Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennadi Maayaavi Nee

Ennadi Maayaavi Nee 1

மாயாவி – 1 !!

விலகவா !

விலக்கி வைக்கவா !

என்று நான் முடிவெடுப்பதற்குள் …



Advertisement

நீயே எந்தன் விலங்கானாயே!

என்னடி மாயாவி நீ !

 

Advertisement

பரபரப்புக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் பெயர் போன பெங்களூரில் வாகன நெரிசலில் மாட்டிக் கொண்டிருந்தவனின் முகமோ டென்ஷனை அதிகமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருந்தது… அவனின் டென்ஷன் எல்லாம் இந்த வாகன நெரிசலால் அல்ல… வாகனம் நகர நகர அதில் கிடைக்கும் இடைவெளியில் இதோடு கிட்டத்தட்ட இருபத்தைந்து முறைக்கு மேல் அவளை அழைத்து விட்டான். ஆனால் அவள் போனை எடுக்கும் வழியை தான் காணோம்… 

Advertisement

 

“காரு பிக்கப் தி போன் ! பிக்கப் !பிக்கப் !” என்று அவன் இங்கிருந்தே அவளுக்கு சொல்ல மறுபடியும் அவள் எடுக்கவில்லை.

 

Advertisement

“காரு ! இப்ப நீ போனை எடுக்கல இந்த காரை உன்மேல ஏத்த போறேன் பாரேன்…” என்று என்னவோ அவள் எதிரே இருப்பது போல அவன் பேசியதற்கெல்லாம் பலன் என்னவோ பூஜ்யம் தான்.

எப்படியோ ஊர்ந்து ஊர்ந்து கொண்டே அவனின் டென்ஷனின் அளவு சற்றும் குறையாமல் அந்த பிரம்மாண்டான கட்டிடத்தின் கார் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தினான்.

 

பன்னிரண்டு தளத்தை கொண்ட அந்த கட்டிடம் இவன் அலுவகத்தையும் உள்ளடக்கியது. மின்தூக்கியில் வரும் போதும் அவன் போன் வேலை செய்துக் கொண்டிருக்க, கால்கள் தன்னாலேயே அலுவகம் நோக்கி சென்றது. 

 

உள்ளே நுழைந்ததும் எல்லோரும் அவனை புன்னைகையுடன் எதிர்நோக்க அவனோ தன் எதிரே யாரும் இல்லாதது போல் அவன் கேபின் சென்றான்.

 

அலுவகத்தில் நுழையும் போதே அவர்கள் காலை வணக்கம் சொல்லுவதற்கு முன்னே ஆர்ப்பாட்டமாக பெரிய புன்னைகையோடு, “ஹாய் ! ஹாய் ! ஹாப்பி மோர்னிங் டு ஆல்!” என்று சத்தமாக சொல்லிக் கொண்டே வருபவன் இன்று அதை எல்லாம் செய்யாமல் இப்படி பரபரப்போடு வருவதும், முக்கியமாக அவனுடன் மேடமும் வராமல் இருப்பதும் பார்த்து என்னவாயிற்று என்று குழம்பினர்.

 

நேராக தன் இருப்பிடம் சென்றவன் அவன் இருக்கையில் அமராமல் எதிரில் இருப்பவரை பார்த்து பேச வசதியாக இருப்பது போல அந்த மேசையில் சாய்ந்தவாறே நின்றான்.  

 

கையிலிருந்த போனை கோபத்தில் தூக்கி ஏறிய அது அதே வேகத்துடன் அவனுக்கு பயந்து சென்று எதிரே இருந்த சோபாவில் அமர்ந்துக் கொண்டது.

 

“பூனை ! காட்டுப்பூனை ! ஒரு வாரமா நானும் விடாம போன் பண்றேன் நீ எடுக்க மாட்டேங்குற… அப்படி என்ன வேலை பார்த்துட்டு இருக்க… நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்? தனியா இதெல்லாம் எப்படி சமாளிப்பேன்னு யோசிக்க மாட்டியா?”

