Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Greakka Manimagudam

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 12-ம் அத்தியாயம்

கிரேக்க மணிமகுடம்

(வரலாற்று நெடும்தொடர்)

12. சதுரங்க கட்டத்தில் இளமாறனுக்கு தடை…

“காரிருளை விலக்கிவிட்டு ஞாயிற்றை வரவேற்க காத்திருந்த கருக்கல் வேளை”… “மெல்ல மெல்ல வான்மகள் தன் நீல முகத்தில் குங்குமப்பூவின் நிறத்தை பூசிக்கொள்ள துவங்கியிருந்தாள். அவளின் அழகை இசையாக பாடத் துவங்கியிருந்த பறவைகள், கரையைத் தழுவி தழுவி ஆலாபனை செய்த குமரிக்கடலின் பேரழலைகள், இவற்றோடு காந்தலூர்ச்சாலையின் புரவிகள் எழுப்பிய குளம்படி ஓசைகள், ரம்மியமான புது பொழுதை முன்னறிவிப்பு செய்ய… மகேந்திரகிரி மலையின் மீது காதலுடன் பரவிப்பாய்ந்த மேகக்கூட்டங்கள் கைக்கோர்த்திருந்தன”.

சேர தேசத்தின் வளம் நிறைந்த நிலப்பரப்பில் கால்களை மடித்துக்கொண்டு படுத்திருக்கும் “மந்தகம்”  போல, “மகேந்திரகிரி” மலை காட்சித் தந்தது. அதனருகில் இருந்த சிறிய குன்றிலிருந்த ஒரு பாறையை மெல்ல பிளந்துக் கொண்டு ஒரு உருவம் வெளியே வந்தது. மெல்ல சுற்றும் முற்றும் பார்த்தபடி எச்சரிக்கையுடன் வெளியே வந்த, “அந்த உருவத்தின் அகன்ற உடலும், தொப்பை வயிறும் சர்வ ஜாக்கிரதையாக வெளியேறிய பின், மெல்ல வயல்வெளிகளை நோக்கி பயணம் செய்ய தொடங்கியது.



Advertisement

காந்தளூர்ச்சாலை, படைபிரிவு கொட்டிலுக்கு சற்று தள்ளியிருந்த மாளிகையின் தரையெல்லாம் பளிங்கு போல தோற்றம் தந்தன. பளிங்கு மண்டபதின் அருகே இருந்த ஆடம்பர அறையில், மஞ்சணையில் ஆழ்ந்து உறங்கும் சேர வேந்தன் அருகில் அகில்புகைச் சிமிழ் இப்போதும் தன் மணத்தை பரப்பிக் கொண்டிருந்தது. இரவில் சந்தித்த தேவலோக தாரகை, மணிமேகலையின் சிரிபொலியும், சுவாசித்த போது விம்மி தாழ்ந்த பெண்மையின் பேரழகும், சேரனின் கனவில் கதகளி ஆடிக் கொண்டிருக்க இமயத்தின் சாரலில் அவளுடன் காதல் ஆலாபனை பாடிக் கொண்டிருந்தான் மன்னன். இப்போது இவனின் நினைவில் போர் இல்லை, சோழர்கள் இல்லை, பாண்டியனின் பைங்கிளி வேல்விழி இல்லை. சேரனின் உறக்கத்தில் கூட இதழ்கள் புன்னகையில் புரையோடியது.

காந்தளூர்ச்சாலையின் மணிமுத்தாறு படுகையில் இருந்த அந்த குடிசை வீட்டின் முற்றத்தை கோலமிட்டு, அழகுப்படுத்திக் கொண்டிருந்த மணிமேகலையின் வாழ்வு இன்றோடு மாறப்போவது அவளுக்கே தெரியாது இருக்க, முகமெங்கும் மகிழ்வில், மணமெங்கும் மாமன் இளமாறன் சீண்டலில் திளைத்திருந்தாள், இந்த பேரழகு பதுமை.

கோலமிட்டுவிட்டு எழுந்தவளை, ஒரு புரவியின் குளம்படி சப்தம் நிமிர்ந்து பார்க்கச் செய்ய… அவள் கண்கள் மகிழ்ந்தது.

