Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ45_1 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  45_1

 

நேரம் நடு சாமத்தைத் தொட்டிருக்க, வேகமாக சென்று கொண்டிருந்த ரயில், வேகம் குறைய ஆரம்பித்தது. நடுக்காடு போன்று தோன்றிய இடத்தில், அந்த சின்ன ரயில் நிலையத்தில், சம்பந்தமே இல்லாமல் ரயில் நின்றது.

 



Advertisement

ரயிலின் வேகம் குறையவுமே முழிப்பு தட்டினாலும், மூர்த்தி படுத்தே இருந்தான். பத்து நிமிடம் கரைந்தது. ரயில் அசையவில்லை. சிலர் தூங்கிக்கொண்டிருக்க, சிலரிடம் சலசலப்பு.

 

கதவின் அருகில் போய் நின்றுகொண்டவன் கண்ணில் பட்டது காக்கி உடை. காவல்துறை அதன் கடமையைச் செய்துகொண்டிருக்க, ரயில் நகருவதற்கான அறிகுறி இல்லை.

Advertisement

 

Advertisement

நடைபாதையில் நின்றுகொண்டிருந்தவன் காதில் விழுந்தது, அவனுக்கு மிகவும் பிரசித்தமான குரல்.

 

திரும்பிப் பார்க்க.. அவனும் அதே நேரம் இவனை பார்த்துவிட.. அந்த களைப்பிலும் சத்யன் முகம் பிரகாசித்தது.

Advertisement

 

மூர்த்தியை நோக்கி அவன் வரவும்.. “சத்யா..” என்று இவனும் சென்றான்.

 

“இதுலயா இருந்த? என்ன விஷயமா..?”

 

“ரதி குழந்தைய பாக்க..”

 

“அங்க அப்புறமா போகலாம். லகேஜ்ச எடுத்துட்டு என் கூட வா…” என்றான்.

 

அவ்வளவு தான் கூறினான். இவனும் “சரி” என்றுவிட்டான்.

 

அதன் பின், அடுத்த இருபது நிமிடம் இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லை. சத்யன் இங்கும் அங்குமாக நடந்துகொண்டே மற்ற காக்கி சட்டைகளுக்கு ஏதேதோ கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.

 

“போலாமா மூர்த்தி” வந்து நின்றவனிடம் ‘எதற்கு.. எங்கு .. ஏன் எதுவும் கேட்கவில்லை.

 

“அண்ணனுக்கும் தங்கைக்கும் நான் ரதி வீட்டுக்கு போறதுல்ல என்ன தான் பிரச்சினையோ.. வா” என்றுவிட்டு கிளம்பினான்.

 

சத்யனோடு மூர்த்தியை அமர்த்திக் கொள்ள, வண்டி ஓட்டுநர் பின்னால் அமர்ந்துகொண்டார். போலீஸ் ஜீப் கன்னியாகுமரியை நோக்கி பயணப்பட்டது. வண்டியிலும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

 

சத்யன் முகத்தில் யோசனை. மூர்த்தி அவனை ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை.

 

விடிவெள்ளி எட்டிப் பார்த்தது. மார்த்தாண்டம் அடைந்ததும் வண்டியை ஓரம் கட்டி, இருவரும் இரு கோப்பை தேநீரோடு அமர்ந்தனர்.

 

“சொல்லு சத்யா..” மூர்த்தி தான் ஆரம்பித்தான். காரணமில்லாமல் சத்யன் இவனை நிறுத்த மாட்டானே.

 

“உன் கல்யாணம் போது ஒரு கேஸ் விஷயமா.. அவசரமா போனேன். ஆனா கேஸ் முடியாம.. அது இழுபறியிலயே இருந்துது. நினைவிருக்கா?”

 

“மினிஸ்டர் மெஹராவோட அண்ணன் பொண்ணு.. அப்போ 17வயசு. ம்ம்.. சொல்லு!”

 

“அதுக்கு திரும்பவும் ஓவர் ப்ரஷர் இப்போ..”

 

“ஓ..”

