Ennadi Maayaavi Nee 3
மாயாவி 3 ::-
கட்டாயத்தின் பேரில்…
நான் கட்டிய தாலியால்…
Advertisement
என் வாழ்வில் நுழைந்த நீ !
என்னை கட்டிப்போட்டு
என் மனதிலும் நுழைய
Advertisement
முயல்கிறாயே!
Advertisement
என்னடி மாயாவி நீ !
அவர் சொன்னதை கிரகிக்கவே குழலிக்கு சில நிமிடம் ஆனது… உடனே அவரிடம் இருந்து தன் கையை உருவ முயன்றவளின் முயற்சியை முறியடித்து அதை இறுக்கமாக பற்றியவரை நிமிர்ந்து பார்த்தவள்,
Advertisement
“என்னால முடியாது மாமா ! கண்டிப்பா என்னால நீங்க கேட்டதை செய்ய முடியாது.. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க…” என்று அவள் குரலில் இருந்த கெஞ்சல் கலக்கம் அவரை வாட்டினாலும் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் திரும்பி தன் மகனைப் பார்த்தார்.
இத்தனை நேரம் தந்தையின் உடல்நிலையால் அவன் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த அனுபவமே அவனை ஏற்கனவே மிரட்டிக் கொண்டிருக்க இதில் தந்தை வேறு இப்படி ஒரு குண்டை தூக்கி போட அவனோ மிரண்டு போயிருந்தான்.
அவன் மிரண்டு போயிருப்பது பயத்தினால் அல்ல இந்த சூழ்நிலைகள் அவனுக்கு புதியது… இதுவரை தனது தனிப்பட்ட உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தவன் முதல் முறையாக தந்தையின் நலம், தாயின் கண்ணீர் , மருத்துவரின் பேச்சு எல்லாம் தன்னுள் தீவிரமாக தாக்குவதை உணர்ந்தான்.
அதிலிருந்தே இன்னும் மீளாமல் இருக்க இதில் தந்தை திருமணம் பற்றி பேசியது எல்லாம் அவனை சுழற்றியடித்துக் கொண்டிருந்தது.
மகனின் குழப்ப நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, “அமுதா ! அப்பா ! உன் நல்லதுக்கு தான் சொல்றேன்… நீயாவது சரின்னு சொல்லுப்பா…” என்று அவர் கெஞ்ச,
அவரின் கெஞ்சல் ஏனோ மனதை உடைக்க, “சரிப்பா ! உங்க விருப்பம்..” என்று சொல்லிவிட்டு அவரிடம் இருந்து தன் கைகளை விலக்கிக் கொண்டு வெளியேறினான்.
அவன் சென்றதும் நல்லதற்கே என்று நினைத்தவர், இவர்களின் பேச்சுக்கள் எதுவும் காதில் விழுந்தாலும் அதை ஏற்க முடியாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவளின் கையை ஆதரவாக தட்டியவாறு,
“ஏன் கருத்தம்மா ! என் பிள்ளை நல்ல வேலையில இல்லை.. பொறுப்பில்லை.. உன் அளவுக்கு வசதி இல்லைன்னு வேணாம்னு சொல்றியா?” என்று எதை கேட்டால் அவள் மனம் திறப்பாளோ அதையெல்லாம் அவர் கேட்டதும்,
விலுக்கென்று அவரைப் பார்த்தவள், “இதுக்கான பதில் உங்களுக்கே தெரியும் ! ஒருவேளை அப்படி உங்க பிள்ளை சரியில்லைன்னு தான் வேற எந்த நல்ல பொண்ணும் தேடாம விவாகரத்தான எனக்கு கட்டி வைக்க நினைக்கிறீங்களா?…” என்று அவள் சூடாக அவரை திருப்பிக் கேட்க,
“இதுக்கான பதில் உனக்கே தெரியும் கருத்தம்மா! நீ பிறந்ததுல இருந்தே உன்னை கருத்தம்மான்னு கூப்பிட்டு இந்த தோள் மேலே போட்டு வளர்த்தவன் நானு… நீ வளர வளர உன்னை என் மருமகளாகிக்கணும்னு எனக்கு விருப்பம் இருந்தது ஆனால் அதுக்கு நான் கொடுத்து வைக்கல…” என்றதும் அதிர்ந்து அவரைப் பார்த்தாள். ஏனெனில் அவரின் அந்த விருப்பம் அவளுக்கு புது செய்தி.