 

“ஏதோ சொல்லுவாங்களே பூனை செய்யறதெல்லாம் துடுக்கு ஆனால் அடிச்சா பாவம்னு… அதே மாதிரி இப்படி எதாவது செய்ய வேண்டியது அப்புறம் நான் எதுவும் சொல்ல முடியாத அளவுக்கு அந்த பூனையே தோத்து போற அளவுக்கு சோகமா முகத்தை வைச்சுக்கிட்டு, 

 

“சாரி கவி! சாரி கவின்னு சொல்ல வேண்டியது… வரட்டும் ! வந்த அப்புறம் இருக்கு அந்த பூனைக்கு !” என்று எதிரே அந்த பூனையவள் இருப்பது போல புலம்பிக் கொண்டிருந்தான் கவி என்கிற கவியரசன்.

*********

“ஏன்மா ? இப்பவே போகணுமா?” என்று கேட்டார் நெடுமாறன்.

 

“ஆமா மாமா! வந்து ஒரு வாரம் ஆச்சு… இங்கிருந்து போன் வந்ததும் வேலை எல்லாம் அப்படியே விட்டுட்டு லீவு கூட சொல்லாம வந்துட்டேன்… இப்ப நான் போயே ஆகணும்…”

 

“எல்லாமே என்னால தானேம்மா… நான் இப்ப செஞ்சிருக்க விஷயம் உனக்கு பிடிக்கலைன்னு எனக்கு தெரியும்… ஆனால் நான் உனக்கு நல்லது தான் பண்ணியிருக்கேன்னு ஒரு நாள் நீ புரிஞ்சிக்குவ… இப்ப நடந்த விஷயத்துக்கு வேணும்னா நான் உன்னை கட்டாயப்படுத்திருந்தாலும் இதுக்கு மேல எல்லாமே உன் விருப்பம் தான்…”

“எனக்கு நம்பிக்கை இருக்கு ஒரு நாள் இதெல்லாம் மாறும்னு.. ஆனால் அதை பார்க்க நான் உயிரோட இருப்பேனோ இல்லையான்னு தான் தெரியல…” என்றவரின் பேச்சில் இடையிட்டாள்,

 

“மாமா ! இப்படி எல்லாம் பேசாதீங்க… உங்களுக்கு ஒன்னும் ஆகாது… எங்க அப்பா அம்மா இவ்வளவு நாள் சொல்லி நான் செய்யாத விஷயத்தை நீங்க சொன்னீங்கன்னு, உங்களுக்காக மட்டும் தான் ஒத்துக்கிட்டேன்… அந்த அளவுக்கு உங்க மேல மரியாதையும் பாசமும் இருக்கு மாமா… கொஞ்சம் என் இடத்துல இருந்தும் யோசிங்க…”

 

“நான் இதெல்லாம் ஏத்துக்க கொஞ்சம் இல்லை நிறைய நாள் ஆகும்… முதல்ல நடந்ததை ஜீரணிக்க டைம் கொடுங்க மாமா… ப்ளீஸ் !” என்றவளின் பேச்சில் இருந்த கலக்கம் அவளின் முகத்தில் இல்லை. அதிலும் எந்த உணர்ச்சியும் காட்டாத அவளின் கண்கள் அவளின் மனதைப் போலவே முற்றிலும் வறண்டு போயிருந்தது…

 

“ஹே ! கருத்தம்மா… நீ கலங்காதடா… உடனே நீ கிளம்பனும்னு  சொன்னதும் கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு… அவ்வளவு தான்… நீ ஏத்துக்கறேன்னு சொன்னதே எனக்கு சந்தோசம்….” என்றவரின் பேச்சில் மற்றது விடுத்து அவரின் கருத்தம்மா என்ற அழைப்பே அவளுக்கு போதுமானதாக இருந்தது.

