Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennadi Maayaavi Nee

Ennadi Maayaavi Nee 28

மாயாவி 28:::

 

முதல் பார்வையில்

எல்லாம் உன்மேல்



Advertisement

எனக்கு காதல் இல்லை…

ஆனால் இன்று உன்னை பார்க்கும்

ஒரு ஒரு நொடிக்கும் உன்மேல்

Advertisement

காதல் கொள்ள வைக்கிறாயே!

Advertisement

என்னடி மாயாவி நீ !

 

சூழ்நிலையின் காரணமாக நடந்த திருமணத்தில் இருவரின் மனமும் வெவ்வேறு மனநிலையில் இருக்க அப்போது அந்த தருணத்தை அனுபவிக்க முடியாமல் இருந்தனர். 

Advertisement

 

ஆனால் நாளை நடக்கும் தாலி கோர்க்கும் சடங்கிலாவது ஒருவரை ஒருவர் உணர்ந்து அதை ஏற்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இருவரிடையே இருந்தாலும் எப்படி அதை நடத்த வேண்டும் என்று இருவருமே தடுமாறினர்.

 

அவன் அன்று பேச வந்ததை கேட்கலாம் என்று அவள் அவனைத் தேட, அவள் தன்னை விட்டு வந்ததன் காரணத்தையும் அதை எப்படி எதிர்கொள்வது என்ற யோசனையில் அவனும் ஆளுக்கு ஒரு மூலையில் இருந்தனர்.

 

இரவு எட்டு மணி போல அவன் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள் குழலி… தூரத்திலேயே அவளின் வருகையை கண்டு வேகமாக அவளருகில் வந்த அமுதன்,

 

“குழல்! நீ எதுக்கு இங்க வந்த? அதுவும் இந்த நேரத்துல? வா வீட்டுக்கு போகலாம்…” என்றவனை முறைத்தாள்.

 

“யோவ்! உன்னை எங்க எல்லாம் தேடறது… நான் உன்னை என்ன பண்ணிடுவேன்னு காலைல இருந்து கண்ணுல சிக்காம சுத்திட்டு இருக்க…” 

 

“எல்லாத்தையும் சரி பண்றேன்னு பேச்சு தான் ஆனா செயல்ல ஒன்னும் காணோம்… ஒருத்தி சொல்லாம கொள்ளாம காணாம போனாளே, ஏன் எதுக்குன்னு கேட்டு அதை சரி பண்ணாம இங்க வந்து உட்கார்ந்துட்டு இருக்கே…” என்று காரமாக அவனை வறுத்தெடுத்தவள் அப்போதே அந்த இடத்தை கவனித்தாள்.

 

இத்தனை நேரம் அவளின் மரியாதை இல்லாத பேச்சிலும் அவளின் யோவ் என்ற அழைப்பிலும் அதிர்ந்தவன், அவனைத் தாண்டி சென்று அவன் அமர்ந்திருந்த இடத்தில் அவள் அமருவதைக் கண்டு வேகமாக அவள் அருகே சென்றான்.

 

“ஹே! குழல்! எதுக்கு இங்க உட்கார்ற… பூச்சி எதுவும் இருக்கும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் வா…” என்றவனின் வார்த்தையை சட்டை செய்யாமல்,

 

“இந்த இடம் ரொம்ப அழகா மனசுக்கு அமைதியா இருக்கு எழில்…” என்றவளின் முகம் அதற்கான ரசனையை பிரதிபலிக்க அவனும் அவளருகே அமர்ந்து விட்டான்.

 

ஒரு பக்கம் ஏரி இன்னொரு பக்கம் வயற்காடு என்று இந்த இரண்டையும் இணைக்கும் பாதையில், வயல் இருக்கும் பக்கம் வரிசையாக தென்னை மரம் இருக்க இவர்கள் ஏரியை பார்த்தது போல அமர்ந்திருந்தனர்.

 

அன்று நிலவு முழுமையாக இருக்க ஏரியில் அதன் முழு பிம்பம். கூடவே காற்றில் அசையும் தென்னங்கீற்றின் சத்தமும் ஏரி நீரின் சலசலப்பும் என்று அந்த இடமே அத்தனை ரம்மியமாக இருந்தது.

 

“நான் இதுக்கு முன்னாடி இந்த இடத்துக்கு வந்தது இல்லையே…” என்று அவள் யோசனையாக கேட்க,

 

“நீ முதல்ல இங்க எவ்வளவு முறை வந்து இருக்க ? நீ வர்றது கிருஷ்ணகிரியில இருந்து அதனால வேற பக்கம் வந்து போவ… இது இந்த பக்கம் இருக்க ஊருக்குலாம் போற வழி… அதனால உனக்கு தெரியாது…” என்றான்.