 

“மினிஸ்டர் மெஹராவோட பொண்ணு.. இப்போ கேபினட் மினிஸ்டர். தங்கை சாவு வெறும் ஆக்ஸிடென்ட்ன்னு நினைச்சிருந்தவங்களுக்கு இப்போ தான் எப்படியோ விஷயம் தெரிஞ்சிருக்கு போல. கேஸ்ச முடின்னு நிக்கிறாங்க. 

 

அவங்க தங்க சாவுக்கு காரணமான அத்தன பேரையும்.. அந்த முழு நெட்வர்க்கையும் தூக்க சொல்லி, ஆர்டர் வந்து ஒரு மாசம் ஆகுது. அந்த பொண்ணு கேஸ்ல இன்வாள் ஆன ஒருத்தன் கூட மிஞ்ச கூடாதுன்னு தனி உத்தரவு. உயிரோட பிடிச்சாலும் சரி.. பிணமா முடிச்சாலும் சரி.. மிச்சம் வைக்க கூடாதாம்.

 

‘ஹார்வஸ்ட்’ன்னு ஒரு தனி கமிஷன் என் தலமையில. நம்ம ப்ரேம்-ம கேட்டிருந்தேன். இன்னும் ஒரு நாலு நாள்ல வரான். நீ டிபார்ட்மென்ட்ல இல்லாம போயிட்ட மூர்த்தி..

 

சின்ன டீம். எங்களோட சேர்ந்து வேலை செய்ய இன்ஃபார்மர்ஸ் ரெண்டு பேர்.

 

கேஸ்ச ரீஓப்பன் பண்ணி ஒரு மாசம் ஆகியும், கேஸ் நகரவே இல்ல… இப்போ ஒரு வாரமா நிறைய முன்னேற்றம் கேஸ்ல!

 

அந்த பொண்ணு செத்து இத்தன வருஷம் கழிச்சு புது தகவல் கிடைச்சிருக்கு.

 

நாலு பேரு.. அப்போ தான் புதுசா கடத்தல்.. தொழில்ன்னு.. களத்தில இறங்கினவனுங்க அத செஞ்சிருக்கானுங்க.

 

பிரச்சினைன்னு தெரியவும், பொண்ண கொன்னுட்டு.. அப்போதைக்கு அந்த தொழில அப்படியே விட்டுட்டு தலை மறைவாகி இருக்காங்க.

 

அவங்க தலை மறைவா வாழ வந்தது சவுத்துக்கு.. அதாவது தமிழ் நாட்டுக்கு.

 

மூணு பேரு களியக்காவிளைல தங்கி இருக்க, ஒருத்தன் மட்டும் வேற எங்கேயோ இருந்திருக்கான்.

 

அப்புறம் அவனுங்க நாலு பேரும் கொஞ்ச நாள் கல்கத்தால சுத்திட்டி இருந்திருக்கானுங்க. இது எல்லாம் அப்போ எங்களுக்கு தெரியல. இப்போ தான் வேற ஒரு கேஸ்ல, அவனுங்கள ஒருத்தன் மாட்டவும், விஷயம் தெரிஞ்சுது.

 

அப்புறம் கல்கத்தாலேயே ஆளாளுக்கு பிரிஞ்சுட்டானுங்க. அவனுக்கு அதுக்கு மேல மத்தவங்கள பத்தி தெரியல.

 

அவன் குடுத்த தகவல் வச்சு.. களியக்காவிளையில தங்கியிருந்த மூணு பேர பத்தி விசாரிச்சோம். ஒண்ணும் கிடைக்கல.

 

முட்டிட்டு நின்ன நேரம்.. ஒரு விஷயம் சொன்னான். அதாவது,  அந்த மூணு பேரும்.. அவனுங்க ஃப்ரெண்ட தேடி ஒரு தரம் விடிய காலைல, மலையடிவாரம்  வந்திருக்கானுங்க. ஒரு வெள்ளரி தோட்டதுல மாட்ட பாத்தானுங்க. ஆனா தப்பிச்சுட்டாங்க!”

 

“..”

 

“அந்த ஃப்ரெண்ட் நம்ம ஊர சேர்ந்தவன்.”

