Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ45_2 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  45_2

 

வெளிச்சம் வந்த பின்னும்  சூரியன் எட்டிப்பார்க்க நல்ல நேரம் தேடிக் கொண்டிருக்க, இருட்டையும் விடியலையும் பொருட்படுத்தாமல் இயங்கி வந்த தனியார் மருத்துவமனை முன் ஜீப் நின்றது. மூர்த்தியின் குடும்பத்தோடு மிக நெருக்கமான உறவுமுறையில் இருப்பவரின் மருத்துவமனை அது.

 



Advertisement

ஜீப்பை பார்த்ததும், அங்கிருந்த காக்கி சட்டை ஒன்று எதிரே வர, வந்தவர் தன்னை அறிமுகப் படுத்தி, சத்யனோடு ஏதோ பேச.. மூர்த்தி கண் மருத்துவமனையை ஆராய்ந்தது, தெரிந்த முகம் ஏதேனும் தென்படுகிறதா என்று. ஏனெனில் அங்கு தானே மகளின் பிரசவம் என்று மூத்த அண்ணன் குடும்பமும்.. அவர்களுக்கு உதவ என்று மணியோ செல்வனோ மாற்றி மாற்றிச் சுற்றி திரிந்தனர்.

 

மூர்த்தி கண்ணில் நிலையில்லாமல் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்த சுவாமி தென்பட.. அவரும், மூர்த்தியைப் பார்த்துவிட.. அந்த வயதிலும் மனிதன் ஓடிவந்தார். மூர்த்தியின் கையை பிடித்தவருக்குப் பேச்சே வரவில்லை.

Advertisement

 

Advertisement

“என்ன அண்ணா? என்ன ஆச்சு? சுச்சி நல்லா இருக்கால்ல? பையனும் நல்லா தானே இருக்கான்?”

 

“ஏன் மூர்த்தி நம்ம குடும்பத்துக்கு இப்படி? யாருக்கு என்ன பாவம் செஞ்சோம்?” என்றார் கலக்கிப்போன கண்களோடே.

Advertisement

 

‘ஏன் என்னவாம்?’ புரியவில்லை அவனுக்கு

 

“என்ன ஆச்சு ண்ணா?”

 

எதை என்று சொல்லுவார்? மனிதன் அடக்கி வைத்திருந்த அழுகை பொங்கி கொண்டு வெளிவர.. கண்ணீர் கன்னம் தொட்டது.

 

“என்ன ண்ணா..?” நிலை கொள்ளவில்லை அவனுக்கு.

 

“தங்கம் அழுத்துட்டு இருக்கா.. உன்ன பார்த்தா கொஞ்சம் அழுகைய நிறுத்துவா.. அவளுக்குக் குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரேன் பிள்ளைங்கள தனியா விட்டுடாத.” தங்கம் இருந்த அறையைக் காட்டி விட்டு மனிதன் அருகிலிருந்த தேநீர் விடுதிக்கு விரைந்தார். அவருக்கு தொண்டை அடைத்தது. இரவு முழுவதும் பாடாய் பட்டுவிட்டார். எதையும் கூற அந்த உடலில் அவருக்கு ஜீவன் இல்லை. அவனே பார்த்து தெரிந்துகொள்ளட்டும் என்று ஓடி ஒளிந்துகொண்டாரோ?

 

மூச்சு முட்டியது. தங்கமே.. ‘தங்கத்துக்கு என்ன?’ இதயம் தட தடக்க ஓடினான்.

 

நீளமான அறையில் இரண்டு மெத்தைகள். இரண்டையும் நடுவே இருந்த திரைச்சீலை பிரித்திருக்க.. உள்ளே நுழைந்ததும் மூர்த்தி பார்வையில் தங்கம் விழ.. அருகில் செல்லவும், கண் திறந்து படுத்திருந்த தங்கம் மூர்த்தியைப் பார்த்த மாத்திரத்தில் எழுந்தமர்ந்தவள் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு மீண்டும் விசும்ப ஆரம்பித்தாள்.

 

என்ன கேட்டும் மகளுக்குப் பேச்சு வரவில்லை. பயந்திருந்தாள்.

 

“படு தங்கம்..” படுக்க வைக்க மூர்த்தி கையை இறுக பிடித்துக்கொண்டவள் கண்ணெலாம் நீர்.

 

எப்படி எல்லாமோ பேசி.. சமாதான படுத்தி.. தங்கத்தின் வாய்ப் பூட்டை உடைத்தான்.

 

“என்ன ஆச்சு தங்கம்?”

 

“என் வாய மூடி.. என்னை தூக்கிட்டுப் போனான் மாமா. மணி அவன அடிச்சதும்.. கல்லுல விழுந்துட்டேன். வலிக்குது மாமா..”

 

தூக்கினானா? யார்? அவன் குட்டி தங்கத்தையா? அவன் குட்டி மகளைக் தூக்கி செல்ல நினைத்தானா பாவி? வேலியைத் தாண்டி பயிரை அழிக்க வந்த கேடுகெட்டவனை என்ன செய்ய? விட்டால்.. மீண்டும் வருவானே.. பிடிக்க வேண்டும்.. பிடித்து அழித்தே ஆக வேண்டும்.

