Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennadi Maayaavi Nee

Ennadi Maayaavi Nee 25

மாயாவி 25:::-

 

நானே உணராத நம் பந்தத்தின்… 

உரிமையை உணர வைத்த நீ! 



Advertisement

நீயே உணராத உன் காதலையும்… 

எனக்கு உணர வைத்த நீ !

அந்த காதலுக்கும் உரிமைக்கும்… 

Advertisement

நான் விரும்பியே என்னை… 

Advertisement

அடிபணிய வைக்கிறாயே!

என்னடி மாயாவி நீ !

 

Advertisement

கண்முன்னே இருக்கும் இயற்கை எழிலை இந்த பனிப் பொதிகள் மறைப்பது போல இவளுள்ளே இன்னும் என்னவெல்லாம் மறைத்துக் கொண்டிருக்கிறாள்.

 

இயல்பான சின்ன சின்ன ஆசைகளை கூட தன்னுள் பொத்திக் கொண்டு வெளியே திடமாக காட்டிக் கொள்ளும் இவளிடம் இன்னும் இன்னும் எத்தனை ரகசியங்கள் தான் இருக்கும்?…  

 

அனைவரும் ரூமிற்கு கிளம்பி இருக்க அங்கிருந்த பார்க்கின்  நிழற்குடை கீழே இருந்த இருக்கையில் இருவரும் தள்ளி தள்ளி அமர்ந்து இருந்தாலும் எண்ணம் என்னவோ அருகே இருந்த தன் சரி பாதியை பற்றியே இருந்தது.

 

மழையையும் குளிரையும் ரசித்துக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவளைப் பார்க்க பார்க்க அவள் கேட்ட கேள்வியே அவனுக்குள் உழன்று கொண்டிருந்தது.

 

மணி என்னவோ ஏழு தான் ஆகியிருந்தது ஆனால் அதற்கே நள்ளிரவாக காட்சி அளித்தது. இதற்கு மேல் இங்கு இருக்க வேண்டாம் கிளம்பலாம் என்று எத்தனையோ முறை அவளை அழைத்தாயிற்று ஆனால் அவள் அசையும் வழியை தான் காணோம்… 

 

இதே முன்னே இருந்த அமுதனாக இருந்திருந்தால் அவளை அப்படியே விட்டுவிட்டு எப்போதோ பறந்திருப்பான் கூடவே அவளின் பிடிவாதத்தை திட்டியபடி…

 

ஆனால் இப்போது நிற்பவனுக்கு அவளின் அந்த பிடிவாதத்தையும்  ரசிக்க தோணுகிறதே… ஏன்? எப்படி? எப்போது? என்ற கேள்விகளுக்கெல்லாம் அவனுக்கு விடை தேவை இல்லை என்றே தோன்றியது… 

 

எதுவாக இருந்தால் என்ன அவளை எனக்கு பிடித்திருக்கிறது அது போதும்… அது மட்டுமே போதும்.. என்று இந்த மனம் அவளின் பின்னால் செல்ல விழைகிறதே…  ஆனால்… ஆனால் என்ற அந்த  கேள்வி அவன் முன்னே பெரிதாக நிற்க அதை ஓரம் தள்ளி வைத்தவன், எழுந்து வந்து அவள் முன் நின்றான்.

 

“குழல்! ரொம்ப இருட்டிடுச்சு… மழையும் விடாம தூறிட்டு இருக்கு… உனக்கும் குளிருதுல அப்புறம் என்ன? வா கிளம்பலாம்…” என்றவனை சட்டை செய்யாமல் அமைதியாக இருந்தாள்.

 

“அடியேய் ! உன்னை தான் கூப்பிடறேன்… காதுல விழுதா இல்லையா கிளம்பலாம் வா….” என்றவனை நிதானமாக நிமிர்ந்து பார்த்தவள்,

 

“நான் உங்க கிட்ட இரண்டு விஷயம் கேட்டேன்… இரண்டுல ஒன்னு தான் முடியாதுன்னு சொல்லிட்டிங்க… இன்னொன்னு என்னன்னு தெரியாம நான் இங்கிருந்து வர மாட்டேன்…” என்றவளின் அழுத்தம் எப்போதும் போல அவனை ரசிக்க வைக்க, தலையை தன் கைகளால் தாங்கியவாறே அவளருகே அமர்ந்தவனை பார்க்க அவளுக்கு என்னவோ போல் ஆனது.