 

“ஓஓ!”  என்றவள் அதோடு அந்த இடத்தின் அமைதியில் மூழ்க ஆரம்பித்தாள்.

 

இருவரிடையேயும் மௌனம் மட்டுமே குடியிருக்க அங்கிருந்த இயற்கையின் சலசலலப்பை தவிர வேறு பேச்சு இல்லாமல் போக குழலி தான் அந்த அமைதியை கலைத்தாள்.

“நாளைக்கு தாலி பிரிச்சு கோர்க்க போறாங்கன்னு உங்களுக்கு தெரியும்ல… ” என்று அவனிடம் கேட்டாலும் பார்வை என்னவோ ஏரியில் தெரிந்த நிலவிடமே இருந்தது.

 

“ம்ம்ம்! தெரியும் ! அப்பா சொன்னாரு…” என்றவனின் பார்வையும் அந்த நிலவிடமே இருந்தது.

 

“என்ன முடிவு பண்ணி இருக்கீங்க? நாளைக்கு நடக்கற விஷேஷத்துல உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா இப்பவே எல்லார்கிட்டேயும் சொல்லி அதை நிறுத்தலாம்… ஏன்னா உங்களை இப்ப கட்டாயப்படுத்த யாரும் இல்லை எந்த சூழ்நிலையும் இல்லை…” என்றவளைப் பார்த்து,

 

“ஏன் உனக்கு அது தான் விருப்பமா?” என்று கோபமாக கேட்டான்.

 

“என்னோட விருப்பம் என்னன்னு ஏற்கனவே உங்ககிட்ட சொன்னதா எனக்கு ஞாபகம்… உங்களுக்கு இல்லையா?” என்று அவள் கேட்டதும் அவன் கோபம் அப்படியே இறங்கியது.

 

“பரவாயில்ல எழில்… எதுவானாலும் நேரிடையா பேசிடலாம்… நீங்க சொன்ன மாதிரி நமக்குள்ள இருக்கும் தயக்கம் இனியும் வேணாம்… நீங்க என்ன நினைக்கறீங்கன்னு மனசு விட்டு சொல்லுங்க…” என்றவளைப் பார்த்து பெருமூச்செடுத்தவன்,

 

“எதுக்கு என்னை விட்டுட்டு வந்த குழல்? அதுக்கான பதில்ல தான் நான் பேசறதுக்கான விஷயமும் இருக்கு…” என்றான்.

 

“அது… அது…” என்று இழுத்தவளைப் பார்த்து,

 

“என்னை சொல்லிட்டு இப்ப நீ தயங்கற… நமக்குள்ள இருக்க தயக்கம் நம்ம நிறைய பேசாததால தான்… ஆரம்பத்தில இருந்த மனநிலைக்கு அது எந்த அளவுக்கு சாத்தியம்னு தெரியல… ஆனால் அதே நிலையை தொடர விட்டது தப்பு… அதனால முதல்ல நம்ம பேசுவோம்…” என்றவனின் வார்த்தையை ஏற்றுக் கொண்டவள்,

 

“நான் அங்க வெளிநாட்டுல அவன் கிட்ட மாட்டிக்கிட்டு தப்பிக்க முடியாம சோர்ந்து போயிருந்தாலும் எப்படியாவது வீட்டுக்கு வந்துடுவான்னு ஒரு எண்ணம், வெறின்னு கூட சொல்லலாம்…” 

 

“எல்லாரையும் பொறுத்தவரை நான் பயந்து தற்கொலைக்கு முயற்சி பண்ணி தப்பிச்சதா நினைக்கறாங்க… ஆனால் அங்கிருந்து தப்பிக்க தான் துணிஞ்சு நான் அப்படி ஒரு காரியம் பண்ணேன்..”     

 

“ஏன் எப்படின்னு இப்ப வரைக்கும் தெரியாது ஆனால் இப்படி பண்ணா பயந்து அவன் கூட்டிட்டு போயிடுவான்னு ஒரு எண்ணம்… நான் நினைச்சது தான் நடந்தது…”

 

“என்னோட அந்த துணிச்சல் அன்னைக்கு ஆரம்பிச்சது… அதுக்கு அப்புறம் யார் என்னை என்ன பேசினாலும் அதை பத்தி கவலைப்படாம ஒரு திமிரோட தான் இருந்தேன்…”