 

“எப்போ? யாரு.. யாரு டா தங்கம் உன்ன தூக்கினது?”

 

“நேத்து மாமா. யாருன்னு தெரியலயே… பயந்து அழுதேனா.. அடிச்சான் மாமா” பேச பேச, பயத்தில் கையை அவள் இறுக்க.. இவன் கை நடுங்க.. பேச்சை மாற்றினான்.

 

“அடிச்சானா? எங்க வலிக்குது என் தங்கத்துக்கு?”

 

காதை காட்டினாள், நெற்றியைக் காட்டினாள்,  முதுகை காட்டினாள்.. அவன் சின்ன மகள்.

 

பிள்ளையை ஆராய்ந்தான். அதிக காயம் இல்லை. கையில் சிராய்ப்புகள். நெற்றியில் பிளாஸ்திரி. கன்னத்தில் கை தடம், முகம் வீங்கியிருந்தது. ஒரு  காதில் பஞ்சு.

 

நடந்தது என்ன? பூ போன்ற அவன் மகளை அடித்தது யார்? ஏன்? புரியவில்லை. அதிகமாக உணர்ச்சி வசப் பட்டிருக்க.. ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. அவளும் சொல்லும் நிலையில் இல்லை.

 

“என்னை எதுக்கு அடிச்சான் மாமா?” மீண்டும் விசும்பல். அடங்க நேரம் எடுத்தது.

 

மனம் வலித்தது. அடித்தவன் எவன் என்றாலும் அவன் கையை உடைக்காமல் விடுவதில்லை. “மாமா உன்ன பார்த்துப்பேனாம். நீ சமத்தா தூங்குவியாம். என் குட்டி தங்கத்தோட வலிக்கு, டாக்டர் கிட்ட சொல்லி மாமா உனக்கு வலி போற மாதிரி மருந்து வாங்கி தருவேனாம்.” தலையை வருட, அழுகை மட்டு பட்டது.

 

“ம்ம்… அக்கா முகம் பூரா வீங்கி போயி.. வாயில ரத்தமா வருது. அக்காக்கும் வாங்கி தாங்க மாமா. அக்கா அழுதுட்டே இருக்கா. அக்காக்கும் ரொம்ப வலிக்குதாம்” பக்கத்து படுக்கை பக்கம் பார்த்துக் கொண்டே கூற..

 

“எந்த அக்கா தங்கம்?”, அடுத்த படுக்கையில் படுத்திருப்பது பெரிய  பெண்ணாய் இருக்கலாம்.

 

தேம்பல் நடுவே சின்னவள் திரைச்சீலை பக்கம் காட்டி, “நந்து” எனவும்.. மூர்த்திக்கு என்ன… எப்படி உணரவேண்டும் என்றே தெரியவில்லை.

 

அவன்  நந்தினியா? ஏதோ உடல் முழுவதும் ஊர்ந்து செல்லும் வேண்டாத உணர்வு. எழுந்து சென்றவன் தயக்கத்தோடே மெல்ல அடுத்த படுக்கையைப் பார்த்தான். நந்தினியே தான்! கந்தலாய் கிடந்தாள். படுவேகமெடுத்த இதய துடைப்பை.. கண்மூடி, மூச்சிழுத்து அடக்கினான்.

 

படுத்திருந்தாள். கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க.. ‘ஆண்டவா.. நந்து..?’ நந்தினி அருகே சென்றான்.

 

முகம் வீங்கி… உதடு கிழிந்து கன்னம் கன்றிப் படுத்திருந்தாள். கழுத்திலும் கையிலும் கோர மிருகத்தின் தடம் பதிந்திருந்தது. ‘ஐயோ… நந்துமா..’ பதறிப்போனான். கண் பனித்தது. ‘நந்து?’ இந்த கொடுமை எல்லாம் பார்க்கும் நாள் வரும் என்று கண்டானா?

 

நெற்றியைத் தொட்டுப் பார்க்க.. அனலாய் கொதித்தது.

 

“நத்து..” வாய் முணுமுணுத்தது. அசைவில்லை பெண்ணிடம். உறங்கவில்லை என்றது இமைக்குள் நிலையில்லாமல் அலைந்த கருமணி. பாதி மயக்கமும் பாதி பயமும் அவளை ஆக்கிரமித்திருக்க.. கண் மூடி படுத்திருந்தாள். ஒருவரையும் காணும் தைரியமில்லை. அவமானமாய் தோன்ற.. விழி திறக்க பிடிக்கவில்லை. ஒருவரையும்  அருகில் வர விடவும் இல்லை. அதுவும் செல்வனை பக்கத்தில் வரவிடவேயில்லை பெண்.

 

அவன் முன் ஓடியாடி விளையாடிய அவன் நந்து குட்டி. அவள் முகமும், அவள் காயப்பட்ட கழுத்தும், கையும், பார்க்கச் சகிக்கவில்லை. மனதின் வலிமை எல்லாம் வடிந்தது. மெல்லத் தலையை வருடவுமே.. கண் திறந்தாள்.

