Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்19

மகிழ் வீட்டிற்குள் நுழையும் போதே கண்ணில் பட்டது காஃபியை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த முகில் தான்.. அவனை ஒரு பார்வை பார்த்தவள்.. சீரியலுக்காக மாஸ் வெய்ட்டிங்கில் இருந்த அவ்வாவிடம் “உன் பேரனுக்கு பொண்ணுத் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க” என்றாள்.. உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாய்..

அவளை ஸ்லோ மோஷனில் திரும்பிப் பார்த்த அவ்வா “கிடக்கது கழுதை.. வேற பொண்ணுப் பாப்போம்” என அசால்ட்டாகச் சொல்ல.. முகில் வந்த சிரிப்பை காஃபியை வைத்து உள் தள்ள.. கொதித்துப் போனாள் மகிழ்.

“நீயும் இந்த முத்து மாதிரியே பேசாதே வ்வா.. அவங்க சொன்ன காரணத்தைக் கேளு.. இங்க வந்தா எனக்கு அவ வேலை பண்ணனும்னு.. அதான் கொடுக்கலைன்னு சொல்றாங்க” என பிரச்சனையை உடைத்துச் சொல்லவும்..

அவ்வா இப்போது அவளைப் பார்த்து திரும்பி “ஏன் சொன்னதுல என்ன தப்பு.. உன்னை நந்தா கட்டும் போது நாங்க ரேவதியை நினைச்சுத்தான் வேண்டாம்னு சொன்னோம்.. நல்லவேளை அவங்க முதல்லையே சொல்லிட்டாங்க.. அதுவரைக்கும் சந்தோஷம்” என்றார்.



Advertisement

மாமியார் பேசுவதைக் கேட்டு கோவமடைந்த தனம் “என்ன அத்தை.. எம்பொண்ணை எப்படி அவங்க சொல்லலாம்.. அவளுக்குப் பெத்தவங்க இருக்கோம்.. நாங்க பாத்துக்கறோம்.. எந்த ஆகாவழி எம்புள்ளையைப் பத்தி இப்படித் தப்பா சொல்லிக் கொடுத்தானோ” என அவர் கடுகடுக்க..

அமிர்து அவ்வாவோ ‘இவளுக்கு வேற நேரங்கெட்ட நேரத்துல ரோஷம் பொங்கும்’ என சலித்துக் கொண்டார்.

மகிழ் அவள் அம்மாவிடம் “அப்படி எல்லாம் திட்டாதம்மா.. ஒருவேளை அந்த ஆகாவழி உன் கையால காஃபி சாப்பிடறவனாக் கூட இருக்கலாம்” என முகிலைப் பார்க்க..

Advertisement

அவன் தோளைக் குலுக்கியபடி டம்ளரை டீபாயில் வைத்தவன் “ஆமா.. அவ்வா ஃபோன்ல இருந்து நான்தான் நம்பரை எடுத்துச் சொன்னேன்” என்க.. மகிழ் வந்த கோவத்தில் கையில் வைத்திருந்த குடையைத் தூக்கி அவன் மேல் எறிந்தாள்.

Advertisement

“எருமை.. எனக்குத் தெரியும்டா.. அன்னைக்கு உன் மூஞ்சியே சரி இல்லை.. ஏன் இப்படிப் பண்ணேன்னு மரியாதையா சொல்லு” எனக் கத்த

காதை அடைத்துக் கொண்டவன் “இதுல தப்பென்ன.. வாழ்க்கை அமையாத தங்கச்சியை விட்டுட்டு நான் கல்யாணம் பண்ணிகனுமா.. எத்தனை வருஷமானாலும் உன்னை அனுசரிச்சுப் போறவ வந்தாப் போதும்.. இல்லை நீ அவகிட்ட அனுசரிச்சுப் போகனும்.. என்னால தண்ணிக்கும் தரைக்கும் அல்லாட முடியாது” என்றுவிட்டு அவன் வெளியே சென்றுவிட.. மகிழும் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.

மாமியாரை முறைத்துப் பார்த்த தனமும் தன் வேலையைப் பார்க்கச் செல்ல ‘என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க.. முப்பது வருஷத்துல என் மருமகளுக்கு இப்பத்தான் முறைக்கற தைரியம் வந்துருக்கோ’ என எண்ணியவர் தன் ஃபோனை எடுத்துக் கொண்டு பின் வாசலுக்குச் சென்றார்.

Advertisement

ஆறரை மணிக்கு அழுது கொண்டே படுத்திருந்தவள் எப்போது உறங்கினாளோ.. ஒன்பது மணிக்கு நந்தாவின் செல்போன் அழைப்பில் தான் கண் திறந்தாள்.. அட்டெண்ட் செய்து காதில் வைத்துவிட்டு அவள் அமைதியாக இருக்கவும்..