Advertisement

அப்போது தான் வந்து இறங்கினார் மாரப்பதேவன்.. மணிமேகலையின் தந்தை. கொட்டரத்தின் தலைவராகவும், காந்தளூர்ச்சாலை படைபிரிவின் தலைவருமான மாரப்பதேவன்… அரச விசுவாசி. மிகவும் சாந்தமான மனிதர். மகள் ஒருத்தியே இவருடைய உலகம். மணிமேகலை பிறந்து ஆறுமாதத்தில் நோய்வாய்ப்பட்டு, மாரப்ப தேவரின் மனைவி மரித்துப் போகவே, மணிமேகலையை தானே தாயாக இருந்து வளர்த்து எடுத்தவர். மணிமேகலையின் நம்பிக்கையும், ஒளியுமானவர்.

Advertisement

தந்தையை எதிர்கொண்டு சென்று வரவேற்ற மணிமேகலை சிறு பிள்ளை போலவே துள்ளிகுதித்து செல்ல சண்டை பிடித்தாள். “எங்கே அப்பா சென்றீர்கள்? இரவெல்லாம் உறங்காமல் நான் உங்களை எதிர்நோக்கி காத்திருந்தேன் தெரியுமா”? என கோபப்பட்ட மகளை தோள்மீது சாய்த்துக் கொண்டவர்….

மகளே, உன் அப்பன் அரசாங்க பணியை செய்பவன். காலநேரம் பார்த்து எல்லாம் நான் ஓய்வு எடுக்க முடியாது செல்வமே!.. அதுவும் போர்மேகம் சேரத்தை சூழ்ந்து வரும் இந்த நேரத்தில் படைகள் பிரித்து ஒவ்பொறு பகுதிக்கும் அனுப்பும் பணி என்னுடையது அல்லவா? என்றார்.

மணிமேகலை

போர்மேகம் சூழ்ந்து உள்ளதா? என்ன அப்பா சொல்கின்றீர்கள்? அதற்க்கான எந்த ஒரு பதட்டமும் ஊருக்குள் தெரியவில்லையே என்றாள் மணிமேகலை.

Advertisement

மகளே…போர் மேகம் சூழ்ந்து உள்ளது உண்மை. அதை வெளியே கசியவிடாமலும், மக்களை பீதி அடையாமலும் பாதுகாக்கும் அரசனின் ராஜாங்க வியூகமும் போற்றுதலுக்கு உரியதே. போர் செய்ய முன்னேற்பாடுகள் நடக்கின்றது. எதையோ எதிர்பார்த்து அரசன் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் தேசத்தில் பதட்டம் எதுவும் கொடுக்காமல் அரசன் கவனமுடன் நடப்பதாக கேள்வி… என்றவர், சரி மகளே வா… எனக்கு கொஞ்சம் குடிக்க நீர் கொடு என்றார்.

இருவரும் குடிசைக்குள் நுழையும் போது, கடந்த இரவில் நடந்த அனைத்து விவரங்களையும், அரசன் மாரப்ப தேவனை அரண்மனைக்கு வரக்கூறிய தகவலையும் மணிமேகலை கூறினாள்….

மாரப்ப தேவனின் மனம் சட்டென்று இறுகிப்போனது. “மேகலை அரசன் உன்னை நேருக்கு நேர் கண்டு உரையாடியது உண்மையா?” என மீண்டும் வினவினார். “ஆம், அப்பா அவர் என்னிடம் குடிக்க நீர் வேண்டினார், பின் தன்னிடம் உள்ள புரவிகளுக்கு பயிற்சி அளிக்க அரண்மனைக்கு வருவாயா”? என கேட்டார் என்று அப்பாவியாக பதில் கூறினாள், மணிமேகலை.