அவளின் அந்த பார்வையை படித்தவர் மேலும் தொடர முயல, அவரை இடை வெட்டியவள்,
“அப்ப ஏன் முதல்லயே நீங்க என்னை பொண்ணு கேட்கல… அப்படி நடந்திருந்தா என் வாழ்க்கையே வேற மாதிரி இருந்திருக்கும்ல..” என்று அந்த நாட்கள் தந்த வலியின் ஆதங்கத்தில் கண்ணீரை உள்ளிழுத்தவாறு இறுக்கத்தோடு கேட்டவளைப் பார்த்து வருந்தியவர்,
“நான் தான் சொன்னேன்ல ! அதுக்கு கொடுத்து வைக்கலன்னு…” என்று அவர் அழுத்தி சொன்ன விதத்திலேயே அவர் தன்னிடம் கேட்ட கேள்விகள் தான் அதற்கான பதில் என்று, இத்தனை நாள் அனுபவத்தில் அவளுக்கு புரிந்ததும் கால்கள் தள்ளாட அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவளைப் பார்த்து,
“ஹே ! கருத்தம்மா ! ஒன்னுமில்லைடா… நீயா எதுவும் யோசிக்காத…” என்ற அவரின் படபடப்பில் தெளிந்தவள் பெருமூச்செடுத்தவாறு,
“நீங்க பதறாதீங்க ! முதல்ல உங்களுக்கு உடம்பு சரியாகட்டும்.. ஏற்கனவே நிறைய பேசிட்டு இருக்கீங்க…” என்று அவருக்கு ஆறுதல் அளிக்க அவரோ விடாமல் பேசினார்.
“எனக்கு ஒன்னுமில்லை! என் பசங்களை கஷ்டப்படாம வளர்த்துட்டேன்னு சொல்றதை விட கஷ்டப்படாம எதுவும் கிடைக்காதுன்னு தெரியாம வளர்த்துட்டேன்… அவங்க இப்படி இருக்கறதுக்கு முழுக் காரணம் நான் தான்.. மத்தபடி என் பசங்க நல்லவங்க தான்… உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டது ஏன் தெரியுமா?”என்று கேள்வியோடு நிறுத்தியவரை ஏறிட,
“என் பையனுக்கு வேற பொண்ணு தேடாம நான் ஏன் உன்னை கேட்கிறேன்னு உனக்கு புரியும்… இருந்தாலும் அதை விட இதுல என்னோட சுயநலம் தான் இருக்கு…”
“எனக்கு அப்புறம் குடும்பத்தை பொறுப்பா எடுத்து நடத்தற அளவுக்கு என் பொண்டாட்டிக்கும் என் பசங்களுக்கும் விவரம் பத்தாது… இந்த குடும்பத்தை சிதையாம நீ பார்த்துக்குவேன்னு தான் உன்னை கேட்கிறேன்…”
“நீ என் மச்சான் பொண்ணா மட்டும் இருந்துகிட்டு அதை செய்ய முடியாது… என் மருமகளா என் வீட்டுக்கு வந்து என் குடும்பத்தோட பொறுப்பை நீயே செய்தாலும் சரி இல்லை, என் பையனை செய்ய வைச்சாலும் சரி…எதுவானாலும் எனக்கு சந்தோசம் தான்…” என்று ஆயிரம் விளக்கங்கள் கொடுத்தாலும் அவர் குடும்பத்தை முன்னிறுத்தி அவள் எதிர்கால வாழ்க்கைக்காக தான் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பதை அவர் பேச்சிலும் அவர் அன்பிலும் புரிந்துக் கொண்டு நெகிழ்ந்து போனவள்,
“நீங்க சொன்னதும் சொல்லாம விட்டதும் எல்லாமே எனக்கு புரியுது மாமா ! ஆனால் என்னை மன்னிச்சுக்கோங்க ! என்னால இதை செய்ய முடியாது…” என்று அவள் திடமாக மறுக்க,
“ப்ளீஸ் கருத்தம்மா ! மரணத்தோட போராடிட்டு இருக்கேன்… இந்த நிலையில உங்கிட்ட யாசகமா இதைக் கேட்கிறேன்…இல்லைன்னு சொல்லாம எனக்கு உயிர்…… …..” என்று அவர் சொல்ல வருவதற்குள் அவர் வாயைப் பொத்தியவள்,
“இப்படி எல்லாம் கேட்டு இந்த ஜென்மம் முழுக்க அந்த பாவத்தை என்னை சுமக்க வைக்காதீங்க…. நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்…” என்று சொல்லி விட்டு அவர் கையிலே தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
அதன் பின் அவர் மருத்துவமனையில் இருந்து குணமாகி வந்த மறுநாளே திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது.