அவள் ஏதோ கோவத்தில் இருக்கிறாள் எனப் புரிந்த நந்தாவே “என்ன கோவமாம் என் அழகு மயிலுக்கு” என்க.. அவனது அழைப்பில் இல்லாத கோவத்தை இருக்கிப் பிடித்தபடி “ஒன்னுமில்லை” என்றாள்.

“அப்புறம் ஏன் வாய்ஸ் டல் அடிக்குது.. சொல்லுடி.. வீட்ல யாராவது எதாவது சொன்னாங்களா.. இல்லை.. நான் நேத்து வந்தது யாருக்காவது தெரிஞ்சு” என அவன் அடுக்கிக் கொண்டே போக

“அதெல்லாம் இல்லை மாமா” என அவனைத் தடுத்தவள் முகிலின் பிரச்சனையை ஆதியோடு அந்தமாகச் சொல்லி முடித்தாள்.. கூடவே ‘இப்ப நான் என்ன செய்யறது’ என்ற கேள்வியுடன்..

முகில் அதைத் தடுத்து நிறுத்தியதற்கு காரணம் மகிழ் அறியவில்லை என்றாலும் அவன் அறிவானே.. வெகு எளிதாக வந்துவிடு எனக் கூறிவிட முடியும் தான்.. ஆனாலும் இது ஒருவகைக் கட்டாயம் தானே.. இதன் அடிப்படையிலும் அவனுக்கு அவளோடான உறவு தொடங்க வேண்டாம்.. என எண்ணியவன் அமைதியாக இருந்தான்.

“துரை ஏன் சைலண்ட் மோட்க்குப் போய்டிங்க.. சொல்லுங்க நான் என்ன பண்ணட்டும்னு” என மகிழ் கேட்க

“நான் தான் நேத்தே சொன்னேனே மயிலு.. இனி என்ன நடந்தாலும் உன் விருப்பத்துக்குத் தான்.. நான் அதுல க்ளியரா இருக்கேன்” என்றவனிடம் “சத்தியமா இதுல நான் என்ன முடிவு எடுக்கனும்னு எனக்குத் தெரியலை மாமா” குரல் கமறச் சொன்னவளிடம்

“என்ன முடிவு வேணா எடு.. ஆனா முகிலுக்காக வரேன்னு சொல்லி என்னை அசிங்கப்படுத்திடாதே.. நான் ஏற்கனவே பண்ண அவசரம் போதும்.. நீயாவது நல்லா யோசிச்சு முடிவு எடு” என்றான்.

இது எந்த மாதிரியான பதில் எனக் குழம்பிய மகிழ் “இப்ப நீ என்னை வான்னு சொல்றியா.. வர வேண்டாம்னு சொல்றியா மாமா” என அவள் நிஜமாகவே குழம்பிப் போய் கேட்க..

“நீ என்னைக்கு இருந்தாலும் இங்க வந்துடுவ மயிலு.. உன்னை நான் அப்படி எல்லாம் விடமாட்டேன்.. ஆனா என்ன அதுக்கு உன்னோட பர்மிஷன் வேணும்.. அதான் உன்னையே யோசிக்கச் சொல்றேன்.. சரி நீ மறக்காம சாப்பிட்டு தூங்கு.. இன்னைக்கு முழுசும் சரியான அலைச்சல்.. வச்சிடவா” என அவன் ஃபோனை வைக்கப் போக..

தயங்கினாலும் ஒருவாறு “ஏன் இன்னைக்கு வரலை” என மெதுவான குரலில் அவள் கேட்க.. மறுபுறம் லேசாகச் சிரித்தவன் இன்று நடந்ததையும் அவன் மன வருத்தத்தையும் அவளிடம் பகிர்ந்து கொண்டான்.

“இனி அந்தப் பொண்ணை நினைச்சாத் தான் பயமாயிருக்கு.. என்னவோ போடி.. சரி பேசினது போதும்.. போய் சாப்பிடு.. ஓடு” என விரட்டியவன் “குட்நைட் மயிலு” என்ற அவன் வழக்கமான குரலில் கூறி வைத்துவிட்டான்.

     அவளும் உணவு உண்ண கீழே செல்ல..   அவ்வா சீரியலில் மூழ்கி இருக்க.. தாத்தா அவருக்கு கம்பெனி கொடுத்தபடி இருந்தார்.. தன் ஃபோனில் மூஞ்சிபுக் பார்த்துக் கொண்டிருந்த முகில் இவளை முறைக்க.. இவளும் முறைத்தபடி தாத்தா அருகில் சென்று அமர்ந்தாள்.