 

“மாமா.. என்ன பாக்காதீங்க.. போங்க மாமா” மூர்த்தியைப் பார்த்ததும் மறு கையாய் முகத்தை மூடிக்கொள்ள.. அவன், அருகிலேயே அமர்ந்துகொண்டான். அவள் கூறாமலே அவள் முகத்திலும் கையிலும் இருந்த காயம் கூறியது நடந்ததை. விரல்கள் தரையில் தேய்ந்து தோல் உரிந்திருக்க.. பார்க்க முடியவில்லை. பேச்சு வருவேனா என்று தொண்டையில் மாட்டி நின்றது.

 

ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த கையை இருஉள்ளங்கைகுள் மூடிக்கொண்டான். இவன் கல்லூரிக்குச் செல்லும் வரையிலுமே இவன் கை பிடித்து இவனோடு உண்டு விளையாடிய நந்தினியா இது? சின்ன சிராய்ப்பிற்கே ஊரைக் கூட்டி அழுபவள் வாய் மூடி விம்மலாய் வெடித்துக்கொண்டு!

 

இதயம் அழுத்திப் பிடித்தது. எதுவுமே புரியவில்லை. ஏன்? ஏன்? ஏன் தன் பிள்ளைகள்? ஆயிரம் விடையில்லா கேள்விகள். மனம் ரணமாய் வலிக்க.. சிந்திக்கவும் முடியவில்லை.

 

தங்கம் மூர்த்தி மேல் சாய்ந்து நின்றுகொள்ள.. அங்கு நீண்ட அமைதி. அமைதியை கிழித்தது நந்தினியின் வெடித்த கேவல்.

 

வயிறு மேலும் கீழுமாக ஏறி  ஏறி இறங்க.. அடக்க மாட்டாமல் விம்மி எழுந்த ஒரு கேவல் வெடிக்க, அதிகமாய் அழுதாள். நடந்ததை மறக்க முடியாமல் அவள் படும் அவஸ்தை அவனையும் தொற்றிக் கொள்ள.. “நந்து மா..” என்றான். என்ன சொல்லிக் கீறிக் கிடக்கும் இதயத்தைச் சரி செய்ய? யாருக்கோ என்றால் ஆறுதல் கூற வார்த்தைகள் வரிசை கட்டி நிற்கும்.. நமக்கென்று வரும் வேளை மொழி கூட மறந்து போகுமே… மூர்த்திக்கும் மறந்து போனது.

 

அவனுக்குமே படபடப்பு. கண்ணில் நீர் நிரைய, உள்ளிழுத்துக் கொண்டான். பெற்றால் தான் பிள்ளைகளா என்ன…? அக்காவின் பிள்ளைகளை தன் பிள்ளைகளாகத் தானே பார்த்தான். அவன் வீட்டு சிட்டுக்குருவிகளை நசுக்க பார்த்தது யார்? அவளை அழ வைத்த மிருகத்தின் மேல் கொலை வெறி ஏற..  மூர்த்தியின் கோபமும் உச்சத்தை அடைந்து கொண்டிருந்தது.

 

“நீ போய் படு தங்கம்..”

 

சிறுமி சென்றதும் நந்தினியிடம் பேச ஆரம்பித்தான்.

 

பிடித்திருந்த கை பிடித்த வாக்கிலேயே இருக்க , “அழாத நந்து. அவன் தான் அழனும். அழ வைப்பேன். என் பொண்ணு அழ கூடாது. நான் கேக்க போறதுக்கு.. நல்லா யோசிச்சி, நடந்ததை நினைவு படுத்தி சொல்லு. நமக்கு தெரிஞ்சவனா?” பதிலுக்காக வறண்டு ரத்தம் கட்டிய பச்சை நிற  உதட்டையே பார்த்து அமர்ந்திருந்தான்.

 

‘என் பொண்ணு’ என்றது தான் அவள் காதில் விழுந்தது.

 

“மாமா…” விசும்பினாள். மாமனின் உள்ளங்கையின் கதகதப்பும்.. அவனின் அழைப்பும், வருடலும்… மூர்த்தியின் உருவில் அப்பாவைக் கண்டாள். அவள் தேடலின் நிறைவாய் மூர்த்தி இருப்பான் என்று எண்ணியது இல்லை. ஆனால் இதே ஆளுமை.. அக்கறை, அன்பு.. அவள் அப்பாவிடம் தான் கடைசியாக பார்த்தாள்.. இன்று மாமனிடம்.

 

அது வரை அவன் பிடித்திருந்த கையை அவள் இறுக்கிக் கொண்டாள்.

 

கண்ணீரைத் துடைத்து, “சொல்லு நந்து. அவன நமக்கு தெரியுமா? இதுக்கு முன்ன பார்த்து இருக்கியா?” எனவும்

 

“என் பொண்ணுன்னு அப்பா தான் சொல்லுவார் மாமா..” மாமன் முகம் பார்த்தாள்.

 

ரத்த நிற கண்கள்.. அவனை பார்த்து மீண்டும் கலங்க, மெல்ல தலையை வருடியவன்… “அப்படி தான் நினைச்சுக்கோயேன். எனக்கு நீ வேற தங்கம் வேற இல்ல நந்து” என்றான் கண்பார்த்து.

