Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir 11.1

சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி.  இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

 

பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்ததால் கவனமாக படித்துக்கொண்டிருந்தாள் வெண்மதி. பெரியம்மாவுக்கு தெரியாமல் இரவு முழுவதும் படித்தாள். பகலில் தூங்கினாள். மதியம் பெரியம்மா தூங்கும் நேரத்தில் தாயிடம் சொல்லிவிட்டு கவிதாவின் வீட்டுக்கு சென்று படித்தாள். கவிதாவுக்கும் வெண்மதியின் நிலை புரிந்ததால் அவளுக்கு ஏற்ற மாதிரி அவளும் மற்ற தொந்தரவுகள் இல்லாமல் பார்த்துக் கொண்டாள். இப்படி இருவரும் படித்தனர். இந்த சூழ்நிலையில் செல்வா  அக்காவின் திருமண நாள் வந்தது. வெண்மதி ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருந்த நாள் அது. விஜய் உடன் சிறிது நேரம் செலவிடலாம் என்று நெடு நாட்களாகவே காத்துக் கொண்டிருந்தாள். கவிதாவுக்கு அந்த திருமணத்திற்கு செல்வதில் சிறிதுகூட விருப்பம் இல்லை. அதற்கு காரணம் விஜய் தான். இப்பொழுதுதான் வெண்மதி படிப்பில் கவனம் செலுத்தி படித்துக் கொண்டிருக்கிறாள்.  இந்த நேரத்தில் அவள் விஜய்யை பார்த்தால் மனதை திரும்பவும் அலைபாய விடுவாளோ என்று தன் தோழியின் மீது அவள் வைத்திருந்த அக்கறை தான் அதற்கு காரணம். அதை வெண்மதி இடம் வெளிப்படையாக கூறவும் முடியவில்லை. அப்படி கூறினாலும் அதை அவள் நம்பப் போவது கிடையாது.



Advertisement

 

விஜய் மீது அவளுக்கு நம்பிக்கை எப்பொழுதுமே கிடையாது.  இப்பொழுது அவளுடைய மாமா   பெண்ணின் தோழி பிரியாவுக்கும் விஜய்க்கும்  கல்யாணம் பேசப் போகிறார்கள் என்று கேள்விப்பட்ட பிறகு விஜய் மீது இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் அடியோடு  மறைந்தது. எனவே விஜய் மீது வெண்மதி வைத்திருக்கும் காதலால் அவளுடைய படிப்பு   பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்தாள்.

 

Advertisement

“கவி  நாளைக்கு செல்வா அக்காவின் கல்யாணம். நாம போயிட்டு வரலாம்.” என்று ஆரம்பித்தாள்.

Advertisement

“நாம கண்டிப்பா போகணுமா? நமக்கு படிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு. இந்த நேரத்தில் பங்க்ஷன் அது இதுன்னு   சுத்த வேண்டுமா? கல்யாணம் முடியட்டும். எக்ஸாம் முடிச்சிட்டு போய் பார்க்கலாம்.என்ன சொல்ற மதி?”

“இல்லை கவி. நாம கண்டிப்பா கல்யாணத்துக்கு போகணும். செல்வா நம்ம ரெண்டு பேருக்கும் தனித்தனியா பத்திரிக்கை வச்சிருக்கான். நம்மளை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பான்.” எதிர்பார்த்துக் கொண்டிருப்பது அவன் மட்டும் அல்ல விஜய்யும் தான். விஜய்யை ஏமாற்ற வெண்மதிக்கு விருப்பமில்லை. ஆனால் அதனை காரணமாக கவியிடம் சொல்ல முடியாது. அதனால் இப்படி மாற்றி கூறினாள். சொல்லாமலே   இவள் யாருக்காக அங்கே செல்கிறாள் என்பது

கவிதாவுக்கு நன்றாக தெரியும். கவிதாவுக்கு விஜய்யை பார்க்கவே பிடிக்கவில்லை. அவளுக்கு அந்த கல்யாணத்திற்கு செல்வதற்கு ஒரு துளிகூட விருப்பம் இல்லை.  எனினும் இவளை தனியாக  அனுப்ப விருப்பம் இல்லாமல் சரி நாம போயிட்டு அரைமணி நேரம் இருந்துட்டு உடனே வந்துடலாம் மதி. ஓகே  என்றால் சொல்லு நானும் வருகிறேன். இல்லைனா நீ மட்டும் போயிட்டு வா. என்னால இந்த ஃபங்ஷனுக்காக ரொம்ப நேரம் வேஸ்ட் பண்ண முடியாது.”

Advertisement

” ஓகே கவி.  நீ சொன்ன மாதிரி நாம சீக்கிரமா போயிட்டு வந்துடலாம்.” என்று கவி கூறியதற்கு ஒத்துக்கொண்டு இருவரும் கிளம்பி  கல்யாணத்திற்கு சென்றனர்.