 

“ஓ” சத்யன் எதற்குத் தன்னை நிறுத்தினான் என்று புரிந்தது.

 

“நம்ம ஊருக்கும்… பாம்பேக்கும் ட்ரிப் அடிக்கிற ஒருத்தனை எனக்குத் தெரியும்! இப்போ அவன் ஊர்ல தான் இருக்கிறதா தகவல்!! அவன் விசாரிக்கணும். ‘அவன்’ இந்த கேஸ்ல இன்வால்ட்-னா என்ன பண்றது மூர்த்தி அவன?”

 

“நிஜமான இன்ஃபர்மேஷனா?” -மூர்த்தி

 

“ம்ம்.. ஒண்ணுக்கு ஒன்பது முறை க்ராஸ் செக் பண்ணியாச்சு மூர்த்தி.. கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும்.. ஆனா இத தான் அவன் சொன்னான்.”

 

“நம்ம வீட்டு பையன்னா டா? ப்ச்! எதிர்பாக்கல சத்யா. ஊர் ஊரா சுத்திக்கிட்டு ஃப்ரெண்ட்சோட சேர்ந்து அப்பன், பாட்டன் சொத்த கரைக்கிறான்னு நினைச்சேன். இப்படி செய்ய இவனுக்கு என்னடா கேடு வந்துது.

 

வீட்டுல தான் இருக்கான். அவன அரெஸ்ட் பண்ண தான் வரியா?”

 

“இப்போதைக்கு விசாரணை. அதுக்கப்புறம் தான் அரெஸ்ட் பண்ணனுமா என்னான்னு தெரியும்!  மாட்டினவனும் இன்னும் ஒருதனும் தான் எல்லாம் செஞ்சவனுங்க. இவனும் வேற ஒருதனும் அப்போ ரொம்ப புதுசு போல.. எடுபிடியா சுத்திட்டு இருந்திருப்பானுங்க போல. விசாரிக்கணும். இது தான் அவனோட முதலும் கடைசியுமா.. இல்ல அப்புறமும் இது தான் தொழிலா செஞ்சானான்னு தெரியல! இவன் வாய் திறந்தா… மத்தவனுங்கள பத்தி தெரிஞ்சுடும். நாலு பேரு மட்டும் தானா இல்ல இதுக்கு பின்னாடி இன்னும் ஆளிருக்கான்னு விசாரிக்கணும். அவன் வேற ஆள் இல்லன்னு சாதிக்கிறான்.

கண்டிப்பா.. இவனுங்களோட நிக்க.. வாய்ப்பே இல்ல. பின் பலம் இல்லாம இவ்வளவு தைரியமா ஆரம்பிச்சிருக்க மாட்டானுங்க. மணிட்ட பேசி விஷயத்த வாங்கணும்.

நான் இத சும்மா விட போறதும் இல்ல. பெரிய கேஸ் மூர்த்தி. சரியான பிரேக். லிங்க கிடைச்சுதுனா, இந்த கமிஷன் பேர சொல்லியே அந்த ஒரு நெட்வர்க்கை  முழுசா வேரோடப் பிடுங்கிடலாம். பிறந்த பிறப்புக்கு ஒரு அர்த்தம் கிடக்கும்!

இவன் பெரிய பூதமா இருக்க கூடாதுன்னு மனசு அடிச்சுக்குது. என்னதான் இருந்தாலும் ஒரு காலம் அண்ணான்னு என் பின்னாடி சுத்தினவன்.. என் உடன் பிறப்பு மாதிரி.

ஏதாவது திரும்பவும் இந்த கேஸ்க்கு லிங்க் ஆர மாதிரி தகவல் வந்தா இன்ஃபார்ம் பண்ண சொல்லி களியக்காவிளை போலீஸ்ட்ட கேட்டிருந்தோம். கொஞ்ச நாளாவே அங்க இருக்க ஹோட்டல் ஒண்ணுல புது நடமாட்டம் இருக்கதா சொல்றார் அந்த எஸ்.ஐ. விசாரிக்கிற அளவு ஒண்ணும் இல்லையாம். ஆனா ஏதோ சரி இல்லன்னு சொன்னார், பேச்சு வாக்குல.

