Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்16

அங்கு மகிழை அழைத்துச் செல்ல முகில் வந்திருக்க.. அப்போது தான் வீட்டிற்கு திரும்பியிருந்ந முத்துவின் அப்பா ராஜவேலு அவனிடம் ஏதோ பேசியபடி இருந்தார்.

மகிழ் வந்ததும் போகலாமா என அவளிடம் கேட்கவும்.. ராஜவேலு “உள்ள வாங்க மாப்ள” என்க.. அவன் அவ்வா அவசரமாக வரச் சொன்னதாகக் கூறியபடி முத்துவைப் பார்க்க.. அவளோ இவன் பார்வையை சந்திக்க மறுத்து வேறுபுறம் திரும்பியிருக்க.. ‘என்னாச்சு’ என்ற குழப்பத்துடனே மகிழை அழைத்துக் கொண்டு சென்றான்.

உள்ளே நுழைந்ததும் அவ்வா “நல்லா பாக்கற மாதிரி ஒரு ஃபோட்டோ அனுப்பு” என மகிழிடம் கூற.. பாட்டியும் பேத்தியும் பேசிக் கொண்டதை வைத்து முத்துவின் முகம் திருப்பலுக்கான காரணம் உணர்ந்தவன்.. அமைதியாக அவர்கள் செய்வதை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

அவள் இவனை ரவுண்டு கட்டி சைட் அடிப்பது யார் அறியாமல் போனாலும் சம்பந்தப் பட்டவன் அறியாமல் போவானா.. சில நேரங்களில் அவள் பார்க்கும் போது.. இவனும் திரும்ப.. அதை மறைக்க முடியாமல் திண்டாடும் அவள் சிறுபிள்ளை செய்கைகள் மிகவும் பிடிக்கும் தான்.. ஆனால் எதார்த்தம் வேறாக அல்லவா இருக்கிறது.



Advertisement

தங்கை வாழ்க்கையும் இப்படி இருக்க.. எதையும் சரி செய்யாமல் முத்துவிற்கு என்ன நம்பிக்கை கொடுக்க முடியும் என எண்ணியவன் அவள் பார்ப்பதைக் கூட காட்டிக் கொள்ளவில்லை.. இப்போது என்ன செய்வது என தலையைப் பிடித்துக் கொண்டான்.

திங்கள் பள்ளியில்.. கண்ணீரோடு வெளியேறியவளை ஆவலுடன் எதிர்பார்க்க.. மகிழோ எப்போதும் போல தன் இயல்பான முகத்துடன் வர.. அனைவருக்கும் சற்று ஏமாற்றம் தான்.. அவள் முகத்தில் சிரிப்பு இருந்தாலும்.. பார்வையில் ‘தள்ளியே நில்’ என்ற எச்சரிக்கை இருக்க.. அதை மீறி யாருக்கும் எதுவும் கேட்கத் துணிவில்லை.

முத்து இரண்டு நாட்களாக.. எதார்த்தத்தை எதிர்கொள்ளப் போராடிப் போராடித் தோற்றுப் போனவளாக.. முக வாட்டத்துடன் இருக்க.. மகிழ் என்ன கேட்டும் அவள் தலைவலி என்பதைத் தவிர வேறு உரைக்கவில்லை.

Advertisement

வகுப்புகள் தொடர்ந்து இருக்க.. அதில் மூழ்கியவளை மதிய இடைவேளையில் யாரோ பார்க்க வந்திருப்பதாக ப்யூன் அழைக்க.. கேள்வியோடு சென்றவளுக்கு அங்கு நின்றிருந்தவரைக் கண்டதும் ஆச்சரியம்.

Advertisement

அங்கு ரகு தான் தெளிவான முகத்துடன்.. ஒரு காரோடு நின்றிருக்க.. சிரிப்புடன் அவனை நெருங்கி “என்ன சித்தப்பா இதெல்லாம்” என மகிழ்வாகவே வினவினாள்.

அவனும் புன்னகைத்தபடி “நீ தானே சொன்ன.. எனக்கு அஞ்சு பைசா சம்பாத்தியம் இல்லைனு.. அதான்.. வேலைக்கு சேர்ந்துட்டேன்” என்றான்.

அவன் என்னவோ நன்றாகத் தான் சொன்னான்.. ஆனால் கேட்டிருந்த மகிழுக்குத் தான் வருத்தம்.. அத்தனை சொத்துக்களை விட்டு.. ஏன் இப்படி.. என யோசித்தவள் அதை வாய்விட்டும் கேட்டுவிட..

Advertisement

ரகு “ஏற்கனவே அதை பாதியில விட்டேன்.. எந்த முகத்தோட போய் கேப்பேன் கண்ணா.. உன் சின்னத் தாத்தா.. மறுபடியும் பாதியில விட்டுட்டுப் போக மாட்டன்னு என்ன நிச்சயம்னு கேப்பாங்க.. அதான் நானே ஒரு வேலையைத் தேடிகிட்டேன்” என விளக்கினான்.

