Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thedi Unnai Saranadainthaen

Thedi Unnai Saranadainthaen 30 2

அத்தியாயம் – 30(2)

 

கோவையில் இருந்த பாலனின் வீடு விருந்தினரால் நிரம்பியிருந்தது. அந்த வீட்டின் இளவரசி, செல்வச் சீமாட்டி மணிமொழி பூப்பெய்திருந்தாள். அந்த விழாவிற்குத் தான் ஊரிலிருந்து அனைவரும் வந்திருந்தனர்.

 



Advertisement

வெற்றிக்கு கல்லூரி விடுமுறை என்பதாலும், செல்லத் தங்கையின் மிரட்டலிலும் ஆச்சியோடு முன்னமே வந்திருந்தான்… பாலனின் சகோதரிகள் இருவரும் தலைக்கு நீர் ஊற்றித் தள்ளி வைப்பதற்கு வந்து விட்டு, விழாவிற்கு வருவதாக சென்று விட்டனர்… புகழும் விடுமுறை இல்லாததால் விழாவிற்கு கண்டிப்பாக வருவதாக சொல்லி இருந்தான்… வனிதாவிற்கு வீட்டில் வேலை சரியாக இருந்தது. அதிலும் தினமும் விருந்தினர் யாராவது வந்து கொண்டே இருந்தனர்.

 

மங்கை பள்ளி இறுதியாண்டில் இருக்க, அவளைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. வெற்றியும் சில நாள் தந்தையோடு கம்பெனிக்கு சென்று வந்தாலும், தங்கையோடு தான் அவனது பெரும்பாலான நேரங்கள் கழியும். மணிக்கு வெற்றி எப்போதும் வேண்டும். உறங்கும் நேரம் கூட அவளுக்கு அருகில் ஒரு மெத்தையைப் போட்டு படுத்துக் கொண்டிருந்தான். இதையெல்லாம் பார்த்த வனிதாவிற்கு எரிச்சல் தான். ஆனால் மாமியார் இருக்கையில் வாயைத் திறக்க முடியாது என்பதால் பல்லைக் கடித்து அமைதியாக இருந்தார்…

Advertisement

 

Advertisement

நாச்சியார் கூட மருமகளின் நடத்தையில் திருந்தி விட்டாளோ என்று. வெற்றி காலையில் எழுந்ததும் ராமசாமியோடும் பாலனோடும் வாக்கிங் போவான். அதிகம் பேச மாட்டான் இருவரிடமும், ஆனால் அவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனிப்பான். அவர்கள் திரும்பி வர, மங்கை ஏழு மணிக்கே பள்ளிக்குச் சென்றிருப்பாள். அவளைப் பற்றி யாரிடமும் அவன் விசாரித்ததில்லை. அவனே சில முறை பேசப் போக அவள் திரும்பியும் பார்க்காமல் கடந்து போயிருக்கிறாள். அது தன் தாய் சொல்லிக் கொடுத்தது என்று அவனுக்குப் புரிய அதிலிருந்து அவளிடம் ஒதுங்கியே இருப்பான்… இப்போதும் அப்படியே…

 

அன்று மாலை விழா என்பதால் அனைவரும் மண்டபத்தில் இருந்தனர். புகழ் அன்று காலையில் தான் வந்திருந்தான். வந்தவன் மணியிடம் சில நிமிடங்கள் இருந்தவன் தான். அதன் பிறகு அவளிடம் வரவில்லை. மங்கையோடு தான் இருந்தான். ஆனால் வெற்றி அவளை விட்டு அசையவில்லை. மணியும் அசைய விடவில்லை…

Advertisement

 

“இங்கேயே இருண்ணா இதெல்லாம் பார்த்தா எனக்கு பயமா இருக்கு..” என்றதும் பிறகு அவன் எதற்கும் அங்கிருந்து நகரவில்லை. அதோடு அங்கு அவனுக்கு அதிகம் யாரையும் தெரியவில்லை என்பதால் அப்படியே இருந்து கொண்டான்…

 

இவர்களின் பாசத்தைப் பார்த்து எல்லோருக்கும் வியப்பு தான். இருவரும் பக்கத்திலேயே இல்லை, எப்படி இவ்வளவு பாசம் உண்டானது என வியக்கவே செய்தனர். அதிலும் மணியின் செய்கையில் நாச்சியாரின் கண்கள் பணிக்கவே செய்தது. கடவுள் ஒரு கதவை மூடினால் மறு கதவைத் திறப்பான் என்பது எத்தனை உண்மை… தாய் பாசம் இல்லையென்றாலும், தங்கைப் பாசம் அவனை உயிர்பிக்க போதுமானதாக இருந்தது.

