Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்20

இவ்வளவு நாள் பிரிந்து இருப்பதால் முதலில் அனைவரும் கோவிலுக்கே செல்வோம் என முடிவெடுத்து.. அவர்கள் முறைமை ஏற்று இருக்கும் கோவிலுக்குச் சென்றனர்.. சற்றே தயங்கினாலும் பெண்கள் சிறிது நேரத்தில் இயல்பாகி விட.. சரவணன் மகிழின் தாத்தாவோடும் முகிலோடும் பேசினாலும்.. ஏனோ ராகவனும் அவரும் பேசிக் கொள்ளவே இல்லை.

சிறிது நேரத்தில் ரகுவும் அவன் தந்தையும் வந்துவிட.. அம்மனுக்கு அபிஷேக அலங்காரப் பூஜைகள் நிறைவு பெற்று திருமணத்திற்கு வாக்குக் கேட்டனர்.

நந்தா வேண்டுமென்றே இத்தனை நேரம் தன்னைத் தவிர்த்த ராகவனைப் பார்க்க.. அவரும் அந்த நாளின் நினைவில் அவனை முறைக்க ‘மீசை டென்சன் ஆகுது’ என எண்ணி மகிழைக் குறும்பாகப் பார்க்க.. அவளோ ‘கொன்றுவேன்’ என்பது போல சைகை செய்தாள்.. அவர்கள் மனம் போல ராம வாக்கே விழ இரு வீட்டாருக்கும் மகிழ்வான மகிழ்வு.

அவர்கள் திருமணம் ஊரறிந்த ரகசியம் என்பதால் நந்தா திருமணத்தை பெரிதாக நடத்த ஒப்புக் கொள்ளவில்லை.. இன்று போல இரு குடும்பங்கள் மட்டும் இணைந்து இதே கோவிலில் திருமணத்தை நடத்திக் கொள்வதாகவும்.. இரு வீட்டாரும் சேர்ந்து பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும்.. நந்தாவிற்கு கட்டிடத் திறப்பு விழா வேறு அருகில் இருப்பதால் அனைத்தும் அடுத்த வாரமே நடக்கும் எனவும் பேசி முடித்தாயிற்று.



Advertisement

அந்த வாரம் முழுதும் மகிழ் வேலைக்குச் சென்று வந்து கொண்டு தான் இருந்தாள்.. நந்தாவும் அடுத்த வாரம் திருமணம் என்பதால்.. இப்போதே முக்கியமானவர்களை அழைக்க அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருந்தான்.

ஒரு அவ்வாவை வைத்துக் கொண்டே அவள் மிகுந்த சிரமத்திற்கு இடையில் இருக்க.. கூட சாரதாவும் சேர்ந்து கொண்டால், கேட்கவும் வேண்டுமா.. அறிவுரைகள் வாங்கி மாள முடியவில்லை.. அது வெகு நாட்கள் கழித்து பேசுவது போல பாவனை செய்து பேசுவது மகிழுக்கு இன்னும் உச்ச கடுப்பு.

சகுந்தலை இவள் மேல் சற்று வருத்தமாகத் தான் இருந்தார்.. அவளாக இரண்டு மூன்று முறை பேசியும் அவர் சரியாக பதிலளிக்காமல் இருக்க.. நந்தாவின் காது தான் பஞ்சர் ஆனது.. ‘ஏன் அத்தை என்ட்ட பேசலை’ என.. திருமண வேலைகளும் வேகமாக நடக்க.. முகில் மற்றும் முத்துவின் காதலும் வளர்ந்து கொண்டு வந்தது.

Advertisement

அனைவரும் மிகுந்த மகிழ்வுடன் எதிர்பார்த்த திருமண நாளும் இனிதே விடிந்தது.. நந்தா மற்றும் மகிழின் குடும்பங்கள், முத்துவின் வீட்டினர் அவர்களோடு ரகுவின் தந்தையும்.. திருமணத்திற்கு மறுத்துக் காரணம் சொல்ல முடியாமல் மங்கையும் வந்திருந்தனர்.