 

“சரிங்க மாமா ! நீங்க உடம்பை பார்த்துக்கோங்க…நான் போயிட்டு போன் பண்றேன்…” என்றவளிடம்,

 

“கூட யாரும்மா வர்றது? அவன் எங்க போனான்? அவனை கூட்டிட்டு போக சொல்லும்மா?” என்று அவர் சொல்ல,

 

“இல்ல வேணாம் மாமா ! நான் அப்பா கூட போறேன்…” என்றதும்  அவர் முகம் சுருங்கியதைப் பார்த்தவள் அருகே அமர்ந்து அவரின் கைகளை தன் கைகளுக்குள் வைத்தவாறு,,

 

“மாமா ! இப்ப தான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்து இருக்கீங்க… வேற எதையும் யோசிக்காதீங்க… நீங்க விருப்பப்படறதை எல்லாம் நான் செய்வேன், இப்பவும் செஞ்சு இருக்கேன்… ஆனால் என்னால அதைத் தாண்டி வேற எதுவும் இப்ப செய்ய முடியல…”

 

“உங்களுக்கு நான் பொய்யா எந்த நம்பிக்கையும் கொடுக்கவும் விரும்பல… அதே சமயத்துல உங்க நம்பிக்கையையும் நான் எதுவும் சொல்லல… என்னை கொஞ்சம் என் போக்கிலே விடுங்களேன் மாமா… ப்ளீஸ் !” என்றவளை ஆதுரமாக பார்த்து, 

 

“சரிம்மா ! நீ பத்திரமா போயிட்டு வா…” என்றவரிடம் விடைபெற்று வெளியே வந்தவள் அங்கு அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் அவன் பார்வையின் அர்த்தத்தை படிக்க திராணியற்று மற்றவர்களிடம் மட்டும் வேகமாக சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

 

“கண்டிப்பா இப்ப வேலைக்கு போகணுமாம்மா ? இப்படி உடனே கிளம்பி போனா யாராவது ஏதாவது சொல்லுவாங்கம்மா?” என்று அவள் தாய் பானுமதி சொன்னதும் அவரை நிமிர்ந்து, அவள் பார்த்த ஒற்றை பார்வையில் அமைதியானார்.

“எனக்குன்னு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கு… என்னோட வாழ்க்கையை எப்பவும் மத்தவங்க விருப்பத்திற்காக நான் வாழ முடியாது…”என்று கூறியவளின் முகத்தில் எப்போதும் போல ஒரு வெறுமை… 

 

மகளின் பேச்சை கேட்ட பெற்றவர்களின் மனம் கனத்து போனது. இனி எல்லாம் சரியாகி விடும் என்று அவர்களுள் எழுந்திருந்த நம்பிக்கை அவளின் பேச்சில் ஆட்டம் கண்டாலும் உடனே சுதாரித்து,

 

“அவ ஏதோ புத்தி கேட்டு போய் பேசறாம்மா… நீ வா… நான் உன்னை பஸ் ஏத்தி விடறேன்…” என்று அவள் தந்தை ரங்கன் அழைக்க, 

 

அவரையும் அதே வெற்று பார்வை பார்த்தபடி, “இல்ல வேணாம்! நானே போயிக்கிறேன்…” என்றபடி தனியாக கிளம்பியவளின் எண்ணங்கள் எல்லாம் இந்த இரண்டு நாளில் மாறிப் போன தன் வாழ்க்கையையே வட்டமடித்தது.

 

வாழ்க்கையில் எத்தனையோ இக்கட்டுகளை சந்தித்திருந்தாலும் இது போல ஓடி ஒளிந்தது இல்லை… ஆனால் அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் ஓடி வந்ததை நினைத்து அவளுக்கே அவளை நினைத்து ஆச்சர்யம். 

 

பெங்களூர் வந்ததும் அவளுள் ஒரு படபடப்பு பயம்… “ஐயோ ! கவி! அவனை எப்படி இப்ப நான் பார்ப்பேன்.. அவன்கிட்ட நான் என்னன்னு சொல்லுவேன்? ஒருவேளை இந்த ஒரு வார அலைச்சலில் தனக்காக தன்னருகே அவன் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காதோ…” என்ற எண்ணம் வேற அவளுக்கு…

 

ஆனால் இனிமேல் எதையும் தவிர்க்க முடியாதே… எல்லோரையும் எல்லாவற்றையும் இனி சந்தித்து தானே ஆக வேண்டும் என்று முதல் முறையாக அவள் மேலே அவளுக்கு ஒரு பச்சாதாபம் தோன்ற அது வந்த வேகத்திலே திரும்ப ஓடியது… 

 

எப்போதும் போல அவளை அலுவகம் கூட்டி செல்ல வந்தவனை ஏமாற்றாமல் நின்றிருந்தவளைப் பார்த்து மகிழ்ந்தாலும் இந்த ஒரு வாரம் தன்னை சுத்தலில் விட்டவளின் மேல் கோபம் வர அவளிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். 