 

விழா முடிந்த அடுத்த நாள் அனைவரும் கிளம்ப, வெற்றியும் கிளம்பினான். மணியோ ஆச்சியிடம் சென்றவள், “இன்னும் ஒரு வாரம் தான ஆச்சி. எனக்கு லீவு விட்டுடுவாங்க, பிறகு என்னை யார் கூப்பிட்டு வருவா? வெற்றிண்ணாவை இருக்கச் சொல்லுங்க நானும் அண்ணாவும் வரோம்.” எனவும்ம், அவரும் பெரியதாக யோசிக்கவில்லை. மருமகளின் மீது நம்பிக்கை வந்திருந்தது. அதனால் பேரனை இருக்கச் சொன்னார்…

 

ஆனால் வெற்றி யோசித்தான். வனிதா ஒன்றும் பேசவில்லையே தவிர, அவனது இருப்பை விரும்பவும் இல்லையே… அதை அவனாள் உணர முடிந்தது. எப்படி சொல்வது என யோசிக்கும் போதே… “என்ன மணிக்குட்டி உங்க வெற்றிண்ணா ரொம்ப யோசிக்கிறார். உன் மேல பாசம் இருந்தா யோசிக்கவே மாட்டாங்க, இவர் யோசிக்கறதைப் பார்த்தா…”? என வெற்றியை சீண்டி விட, 

 

“நீ பேசாத உனக்கு ரொம்பத் தெரியுமா…? உனக்குத் தான் என் மேல பாசமே இல்ல. என் அண்ணன் இருப்பான், என்னண்ணா இருப்ப தானே…” என வெற்றிக்கு பதிலாக புகழோடு மல்லுக்கு நிற்க,

 

“இருந்தா சரிதான்.” என புகழும் கிண்டலடிக்க, “நான் இருக்கேன் மொழிமா, நீ போ போய் ஸ்கூல் கிளம்பு, நான் உன்னை ஸ்கூல்ல விட்டுட்டு வரேன்.” என தங்கையிடம் கூற, 

 

“ஹைய் சூப்பர்ண்ணா பைக்ல போகலாமா…? ப்ளீஸ்ண்ணா..” என தன் ஆசையை சொல்ல, ‘அதெல்லாம் வேண்டாம்’ என வனிதா சொல்வதற்குள், “நோ வே… கார் தான். பைக்னா நான் வர மாட்டேன். ஊருக்குப் போனதும் உன்னைப் பைக்ல கூட்டிட்டு சுத்துறேன். இங்க வேண்டாம் கிளம்பு ஓடு டைமாச்சு…” என முடித்து விட, 

 

“போண்ணா…” என சினுங்கிய படியே நகர, அவளைப் பார்த்து சிரித்தவன் ஆச்சியிடம் சென்று “ஆச்சிம்மா நீங்க இருந்துபீங்க தானே. நான் சனிக்கிழமை அங்க இருப்பேன்…” எனவும்

 

“டேய் அதெல்லாம் எனக்குத் தெரியும், நீ கவலைப்படாம இரு, உன் அப்பனுக்கே அந்த கவலை இல்லை போடா…” எனச் சிரிக்க, அவனும் சிரிக்க, “என்னம்மா நீங்க…” பாலன் வருத்தப்பட,

 

“அட, ஏன் பாலா நான் சும்மா தான் சொல்றேன். என் புள்ளைங்கள எனக்குத் தெரியாதா.? சரி நாங்க கிளம்புறோம் பார்த்துக்கோங்க…” என்றவர் முறுக்கி நின்ற புகழை சமாதனம் செய்துவிட்டுக் கிளம்ப, அப்படியே ஒவ்வருவரும் சென்று விட, வெற்றி தங்கையை பள்ளியில் விட போயிருந்தான்…