Advertisement

தேன் நகு குழலில் தேர்ந்து தொடுத்த மலர்கள் சூடி.. வேலெனக் கொல்லும் விழியில் அஞ்சனம் தீட்டி.. வில்லென வளைந்த புருவங்களை ஒற்றை நெற்றிப் பொட்டு இணைத்திருக்க.. ஆடையும்.. அணியிழைகளும் அவளால் அழகுற.. அணங்கிவள் தகை தன் தலைவனை வருத்துவது புரியாமல் அவன் அருகில் நின்றிருந்தாள் மகிழ்.

இரு குடும்பங்களும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் உடையவர்கள் என்பதால் யாரையும் சிரமப் படுத்தாது.. எவ்வித சடங்குகளும் இன்றி தாலி மட்டும் கட்டிக் கொள்வதாய்ப் பேச்சு.

முகூர்த்த வேளையும் நெருங்க.. அனைவரின் ஆசியுடன் ‘ஈகையரிய இழையணி’ தன்னை மகிழின் கழுத்தில் பூட்டினான் நந்தா.. குனிந்திருந்த மகிழுக்குத் தன் நெஞ்சில் விளையாடும் அப்பொன் தாலி பழைய நினைவுகளை மீட்ட.. இதைத்தானே தான் யோசிக்காமல் கழட்டி விட்டோம் என நினைக்க.. அவள் எண்ணம் புரிந்தது போல வகிட்டில் குங்குமம் வைத்த நந்தா.. அவள் கையை அழுத்திக் கொடுத்தான்.

Advertisement

அதில் நினைவு வந்தவள் மெல்ல நிமிர்ந்து அனைவரையும் பார்க்க.. பாரபட்சமின்றி அனைவரின் முகமும் அகத்தின் நிறைவைக் காட்ட.. மகிழுக்கும் கண்களில் மகிழ்ச்சியின் உவர்நீர்.

மகளின் வதனம் காணும் முன் மன எண்ணம் உணர.. அவள் தந்தை அணிவித்திருந்த வெள்ளிச் சலங்கையுடைய காந்தள் மலர்ப் பாதங்களைப் பற்றி.. இனி இவை கணவனுக்கு அவன் மனைவியின் மனம் உரைக்கும் என மெட்டி போட்டு உறுதி செய்தான் நந்தா.

அதன் பின் கடவுளை வணங்கிவிட்டு.. பெரியவர்களிடம் ஆசி வாங்கி.. நண்பர்களிடம் வாழ்த்துப் பெற்று.. நந்தாவின் வீட்டிற்குச் சென்றனர்.. பூஜையறையில் அவள் தீபமேற்ற.. சாரதா அப்பத்தா.. புகைப்படச் சட்டத்திற்குள் சிரித்துக் கொண்டிருந்த தன் கணவனை கண்களில் நீருடன் கூடிய ஒரு புன்னகை புரிந்தார்.

காலை உணவுக்குப் பின்.. நந்தாவிற்கு தன் திருமணத்தை எண்ணிப் பார்த்து ஒரு கிறுக்குப் புன்னகை கூட செய்ய நேரமில்லாமல் வேலை அழைக்க.. அதை செய்யப் போய்விட.. மகிழுக்கு தனத்திடம் இருந்து அறிவுரைகள் டன் டன்னாய் கிடைக்க.. சகுந்தலை தான் மனமிறங்கி வந்து அவளைக் காப்பாற்ற வேண்டியதாய்ப் போயிற்று.