ஆனாலும் அவள் முகம் தெளியாமல் இருக்க “அட என்ன கண்ணா நீ.. நான் நல்லா சம்பாரிச்சு உனக்கு பவுன் போட்டு கல்யாணம் பண்ணி வைப்பேன்.. இப்ப சிரி.. முதல்ல உன்கிட்ட காட்டத்தான் வந்தேன்” என்க.. அவளும் சிரித்தபடி வாழ்த்தினாள்.

பின் மெதுவாக “எத்தனை நாளைக்கு இப்படியே இருப்ப.. உனக்கு ஒரு ஆதரவு வேண்டாமா சித்தப்பா” என கேட்கவும்.. அவனோ முகம் மாறாமல் “ஏன் கண்ணா நீ இல்லை.. என்னைப் பாத்துக்க மாட்டியா” எனப் பேச்சை மாற்றவும்..

“நான் சொன்னது புரியலையா” என கோவமாகக் கேட்டவளிடம் “புரியாம என்ன.. என்னோட அவசரத்தால ஒரு பொண்ணு வாழ்க்கை இழந்து நிக்க.. நான் நல்லா இருக்க முடியுமா.. என் மனசு அதுக்கு சம்மதிக்குமா.. அதை விடு” என முற்றுப்புள்ளி இட்டவன்.. வேலை பற்றி அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

“முழு நேரக் குடிகாரனுக்கு எல்லாம் எவன்டா வேலை கொடுத்தான்” என்ற நந்தாவின் குரலில் ரகுவின் புன்னகை மாயமாக.. மகிழ் நந்தாவைத் திரும்பி அக்னிப் பார்வை பார்த்தாள்.

அது என்னவோ ரகுவை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. மகிழ் தன்னிடம் இருந்து விலகி தன்னை செம்மைப் படுத்திக் கொண்டதால் அவன் குற்ற உணர்ச்சி சற்று மட்டுப் பட்டதோ என்னவோ.. ரேவதியின் நிலை ரகுவை மன்னிக்க நந்தாவை அனுமதிக்கவில்லை.

அவனை ஒன்றும் சொல்லாமல் ரகுவிடம் “நல்லவங்க பேச்சைத் தான் கேட்கனும்.. நீ கிளம்பு சித்தப்பா” என்றவள் திரும்பி பள்ளியின் உள்ளே நடக்க.. அவளை நிறுத்தியவன் “ஏன் அப்படியென்ன நாங்க நல்லவங்க இல்லாம போய்ட்டோம்” என அவளிடம் வாய் வளர்க்க

“இங்க பாருங்க.. தேவையில்லாம என்னை கோவப்படுத்திப் பாக்காதிங்க.. இது ஸ்கூல்.. ஒரு மனுசன் புதுசா ஒன்னு ஆரம்பிக்கும் போது அப்படித்தான் சொல்வாங்களா” என அவனிடம் காய

“நான் உண்மையைத் தானே சொன்னேன்” என தோளைக் குலுக்க.. அதில் காண்டானவள் “அவரைக் குறை சொல்ற அளவு நீங்க உத்தமன் இல்லை.. உங்களை மாதிரி நம்பிக்கை துரோகமும் அவர் பண்ணலை.. நீங்க உங்க வேலையைப் பாருங்க” என கடித்தவள்.. நகரப் பார்க்க.. அவள் கரம் பற்றி இழுத்து நிறுத்தியவன் “நான் அவ்வளவு கெட்டவன் இல்லை மயிலு.. நம்பு” என குழைந்த குரலில் பேச..

அவனிடம் இருந்து கையை வெடுக்கென உருவியவள்.. சுற்றும்முற்றும் பார்த்தாள்.. பள்ளியின் ஆர்ச் தூண் இவர்களை மறைத்திருக்க.. மதிய நேரம் என்பதால் சாலையில் வாகனங்கள் பெரிதாக ஒன்றும் இல்லை.

அவனை முறைத்தவள் “அதே சமயம் நீங்க நல்லவனும் இல்லை தானே.. நல்லவன் பண்ற காரியமா அது” என பொரிய.. “வில்லனை மாதிரியே பாக்காதடி.. அப்படி நடக்கலைன்னா உங்கப்பா உன்னை வேற எவனுக்காவது பார்சல் பண்ணிருப்பாரு” என இன்னும் தன் பிடியிலேயே நின்றான்.

