலையை மாற்றும் பொருட்டு ,
“அத்தான் … வரு நல்லா இருப்பா கவலைப்படாதீங்க … ரொம்ப நேரம் ட்ராவல் பண்ணினது நான் போய் குளிச்சிட்டு வாரேன்.” எனக் கட்டிலை விட்டு இறங்க முற்பட ,
“ஓகே வா போய் குளிக்கலாம் ….”
” என்ன குளிக்கலாமா… ”
“முதல்ல முத்த குளியல் அதுக்கப்புறம் மொத்தக் குளியல் …. எப்படி ..” என கண் சிமிட்டியவன்,
அவளை நெருங்கி முத்தமிட ஆரம்பிக்க … தன் வசமிழக்க ஆரம்பித்தவளிடம் கிசுகிசுப்பாக ,
” எத்தனை வருஷக் காத்திருப்புத் தெரியுமா.. இந்த பஞ்சு மிட்டாய டேஸ்ட் பண்ண ….” என கழுத்தில் இதழ் பதித்தவன் , பஞ்சு மிட்டாயை சுவைத்த பின் தான் விட்டான்.
இப்படியே தங்கள் தேனிலவு நாட்களை ஒரு வாரத்தில் முடித்துக் கொண்டு அவர்கள் கோவைக் கிளம்பி விட , ஆதியும் அமிர்தாவும் வழக்கம் போல் தங்கள் நாட்களைக் கொண்டு சென்றனர்.
வேந்தனும் அவனது அலுவலகத்தில் இருந்த சில ஊழியர்களும் இருமுடிக் கட்டி கோவிலுக்கு கிளம்பி விட , ஆதி வெளிநாடு கிளம்பும் நேரமும் வந்தது.
அவனோடு மூன்று உதவியாளர்களும் செல்ல இருப்பதால் திருவனந்தபுரத்திலிருந்தே விமான டிக்கெட் போடப்பட்டு இருந்தது. தனக்கு புராஜக்ட் முடிக்க வேண்டியிருப்பதால் கோவைக்கு தனியே விமானத்தில் செல்ல முடிவெடுத்தவளை லதா தடுத்து விட்டார். முதன்முதலாக தாய் வீடு செல்லும் திருமணமான பெண் கணவனோடு தான் செல்ல வேண்டும் என்றுக் கூறியதால் அமிர்தா தனியாகச் சென்னைக்குச் செல்ல முடிவெடுக்கப்பட்டது.
இதோ விமான நிலையத்தில் அமர்ந்திருந்தனர் .அவளை அனுப்பி விட்டு அவன் வெளிநாட்டு முனையம் செல்வதற்காக அமர்ந்திருந்தான். இந்த பதினைந்து நாட்களாக தான் உடனிருந்தது , ஆனால் அவளோடு நிறைய நாட்கள் பழகிய உணர்வு , அதிலும் வெறும் நண்பர்களாக இருந்ததற்கே இந்தப் பிரிவு அவனை வாட்ட, பொது இடம் என்றுக் கூடப் பாராது , அவளை நெருங்கி அமர்ந்து , அவள் கையைப் பற்றிக் கொண்டான்.
“ரிது … ரொம்ப மிஸ் பண்ணுவேன்…., முடிஞ்ச அளவு சீக்கிரம் வரப் பார்க்கிறேன். ஃபோன் பண்ணினா உடனே எடு…. “அனைத்திற்கும் தலையை தலையை ஆட்ட, நிமிர்ந்து நேருக்கு நேராக அவள் விழிகளை சந்தித்தவன் ,
“ஸ்பீச் தெரபிஸ்ட் கிட்ட அம்மாக்கூடப் போ…” இப்படி ஏதேதோ பேசிக் கொண்டே இருக்க , அவள் விமானத்திற்கான அழைப்பு வரவும், அந்த எஸ்கலேட்டரில் கால் வைத்தவள் மறுபடியும் திரும்பி ஆதியின் அருகில் வந்து அவனறியும் முன்னமே கட்டிப்பிடித்து நெஞ்சில் சாய்ந்து , முடிந்த வரை சத்தமாக ,
“ஐ லவ் யூ விக்கி …. மிஸ் யூ டூ … கம் சூன்….” என்று விட்டு விடுவித்தவள் வேகமாக நகரும் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டு கண்களை துடைத்துக் கொண்டே செல்ல , அவனோ அவளை விட வேகமாக ,
“ஹேய் ” என மகிழ்ச்சியில் கத்திக் கொண்டே அவளருகிலேயே நின்று,
“ப்ளீஸ் இன்னொரு தடவை என் முகம் பார்த்துச் சொல்லு… ”
” நேரமாகுது இறங்குங்க… ” நாணத்தோடும் பதட்டத்தோடும் சொல்ல …
“நீ சொல்லு…” எனப் பிடிவாதமாக நின்றவனிடம் ,
“போய்ட்டு வந்ததும் சொல்றேன்…. ” என்றவளை பொது இடம் என்றும் பாராமல் கன்னம் பிடித்து நெற்றியில் முத்தமிட, நாணம் மேலிட பயணிகள் மட்டுமே செல்லும் நுழைவாயிலில் புகுந்துக் கொண்டாள்.