 

“ஐஸ்க்ரீம் தான் வாங்கி தர மாட்டேன்னு சொல்லிட்டிங்க… அன்னைக்கு உடம்பு சரியில்லாம இருந்த அப்ப உங்ககிட்ட நான் எதுவோ சொல்லி இருக்கேன்… ஆனா என்னன்னு முழுசா ஞாபகம் வரல…”

 

“அது என்னன்னு தானே இப்ப கேட்கிறேன்… அதை சொல்றதுக்கு என்ன? அப்படி சொல்ல கூடாத விஷயமா இல்ல அதை கேட்கறதுக்கு எனக்கு தகு……..” என்று அவள் சொல்லி முடிக்கும் தன் கரங்களால் அவள் வாயை மூடி இருந்தான்.     

 

“எனக்கு தான் தகுதி இல்ல… நீ சொன்ன விஷயத்தை திரும்பி சொல்றதுக்கு கூட எனக்கு அந்த தகுதி இல்ல… ஒரு குடும்பத்தை பொறுப்பாவும் பாதுகாப்பாவும் பார்த்துகிறது தான் ஆம்பிள்ளைக்கு அழகுன்னு சொல்லுவாங்க…”

 

“நான் எல்லாம் என்ன ஆம்…..” என்று கத்தியவனின் வாயை தன் தளிர் விரல்களால் மூடியிருந்தாள்.    

 

“நான் எதுவும் கேட்கல… நீங்க எதுவும் சொல்லவும் வேணாம்… விடுங்க ப்ளீஸ்…” என்று கெஞ்சலாக கேட்டவளின் விரல்களை தன்னிடமிருந்து விலக்கினான்.  

 

“நமக்குள்ள இருக்க இந்த தயக்கம் பிடிக்கல… இயல்பான பேச்சு வார்த்தை கூட இல்லாம நம்ம இப்படி இருக்கறது சுத்தமா பிடிக்கல…” என்றவன், “அன்னைக்கு நீ சொன்னது இன்னமும் மனசுக்குள்ள ஓடிட்டே இருக்கு…” என்றவாறே அந்த நாளை நினைவு கூர்ந்தான்.

 

அன்று அவளின் உடல் நிலை முடியாமல் இருக்கும் போது தன் தோளில் சாய்த்தவாறு உணவை ஊட்டி விட, வேலை விஷயத்தில் தான் அவனை நம்பாததை கூறியவள் தொடர்ந்து,

 

“எழில்! எனக்கு ரொம்ப பயமா இருக்கு…” 

“நான் தான் கூட இருக்கேன்ல அப்புறம் எதுக்கு பயம்?” என்றவனைப் பார்த்து,

 

“இப்ப இருக்கீங்க… ஆனால் இத்தனை நாள் என்கூட இல்லையே… இப்பவும் கவி கூட தானே இருக்கீங்க? என் வாழ்க்கை முழுக்க இப்படியே தனியா போயிடுமோன்னு பயமா இருக்கு…”

 

“எத்தனை நாள் நைட் தூக்கம் வரமா பயந்து எழுந்து உட்கார்ந்திருக்கேன் தெரியுமா? நானே தான் தனியா இருக்கேன்… நானா தேடிக்கிட்டது தான்… ஆனா வயசு போக போக இந்த தனிமை என்னை ரொம்ப பயமுறுத்துது எழில்!”

 

“கல்யாணம் புருஷன் குடும்பம்னு முழுசா அதை பத்தி தெரியறதுக்கு முன்னாடி அந்த வயசுல எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க… ஆனா இன்னைக்கு மனசு அந்த வாழ்க்கையை உங்க கூட தேடுது… எனக்குன்னு உறவா நீங்க மட்டும் போதும்னு தோணுது…”

 

“நானும் மத்தவங்க மாதிரி சராசரியா குடும்பம் குழந்தைங்கன்னு வாழணும்னு ஆசையா இருக்கு… அது நீங்க மாறன் மாமா பையன்ற காரணமா இல்ல அவரைப் போலவே நீங்களும் என்னை பார்த்துப்பீங்க விட்டுட மாட்டிங்கன்ற காரணமா இல்ல எனக்கு உங்களை பிடிச்சு இருக்கான்னு எனக்கு தெரியல…”

 

“ஆனா நான் ஏற்கனவே விவாகரத்து வாங்கினவ அதுமட்டுமில்லாம இரண்டு பேருக்கும் நடுவுல கட்டாயத்துல பண்ணி வைச்ச இந்த கல்யாணத்துல இப்ப என்னோட சுயநலத்தால என்னோட ஆசைக்கு உங்க வாழ்க்கையை கெடுக்கறனோன்னு தோணுது…” 