      அவளைக் கண்டதும் தாத்தா “ஏன் கைதி.. சாயங்காலம் அண்ணங்கூட என்ன சண்டை.. அதுக்கு சாப்பிடாம கூட இருப்பியா” என அதட்டினார்.

       பொதுவாக அவள் தாத்தா அவளை இப்படியெல்லாம் திட்டவே மாட்டார்.. எல்லாம் இந்த அவ்வா வேலையாத்தான் இருக்கும் என கணித்து அவரை முறைக்க.. அவரோ அந்த டூத்பேஸ்ட் விளம்பரத்தை வெகு சுவாரஸ்யமாகப் பார்க்க.. ‘பல்லு போன காலத்துல பேஸ்ட் விளம்பரம்.. நடிகையர் திலகம்’ என மனதில் அவ்வாவை வறுத்தவள்.. வெளியே முகத்தை பாவமாக வைத்துக் கொண்டாள்.

     “யாருக்கும் என்னையைப் பிடிக்கலை.. பேசிட்டே இருக்கிங்க” என மூக்கை உறிஞ்சவும்.. தாத்தா “இந்த படவா ராஸ்கோலு தான் நீ எதையோ எடுத்து அடிச்சிட்ட அவனைன்னு சொன்னான்.. என்ன கோவமாம் எம்பட கண்ணாளுக்கு” என்றார்.. அது அப்படியே நந்தாவின் பேச்சு சாயலை நினைவுருத்த முகம் புன்னகையைப் பூசியது.

       “தப்பு என்மேல தான்.. இந்த அவ்வா சொல்லுச்சுன்னு இந்த சாமியாருக்கு பொண்ணு ஃபோட்டோ வாங்கிக் கொடுத்தேன்.. இப்ப பாட்டியும் பேரனும் ஒன்னாகிட்டு என்னையைப் பேசறாங்க.. அதுவும் உன் பேரன் கண்ணுக்கு நான் இருக்கறது உறுத்துது” என்றாள் மகிழ் பாவமாக.

      முகில் “இது உலக நடிப்புடா சாமி.. இவ என்னை அட்டாக் பண்ணிட்டு எப்படி பழி போடுறா பாரு வ்வா” என அவன் அமிர்து அவ்வாவை துணைக்கு அழைக்க.. தாத்தா “ஐயோ.. ராமச்சந்திரா.. தூங்கற நேரத்துல என்ன சத்தம்.. கண்ணா நீ போய் சாப்பிடு” என அவளை அனுப்பி வைத்தார்.

சமையலறை சென்று தனத்தை இம்சை செய்து ஊட்டிவிடச் சொல்லிக் கொண்டிருக்க தண்ணீர் எடுக்க வந்த அவ்வா “ஆமாமா.. நாளைக்கு மாமியாரும் இப்படித்தான் ஊட்டி விடுவா.. ” என கடுப்படிக்க.. மகிழ் ஏதோ சொல்ல வருவதற்குள் தாத்தாவின் ஒரு சத்தத்தில் அந்த இடத்தைக் காலி செய்தார் அவர்.

      எப்போதும் போல அவர்களை ஆச்சரியமாகவே பார்த்தாள் மகிழ்.. இன்றைய சூழ்நிலையில் நாம் பிரிவினை வர முக்கியக் காரணமாகச் சொல்லும் வயது வித்தியாசம் அதிகம் தான் இவர்களுக்குள்.

      நாடு சுதந்திரம் பெற்ற அந்த நாளில் தாத்தா பதினேழு வயதில் அனைவருக்கும் சுதந்திரத்தின் மேன்மையை விளக்கும் நோட்டீஸ் கொடுத்தாராம்.. அதே காலகட்டத்தில் அவ்வா ஐந்து வயதில் அருகில் இருந்த போஸ்ட் கம்பத்தைப் பிடித்தபடி பெரும் ஊர்வலமாய்ச் சென்ற மாட்டு வண்டிகளையும், குதிரை வண்டிகளையும் புரியாமல் வேடிக்கை பார்த்தாராம்.. இதிலேயே அவர்களின் வயது வித்தியாசம் புரியும்.

      ஆனால் அந்த வித்தியாசத்தை என்றும் அவர்களுக்கு இடையில் மகிழ் பார்த்தது இல்லை.. விருப்பையும் வெறுப்பையும் பாட்டியின் முகம் பார்த்தே கண்டுவிடும் தாத்தாவும்.. தாத்தா வேண்டாம் என்றால் அதை வெட்டென மறந்து விடும் பாட்டியும்.. அன்பும் அறனுமாய் அருமையானதொரு இல்வாழ்வு.. நினைக்கவே நிறைவாய் இருந்தது.