 

அதுவரை ஒருவரிடமும் பேசாதவள் மூர்த்தியிடம் வாய் திறந்தாள்.

 

“ஹிந்தி மாதிரி எதையோ பேசினான். முன்ன பார்த்தது இல்ல. ஆனா அவன கூட்டிட்டு வந்தவள அன்னைக்கு மார்த்தாண்டத்தில நானும் அக்காவும் பார்த்தோம். கூட வந்த வேற ஒருத்தன், தங்கத்த தூக்கிட்டுப் போனான்.” தட்டுத் தடுமாறி.. திக்கித் திணறி கூறி முடித்தாள்.

 

“அவன பத்தி சொல்லு.. பாக்க எப்படி இருந்தான்? அங்க அடையாளம் ஏதாவது? நல்லா யோசி.. கண்டிப்பா ஏதாவது இருக்கும்.

 

அவ? அவள பத்தி ஏதாவது? என்ன உயரம்.. ஏதாவது அடையாளம்? எப்படி இருந்தா? யார பாக்க வந்தா..”

 

நந்தினி அழுதாலும் விடவில்லை. அவனுக்குத் தெரிய வேண்டி இருந்தது. நேரம் கடந்து போகும் முன்.. எப்படியேனும் அவர்களைக் கண்டுபிடித்துவிட மாட்டோமா என்ற வேகம்.

 

இங்கும் அங்குமாக… நினைவில் நின்றதைக் கூறினாள். கோர்வையாய் அனைத்தும் நினைவில் வரவில்லை. மருந்தின் வீரியம் குறைந்து, பயம் தெளிந்தால் பேசுவாளாயிருக்கும்.

 

ஏதேதோ கேட்டான். மனதில் பதித்துக் கொண்டான். கணக்கு போட்டான். இறுதியாக, “அவன அண்ணா, சந்திரான்னு கூப்பிட்டான்..” என்ற பதிலில் உறைந்து போனான்.

 

‘மணி!’ எல்லாவற்றுக்கும்  அவன் தான் காரணமா? இரத்தம் கொதி நிலையை அடைந்தது. ஏற்கனவே மணிக்கு அறிமுகமானவர்கள். நேரம் பார்த்து வந்து தாக்கியது புரிந்தது. மணிக்குத் தெரிந்தவன்… பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை துளிர்த்தது.

 

“உன் மேல சத்யம் நந்து. அவன் துடிப்பான். வேற பொண்ண தொடவே மாட்டான். அது என் பொறுப்பு. இப்போ நீ உடம்பு குணமாகி வீட்டுக்கு வரத பத்தி மட்டும் யோசி. இதுல உன் தப்பு எதுவும் இல்ல. அத முதல்ல புரிஞ்சுக்கோ… ”

 

மூர்த்தி, மெல்ல அவள் தலையை வருடிக்கொண்டே இருக்க.. மருந்தின் தாக்கம், தனியாக இல்லை என்ற உணர்வு… தேடலின் முடிவு.. உறங்கிப் போனாள். சுவாமி உள்ளே வர, மூர்த்தி வெளியே சென்றான்.

 

வெளியே சத்யன் நின்றிருந்தான்.

 

மூர்த்தி அவனைப் பார்க்க..

 

“ரேப் அட்டம்ட். பயந்து போயிருக்கா.. சரி ஆகிடும்.” என்றான், காக்கி சட்டை காரனாய்.

 

தான் பயந்தது போல் இல்லை என்றதும் மூர்த்தியின் மூச்சு சீரானது. சரி ஆகி விடுவாள். இல்லை என்றாலும் சரி ஆக்கி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

 

சேகரித்த விஷயத்தை சத்யனிடம் பகிர்ந்து கொள்ள..

 

“சோ.. மணிக்கு தெரிஞ்சவங்க. ஒரு பொண்ணோட சேர்த்து மூணு பேர்.

அடிப்பட்ட ஒருத்தனுக்கு நினைவு இன்னும் வரல.. மத்தவன் பேரு சந்திரா!

பொம்பளையும், சந்திராவும் இப்போ எஸ்கேப் ஆகிடாங்க.

நினைவில்லாம நம்ம கைல இருக்கவன் தான் தங்கத்தைத் தூக்கினவன்! அவன தான் மணி அடிச்சிருக்கான். அவன் கண்ண திறக்கணும் இல்ல மணி பேசணும்!”

 

“ஏன்.. மணி பெசறதுக்கு என்ன? தலைல ரெண்டு தட்டு தட்டு.. எல்லாம் பேசுவான்.” – எல்லாம் இந்த மணி இழுத்து வைத்தது! எரிச்சலில் மூர்த்தி.

 

“மணி பேசற நிலைல இல்ல மூர்த்தி. கத்தி குத்து வாங்கி இருக்கான். தலைல அடி. பேச்சு மூச்சில்லாம இருக்கான்.”

 

“ஓ..” மூர்த்தி எப்படியோ போல் ஆனது. மணி மேல் கோபம் தான். இருந்தும்.. மனதில் பாரம் ஏறிக்கொண்டது.