நெடுமாறனை தவிர வேறு யாருக்கும் அதில் விருப்பம் இல்லை… குழலியின் பெற்றோர்களும் முதலில் தயங்க குழலியின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்காதீர்கள் என்று மாறன் திட்டவட்டமாக பேசி அவர்களை சம்மதிக்க வைத்திருந்தார்.
குழலியின் தந்தை ரங்கனின் கூட பிறந்த தங்கை தான் செல்வி… செல்விக்கு, தன் அண்ணன் மகளாக குழலியின் மேல் பாசமும் அக்கறையும் அதிகமாகவே இருந்ததாலும் தன் மகனுக்கு மனைவி என்று வரும் போது அவளை ஏற்க முடியாமல் தடுமாறினார்.
ஏற்கனவே வாழ்க்கை இழந்தவள் தன் மகனுக்கு வாழ்க்கைத் துணையாக வருவதா என்ற எண்ணம் அவருள் துளிர் விட ஆரம்பித்தது…
மகளின் நலத்தை விட இந்த சமூகத்தின் விருப்பு வெறுப்புகளை நினைத்து பயந்த குழலியின் பெற்றோர்… அன்றைய நாளில் மாறன் குழலியை மருமகளாக கேட்டு அவர்கள் மறுத்த காரணங்கள் இன்றும் அப்படியே இருந்தாலும், மகளின் விவாகரத்திற்கும் இதற்கும் சரியா போயிற்று என்று அவர்களே ஒரு காரணத்தை உருவாக்கினர்…
இப்படியாக இவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு இடையில், விருப்பம் இருக்க வேண்டிய நபர்களின் விருப்பம் இல்லாமலேயே, ஆர்ப்பாட்டம் இல்லாமல், ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக கோவிலில் அமுதன் குழலியின் திருமணம் நடந்தேறியதை அவள் சொல்ல சொல்ல கவிக்கு என்ன சொல்லவேதென்றே தெரியவில்லை.
எப்படியும் இவள் பெற்றோர் இவளை அதிகம் வற்புறுத்தி மறுமணம் செய்து வைத்திருக்க மாட்டார்கள், இவளும் வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லாமல் இதிலே உழன்று இருப்பாள்…
இவளின் பிடிவாதத்தை உணர்ந்தே மாறன் இவளை கார்னர் செய்து இப்படி ஒரு முடிவை எடுக்க வைத்திருக்கிறார் என்பதை அவள் சொன்னதிலிருந்து உணர்ந்து அவருக்கு மனதார நன்றி கூறியவன், தோழியின் வாழ்க்கைத் துணையை நினைத்து வருந்தினாலும், அவளை மேற்கொண்டு பேச வைத்தான்.