 

ராமசாமிக்கு அன்று மந்த்லி செக்கப் என்பதால் வனிதா அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைச் சென்றிருந்தார். பாலனும் ஆபிஸ் போய் விட, வீட்டில் இருந்ததோ மங்கையும் புகழும் தான்…

 

மங்கையின் பாடப் புத்தகத்தை ஒரு கையிலும், மறு கையில் குச்சி ஒன்றையும் வைத்துக் கொண்டு அவளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தான் புகழ். இதைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்த வெற்றி வரவேற்பாக ஒரு புன்னகையை இருவருக்கும் கொடுத்து விட்டு ஆபிஸ் செல்ல, ரெடியானான்…

 

அப்போது புகழ், “மகி நீ ஏன் வெற்றி கூட பேசுறதே இல்ல, நானும் பார்த்துட்டே இருக்கேன் அவனும் உனக்கு மாமா தான். நீ பேசலன்னா உன்னைத் தப்பா நினைக்க மாட்டானா.? என்ன பழக்கம் இது…” என கேட்க,

 

“இல்ல மாமா… அது அத்தைதான்” என இழுக்க, “ஓ… அம்மா சொன்னாங்களா…? அவங்களைப் பத்தி தெரியும் தான, ஏன் மகி இப்படி செஞ்ச..” என ஏமாற்றமாக கேட்க,

 

“அது நீங்களும் தானே பேசல, நீங்க பேசல, நானும் பேசல, அத்தையும் சொன்னாங்க. அவர் என் கிட்ட பேச வந்தார். அத்தைப் பார்த்தா திட்டுவாங்கன்னு ஓடிட்டேன்…” என பாவமாகப் பேச,

 

“உனக்கு என்ன லூசா… நீ சின்னபுள்ளையா மகி, நான் பேசலன்னா அதுக்கு வேற ரீசன் இருக்கு, நீ என்னன்னா அத்தை சொன்னாங்க அது இதுன்னு கதை சொல்லிட்டு இருக்க, போ போய் பேசு, அவன் இன்னும் நாலு நாள் தான் இங்க இருப்பான்…” என அவளைத் திட்ட,

 

“என்ன பேச மாமா…? எனக்குப் பயமா இருக்கே… இதுவரை பேசாம, இப்போ போய் பேசினா தப்பா நினைக்க மாட்டாங்க…” என அவள் தயங்க, 

 

“தப்பாவே நினைச்சாலும் பரவாயில்ல போய் பேசு தப்பு செஞ்சது நீ தானே…” என்றவன், “இந்தா இந்த மேத்க்ஸ் புக் எடுத்துட்டு போய் வெற்றி கிட்ட, டவுட் கேளு, மேத்ஸ்ல அவன் புலி, டவுட்ஸ் கிளியர் பண்ணுவான். நான் ரூமுக்கு போறேன். என்னை எங்கேன்னு கேட்டா போன் வந்தது போயிட்டாங்கன்னு சொல்லிடு…” என அவளிடம் புக்கைத் திணித்து விட்டு மாடியேறி விட்டான்…

 

“மாமா… மாமா…” எனக் கத்தியவள் வேறு வழியில்லாமல், தயக்கமாகவே வெற்றியின் அறைக்குச் சென்று கதவைத் தட்ட கை வைக்கப்போக, கம்பெனி செல்வதற்காக கதவைத் திறந்து கொண்டு அப்போது தான் வெற்றி வெளியே வந்தான். 

 

வந்தவன் வெளியே நின்றிருந்தவளைப் பார்க்காமல் அப்படியே மோத இதை எதிர்பார்க்காதவள் அப்படியே சரிய, விழப் போகிறாள் என்பதை உணர்ந்தவன் அவளின் இடையில் கை கொடுத்து பிடிக்க, ஆனால் பயத்தில் அவனையும் தன்னை நோக்கி அவள் இழுக்க, வேறு வழியில்லாமல் இருவரும் கீழே உருண்டனர். அவள் கையில் இருந்த புக் பறந்து விழ, அது அப்போது தான் உள்ளே வந்த வனிதாவின் மேல் விழுந்தது. 