அதையும் என்னன்னு பாக்கணும்.”

 

“சரி… இப்போ அந்த ஸ்டேஷன்ல்லா யார தேடிட்டு இருந்த?”

 

“அது கேஸ்சே வேற டா.”

 

“ம்ம்..”

 

மனம் ஒரு நிலையில் இல்லை மூர்த்திக்கு. தன் வீட்டிலேயே இப்படி ஒருத்தனா? ஆரம்ப நாட்களில் துளசி பட்ட பாடுகள் கண் முன் வந்தது. அவள் உடலில் இருக்கும் தழும்புகள்… அந்த கணுக்காலில் கம்பி ஏற்படுத்திய தடையம்.. பழுத்துப் போன பாதம்… நினைக்க நினைக்க மணி மேல் வெறுப்பாய் தோன்றியது. எத்தனை குழந்தைகளை மொட்டிலேயே இவன் கருக்கினான்? எத்தனை கதறல்களுக்கு இவன் சொந்தக்காரன். இந்த பாவம் எல்லாம் குடும்பத்தின் மேல் விழுந்தால்.. அதன் பாரம் தாங்கத் தான் இவர்களால் முடியுமா? வீட்டில் எத்தனை பெண் பிள்ளைகள்.. ஒரு பிள்ளை ஒரு மணி நேரம் காணாமல் போனாலே உயிர் துடித்துப் போகாதா? பிள்ளைகளை தொலைத்த பெற்றவர்களில் நிலை? இவனை வெட்டி போட்டால் தான் என்ன? ப்ச்! அக்கா? அக்காவிற்கு தெரியும் வேளை? யோசிக்கவே முடியவில்லை.

 

“வீட்டில தெரிய வேண்டாம் சத்யா. அக்கா உயிரையே விட்டுடுவா. பச்! வீட்டில இருந்து கூட்டிட்டு போயிடு. இங்க வச்சு வேண்டாம். அவனா இருக்க கூடாதுன்னு வேண்டிக்கிறேன்.

சதைய வித்து பிழப்பு நடத்தற அளவுக்கு எப்போடா இவன் நிலமை தாழ்ந்து போச்சு? அந்த சதைய மட்டும் பார்த்தவனுக்கு.. அதுக்கு நடுவுல ஒரு உயிரும் அந்த உயிருக்கு உணர்வும் இருக்குன்னு தெரியாம போச்சே.. ஏன் சத்யா? இவனுக்கு குடும்பத்தில என்ன குறை? ச்ச.. அவன பெத்து வளர்த்த பாவத்துக்கு குடும்பத்த கயிறுல தொங்க விட்டுடுவான் போல! அவன பத்தி வெளியில ஒரு விஷயம் வர கூடாது சத்யா!”

 

“ம்ம்.. போற வழியில தானே ஸ்டைஷன் இருக்கு.. நான் வரதா சொல்லி இருந்தேன்.  தலைய காட்டிட்டு போவோம்..” – சத்யன்.

 

ஜீப் நேரே நின்றது களியக்காவிளை காவல் நிலையம் முன்.

 

“நீ போய் இன்ஸ்பெக்ட்டர பாரு சத்யா… நான் பக்கத்து கடையில டீ குடிச்சுட்டு வரேன்.”

 

கேள்வி பட்ட எதுவும் உவப்பாக இல்லை. கையிலிருந்த தேநீர் தொண்டையைத் தாண்டி உள்ளே செல்ல பாடாய் பட்டது.

 

மனம் ஏகத்துக்கும் சஞ்சலம் அடைந்தது. மன்னிக்க கூடிய தவறா இது? மணியிடம் கேட்க வேண்டும். இப்படி ஒரு வாழ்க்கை முறையை ஏன் தேர்ந்தெடுத்தான் என்று! தன்னை சுற்றி வீட்டில் இத்தனை பெண்களைக் கொண்டவனால் எப்படி மற்ற பெண்கள் வாழ்வை சீரழிக்க முடிகிறது? அவர்களின் கதறல் மத்தியில் இவனால் எப்படி உண்டு உறங்க முடிந்தது என்று!