     தானும் நந்தாவும் இப்படி இருப்போமா என எண்ணியவள் “ம்ம்.. சாப்பிடும் போது என்ன கனவு” என்ற அம்மாவின் குரலில் நிதர்சனத்திற்கு வந்தாள்.

      அவள் ஒன்றுமில்லை என வேகமாக தலையசைத்தவள் “ம்மா.. ஒருத்தர் பண்ண தப்பை எப்படிம்மா மறக்கனும்” என தன் குழப்பத்தை அன்னையிடமே கேட்க.. “மறக்கனும்னு நினைக்கிறியே அதுவே நல்ல தொடக்கம் தான்” என்றவர் தட்டை எடுத்துக் கொண்டு நகர.. அவர் பின்னாலேயே வால் பிடித்துக் கொண்டு மகிழும் சென்றாள்.

     “அதெப்படிம்மா அவ்வளவு சாதாரணமா மறக்கறது.. என்னை ஏமாத்திட்டான்.. அது சின்னத் தப்பு இல்லையே” என அவள் கேட்க

      அவளைப் பார்த்து சிரித்தவர் “தப்போட அளவுகோல் எது.. இன்னொரு தப்பா.. ராஜா உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டான்.. நெறைய பேர் கல்யாணம் பண்ணி ஏமாத்துறாங்க.. அவன் என்ன பக்கத்து வீட்டுக்காரன் குடிச்சுட்டு வந்து அடிக்கிறானா..  இல்லை எதிர்த்த வீட்டுக்காரன் மாதிரி பொண்டாட்டியை சந்தேகப்பட்டு துரத்திவிட்டானான்னு.. அவன் தப்பை நான் நியாயப்படுத்த விரும்பலை.. அவன் பண்ணது பெரிய தப்பு தான்.. அவனை நம்பின பொண்ணை ஏமாத்திட்டான்.. அந்தப் பொண்ணு எங்க பொண்ணா இருக்கப் போய் அவன் மேல எங்களுக்கு எக்கச்சக்க கோவம்” என்றவர் குழம்பிய மகிழின் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும்..

      “ஆனா எங்க பொண்ணுக்கு அவனைப் பிடிச்சிருக்கே.. அவனுக்கும் அவளை ரொம்ப பிடிக்கும்.. அதான் நாங்க நடந்ததை எல்லாம் மறந்துட்டு மறுபடியும் அவங்க சேரனும்னு நினைக்கிறோம்” என்றார்.

        “பிடிச்சிருக்கறது வேற.. அவன் என்னை ஏமாத்தினது வேற தானேம்மா.. அதை எப்படி நான் மறந்து போகட்டும்.. எனக்கு குடும்பத்தோட சப்போர்ட் இருந்துச்சு.. நான் தேறிகிட்டேன்.. இதுவே நீங்க என்னை வேண்டாம்னு சொல்லியிருந்தா என் நிலைமை என்ன ஆகியிருக்கும்.. திரும்பவும் எப்படி அதே வீட்டுக்கு நான் போக முடியும்.. நான் இன்னைக்கு மறந்தாலும் அவன் பண்ணது இல்லைனு ஆகாதே.. மறுபடியும் நியாபகம் வருமே” என்றாள்.. அவளால் இன்னுமே சமாதானம் ஆக முடியவில்லை.

     “ஆமா.. கண்டிப்பா தோணும்.. அதை மறக்கற அளவு உன்னை ராஜா பாத்துப்பான்னு நாங்க நம்புறோம்.. அதே நம்பிக்கை உனக்கு இருந்தா சொல்லு மேற்கொண்டு பேசலாம்.. இல்லையா வேற ஒரு வாழ்க்கைக்கு ரெடி ஆகிடு.. அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்” என்றார் தனம்.

      அப்போது தான் உள்ளே வந்த ராகவன் மகளின் குழம்பிய முகம் கண்டு மனைவியை யோசனையாகப் பார்க்க.. அவரோ ஒன்றும் சொல்லாமல் தனது வேலைகளையே கவனித்தார்.

      இவ்வளவு நாள் யோசிக்காததற்கும் சேர்த்து இன்று ஒரு நாளில் அவள் யோசிக்க யோசிக்க.. இறுதியில் ஒரு தீர்மானத்திற்கு வந்தவள்.. நந்தாவிற்கு ஒரு புலனச் செய்தி அனுப்பிவிட்டுக் கண்ணயரந்தாள் புன்னகையுடன்.

     நாயகன் வருவான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!