 

அத்தோடு மங்கையின் கத்தலும் கேட்க, பயந்து போய் மேலே வந்தவர் பார்த்த காட்சியில் அனைத்தையும் மறந்து உண்மை என்ன என்பதை அறியாமல் வெற்றியைக் கண்டபடி திட்டிவிட்டு மங்கையை அழைத்துக் கொண்டு போய்விட்டார்…

 

“எதற்கு அந்த பெண் வந்தாள்…? என்ன நடந்தது…? இவர்கள் ஏன் தன்னை அசிங்கமாக பேச வேண்டும்…? என அவன் யோசிக்க யோசிக்க பதிலே இல்லை. ஆனால் அடுத்த நிமிடம் அவனால் அங்கு இருக்கவே முடியவில்லை. இது என் வீடு அல்ல, இவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் அல்ல, என மனம் சத்தமிட்டு கதற, அடுத்த நொடி கிளம்பி விட்டான். 

 

அதற்குள் ஓடி வந்த புகழோ அவனை விடவே இல்லை… “அப்பா வந்ததும் கிளம்பு தனியா உன்னை அனுப்ப மாட்டேன்…” என பிடிவாதமாக பிடிக்க, அறைக்குள் நுழைந்தவன் பாலன் வந்து அழைக்கும் வரை வெளியில் வரவே இல்லை…

புகழும், மங்கையும் வனிதாவிற்கு நடந்ததைச் சொல்லி சத்தம் போட்டிருந்தனர். புகழ் சென்று சாப்பிட அழைத்தும் வெற்றி வரவே இல்லை. அவன் நிலையில் இருந்து யோசித்த புகழும் பதில் வேறெதுவும் பேசவில்லை. நாச்சியாருக்கு அழைத்து புகழ் இங்கு நடந்ததைச் சொல்ல, அவரோ பாலனைக் கூப்பிட்டுச் சத்தம் போட்டு வெற்றியை உடனே அழைத்து வரும் படி கூற, பாலனோ அரக்க பறக்க வந்தார். 

 

வந்தவர் மனைவியிடம் எதையும் விசாரிக்கவில்லை… வெற்றியை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். அவனும் யாரையும் பார்க்கக் கூட இல்லை. வழியில் பாலன் எத்தனையோ சமாதானம் செய்தும் அவனிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. இனி தன் மகன்  தனக்கு இல்லை என்பதை அவர் உணர்ந்த நொடி அது தான்… அடுத்து வீடு வரும் வரை அவர் எதுவும் பேசவில்லை…

 

தாயிடம் தன்னை மறந்து அழுத பாலன், அடுத்த நாள் கிளம்பி விட்டார்… அப்போதிருந்தே மனைவியிடம் ஒதுக்கத்தைக் காட்ட ஆரம்பித்தார் பாலன். ஆனால், அதற்கு பதிலாக மனைவியிடம் உட்கார்ந்து பேசியிருக்கலாம்.” ஒருவேளை வனிதா தன்  தவறை உணர்ந்திருப்பார்…

 

அடுத்து வந்த நாட்கள் வெற்றிக்கு எப்படி கழிந்ததோ.. ஆனால் ஒரு பெண்ணை உணர்ந்த, அவளின் இடையைத் தீண்டி மென்மையை உணர்ந்த நொடிகள் மட்டும் அப்படியே பொக்கிஷமாக மனதில் பதிந்தது. தன்னையும் மறந்து பெண்ணின் மென்மையில் தொலைந்து அவளை மனதில் சும்க்க ஆரம்பித்திருந்தான். 

 

இது நடக்குமா..? நடக்காதா..? அவளுக்குத் தன்னைப் பிடிக்குமா..? பிடிக்காதா..? எதுவும் தெரியாது. ஆனால் அவனுக்கு அவலைத் தாண்டி வேறு வாழ்வு இல்லை என்பதை மட்டும் உணர்ந்திருந்தான்.

 

தன் மனதில் பூத்த அந்தக் காதலை அவன் யாரிடமும் சொல்லவில்லை. இந்த நேசத்தை எல்லோரும் எப்படி எடுத்துக் கொள்வார்களோ..? அதோடு அவனது அன்னை அன்று பேசிய பேச்சை யோசிக்கும் போது, தன் நேசத்தை வெளியே சொல்லவேக் கூடாது என்று முடிவே செய்துவிட்டான். 