மாரப்ப தேவருக்கு மனதிற்குள் இடிவிழுந்தது போன்று இருந்தது. என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார். சேரன் இரும்பொறை குறித்து அறியாதவர் அல்ல மாரப்ப தேவர். பட்டத்தரசி வஞ்சியில் இருக்கின்றாள். அரசன் அலுவல் நிமித்தம், பலநேரங்களில் தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்கின்றான். அரசனுக்கு ஒவ்வொரு இடத்திலும் மகிழ்வளிக்க பெண்கள் உண்டு என்பதை அவர் அறிவார். இப்போது அவரின் கண்கள் மணிமேகலை மீது விழுந்து விட்டதை புரிந்துகொண்டவர், அதைக் குறித்து நம்மிடம் பேசவே அரசன் தன்னை அரண்மனைக்கு வர கூறியுள்ளான் என்று முழுமையாக உணர்ந்து கொண்டார். அவருக்குள் பதட்டம் தொற்றிக்கொண்டது.

மேகலையின் இதயம் இளமாறனின் மீது இருப்பதை நன்றாக அறிவார். இளமாறன் சென்றமுறை இங்கு வந்தபோதே மணிமேகலையை காண காந்தளூர்ச்சாலைக்கு வருவது இதுவே இறுதியாக இருக்கும். அடுத்தமுறை வருவதென்றால் அவளுடன் நாகை திரும்பும், திருமண காரியமாகவே வருவேன் என்றல்லவா கூறினான். தவிர மணிமேகலையின் மீது இளமாறன் தன் உயிரை வைத்துள்ளான். இந்த சூழலை எப்படி நான் எதிர்கொள்வேன். என குழம்பிப்போய் உட்கார்ந்திருந்தவரை, மேகலை குரல் மீண்டும் நிஜ உலகிற்கு திருப்பியது.

அப்பா…ஏதேனும் பிரச்சனையா? ஏன் முகம் வாடி யோசனையில் உள்ளீர்கள்? என்றாள் மேகலை.

ஆம் மகளே… பிரச்சனை தான்? சேர அரசன் உன்னை கண்டது பிரச்சனையின் தொடக்கம். உன்னை அரண்மனைக்கு அழைத்தது அதன் நீட்சி. என்னை வரக் கூறியது உன்னை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க கூறி ஆரோக்கியமான முறையில் மிரட்ட. மறுக்கும் போது என்னைக் கொண்டு உன்னை வலுவில் அடைய, என பேசிக்கொண்டே போனவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மணிமேகலையை மொத்தமாக பொலிவிழக்க செய்தன.

அப்பா நீங்கள் கூறுவது உண்மையா? இப்படி அரசன் எண்ணுவானா? நான் மாமனை குறித்து கூறினேன். என்னுடைய வருங்கால கணவர் என்று தெளிவு படுத்தினேனே? அதன் பிறகுமா அரசன் இப்படி எண்ணுவான் என்று அப்பாவியாக வினவினாள் மேகலை.

மேகலை, உன்மீது தவறில்லை. இளமாறன் குறித்து சேர அரசன் அறிந்தது, இன்னமும் நமக்கு ஆபத்து மகளே. ஏனெனில் இளமாறனுக்கும் சேர அரசன் இரும்பொறைக்கும் வெண்ணிப்போரில் இருந்தே பரிட்சயம் உண்டு. அப்போது இளமாறனுக்கு வயது பதினான்கு மட்டுமே. இளங்கன்று பயமறியாது என்பார்களே அது போல, சேரப்படைகளை ஒருபுறம் சிதைத்து முன்னேறினான் இளமாறன். அவனுக்கு பின்னே அவனுடைய வழியை தொடந்து வந்த கரிகால பெருவளத்தான் சேரப் படையின் தலைவர்களை வீழ்த்தினார். இருவருமாக சேரப்படைகளை சிதறி ஓடச் செய்த காட்சி இன்றும் என் கண்களில் நிற்கிறது. இறுதியில் இரும்பொறையை மடக்கி நிறுத்திய இளமாறன், சேரன் தலையை காத்து நின்ற இரும்பு கவசத்தை எட்டி உதைத்த காட்சியை சேரத்து முன்னணி தலைவர்களும், அரசனும் என்றுமே மறந்திருக்க வாய்ப்பில்லை. இந்த சம்பவமே சேரனுக்கு போரில் இருந்த கவனம் சிதைய காரணம். அதை பயன்படுத்தி கரிகால சோழர் இரும்பொறையை வீழ்த்தினார். இந்த சம்பவத்தால் அரசியின் முன் அவமானப்பட்ட சேரன், உலகிற்காக அரிசியுடன் வாழ்ந்து வருகின்றாரே ஒழிய இருவருக்கும் இடையே எந்த ஒரு உறவும் இல்லை. இதன் வன்மம் இன்னமும் சேர அரசனுக்கு உள்ளதாக கேள்வி.