 

விஜய்க்கு பிடித்த சிகப்பு நிற பட்டு புடவை ஒன்றை கட்டிக்கொண்டு தன்னிடமிருந்த வெள்ளி  நகைகளை அணிந்துகொண்டு கவிதாவுடன் சென்றாள் வெண்மதி. திருமண மண்டபத்தின் வாசலில் ஆட்டோவில் வந்து இரண்டு பேரும் இறங்கினர். மண்டபத்தின் உள்ளே செல்வா யாரிடமோ பேசிக்கொண்டிருப்பது இருவருக்கும் தெரிந்தது. அவன் இவர்களை பார்த்தது போல் தான் இருந்தது. ஆனால் அவன் இவர்களிடம் வராமல் அங்கிருந்து சென்று விட்டான்.

“மதி செல்வா நம்மளை பார்த்தும் பார்க்காமல் எங்கேயோ போய்க்கிட்டு இருக்கான். கவனிச்சியா?”

“இல்லை கவி. அவன் நம்மளை பார்த்திருக்க மாட்டான். அதனாலதான் போயிருப்பான். இல்லைன்னா வந்து நம்ம கிட்ட பேசி இருப்பான் என்று அவனுக்கு பரிந்து பேசினாலும் வெண்மதிக்கு ஏதோ உறுத்தியது.

“சரி எது எப்படியோ நாம இங்கே அரை மணி நேரம்தான் இருக்கப்போகிறோம். அதை நீ நல்லா ஞாபகத்துல வச்சிக்கோ.” என்று கவி திரும்பவும் அவளுக்கு ஞாபகப்படுத்தி விட்டு உள்ளே  நுழைந்தாள். அது ஒரு பெரிய அழகான திருமண மண்டபம். மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேடையில் மாப்பிள்ளை உட்கார்ந்துகொண்டு புரோகிதர் கூறும் மந்திரங்களில் திருப்பி கூறிக்கொண்டிருந்தார். “பெண்ணை கூட்டிட்டு வாங்க” என்று புரோகிதர் கூற செல்வாவின் அக்கா அங்கு வந்தார். பிறகு மீண்டும் புரோகிதர் மந்திரம் கூற ஆரம்பித்தார். மேடையில் செல்வா நின்றிருந்தான். மேடையிலிருந்து   கீழே பார்த்து பேசிக்கொண்டிருந்தான். ஆனால் இவர்கள் பக்கம் அவன் திரும்பவில்லை. சிறிது நேரம் அவன் பார்க்கிறானா என்று பார்த்துக்கொண்டிருந்த வெண்மதி அவன்  வேறு திசை திரும்பவும் அவள் கண்கள் விஜயை தேடியது. மண்டபத்தின் உள் நுழைந்து 10 நிமிடங்கள் ஆகியிருக்கும். ஆனால் இன்னும் விஜய் அவள் கண்ணில் படவில்லை. இன்னும் இருபது நிமிடங்களில் அவள் இங்கிருந்து கிளம்ப வேண்டும். அவனை தேட வேண்டியதுதான் என்று முடிவெடுத்து அவள் அங்கிருந்து  எழுந்தாள். இவளையே கவனித்துக்கொண்டிருந்த கவிதா “எங்க போற மதி?” என்று கேட்டாள்.

“ரெஸ்ட் ரூம் போயிட்டு  வந்துடறேன். நீ இங்கேயே இரு.” என்று கூறிவிட்டு எழுந்து விஜய்யை மண்டபம் முழுவதும் தேடினாள். அவன், அவள் கண்களில் படவே இல்லை. சரி வெளியில் சென்று பார்ப்போம் என்று மண்டபத்தின் வாசலுக்கு சென்றாள்.

 

அங்கு “வெண்மதி நீ இங்க என்ன பண்ற?” என்ற குரல் கேட்டு திரும்பினாள். அங்கு சந்துரு நின்று கொண்டிருந்தான். சந்துருவை பார்த்த வெண்மதி  ஆச்சரியப்பட்டாள்.

“நான் இங்கே ஒரு கல்யாணத்துக்கு வந்து இருக்கேன். நீ இங்கே என்ன பண்ற?”

“நான் என்னோட பாட்டி வீட்டுக்கு வந்து இருக்கேன். எங்க வீட்ல இருந்தா பிரண்ட்ஸ் கூட சேர்ந்து ஊரை சுத்திட்டு படிக்காம விட்டுடுவேன்னு அப்பா என்னை இங்கே அனுப்பி விட்டார். ஸ்டடி ஹாலிடேஸ் ஃபுல்லா நான் இங்கே தான் இருக்கிறேன். இன்னும் ஒரு நாள் இங்கே இருப்பேன். அப்புறம் ஊருக்கு கிளம்பி வந்துடுவேன். இன்னும் ரெண்டு நாள்ல நமக்கு எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது இல்ல.?”