 

மங்கை அதன்பிறகு படிப்பிற்காக தஞ்சாவூர் வந்தது, புகழோடான அவளின் திருமணப் பேச்சு என எல்லாம் தெரிந்தும் அவன் தன் மனதை திறக்கவில்லை. யாரும் தன்னை சிறு சந்தேகம் கூட பட முடியாத அளவிற்கு தெளிவாக இருந்தான். 

 

புகழின் முயற்சியால் இன்று அனைத்தும் சுகமாக நடக்க, இதோ இப்போது அவனின் காதல் மகாராணி அவனருகில். தன் காதல் கதையை அவளிடம் சொல்லி முடித்துவிட்டு, “ம்ம் சொல்லுடி என் பொண்டாட்டி, எப்படி இருந்துசு என் லவ் ஸ்டோரி..” என கண் சிமிட்ட,

 

“படுகேவலமா இருந்துச்சு கேட்க, இதெல்லாம் ஒரு லவ் ஸ்டோரியா.. ஒரு ஃபீலே வரலையே.. என் பர்த்டேக்கு எனக்குத் தெரியாமா வந்து பார்த்தீங்க, எனக்கு கிஃப்ட் வாங்கி வச்சீங்க.. இப்படி சொல்லுவீங்கன்னு வேற.. வேற மாதிரி எதிர்பார்த்தேன்.” எனக் கிண்டலடிக்க,

 

“என்னம்மா பன்றது.. சினிமால வர்ர மாதிரி எல்லாம் நமக்கு லவ் பண்ண தெரியல. உன் லவ் ஸ்டோரியை விட இது பரவாயில்ல தான். இவ்வளவு தான் நம்ம லவ்..” என அவனும் பதிலுக்கு கிண்டலடிக்க

 

“சரி விடுங்க மாமா.. நம்ம மேனுஃபேக்சரிங்க் அப்படி. பட் இனி அப்படி இருக்க முடியாது. பிஃபோர் லவ் தான் கேவலமா போச்சு. ஆஃப்டர் லவ்வாச்சும் செம்மையா அப்படியே காவியம் மாதிரி இருக்கனும். நம்மளை யாரும் ஃபீட் பண்னக் கூடாது சரியா.. அப்புறம் பேபி பொறந்ததும் எல்லா ஜென்ஸ்ம் போல, நீங்களும் பேபி பின்னாடியே சுத்துனீங்க அப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன். புரியுதா..? என மிரட்ட

 

“தேவதையா தெரியிற எல்லா காதலிகளும், கல்யாணத்துக்கு அப்புறம் பேயா மாறுறது இயற்கை தானே. விடு விடு மாமா எல்லாத்தையும் சமாளிக்கிறேன்…” எனவும்

 

அவனைத் தள்ளிவிட்டு, “ஓழுங்கா ஓடிடுங்க.. என் முன்னாடி இருந்தீங்க கடிச்சு கொதறிடுவேன்..” என இடுப்பில் கைவைத்து முறைத்த படியே புசுபுசுவென மூச்சுவிட

 

“உணமையை சொன்னா கோபம் வருமே.. பாரு அசல் அப்படியே பேய் மாதிரி இருக்க..” என நின்றிருந்தவளின் இடையில் கைவிட்டு தன்னை நோக்கி இழுத்து, இதழில் இதழ் பொறுத்த, “ம்ம்..ம்ம்ம்” என அவள் திமிற, இவன் இழுக்க என சற்று இழுபறியான முத்தம். அப்போது வெற்றிண்ணா.. என்ற மணிமொழியின் குரல் கேட்கவே, மனைவியை உட்காரவைத்துவிட்டு, அவசரமாக வெளியே வந்தான்.

 

“என்ன மொழிமா..?” என்றதும், “மினிஸ்டர் வந்துட்டார்ன்னா.. அப்பா கூப்பிட்டார்.” என, சரி நான் போறேன். அண்ணி உள்ள இருக்கா.. அவளுக்கு டயர்டா இருக்காம். கொஞ்சம் பார்த்து அழைச்சிட்டு வா..” எனத் தங்கையிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, விழா நடக்கும் இடத்திற்கு ஓடினான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!