“போக போக என்னோட தனிமையே பயம் கொடுக்க ஆரம்பிக்க உங்களை கல்யாணம் பண்ணதும் என்னோட பலம் எல்லாம் பலவீனமா மாறிடுச்சு… அதை உங்களை தவிர மத்தவங்க கிட்ட காட்ட பிடிக்கல…”

“இந்த கல்யாணத்து மேல இருக்க விருப்பத்தையும் உங்க மேல இருக்க விருப்பத்தையும் வெளிய காட்ட முடியாம எனக்குள்ளே புதைச்சு புதைச்சு தான் உங்க கிட்ட கொட்டிட்டேன்…”

 

“கல்யாணம் ஆனதுல இருந்து எனக்காகன்னு உங்ககிட்ட இருந்து ஒரு அசைவும் இல்ல, அப்படி இருக்க நானா என்னோட விருப்பத்தை சொன்ன அப்புறம் நம்ம சேர்ந்தா அது நீங்க என்மேல இருக்க பரிதாபத்துல எனக்கு வாழ்க்கை கொடுக்கற போல தோணுச்சு…”

 

“என்னோட விருப்பத்தையும் ஏக்கத்தையும் உங்க வழியா கேட்கும் போது நான் ரொம்ப கீழிறங்கி போன மாதிரி தோணுச்சு… அதான் உங்களை விட்டு வந்தேன்…”  என்று நலிந்த குரலில் சொன்னவளைப் பார்த்து,

 

“நீ இந்த மாதிரி நினைக்க கூடாதுன்னு தான் என்னோட விருப்பத்தையும் உனக்கு காட்டிக்கல உன்கூட சேர்ந்தும் இருக்கல… ஆனால் நான் எதை நினைச்சு பயந்து இருந்தேனோ அதே நடந்து நீ என்னை நம்பாம விட்டுட்டும் வந்துட்ட…” என்றவனின் குரல் ஏகத்திற்கும் கலங்கி இருந்தது.   

 

“என்ன சொல்றீங்க?” என்றாள் அதிர்ச்சியாக…

 

“ஆமா குழல் ! உன்மேல என்னோட விருப்பம் கூட இங்க வேலைக்குன்னு வந்த பின்னாடி தான் ஆனா அதுக்கு முன்னாடி உன்னோட சுயமரியாதை தான் எனக்கு முக்கியமா தோணுச்சு…”

 

“ஒரு மாமன் மகளா உன்னை தெரியும்… அப்ப புரியாத வயசுல உங்க வீட்லயும் சரி உன்னையும் பார்க்கும் போது சரி எனக்கு எல்லாமே  திமிராத்தான் தெரிஞ்சுது…”

 

“ஏன்னா அன்னைக்கு என் தப்பை ஒத்துக்கற பக்குவம் எனக்கு இல்லை… வேலை தெரியும் ஆனா செஞ்சு பழக்கமும் இல்ல… ஏன் செய்யணும்னு ஒரு சோம்பேறி தனம்…”

 

“ஆனா அப்பாக்கு என்னை பத்தின கவலையை விட உன்னோட கவலை தான் அதிகம் போல… இத்தனை நாள்ல அது கூட நான்  தெரிஞ்சு வைச்சுக்கலை…”

 

“உனக்கு கல்யாணம் ஆகி விவாகரத்து ஆச்சுன்னு எனக்கு இதெல்லாம் ஒரு விவரமா தான் தெரியும்… என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணது இல்லை… எங்க வீட்ல என்ன நடக்குதுன்னே தெரிஞ்சு வைச்சுக்காத அப்ப இதை மட்டும் எப்படி தெரிஞ்சுப்பேன்…” 

 

“ஆனா குடும்பத்தைப் பத்தியும் உன்னைப் பத்தியும் நான் தெரிஞ்சுக்க பணயம் வைச்சது எங்க அப்பாவை… நான் எவ்வளவு மோசமா இருந்திருக்கேன்ல…” என்றவனை தடுத்து ஏதோ சொல்ல வந்தவளை மறுத்து,

 

“நான் இருக்க நிஜத்தை பேசறேன்… என்னை பேச விடு ப்ளீஸ்…” என்றான்.