 

ஒருத்தி பட்ட பாடெல்லாம் பார்த்தவனால் இதை எளிதில் கடந்து போக முடியவில்லை. ‘துளசி மா..’ மனைவியின் நினைப்பில் வந்து முடிந்தது மனப் போராட்டம்.

 

மரத்தடியில் அவளை விட்டு வந்ததை நினைத்தான். துளசியின் சிரித்த முகம், அவனின் அலைபுரண்ட மனதை ஒரு நிலையில்  கொண்டு வந்தது. உள்ளுக்குள் ஒரு அமைதி ஏற்பட, உதடு தன்போல் விரிந்தது. ‘நீ என்ன நாளைக்கு எனக்கு சர்ப்ரைஸ் தரது? இன்னும் கொஞ்ச நேரத்தில உன் கண் முன்னாடி வந்து.. நான் உனக்கு சர்ப்ரைஸ் தரேன்..’ சிரித்துக் கொண்டான், அவள் முகத்தில் ஏற்பட போகும் இன்ப அதிர்ச்சியை எண்ணி.

 

சத்யன் வந்தான் தேநீர் கடைக்கு.

 

“வா சத்யா.. டீ சொல்லவா?”

 

“வேண்டாம் வா போலாம்..”

 

“சரி வா.. துளசி கையால நல்லதா ஒரு டீ போட சொல்லுவோம்..”

 

“கேஸ் விஷயமா அவசரமா ஹாஸ்பிட்டல் வரைக்கும் போகணும் மூர்த்தி.” ஜீப்பை நோக்கி நடந்தான்.

 

“சத்யா? நான் வீட்டுக்கு கிளம்பவா? ஹாஸ்பிட்டல்ல எனக்கு என்ன வேலை. வீட்டுக்கு போனா துளசியாது சந்தோஷ படுவா. நான் இப்படியே கிளம்பறேன். நீ வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு வா.

 

துளசி உன்ன பார்த்தா ரொம்ப சந்தோஷ படுவா.”

 

“ஒரு எட்டு பார்த்துட்டு ஒண்ணாவே போவோம். கவர்மென்ட் ஹஸ்பிட்டல்ல, சந்தேக லிஸ்ட்ல இங்க சுத்திட்டு இருந்த ஒரு தருதலை அடிபட்டு கிடக்காம். அவன பாத்துட்டு,பக்கத்தில தான நம்ம மதனோட ஹாஸ்பிட்டல் இருக்கு.. அங்க போய் சுச்சி-யையும் பொடியனையும் பார்த்துட்டு, நேரா வீட்டுக்கு தான்.”

 

“சரி வா போவோம்.. சீமந்தத்துக்கு லீவ் அப்ளை பண்ண மறக்காத. நீங்க வரல துளசி வேப்பல கைல எடுத்திடுவா. கல்யாணத்துக்குப் பண்ணின மாதிரி பண்ண கூடாது, ஒரு வாரம் தங்கற மாதிரி வா.” 

 

பேச்சு முழுவதும் துளசி, குழந்தை என்ற இருவரை மட்டுமே சுற்றி வந்தது.

 

“அவ என் தங்கை டா. நான் இல்லமா ஃபங்ஷனா? வளைகாப்பு என் பொறுப்பு டா மச்சான். இப்போவே அனு வளையல் எல்லாம் வாங்கி வச்சிருக்கா. ஃபங்ஷன ஜாம் ஜாம்ன்னு நடத்திடுவோம்.பொண்ணு பிறக்கணும்னு ஒரே வேண்டுதல். என் மருமகள வளத்து எங்கட்ட கொடுத்துடுவியாம்.. நாங்க எங்க பொண்ணா பார்த்துப்போமாம்..”

 

“உனக்கு மருமகளே தான். எனக்கு சந்தேகமே இல்ல. அமர கூட்டிட்டு வர கேக்கறா. அவ தம்பிய பார்த்தே ஆகணுமாம்..”

 

பேசிகொண்டே,  ஜீப் மருத்துவமனை நோக்கி விரைந்தது.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!