 

“பிழைச்சிடுவான் இல்ல…” வார்த்தை பிசறியது.

 

“இன்னும் நினைவு திரும்பல மூர்த்தி. பிழைச்சிடுவான்னு தான் டாக்டர் சொல்றார்.

 

மணிக்கும் அடிப்பட்டிருக்க என்ன நடந்திருக்கும் என்று கோர்வை படுத்த முயன்றானர்.

 

‘பெரிய வீட்டுக்கு, மணிய தேடி, ஒருத்தி வந்திருக்கா.. சந்திராவோடையும், நினைவில்லாதவனோடையும். அப்போ மணி வீட்டுல இல்ல. அவங்களுக்குள்ள ஏதாவது பழைய பகை இருந்திருக்கலாம். அதனால் பழிதீக்க, நினைவில்லாதவன் தங்கத்த தூக்கிட்டு போயிருக்கான். மணி வழியில பார்த்திருக்கணும். மணி அவன அடிச்சு போட்டுட்டு தங்கத்த காப்பாத்தியிருக்கான்..

 

சந்திரா.. நந்தினிட்ட தப்பா நடக்க ட்ரை பண்ணும் போது, மணி வீட்டுக்கு வந்திருக்கணும். இவனுங்க ரெண்டு பேருக்கும் சண்டை ஆகி இருக்கணும். சந்திரா இவனை அடிச்சு போட்டிருக்கணும். அப்போ ஹாஸ்பிட்டல்ல இருந்து செல்வனும், அண்ணான் பசங்களும் வரவும் சந்திரா ஓடி போயிருக்கணும்.

 

இவன ஒருத்தன் அடிச்சிருக்கான்னா அவன் இவன விட பலசாலியா.. கில்லாடியா இருக்கணும். இல்ல இவனை மறைஞ்சிருந்து தாக்கியிருக்கணும்.

 

இது எல்லாம் நடக்கும் போது அந்த பொம்பளை என்ன பண்ணிட்டு இருந்தா? எங்க போனா?

 

இவனுங்க வரதுக்காக வண்டியில இருந்திருக்கலாம். இல்ல அவளும்  தாக்கியிருக்கலாம்.. தாக்கபட்டிருக்கலாம்.’

 

“சரி.. உன் சக காக்கி சாட்டை என்ன சொல்லுது?” – மூர்த்தி.

 

“நம்ம வீட்டு ஆட்கள் தான் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்திருக்காங்க. சொந்தக்காரங்கன்னு அட்மிஷன் போட்டுட்டு ஹாஸ்பிட்டல் தான் போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணி இருக்கு. உயிர் சேதம் எல்லாம் இல்ல.. சோ கொஞ்ச நேரம் முன்ன தான் காக்கி சட்டையே இங்க வந்திருக்காங்க! இனி மேல் தான் அவங்க தரப்பில ஆரம்பிப்பாங்க”

 

“ஓ..”

 

“மூர்த்தி.. அக்கா..” என்று சத்யன் தயங்கவும்..

 

“ஆமா.. அக்கா! அக்கா எங்க ஆள காணம்? பொண்ணு பக்கத்துல இருக்காம அவ எங்க போனா? அண்ணா,  நந்து கூட இருக்கவே, அக்கா பெரிய மைனி கூட இருக்காளோ.. ”

 

பானு யாருடனோ இருப்பார் என்று எதிர்பார்க்க.. அவர் இருந்ததோ தனி அறையில். கத்தி நெஞ்சில் இறங்கி இருக்க.. உயிரோடு அவரை பிடித்து வைத்திருந்தது மருந்தும், மருத்துவ உபகரணங்களும். கேட்டவனுக்குத் தலை விண்ணென்று வலிக்க ஆரம்பித்தது.

 

சரி ஆகிடும்.. ஒண்ணும் இருக்காது.. நல்லவங்களுக்கு சோதன வர தான் செய்யும்.. சொல்லிக் கொண்டான். மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டான். தம்பியாய்… மகனாய்… அவனால் அது தான் அப்பொழுது முடிந்தது. அவன் கையில் எதுவும் இல்லையே.. படபடப்பு அடங்க மறுத்தது.

 

பானு அக்காவைக் காண ஐ.சி.யூ வாயிலில் காத்திருந்தவனுக்கு, மனம் தளர்ந்து போனது.  பார்த்தது வரை போதாதா என்ற தளர்வு. ஒரு இரவு! ஒரே ஒரு இரவு! என்னவெல்லாம் நடந்துவிட்டது?

 

இப்பொழுது தான் மணியைப் பார்த்து வந்திருந்தான். அவனைப் பற்றி என்னவெல்லாமோ கேட்டுவிட்டான் தான். அவை எல்லாம் உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. உண்மையோ பொய்யோ… கண் மூடி பேச்சு மூச்சில்லாமல் படுத்திருந்தவனைப் பார்க்கத் தான் முடியவில்லை. உடலிலும் தாறுமாறாக ஆணி போல் எதையோ வைத்து கீறியிருந்ததைப் பார்த்தவன் கண் பனித்தது. சந்தனக் கட்டை போல் இருந்த தேகம்.. ரத்த கீறல்களோடு.. பார்க்கவே முடியவில்லை.