 

“எங்க எனக்கே தெரியாம உங்களை பார்க்கும் போது என்னோட ஆசையை காட்டிடுவானோன்னு எனக்குள்ள எப்பவும் ஒரு பதட்டம்… மாறன் மாமா கட்டாயத்தால நான் சரின்னு சொல்லி இருந்தாலும் மனசோரம் நிம்மதியா சந்தோஷமா நினைச்சது உண்மை…”

 

“வேலை விஷயத்துல உங்க மேல நான் முழு நம்பிக்கை வைக்கல ஆனா வாழ்க்கை விஷயத்துல நான் ஏன் உங்களை இந்த அளவுக்கு நம்பறேன்னு தெரியல…”

 

“சில சமயம் நான் ரொம்ப தப்பா இருக்கனோ… என்னோட இந்த எண்ணங்கள் தப்பா இருக்கோன்னு தோணுது… மனசோரம் இருக்க ஆசை ஒரு பக்கம் உங்க வாழ்க்கை வீணாகுதேன்னு கவலை ஒரு பக்கம் என்னோட இந்த தனிமை ஒரு பக்கம்னு எனக்குள்ளே இத்தனை போராட்டம்…”

 

“ஆனா ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது… கண்டிப்பா என்னோட இந்த போராட்டத்தை உங்களால மட்டும் தான் தீர்க்க முடியும்னு உறுதியா தெரியுது… ப்ளீஸ் எழில்! என்னோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுங்களேன்…” என்றவளின் இத்தனை வார்த்தைகளும் அவனை திகைக்க வைக்க அவளின் இந்த கெஞ்சலில் மொத்தமாக நொறுங்கி போனவனின் நெஞ்சில் இன்றும் அதே வலி… 

 

அன்று அவள் சொன்ன வார்த்தைகளின் கணம் மாறாமல் சொல்லியவன் அவளைப் பார்க்க, வெறுமையாக இருந்த அவள் முகத்திலிருந்து அவனால் ஒன்றும் கண்டறிய முடியவில்லை…

 

தன் ஆழ்மனதின் எண்ணங்களை சுயநினைவில்லாமல் உடலின் பலவீனத்தால் மொத்தமாக கொட்டியிருக்கிறோம் என்று அவளுக்கு இப்போது தெள்ளத் தெளிவாக புரிந்தது. ஆனால் தான் அந்த அளவிற்கு ஏங்கி போயிருக்கோமா என்று தன்னை தானே கேட்டவளுக்கு தன்னிரக்கம் நெஞ்சை அடைத்தது…

 

“குழல்! நான்….” என்று அவன் பேச்சை ஆரம்பிக்கும் போதே இடைவெட்டியவள்,

 

“நாம கிளம்பலாம்…” என்றவாறே அவன் பதிலுக்கு காத்திராமல் வேகமாக வெளியேறினாள்.

அவனும் அவள் பின்னே விரைந்து அங்கிருந்த ஜீப்பின் மூலம் இருவரும் ஹோட்டலை அடைய எல்லோரும் அவர்களுக்காக இரவு உணவிற்கு காத்திருந்தார்கள்.

 

உடனே தன் முகத்தை இயல்பாக்கியவள் எல்லோருடனும் பொருந்தி போனாள். இதை கண்ட அமுதனுக்கு ஆச்சர்யமாகியது எப்படி இடத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றது போல் தன்னை இப்படி மாற்றி கொள்கிறாள் என்று…

 

பேச்சும் சிரிப்புமாக அனைவரும் சாப்பிட்டு விட்டு சற்று நேரம் வெளிய அமர்ந்து பேசி கொண்டிருக்க, கவி மட்டும் தோழி வந்ததிலிருந்தே அவள் முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான்… இயல்பு போல அவள் காட்டிக் கொண்டாலும் அவளிடம் என்னவோ குறைவது போல அவனுக்கு தோன்றியது…

 

அமுதனை தனியே அழைத்து கொண்டு போய் விசாரித்தும் விட்டான்… என்னவோ இருவருக்குள்ளும் நடந்ததை அவனிடம் சொல்ல முடியாமல் ஐஸ்கிரீம் வாங்கி தரலைன்னு கோபமா இருக்கா என்று சொல்லி சமாளித்தான்.