“ம்மா.. உன் வீட்டு வாசல்ல இருந்து அடுத்த வீட்டு வாசப்படிக்கு அனுப்பறதுக்கு நீ பண்ற பில்டப் தாங்கலைம்மா” என நொடித்துக் கொண்ட மகளை முறைத்த தனம்

“அடுத்த வீடா இருந்தாலும் மாமியார் வீடு டி.. நாளைக்கு மாமியார் அடிக்கிறாங்க.. பேசறாங்கன்னு கண்ணைக் கசக்கிட்டு வரக் கூடாது.. பாத்துக்கோ” என மிரட்ட

சகுந்தலையை பாவமாகப் பார்த்த மகிழ் “ஏன் அத்தை என்னை அடிப்பிங்களா” எனக் கேட்க

தனத்திற்கும் மேல் அவளை முறைத்த சகுந்தலை “இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லை.. இப்ப உங்க சொல்றதெல்லாம் எனக்கு எங்கம்மா சொல்லனும்.. உன் மருமக கிட்ட ஜாக்கிரதையா இருன்னு.. என்னையவே எண்ணெய்க் கத்திரிக்கா குழம்பு வைக்கச் சொன்னவ தானே நீ” என அவள் காதைப் பற்றித் திருக.. தனத்தின் லாவாப் பார்வை மகிழைச் சுட்டது..

அவரிடமிருந்த காதைப் பறித்துக் கொண்டவள் “எல்லாத்துக்கும் என் காது மேலையே கண்ணு.. இப்ப என்ன நான் நல்ல புள்ளையா இருக்கனும்.. குடும்பத்தைப் பாத்துக்கனும்.. அவ்வளவு தானே.. கொஞ்சம் கஷ்டம் தான் டிரை பண்றேன்” என முகத்தை சுருக்கினாள் மகிழ்.

சகுந்தலை சிரிப்புடன் “நீ எங்களை எல்லாம் பாக்க வேண்டாம் தாயி.. உன் புருஷனைப் பாத்துகிட்டா மட்டும் போதும்” என்றார் கட்டளையாக.

பேச்சிலேயே பொழுதுகள் கடந்து போக.. இரவு எட்டிப் பாரக்கும் வேளையில் தான் நந்தாவும் வீட்டை எட்டிப் பார்க்க வந்தான்.. அவனைக் கண்டதும் மகிழ் முகத்தைத் திருப்பிக் கொள்ள.. அடுத்த அறிவுரை செஷன் நாயகனுக்கு.

அதை அவன் நீந்தி தன் அறை சென்று சேர்வதற்குள் ஒரு வழியாகிப் போனான்.. சகுந்தலைக்கு இன்று ஒரே நாளில் மருமகள் மேல் இருந்த வருத்தங்கள் எல்லாம் மறைந்த போக.. அவளுக்கு நெட்டி முறித்து அவளையும் உறங்க அனுப்பினார்.

நந்தாவை எதிர்கொள்வதில் அவளுக்கு பதட்டம் பயம் எல்லாம் இல்லை.. சற்றே தயக்கம் மட்டுமே.. அவள் உள்ளே நுழைந்ததும்.. ஃபோனைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தா மென்மையாகப் புன்னகைத்து “புது இடம்ன்றதால இன்னைக்கு உனக்குத் தூக்கம் வராது மயிலு.. ஆனா எனக்கு செம தூக்கம்.. குட் நைட்” என அவளைப் பேச விடாமல் அவனே பேசிவிட்டு.. கட்டிலில் படுத்துக் கொள்ள..

கல்யாணம் பண்ணா பைத்தியம் தெளியும்னு சொல்லுவாங்க.. இவனுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கு.. என யோசித்தவள்.. உடை மாற்றி வந்து கட்டிலில் அமர்ந்த வேகத்தில் அவனை எழுப்ப ஆரம்பித்தாள்.