 

கட்டை, தலையைத் தாக்கியிருக்க.. அதன் பொருட்டே அவன் சுய நினைவு போயிருப்பதாக மருத்துவர் கூறினார். தங்கம்.. நந்தினி… மணி என்று வரிசையாகப் பார்த்தவனுக்கு இதயம் அழுத்திப் பிசைய.. எதைப் பற்றியும் நினைக்க முடியவில்லை.

 

எதோ மருத்துவமனையின் சீஃப், சொந்தம் என்பதால் ஐ.சி.யூ அறைக்குள் செல்ல அனுமதி கிடைத்தது.

 

அக்காவைப் பார்க்கக் காத்திருந்த தருணம் வாழ்வின் மிக கொடுமையான தருணமாகத் தோன்றியது.

 

“டாக்டர் உள்ள இருக்காங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சர்” செவிலி கூறி சென்றார். செவிலியர் உள்ளே செல்வதும் வெளியே வருதுமாக இருக்க.. மூர்த்திக்கு மயக்கம் ஒன்று தான் வரவில்லை. அடுக்கடுக்காய் இது என்ன கொடுமை?

 

நிமிடங்கள் யுகங்களாக நகர, பானு இருந்த அறையிலிருந்து மருத்துவர் வந்தார்.

 

“கொஞ்ச கஷ்டம் தான்… பிழக்க வாய்ப்புகள் அதிகம். கவல படாதீங்க.”

 

கூறியவர் சென்றுவிட.. பானுவைப் பார்த்த இருவருமே நொறுங்கிப் போனார்கள்.

 

கண்ணோரம் நீர் வழிந்து கொண்டே இருக்க… பார்த்தே நின்றான். அந்த சின்ன உருவம் மூச்சு விட முடியாமல் ஏதேதோ உபகரணங்களுக்கு இடையே படுத்திருக்க… ‘அக்கா’ மனம் கதறியது. மெல்ல வருடினான் அவர் கையை. தாயாய், தமக்கையாய் அவனுக்காக நின்றவர். இந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசத்தை அள்ளி தந்தவர். ஊட்டி வளர்த்த கையை வருடிக்கொண்டே நின்றான். நீர் நிறைந்த கண் எதிரே எல்லாம் மங்கிப் போக,  படுத்திருந்தவர் உருவமும் மங்கலாக மாறியது.

 

“அக்கா.. க்கா..”

 

அவர் அசையவில்லை. ‘சரி ஆகி வந்திடுக்கா.. நீ இல்லாத ஒரு உலகத்த யோசிக்க முடியாது க்கா.. வந்திடு கா..’

 

“டாக்டர்.. கொஞ்ச கஷ்டம்னாலும் காப்பாத்திடலாம்ன்னு சொல்றாங்க.. தைரியமா இருடா. அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகாது.” நண்பனாய் கூடவே நின்று தைரியம் ஊட்டினான் சத்யன்.

 

வெகு நேரம் அமைதியாக வெளியே அமர்ந்திருந்தான். மனம் ஆறவில்லை. அக்கா.. அக்கா மட்டும் தான் அவன் சிந்தையில். மொத்தமாக ஓய்ந்து போனான். படுக்கையில் கிடந்த நாலு முகங்களும் மாறி மாறி வந்து வதைத்தது. மீண்டும் ஓர் முறை இவர்களை இதே நிலையில் பார்க்க நேர்ந்தால் பைத்தியமே பிடித்துவிடும் போல் தோன்றியது.

 

யார் இவர்கள்? ஒரு குடும்பத்தையே சாய்க்க என்ன காரணம்? சேதபட்டு கிடப்பது, மணி, மணியின் உடன் பிறப்புகள், மணியின் தாய்.

 

வந்தவர்கள் மணியில் கூட்டாளிகளாயிருக்க வாய்ப்பில்லை. மணிக்கு தெரிந்தவர்கள் ஆனால் கூட்டாளிகள் இல்லை. மணியால் பாதிக்கப்பட்ட யாரேனும் செய்த வேலையா? வந்தவர்கள் பழி தீர்க்க வந்தார்களா? மனம் எல்லாம் விதத்திலும் யோசித்தது.

 

சுவாமியின் மகள் பிரசவமாகி ஒரு புறமிருக்க.. பானுவின் குடும்பம் முழுவதுமே படுக்கையில். குடும்பத்தில் மீதி இருந்த ஆட்கள் இன்னும் வந்து சேரவில்லை. வீட்டிலிருந்த அத்தனை பேருமே மருத்துவமனையில்.  இருவரை தவிர! இன்னும் அந்த இருவர் மட்டும் கண்ணில் படவில்லை.

 

துளசியால் வர முடியவில்லையோ.. செல்வன் அவளுக்குத் துணை இருக்கிறானோ. வீட்டிற்கு சென்று அவளைப் பார்த்து வரவேண்டும். வருத்தத்தோடு இருப்பாள்.

 

மூர்த்தி நினைத்து முடிக்கும் முன், செல்வன் வந்துகொண்டிருந்தான்.