 

சந்துரு பேசிக்கொண்டிருக்கும் பொழுதே  வெண்மதியின்  கண்கள் விஜய்யை தேடின. மாடிப்படி அருகில் விஜய் நின்று கொண்டிருப்பது போல தோன்றியது. அவள் அவசரமாக திரும்பவும் அங்கு மழையினால் தேங்கியிருந்த தண்ணீரில் கால் வழுக்கி கீழே விழப்போனாள். அவளை தாங்கிப் பிடித்தான் சந்துரு. அவள் சமாளித்துக்கொண்டு  “தேங்க்ஸ். சரி சந்துரு. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அப்புறம் காலேஜில் பார்க்கலாம்.” என்று கூறியவள் அந்த இடத்திற்கு சென்றாள். ஆனால் அது விஜய் இல்லை. அவசர அவசரமாக திருமண மண்டபம் முழுவதும் விஜய்யை தேடினாள். ஒருவழியாக அவனை கண்டு கொண்டாள். அவனை பார்த்த சந்தோஷத்தில் அவனிடம்  ஓட்டமும் நடையுமாக  சென்றாள். அருகில் சென்ற பிறகுதான் அவன் ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பது அவளுக்கு தெரிந்தது. இவளைப்  பார்த்ததும் அந்தப் பெண்ணிடம் ஏதோ கூறிவிட்டு இவளை நோக்கி வந்தான் விஜய்.

“எப்படி இருக்கீங்க?  படிச்சிட்டு இருக்கீங்களா?”

“உனக்கு எப்ப பாத்தாலும் படிப்பு படிப்பு தானா? நான்  நல்லா படிச்சு வேலைக்கு போயி உனக்கு சம்பாதிச்சு  கொடுக்கணும். அதுக்கு தானே கேக்குற?” என்று அவள்  சாதாரணமாக கேட்ட ஒரு கேள்விக்கு கோபமாக பதிலளித்தான்.

“என்ன விஜய்? இப்படி கேக்குறீங்க?  இப்ப எல்லாம் நாம ரெண்டு பேரும் பேசிக் கொள்வது கூட கிடையாது. இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு. அதுக்கு அப்புறம் நாம ஃப்ரீயா பேசலாம்.”

“ம்ம்ம் அப்புறம் என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லு. நான் போகணும். எனக்கு இங்கு நிறைய வேலை இருக்கு.”

“நான் கூட சீக்கிரம் போகணும்.”

“இப்பதான் வந்த போல இருக்கு. அதுக்குள்ள  கிளம்ப வேண்டுமா?”

“அப்போ நீங்க நான் வந்ததை பார்த்தீங்களா?”

“ஆமாம் பார்த்தேன்.” என்றான் அலட்சியமாக.

“அப்புறம் ஏன் நீங்க என்கிட்ட வந்து பேசல?”

“அதான் சொன்னேன் இல்ல. வேலை இருந்துச்சு. நீ என்னை தேடி வருவேன்னு எனக்கு நல்லா தெரியும். வந்து பதினைந்து நிமிஷம் இருக்கும் இல்ல?”

“இருக்கும். வந்ததிலிருந்து உங்கள தான் தேடிக்கிட்டு இருக்கேன்.” “அப்படியா? வேற யார்கிட்டயும் நீ பேசவே இல்லையா?” என்று அவளை கூர்ந்து பார்த்து கேட்டான்.

“எனக்கு இங்க வேறு யாரை தெரியும்?” என்று நினைக்கும் பொழுதே வாசலில் சந்துருவுடன் பேசிக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.  சந்துருவுடன் பேசிக்கொண்டிருந்ததை விஜய்யிடம்  சொன்னால் கோபப்படுவான் என்று அதனை மறைத்தாள்.  கிடைத்திருக்கும் இந்த சிறிது  நேரத்தினையும் அவனுக்கு கோபம் வரும்  விஷயங்களை கூறி  அவனை கோபப்படுத்த விருப்பமில்லாமல் அப்படி கூறினாள். “ஆமாம். உனக்கு இங்கு வேறு யாரையும் தெரியாது. நீ சொல்றது கரெக்டு தான். சரி வா போகலாம்.” என்று கூட்டி கொண்டு கவிதாவிடம் சென்றான்.

 

இருவரையும் ஒன்றாக பார்த்த கவிதா, விஜய்யை முறைத்தாள். அவனிடம் நேரடியாக அவளுடைய மாமா பெண் சொன்ன விஷயத்தை கேட்க வேண்டும் என்று  துடித்தாள். ஆனால் இன்னொரு மனம் எக்ஸாம் முடியட்டும் பார்த்துக்கலாம். என்று  கூறவும் அமைதியானாள். சம்பிரதாயமாக இருவரும்  பேசிக்கொண்டனர்.

“சரி சாப்பிடலாம் வா.” என்று விஜய்  இருவரையும் அழைத்தான். மூவரும் சென்று சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்தவுடன்

கவிதா “மதி டைம் ஆயிடுச்சு. போகலாம் வா.”

“கவி இன்னும் கொஞ்சம் நேரம்…” என்று இழுத்து அவளிடம்

“சரி நீ பொறுமையா வா. நான் கிளம்பறேன்.” என்று எழுந்துவிட்டாள் கவிதா.

வேறுவழியின்றி விஜய் பக்கம் திரும்பி கை காட்டிவிட்டு அவள் பின் சென்றாள் வெண்மதி.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!