அவளைப் பார்த்துக் கொண்டே நகரும் படிக்கட்டுகளில் இறங்கும் வழியில் சென்று விட்டான். இப்போது மனைவியின் அருகாமை இன்னும் வேண்டும் என்றுத் தோன்ற, அவள் கன்னம் தொட்டக் கைகளை தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான்.
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளிக்
கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்….
அவனது விமானம் கிளம்பும் போதே திரும்ப வரும் நாளை எதிர்பார்த்துக் கிளம்பினான்.
சென்னை வந்திறங்கியவளை லதாவும் செல்வராஜும் வரவேற்று அழைத்துச் சென்றனர்.மருமகளின் முகம் பார்த்த லதாவிற்கு பூரண திருப்தி .அதோடு மகனை நினைத்துப் பெருமையும் கூட , அன்று மகனை அழைத்து அத்தனை பேர் முன்னிலையிலும் நிற்க வைத்தவர் ,
“நம்ம வீட்டுப் பொண்ணு சந்தோஷமா இருப்பா , அதே போல அவங்க வீட்டுப் பொண்ணும் சந்தோஷமா இருக்கணும் , அதுக்கு காரணம் நீயா இருக்கணும் , மாப்பிள்ளை தங்கச்சிய நீ இப்பவே கல்யாணம் பண்ணிக்கிறியா … ”
ஆதி யோசிக்கவே இல்லை , ” கண்டிப்பா மா… ஆனா … ”
“ஆனா … ஏன் இந்த அவசரம் … எதுக்குனு தெரிஞ்சுக்கணுமா …”
“என்னம்மா நீங்க …. நீங்க கை காட்டுற பொண்ணுதான் என் மனைவி … நான் எந்தக் கேள்வியும் கேட்கப் போறதில்ல… ஆனா ஒரு மாசம் கழிச்சுப் பண்ணிக்கிறேனே… உங்களுக்குத் தெரியுமே மா என் வேலையை பத்தி ….” ஒரு கையை இதற்கு மேல் பேசாதே என்பதாக சைகை செய்து ,அவன் பேசி முடிப்பதற்குள்ளாகவே நாதன் புறம் திரும்பிய லதா ,
“அண்ணா உங்க பொண்ணுதான் என் மருமக , நாளை கழிச்சு வர்ற முகூர்த்தத்துல கோவில்ல கல்யாணம் … ” அதன் பிறகு அவன் ஏன் ஒரு மாதம் கழித்து வைக்கச் சொன்னான் என்பதை தன்னிடமும் அனுவிடமும் பகிர்ந்துக் கொண்டதை நினைத்து அவருக்கு சிரிப்பு தான் வரும்…..
இப்படி தன் கட்டாயத்தில் தாலிக் கட்டிய மகனது வாழ்க்கை எப்படி இருக்கிறதோ , ஃபோனில் உற்சாகமாக உரையாடினாலும் அது தன்னை வருத்தமடையச் செய்ய வேண்டாம் என்பதாலோ… தங்களையும் அங்கே வர வேண்டாம் என்றதற்கு கட்டாயத் திருமணம் ஒரு காரணமோ ….என்பது போல் நிறைய காரணங்களை மனதில் தேக்கி சிறு குற்றவுணர்ச்சியிலும் , கவலையிலும் இருந்தவருக்கு மருமகளின் முகப்பொலிவு அப்படி இல்லை என்பதை உணர்த்த மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தவர் காரில் வரும் போது அவளருகில் அமர்ந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டார்.
தூவும் …..