 

எல்லோரும் உறங்க அவர்கள் அறைக்கு செல்ல ஆரம்பிக்க கவியும் சரசும் வேறு அறைக்கு செல்வதை கவனித்ததும் தான் நேற்று அவன் சொன்னது ஞாபகம் வர இருவருமே வேகமாக ஒரே நேரத்தில் கவியை அழைத்திருந்தனர்.

 

“கவி ! கவி !” என்ற அவர்களின் சத்தத்தில் எல்லோருமே திரும்பி பார்த்தனர்.

 

“என்ன காரு?” என்று கேட்டபடியே அவர்கள் அருகே வந்தான்.

 

“நேற்று மாதிரி நானும் சரசும் ஒரே ரூமில் படுத்துக்கிறோம்…” என்ற குழலியை பார்த்து முறைத்தவன்,

 

“நேற்று எல்லாரும் இருந்த டையர்ட்ல எதுவும் கவனிக்கல… இப்ப நீங்க இரண்டு பேரும் தனித்தனியா தங்கி யாருக்கு என்ன ப்ரூவ் பண்ண ட்ரை பண்றீங்க? நான் சொன்னது சொன்னது தான்… போய் ரெஸ்ட் எடுங்க…” என்று காட்டமாக சொன்னவன் அவர்களின் பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டான்.  

 

இதுவரை அலுவகம் வீடு என்று ஒன்றாக இருந்திருக்கிறார்கள் ஆனால் ஒரே அறையில் இதுவரை தங்கியது இல்லை… நேற்று கவி கூறும் போதே இருவரும் மறுத்திருக்க இன்று இருந்த மனநிலையில் அதை மறந்தும் இருக்க இப்போது எப்படி ஒரே அறையில் என்ற தயக்கம் இருவருக்கும் அதிகமாக இருந்தது…

 

இன்று எதுவும் பேசி இருக்கவில்லை என்றால் கூட இந்த அளவிற்கு தயக்கம் இருந்திருக்காது… ஒருவர் மற்றவரை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அறைக்குள் சென்றனர்… 

 

உள்ளே சென்ற குழலி அங்கிருந்த பால்கனிக்கு செல்ல அவள் வருவதற்குள் அமுதன் தன் உடையை மாற்றிக் கொண்டு அவளுக்காக காத்திருக்க அவளோ வெகுநேரமாகியும் அங்கிருந்து அசையவே இல்லை…

 

“குழல்! பனி ரொம்ப அதிகமா இருக்கு… மழையும் வேற தூறுது… உள்ளே வா…” என்றவனுக்கு எந்த பதிலும் அளிக்காமல் உள்ளே சென்று மாற்றுடையை கையில் எடுக்க இப்போது அமுதன் பால்கனிக்கு சென்றான்.

 

அவள் உடை மாற்றி விட்டு வந்து அழைப்பாள் என்று வெகு நேரம் காத்திருந்தவன் அவளிடம் இருந்து எந்த அழைப்பும் வராததால் உள்ளே எட்டி பார்க்க அவளோ கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தாள்.

 

அவளின் விழி அசைவும் புருவ சுளிப்புமே சொல்லியது அவள் இன்னும் உறங்கவில்லை என்று… எதுவாக இருந்தாலும் இன்றே பேசி முடித்து விடலாம் என்று அவள் எதிரே வந்து அவளை அழைக்க அவளிடம் இருந்து பதில் இல்லை.

 

“நீ தூங்கலைன்னு தெரியும் குழல்! எதுக்கு உன்னை இவ்வளவு கஷ்டப்படுத்திக்கற? எழுந்திரு… நம்ம பேசலாம்…” என்றவனுக்கு அப்போதும் பதிலளிக்காமல் விழி திறந்து பார்த்து விட்டு மறுபடியும் கண்ணை மூடி கொண்டவள்,

 

“ப்ளீஸ் குழல்!” என்று அவன் கேட்டதும் வேகமாக எழுந்து,

 

“உரிமையான உறவோட ஒவ்வொரு அக்கறைக்கும் பாசத்துக்கும் நான் ஏங்கின நாட்கள் உண்டு… அந்த உரிமைக்கு நீங்க என்கிட்ட கெஞ்ச கூடாதுன்னு தான் என்கிட்ட ப்ளீஸ் சொல்லாதீங்கன்னு சொன்னேன்…”

 

“ஆனா இப்ப நான் உங்களோட ப்ளீசை கேட்கற நிலையில இல்லை… சோ ப்ளீஸ்…” என்றதோடு அவன் பதிலுக்கு காத்திராமல் படுத்து கொண்டாள்.   