மகேந்திரகிரி மலை

இப்படிப்பட்ட சூழலில் நீ இளமாறனை குறித்து முழுமையாக அரசனிடம் கூறி இருப்பது இன்னும் விவகாரத்தை சிக்கலாகி உள்ளது.

சோழ வேந்தர் உயிருடன் இருந்து இருந்தால் இந்நேரம் நீ இளமாறன் மனைவியாக சோழதேசத்து நாகையில் இன்புற்று வாழத்துவங்கி இருக்கலாம். அந்த மாவேந்தனின் அகால மரணம், இளமாறனை மிகவும் பாதித்து உள்ளது. ஒரு மகனாகவே சோழ வேந்தன் மடியில் வாழ்ந்து, வளர்ந்தவன் இளமாறன். கரிகால சோழ வேந்தனின் செல்லப் பிள்ளைகளில் மூத்தவன் என்றே சோழத்தில் பேசுவர். அவனை குறித்து எதிரி அறிந்து கொண்டால் எப்படி இருக்கும். அதுவும் அவனுக்கு சொந்தமான நீ இங்கு இருக்கின்றாய் என்றால்!!!!??? என்று மாரப்ப தேவர் கூறி முடித்த போதுதான் மணிமேகலைக்கு பலதும் புரிந்தது. ( நமக்கும் தான் ).

அப்பா இப்போது என்ன செய்வது என்று கேட்டாள் மணிமேகலை. மாரப்ப தேவருக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. மிகவும் குழம்பிய நிலையில் இருந்தார். நேரம் கடந்து கொண்டிருந்தது.

அதே வேளையில் மகேந்திரகிரி மலையின் அருகே சுரங்க வழியில் வெளியேறியவன், காந்தளூர்ச்சாலை சோதனை சாவடியை நெருங்கியிருந்தான். கையில் இரண்டு ஆடுகளை பிடித்துக்கொண்டு, தோளில் இலை வெட்டி எடுக்க கோலும் ஏந்தியவாறு வந்தவனை, சாவடியில் காவல் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் வில்லுக்குறியில் உள்ள தன் மைத்துனர் வீட்டுக்கு போவதாக கூறிவிட்டு பயணத்தை தொடர்ந்தவன் அங்கு இருந்த ஒரு குளக்கரையில் முகம் கழுவிவிட்டு நீர் பருகினான். பின் சுற்றும் முற்றும் பார்த்தவன் யாருமில்லை என்பதை ஒரு முறைக்கு இருமுறை உறுதி செய்து கொண்டு, அருகில் இருந்த கல்மண்டபத்திற்குள் சென்றான். சிறிது நேரத்திற்க்கெல்லாம் அவன் அங்கிருந்து சென்ற சுரங்கப்பாதை வழியே பயணம் செய்ய தொடங்கினான்.

சேரன் இரும்பொறை உறக்கம் கலைந்து எழுந்திருந்தான். தன் சேவகர்களை அழைத்து நீராட ஏற்பாடு செய்ய சொன்னவன், அரண்மனை சாளரம் வழியே காந்தளூர்ச்சாலையின் காலை நேர பரபரப்பை சிறிது நேரம் காணலானான். அதற்குள் பணிப்பெண் இருவர் அவனை வாழ்த்தி பணிந்து நின்றனர்.