 

அழுது அழுது கண் வீங்கிப் போயிருந்தது. மூர்த்தியைக் கண்டதும்.. நின்ற இடத்தில் நின்றுவிட்டான்.

 

மூர்த்தி அருகில் செல்லவும்… “அண்ணா.. ண்ணா..” என்றானே ஒழிய வார்த்தை வரவில்லை.

 

“நீ இங்க தான் இருக்கியா?”

 

“ம்ம்..” தலை அசைய..

 

“அக்காக்கு சரி ஆகிடும் செல்வன். நந்தினிக்காகத் தைரியமா இருக்க வேண்டிய நீயே கலங்கி நின்னா? முதல்ல கண்ண துட. சரி ஆகிடும்.”

 

அழுகை கூடியதே ஒழிய குறைந்த பாடில்லை.

 

“டேய்.. ஷ்! என்ன இது. சரி ஆகும். கண்ண தொட”

 

“..” கண்ணைத் துடைக்கத் துடைக்க.. அது பொங்கிக் கொண்டு வழிந்தது.

 

“உன் மைனியும் இங்கேயா இருக்கா?”

 

தலையை மட்டுமே அசைக்க முடிந்தது. பேச்சு வரவில்லை.

 

“பச்.. நம்மளாலேயே முடியல! இத எல்லாம் அவ தாங்குவாளா? ஏதாவது சொல்லி வீட்டில இருக்க வேண்டியது தானே ரெண்டு பேரும். அவளுக்கு அலைச்சல் ஆகாது டா. நடக்கறத கூட வேகமா செய்ய வேண்டாம்ன்னு டாக்டர் சொன்னது உனக்கு தெரியும் தானே? தேவை இல்லாத பிரச்சினையை இழுத்து வைக்கறீங்க ரெண்டு பேரும். அவ அடம் பிடிச்சிருப்பா… நீ கூட்டிட்டு வந்திருப்ப! அவ என்ன சொன்னாலும் நீ ஒருத்தன் தலையாட்டிட்டே இரு! நீயும் உன் மைனியும்!”

 

“ண்ணா… சாரி ண்ணா.. தெரியல ண்ணா. என்னன்னவோ ஆகிடுச்சு அரை மணி நேரத்துல.. சாரி ண்ணா. மன்னிச்சிடுண்ணா..  சாரி ண்ணா.” தாரை தாரையாக கண்ணீர் கொட்ட.. வெடித்து அழுதான்.

 

“ச்சு.. செல்வன் அழாத. நந்தினிக்கு ஒண்ணும் இல்ல. ஒரு வாரத்துல உடம்பு சரி ஆகிடும். மென்டல் ட்ராமா கொஞ்ச இருக்கும், நீ தான் அவளுக்கு தைரியம் சொல்லணும். அவ தைரியமா இருக்கா.. சீக்கிரம் சரி ஆகிடுவா. நீ அழாத! சரி பண்ணிடலாம். மணிக்கும் ஒண்ணும் ஆகாது. மருந்தோட தாக்கம் தீரவும் அவனும் முழிச்சிடுவான்.

அக்கா.. அக்காக்கும் சரி ஆகிடும் செல்வன். தைரியமா இருக்க வேண்டாமா?” தன்னையும் தேற்றி எதிரில் நின்றிருந்தவனையும் தேற்றி,

 

“இப்போ துளசி எங்க?” எனவும்

 

செல்வன் கண் சென்றது.. ஐ.சி.யூ வாயிலை நோக்கி.

 

‘ஐ.சி.யூ? அங்கு யாரைப் பார்க்கச் சென்றாள்?’

 

“அங்க யாரு டா இருக்கா? யார பாக்க போயிருக்கா? இன்னும் யாருக்கெல்லாம் பிரச்சனை? ஒரு நைட் தானே நான் வீட்டுல இல்ல. ப்ச்! யாரு அங்க இருக்கா? இந்த சமையத்துல இவளுக்கு எதுக்கு இந்த வேலை?”

 

அறையிலிருந்து வெளியே வந்த சத்யன் மருத்துவரோடு பேசப் பேச, அவன் முகம் வெளிறிக்கொண்டே போனது.

 

அவன் மூர்த்தியைப் பார்க்க… இவனும் அவனைத் தான் பார்த்தான்.

 

ஏதோ சரி இல்லை. உள்ளே யார்? ‘துளசி?’ திடீர் என்று இதயம் வேகம் எடுக்க ஆரம்பித்தது. ரிதம் தப்பியது. இப்பொழுது தான் ஒருவாறு தன்னை சமாதான படுத்தியிருந்தான். செல்வன் நிலை… சத்யன் முகம்.. மூர்த்தியால் ஜீரணிக்க முடியவில்லை. அவன் மனைவியை இன்னும் பார்க்கவில்லையே.. ‘துளசி மா? எங்க இருக்க?’ உடல் முழுவதும் நடுங்க ஆரம்பித்தது. ம்ம்ஹூம் இருக்காது. இருக்கவே இருக்காது.. என்றாலும், உள்ளுக்குள் பயம் எல்லையைக் கடந்தது.