 

அவளின் வார்த்தைகள் ஒரு பக்கம் மகிழ்வாகவும் இன்னொரு பக்கம் கஷ்டமாகவும் இருக்க எதுவும் சொல்லாமல் அவளை பார்த்தவாறே அங்கிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து கொண்டான்.

 

அந்த அறையில் பெரிய கட்டில் மட்டுமே இருக்க, கொட்டும் பனியில் கீழே படுப்பதென்பது எல்லாம் சாத்தியமில்லை… உறங்காமல் அந்த சோபாவில் அவன் அமருவதை உணர்ந்து அவனை கட்டிலில் படுக்க சொல்ல அவள் ஒரு மனம் விழைந்தாலும் இன்னொரு மனமோ ஏற்கனவே பேசி வைத்தது போதும் என்று நினைக்க அப்படியே விட்டு விட்டாள்…

 

ஒருவரை பற்றி ஒருவர் நினைத்தபடியே உறங்கி போக நடு இரவில் திடீரென கேட்ட அவள் அலறலில் விழித்தான்… 

 

உறக்கத்தில் இருந்து அலறி அடித்தபடி எழுந்திருந்தவளின் முகம் அந்த பனி பிரதேசத்திலும் வியர்த்து இருந்தது…

 

“குழல்! என்னாச்சு? ஒண்ணுமில்லை… ஒண்ணுமில்லை…” என்றபடி அவள் அருகே அமர்ந்து அவள் கையை தட்டி கொடுக்க, அவளோ இன்னும் பிரம்மையில் இருக்க,

 

“குழல்! இங்க பாரு! ஒண்ணுமில்லை…” என்று அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து அவளை சிறிது தெளிய வைத்தான்.    

அப்போதும் அவள் முகம் தெளிவில்லாமல் இருக்க அவளருகே இன்னும் நெருங்கி அமர்ந்து தன் தோளில் சாய்த்து கொண்டு ஆதரவாக தட்ட, சிறிது நேரத்தில் மொத்தமாக தெளிந்தவள் தன் நிலை உணர்ந்து அவனிடம் இருந்து விலகினாள்.

 

“என்னாச்சு? எதையும் யோசிக்காம தூங்கு… நான் இங்க பக்கத்துல தான் இருக்கேன்…” என்றவனை பார்த்து,

 

“எத்தனையோ நாள் நைட் இது மாதிரி பயந்து எழுந்துருக்கேன்… அப்ப நீங்க இல்லையே… இப்ப நானா சொன்ன அப்புறம் எதுக்கு உங்க அக்கறை… எனக்கு ஒன்னும் வேணாம் போங்க…” என்று கத்தியவாறு அவனை தள்ளினாள்.

 

அவள் வார்த்தையில் அதிர்ந்து, “நேத்து தான் சொன்னேன் எதிலிருந்தும் விலகி போகாத… முக்கியமா என்னை விலக்காதான்னு… இதுவரைக்கும் எப்படியோ இனிமேல் நான் இருக்கேன்.. எப்பவும் நான் கூட இருப்பேன்… இனி அடிக்கடி அதை சொல்லிட்டு இருக்க மாட்டேன்… அதனால இதை அழுத்தமா மனசுல பதியவை…” என்றவனின் அழுத்தம் வார்த்தையில் மட்டுமல்லாது அவன் பிடியிலும் இருந்தது.

 

அவன் வார்த்தையில் மொத்தமாக விழுந்தாலும் அப்போதும் அதை ஒதுக்கி எழ முயல,

 

“ஷ்! குழல் ! என்ன பண்ற? நான் பேசலாம்னு அப்பவே கூப்பிட்டேன் நீ வரல… இப்ப எதுவும் பேசவும் வேணாம்… எதுவானாலும் காலையில் பேசிக்கலாம்… இப்ப அமைதியா தூங்கு…” என்றவன் அவளை தன் தோளில் இருந்து மாற்றி தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

        

அவன் கரம் தந்த கதகதப்போ அல்ல அவன் வார்த்தை தந்த பாதுகாப்போ அல்ல இது எல்லாவற்றையும் விட அவள் இத்தனை நாள் ஏங்கிய அந்த உரிமை செயலோ எதுவோ ஒன்று அவளை அமைதியாக்க, அப்படியே உறங்கி போனவள் மறுநாள் அவனை அதிர்ச்சியில் உறைய வைத்திருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!