‘உன் மூஞ்சி’ எனச் சொல்ல வந்தவள் “வில்லன்மாதிரி என்ன வில்லனே தான் நீ.. கெட்டவனைக் கூட நம்பிடலாம்.. ஆனா நேரத்துக்கு தகுந்த மாதிரி மாறிப் போற நல்லவன் ஆபத்து” என மரியாதையாக அவனைத் திட்டியவள் பள்ளியுள் விரைந்து விட்டாள்.

அந்தக் கடுப்புடனே உள்ளே வந்தவளை வினிதா சென்ற வாரத்திய சைக்ளிக் டெஸ்ட் ரிசல்ட்ஸை பிரின்சிபாலிடம் காட்டி வரச் சொல்ல.. தன்னைப் பற்றி ஏதோ பேசுவார்கள் போல என எண்ணியவள் ஒரு இகழ்ச்சிப் புன்முறுவலோடு நகர.. வினிதாவிற்கு எரிச்சல் வந்தது.. இவளை ஒன்றும் செய்ய முடியவில்லையே என.

தன் நாயகனைப் பற்றியே யோசித்தபடியே காரிடாரில் மகிழ் நடந்து கொண்டிருக்க.. ஒரு வகுப்பறை உள்ளே இருந்து ஒரு வாட்டர் பாட்டில் அவள் மீது மோதி.. அதன் சிப்பர் கழண்டு புடவையும் நனைந்து விட.. நிமிரந்து பார்த்தாள்.

இரு குட்டிக் கால்கள் வெளி வந்து பின் இவள் இருப்பை உணர்ந்து உள்ளே போக.. அவள் சற்றே நகர்ந்து கதவின் புறம் நிற்க.. அந்தக் கதவைப் பிடித்தபடி அவள் சென்றுவிட்டாளா என ஒரு துறுதுறு வாண்டு எட்டிப் பார்க்க.. அதன் அழகில் மயங்கித் தான் போனாள்.

இவளைக் கண்டதும் மீண்டும் உள்ளே ஓடப் பார்த்த அந்தக் குழந்தையின் கரம் பற்றியவள்.. குனிந்து “வாட்டர் பாட்டில் வேண்டாமா” என்க.. இவள் திட்டுவாள் என பயந்த அந்தக் குழந்தை விழிக்க அது கூட கவிதையாய் இருந்தது.

‘சப்பி சீக்ஸ்.. டிம்பிள் சின்ஸ்’ என இருந்தவனிடம் பெயர் கேட்கவும் “நந்து” என்றான் விழி விரித்து.. பாட்டிலைக் கையில் எடுத்தவள்.. தன் மறுகையில் இருந்த நோட்டை திண்டின் மீது வைத்துவிட்டு.. அருகில் இருந்த வாட்டர் ப்யூரிஃபையர் நோக்கிச் செல்ல.. அவள் புடவையைப் பிடித்தபடி நந்துவும் வர.. சிரித்தவாறே அவனிடம் தண்ணீர் பிடித்துக் கொடுத்தவள்.. கன்னம் தட்டி எதையும் வீசி விளையாடக் கூடாது என்ற கண்டிப்புடன் அவனை அனுப்பி வைத்தாள்.

தான் கொண்டு வந்த நோட்புக்கை எடுத்துக் கொண்டு நிமிர.. இவள் செய்கை அனைத்தையும் ஒரு சிறு புன்னகையுடன் பார்த்தபடி நின்றிருந்தார் சரவணன்.. நந்தாவின் அப்பா.

அவர் நின்றிருந்த அறைக்குப் பக்கத்து அறை தான் பிரின்சிபாலுடையது.. இவரைக் கண்டு கொள்ளாமலும் செல்ல முடியாது என நினைத்தவள் தயக்கமாக அவர் முகம் பார்க்க “நான் உன்னைத் தான் பாக்க வந்தேன் கண்ணா” என்கவும்.. ‘என்னையா.. ஏன்’ என்பது போலப் பார்க்கவும்..

“அன்னைக்கு என்ன ஆச்சு.. யார் அப்படிச் சொன்னது” என கேட்கவும்.. “அதெல்லாம் ஒன்னுமில்லை.. அவங்க ஏதோ தெரியாம.. வேலை செய்யற இடம் எல்லாம் இருக்கத்தான் செய்யும்.. விடுங்க” எதற்கு பிரச்சினை என்பது போல அதை விலக்க முயற்சிக்க..

“ம்ம்.. இவ்வளவு பொறுப்பு வந்துடுச்சா எம்மருமவளுக்கு.. சீசர் விளையாட வேணும்னு கேட்ட குட்டிக் கண்ணா எங்க போய்ட்டா” என கிண்டல் தொனிக்கக் கேட்கவும்..

சிறு வெட்க முறுவலுடன் புன்னகைத்தவளிடம் “மாமா வரட்டுமா” என அவரும் மகிழ்வுடனே விடை பெற்றுச் சென்றுவிட்டார்.

நாயகன் வருவான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!