 

“இது எல்லாம் எங்க செல்வன் நடந்துது? நம்ம வீட்டுல தானே?” குரல் ஏகத்திற்கும் நடுங்கியது. ‘ஆமா’ சொல்ல மாட்டானா என்ற எதிர்பார்ப்பை நொடியில் உடைத்தெறிந்தான் செல்வன்.

 

இல்லை என்று தலையாட்டியவன்.. “தோட்ட வீட்டில..” என்றான் கண்ணீர் சிந்தி கொண்டே.

 

இம்முறை ‘அழாதே’ என்று கூறவில்லை. அவனுக்கும் அழ வேண்டும் போல் தோன்றியது. ‘துளசி மா..’ வீணான கற்பனை! முயன்று வெளியே வந்தான்.

 

“துளசி? உன் மைனி..?”

 

செல்வனுக்கு சொல்ல பதிலில்லை. “சாரி ண்ணா..” முகத்தில் அறைந்துகொண்டே அப்படியே முட்டி போட்டு மூர்த்தி கால் அருகில் அமர்ந்து கதறினான்.

 

இதயம் படு வேகமாக அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. நெஞ்சு முழு வேகத்தில் மேலும் கீழும் ஏறி இறங்க.. முயன்று நின்றான். ‘ஒன்றும் ஆகி இருக்காது’, மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டான். மனம் ஒரு நிலைக்கு வர மறுத்தது. உள்ளுக்குள் படபடத்தது. அவன் தலையே அவனுக்கு பாரமாய் போனது. ‘துளசி.. துளசி மா’ ஆயிரம்.. நூறாயிரம் முறை ஜெபமாய் அவள் நாமத்தை ஜெபித்தான்.

 

‘யார் குடியையும் நான் கெடுக்கவில்லையே.. என் குருவிக் கூட்டிற்கு எதுவும் ஆகியிருக்காது. துளசிக்கு ஒண்ணும் இல்ல. நல்லா இருக்கா..’ என்ன ஆறுதல் படுத்தியும் பாழாய் போன மனம் துடிப்பின் வேகத்தைக் குறைக்கவே இல்லை. கை கால் அதன் நடுக்கத்தையும் குறைப்பதாக தெரியவில்லை. இப்படிக் கூறி தானே இதுவரை தாக்குப் பிடித்தான். ஏன் இப்பொழுது மட்டும், மனம் அதை நம்ப மறுக்கிறது?

 

சத்தியனைப் பார்க்க.. இது வரை மலை போல் நின்ற தோழன்… உதட்டைக் கடித்து தன்னை ஒரு நிலைபடுத்த முயல்வது தெரிந்தது.

 

மூர்த்தி, சத்யனிடம் செல்லவில்லை. அவனிடம் எதையும் கேட்கவில்லை. இதயம் வலித்தது. வெடிக்கவா என்று கேட்டது. சுவாசம் தடைப்பட.. சுவரோடு சாய்ந்து நின்றுகொண்டான். ஆறடி உருவம் நொடியில் ஒடுங்கிப் போனது. கண், சத்யனிடம் யாசித்தது.

 

‘துளசிக்கு ஒன்றும் இல்லை’ என்று நண்பன் கூறுவானா என்று கண் யாசித்தது.

 

அவன் ஜீவன்.. அவன் அச்சாணி.. அவன் துளசி?

 

அவன் கண்ணால் பார்க்கும் முன்பே.. முழு பாசத்தையும் கொட்டிவிட்டானே… அவன் குட்டி கண்ணம்மா? இருவருக்கும் என்ன ஆயிற்று? யோசிக்கவே தலை சுற்றியது. நிற்கவும் முடியவில்லை.

 

எதிரில் வந்தவன் மூர்த்தியின் தோளில் கைபோடவும்…. உடைந்து அழுதான்.

 

“டேய்… துளசி டா..” என்றான், வாய்விட்டு அழுதுகொண்டே.. கண்ணீர் வழிய..

 

பேச்சும் இன்றி.. அசைவும் இன்றி நின்றிருந்தான் மற்றவன்.

 

 

 

உடைந்தது சத்யன். அழுதது சத்யன். காக்கி சட்டையாய் இல்லாமல்… நண்பனாய் இல்லாமல்.. தமையனாய் உடைந்து அழுதான்.

 

நொறுங்கியது மூர்த்தி. அசைவின்றி நின்றது, துளசியின் மூர்த்தி சார்.

 

மீசையை முறுக்கிவிட்டால் போதுமா? என் மனைவி? என் வாரிசு? காக்காமல் போனேனே.. சுக்குநூறாய் நொறுங்கி கொண்டிருந்தான்.

 

அவனை மீறி அவன் துளசியைத் தூசி கூட தொட முடியாது என்ற செருக்கு தடம் தெரியாமல் கரைந்து  போனது. 

 

மனிதன் உயிரோடு இருக்கும் போதே அணுவெல்லாம் வெடிப்பதை, துடிக்கத் துடிக்க உணரமுடியுமா? உணரமுடியும் என்றது வெடித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு அணுவும்.

 

 

 

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!