 

ஒரு வாரம் கழித்து அவனை சந்தித்த மகிழ்ச்சியில் முன்னிருக்கையில் அமர்ந்தவாறே அவனைப் பார்த்து சிரிக்க, அவனோ முகத்தை  திருப்பிக் கொண்டான். 

 

“ஹே கவி ! எப்படி இருக்க? ஆமா வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு? அந்த MG ரோடு ப்ராஜெக்ட் எந்த லெவல்ல இருக்கு… சேட்டிலைட் பஸ் ஸ்டாண்ட் வீட்டு ப்ராஜெக்ட் முடிஞ்சுதா…” என்ற அவளின் எந்த கேள்விக்கும் அவனிடம் பதிலில்லை. அவனின் கோபமும் அமைதியும் அவளைப் பாதிக்க,

 

“சாரிடா கவி !” என்றவளை அழுத்தமாக பார்த்துவிட்டு திரும்பியவனின் வண்டி வேகமெடுத்தது. அலுவகம் வந்ததும் எல்லாரும் அவளருகே வர, 

 

“எல்லாரும் போய் உங்க வேலையை பாருங்க !” என்று அதட்டியவாறே உள்ளே சென்றான்.  

 

அவன் அதட்டலில் முகம் வாட நின்றிருந்தவர்களை சமாதானப்படுத்திவிட்டு அவன் பின்னே உள்ளே சென்றவள்,

 

“உனக்கு என்மேல தானே கோபம், அவங்களை ஏன் அதட்டுற… நான் பேசினாலும் மாட்டேங்குற… எவ்வளவு நேரம் உன்னோட இந்த கோபத்தை இழுத்து வைச்சிகிட்டு இருக்கன்னு நானும் பார்க்கிறேன்…” என்று கோபமாக பேசியவளை பார்த்தவன், 

 

அவளிடம் தெரிந்த ஏதோ ஒரு வித்தியாசத்தில் குழப்பமாக அவளை ஆராய்ந்தவனுக்கு கிடைத்த பதிலில் அதிர்ந்து இருக்கையில் இருந்து எழுந்தான்.

 

அவன் அதிர்வை கண்டுக் கொண்டவள் தன் சக்தியெல்லாம் வடிந்தாற் போல அங்கிருந்த இருக்கையில் தொப்பென்று அமர, அந்த சத்தத்தில் தெளிந்தவன் அவளருகே வந்தான்.

 

“காரு! என்ன்ன்ன இது?” என்று அவள் கழுத்தில் மஞ்சள் நிறம் மாறாமல் இருந்த தாலியை காட்டிக் கேட்டவனின் குரல் கரகரத்தது.

 

முகம் இறுக அமைதியாக இருந்தவளைப் பார்த்து எரிச்சலானவன், 

 

“கார்குழலி! உன்னைத் தான் கேட்கிறேன்… பதில் சொல்லு” என்று அவளையே அசையாமல் பார்த்துக் கேட்டவனின் குரலில் தன்னாலேயே அவனை நிமிர்ந்து பார்த்து தலையசைத்தாள்.

 

“என்ன்ன்ன சொல்ற பூனை?” என்று அவன் கேட்க,

“ஆமா ! நீ பார்க்கறது உன் மூளை சொல்றது எல்லாமே நிஜம்… எனக்கு  கல்யாணம் ஆகிடுச்சு…” என்று எந்த உணர்வும் பிரதிபலிக்காமல் வெறுமையாக சொன்னவளின் பார்வை இரண்டாம் முறை தன் கழுத்தில் ஏறிய தாலியையே வெறித்துக் கொண்டிருந்தது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!