“சரி விடு காரு ! நடந்ததை எதையும் மாத்த முடியாது… மாறன் அங்கிள் சொல்ற மாதிரி எல்லாம் நல்லதுக்கேன்னு நினைச்சுக்கோ… இந்த மாதிரி நிலையில வாழ்க்கையை அதோட போக்குல போய் வாழு…நீயா எதையும் இழுத்து பிடிக்காத….” என்றவன் பதிலில் அவள் சிறிது தெளிந்ததும்,
“ஆமா! அவர் முழு பெயர் என்ன ? என்ன படிச்சிருக்காங்க? என்ன வேலை பார்க்கறாங்க?…” என்று அவன் கேள்விகளை அடுக்க,
“இப்ப இதெல்லாம் அவசியம் நீ தெரிஞ்சுக்கணுமா…” என்று அவள் கடுப்போடு கேட்டதும்,
“ஹே ! பூனை ! ரொம்ப சீராத… ஒழுங்கா சொல்லு…” என்று அவனும் திருப்பி கோபப்பட,
“அவர் முழு பேரு எழிலமுதன்… இன்ஜினியரிங் படிச்சிருக்காங்க… ஊர்லயே ஏதோ டிப்ளமோ காலேஜில் வேலை செய்யறாங்க…. அதுவும் மாமா சொல்லி தான் இந்த அளவுக்கு எனக்கு தெரியும்… ரொம்ப வருஷம் அப்புறம் இப்ப தான் நான் அவங்களையே பார்த்தேன்…. இதுக்கு மேலே எதுவும் தெரியணும்னா நீயே போய் கேட்டு தெரிஞ்சுக்கோ…” என்று அவள் எழுந்து கிளம்பவும் அவளை வழி மறித்தவன்,
“ஹே ! என்ன சொல்ற… இப்ப தான் பார்த்தியா? ஏன் ? இதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போ…” என்று கேட்டவனை முறைத்தவள்,
“நான் காலேஜ் வந்த அப்புறம் மொத்தமா குடும்பத்துல இருந்து விலகி தான் இருந்தேன்… இது உனக்கே தெரியும்.. மாறன் மாமா கிட்ட மட்டும் தான் பேசுவேன்… நான் வீட்டுக்கு போனாலும் வெளிய எங்கேயும் போக மாட்டேன், மாமாவும் அத்தையும் என்னை காலேஜில இல்லைன்னா வீட்ல வந்து பார்ப்பாங்க அப்புறம் போன்ல பேசுவாங்க… அவ்வளவு தான்…”
“அமுதன் அவர் தம்பி கண்ணனை எல்லாம் நான் பார்த்து பல வருஷமாச்சு… ஹாஸ்பிடல்ல முதல்ல எனக்கு அவங்களை தெரியல… அத்தை பக்கத்துல இருந்ததை வைச்சு தான் அவங்களா இருக்கும்னு நினைச்சேன்…” என்று அவள் அவனுக்கு விளக்க,
“அப்ப ரொம்ப கஷ்டம்…” என்று அவள் காதில் விழாதவாறு முணுமுணுத்தான்.
“என்னடா?” என்று குழலி கேட்க,
“ஒண்ணுமில்ல… ஒண்ணுமில்ல… சரி நான் ஒன்னு கேட்டா உன் மனசுல இருக்கறதை சரியா சொல்லணும்…” என்று தன் கேள்வியை கேட்டபடியே அவள் முகத்தை ஆராய்ந்தான்.
“உனக்கு அவங்களை பிடிச்சிருக்கா? இனி என்ன பண்ண போறீங்க?” என்று அவன் கேட்டதும்,
“நான் முன்னாடியே சொன்னது தான் சின்ன வயசுல அவங்க கூட பேசியிருக்கேன் விளையாடி இருக்கேன்…அது வேற… ஆனால் பத்து வருஷத்துக்கு அப்புறம் அவங்களை இப்ப தான் பார்க்கிறேன்… எனக்கு அவங்களை பத்தி ஒண்ணுமே தெரியாது… அவங்களுக்கும் அதே நிலை தான்… இதுல எங்க இரண்டு பேருக்கும் ஒருத்தர் ஒருத்தரை பிடிக்கும் பிடிக்கலைன்ற கேள்வியே தப்பு…”
“என்னை கேட்டா மாமா எனக்கு நல்லது பண்றேன்னு அவருக்கு தப்பு பண்ணிட்டாரு… ஏன்னா கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க முடியும் ஆனால் வாழ வைக்க முடியாது…” என்று சொல்லி விட்டு வேகமாக அவள் இருப்பிடம் சென்று விட்டாள்.
அவள் பேச்சினை அமைதியாக உள்வாங்கியவன், “கட்டாயத்தின் பேரில் உங்க இரண்டு பேரையும் சேர்த்து வைச்ச கல்யாணமே உங்க இரண்டு பேரையும் ஒருத்தர் ஒருத்தருக்கு பிடிக்கவும் வைக்கும் வாழவும் வைக்கவும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு…”
“அதுக்கு எதாவது சின்ன துருப்பு சீட்டு கிடைச்சா கூட போதும்…அதுக்கு அப்புறம் நான் பார்த்துகிறேன்” என்றவனுக்கு விரைவிலே அதற்கான சந்தர்ப்பம் கிடைக்க போவதை அறியாமல் தனக்குள் பேசியவாறே யோசனையில் ஆழ்ந்திருக்க,
அவன் யோசனையின் நாயகனோ அங்கு சீற்றத்தில் பொருமிக் கொண்டிருந்தான்.