“மாவேந்தே! தாங்கள் நீராட ஏற்பாடுகள் தயார்… மன்னருக்கு இன்று ரோஜாவின் இதழ்கள் கொண்டு நீராட்டம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்” என்றனர்.
மன்னன் அவர்களுடன் நீராட சென்றான். களைப்பு தீரும் மட்டும் நீராடிவிட்டு தன் உடைகளை அணிந்து கொண்டவனை பணிப்பெண்கள் உதவிசெய்து தயாராகினர்.

அதற்குள் ஒரு பணிப்பெண் அவசரமாக வந்தாள். மன்னருக்கு காலை வணக்கம். தங்களை காண அமைச்சர் வந்துள்ளார் என்றாள், அந்தப் பணிப்பெண்.

“ஆகட்டும் உடனே வரச்சொல்” என்றவன் தன்னுடைய ராஜாங்க அலுவல் அறைக்குள் பிரவேசித்து ஆசனம் ஒன்றி அமர்ந்து கொண்டான்.

சேரனின் மாளிகை உட்புற தோற்றம்

சிறிது நேரத்தில் உள்ளே முன்கூடுமி வைத்துக்கொண்டு, வெள்ளை உடையணிந்து வந்து நின்ற பாலபத்திரர்….

“சேரத்து காவலனே! மாவேந்தனே பணிகின்றேன்” என்றார்.

“அமைச்சரே, உடனடியாக அரசு ஆவணங்களை சரிபார்க்கும். அதில் மாரப்ப தேவன் குறித்த குடியுரிமை, அவனுடைய பணி, குடும்ப உறுப்பினர்கள், அவன் பூர்வீகம் குறித்த தகவல்கள் எனக்கு வேண்டும். மேலும், அவனை நான் சந்திக்க கூறியதாக வீரர்களை அனுப்பி அழைத்து வாரும். அவன் வீட்டை கண்காணிக்க ஒற்றர்களை ஏற்பாடு செய்யும்” என்று கட்டளைகள் இட்டான்.

பாலபத்திரர் அதனை விபரங்களையும் பணிவாக நின்று கேட்டு மனதிற்குள் பதிய வைத்துக் கொண்டார். பின் அரசனை வணங்கிவிட்டு வெளியேறினார். பணிப்பெண்கள் காலை உணவு கொண்டுவந்து அரசனுக்கு வைத்தனர். அதை கண்டவனுக்கு பிந்தய இரவின் காட்சிகள் நிழலாடின. மணிமேகலையின் முகம் நினைவிற்கு வர, அரசனுக்கு ஆனந்தம் பாதியும், அலுவலின் அழுத்தம் பாதியும் என்று தடுமாறியவன், பெண்ணே அராபிய மதுவை எடுத்துவா… என்று கூறினான். பணிப்பெண் மது குப்பியை எடுத்துவர சென்றாள்.

 

அதே வேளையில் அந்த அறையின் மூலையில் ஒரு மணி அடிக்கும் சப்தம் கேட்டது. அரசன் துடுக்குற்றான். பணிப்பெண் மீண்டும் வந்துவிட்டு செல்லும் வரை காதிருந்தவன் பின், மெல்ல சென்று அந்த சுவற்றில் இருந்த ஒரு மெல்லிய கயிறை பிடித்து இழுத்து இழுத்து விட்டான். பின் இருக்கையில் வந்து அமர்ந்தவன், எதையோ எதிர்பார்த்து காத்திருந்தான்.

சுவர் மெல்ல பிரிய தொடங்கியது, உள்ளிருந்து வந்த நெருப்பின் ஒளி மெல்ல மறைய, ஒரு உருவம் வெளியே வந்தது.

ஆம்… வாசகர்கள் எண்ணம் சரிதான். வில்லுக்குறியின் கல்மண்டபத்திற்குள் சுரங்கப்பாதை வழியே சென்றவன் தான் அவன்.

வெளியே வந்தவன் மன்னன் முன் முழந்தாள் படியிட்டு தலை வணங்கினான்.

வா… ஆதிரை நம்பி, எப்போது கிளம்பினாய்? என்ன செய்தி? என்றான், பேரரசன்.