சலித்துக் கொண்டே அமர்ந்தவனிடம் “எனக்குத் தூக்கம் வர வரை எதாவது பேசு மாமா” என நச்ச.. அப்போது தான் அவள் உடையைப் பார்த்தான்.. வழக்கம் போல ஸ்க்கர்ட், டாப்ஸ் தான்.. அதில் அவள் இன்னும் அவனுக்கு இருபது வயது மகிழாகவே தெரிய.. “என்ன சொல்லனும்” என்றான் சிரிப்புடனே

“எதாவது.. உன் சொந்தக் கதை சோகக் கதை” என்றவளிடம் “சத்திய சோதனை.. என் லைஃப்ல சோகக் கதைன்னா அது உன் பார்ட் தான்.. நீயே இப்படிக் கேட்டா நான் என்ன சொல்லுவேன்” என உணர்ச்சிப் பூர்வமாகச் சொல்லி அவள் முறைப்பை வாங்கிக் கட்டிக் கொண்டான்.

பின் அவளே “அப்படி பொய் சொல்லி என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு என்ன அவசியம் மாமா.. இதால பாருங்க எத்தனை மனக்கஷ்டம்” என மென்மையாக வினவ

அவள் முகம் பார்த்தவன் “பயம் தான் காரணம் மயிலு” என்றவனை அவள் குழப்பமாகப் பார்க்கவும் “இந்த பயம் இன்னைக்கு நேத்து வந்தது இல்லை.. நீ எப்ப முதல் தடவை வாய்க்கால்ல விழுந்தியோ அப்ப வந்தது.. உன் கை மட்டும் வெளிய தெரியும் போது.. உன்கிட்ட வந்து உன்னைப் பிடிக்கறது வரை நான் துடிச்சது எனக்குத் தான் தெரியும்.. அதுக்கு அப்புறம் உலகத்துல எதுவுமே இல்லாத ஒரு உணர்வு.. உன்னைக் கையில் எடுத்தப்புறம் கூட என்னால வேகமா நடக்க முடியலை” என நேற்று நடந்தது போல நினைத்து அவள் கையை இறுகப் பற்ற

“அப்ப என்ன உனக்கு ஒரு பதிமூனு வயசு இருக்குமா.. அவ்வளவு தான் இருக்கும்.. எனக்கு உன் மேல இருக்கறது சரியான வயசு வரும் முன்னாடியே முளைச்ச ஒரு பிடித்தம்.. இதுவரைக்கும் அதுக்கு காதல்னு நான் பேர் பண்ணலை.. அதை அதுக்குள்ள சொல்ல முடியும்னு எனக்குத் தோணலை.. அது ப்ரியம்.. நீ சொன்ன மாதிரி அது அன்பு.. அதுக்கு எந்த எல்லையும் கிடையாது.. நான் உன்னை விட்டுப் பிரிஞ்சு போன பின்னாடியும்.. நீ என்னை விட்டுப் பிரிஞ்சு போன பின்னாடியும் அது அதிகமா ஆச்சே தவிர.. குறையலை.. நானே இல்லாம போனாத்தான் அது குறையும் போல.. நான் எவ்வளவு கன்ட்ரோலா இருந்தாலும் உன்கிட்ட என்னை இழுத்துட்டு வந்துச்சு.. உங்கப்பா வந்து என்ட்ட பேசின அப்புறம் என்னை அது மாதிரி ஒரு கிறுக்குத்தனம் பண்ண வச்சது” என நீளமாகப் பேசியவன் அவள் கன்னம் தாங்கி.. கண்களைப் பார்த்தான்.

‘தான் இத்தனை அன்பிற்குத் தகுதியானவள் தானா’ என மனம் கலங்கியவளின் நெற்றியில் ஆதரவாக முத்தமிட்டவன் “மயிலு.. இனி எப்பவும் என்னை விட்டுப் போகக்கூடாது சரியா.. இனிமேல் எல்லாம் நான் விடவும் மாட்டேன்” என இறுக அணைத்துக் கொண்டு.. அவள் உச்சியில் முத்தமிட்டான்.

அனைத்து கோவங்களும் வருத்தங்களும் முற்றுப் பெற்றிட.. மனம் இறகின் எடை கொள்ள.. தன் நாயகனின் தோள் சாய்ந்து இருந்தவளின் விழிகளை.. நித்ராதேவி மெல்லமாய் வந்து ஆட்கொண்டாள்.

நாயகன் வருவான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!