 

“நானா கேட்காம சுலபமா கிடைச்ச வேலையை அப்ப அதோட மதிப்பு தெரியாம எப்படி விட்டுட்டு வந்தேனோ அதே மாதிரி உன்னோட மதிப்பும் தெரியாம தான் விட்டுட்டு வந்தேன்…”

 

“குடும்பம் பொறுப்பை அறிந்து நானா போய் வேலை தேடும் போது கிடைக்கல…  அதே மாதிரி நீயும் கிடைக்காம போயிடுவியோன்னு ஒரு பயம்…  அதனால தான் வேலைக்காகவும் உனக்காகவும் மறுபடியும் உன்கிட்டேயே வந்தேன்…”

 

“அப்பா உன்னைப் பத்தி சொல்ல சொல்ல ஏன்னு தெரியாம எனக்கு என்மேல ஒரு வெறுப்பு… அந்த நிலைமையில நீ எப்படி இருந்திருப்ப, அப்ப ஒரு சொந்தக்காரனா கூட உனக்கு பக்கபலமா நான் இல்லாம போயிட்டேன்னு எனக்கு என்மேல கோபம்…” என்றவனை இடையிட்ட குழலி, 

 

“ஆமா ! நியாயமான கோபம் தான்… ஆனா அந்த நேரத்துல எனக்கு யாரோட துணையும் தேவைப்படல… எல்லாரையும் விட்டு ஒதுங்கி இருக்க தான் தோணுச்சு… உங்களை எல்லாம் எனக்கு ஞாபகம் கூட இல்லைன்னு சொல்லலாம்…” என்றாள்.

 

“அது என்னவோ சரி தான் குழல்! ஞாபகம் வராத அளவுக்கு தான் நம்மோட சொந்தம் இருந்தது… ஆனா இப்ப தோணுது ஒருவேளை நம்ம அப்ப அப்ப வந்து போக இருந்திருந்தா…….” என்று இழுத்தவனின் குரலில் கேலி இருப்பதை உணர்ந்து கேள்வியாக அவனை நோக்கினாள்.

 

“அப்பவே நீ என் முறை பொண்ணுன்னு உன்னை கரெக்ட் பண்ணி இருப்பனோ என்னவோ?” என்று கண்ணடித்தவனைப் பார்த்து முறைத்தவள்,

 

“யாரு நீங்க ? கல்யாணம் பண்ணி பொண்டாட்டியா இவ்வளவு நாள் கூட  இருந்தே நீங்க என்னை கரெக்ட் பண்ணல… அப்ப எல்லாம் உங்களுக்கு என்னை கண்டாலே ஆகாது இதுல எங்க கரெக்ட் பண்றது…. உங்ககிட்ட எல்லாம் வெறும் பேச்சு தான்…” என்று கேலி செய்தவளைப் பார்த்து இப்போது முறைப்பது இவன் முறையாகிற்று…

 

“யாருக்கு கரெக்ட் பண்ண தெரியல… அப்பா சொல்லி உன்னைப் பத்தி எனக்கு தெரிஞ்சாலும் உன்மேல எனக்கு முதல்ல வந்தது பரிதாபம் தான்…”

 

“குடும்பத்தை பார்த்துகிறேனோ இல்லையோ உன்னை நல்லா பார்த்துக்கிட்டு அப்பாவோட அந்த நம்பிக்கையையாவது காப்பாத்தணும்னு தான் மறுபடியும் இங்க வந்தேன்…”

 

“உன்னை இனி தனியா விட கூடாது உன்னோட பாதுகாப்பு இனி நானா இருக்கணும்னு மட்டும் தான் இங்க வரும் போது தான் என்னோட எண்ணமா இருந்தது..”

 

“முதல்ல வேலை விஷயத்தை சரி பண்ணனும் அதே சமயத்துல உன்மேல இருக்க பரிதாபத்துல நம்ம வாழ்க்கையை ஆரம்பிச்சு உன்னை கீழிறக்க எனக்கு துளியும் விருப்பம் இல்ல… அதான் கவி கூட தங்கினேன்…”

 

“ஏன்னா நான் மாற்ற முயற்சி பண்ணது என்னை மட்டும் இல்லை… என்னோட சுயத்தை… முப்பது வருஷம் இருந்த எல்லா விஷயத்தையும் ஒரே நாள்ல மாற்ற இது என்ன மாயாஜாலமா… ஆனா எல்லாம் சீக்கிரம் மாறியது நீ செய்த மாயம் தான்…” என்றவனின் குரலில் இருந்த மென்மை அவளை என்னவோ செய்ய அவனை ஏறிட்டாள்.

 

“மாயாவி மாதிரி நீ எனக்கு ஏதோ மந்திரம் போட்டுட்ட அது தான் எல்லாம் சரியாகி நான் இந்த மாயாவிக்கு அடிமைசாசனம் எழுதி தர அளவுக்கு வந்து நிற்கிறேன்…”  என்றவனின் விரிந்த புன்னகையில் முதல் முறையாக தன்னை விரும்பியே தொலைத்தாள் இந்த எழிலமுதனின் கார்குழலி….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!