சேர மாமன்னருக்கு வணக்கம். தங்களின் குருவும் தலைமை அமைச்சருமான சீத்தலை பெரும்நம்பி வேடத்தில், சோழத்தில் இருக்கும் “ஸ்ரீவராகநம்பியின்” தூதனாக வந்துள்ள ஆதிரை நம்பி வணங்குகின்றேன்.

“ குருவின் செய்தி என்னவென்றால், நாகை துறைமுக பொருப்பாளனும், சோழ தனிப்படையின் தலைவனுமான… “இளமாறனை” குருவின் மாளிகையில் வைத்து, சோழ இளவல் நெடுங்கிள்ளி கைது செய்து உள்ளான். இளமாறன் இப்போது பழையாறை சிறையில் அடைபட்டு இருக்கின்றான். சோழ இளவளை, தூண்டிவிட்டு பாண்டிய அரசன் மீது போர்தொடுக்க குரு வியூகம் அமைத்துள்ளார். அந்த காரியம் முடிந்த பிறகு, இங்கு வர உள்ளதாக தங்களிடம் தெரிவித்தார். மேலும், இரும்பிடையான் மூலமாக புகாரில் அன்னங்கள் கரைசேர தேவையான ஏற்பாடுகள் செய்துள்ளார்”, என்று முடித்தான், ஆதிரை நம்பி.

சேரனின் மனம் குளிர்ந்து போனது. “அருமையான காரியம் கூறினாய் ஆதிரை நம்பி. சோழர்களின் கேடயமாக நின்றுக்கொண்டு, எய்யும் அம்புகளை தடுக்கும், அந்த இளமாறன் சிறையில் என்பது தித்திப்பான செய்தி. அவனை சோழ இளவரசன் நெடுங்கிள்ளியே கைது செய்தது என்பது இரட்டிப்பு இனிப்பை தரும் செய்தி”… என்று கூறி மாளிகையே அதிர சிரித்து மகிழ்ந்தவன்…

“ஆதிரை நம்பி, இங்கே வேறு ஒரு வகையில் இளமாறன் என்னும் என் எதிரியின் உயிர் சிக்கி உள்ளது. நான் அந்த பட்சியை பிடித்து எனக்கு உரிமையாக்கி, வெண்ணியின் அவமானத்திற்கு பழி தீர்ப்பேன் என்று குருவிடம் கூறு. மேலும் இன்னும் சிறிது காலம், சோழத்தில் தங்கி முழுமையாக சோழ சகோதரர்கள் இடையே முழுப் பகையும் மூட்டிவிட நான் உதரவிட்டதாக கூறு. அன்னங்கள் கரை எட்டும் நேரத்தில் தகவல் தருகின்றேன். அப்போது மொத்தமாக செய்ய வேண்டியத்தை செய்ய கூறு… என்றவன்,

நீ கிளம்பு ஆதிரை நம்பி… வழியில் பாண்டிய மண்டலத்தின் செய்தியை அறிந்து கொண்டு குருவிடம் கூறு என்றான்.பின் தன் கழுத்தில் இருந்த ஒரு தங்க சங்கிலியை கழற்றி ஆதிரை நம்பியிடம் கொடுத்தவன்… நற்செய்தி நீ கூறியதற்கு இது பரிசு”… என்றான்.

“ஆதிரை நம்பி வந்த வழியே வெளியேற, இதுவரை சேரனும், ஆதிரை நம்பி பேசியதையும் ஒரு உருவம் அறைக்கு வெளியே கேட்டுக் கொண்டிருந்தது. செய்திகளை அறிந்து கொண்ட அந்த உருவத்தின் முகமெல்லாம், வியர்த்து போய் இருந்தது. அதற்கு மேல் தாமதிக்க விரும்பாத அந்த உருவம் வேகமாக மாளிகையை விட்டு வெளியேறியது…. அந்த உருவம் வெளியேறியதை பாலபத்திரர் கண்டு அதிர்ச்சியடைந்தார்”.

தொடரும்……

Bharathipriyan

I am an experienced story writer, script maker, poet and trainer for life skills.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!